வெண்முரசு காட்டும் வாழ்வியல் எதார்த்தங்கள் – கவிதா

நிலையின்மையின் நிலைத்தன்மை

பிரயாகையின் தொடக்கமே துருவநட்சத்திரம். அதன் தொன்மையை விளக்கும் துருவனுடைய கதை, அதுமட்டுமில்லாமல் முழுக்கு முழுக்க ஒரு யதார்த்தமான உளவியல் நுட்பம் கொண்ட ஆரம்பம்.  பௌதிகமான ஒரு விஷயத்தை எப்படி நாம் புராணக்கதைகளாக உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பது வியப்பான விஷயம். துருவன் ஒரு மானுடனாகப் பிறந்து விண்ணுக்கும் மண்ணுக்குமான தொடர்பை ஏற்படுத்தியவன்.

உத்தானபாதனுக்கு இரண்டு மனைவிகள் – சுநீதி, சுருசி. சுநீதியை வெறுத்தான்; சுருசியை விரும்பினான். ஏன் வெறுக்கிறோம்,ஏன் விரும்புகிறோம் என்றறியாமல் இரட்டை நிலைக்கு ஆட்பட்டு தவித்து வந்தான். ஒரு நாள் குலக்குடிகள் முன் துருவன் தன் தந்தையால் அவமானப்படுத்தப்படுகிறான். தன் தந்தையின் கீழ்மை, ஆற்றலின்மை, நிலையற்ற தன்மை கண்டு வெறுத்து நிலையான ஒன்றை அடைவதற்காக காடேகி கடுமையான தவத்தால் துருவநட்சத்திரமாக விண்ணை அடைகிறான். அதற்குப்பின் வரும் வானியல் சாஸ்திரங்கள் நிலையான துருவ நட்சத்திரத்தை வைத்து கணிக்கப்படுகின்றன.

வெண்முரசு முழுவதுமே எல்லா கதாபாத்திரங்களும் நிலையானவற்றுக்கும் நிலையில்லாத கணத்திற்கும் இடையில் அகப்பட்டு தவிப்பவை. இவை எல்லாமே ஏதோ ஒரு தருணத்தில் துருவனைப்பார்த்து அமைதி அடைகின்றன. துருவனின் குறியீடாக திரௌபதி இருக்கிறாள் என்றால் மற்ற அனைத்து கதாபத்திரங்களுமே திரௌபதி முலமாக இயங்குகின்றன.

துருவன் கதையில் ஒரு யதார்த்த உளவியல் நுட்பம் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு. அதாவது மகன் தந்தையை வெறுக்கும் கணம். தந்தையின் பிம்பம் உடைந்து மைந்தன் முதிர்ச்சிக்கு உள்ளாகும் தருணம். இதே சிக்கல் விதுரருக்கும் அவர் மகன் சுசரிதனுக்கும் இடையே ஏற்படும் மனக்கசப்பு. சுசரிதன் துவாரகைக்கு தூதுவனாக செல்ல தந்தையின் வாழ்த்துக்களைப் பெறும்பொருட்டு அவரை சந்திக்கிறான். அப்போது நடக்கும் சொல்லாடலில் விதுரர் சினமுற்று அவனை அடிக்க வர அவன் சினத்துடன் வெளியேறுகிறான் .

தந்தை தன் மிகச்சிறிய பகுதியையே மைந்தர்களிடம் காட்டமுடியும். அந்தச் சிறிய பகுதியைக்கொண்டு அவர் உருவாக்கும் தன்னுரு மிகப்பொய்யானதே. மைந்தர்கள் அந்தப்பொய்யுருவை இளமையில் நம்புகிறார்கள். பின்னர் அதை உடைத்துப்பார்க்க ஒவ்வொரு தருணத்திலும் முயல்கிறார்கள். ஏனென்றால் அந்தப்படிமை மைந்தனுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. பிழைகளோ கீழ்மைகளோ அற்றது. தன் பிழைகளையும் கீழ்மைகளையும் அறியத் தொடங்கும் வயதில் தந்தையை உடைத்து அவரிலும் அவற்றைக் காணவே மைந்தர் விழைகிறார்கள்”.

