மீண்டும் ஒரு காவிய குகன்

அண்மையில் வெண்முரசு பற்றிய விவாதமொன்றில் நண்பர் காளிப்ரஸாத் வெண்முரசில் குலநாயகர்கள் பற்றி பேசினார்.  அடிப்படையில் இச்சை என்பது எப்படி நாயகர்களை உருவாக்குகிறது என்று விவாதிக்கப்பட்டது.  தனக்கென இச்சை எதுவும் கொண்டிருக்கவில்லை என்றாலும் பீஷ்மர் தன் பிரம்மசரிய விரதத்தின் மீது கொண்ட அதீத பற்றும் பிடிவாதமுமே அவரை நாயகனாக்குகிறதோ என்றும் பேசப்பட்டது.  இச்சை என்பது இல்லாமலானால் பிரபஞ்சமே இல்லாமலாகும் என்பதற்காக (இச்சையின் வடிவான) நாகங்களை அழிவிலிருந்து காத்த ஆஸ்திகன் நாகர்குல நாயகன் என்றார் காளிப்ரஸாத். கண்ணனுக்கு தன்னை அடிமையாக அறிவித்துக் கொண்டு தொழும்பக் குறியுடன் அவனது அணுக்கனாக இருக்கும் சாத்யகி எனும் நாயகனைப் பற்றி பேசினார் ராகவ்.

இவ்விவாதத்தின்போது ஒன்று தோன்றியது. இவ்வாறு எந்த ஒரு இச்சையோ, தன்முனைப்போ, கொள்கைப்பிடிப்போ, குறிக்கோளோ எதுவும் இல்லாத நிருதன் எனும் குகன் எவ்வளவு பெரிய நாயகன்!

மகாபாரதக் கதையில் பெயரளவில் இடம்பெறும் கதைமாந்தர்களை மாபெரும் நாயகர்களாக வளர்த்தெடுத்து மறக்கவொண்ணா கதைமாந்தராக ஆக்குவது வெண்முரசில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விசித்திரவீரியன், பூரிசிரவஸ், சாத்யகி என பட்டியல் வளர்கிறது.  இவையல்லாமல் வெண்முரசிற்கே உரிய துணை கதாபாத்திரங்கள் – சூதர் (தீர்க்கசியாமர்) சேடி, செவிலி (மாலினி, சுபகை), காவலன் போன்றோர் – அவ்வப்போது விசுவரூபம் எடுப்பது இக்காவியத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. குஹ்யஜாதை, சித்ரகர்ணி போன்ற விலங்குகளின் பட்டியல் தனியே நீள்வது.  காவியம் என்பது ’தன்னேரில்லாத் தலைவனை உடைத்து’ என்ற இலக்கணத்தை மேலும் விரித்து சமூகவாழ்வுத்தளத்தில் எல்லா நிலைகளிலும் ஒப்பிலா நாயகர்கள் வாழ்கிறார்கள் என்பதையே இக்காவியம் மீண்டும் மீண்டும் சொல்லிச் செல்கிறது.

அவளது வாழ்வின் மிகமிக முக்கிய கணங்களில் அம்பையின் படகோட்டியாக அவனிருப்பது தற்செயல்.  ஆனால், அதி அற்புதமான உறவொன்று அங்கு முகிழ்க்கிறது.

துடுப்பை மீனுக்குச் சிறகென கொண்டவன்.  அவன் செய்யும் தொழிலில் நிபுணன். அயோத்தி ராமன் தன் தம்பியாக்க் கருதிய குகனின் குலத்தில் வந்தவன். குகனை அணைத்துக்கொண்ட ராமனின் தொடுகையை தொழும்பக்குறியாய், ஆபரணமாய் அவன் குலமே ஏந்தி நிற்கிறது.  ராமனின் வாழ்வில் முக்கிய தருணத்தில் எந்தவொரு எதிர்ப்பயனும் கருதாது அவனுக்கு உதவியவன் குகன்.  அவன் வழித்தோன்றலான நிருதன் அவனைப் போலன்றி இருக்க முடியாது போலும்.

அவள் இறக்கும்போது அவனை தமையன் என்கிறாள் அம்பை, ராமன் குகனிடம் உன்னுடன் ஐவரானோம் என்றது போல.  அவன் அவளை முதலிலேயே தங்கை என்றே எண்ணுகிறான்.  மணம்கொண்டு சென்றுவிடும் சகோதரியின் மணவாழ்வில் சிக்கல்கள் ஏற்படும்போது உடன்பிறந்தவனால் எதுவும் செய்யமுடிவதில்லை.  ஆதங்கத்துடன் வேடிக்கைதான் பார்க்கமுடிகிறது.  அவள் புகுந்தவீட்டிற்குள் நுழைய அவனுக்கு உரிமையே இருப்பதில்லை.  சால்வனிடம் செல்லும்போது நிருதன் சொல்வது கூட இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் அண்ணன் ஒருவனின் கையறுநிலையாகவே மீண்டும் படிக்கும்போது தோன்றுகிறது. அவள் நெஞ்சு நிறையும் இடத்துக்குத்தான் அவளை கொண்டு சேர்க்கிறான் அண்ணன்.  ஆனால் சௌபநாட்டு அரண்மனைக்குள் தன்னைப் போன்றவர்கள் வரமுடியாது என்கிறான் நிருதன்.

சால்வனால் அவமதிக்கப்பட்டு அனல்பட்ட காட்டுக்குதிரைபோல கங்கைக்குத் திரும்பும் அம்பையைக் கண்டதும் கைகளை விரித்துக்கொண்டு அவள் காலடியில் விழுந்து பணிந்து “என்ன ஆயிற்று? தேவி, உங்களை அவமதித்தவர் யார்? எளியவன் வேடன் என்றாலும் இக்கணமே அவன் வாயிலில் என் சங்கறுத்துக்கொண்டு  சபித்து விழுகிறேன் தாயே” என்று கூவுகிறான் நிருதன்.  அம்பையின் தவிப்பை முதலில் உணர்பவன் அவனே.  அந்த நொடியில் அவன் தன் வாழ்வை அவளுக்கு அர்ப்பணிக்கிறான்.

பின்னர் தன் தந்தையாலும் விரட்டப்பட்டு திரும்ப வரும் அவளைக்கண்டு ஒரு தெய்வம் இறங்கிச் சென்று பிறிதொரு தெய்வம் வந்து படகிலேறியதாக உணர்கிறான். ஆம்,  அவள் அவனுக்கு தெய்வம்தான். நெய்விழும் தீ  போல சிவந்து, தணிந்து, சுவாலையென எழுந்து படகுமூலையில் அவள்  அமர்ந்திருப்பதைக்  காணும் நிருதன் படகு ஒரு நீளமான அகல்விளக்காக ஆகிவிட்டது என்று எண்ணிக்கொள்கிறான்.  நூற்றுக்கணக்கான வெண்முரசின் உவமைகளில் முதலில் வந்த அற்புதமான உவமை இதுதான்.

அஸ்தினபுரியை அடைந்ததும் அம்பு போல நதியை விட்டு விலகி விரைந்து அவள் மறையும்போது நிருதனின் உலகம் அணைந்து இருள்கிறது.  துடுப்பே தன் சிறகென்பவனின் உடலே அப்படகு எனில், அம்பை அதில் ஏற்றப்பட்ட சுடர்.  அவள் நீங்கிய பின் அவ்வகல் இருண்டு போவது இயல்பே.

அஸ்தினபுரியில் கரையணைந்து தோணியின் தீபமுகத்தில் கையில் துடுப்புடன் அமர்ந்தபடி அம்பை சென்ற பாதையையே பார்த்துக்கொண்டு அவன் அமர்ந்திருக்கும் சித்திரம் அழியா ஓவியமாகி விடுகிறது.  அவளுக்கு எந்த உதவியும் தன்னால் செய்யமுடியாது என்பதை அவன் நன்கறிவான்.  அதனால்தான் அவன் செயலிழந்து போகிறான். கையில் வருவதை உண்டு கங்கைநீரை குடித்து உடல் மெலிந்து பாம்புத்தோல் கொண்டு சடைவிழுந்து கண்கள் குகையாகி பேயுருக் கொள்கிறான்.

இறுதியில் சிகண்டினியுடன் அம்பை மீண்டும் அஸ்தினபுரிக்கு வரும்போது அவளைக் கண்டு கைகளைக் கூப்பியபடி படகிலிருந்து முதல் முறையாக இறங்கி நிலத்திற்கு வந்து நடப்பவனைக் கண்டு துறையிலிருப்போர் பெருவியப்படைகின்றனர்.  அவன் மீண்டும் மனிதனாகிறான்.  சிகண்டினியும் முதல்முறையாக அம்பை ஒரு மனிதனை அடையாளம் கண்டுகொள்வதை காண்கிறாள்.  பித்தெழுந்து அலையும் அம்பைக்கு அவன் மட்டுமே மனிதனாக தெரிகிறான்.  தன்னை வணங்கிய நிருதனை கைதொட்டு வழுத்தியபின் ஓலமிட்டபடி காட்டிற்குள் ஓடத்தொடங்குகிறாள் அம்பை.  அவள் பின்னால் ஓடும் சிகண்டினி, தன் பின்னால் நிருதனும் வருவதை காண்கிறாள்.

எந்த உரையாடலும் இல்லாமல் அவர்களிடையே நிகழும் பிணைப்பு வியப்பூட்டுவது. காட்டிற்குள் சென்றபின் கையசைவால் நிருதனை அருகே அழைக்கிறாள் அம்பை.  அருகே சென்று வணங்கும் நிருதனிடம் தெற்கு மூலையில் இருக்கும் பாறைமேட்டை சுட்டிக்காட்டுகிறாள்.  அவன் அவள் சொல்வதை புரிந்துகொண்டதைப் போல் தலையசைத்தபின் காட்டுக்குள் சென்று உலர்ந்த மரம் ஒன்றை இழுத்துவந்து அதை கற்பாறைகளால் அடித்து ஒடித்து சுள்ளிகளாக ஆக்கி சிதை ஒன்றை அமைக்கிறான்.

சிகண்டியிடம் சொல்லவேண்டியவற்றை அம்பை சொல்லி முடித்தபின் தன்னருகே வந்து வணங்குபவனிடம் ‘நிருதரே, உங்கள் இல்லம் திரும்புங்கள்.  என் சிதைச்சாம்பலை கொண்டு சென்று நீங்களும் உங்கள் குலமும் உங்கள் சிறு தங்கைக்கு நீர்க்கடன் செய்யுங்கள்.  உங்கள் குலத்தில் நான் என்றென்றும் பிறந்துகொண்டிருப்பேன்’ என்கிறாள்.  ‘தங்கையே, அது என் தவப்பயன்’ என்கிறான் நிருதன்.

அவன் கற்களை உரசி ஏற்றும் எரிசிதைமேல் அம்பை ஏறிக்கொண்டதும் தலைமேல் தூக்கிய கரங்களுடன் அலறியபடி தரையில் விழுந்து துடிக்கிறான். தன்னில் சுடர்ந்த தன் தங்கையை தழலுக்கே அளித்து அவளுக்கு விடுதலை அளிப்பதோடு முதற்கனலில் நிருதனைப்பற்றிய கதை முடிவுறுகிறது.

பின்னர் பல்லாண்டுகள் கழித்து கிருஷ்ணனுடன் அஸ்தினபுரிக்கு வரும் சாத்யகி கங்கையின் ஓரமாக அமைக்கப்பட்டிருக்கும் சிற்றாலயங்களைப் பார்த்து கிருஷ்ணனிடம் “அவை அம்பையின் ஆலயமும் அணுக்கனின் ஆலயமும் அல்லவா?” என்று கேட்டு “நான் சென்று அணுக்கனைத் தொழுது மீள விழைகிறேன்” என்கிறான்.

மற்றுமோர் தருணத்தில் சகனுடன் அஸ்தினபுரிக்கு வரும் பூரிசிரவஸ் கங்கையின் விளிம்பிலமைந்திருக்கும் இரு சிற்றாலயங்களை நோக்க  “அவை அம்பை அன்னையின் ஆலயமும் அவள் அணுக்கன் நிருதனின் ஆலயமும். குகர்கள் நாள்தோறும் வந்து வழிபட்டுச்செல்கிறார்கள். அவர்களில் அம்பை, நிருதன் போன்ற பெயர்களை நீங்கள் நிறையவே காணமுடியும்” என்கிறார் சுங்கநாயகம்.

சாத்யகி கிருஷ்ணனுக்கு அடிமை, கேள்வி கேட்காமல் அடிபணியும் தொழும்பன்.  பூரிசிரவஸ் துரியோதனனுக்கு தன்னை ஒப்பளித்தவன்.  இருவரும் நிருதனின் ஆலயத்தைக் காண்பது எவ்வளவு பொருத்தம்!

காண்டீபத்தில் சுஜயனை அஸ்தினபுரி விட்டு அழைத்துச் செல்லும் சுபகை அம்பையின் ஆலயத்தைக் கண்டு ‘துயிலற்றவள்’ என்று எண்ணிக் கொள்கிறாள். அம்பாதேவியின் ஆலயத்தருகே நிருதனின் சிற்றாலயத்தில் அவன் குலத்தவர் வைத்த மூன்று கல் அகல்கள் சிறு சுடருடன் மின்னிக் கொண்டிருக்கின்றன. உள்ளே கை கூப்பிய நிலையில் கரிய சிலையாய் நிருதன் – என்றும் அகலாமல் அகலாய் எரிந்து கொண்டு அம்பைக்குத் துணையாய் – நின்றிருக்கிறான். தன்விழைவேதுமின்றி முன்பின் அறியா மங்கையை தன் தங்கையெனக் கொண்டு அவளுக்கென்றே வாழ்ந்து மறையும் நிருதன் இப்போது ஒரு தொன்மமாய் வெண்முரசில் உலவுகிறான்.

– ஸ்ரீனிவாசன்

4 Comments (+add yours?)

 1. R.Manikkavel
  Oct 17, 2015 @ 16:27:19

  அன்புள் ஸ்ரீனிவாசன் சார். இப்படி நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள் அப்பதான் நான் எல்லாம் இலக்கியம் படிப்பதன் பயனைபெறமுடியும், குறிப்பாக வெண்முரசின் பயனைப்பெற முடியும்.
  நன்றி

  அன்புடன்
  ராமராஜன் மாணிக்கவேல்.

  Liked by 1 person

  Reply

 2. R.Manikkavel
  Oct 17, 2015 @ 16:39:45

  அன்புள் ஸ்ரீனிவாசன் சார். இப்படி நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள் அப்பதான் நான் எல்லாம் இலக்கியம் படிப்பதன் பயனைபெறமுடியும், குறிப்பாக வெண்முரசின் பயனைப்பெற முடியும்.

  //துடுப்பே தன் சிறகென்பவனின் உடலே அப்படகு எனில், அம்பை அதில் ஏற்றப்பட்ட சுடர். அவள் நீங்கிய பின் அவ்வகல் இருண்டு போவது இயல்பே//

  நிருதன் சிலையானன் என்பதன் அழுதத்தை அதிர்வை இன்றுதான் அடைந்தேன். அம்பைக்காக அவன் தன்னை வருத்தும் தவம் அவனின் இளகிய மனதின் கையறு நிலையில் எழுவதாய் நினைத்து இருந்தேன், தொழிலால், குலத்தால், ராமனின் தொண்டர்கள் என்ற பாரம்பரியத்தால் வந்ததென்று எண்ணி இருந்தேன். சகோதரியின் வீட்டுக்குள் சகோதரிக்காக அண்ணனோ தம்பியோ நுழைந்விட முடியாத நிலை அவனின் உறைவதை சுட்டிக்காட்டியபோது நிருதன்யாரோ ஒருவன் அல்ல என்று உணர்ந்தேன்.

  சத்யகியும், பூரிசிரவசும் நிருதன் சிலையைப்பார்பதை ஒரு குறியீடாக பார்த்த எனக்கு அவன் உயிர்பெறுவதை இன்றுதான் உணரமுடிகின்றது. நன்றி

  அன்புடன்
  ராமராஜன் மாணிக்கவேல்.

  Like

  Reply

 3. Kannan V
  Oct 17, 2015 @ 22:37:53

  அருமை ஶ்ரீனிவாசன், ஜெ செதுக்கியெடுத்த நிருதனை துலக்கி கொடுத்துள்ளீர்கள் எங்களுக்கு !! நன்றி !!

  அன்புடன்

  வெ கண்ணன்

  Like

  Reply

 4. A.P.Raman.
  May 13, 2017 @ 11:27:58

  நெஞ்சில் நிழலாடும் எழுத்துக் கோர்வை. அழகோ அழகு!

  Like

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: