வெண்முரசில் குருமார்கள் – சௌந்தர்

”ந குரோர், அதிகம் தத்வம், ந குரோர் அதிகம் தபஹ;

தத்வத் ஞானன் பரம் நாஸ்தி, தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ; ”

என்கிற ‘குரு ஸ்தோத்ரம்’ குருவைத் தவிர வேறு தத்துவம் இல்லை, குருவை தொடர்வதைத் தவிர வேறு சிறந்த தவம் இல்லை என்று குருவை புகழ்கிறது. இங்கே குரு என்பது ஒரு தனிப்பட்ட மனிதரை மட்டும் சொல்வதில்லை, குரு என்பது ஒரு தத்துவம், கருத்துருவாக்கம், என்கிற பார்வையில்தான், நம் மரபு குருபரம்பரை பற்றி பேசுகிறது.  ஜெயமோகனும் வெண்முரசு முழுவதும், குருமரபு பற்றியும், குருகுலக் கல்வி பற்றியும், குருமார்கள் பற்றியும், அவர்களின் நெறிமுறைகள் பற்றியும் விரிவாக பேசுகிறார்.  இந்த குருகுல கல்விமுறையில், வேதங்களையும், தத்துவங்களையும், தொகுத்து கற்பிப்பது, அரசுசூழ்தல் முதல் அரசியர் சூல்கொள்ளல் வரையான நெறிமுறைகள், ஆயுதப் பயிற்சி முதல் படையெடுப்பு வரையான நுணுக்கங்கள், ஷத்ரியர்களுக்கான நூல் நெறிகள் என இவையெல்லாம் பயிற்றுவிக்கப்பட்டன. பாரதவர்ஷமெங்கும், வெவ்வேறு குரு மரபுகளால் நடத்தப்பட்ட பல்வேறு பாடசாலைகளுக்கு 5 வயது முதல்  7 வயது வரையான அரச மைந்தர்கள், ஷத்ரியர்கள், பிராமணர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர்.  முதற்கனல் தொடங்கி, வெண்முகில் நகரம் வரை பல்வேறு குருமார்களின் பாடசாலை  முறைகள் தொடர்கின்றன. இவற்றில் முக்கியமான, மகாபாரத கதாபாத்திரங்களை உருவாக்கிய குருமரபுகள் பற்றி பார்ப்போம்.

அகத்தியர்

விசித்திரவீரியன் நோய்படுக்கைமுன் 3 வயது சிறுவன் உயரத்தில் வந்து நிற்கும், திருவிட நாட்டு சித்தர்.  ‘என் பெயர் அகத்தியன்  பொதிகை மலையில் வாழ்பவன்’ என்று அறிமுகப்படுத்திக்கொள்ள, தாங்கள் தென்திசை ஆசிரியர் அகத்தியர் மரபில் வந்தவரா? என்று வினவும் ஸ்தானகரிடம் ‘நான் அவரேதான்’’ என்கிறார்.

பொதுவாக சில  குருமரபில் தனிப்பட்ட பெயரில் அவர்களை அழைப்பதில்லை, 2-ஆவது அக்னிவேசர், 15-ஆவது பரசுராமர், 32-ஆவதுஅகத்தியர் என்றே வழங்கப்படுகிறது. தன் குருகுலத்தில் கற்றுத்தேர்ந்து கனிந்த மாணவனை, அடுத்த குருவாக, பீடாதிபதியாக, அமைத்துசெல்வது நம் குருமரபு,  இது இன்றுவரை தொடர்வதை நாம் காணலாம். உதாரணமாக பாரதிதீர்த்த சுவாமிகள், ஞானானந்த கிரி, சிவானந்தா சரஸ்வதி, திருவாடுதுறை ஆதீனம், ஜீயர் சுவாமிகள் போன்ற பட்டங்கள் அதன் தொடர்ச்சியே.

இந்த குருமார்கள் பெருவாரியான கலைகளை அறிந்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட கலையில் தேர்ச்சியும் பயிற்றுவிக்கும் முறையும் இருந்தது. அந்த வித்தைக்கான குருகுலமும், அமைத்துள்ளனர். வெண்முரசின் முதற்கனலில் அறிமுகமாகும் அகத்தியரின் அத்தனை தத்துவமும், போதனைகளும், மனித உடல் சார்ந்தும், மருத்துவம் சார்ந்தும் வெளிப்படுகிறது. இங்கே அகத்தியர் மருத்துவராக வருகிறார்,  விசித்திரவீரியனின் நாடி பார்த்தபின், ‘ உடலை ஏழுபசுக்கள் கொண்ட மந்தை, ஏழு பொருள் கொண்ட சொல், ஏழுதாமரைகள் விரிந்த தடாகம், ஏழு சக்கரங்களால் ஆன இயந்திரம் என்று எங்கள் நூல்கள் சொல்கின்றன’ என்கிறார்.

அவர் உருவகப்படுத்தும் ஏழு நிலைகள் என்பது நம் உடலில் உரையும்  சக்தி நிலைகளையே. மூலாதாரம் எனும் முதல் புள்ளி, அதுவே காமமும் ஊக்கமும், அதுவே உடலிலிருந்து  உடலுக்குத் தாவும் நெருப்பு, அன்னத்தை அனலாக்கும் சுவாதிஷ்டானம். காற்றை உயிராக்கும் மணிபூரகம், குருதியை வெம்மையாக்கும் அனாகதம், என்று இன்றளவும்  யோக மரபில் சொல்லப்படும் உடலின் ஏழு  சக்கரங்கள் எனும் சக்தி நிலை பற்றி விவரிக்கும் அகத்தியர் விசித்ரவீரியனின் நெஞ்சில் கைவைத்து சோதித்து, அனாகதத்தில் அனலே இல்லை என அதற்கான சிகிச்சை முறையை தொடர்கிறார். குருமரபின் முதல் குருவான, கல்லால மரத்தினடியில் அமர்ந்து அருளுரைக்கும், தென்திசைமுதல்வன், அவனிடம் மெய்ஞானமடைந்த என் முதல் குருகுறுமுனி  அகத்தியர் என்கிறார்.

முதற்கனலில், அகத்தியரில் தொடரும் குருமார்களின் வரிசையில் அடுத்த நீண்ட பகுதியாக அக்னிவேசரின் குருகுலம்பற்றியும் மாணாக்கர் பற்றியும், நிகழ்வுகள் தொடர்கின்றன.

அக்னிவேசர்

காட்டிலிருந்து கிளம்பி பீஷ்மரை கொல்வதொன்றே இலக்கு என்று கிளம்பும் சிகண்டி தன் ஆசிரியரின் வழிகாட்டுதலின்பேரில், அக்னிவேச மாமுனியைப் பற்றி அறிகிறான்,  ஐந்து உபவேதங்களில் ஒன்றான, தனுர்வேதம் பயிற்றுவிக்கும் இரண்டு ரிஷிகளில் பிராமண ரிஷியான பரசுராமர்  சதஸ்ருங்கத்தில் தவம் புரிவதால்,  அக்னிவேசர் மட்டுமே இன்று, அக்னிபதம் எனும் தவச்சாலை அமைத்து  தனுர்வேதம் பயிற்றுவிக்கும் ,குருகுலம் நடத்துபவராக இருக்கிறார்.

பரத்வாஜ முனிவரிடமும், அகத்திய முனிவரிடமும், தனுர்வேதத்தையும், நூல் நெறிகளையும் கற்றுத் தேர்ந்த அக்னிவேசர், தன் மாணவர்களுக்கு, வில்வித்தையுடன், தத்துவத்தையும், வேதாந்தத்தையும் தனுர்வேதம் மூலமாகவே கற்பிக்கிறார்.

”இம்மண்ணில் அறத்தை நிலைநாட்ட முதல் தேவை சொல், அந்தச் சொல்லிற்கு துணையாக என்றுமிருப்பது வில். அது வாழ்க” என அக்னிவேசர் முழங்க ஓம்.. ஓம்.. ஓம்.. என்று அவரிடம் சீடர்களாக சேர்ந்த துரோணரும், துருபதனும் பின்தொடர்கின்றனர். பிறமாணவர்கள் சிகண்டியை நோக்கி நகைக்கையில்,  ”இளையோரே, படைப்பில் தேவையற்றது, தேவையானது, நல்லது கேட்டது, என்று பிரிக்கும் தோறும், பிரம்மனிடம் மன்னிப்பு கேளுங்கள், படைப்பை ஏளனம் செய்யும் ஒவ்வொரு எண்ணத்திற்கும், அந்த மூடன் என்றோ ஒருநாள், பதில் சொல்ல கடமைப்பட்டவன்” என்று அகம் கனிகிறார்.

சுக்ரஸ்மிருதி எனும் நூல் வகுத்துள்ளபடி, பிராமணர்களுக்கும், ஷத்ரியர்களுக்கும், தாம் வில்வித்தை பயிற்றுவிப்பதாக சிகண்டியை புறக்கணிக்க, அவர் கூறும் நீண்ட கருத்தை ஏற்காத சிகண்டியின் துணிவையும், அவன் இலக்கையும் கண்டு கனிந்து அவனுக்கு தனுர்வேதம் கற்பிக்கிறார்.

பாடசாலையில் நடைபெறும் அத்தனை தத்துவ விவாதமும், வாழ்வியல் போதனைகளும், தனுர்வேதத்தில் தொடங்கி, தத்துவதரிசனத்தில் முடிகிறது, உதாரணமாக “செயல் மூலம் தன்னை வென்றவன் யோகி, யோகியின் கையில் இருப்பது எதுவோ, அதுவே இறுதி ஆயுதம். அதுவே அவன் மந்திரம், அதை ஆள்வதே, அவன் சாதகம், சொல்மூலம் அடையும் எதையும், வில்மூலமும் அடையலாம் என்றுணர்க! இருபுடை வல்லமை கொண்டவனை, ‘ஸவ்யசாட்சி’ – என்று தனுவேதம் போற்றுகிறது, ஒரு கையில் உள்ளத்தையும், மறு கையில் உடலையும் கையாள்பவன் அவன். ஒரு முனையில் அம்பும் மறுமுனையில் இலக்கும்கொண்டவன் அவன். அவனே ஒரு முனையில் பிரபஞ்சமும் மறுமுனையில், பிரம்மமும் நிற்கக் காண்பான்.‘’

இப்படி பல்வேறு தருணங்களில் தத்துவப் பாடமும், நூல்நெறியும் பேசுகிறார்.  பின்னாளில் நடக்கவிருக்கும் அத்தனை சம்பவங்களிலும், பாரதப் போரிலும், எதிரெதிராய், களம்காணப்போகும் பல்வேறு அரசர்களும், இளவரசுகளும், முக்கியமாந்தர்களும், இங்கே அக்னிபத பாடசாலையில், ஒன்றாய் கூடிக்களித்து, விளையாடி, சீண்டி, எள்ளி நகையாடி, உணவைப் பகிர்ந்து, திறன்களை பேசிப்பகிர்ந்து, ஒரே குடும்பமாய் வாழ்தலென்பது குருவின் முன் மட்டுமே சாத்தியம் என்பதற்கான இடமாய் அக்னிவேசர் குருகுலம் காட்டப்படுகிறது. அக்னிவேசர் உடல்விட்டுப் பிரியும் தருணத்தில், அவர் முதல் மாணவரான வ்யாஹ்ர சேனருக்கு, அக்னிவேசர் எனும் பட்டத்தையும், பாடசாலையயும் தருகிறார்.  அக்னிபத குருகுலத்தில்தான் முக்கியமான பாத்திரங்களான  துரோணரும் துருபதனும், சிகண்டியும் கற்றுத்தேர்ந்து செல்கின்றனர்.

துரோணர்

குருகுலக் கல்வி முடிந்து விடைபெறும் அத்தனை இளவரசர்களிடமும், “பரத்வாஜரின் மைந்தரும், என் மாணவருமான துரோணரை வணங்குங்கள்” என்று சுட்டிக்காட்டப்படும்  துரோணர். பாரதக் கதை இறுதிவரை தொடரும் ஒரு முக்கியமான பாத்திரம்.

‘துரோணம்’ எனும் மரக்குடத்தில், ஆசிரமவாசலில் கிடக்கும் குழந்தையை, சமையல்காரர் விடூகர் எடுத்து வளர்க்க, பாரத்வாஜருக்கும், ஹ்ருதாஜி எனும் குகர் குலத்துப்பெண்ணுக்கும், பிறந்த குழந்தை என்கிற உண்மை தெரிய வர, பரத்வாஜர் தவம் செய்ய மீண்டும் காடேகிறார். துரோணரை அக்னிவேசரிடம் கொண்டுவிடுகிறார், விடூகர்.

தந்தை வழியில் அந்தணராகவும், தாய் வழியில் குகனாகவும் வளரும் துரோணருக்கு, அத்தனை பார்வையும், ஏளனம் மிக்கதாய், அவமதிப்பாய் தோன்ற, தர்ப்பையை துணைகொள்கிறார்,  உதட்டில் காயத்ரியும், கையில் தர்ப்பையுமாக தனித்து இருக்கும் இவருக்கு, எட்டுவித தர்ப்பையின் அத்தனை சூட்சுமங்களும் கை கூடுகிறது, எப்போதும் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்டே, இருக்கும் துரோணர் ஒருமுறை தர்ப்பையில் ஒரு குருவியை குறிபார்த்து வீழ்த்த, பிராமணனாய் பிறந்து, ஷத்ரியனாய் வளரும் உன்னைவேறு குருவிடம் அனுப்புகிறேன் என்று சினந்து அக்னிவேசரிடம் அனுப்புகிறார். பரத்வாஜர்.  அங்கீகாரம் கிடைக்காத குழந்தையாக தன் வெறுப்பை, கோபத்தை, பயிற்சியிலேயே செலவிடுகிறார், குருநாதரிடம் தனக்கென ஒரு அங்கீகாரம் பெறும்வரை, வில்வித்தையை தீவிரமாகக் கற்று சிறந்த மாணவனாக அக்னிவேசரால் அறியப்படுகிறார். வில்வித்தை கற்றுத்தருவதில்லை என துருபதனை அக்னிவேசர் திரும்ப அனுப்ப வழியில், துரோணரைக் கண்டு ”பிராமணோத்தமரே” என்று காலில் விழுகிறான். அதை தனக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாக நினைக்கிறார், பின்னாளில் அவனாலேயே மிகப்பெரிய அவமானத்தை அடைய  தான் ஒரு குருகுலம் அமைப்பது என்றும், பிரபஞ்சத்தின் மிகச்சிறந்த வீரர்களை உருவாக்குவது என்றும், அவர் தொடங்கும் குருகுலம்தான் பாரதகதையின் அடுத்த தலைமுறையை, அவர்களுக்கான கல்வியை உருவாக்குகிறது.

தனக்கு பிராமணனாக அங்கீகாரம் கிடைக்க, பரசுராமரையும், தனுர்வேதியான சரத்வானையும் தேடிக்கண்டு, அது கிடைக்காமல் போக, சரத்வான் முனிவரின் மகள் கிருபியை மணக்கிறார், இவர்களில் அஸ்வத்தாமன் குழந்தையாக பிறக்க, இவர் நடத்தும் குருகுலத்திலேயே, அனைத்தும் பயில்கிறான். ஒரு குருநாதரின் நெஞ்சில் எழும் வஞ்சமானது ஒட்டுமொத்த மாணவர்களை அடைவதும், மேலும் விரிந்து அரசபதம், மக்கட்குடி வரை வளர்வதும், தடுக்க முடியாத ஒன்று என்பதற்கு சாட்சியாய் துரோணரில் எழும் வஞ்சம், தன்மாணவர்கள் மூலம், துருபதனை, மூர்க்கமாய் தாக்குதல் வரை நீள்வதும், ஏகலவ்யனிடம், குருதட்சிணை என்கிற பெயரில் அவரில் வெளிப்படும் வன்மமும், துரோணரை முழுவதும் அறம்பிழைத்த மனிதராகவே சித்தரிக்கிறது. துரியோதனன், கர்ணன், அர்ஜுனன், போன்ற முக்கிய கதைமாந்தர்களில் எழும் குரோதம், துரோணரின், துருபதன் மீதான போரின்பின் மேலும் விரிகிறது, வெண்முரசில் மையச்சரடாக ஓடிக்கொண்டிருக்கும் வஞ்சத்திற்கு விதையிடப்படும் குருகுலமாகவே துரோணரின் பாத்திரப்படைப்பு அமைகிறது.  அதே வேளையில், தத்துவமும், நூல்நெறியும், வாழ்கை அறமும் பேசப்படும் இந்த குருகுலத்தில்தான், தனுர்வேதத்தின் அத்தனை நுட்பங்களும், படையெடுப்பும், படைக்கலன் அமைத்தலும், வியூகம் வகுத்தலும், போதிக்கப்படுகின்றன..

பிரயாகையில், துருபதன் மேல் போர் தொடுக்கும் பகுதியில் குருகுலக் கல்வியில் பயின்ற, அத்தனை வித்தைகளையும், படைநகர்வு தந்திரங்களையும் பாண்டவர்களும், கௌரவர்களும் இணைந்து நடத்தும் போர், மிக நேர்த்தியான ஒன்று. குருவின் வஞ்சம் தீர்க்க விழைந்த மாணவர்கள், தங்களுக்குள் மேலும் குரோதம் கொள்ளும் பகுதி.  துருபதன் சூளுரைத்து, திரௌபதியை மகளாகப் பெற விளைந்த முக்கிய காரணியாக இங்கே, துரோணர் எனும் குரு சித்தரிக்கப்படுகிறார்.  ஒரு குருநாதரின் கனிவும் கருணையும் எப்படி அந்த சமூகத்தை, பண்பாட்டை, தலைமுறைகளை, நல்வழி நடத்துமோ,  அவ்வாறே, சில குருமார்களின் குரோதமும், தன்முனைப்பும், வஞ்சமும் அந்தக் காலகட்டத்தின் கடைசி மனிதன் வரை ஏதோ ஒரு விதத்தில் அழிவையே ஏற்படுத்தும் என்பதற்குச் சான்றாக, இங்கே துரோணரின் சித்திரம் அமைகிறது. இது துரோணர் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு அல்ல, நம் அனைவருக்குள்ளும் எஞ்சி இருக்கும் ஒரு துளி வஞ்சமும், குரோதமும், நம்மில் உள்ள துரோணர் என்றறிக!

கிருபர்

சரத்வானின் மைந்தரும், தனுர்வேதியுமான கிருபரே பாண்டவ கௌரவர்களின் முதல் ஆசிரியராக அறிமுகமாகிறார், இருதரப்பிலும் ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் அவரவர் படைக்கலங்கலாலேயே அறியப்படுகின்றனர். குலபூக்ச் சடங்கில் கொற்றவை முன் படைக்கப்பட்ட படைக்கலங்களை தம்மாணவர்களுக்கு இவரே தேர்ந்து கொடுக்கிறார், முதல் மைந்தன் தருமனுக்கு ‘உபதனுஷ்’ எனும் உயரமற்ற வில், மூர்க்கமற்ற படைக்கலம். அடுத்து வந்த துரியோதனனுக்கு, ”தோள் வலிமையுள்ள உனக்கு கதாயுதம்”, என்றும் பீமனுக்கு “உன் பெரிய தந்தையின் கதாயுதம்’ ‘என்றும், அடுத்து வந்த துச்சாதனனுக்கு ”உனக்கும் கதாயுதமே” என்று அவர்களின் தோள்வலிமை, உடல் வலிமை கண்டு தேர்ந்தெடுத்து கொடுக்கிறார், அர்ஜுனனிடம் ”உனக்கு உகந்தது வில்” என்று அவனைவிட உயரமான வில்லை தேர்கிறார், அதில் அவன் அங்கேயே நாணேற்றுகிறான். பின் நகுலனுக்கும், சகதேவனுக்கும் வாள் தேர்ந்து கொடுக்க, இளங் கௌரவர்கள் அனைவருக்கும் படைக்கலம் தேர்ந்து தருகிறார். கர்ணனும் முதலில் வந்து சேரும் குருநாதர் கிருபரே,  கானகங்களிலும், ஆயுதப் பயிற்சி சாலையிலும் படைப்பயிற்சி அளிக்கப்பட, கானகப்பயிற்சி என்பது வேர்களிலும், கிளைகளிலும், நின்று படைக்கலன்களைக் கையாள்வது போன்ற ஆரம்ப காலப்பயிற்சிகளின் மூலம், வாழ்வின் பொருளனைத்தையும், உடலின் மூலமும், படைக்கலங்களை கையாள்வதன் மூலமும் கற்பிக்கிறார்.

“ஏனெனில் அரசர்க்குரியது, படைக்களக் கல்வியே, அதுவே முதன்மைக் கல்வி, அரசு சூழ்தலும், மதி சூழ்தலும், உறவுசூழ்தலும், படைக்கலன் வழியாகவே கற்கப்படவேண்டும்” எனும் கிருபர், அர்ஜுனனின் வில்வித்தையைக் கண்டு, “அர்ஜுனா, இனி நான் உனக்கு கற்பிப்பதற்கு ஒன்றுமில்லை, நான் உனக்கு ஆசிரியன் மட்டுமே, நீ உன் குருநாதரை தேடிச்செல்” என்கிறார். “குருநாதர்களும் மாணவர்களும், பிறந்து இறந்துகொண்டே இருப்பார்கள்,  வித்யாதேவி என்றென்றும் வாழ்வாள், அவள் வெல்லவேண்டும், பிறர் அனைவரும் தோற்றாலும் சரி” என்று அர்ஜுனனை துரோணரிடம் செலுத்துகிறார் கிருபர். ஒரு ஆசிரியருக்குரிய அத்தனை குணங்களுடனும் நிறைவான கனிந்த குருவாகவே கிருபர் பாரதம் முழுவதும் அறியப்படுகிறார்.

பரசுராமர்

அளவு மீறும் அமுதம் விஷமாவது போல அறம் காக்கும் ஷத்ரியவீரமே மறமான காலமது, தேர்கள் உருளும் பாதையில் ஆயிரம் சிற்றுயிர்கள் மாள்கின்றன, அங்கே ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகைக்கும் மகனாகப் பிறந்து பின் பெருந்தவத்தால், சிவனிடம் பெற்ற மழுவோடு 21 முறை பாரதப்பயணம் செய்து, ஷத்ரிய குலம் அழித்து அமைந்தவர்தான் பரசுராமர் – என சூதர் பாடல் மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறார். அக்னிவேசர் தம் இறுதி நாளில், துரோணரிடம், பரசுராமரிடம் சென்று சேரும்படி சொல்ல, ’’புராணங்களில் வாழும் பார்கவராமனையா?’’ என்கிறார் துரோணர். ‘’ஆம். பெரும்குருநாதர்கள் என்றும் இறப்பதில்லை” என்கிறார் அக்னிவேசர். .

பரசுராமரின் குருகுலத்தைத் தேடி 18 மாதம் பயணித்து, கடைசியில் சமந்த பஞ்சகத்தில், இளம்சூதன் வழியாகவே இங்கே பரசுராமர் பற்றி  பேசப்படுகிறது. ஷத்ரியர்களின் குருதியில், 5 குளங்களை அமைத்த பரசுராமர் நூறாண்டுகாலம் தவம்செய்து தம் முன்னோர்களிடம் மன்னிப்பு கோரினார். பின் தண்டகாரண்யத்தில் பரசுராமர் குடிலமைத்து இருப்பதாக, கேள்விப்பட, துரோணர் தெற்கே செல்கிறார். 300 ஆண்டுகாலமாக அங்கே பரசுராமரின் குருகுலம் இருப்பதாக பாரிஜாதர் வழிகாட்ட பார்கவ குலத்தின் 13வது பரசுராமரின் வேள்விச்சாலையை அடைகிறார்.

அதர்வண முறைப்படி நடக்கும் பூதான யாகம் – அறமற்ற ஷத்ரியர்களை குருநாதர் வென்று, அந்த நிலப்பகுதியை அங்குள்ள மக்களுக்கு, தானமாக வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நிகழ்வின் முடிவில், பரசுராமர் தன் குருகுலம்விடுத்து தவமியற்ற அமர்ந்து விடுகிறார். பிராமணனை ஷத்ரியனாக மாற்றுவது அவனுள் உள்ள பெரும் குரோதமே. பெருஞ்சினம் உள்ளில் குடியேறும்போது, நெருப்பெழுந்த காட்டின் பறவைகள் என வேதங்கள் விலகிச்செல்கின்றன என்றுணர்ந்து குருகுலத்தை 14வது பரசுராமரிடம் கொடுத்துவிட்டு தவமியற்றச் செல்கிறார். பின்னாளில், கர்ணன்  15 ஆண்டுகாலம், பரசுராமரிடம், தென்னகத்தில் படைத்திறனும் நூல்திறனும் அரசுசூழ்தலும் கற்கிறான், ”இறுதி சமர்களத்தில், உன் ஷாத்ரம் உன்னை கைவிடுவதாகுக” என்ற சொல் ஏற்கிறான்,

வியாசர்

‘பராசரரின்  மாணவனாகிய என்னிடம் வேதங்களை, வேதங்களைத் தொகுக்கும் பணியை ஒப்படைத்தார்,  36 ஆண்டுகாலம் முயன்று, வேதங்களை சம்ஹிதை ஆக்கினேன்,  400 ஞானியர் எனக்கு மாணவர்களாயினர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை எங்கள் ஞானசபை கூடியது’ என்று சொல்லும் வியாசர் வேதமரபை முன்நிறுத்தி, குருகுலம் அமைத்திருந்தவர்.

பராசரர்

அன்னையின் கருவிலேயே, நால்வேதமும், ஆறு மதங்களும், தரிசனமும் தத்துவமும், கற்று மண்ணுக்கு வந்து, கைலாய மலைச்சரிவில், பீதவனத்தில் தவமியற்றி, குருகுலமமைத்து, புராண சம்ஹிதை இயற்றியவர் பராசரர், பராசரரின் குருநாதரான புலஸ்தியர், குந்திக்கு நினைத்ததை அடையும் மந்திரத்தை உபதேசித்த துர்வாச மாமுனிவர், பின்னாளில் துரியோதனனுக்கு குருவாக கதாயுதப் பயிற்சி அளிக்கும்  பலராமர், அதர்வண வேதம் மூலம் திரௌபதி பிறக்கக் காரணமான மகாயாஜர், உபயாஜர் போன்ற குருமார்கள் நம் பாரதக் கதை முழுவதிலும் காணமுடிகிறது. காமரூபம் முதல் காந்தாரம்வரை, குமரி முதல் இமயம் வரை, குருமார்களையும், பாடசாலைகளையும் நோக்கி மாணவர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.  சில இடங்களில், தகுதியான மாணவனைத் தேடி உயர்ந்த குருமார்கள் அலைந்த வண்ணம் இருப்பதையும் காணமுடிகிறது.

வெண்முரசு முழுவதுமே சூதர்கள் மூலமே கதை நகர்த்தும் நேர்த்தியை கையாண்டிருக்கும் ஜெயமோகன்,  சூதர்கள் பற்றி குறிப்பிடுகையில், ”மானுடம் சிந்தும் அத்தனை உணர்ச்சிகளையும், அந்தந்த கணங்களிலேயே, அள்ளிவைத்துக்கொள்பவன். அந்த நேரத்தில் அவனைச் சூழ்ந்திருக்கும் அத்தனை பொருள்களிலும் மின்னும் விழிகள் அவனுடையது, இங்கு வாழும் அனைத்தும், மண்ணிலும், சூதர் சொல்லிலும் இறுதியில் சென்று படிகின்றன. தண்டுகளில், இலைகளில், தளிர்களில், மலர்களில், கனிகளில் நிறைந்து, மீண்டும் எழுகின்றன” என்கிறார்.

“அவர் சொற்கள் எப்பொருள் கொண்டவை என்பதை எவரறிவார்? நாம் விரும்பும் பொருளை அவற்றில்அள்ளிக்கொண்டிருக்கிறோம்.”

Advertisements

வெண்முரசில் கனவுகள் – மகராஜன் அருணாச்சலம்

வெண்முரசில் தொன்மங்களை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும் உத்திகளில் இரண்டு முக்கியமானவை.

  1. சூதர் பாடல்கள்
  2. கனவுகள்

வெண்முரசு கனவுகளைப் பயன்படுத்தும் விதமே தனித்துவமானது. இதுவரையிலும் வந்த கனவுகள் அனைத்துமே அக்கதாபாத்திரங்களின் நனவிலி மனதின் தன்னிச்சையான வெளிப்பாடுகளே! இது வரையிலும் வந்திருக்கும் சில கனவுகளைப் பார்ப்போம்.

ஊர்வரையின் கனவு

முதற்கனலில் பீஷ்மர் வழக்கம்போல் அரண்மனையை விட்டு ஊர் சுற்றும் போது (அரண்மனையில் இருக்க விரும்பாமல், அவரது இருப்பை விரும்பாதவர்களால் என்று வாசிக்கவும்!!), வழியில் தங்கியிருக்கும் ஓர் ஊரின் தலைவரின் மகளே ஊர்வரை. அவள் கனவில் பீஷ்மரைத் தாக்க வரும் ஒரு காட்டுப் பன்றியிடமிருந்து அவரைக் காப்பாற்றுகிறாள். அந்த காட்டுப்பன்றி அவளைக் கண்டதாலேயே அவரைத் தாக்காமல் செல்கிறது. அதனால் அவரை திருமணம் செய்ய முன்வருகிறாள். பீஷ்மர் அவரின் சூழ்நிலையால் மறுத்துவிடுகிறார். அப்போதும் அவர், பெண்ணே உன்னை மணந்தால் நான் வாழ்வேன் என்பது உண்மை, ஆனால் என் விதியை என்றோ முடிவு செய்துவிட்டவன் நான், என்றே கூறுகிறார். உண்மையில் அவர் யாருக்கு இப்பதிலுரைக்கிறார்? ஏன் இந்த கனவு இங்கு உரைக்கப்பட வேண்டும்? கதைக்கும், ஊர்வரைக்கும் என்ன தொடர்பு? இதற்கெல்லாவற்றிற்கும் பதில் பிறிதொரு அத்தியாயத்தில் ஜெ தந்திருப்பார்.

சிகண்டியின் கனவு

சிகண்டி தன் பிறவி நோக்கம் வெல்லுமா எனறறிய சந்திக்கச் செல்லும் நாகசூதனிடம் தனக்கு வந்த ஒரு கனவைச் சொல்கிறான். அதில் அவன் ஒரு காட்டுப்பன்றியாக பீஷ்மரைக் கொல்லச் செல்கிறான். அவருடன் இருக்கும் ஒரு பெண்ணைக் கண்டு தயங்குகிறான். அப்பெண் அவன் தாய் அம்பை போல இருந்ததாகச் சொல்கிறான்.

ஊர்வரையின் கனவோடு ஒத்துப் போகும் கனவு இது. சிகண்டி இக்கனவிலிருந்து ஒன்றை அறிகிறான். தன் தாய் பீஷ்மரைக் கொல்லச் சொன்னது வஞ்சத்தால் அல்ல. அவர் மீது கொண்ட பெருங்காதலாலேயே! ஆம். பீஷ்மர் இயற்கைக்கு எதிராக, மானுடத்தின் ஆதார விசைகளுக்கு எதிராக ஓர் ஒறுத்தல் வாழ்வை வாழ்கிறார். அதனாலேயே சலிப்புற்று, எதிலும் பிடிப்பில்லாமல், கனிந்த விளாங்கனி ஓட்டுக்குள் என இருக்கிறார். ஓட்டிலிருந்து ஒட்டாத கனியை அறிந்தவள் அம்பை ஒருத்தியே. அவள் முன் தன் ஓடை ஓர் இரும்புக் கோட்டையாக மாற்ற முயன்று பரிதாபமாகத் தோற்கிறார் பீஷ்மர்.

அவரை அவரதுகூட்டுக்குள்ளிருந்து விடுவிக்க நினைத்தவள் அம்பை. அவளை அவ்வாறுஎண்ண வைத்தது அவள் அவர் மேல் கொண்டிருந்த பெருங்காதல். அன்பாலும், இனிய வாழ்வாலும் அவரை வெளிக்கொணர அவள் செய்த முயற்சிகள் வியர்த்தனமானதாலேயே, அவரை மரணிப்பதன் மூலமாகவாவது விடுதலை அளிக்க எண்ணுகிறாள் அவள். ஆம், அவள் பீஷ்மரைக் கொல்ல வேண்டும் என சிகண்டிக்கு உத்தரவிடுவது அவர் மீது கொண்ட குரோதத்தாலோ, வெறுப்பாலோ அல்ல. அவர் மீதுகொண்டிருந்த மாளாப் பெருங்காதலே அவளை அம்முடிவை நோக்கித்தள்ளியது. அதையே அக்கனவுகள் பீஷ்மருக்கும், சிகண்டிக்கும் உணர வைக்கின்றன. அதற்குப் பிறகு சிகண்டி பீஷ்மரை வெறுப்பதில்லை. அவரைக் கொல்ல வேண்டும் என்பது அவனளவில் ஓர் செயல் மட்டுமே. அச்செயலில் எந்த விழைவையும் அவன் கலப்பதில்லை. அதனாலேயே அவனால் அச்செயலை வெற்றிகரமாக முடிக்க இயல்கிறது.

குந்தியின் கனவு

வண்ணக்கடலின் துவக்கத்தில்வருகிறது இக்கனவு. ஒருவகையில் இது ஒரு அகவெளிச் சலனம்(hallucination) என்று கூடச் சொல்லலாம். சதசிருங்கத்திலிருந்து குந்தி தன் ஐந்து புதல்வர்களோடும், தன் அணுக்கத்தினரோடும் அஸ்தினபுரிக்கு வரும் வழியில் ஒரு அதிகாலையில், ஓர் ஆற்றின் கரையில் நிகழ்கிறது இது. அவள் முன் பேருருவம் கொண்டு எழுந்து வருகிறான் கார்க்கோடகன். கர்ணனைப் பற்றிய அக்கனவு நம் வாசகர்கள் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று. அதிலும் சில அசாத்திய இணைவுகளை நிகழ்த்தியிருப்பார் ஜெயமோகன்.

குந்திக்கு கர்ணன் இருக்குமிடம் தெரியும். பாண்டு உயிருடனிருக்கும் போதே அவன் ஒற்றர்களை ஏவி விட்டு தேடச் சொல்கிறான். ஆனால் அவள் அவனது இருப்பையே மறக்க வேண்டும் என நினைக்கிறாள். அது அவளது இடத்தை அஸ்தினபுரியில் நிலைநாட்டிக் கொள்ள அவள் மனது ஆடும் ஆட்டம். மிக நுட்பமான உளவியல் நாடகம் அது. தான் மிக விரும்பிப் பெற்ற ஒரு மகனை மறந்தாக வேண்டும், அதே சமயத்தில் அவளுக்கு எந்த குற்ற உணர்வும் எஞ்சலாகாது. அவனைப் பற்றிய தகவல்களை தன் நனவிலியில் மறைக்க, அவள் அந்த நனவிலியுடன் நடத்தும் நாடகமே அக்கனவு. அதே போன்று அவள் அக்கனவின் இறுதியில் அவனை மறந்தும் விடுகிறாள்.

இக்கனவு நிகழுமிடத்தைக் கவனியுங்கள். அது ஓர் ஆற்றின் கரை. நம் நனவிலி நாம் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் பாய்ந்தொழுகும் ஆறு என்றே உருவகப் படுத்தப்படுகிறது. அந்த ஆற்றின் கரையிலேயே அவள் கார்க்கோடகனைச் சந்திக்கிறாள்.

ஏன் கார்க்கோடகன்? மழைப்பாடலில் கர்ணனைக் கருவுற்றிருக்கும் குந்தி அவனை கருவழிக்க நினைக்கிறாள். அதற்கு வரும் ஓர் முதிய மருத்துவச்சி ஓர் பெரிய ராஜ நாகம் தீண்டி இறக்கிறாள். அவள் தோழி அனகை அந்த நாகம் அவளை நெடுநேரமாக பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது என்று கூறுவாள். அன்றிலிருந்து கர்ணன் பிறப்பு வரை அந்த நாகம் அவளுடன் இருக்கும். எனவே கர்ணன் என்னும் போது இயல்பாகவே நாகமாக அவளது ஆழ்மனம் வெளிப்படுகிறது.

துரியனின் கனவு

குந்தியின் கனவு வந்த அடுத்த அத்தியாயத்திலேயே இள வயது துரியோதனனின் கனவு வருகிறது. தன் தனிமையில் சலிப்புற்று, உச்சகட்ட எரிச்சலில் தன் தம்பியரை போட்டு அடிக்கிறான் துரியன். இந்த இடத்தில் வெண்முரசில் அதிகம் பேசியிராத துச்சாதனின் ஒரு முகம் வெளிப்படும். தன் தம்பியருக்கும், அண்ணனுக்கும் இடையில் தானாகவே சென்று விழுவான் அவன். அதன் மூலம் தன் தம்பியரின் மீது விழும் அனைத்து அடிகளையும் அவனே தாங்கிக் கொள்வான். துச்சாதனன் அண்ணன் மீது மட்டுமல்ல, தன் தம்பியரின் மீதும் அதே அளவு பிரியம் வைத்திருப்பவன்.

அவ்வாறு அடித்த பிறகு அவன் தூங்கி விடுகிறான். துயில் எழும் அவன் முன் அடி வாங்கி காயமுற்று தூங்கிக் கொண்டிருக்கும் அவன் தம்பியரைப் பார்க்கிறான். ஆதூரம் மேலெழ கிளம்பி தன்  ரதத்தில் ஏறி மேற்கு கரை ஏரிக்கு செல்கிறான். அந்த பின்னரவில், நிலவெழுந்த ஏரியில் துரியன் கனவெழுந்து வருகிறான் கார்க்கோடகன். அவன் தான் துரியனுக்கு நிறைவைத் தருபவனாக வரப் போகிறவனை, அவன் முழு முதல் எதிரியை அவனுக்குக் காட்டுகிறான். அதன் பிறகே துரியன் தன் நிலையின்மை நீங்கப் பெறுகிறான். இக்கனவும் ஒருவித அகவெளிச் சலனம் தான். நாகம்  என்பது துரியன் பிறப்போடு இணைந்த படிமம். எனவே அவன் ஆழ்மனமும் ஓர் நாகமாகவே தோன்றுகிறது. இதே நாகத்தைத் தான் அவன் தன் கொடியாகக் கொள்கிறான். இதே நாகம் தொடர்பான ஒற்றுமை தான் அவனை கர்ணனுடன் மாறா நட்பு கொள்ளச் செய்கிறது. (இங்கே கனவுடன் தொடர்பில்லாத ஒரு குறிப்பு – கர்ணனின் கொடி: யானைச் சங்கிலி. என்ன ஒரு இயல்பான கொடித் தேர்வு!! ஆம். கர்ணன் என்னும் யானை ஒரு மிகச் சிறிய, எளிதில் உடைத்துத் தெறிக்கக் கூடிய ஆனால் யானையால் உடைக்க இயலாத சங்கிலியால் தானே வாழ்நாள் முழுவதும் கட்டுண்டிருக்கப் போகிறது!!  மற்றொரு வகையில் துரியன் என்னும் யானையைக் கட்டுறுத்தும் சங்கிலி என்றும் கூட கொள்ளலாம்)

பாமாவின் கனவு

இந்திரநீலம் முழுவதும் கனவுகள் ஒரு உத்தியாகவே வருகிறது. முழு துவாரகையையும் பாமா கனவில் கண்டு விடுகிறாள். ஒரு வித ‘தேஜாவூ’ தான் அவளுக்கு உண்மையில் துவாரகை செல்லும் போது நிகழ்கிறது.

ஆனால் நான் மிகவும் வியந்தது, அவளின் கிருஷ்ணனுக்கு அமுது அளிக்கப் போகும் அந்த ஏழு அடிகளில் வரும் சப்த கன்னியரின் கனவே. அக்கனவுகள் வாயிலாகவே பாமா தன் சுய அகங்காரத்தைக் கிழித்து தன்னை முழுவதுமாக அவனுக்கு அர்ப்பணிக்கிறாள். அதில் வரும் முதல் கன்னிக்கு அவள் அளிக்கும் பதில் மிக நுட்பமானது. அதன் மூலம் அவனுக்கு ஒரு தாயாக அவள் இருப்பாள் என்றே துவங்குகிறாள். ஆம். அவள் என்றுமே தன்னை ஒரு பேரன்னையாகவே கருதி வருபவள் தானே. அவளின் அன்னை என்ற மெய்ப்பாடின் வழியாகவே அவளுக்குள் அவன் மீதான பெருங்காதல் நிறைகிறது. அந்த மெய்ப்பாடே அவளை அவனை என்றுமே கட்டுப்படுத்தி வைக்கச் சொல்கிறது. நன்றாகப் பார்த்தால் கிருஷ்ணன் என்றுமே தவறைக் கண்டிக்கும் கோபமான தாய் முன் தலைகுனிந்து சமாளிக்கும் ஒரு குழந்தையாகவே அவள் முன் எப்போதும் இருப்பான்.

சிசுபாலனின் கனவு

இதே சப்த கன்னியரும் சிசுபாலனோடு உரையாடும் அந்த அகவெளிச் சலனமும் மிக முக்கியமானது. ஒரு விதத்தில் நமது ஒட்டுமொத்த ஞான மரபையே சுட்டி நிற்பது. ஒரு கன்னியில் காதலை நிறைத்த அதே சப்த மாதாக்களும் இங்கே மானுடம் கொள்ளச் சாத்தியமான அனைத்து எதிர்குணங்களையும் சிசுபாலனின் முற்பிறவிகளாகக் காட்டுகின்றனர். கூடவே சிசுபாலன் என்று ஆகி வந்த தொன்மத்தையும் கூறுகின்றனர். இதன் மூலம் காட்டப்படும் ஒன்று உண்டு. எதிர்குணங்கள் அவை எதிரானவை என்பதாலேயே நிறைவை அடையத் தடையாய் இருப்பதில்லை. எதிர்நிலைகளில் உன்னதத்தை அடைந்தவரும் முக்தியைத் தான் அடைவர். சுவாமி விவேகானந்தர் சொல்வது போல, “நல்லவனாக இருந்தால் மகத்தான நல்லவனாக இருங்கள். தீயவனாக இருந்தால் மகத்தான தீயவனாக இருங்கள்” என்பது நம் மரபு நமக்களித்தது. எதையும் வெறுக்கவில்லை நாம். எனக்குத் தெரிந்து உலகின் வேறு எந்த மரபும் இந்த முழுமையைத் தன்னகத்தே கொண்டிருப்பதில்லை.

இவை தவிர அம்பைக்கு வரும் அந்த மூன்று தேவியரின் கனவுகள், பீஷ்மருக்கு வரும் அவரது இறந்து போன தமையர்களைப் பற்றிய கனவுகள் போன்றவையும் குறிப்பிடத் தக்கவையே. மொத்தத்தில் வெண்முரசின் கனவுகள் அந்த அந்த கதாபாத்திரங்களின் ஆழ்மன இச்சைகளோ, அவற்றின் நிறைவேறாத ஆசைகளோ அல்ல. மாறாக அவை அந்த கதாபாத்திரங்களின் நிலையை அவர்களுக்கே உணர்த்தும் விதமாகவோ, அவற்றின் வாழ்வைத் தீர்மானிக்கும் ஓர் முடிவைத் தெளிவாக எடுக்க   உதவும் விதமாகவோ மட்டுமே உபயோகப்படுத்தப் பட்டிருக்கும். மட்டுமல்லாது அக்கனவுகளில் நிகழ்பவை அனைத்தும் பெரும்பாலும் ஏதாவதொரு வகையில் அக்கதாபாத்திரங்களோடு தொடர்புடையதாகவோ இருக்கும்.

வெண்முரசின் கிருஷ்ணன் – ரகுராமன்

“உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ”…

கிருஷ்ணரைப் பற்றி பேசும்பொழுது இதில் இருந்து ஆரம்பிப்பதுதான் உசிதமாக இருக்கும் என நினைக்கிறேன்.  உலகின் ஒவ்வொரு நாகரீகத்திற்கும், பராம்பரியத்திற்கும், அதை முழுவதுமாக பிரதிபலிக்கக்கூடிய ஒருவர் தோன்றி இருப்பார். அந்த மாதிரியான மனிதர்களின் ஆளுமை அவருடய சககாலத்தில் மட்டும் இன்றி,   அதில் பிறக்கப்போகும் ஒவ்வொரு உயிரின் ஆழ்மனதிலும் பதிந்து இருக்கும். அது ஒரு கூட்டு நனவிலியாக அந்த சமூகத்தின் பிரக்ஞையில் பரவி இருக்கும். நமது இந்திய நாகரீகத்திற்கும், பராம்பரியத்திற்கும் கிருஷ்ணர் அம்மாதிரியான ஒரு ஆளுமை என்பதை நாம் எள்ளளவும் மறுக்க முடியாது.

ஆன்மீகரீதியாக, ஞான மார்கத்திற்கும் பக்தி மார்கத்திற்கும் ஒரு மிகப் பெரிய இணைவு இவர் மூலம் ஏற்பட்டது. சமூக ரீதியாக மாடுகளையும், கன்றுகளையும் மேய்த்துக் கொண்டு காட்டில் சுற்றித்திரிந்த யாதவ சமுதாயத்தை ஒன்றிணைத்து, மேல்தட்டு மக்களே ஆண்டு கொண்டு இருந்த ராஜ்யத்தை கைப்பற்றி, ஒரு மாபெரும் நகரத்தை உருவாக்கிய ஒரு புரட்சியாளனாகவே அவர் தென்படுகிறார்.

வியாசரின் பாரதத்தில் கிருஷ்ணர் ஒரு சாதாரண அரசியல் ஞானியாகதான் முன்வைக்கப்படுகிறார். பிறகு இந்திய நிலத்தில் தோன்றிய பக்தி இயக்கமும், மற்ற பிற இயக்கங்களும் மெல்ல மெல்ல வளர்ந்து விரிவாகி அவரை இந்திய நாகரீகத்தின் பெரும்பான்மையான கூற்றுகளின் பிரதிபலிப்பாக உருவாக்கிக் கொண்டது. இன்று கிருஷ்ணரை பிரித்து இந்தியப் பாரம்பரியத்தையும் , நாகரீகத்தையும் விளக்குவது மிகவும் கடினம். அதே போல் கிருஷ்ணரையும் மற்ற நாகரீகத்தின் முன்னோடிகளுடன் ஓரளவுக்குமேல்  ஒப்பிடமுடியாது. ஏன் என்றால் கிருஷ்ணரைப் போல் ஒரு பெரிய ஆளுமை விரிவு, மற்ற நாகரீகத்தில் உள்ள முன்னோடிகளுக்கு  இல்லை.

என் நண்பர் ஒருவர் சொல்லுவார், உங்களக்குத் தெரிந்த ஒரு இருபது பெயரை பட்டியல் போட்டால் அதில், கண்டிப்பாக இரண்டு பெயர் கிருஷ்ணர் சம்பந்தமாக இருக்கும் என்று. “Indology” என்ற இந்திய கலாச்சார, நாகரீக ஆய்வுப் படிப்பின் துரிதமான வளர்ச்சிக்கு  “கிருஷ்ண தத்துவத்தின்” ஈர்ப்பு ஒரு முக்கிய காரணம் என்றும், “விசிஷ்டாத்வைதம்” என்பதே ஒரு வகையான “கிருஷ்ண தத்துவத்தின்” நீட்சிதான் என்றும் கூறுவார். கிருஷ்ணன் என்ற ஒரு யாதவகுலத் தலைவனை எப்படி ஒரு சமூகம், அதன் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப விரிவாக்கிக் கொண்டே செல்கிறது என்பதை பார்க்கும்பொழுது ஆச்சரியமாகத்தான்  இருக்கிறது. பாகவத, புஷ்டி மார்க பக்தி இயக்கத்தில் இருந்து, ராமானுஜரின்  சீர்திருத்த இயக்கங்களாகவும், இன்று இருக்கும் ஹரே கிருஷ்ணா இயக்கம் வரைக்கும், இது விரிந்து கொண்டே இருக்கிறது.

என் மகளை கிருஷ்ணர் கதைகள் சொல்லி தூங்கவைப்பது என் வழக்கம். அப்பொழுது சாதாரணமான ஒரு கேள்வியை கேட்டாள், “அப்பா, கிருஷ்ணர்னா  யாரு?…”  நானும் யோசிக்க ஆரம்பித்தேன்.

அவர் ஒரு தத்துவ ஞானியா? சிறந்த போர் வீரனா? ஒரு திறம்பட்ட நிர்வாக ஆளுமையா?அரசியல் சூழ்ச்சியாளனா? ஒரு தேர்ந்த அரசனா? ஒரு கலைஞனா? இரக்கம் இல்லாத கொலைகாரனா? ஒரு யாதவ புரட்சி வீரனா? நல்ல காதலனா? ஒரு அழகான குழந்தையா?  பெண்களைப் பற்றி முற்றிலுமாக அறிந்து அவர்களை பித்துகொள்ளச் செய்யும்  மன்மதனா? அல்லது அவர் அந்த பிரம்மத்தின் இறைவடிவம்தானா?ஜெயமோகன் சொல்வதைப் போல நமது மரபு சொல்லிச் சொல்லி, விளக்கி விளக்கி  இன்னும் சொல்லி முடியாத, விளக்க முடியாத  ஒரு மிக பெரிய “Enigma” ஒன்று உண்டு என்றால் அது கிருஷ்ணர்தான். அவரை வைத்து பல கோயில்களை கட்டிக் கொண்டே செல்லலாம் அல்லது அவரை வைத்து பல தத்துவங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கலாம். புல்லாங்குழல், மயில் பீலி இதுவெல்லாம் இந்திய மக்களின் ஆழ்மனதில் அழிக்கமுடியா படிமங்களாக நிலைபெற்றிருக்கின்றன.

பி.கே. பாலகிருஷ்ணனில் தொடங்கி எஸ்.ரா. வரையிலான அனைவரது மறுஆக்கப் படைப்புகளும், இன்றைய நிலையில்தான் மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்து இருக்கின்றன. வெண்முரசு மட்டும்தான் மரபு ரீதியாகவே மகாபாரதத்தை விளக்கி அதை நவீன இலக்கியமாக எடுத்துச் செல்கிறது.  மரபில் இருக்கும் அனைத்து புராணக் கதைகளையும் விளக்கி அவற்றை கதாபாத்திரங்களின் குணாதிசயங்களின் அடிப்படையாக கொண்டுசெல்வது என்பது ஒரு பெரிய முயற்சி.

வெண்முரசை படிக்க ஆரம்பிக்கும் பொழுதே, ஜெயமோகன் கிருஷ்ணரை எப்படி கையாளப் போகிறார் என்பதைப் படிக்க ஆவலாகவே இருந்தேன். மகாபாரதக் கதையின் அடிநாதமே அந்த கிருஷ்ணர் கதாபத்திரத்தின் ஒரு வகையான மாயபிம்பம்தான். நவீன இலக்கியவாதியாக அதை ஒரு சாதராணமான கதாபாத்திரமாக கையாண்டு இருந்தால், இந்த இதிகாசத்தின் சாரமே வறண்டு போயிருக்கும். மாறாக இதுவரை வந்த வெண்முரசில் ஜெயமோகன் கிருஷ்ணரை மிக மிக அழகாக கையாண்டு இருக்கிறார்  என்றே சொல்ல வேண்டும்.

நீலம் – ஒரு மரபுப் பார்வை

இன்றைய சாமானிய  இந்திய மக்களின், கிருஷ்ணர் எனும் பிம்பத்தின் மரபுசார்ந்த பார்வையைதான் நீலத்தில் ஜெயமோகன் பதிவு செய்கிறார்.   மரபை மறு ஆக்கம் செய்யும், மரபை  இன்றைய காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாற்ற முனையும்  அனைத்து எழுத்தார்களும் முதலில் மரபு என்ன சொல்கிறது என்பதை தீர்க்கமாக விளக்க வேண்டும். சாமானிய மக்களைவிட அறிவு தளத்தில் மேம்பட்டவனாக, பகுத்தறிவுப் பார்வை உள்ளவனாக தன்னைக் கருதுபவகூட மரபில் என்ன சொல்லபட்டுள்ளது என அறிய வேண்டும்.  நீலம் அதற்கான ஒரு முயற்சிதான். நீலம் முழுக்க பாகவத மற்றும் ஜெயதேவரின் அஷ்டபதியின் ஒரு நீட்சிதான் என்றாலும், அதன் எழுத்து நடையும், வடிவ அமைப்பும் தமிழ் இலக்கிய உலகிற்கு முற்றிலும் புதியவை.

நீலம்  இரண்டு வகையாக கிருஷ்ணரை பார்க்கிறது. ஒன்று ராதையின் வழியாக மற்றொன்று கம்சனின் வழியாக. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வண்ணம். ஒரு மனிதனின் மனதிற்கு மிக அணுக்கமாக இருப்பவர்கள் காதலியும் எதிரியும்தான். இன்னும் சொல்லப்போனால் காதலியைவிட நம்மை அணுக்கமாக கவனிப்பவர்கள் நம் எதிரிகள்தான். பல சமயம் ராதையை விட கம்சன்தான் கிருஷ்ணரை அதிகமாக காதலிக்கிறானோ எனவும் தோன்றும். ஒரு பெரிய கல்லை எப்படி உடைப்பார்கள் என்றால் நெருப்பு மூலம் அதை எரித்துக்கொண்டே குளிர்ந்த தண்ணீரை அதன் மேல் ஊற்றுவார்கள், பிறகு அந்தக் கல்லை நம் விருப்பம் போல உருவாக்க முடியும். கிட்டத்தட்ட நீலம் செய்வதும் இதுதான். ராதையின் காதல் நீலம். கம்சனின் வன்மம் சிவப்பு. நம் இதயம் என்ற இரும்புப் பாறையில் கம்சனின் சிவப்பு வன்மத்தை எரித்து எரித்து அதில் ராதையின் குளிர்ந்த நீல நீரை விட்டால் நம் இதயமும் சுக்கு நூறாகி சிதறும்.

அதேபோல், நீலம் கம்சனை ஒரு கெட்ட கதாபாத்திரமாகவே சித்தரிக்கவில்லை. ஒரு முரண்படும் பொருளாகத்தான் விவரிக்கபட்டு இருக்கிறான். நம் மரபில் அனைத்து முரண் பாடுகளையும் ஒன்றாகதான் இணைத்து கொள்கிறார்கள். உதாரணமாக அமுதின் சகோதரியாக நஞ்சை காட்டுவது. மேற்கத்திய சிந்தனையில் தான் அனைத்தும் கருப்பு வெள்ளையாக சித்தரிக்கபடும் , நம் மரபில் அனைத்தும் “Zero To 360 Degree” யில் தான் சொல்ல படுகிறது. இதனால் தான் இந்தியா நாட்டின் பல வழிபாட்டு முறைகள் (வராக, நாக வழிபாடு) அவர்களுக்கு ஒரு சாத்தான் வழிபாடு ஆக தெரிகிறது.   நீலம் பற்றி விவாதிக்க  தனி கட்டுரையே  வேண்டும் என்பதால் அப்பிடியே விட்டு விட்டு மேலே செல்வோம்.

வேதாந்தப் பார்வை

வெண்முரசில் ஜெயமோகன், கிருஷ்ணரைப் பற்றி நமது மரபில்  குறிப்பிடபட்ட மேலே  உள்ள அனைத்து நிலைகளையும் (அரசியல் ஞானி, போர் வீரன், புரட்சியாளன்…) ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக மிக விஸ்தாரமாக விரிவாக்கி கொண்டே வாசகனை ஒரு விதமான பரவச நிலைக்கே இட்டு செல்கிறார்.

பிரயாகையில்தான் மகாபாரத கிருஷ்ணனின் முதல்  வருகை.. ஏகலைவனால் துரத்தப்பட்ட யாதவர்கள் ஓடி கொண்டே இருக்கிறார்கள். உங்கள் கடைசி குழந்தையும் விட மாட்டோம் என சூழ் உரைத்து கொண்டே அவன் பின்னால் தொடர்கிறான். அப்பொழுதான் கிருஷ்ணர் அங்கு வருகை புரிகிறார். அப்பொழுதும் அவர் உடலே புன்னகையாய் மிளிர்கிறது. அவர் தான் இருக்கும் இடத்திற்கும், செய்யும் செயலக்கும் சம்பந்தமே இல்லாதவர் போல் தான் வர்ணிக்க படுகிறார். அதே போல்தான் அர்ஜுணனை கூட்டி கொண்டு மதுராவில் போர் புரியும் பொழுது ஒரு காதல் பாட்டை பாடி கொண்டே சண்டை போட்டு கொண்டு இருக்கிறார். அது கிருஷ்ணரின் வாழ்வா சாவா என தீர்மானிக்கும் போர். அப்பொழுதும் சிறு பதட்டமே இன்றி, மரத்தில் பழங்களை பறிப்பதை போல், மிக இலகுவாக காய்களை நகர்த்தி கொண்டே செல்கிறார். கீதையின் ‘செயலின் செயலின்மை’ தத்துவத்தை சொல்லாமலே சொல்லி உணர வைத்து விடுகிறார்.

வெண்முரசின் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் என்ன நினைக்கிறது என ஜெயமோகன் நீளமாக  விவரிப்பார் ஆனால் கிருஷ்ணர் என்ன நினைக்கிறார் என்பதை அவர் எங்குமே சொல்லி இருக்க மாட்டார். இதுவே வெண்முரசில்  கிருஷ்ணர் கதாபாதிரத்தின் தனி சிறப்பு.

கிருஷ்ணர் – ஒரு குழந்தை

நிர்வாக துறையில் “Negotiation” பற்றி சொல்லும் பொழுது “Childrens are the best negotiator’s” என்று சொல்லுவார்கள். வேண்டியவற்றை வாங்கும் திறன் ஒரு குழந்தைக்கு தான் முழுவதுமாக தெரியும். கிருஷ்ணர் குந்தியின் கால்களில் நன்றாகச் சேர்ந்து அமர்ந்து அவள் ஆடை நுனியைப்பற்றி கைகளால் சுழற்றியபடி சிறுவனைப்போலவே பேசிக்கொண்டிருந்தான் என ஜெயமோகன் வர்ணிப்பார். அர்ஜுனன் என்னடா இது ஒரு அறியா சிறுவன் போலே பேசி கொண்டு இருக்கிறானே ,இவனக்கு ஒன்றுமே தெரியாதா என நினைக்கும் பொழுது, நினைவுக்கு வந்தவற்றின் ஒழுங்கில் என சொல்லப்பட்ட அச்சொலோட்டம் முடிந்ததும் அது மிகச்சரியான இடத்துக்கு வந்திருப்பதை திகைப்புடன் அவன் உணர்கிறான். இவன் சாதாரணமானவன் கிடையாது, என்று அர்ஜுணனை திகைக்க வைக்கும் ஒரு காட்சி. இவனை போல் ஒருவன் தான் தன் அத்யந்த நண்பனாக இருக்க முடியும் என நினைக்க தொடங்குகிறான்.  உதாரணமாக கிருஷ்ணர் விதுரரை மிரட்டும் இடம்… மிக சரியாக எங்கே அடித்தால் எங்கே விழுவார் என  அவருக்கு தெரிந்து இருக்கிறது இது இன்று இருக்கும் “Modern PRO” வரை நாம்  பொருத்தி பார்க்கலாம் . இதே போல் பீஷ்மரடிம் பேசி அவரை அஸ்தினாபுரதிற்கு அனுப்புவது.

கிருஷ்ணர் – பிரம்மத்தின் இறை வடிவம்

ஜெயமோகன் சில இடங்களில் ஒரு  பிரம்ம வடிவம் ஆகவும் கிருஷ்ணரை வர்ணித்து இருப்பார். அணங்கு கொண்ட கௌரவ இளவரசியுடன்  கிருஷ்ணன் ஏதோ பேசி கொண்டே இருப்பதை சாத்யாகி பார்க்கிறான். அப்பிடி என்ன தான் அவன் பேசி இருப்பான் என்று யோசித்து கொண்டு இருக்கிறான். பீஷ்மரை பார்த்து பேசிய பிறகு கிருஷ்ணன்  பாறை மேல் உட்கார்ந்து கொண்டு நதியை  நோக்கி கொண்டு இருக்கிறான். சிறது நேரத்தில் செய்தி வருகிறது அந்த கௌரவ இளவரசி இறந்து விட்டாள் என்று. அவன் முகத்தில் ஒரு சலனமும் இல்லை. அப்பிடி என்றாள் அவன் பாறை மீது உட்கார்ந்து கொண்டு அந்த இளவரசியுடனா பேசி கொண்டு இருந்தான்? அந்த இடத்தில்  ஏதோ கிருஷ்ணன்  மனிதன் என்ற நிலையில் இருந்து ஒரு படி மேலே நிற்பது போல இருந்தது.

அதே போல் புரிசவரசு கிருஷ்ணர் குழல் ஊதுவதை பார்ப்பது. அவன் சலிக்காமல் ஒரே மாதரியாக வாசிக்கிறான். முதலில் சலிப்பு ஏற்பட்டாலும் அதையே உன்னிப்பாக கவனிக்கிறான். அவனை அறியாமலே அவனின் அனைத்து உணர்வுகளும் அதில் லயித்து போகிறது. இதை ஒரு பிரபஞ்ச இயக்கதினுடன் ஒப்பிடலாம். ஒருபார்வையிலே எல்லாம் ஒன்றே போல தோன்றுகின்றன. திரும்ப திரும்ப ஒன்றே  தான் ஆனால் வேறுபாட்டைக் கவனித்தால் அந்த வேறுபாடே பிரம்மாண்டமாக ஆகிறது.திரும்ப ஒன்று நடக்கவே நடக்காமல் முடிவில்லாமல் போவது பயங்கரமாக இருக்கிறது சகுனியுடன் பகடை விளயாடும் இடமும் இதே போல தான். அவன் ஒரே மாதிரி விளையாடி கொண்டு இருக்கிறான் என தோன்றும். சகுனி அப்பொழுது கிருஷ்ணனிடம் பார்ததும் ஒரு பிரபஞ்ச ஆட்டம் தான்.

கிருஷ்ணர் – நண்பனாக வலம் வந்த தெய்வம்

நமது மரபு “கிருஷ்ணரை” நண்பனாக வலம் வரும் தெய்வமாக தான் பார்க்கிறது. வெண்முரசிலும் கிருஷ்ணர் ஒரு நல்ல நண்பராகவே தான் வடிவமைக்க பட்டு இருக்கிறார். கர்ணன் துரியோதனன் நட்புதான் மிக அதிகமாக பேசபடுகிறது, ஆனால் அர்ஜுனன் கிருஷ்ணர் நட்பை யாரும் பெரியதாக பேச வில்லை. கிருஷ்ணர் உடைய பக்தி வீச்சு அதிகமாக அதிகமாக அர்ஜுனன் சிஷ்யன் என ஆக்க படுகின்றான்  கிருஷ்ணரை தெய்வமாக வழிபடும் கூட்டம் ஆக இருந்தாலும், அனைவரும் உரிமையாக அவனிடத்தில் பேசுகின்றனர். உணவு பரிமாறுபவன் ஒழுங்காக சாப்பிட மாட்டாயா இல்லை தட்டை எடுத்து தலையில் கொட்டி விடுவேன் என உரிமையாக மிரட்டுகிறான். குதிரைக்காரன்  “பேசாதே, இதுதான் இப்போது சிறந்த குதிரை… இதன் கோணல் பாலைவனத்துக்கு ஒரு பொருட்டல்ல… மெல்லிய திசைமாற்றத்தால் ஒன்றும் ஆகிவிடாது. ஆனால் ஓடவேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறது. இதை நீ எடுத்துக்கொண்டால் போதும்” என அவனை அதட்டுகிறான்.
யாரோ எழுதிய ஒரு புதுக் கவிதை ஞாபகம் வருகிறது, (முழுவதுமாக ஞாபகம் இல்லை)

“மகாபாரதம் காவியம் ஆக்கப்பட்டது,
கிருஷ்ணன் தெய்வம் ஆக்கப்பட்டான்,
ஆனால் போரில் செத்து மடிந்த வீரர்கள் என்ன ஆனார்கள்?”

சாமானிய மக்கள் என்றுமே காவியங்களில் முழுவதுமாக பதியப்படுவதில்லை. ஆனால் இதில் கிருஷ்ணர்  ஒரு இடத்திற்குச் செல்லும்பொழுது அங்குள்ள கவனிக்கப்படாத சாதாரணமான மனிதர்களைப்பற்றி நிறைய தெரிந்து வைத்துக் கொள்கிறான்.  சாரதி, பணிப்பெண், சாதாரணமான வேலை செய்யும் ஆட்கள் என் அனைவரும்,  பாரதவர்ஷத்தின் புகழ்பெற்ற மன்னன், தங்களைப்பற்றியும், தங்கள் குடும்பத்தைப் பற்றியும் பேசுவதைக் கண்டு பரவசம் அடைகிறார்கள். அவனை தம்மில் ஒருவனாகவே எண்ணிக் கொள்கிறார்கள்.

கிருஷ்ணர் – பெண்களின் அகக்காதலன்

கிருஷ்ணரை வெறும் மன்மதன் என்று சிறியதாக குறுக்க முடியாது. அவன், அவனைப் பார்க்கும் அனைத்துப் பெண்களுக்கும் அகக்காதலானகவே இருக்கிறான். எப்படி அத்தனை பெண்களும் இவன் மீது இப்படி பித்து கொள்கிறார்கள்! ஜெயமோகன் சில இடங்களில் இதை பற்றி தொட்டு செல்கிறார். ஒரு பெண் யார் முன்னால் முற்றிலும் விடுதலை அடைந்தவளாக, தன்னையே முழுவதும் ஆக உணர்கிறாளோ, அவன் மீது அவள் ஒரு பித்தாக மாறி விடுகிறாள் என்று கூறுகிறார். அதே போல், குழந்தையாகவே இருக்கும் ஆண் மீது ஒரு பெண்ணுக்கு தீரா காதல் பொங்கும். குந்தியும் ஆடை நுனியை பற்றி கொண்டு ஒரு குழந்தை போல் பேசுவதை கண்டு அர்ஜுனன், “அவன் குழந்தையாக நடிக்க வில்லை என்றும் அன்னையர் முன் ஒரு குழந்தையாகவே மாறி விடுகிறான் என்றும் நினைக்கிறான். அதே போல் காந்தாரி முன்பும் அவன் குழந்தை போல மாறி விடுகின்றான்.  அவன் கண்களில் எப்பொழுதும் மிளிரும் குறும்பு புன்னகை, அவனது நானமில்லா செய்கைகள், இது எல்லாம் பெண்கள் மனதில் அவனை ஒரு அணுக்கமானவனாக இருக்க வைத்து விடுகிறது

கிருஷ்ணர் – ஒரு இரக்கம் இல்லா கொலைக்காரர்

கம்சனை அழித்து மதுராவை கைப்பற்றும் பொழுதும், ஏகலவ்யனின் மகதப் படைகளிடம் இருந்து மறுபடியும் மதுராவை கைப்பற்றும் பொழுதும், கிருஷ்ணர் அதுவரை அன்று கேட்டிராத இரக்கம் இல்லா பல கொலைகளை செய்கிறார்.  அப்பொழுது “கருணை உள்ள அறம் என்று ஒன்று கிடையாது” என ஒரு வரி வரும். “ஏசு ஒளிமிக்க வாள் கொண்டு நீதி படைக்கப் போகிறார்” என்பது போன்ற ஒரு அழகான சொல்லாடல்.

கிருஷ்ணர் – ஒரு படிமப் பார்வை

“ …..சங்கு சக்ர கதாபாணே
துவாரகா நிலையாச்சுத…”

சிறு வயதிலே பூணூல் போட்டால், “சந்தி” தினசரி செய்வேன் என்று என் தந்தை நினைத்திருந்தார். முதலில் நானும் தினசரி மூன்று வேளை அதை செய்ய பழக்கப்பட்டு இருந்தேன். பின்னர் அது தினமும் ஒன்று, வாரம் ஒன்று, மாதம் ஒன்று என்று மாறிக்கொண்டே இருந்தது.   இப்பொழுது எல்லாம் அவர் “ஆவணி அவிட்டத்திற்கு” இரண்டு நாள் முன்னர் போன் செய்து, அன்றைக்காவது நான் சந்தி செய்ய மன்றாடுகிறார். மரபு தன்னுடன் அறுபட்டுப் போகும் கவலை என் தந்தைக்கு எப்பொழுதும் உண்டு.

சென்ற முறை ஆவணி மாதத்தில், நான் “ஷாங்காய்” நகரில் இருக்க வேண்டி இருந்தது. அதிகாலை நான்கு மணிக்கே எனக்கு தந்தையிடம் இருந்து  “Reminder” வந்து விட்டது. பூணூல் மந்திரமும் (யக்ஞோபவீத மந்திரம்) பூணூலும் என் தந்தை எற்கெனவே என் பையில் வைத்து இருந்தார். கூடவே மறக்காமல் “சந்தி” செய்யும்படியும் சொல்லி இருந்தார். மனம் லயித்து செய்ய முடியாத அனைத்தும் எனக்கு வெறும் சடங்காவே தெரிந்தது.  ஐந்து பத்து நிமிடங்களில் அவசரமாக செய்து அதை வெற்றுக் கடமையாகவே பலர் ஆக்கி விட்டிருக்கிறார்கள்.

ஹோட்டலின் டம்ப்ளரை பஞ்சபாத்ரம் ஆகவும் ஸ்பூணை உத்தரணியாகவும் கொண்டு சந்தி செய்ய உட்கார்ந்துவிட்டேன். வீட்டில் இருக்கும்பொழுது புத்தகத்தை பார்த்து சொல்லிவிடலாம். இப்பொழுது நினைவில் மந்த்ரத்தை மீட்டிச் சொல்ல வேண்டி இருந்தது. அதிசயமாக எங்கேயெல்லாம் கிருஷ்ணன்/நாராயணன் பெயர் வருகிறதோ அது எல்லாம் சரியாக ஞாபகம் வந்தது. குறிப்பாக கடைசியாக “நமஸ்சவித்ரே…” என்று தொடங்கும் மந்த்ரம் அக்ஷரம் பிசகாமல் ஞாபகம் வந்தது.  அதில் ஒரு வரிதான் மேலே குறிப்பிடப்பட்டு  இருக்கிறது.

அந்த வரியை சிறிய வயதில் படிக்கும்பொழுது எழுந்த கிளர்ச்சி அப்பொழுது நினைவில் மீட்டி எடுக்கும் பொழுதும் இருந்தது. “சக்ரம்” என்றபொழுது தீபாவளி பட்டாசு ஞாபகம் வந்தது. கிருஷ்ணர் இது மாதிரி  ஒன்றைத்தான் கையில் வைத்து இருப்பார் என்று நினைத்திருந்தேன். பிறகு வளர்ந்தவுடன் அது ஒரு மாதிரி “பூமராங்” ( Boomerang) போல பழங்குடிகள் உபயோகிக்கும் ஆயுதம் என்று முடிவு செய்தேன். ஒரு விசையில் செலுத்தப்பட்டால் அது வெகு தூரம் சென்று பிறகு நம் கைகளுக்கே வரும் என்று தெரிந்திருந்தது. Youtube-இல் பலமுறை அதை பார்க்கும்பொழுது கிருஷ்ணன் இந்த மாதிரிதான் அதை உபயோகpபடுத்தி இருப்பார் என்று எண்ணிக்கொள்வேன். வெண்முரசில் “பிரயாகை” படிக்கும்பொழுது, கிருஷ்ணன் சக்கரத்தை உபயோகிக்கும்பொழுது, அதை அர்ஜுனன் அதிசயமாக பார்க்கும்பொழுது அதே கிளர்ச்சி எனக்கு ஏற்பட்டது.  ஏழு சக்கரங்களாக மாறி அது மின்னல்கள்போல சுழன்று பறந்து தலைகளை சீவிச்சீவித் தள்ளியதை ஜெயமோகன் மிக அழகாக வர்ணிப்பார். அது உடம்பின் எழு சக்கரங்களை குறிக்கிறது என்பதும் நினைவுக்கு வந்தது.

“வெண்முகில் நகரத்தில்” துவாரகை நகர் வருணனை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “துவாரகை” என்ற ஒற்றை சொல்லில் உள்ள ஆச்சரியத்தை  கொஞ்சம் கொஞ்சமாக விளக்க முடிந்தது. சங்கு சக்ரம் என்றால் இரு மலைகளின் பெயர் என்றும், துவாரகை என்ற நகரம் அவற்றின் மீதுதான் அமைந்து இருந்தது  என்பதும்  எனக்கு ஒரு புது தகவலாகவே இருந்தது. பாரதத்தின்   கடைசியில் அந்த மாபெரும் நகரம் அழியப் போகிறதே என்ற வருத்தமும் கூடவே தோன்றியது. சாத்யகியுடன்  என் மனதும் கூடவே பயணம் செய்தது.

படித்துக்கொண்டிருக்கும் பொழுது எனக்கு நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு அய்யங்கார் நண்பனிடம் செய்த உரையாடல் ஞாபகம் வந்தது. அவன் ஒரு கமல் ரசிகன். வெறியன் என்றே கூறலாம். அவனை உசுப்பி விட வேண்டும் என்றே சொன்னேன், “ஆமா, இவ்வளவு பேசறியே, கமல் ஒரு நாத்திகர் தெரியுமா?”

அவன் முதலில் மறுத்து பிறகு ஒப்புக்கொண்டான். ஆனால் அவன் கூறினான், “இப்போ நாத்திகரா இருக்கலாம்,  ஆனால் அவர் ‘சமாஷ்ரணம்’ செய்துகொண்டுவிட்டார்.”  அதற்கு என்ன பொருள் என்று கேட்டேன். அவன் சொன்னது ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அது ஒரு சடங்கு என்பதும், சங்கையும் சக்கரத்தையும் உடலில் வரைவது என்றும் புரிந்தது. அதை செய்துவிட்டால் பிறகு அவன் காலம் எல்லாம் பெருமாளுக்கு அடிமை என்றும்  சொன்னான். அப்பொழுது அதை ஒரு உளறல் என்றே நினைத்தேன். இப்பொழுது வெண்முரசு படிக்கும்பொழுது  சட்டென்று   அந்த உரையாடல் ஞாபகம் வந்தது. சாத்யகியுடன்  பயணப்பட்டு அவன் விழிகளில் கிருஷ்ணனை பார்க்கும்பொழுது அதே பரவசம் எனக்கும் வருகிறது.  இதை “தாச பாவம்” என்றும் சொல்லலாம். இதை  உபன்யாசகர்கள் விரிவாக்கி “சரணாகதி” தத்துவமாக ஆக்கிவிட்டார்கள். தற்பொழுது எம்‌ஜி‌ஆருக்கு இருப்பதும் ஒரு மாதிரியான தாசபாவம்தான் என தோன்றுகிறது.

“ரக்ஷமாம் சரணாகதம்.. ” என்று முடிவடையும் அந்த மந்திரத்தின்  முடிவில் நம் மனமும், சாத்யகி போல் கிருஷ்ணனிடம் சரண் அடைவதை மட்டும் என்னால் தடுக்க முடிவதில்லை.

கிருஷ்ணர் – போர் வீரன்

மதுராவை கிருஷ்ணர் கைபற்றும் போர் தந்திரம் மிக அழகாக விவரிக்க பட்டு இருக்கும். அதில் போர்கள் படைகலங்களால் செய்ய படுவது இல்லை எனவும் அது சொற்கலால் செய்ய படுகிறது என கிருஷ்ணர் கூறுவார். உலகின் அத்துணை பெரிய போர்களும் அப்பிடித்தான் செய்யபட்டு இருக்கின்றன. முகமது நபி ஒரு சிறிய படை கொண்டு தான் போரில் ஜெயித்தார். பாபர் லோடியுடன் சண்டையிடும் பொழுது மிக குறைவான ஆட்களைதான் வைத்து இருந்தான். இன்றைய Chruchil வரை இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

கிருஷ்ணர் – ஒரு  புரட்சியாளன்

மக்களை பற்றி கிருஷ்ணன் மிக அருமையாக புரிந்து வைத்து இருக்கிறார். பழங்குடிகள் திரண்டு அரசுகளை அமைப்பதிலுள்ள பெரும் இடர் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை அரசர்கள் என்று எண்ணி கொள்வதே என்றும், அதனால்தான் அவர்கள் ஓயாமல் தங்களுக்குள் குல சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். ஜெயமோகனின் வடகிழக்குப் பயணக் குறிப்பிலே இன்னமும் அந்த மக்கள் தங்களுக்குள் எப்பிடி சண்டை போட்டு கொண்டே இருக்கிறார்கள் என்பதை முன்னரே சொல்லி இருக்கிறார்.

சிதறுண்டு கிடக்கும் யாதவ குலங்களை ஒன்று திரட்டுகிறார். துவாரகை எனும் பெரிய நகரின் உருவாக்கமே  அனைத்து யாதவ குலங்களை ஒன்று சேர்க்கிறது. காடுகளில் வெறும் மாடு மேய்க்கும் கும்பல் என கருதப்படும் குலத்தின் அடையாளத்தை மெல்ல மெல்ல மாற்றுகிறார். பொருள் சேர சேர, அதிகாரம் சேர சேர, யாதவ குலத்தின் மதிப்பு உயர்வது வெண்முரசில் நன்றாக தெரிகிறது.

இன்று இருக்கும் தலித் இயக்கங்களுக்கு கிருஷ்ணர் ஒரு மாபெரும் முன்னோடி. சே குவாராவை விட, ஸ்டாலினை விட கிருஷ்ணர் கண்டிப்பாக ஒரு நல்ல முன்னோடியாக தான் தெரிகிறார். அவர்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று தன்னிரக்க வழி, காலம் காலமாக தங்களை சுரண்டியதை நினைத்து தன்னிரக்கம் கொள்வது, அதன் மூலம் வெறுப்பை வளர்த்து கொள்வது. அல்லது நாராயண குரு, அய்யன் காளி ஆகியோர் முயன்ற வழி. அனைத்து நிலைகளிலும் தம்மை உயர்த்தி கொள்வது,. மெதுவாக அதிகாரம் சேர சேர, நிலை மாற மாற ஒரு பெரும் மாற்றம் நிகழும். கிருஷ்ணர் செய்தது சரியாக இதை தான்.

கிருஷ்ணர் – ஒரு  ராஜதந்திரி

கிருஷ்ணர் நினைத்து இருந்தால் தன் படைகள் மூலமாகவே மகதத்தை வென்று இருக்க முடியும். ஆனால் அவர் விருப்பமோ ஒரு பெரிய நகரத்தை உருவாக்க வேண்டும் என்பது, பொருள் ஈட்ட வேண்டும் என்பது. அதற்காக சாமர்தியமாக அஸ்தினாபுரியை உள்ளே கொண்டு வருகிறார். அஸ்தினாபுரம் உள்ளே வந்தவுடன் மகதம் மதுராவை தாக்க பயப்பிடகிறது.ஒரு நாற்பது வருடங்களக்கு முன்னால் உலகின் அனைத்து நாடுகளும் அமெரிக்கவிடமும் ருசியாவிடமும் அணிவகுத்து நின்றது சரியாக இதற்காகதான். பிறகு அஸ்வமேதம் யாகம் செய்ய வைத்து, சாமர்தியமாக பீமன் மூலம் தன் நீண்ட நாள் எதிரியான ஜராசந்தனை கொல்ல வைத்தது கிருஷ்ணரின் ராஜதந்திரத்தின் பெரும் வெற்றி.

அதேபோல் ஒரு தேர்ந்த பொருளாதார நிபுணரைப் போல் நதிவணிகத்தைவிட கடல் வணிகத்தில்தான் அதிக வருமானம் கூடும் என்பதை துல்லியமாக கணக்கிடுகிறார். சரியான நபர்களை தன்னுடன் வைத்துக் கொள்வதில் அவர் தீவிரமாக இருந்தார். அதனால்தான் மிக எளிதாக, ஒரு இரவில்  கடைக்கு முன்னால் தூவப்பட்டு இருந்த உப்பைப் பார்த்து, அவரால் அந்த உப்பு வியாபாரியின் திறமையை கண்டுகொள்ள முடிந்தது.

காந்தியும் கிருஷ்ணரும்

காந்தி பல கோடி இந்திய மக்களை இணைக்கும் ஒரு படிமமாகத்தான் ராமரை பார்த்தார். காந்தி முன் ராமர், கிருஷ்ணர் என இரு படிமங்கள் இருந்தும் என் ராமரை மட்டும் தேர்ந்து எடுத்தார் என்பது ஒரு சுவாரசியமான கேள்வி. கிருஷ்ணர் கண்டிப்பாக இந்திய நாகரீகத்தின் பன்மை தன்மையை ராமரை விட அதிகம் பிரதிபலிப்பவர் ஆகவே இருக்கிறார்.

முதலில் காந்தி ஒரு ஒழுக்கவியல் சிந்தனைவாதி. கிருஷ்ணர் கொண்டாட்டதின் அடையாளம் ஆனால் ராமர் ஒழுக்கத்தின் அடையாளம். அதனால் அவர் ராமரையே தேர்ந்தெடுக்கிறார். அதோடு மட்டும் அல்லாமல், ஜெயமோகன் சொல்வதைப் போல், காந்தியில் பல மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கம் இருக்கிறது. அவரது ஒழுக்கக் கொள்கை விக்டோரிய ஒழுக்கவியல் சார்ந்து இருக்கிறது. கொஞ்சம் சமணத்தின் தாக்கமும் இருக்கிறது. (கிறித்துவமும் சமணமும் பல இடங்களில் ஒன்றாகத்தான் இருக்கிறது!!!).

இன்னும் கிருஷ்ணரைப்  பற்றி கூறிக்கொண்டே போகலாம், ஆனால் எவ்வளவு கூறினாலும் நினைத்ததை  சொல்ல முடியவில்லயே என்ற குற்ற உணர்ச்சிதான் அதிகம் ஆகிறது. சௌரவ் கங்குலி இடது கை பந்து வீச்சாளர்கள் பந்து வீச வந்தால் இறங்கி அடிப்பது போல்,  பாரதி முதல் ஜெயமோகன் வரையிலான உணர்வு சார்ந்த எழுத்தாளர்கள், கிருஷ்ணர் என்று வந்தால் இறங்கி ஆடுகிறார்கள். அவர்கள் எழுத்துக்கே ஒரு பெரிய உற்சாகம் வந்து விடுகிறது.

வெண்முரசின் கிருஷ்ணன் அனைத்து வகையினரையும் ஈர்க்கிறான். ஒரு பக்திமானோ, வேதாந்தியோ, நாத்திகனோ, பகுத்தறிவாளனோ, கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவனோ, யாராக இருந்தாலும் அவனுக்கு  ஏற்ற கிருஷ்ணனை வெண்முரசில் எடுத்து கொள்ளலாம்.

மரபு “கிருஷ்ணன்” என்ற மாபெரும் பிம்பத்தின் மீது பூசப்பட்ட அனைத்து வண்ணங்களையும் குழைத்து ஜெயமோகன் நம் கற்பனைவானில் ஒரு பெரும் வானவில்லை வரைந்து செல்கிறார். நீங்கள் எப்படி பார்த்தாலும் அவன் உங்கள் பார்வைக்கு ஏற்ற மாதிரியே தெரிகிறான்.