இந்த பிம்பம் உடையும்போது தந்தையரை வெறுக்கிறார்கள். நாஞ்சில்நாடன் எழுதிய “கிழிசல்” சிறுகதையில் வரும் மாணிக்கம் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது தன் அப்பா கொடுக்கவேண்டியதற்கு குறைவான தொகையை கொடுத்துவிட்டு வருவதை கவனிப்பான். அப்போது அந்த சிறுவன் தன் தந்தையின் அந்தக் கீழ்மையை மனதுக்குள் வெறுத்தபடி இனி இவருடன் வரவே கூடாது என்று  நினைத்துகொள்வான். மைந்தர்கள் தந்தையின் உயர்வான குணங்கள் மட்டுமே தெரியக்கூடிய வகையில் வளர்க்கப்படுகிறார்கள். இப்படி மனதில் உருவாக்கப்பட்ட பிம்பங்கள் உடையும்போது தடுமாறி, பின் வளர்ந்து முதிர்ச்சியடையும்போது ஒரு இயல்பான விஷயமாக கடந்து போகிறார்கள்.

உணர்ச்சிக்கொந்தளிப்புகள் கொண்ட வாழ்க்கை அமைந்தவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். அவர்களுக்கு வேறேதும் தேவைப்படுவதில்லை வாழ்க்கையை நிறைக்க. 

ஒவ்வொரு கணமும் உணர்ச்சிகளால் சூழப்பட்ட வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளுக்கும் வினை அதன் எதிர்வினையாலே நிறைக்கப்படுகிறது. துன்பம். நிறைந்த மனதிற்கு அந்த நேர இன்பம் நிறைவான ஆறுதல் .

எத்தனை சிறந்த மணவுறவிலும் மனைவியின் உள்ளத்தில் ஆழ்ந்த கசப்பு ஒன்று குடியிருக்கும் என்று நூல்கள் சொல்கின்றன. அது சிறந்த மணவுறவாக இருக்கும் என்றால் அந்தக்கசப்பை அவள் மேலும் மேலும் உள்ளே அழுத்திக்கொள்வாள். அதன்மேல் நல்லெண்ணங்களையும் இனியநினைவுகளையும் அடுக்கி மறைப்பாள். ஆனால் அழுத்த அழுத்த அது வீச்சு மிக்கதாக ஆகிறது.”

திருமணம் என்பது ஒரு செடியை வேரோடு பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவதற்கு சமம். பிறந்த வீடு, ஊர், உறவுகள், குலதெய்வம் எல்லாவற்றையும் விட்டு முற்றிலும் புதிய இடத்திற்கு புதிய உறவுகளை, சூழல்களை ஏற்றுகொள்ள வேண்டும். விட்டு வந்த சூழல்களை நிறைக்கின்ற அளவுக்கு அனுபவம் கிடைத்தால் உண்டு. இல்லையேல் அது ஒரு பெரிய கசப்பான அனுபவம். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த ஆழ்மனக் கசப்புகள் கடுமையாக வெளிப்படக்கூடும்.

“இழக்கப்பட்டவை பேருருவம் எடுக்கும் கலை அறிந்தவை. 

இழக்கப்பட்ட உறவுகள் ஏதோ ஒரு தருணத்தில் மிகப்பெரிய எடையாகி அதுவே ஒரு அழகான சுமையாக மாறிவிடும். வாழ்வின் பெரிய அழகியல் இது. பின் ஏதாவது ஒரு சலிப்பான சமயத்தில் நம்முடைய ஆழ்மனது அந்த உறவை மிகப்பெரிய எடையாக நாம் உணரும்போது அது ஒரு நிறைவடையாத வாழ்க்கையின் நிறைவாக இருக்கும். அதன் தொடர்ச்சியாக மனது அந்த கடந்து போன நினைவுகளை மீட்டெடுக்கும்.

இலக்கியங்கள் தத்துவங்களை முன் வைப்பதில்லை. அதற்கான சிந்தனைகளை மட்டுமே காட்டுகின்றன. அதன் மூலம் வாசகர்கள் தங்களுடைய அனுபவங்களை ஒப்பிட்டுப்பார்த்து அந்த சிந்தனைகளை அடையவேண்டும் என்பதற்கேற்ப வெண்முரசு முழுவதுமே ஒரு எதார்த்தமான வாழ்க்கை அனுபவத்தை முன்வைக்கிறது. சரி தவறுகளுக்கு அப்பால் உள்ள அறத்தை முன்வைக்கிறது. வர்ணனைகள், மரபுகள், குலக்கதைகள், அரசியல், நட்பு, பாசம், சகோதரத்துவம், இல்லறம், காதல், போர்… எல்லாவற்றிலும் வெளிப்படும் இந்த உளவியல் நுட்பம் நடைமுறை வாழ்க்கையின் எதார்த்தங்களை முன்வைக்கிறது.

Advertisements