வெண்முரசில் குலங்களின் நாயகர்கள் – காளிப்ரஸாத்

நீரெனில் கடல், ஒளியெனில் சூரியன், இறையெனில் பிரம்மம், சொல்லெனில் வியாசனின் சொல்லேயாகும். அது அழியாது வாழ்க!

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

“வெண்முரசில் குலங்களின்நாயகன்”

என்னும் தலைப்பில் இன்று உரையாடுகிறோம். குரு வம்சத்தினரை முக்கியமாக கொண்ட இந்த நாவலில் நாகர் மற்றும் ஆசுர குலத்தவரின் தலைமுறைகளும் அவர்களின் நிலப்பரப்பும் வாழ்வும் சித்தரிக்கப்படுகின்றன. இந்த உரையில் ஒரு சிலரையே தேர்ந்தெடுத்துள்ளேன். இடையிடையேயான நம் உரையாடலில் இன்னும் விரிவாக இந்த குலமுறையை எடுத்துச்செல்லலாம். இதுவரையிலான வெண்முரசு அத்தியாங்களை மீண்டும் ஒருமுறை நினைவுறுத்துக்கொள்ளலாம் எனவும் இத்தலைப்பில் உரையாடுகிறேன்.

முதலில் எனக்கு யாரை நாயகர்களாக தேர்ந்தெடுப்பதென்ற குழப்பம் இருந்தது. அல்லது எதைவைத்து என்று. செயற்கரிய சாதனைகளை செய்தவர்களையா அல்லது மக்கள் நாயகர்களாக இருந்தவர்களையா? அப்படியென்றால் அனைவரையும் சொல்ல வேண்டுமே எனவும் அச்சம் ஏற்பட்டது.

ஜெ. வின் நிழல்வெளிக்கதைகளில் படித்த ஒரு வரியை, அப்போது தோன்றியதால் பிடித்துக்கொண்டேன்.

“எல்லாம் அதனதன் ஒழுங்கில், பழகிய தடத்தில நகர்கையில் காலமே தேங்கிவிடுகிறது. அசைவிழந்து மட்க ஆரம்பிக்கிறது. ஒரு துரோகம் சட்டென்று அனைத்தையும் கலக்கி விடுகிறது. புத்தம்புதிய வழிகள் திறக்கின்றன.முன்பு இல்லதவை நிகழ்கின்றன.. அது அந்த அசைவின்மை கண்டு பொறுமை இழந்த ஒருவரால், புதியதைத் தேடித் தவிக்கும் ஓர் ஆத்மாவால் நிகழ்த்தப்படுவது”

இந்த துரோகம் என்ற வார்த்தைய நான் இச்சை /அகங்காரம் என எடுத்துக்கொண்டேன்.

அந்த இச்சையே துருவனை அனைத்து இவ்வுலக ஆசைகளையும் மீறி நிலைகொள்ளசெய்கிறது. பாகீரதன் மூலம் கங்கையை பூமிக்கு வரவழைக்கிறது. ஆகவே அப்படிப்பட்ட இச்சையால் அலைகழிக்கப்பட்ட மனிதர்களால் இந்த கதையின்  போக்கு மாறுகிறது என்பதின் மூலமாக  பெரும்பான்மையான கதை மாந்தர்களை அறிந்து கொள்ளலாம்

எனவே அவர்களையே நான் நாயகர்களாக கொண்டேன்.

முதற்கனல் அந்த இச்சையிலேயே துவங்குகிறது.

யயாதி

தர்மதேவனே சாட்சி சொல்லி சந்திரவம்ச அரசனாகும் யயாதி, அத்ரி சந்திரன் புதன் புரூரவஸ் ஆயுஷ் நகுஷன் என்கிற குலவரிசையில் வருகிறான். தன் தவத்தால் தன் ஐந்து சகோதரர்கள் யதி, யயதி, யாயாதி, சம்யாதி, துருவன் ஆகியோரை வெல்கிறான். தக்கையாக, கல்லாக, சருகாக, மேகமாக மாறி தர்மதேவனை அடையும் யயாதி, அறமே இன்பம் என்று இந்திரபோகத்தையும் மறுதலிகிறான்.

ஆனால்., தன் வாலை தானே சுவைத்துண்ணும் பெருநாகமேயான காமத்தின் முன் ஒன்றும் செய்வதற்கில்லை. முதுமையென்னும் அரக்கியால் நோயுற்றவர் கனவில் வாழும் தேவனால் இறவாதிருக்கிறார்.

ரதியின் பெருந்துயருக்கு பிறந்த அஸ்ருபிந்துமதியே தன் இச்சையை தீர்க்கமுடியுமென உணர்ந்து அதற்காக தன் முதுமையை ஐம்பதாண்டுகாலம் ஏற்றுக்கொள்ள தன் மகன்களிடம் கேட்கும் தருணத்தில் இந்த மகாபாரதமென்னும் காவியம் துவங்குவதாக நான் கருதுகிறேன். ஒரு இச்சைக்கும் இன்னொரு இச்சைக்குமான போராட்டமாக இது இருக்கிறது.

(திரைப்படங்களில்,  பறக்கும் பறவைகளும், அலையடிக்கும் கடலும், அசையும் மரங்களும் அப்படியே ஸ்தம்பிக்கும் காட்சியை இங்கே நினைவுகூறவும்)

தன் மகன் புருவிடமிருந்து இளமையை பெற்றுக்கொண்டும் தீராத இச்சைகொண்ட யயாதி விண்ணுலகம் சென்றும் அகங்காரம் அழியாமல், பிரம்மனால் மீண்டும் மண்ணிற்கு தள்ளப்பட்டு ஒரு யக்ஞகுண்டத்தில் விழுகிறார். தன் மகளின் பேரழகை விழிகளால் ஆன்மா அறியும் கணம் அவர் காமம் அழிகிறது. விண்ணுலகம் செல்கிறார். அவள் மகள் மனைவியின் உருவத்திலேயே இருக்கிறாள் என்பதும் அவர் மகன் முதுமையிலேயே நிறைவை கண்டதும் நமக்கு உணர்த்தப்படுகின்றன.

புருவின் சகோதரர்கள் துர்வசு, யது மற்றும் த்ருஹ்யூ முறையே தன் பிள்ளைகள், அதிகாரம் மற்றும் செல்வத்தின் மீதான இச்சையாலே முதுமையை ஏற்க மறுக்கிறார்கள். அதனாலேயே நாட்டை விட்டு நீங்கவும் பணிக்கப்படுகிறார்கள்.அவ்வாறு செல்லும் துர்வசு காந்தாரநாட்டையும் யது யாதவகுலத்தையும் திருஹ்யூ  திவிப்ரநாட்டையும் அமைக்கின்றனர். பிறகு பல தலைமுறைகள் கழிந்தும் இவர்களின் வம்சாவளியினர்  குருவம்சத்தை ஆட்டித்தான் படைக்கிறார்கள். ( இதில் த்ருஹ்யூவின் தலைமுறைகள் இன்னும் வெண்முரசில் இடம்பெறவில்லை. பால்ஹிக குலம் த்ருஹ்யூவின் குருதிதான் என சில வலைதளங்களல் இட்டிருக்கிறார்கள். அதுபற்றி வெண்முரசில் தகவல் இல்லையென்பதால் கவனத்தில் கொள்ளவில்லை)

நான் யயாதி செய்த தவறு அல்லது இட்ட தீச்சொல்தான் பின்னர் பலகாலம் கழித்து அவர் மக்கள் அழிய காரணமாக இருந்தது என நினைத்துகொண்டிருந்தேன். தந்தை சொல்லை ஏற்காத மக்கள் மீது தவறா அல்லது தன் முதுமையை தன் தனிப்பட்ட இச்சைக்காக மகன்களை ஏற்கச்சொல்லும் யயாதி மீதா?

புருவால் மீண்டும் அறம் தழைக்கும் அந்த வம்சத்தில் பிறக்கும் சம்வரணன் சூரியனின் மகள் தபதியை அடையும் அத்தியாயம் பிரயாகையில் வருகிறது. அதுவரையிலான என் குழப்பத்திற்கான விடை அதில் கிடைத்தது.  யயாதி காலம் போல இல்லை இது. இங்கே நிகழ்வது அறத்துக்கும் அறத்துக்குமான போராட்டம்.

சம்வரணன் தன் இச்சைக்காக யாரும் அழியக்கூடாது என காடேற சித்தமாகிறான். ஆனால் மக்கள் அவனை விடுவதில்லை. அவனுக்காக பன்னிரண்டு ஆண்டுகள் மழை இல்லாமல் வாழ சித்தாமாகிறார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து குரு பிறக்கிறான். அதன்பின் இந்த வம்சமே குருவம்சம் என்றுதான் அழைக்கப்படுகிறது. மாமன்னன் ஹஸ்தியின் பெயரால் அல்லது இந்தீரனுக்கு நிகரான ஆட்சியை அளித்த யயாதிதியின் பெயர்களில் ஏன் இல்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். தன் இச்சையை மகன்மீது திணிப்பதும் மகன்கள் தன் நலனுக்காக தந்தையை மறுப்பதையும் விட மக்களுக்காக காடேறும் மன்னனும் மன்னனுக்காக கடும் வெப்பத்தை ஏற்க சித்தமாகும் மக்களும் நம்மை ஒரு உன்னத நிலைக்கு கொண்டு செல்கிறார்கள் அல்லவா?

வெகுகாலம் கழித்து வாளில் தெரியும் தன்பிம்பம் புருவுடையது என நினைக்கும் தேவவிரதன் அது யயாதியுடையது என அறிந்து  அதிர்ச்சி அடைகிறார். அரசன் மக்களின் நலனைகருதாமல் தன் நலனை கருதுவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தனது அரசை தன் விருப்பத்திற்காக கடைசி மகனிடம் அளித்த யயாதி போல் தன் தந்தையின் விருப்பத்திற்காக தன் அரசை தன் தம்பிகளுக்கு அளித்து ஒதுங்கிக்கொள்ளும் பீஷ்மரை யயாதிக்கு அடுத்து தலைமுறைகளின் நாயகனாக கருதுகிறேன்.

பீஷ்மர்

ஜெ. வியாசர் பற்றிய உரையில் பீஷ்மரின் அறிமுகம் குறித்து இப்படி சொல்கிறார்.

“கங்கை நதியை தன் அம்புகளால் அணை கட்டி தடுக்கும் இளைஞனாக அறிமுகம் ஆகிறார் பீஷ்மர்.. கங்கைபோல் பெருக்கெடுக்கும் உணர்ச்சிகளை தடுத்து வாழும் மனிதன் அவன் என்பதை வியாசர் உருவகப்படுத்துகிறார்”

ஐந்து தலைமுறைகளை காணும் பீஷ்மர், தன் பெரியப்பா பால்ஹிஹரோடு துவந்த யுத்த்த்தில் மோதுகிறார்.  தன் தந்தையை தோளில் கொண்டவன் அவன், ஆகவே அவன் எனது ஆடிப்பிம்பம் என சொல்லி விலகுகிறார் பால்ஹிகர். தந்தைக்காக ஆசையை துறக்கிறார். தம்பிக்காக தீச்சொல் பெறுகிறார். மகனுக்காக சகுனியிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் அனைத்திலிருந்தும் விடுபட்டு விலகியே இருக்கிறார்.

ஒரு திடகாத்திரமான ஹஸ்திக்கு நிகரான ஒரு அரசனாகி தன் கடைமையை செய்ய வேண்டிய தேவவிரதன் தன் தந்தையின் இச்சைக்காக தன்னை விலக்கிக்கொல்கிறார். தன்னை புருவிற்கு நிகரானவனாக நினைத்துக்கொள்கிறார். ஆனால் இவரை யயாதியுடன் ஒப்பிட்டே எழுதுகிறார் ஜெ. அரசனோ இளவரசனோ மக்களின் நலம் தவிர வேறு எதையும் கருத்தில் கொள்ளலாகாது. ஆகவே யயாதி தன் பொருட்டு செய்த அதே பிழையை தந்தைக்காக தானும் செய்கிறார் பீஷ்மர்.

சாந்தனு தன் இச்சைக்காக பணிந்த மகனுக்கு விரும்பும்போது மரணிக்கும் வரம் அளிக்கிறார். அது ஒரு வரம் அல்ல. தன் இச்சையால் பிறந்த திறமைமையற்ற இளவரசர்கள் பின்னாலிருந்து பீஷ்மர் அஸ்தினாபுரையை காக்க அவர் செய்த தந்திரமோ என நினைக்கத்தோன்றுகிறது. வேறேதும் பீஷ்மருக்கு அந்த வரத்தால் அனுகூலமாக இருப்பதாக தோன்றவில்லை. ஆனால் அம்பை அந்த வரத்தாலேயே கால் கட்டப்பட்ட வேழமாக பீஷ்மர் இருப்பதை அறிகிறாள்.  மரணத்தாலன்றி விடுதலை கிடைக்காதென்பதை உணர்ந்து அதற்கான சபதமேற்கிறாள். அம்பைக்கும் பீஷ்மருக்குமான அந்த உரையாடலும் காட்சிகளும் வேறெந்த காதல் காவியங்களும் இணைநிற்க முடியாதவை.

யுதிஷ்டிரன்

””அவன் ஏதோ செடியோ மரமோ இல்லாத ஊரின் மனிதன் போலத் தெரிந்தான். பூக்களையும் கொடிகளையும் இலைகளையும் உலோகத்தில் செய்து உடலெங்கும் கட்டி வைத்திருந்தான். அவை சருகு நிறத்தில் இருந்தன. சேற்றில் விழுந்து சருகில் புரண்டு எழுந்தவன் போல ஒரு தோற்றம்… மடையன்.. நிறைய நூல்களைக் கற்றவனாம். ஆகவே அவனுக்கு நிறைய ஐயங்கள். அவன் அமர்ந்திருப்பதைப்பார்த்தேன். அமர்வதா எழுவதா என்ற ஐயத்துடன் இருந்தான்..””

தருமனை பார்த்த ஒரு பரத்தைவீதி பிச்சைக்காரியின் சொற்கள் அவை. துரியோதனனுக்கு அவனை முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை. துரியனுக்குத்தான் என்றில்லை இடும்ப வன குரங்குகளுக்கு கூட பிடிக்கவில்லை.

ஆனாலும் கர்ணன் பொறாமை கொள்ளும் அறம்.. திருதராஷ்டிரன் பெருமிதம் கொள்ளும் அறம் தருமனுடையது.

தன் தந்தை பாண்டுவின் தோளில் அமர்ந்து துருவனை பார்த்தபடி அறம் பற்றி அறியத்துவங்குகிறான் தருமன். பாண்டு இறந்த அந்த பொழுதில் அவன் காட்டும் அதிகார தோரணையில் அவன் மீது ஒரு நாயக பிரமிப்பு உருவாகிறது. ஆனால் அது நிலைக்கவில்லை.அவன் தன் அறம் சார்ந்த குழப்பத்திலிருந்து இன்னும் விலகவில்லை. அந்த அறத்தின் மீதான காதலில் அவன் துரியனுக்கு அரச நடைமுறை படி நீ இளவரசனில்லை என்று சொல்வது சரியாக பட்ட்து. ஆனால் அதற்கு சற்றுமுன் தாய்ப்பாசத்தில் முறை மீறி செளவீர நாட்டு மணிமுடியை குந்தி தலையில் வைக்கிறான். காத்திருக்கும் சகுனியும் கணிகரும் அதையே பற்றிக்கொள்கிறார்கள். அங்கிருந்து வாரணாவதம் துவங்கி கதையின் போக்கு மாறுகிறது. அந்த இடத்தில் தருமன் செய்தது தவறானது அல்லது அவனின் சமயோசிதம் தோற்றது.

தருமனின் இதுவரையலான உருவாக்கம் அவனை விசித்திரவீரியன், பாண்டு வரிசையில் நிறுத்த தோன்றுகிறது. ஆனாலும் தருமனின் விஸ்வரூபத்தை வெண்முரசின் இனிவரும் அத்தியாங்களில்  காண நானும் காத்திருக்கிறேன்.

இவ்வாறாக யயாதி, பீஷ்மர் மற்றும் யிதிஷ்டிரன் ஆகிய மூன்று அறச்செல்வர்களும் ஒரு கணத்தில் அந்த அறத்தின் மீது தனது இச்சையை அல்லது பாசத்தை ஏற்றி வெண்முரசின் போக்கில் முக்கிய மாறுதல்களை கொண்டு வருகிறார்கள்.

சகுனி

யயாதியின் தீச்சொல்லால் நாடு நீங்கிய துர்வசு காந்தார தேசத்தை அமைக்கிறான்.

பாவகனைத் தோளிலேற்றியபடி பலன் , அதிபலன் மேல் ஏறிய பவமானன் , சூசியை தோளில் சுமந்த தண்டன் ஆகிய மூன்று பாலைவன தெய்வங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட குலத்தில், துர்வசு வம்சத்தவரன வர்க்கன், கோபானு, திரைசானி, கரந்தமன், மருத்தன், துஷ்யந்தன், வரூதன், காண்டீரன், காந்தாரன் வழியாக சுலபரின் மகனாகவும் அசலர், விருஷபரர்க்கும் காந்தாரி மற்றும் ஒன்பது பெண்களின் சகோதரனாகவும் சகுனி வருகிறான். தனது இச்சையை ஒரு கல்லாலான கோட்டையாக கட்டி வைத்திருக்கிறான்.

“எதிரிகள் இல்லையென்றாலும் உருவாக்கிக்கொள்ளும் ஆவல் கொண்டவர் சகுனி.தன் படைத்தலைவன்  மந்தணமாக பொருள் சேர்ப்பதை அவன் அமைச்சர் மூலாமாக அறிந்து படைத்தலைவனை நேர்ப்போரிலும் காட்டிகொடுத்த அமைச்சனை சூது வழியாகவும் கொல்லும் சகுனியின் குணம் மழைப்பாடலில் நன்றாக பதிவுசெய்யப்படுகிறது.

சகுனிக்கு இருந்ததும் காந்தாரத்தை பாரதத்தின் முதல் நாடாக்க வேண்டும் என்னும் இச்சையே!!! தன் மூதாதை துர்வசுவிற்கும் சேர்த்து குரு குலத்தை பழி வாங்கியே விடுகிறார்.

கார்த்தவீரியன்

யயாதியின் தீச்சொல்லால் நாடு நீங்கிய யதுவிலிருந்து யாதவகுலம் உருவாகிவருகிறது. இடுவரையிலான மற்ற குடிகளை மொத்தமாக கணக்கிட்டாலும் யாதவகுடிகளின் உட்குல கணக்கிற்கு ஈடாகாது. அந்தளவிற்கு குழுக்களும் குலமூதாதைகளும் கொண்ட யாதவ குலம். அவற்றில் ஹேகேயகுலமும் விருஷ்ணிகுலமும் முதன்மையான குலங்கலாக இருகின்றன

பிரஜாபதிகளில் ஒருவரான பிருகுகுலத்து ஜமதக்னியின் நாராயணதனுசின் முன் ஈடுகொடுக்கமுடியாத ஹேகேயகுலத்து கிருதவீரியன் தற்கொலை செய்ய நீர்வீழ்ச்சியில் குதிக்கும் போது நாகர்குல தலைவன் திரிகூடன் தன் மனைவி கீர்த்தியுடன் கூடியிருக்கும்போது அவனிடம் சரணடைகிறான். நாராயண தனுசிற்கு எதிரான விஷ சக்தியை திரிகூடன் அளிக்க அதை தன் மனைவிக்களித்து அவள் மூலமே கார்த்தவீரியன் பிறக்கிறான், தன் தாயின் உடலை பிளந்துகொண்டு. அவன் பிறப்பின் நோக்கமே பார்க்கவகுலத்தை அழிக்கவேண்டுமென்ற கோபம்தான்.

தன் குலத்தை அழித்த ஜமதக்னி பகையை விட்டு முனிவராய் இருக்கும்போது அவரை முறைமீறி கொல்கிறான் கார்த்தவீரியன்.

கொல்லும் முன் அவனை அவன் தெய்வங்கள் அனைவரும் தடுக்கிறார்கள். ஆனால் அவன் கேட்பதாயில்லை. அங்கே அவனுக்கு அரசனின் அறத்தை விட வஞ்சம்தான் முக்கியமாக படுகிறது.

அதனாலேயே ஜமதக்னியின் மகன் பரசுராமனால் கொல்லப்படுகிறான். அந்த சரிவிலிருந்து யாதவ குலம் அடுத்த யுகத்தில்தான் மீள்கிறது.

இருந்தும் யாதவகுலம் கண்ட முதல் மாவீரன் கார்த்தவீரியனே!!!

கம்சன்

அகங்காரம் என்ற இச்சையின் வடிவாக கம்சனை காண்கிறேன்.

விருஷ்ணிகுலத்து அரசர் விடூரதர் மதுராபுரியை ஆண்டார். அவருக்குப்பின் அவர் மைந்தர் சூரசேனர் ஆட்சிக்குவந்தார். விடூரதனின் தம்பியான குங்குரர் அன்று அனைத்து படைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் அனைத்து குலநெறிகளையும் மீறி விடூரதனின் குடியை மதுராபுரியில் இருந்து துரத்திவிட்டு அரசை கைப்பற்றிக்கொண்டார். சூரசேனனின் மைந்தர் ஸினி தன் மகன் போஜனுடன் வடக்கே சென்று அமைத்ததே மார்த்திகாவதி என்ற நகர். அவர் போஜர்குலத்தில் மணம்புரிந்து போஜர்களின் ஆட்சியை அங்கே அமைத்தார்.

குங்குரரின் வழியில் வந்த உக்ரசேனர் . உக்ரசேனரின் மைந்தன் கம்சன். கம்சனின் கனவில் கார்த்தவீரியன் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருந்தான். தன்னை கார்த்தவீரியரின் மறுபிறப்பு என எண்ணினான். இமயமலையடிவாரத்தில் கார்த்தவீரியர் படைகள் எதுவரை சென்றனவோ அதை விட மேலும் ஒரு யோசனை தூரம் தன் படைகள் சென்றாகவேண்டும் என எண்ணியவன். அதற்காக ஆசுரநாட்டு பழங்குடி கொண்ட மகத இளவரசிகளை மணம் செய்தி கொள்கிறான்.

கம்சன் தேவகியை சிறையெடுத்து வசுதேவருக்கு மணமுடித்தான். அதன்பின்னர்தான் ஒன்று தெரிந்தது, யாதவ முடி என்பது பெண்வழிச் செல்வது என. அவருக்குப்பின் தேவகியின் மைந்தனுக்கே அரசு செல்லும் என்று அறிந்ததுமே நிலைகுலைந்து,அந்த மைந்தன் அவரைக் கொல்வான் என்று நிமித்திகர் உரைத்ததும் கம்சன் ஆடிய கொலைநடம் பாரதம் அதுவரையில் அறியாதது.

வசுதேவருக்கு ரோஹிணி மூலம் பிறந்த பலராமனும், தேவகி  மூலம் பிறந்த கண்ணனும் கம்சனையும் அவன் தம்பிகளையும் மற்போரில் கொல்ல,  தன் கைகளால் கம்சனை கொன்ற இளைய யாதவனுக்கு மதுராவின் மணிமுடி உரித்தாகிறது.

இருந்தபோதிலும் கார்த்தவீரியனும் கம்சனும் நிகரற்ற வீர்ர்களே!!! அவர்களை சக மனிதர்களால் வெல்ல முடியவில்லை. அந்த பரம்பொருளே பரசுராமனாகவும் கண்ணனாகவும் வந்து அவர்களை வெற்றி கொல்கின்றன.

முடிவுரை:-

கிழக்கே ஒளிமிக்க சிறகுகளுடன் எழுந்த கஸ்யபன் கத்ருதேவியிடம் ‘உனக்கு நான் மைந்தர்களை அளிக்கிறேன். வெல்லமுடியாத அறிவுத்திறன், நிகரற்ற வீரம், பேரழகு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு குணத்தை மட்டும் நீ உன் மைந்தர்களுக்காக தேர்வுசெய்யலாம்’ என்றார். கத்ருதேவி ‘இவையனைத்தும் அழியக்கூடியவை. அழியாதது ஒன்றே. முடிவில்லாமல் பெருகிக்கொண்டிருக்கும் வல்லமை. அழிவில்லாமல் இருந்துகொண்டிருக்கும் இச்சை. அந்த குணமுள்ள குழந்தைகளை எனக்கு அளியுங்கள்’ என்று சொன்னாள். ‘ஆம் அவ்வாறே ஆகுக’ என்று கஸ்யபனும் வாக்களித்தான். அவ்வாறாக கத்ருதேவி நீலநிறமான ஒரு முட்டையை ஈன்றாள். அதை அவள் முத்தமிட்டு உடைத்தபோது கன்னங்கரிய ஆயிரம் நாகப்பாம்புகள் வெளிவந்து நெளிந்தன. அவர்களிலிருந்து நாகவம்சம் உருவாகியது.

இப்படி உருவான நாகர்கள் பீமனுக்கு வெல்லற்கரிய சக்தியை அளிக்கிறார்கள். பார்த்தனோடு இணைகிறார்கள். பரீச்சித்தை கொல்கிறார்கள்.

இந்த நாக வம்சத்தின் நாயகனாக ஆஸ்திகனை நான் காண்கிறேன்.

சத்வகுணத்தை மட்டும் நிலை நிறுத்த விழையும் ஜனமேஜயனிடம், “இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்” என வாதிட்டு தன் குலமூதாதை தட்சனையும் தட்சகியையும் காக்கிறான்.

இச்சை இல்லையேல் இந்த காவியமில்லை. இம்மண்ணில் வாழ்வும் இன்பமும் இல்லை. முடிவில்லாது பெருகி இவ்வுலகமெங்கும் காமமும் அகங்காரமும் பொலியச்செய்யும் நாகர்களை போற்றுவோம். முதுமையையே காணாத ஆஸ்திகனையும்…

Advertisements

3 Comments (+add yours?)

 1. R.Manikkavel
  Oct 12, 2015 @ 12:24:13

  அன்புள்ள காளிபிரசாத் அருமையாக உள்ளது. சிறந்த தொகுப்பு.

  Liked by 1 person

  Reply

 2. Trackback: சென்னை வெண்முரசு விவாதங்கள்
 3. Jegan
  Oct 12, 2015 @ 14:24:12

  i have missed the event….. will try hard to attend Nov meeting. Awaiting for the full story of Karna The Hero……..

  Like

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: