பீஷ்மரின் அறம்

முதற்கனலில் பீஷ்மர் சப்தசிந்துவைக் கடந்து ஒரு நாக சூதரைக் காண வருவார். அவர் நாக ரசம் நிரம்பிய தாலத்தில் பீஷ்மரை முகம் பார்க்கச் சொல்வார். அதில் தெரியும் முகம் யயாதியினுடையதாக இருக்கும். பீஷ்மரின் கதை அறிந்த அனைவருமே அதில் புருவின் முகம் தெரியும் என்று தான் எதிர்பார்த்திருப்போம். பீஷ்மரே அம்முகத்தை தான் எதிர்நோக்கியிருப்பார். ஆனால் தெரிவதோ புருவிடமிருந்து இளமையைப் பெற்று, அதைத் தர மறுத்ததால் மற்ற புதல்வர்களைத் தீச்சொல்லிட்ட யயாதியின் முகம். பீஷ்மருடன் நாமும் சேர்ந்தே அதிர்ச்சியடைகிறோம்.

யயாதி – குரு குலத்தின் நாயகர்களில் ஒருவர். அவரைப் பற்றி வெண்முரசு, தருமதேவனே தேர்ந்த அரசன் என்கிறது. வாழ்நாள் முழுக்க அறச்செல்வனாக வாழ்ந்து, இந்திரனையே ஆட்டிப்பார்த்துக் கொண்டிருக்கும் அவனை காமத்தில் விழ வைக்கிறான் இந்திரன். காமம் மீதூறியவனை வயதாக்கி, நிறைவின்மையால் நிறைக்கிறான். வயதின் துயரத்தால் காமம் நிறைவேறாத யயாதியின் மனம், ரதியின் துயரத்தில் பிறந்த அஸ்ருபிந்துமதியைக் கண்டவுடன் கரையுடைகிறது. முறை மீறி, இளமையில் துள்ளும் அவளிடம் தன்னை ஏற்கும்படி கோருகிறான். இளமையுடன் வந்தால் ஏற்கிறேன் என்றவளுக்காகத் தம் மைந்தரிடம் இளமையை யாசிக்கிறான். தராத மைந்தருக்கு அவரவர் விரும்பியவை கிட்டாமல் போகட்டும் என்று தீச்சொல்லும் இடுகிறான். இறுதியில் கடைசி மகன் புரு தன் இளமையை அளிக்கிறான். ஐம்பது வருடம் காமம் உணர்ந்து மீண்டு, தன் மகனிடம் மீண்டும் இளமையை தரும் நேரம், புரு, ‘நான் காமத்தை முதுமையாயிருக்கும்போதே முழுதுணர்ந்து விட்டேன், எனவே இனி இளமை வேண்டேன்’ என்கிறான். அக்கணம் மீண்டும் நிறைவின்மையில் விழும் யயாதி, இறுதியில் தன் மகளைக் காணும்போது நிறைவடைந்து விண்ணேகுகிறான். இந்நிகழ்வை அக்டோபர் மாத சென்னை வெண்முரசு கூடுகையில் விவரித்த காளி, யயாதி தான் காம நிறைவு கொள்ள வேண்டும் என்கிற இச்சையால் குரு குலத்தின் வரலாறை மாற்றியமைத்தான் என்றார்.

இந்த யயாதியா பீஷ்மர்? தன் தந்தைக்காக, தேச நலனுக்காக, சத்தியவதி போன்ற சக்ரவர்த்தினி அஸ்தினாபுர அரியணையை அலங்கரிக்க வேண்டும் என்பதற்காக மானுடன் ஒருவன் கொள்ளச் சாத்தியமற்ற காம ஒறுப்பையும், ஷத்ரியன் ஒருவன் கொள்ளச் சாத்தியமற்ற ராஜ்ஜியத் துறப்பையும் விரதமாக ஏற்றுக்கொள்கிறார்  தேவவிரதன். சத்தியவதியை விட்டால் பிறிதொரு ராச்சியத்தின் ராணியாகி அவளின் சக்ரவர்த்தினி ஆசையாலே பெரும் போர் மூளச் செய்வாள். அத்தகைய பெரும் போர் பாரத வர்ஷத்தையே அழிக்கும் என்று உணர்ந்த அவரின் அரசியல் அறம் அந்த செயற்கரிய செயலை செய்ய வைத்து பீஷ்மராக்கியது. எளியோர்பால் கொண்ட கருணை அவரின் அறமாகியது அன்று.

இதே பீஷ்மர் தான் ஒரு ஷத்ரியன் என்றும், ஷத்ரியனின் தன்னறம் என்பது தன் நாட்டுக்காக, தன் தேச மக்களின் நலனுக்காக எதையும் செய்யலாம் என்பதை உணர்ந்து, தன் தம்பிக்காக காசி நாட்டு இளவரசியரை கவர்கிறார். இது அற மீறல்தான். எந்த ஒரு ஷத்ரியனும் தான் மணக்கவிருக்கும் பெண்ணை மட்டுமே இவ்வாறு கவர்ந்து வர ஒப்புதல் உள்ளது. எனினும் எளியோர் நலன், தேச நலன் என்று வருகையில், ஒரு ஷத்ரியனுக்கு இத்தகைய அற மீறலைச் செய்யவும் ஒப்புதல் உள்ளது. எனினும் பீஷ்மரே எதிர்பாரா வண்ணம் அவரையும் மீறி மானுட இயல்பான எதிர்பாலின ஈர்ப்பினை அம்பையிடம் அடைகிறார். காமம் என்று ஒற்றைச் சொல்லால் இதை குறுக்கிவிடவும் இயலாது. அவர் அம்பையைக் காணும் அந்த கணம், அதில் தன்னை தூக்க வரும் பீஷ்மரின் எட்டு சீடர்களில் முதலாமவனை தன் கையிலிருந்த வாளால் கொல்கிறாள், பின்னர் தன்னைச் சூழ்ந்தவர்களுடன் திகிரி என கைவாள் சுழல சமரிடுகிறாள். அக்காட்சியைப் பார்த்து மெய்மறந்து நிற்கிறார் பீஷ்மர். அந்த ஒரு கண ஈர்ப்பினைக் கச்சிதமாக பற்றிக் கொள்கிறது அம்பையின் கருப்பை. ஆம், அங்கே கண்டவன் ஆண்களில் சிறந்தவன், அவனைக் கொள்ள விழைந்தது சிறந்தவற்றை மட்டுமே ஏற்றாக வேண்டிய ஒரு கருப்பை. அது பிரபஞ்ச நியதி. மாறாப் பேரறம்.

பீஷ்மர் அம்பையின் உள்ளத்தில் நுழைந்த தருணம் படகில் நடக்கிறது. தன் மனமுவந்த சால்வனது தவிர வேறு எவருடைய பிள்ளையரையும் கங்கையிலே மூழ்கடிப்பேன் என்று கங்கை நீரை கையில் வைத்து வஞ்சினம் உரைத்த அம்பையைக் கையாள இயலாமல் பதறி அவளை படகிலிருந்து வெளியேற்றுகிறார் பீஷ்மர். தன் கோபத்தையும் மிக நிதானத்துடன் கையாண்ட ஒருவன், தான் கங்கை மீது செய்த ஆணையால் அகமழிந்ததைக் கண்ட அம்பை சிறு படகில் இறங்கும்போது, பீஷ்மரின் முதன்மைச் சீடனிடம் கங்கைக்கும் பீஷ்மருக்குமான உறவைப்பற்றி கேட்டறிகிறாள். “முகத்தில் வந்து விழுந்த கூந்தலை கைகளால் அள்ளி பின்னால் தள்ளியபடி ஆடும் படகில் உடலை சமநிலை செய்தபடி பீஷ்மரை ஏறிட்டாள்“, என்று வெண்முரசு அவளின் அந்த அறிதலுக்குப் பின்பான செயல்களைச் சொல்கிறது. அங்கே தன் முன் இருந்த சால்வனை பின்னுக்குத் தள்ளி ஆடியுலைந்த தன் மனதை பீஷ்மரிடம் திருப்பி சமநிலை கொள்வதாகவே இவ்வரிகள் அர்த்தம் கொள்கின்றன. என்ன இருந்தாலும் ஆழ்மனம் உணர்ந்ததை மேல் மனம் உணர சாட்சியங்களும், அனுபவங்களும் தேவையல்லவா! அதைத்தான் அவள் சால்வனிடமும், தன் தந்தையிடமும் அடைகிறாள். அதன் பிறகே தான் முழுமைடைய விரும்பிய ஆத்மா பீஷ்மரே என்று தெளிகிறாள். பீஷ்மரிடம் சென்று இறைஞ்சுகிறாள்.

ஆனால் பீஷ்மர் தன்னறத்தை மேற்கோள் காட்டி அவளை ஏற்க மறுக்கிறார். ஆணையிட்டே பழகிய குரல் குழைய பலவாறு அம்பை அவரின் வாதங்களனைத்தையும் தூள் தூளாக்குகிறாள். ஆடையின்றி அன்னை முன் நிற்கும் குழவியென தன்னை உணரும் பீஷ்மர், தான் தன்னைச் சுற்றி கட்டிய அனைத்துக் கோட்டைகளும் புகையால் ஆனவை என்பதை உணர்ந்து துணுக்குறுகிறார். இந்தச் சிறு துணுக்குறல்தான் அவளை வென்றே ஆக வேண்டிய ஆகப்பெரிய எதிரியாக அவருக்குக் காட்டுகிறது. வெண்முரசில் காதலில் கனிந்த எத்தனையோ பெண்களை பார்க்கிறோம். ஆனால் தான் கொண்ட காதலுக்காக தன்னையே முற்றிலும் அழித்து – ஆம் அழித்து – காதல் கொண்டவன் முன் ‘நான் உங்கள் தாசியல்லவா?’ என்று இறைஞ்சிய ஒரு பாத்திரம் அம்பை தவிர வேறு யாருமேயில்லை.

அப்படி முற்றிலும் வேறாக, பெண்ணின் நிறைவான அன்னையின் கனிவுடனும், அன்னையாகி நிறைவாக வேண்டும் என்ற விருப்புடனும் முன் நின்று கெஞ்சும் பெண்ணை இறுதியாக வென்ற களிப்பில் அவரின் முகத்தில் வரும் அந்தப் புன்னகை, அது தான் பீஷ்மரை யயாதிக்கு ஒப்பானவராக்க்குகிறது.

பீஷ்மர் செய்த தவறு என்ன? அவர் அம்பையை நிராகரித்ததுதான் தவறு. உண்மையில் சத்தியவதியால் நிகழச் சாத்தியமான பெரும் போரைத் தவிர்த்து, குடி நலம் காக்கவே அவர் அந்த விரதத்தை மேற்கொள்கிறார். இப்போது அதே குடி நலனுக்காக அந்த விரதத்தை அவர் கைவிட்டிருக்க வேண்டும். அம்பையை ஏற்றிருக்க வேண்டும். விசித்திர வீரியனின் குழந்தைகளுக்கு குருதித் தந்தையாக இருந்திருக்க வேண்டும். இவையனைத்துமே அந்தத் தருணத்தில் மனிதனாகவும், ஷத்ரியனாகவும் அவரின் அறமாக இருந்திருக்கும். ஆனால் அவர் தன் விரதத்தின் பெயரில் கொண்ட இச்சையால் அறம் பிழைக்கிறார். தனக்காகவே வந்த பெண்ணை, அவள் பலவீனத்தைப் பயன்படுத்தி வென்றது எவ்வகையில் பார்க்கினும் தன் இச்சையின் காரணமாக செய்த அறப்பிழையே. பீஷ்மரின் விரதம் இப்போது அவரைத் தவிர வேறு யாருக்கும் தேவையாய் இருக்கவில்லை. அவருக்கே அவ்விரதம் தேவையில்லைதான். இருப்பினும் அவ்விரதமே தன்னை ஆக்குகிறது என்ற எண்ணம், இத்தனை நாள் உடனிருந்தது என்ற ஒரே காரணத்தால் பழையனவற்றை கழிக்க மறுக்கும் இச்சை, அதுதான் அவரை அவ்விரதத்தை தன்னறமாக உணரச்செய்கிறது. அவ்வாறு எண்ணுவதாலேயே அவர் அம்பையை நிராகரிக்கிறார். அவரின் இந்த இச்சை பெரும் சுமையை விசித்திரவீரியனின் மீது சுமத்துகிறது. இதை உணர்ந்ததால்தான் பீஷ்மர் புருவின் முகம் யாருடையது என்பது தனக்குத் தெரியும் என்று நாக சூதரிடம் சொல்கிறார்.

பீஷ்மர் செய்த தவறு ஒரு வகையில் சித்ரரதன் செய்த தவறுக்கு இணையானது. அவன் தேரில் செல்கையில் சிற்றுயிர்கள் வதைபடுவது ஒன்றும் அவன் தவறல்ல என்கிறான். அது அவன் அறம் என்கிறான். ஆயினும் அவன் செய்தது தவறே என்றாகிறது. அவன் செய்த தவறாக அர்ஜுனன், “சிற்றுயிர்கள் வதைபடுவது அவற்றின் நலனை இலக்காக்கிய ஒரு பயணத்தால் என்றால் அது தவறல்ல. அன்று நீர் ரதத்தில் சென்று கொண்டிருந்தது உமது உவகைக்காக மட்டுமே. ஆணவத்துக்காகவும், அகமகிழ்வுக்காகவும் இலக்கு கொள்பவன் பழி சுமந்தாக வேண்டும்” என்கிறான். இங்கே பீஷ்மர் அம்பையைத் துறந்தது முழுக்க முழுக்க அவரின் விரதம் கலைக்கப்படலாகாது என்ற இச்சையின் பால் என்ற வகையில் அவர் பழி சூழ்ந்தவராகத் தானே வேண்டும்.

மகாபாரதம் என்பது சரிக்கும் தவறுக்கும், நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான ஒரு போர் அல்ல. மாறாக ஒரு அறத்துக்கும், மற்றொரு அறத்துக்கும் இடையேயான போர் என்றே வழங்கப்படுகிறது. இங்கே பீஷ்மரின் விரதம் என்ற அறத்திற்கும், அம்பை என்ற பெண்ணின் மூலம் விஸ்வரூபமெடுக்கும் மானுடப் பேரறமான மானுட நீட்சிக்குமிடையே நடக்கும் யுத்தமாகவே முதற்கனல் அமைகிறது என்ற வகையில் மகாபாரதத் தொடரின் மிகச்சரியான துவக்கமாக அது அமைகிறது.

நாம் பிதாமகரை ஒரு தொன்மமாக, செய்த சத்தியத்திற்காக மொத்த வாழ்வையும் தியாகம் செய்த விழுமியத்தின் அடையாளமாகப் பார்க்கவே பழகியிருக்கிறோம். இதனால் அவருக்கும் அம்பையின் பால் காதல் இருந்திருக்கும் என்ற எண்ணத்தைக் கூட அண்டாமல் விரட்ட வேண்டும் என விரும்புகிறோம். வெண்முரசு அவரையும் உடைத்துப் பார்க்கிறது. ஏன் அவரும் ஒரு மனிதர்தானே? அவருக்குள்ளும் ஆசைகள் இருக்கத்தானே செய்திருக்கும்? அத்தகைய ஆசைகள் இருப்பதாலேயே அவரின் தொன்மமும், அவர் கொண்ட விழுமியங்களும் மதிப்பிழந்து போகுமென்றால் அது யாருடைய பிழை? என்று நம்முன் நின்று அறைகூவுகிறது. ஏற்பதும் ஏற்காததும் நம் கையில்!

– மகராஜன் அருணாச்சலம்

4 Comments (+add yours?)

 1. kaliprasadh
  Oct 23, 2015 @ 23:28:33

  முதற்கனலின் ஒரு சந்தேகத்தை காண்டீபம் தீர்த்து வைத்தது அருமை

  Like

  Reply

 2. R.Manikkavel
  Oct 24, 2015 @ 12:35:36

  அன்புள்ள அருணாச்சலம் மிக அருமையாக எழுதி உள்ளீர்கள். பலப்படிகளாலாக பீஷ்மரை பிரித்து அணுகின்றீர்கள். அதில் குறிப்பாக இந்த சிந்தனை அற்புதம்.

  //அவருக்கும் அம்பையின் பால் காதல் இருந்திருக்கும் என்ற எண்ணத்தைக் கூட அண்டாமல் விரட்ட வேண்டும் என விரும்புகிறோம்//

  அன்புடன்
  ராமராஜன் மாணிக்கவேல்

  Like

  Reply

 3. அரசன்
  Oct 25, 2015 @ 21:42:25

  காண்டீபம் வரை வெண்முரசை தொடர்ச்சியாக படித்து வந்தாலும் , பீஷ்மருக்கு ஏன் யயாதியின் முகம் தெரிந்தது என்பதை இன்று வரை மனம் நிலைகொள்ள விடா வினாவாக இருந்தது. அதற்கான விடையை அம்பையோடும் அதற்கு துணையாக காண்டீபத்தையும் உடனுக்கு அழைத்தது அபாரம். வெண்முரசு சாதாரண இலக்கியமல்ல என்பதற்கு இவையே சான்று. மீள்வாசிப்பு பலமுறை செய்தால்தான் இவ்வாறான பல கேள்விகளுக்கு விடை கிட்டும் போலும். ஆனால் உங்களைப் போன்றோர் அதற்கு விடைகளைத் தரும் என்ற நோக்கத்தையும் கருத்தில் கொண்டு கச்சிதமான தருணத்தை எதிர்பார்த்து இப்போது இணையத்தில் தினமும் வெளியிட்டு கொண்டிருக்கிறார் நிகழ்காவியத்தின் படைப்பாளி. தங்களைப் போன்றோர் இவ்வாறான பதிவுகளை வெளியிட்டு உதவுவதற்கு பலகோடி நன்றிகள்.

  Like

  Reply

 4. Ananthamurugan
  Aug 29, 2020 @ 09:26:14

  தெள்ளத் தெளிவாக அமைந்த பார்வை. நெடு நாள் கேள்விக்கு விடை பெறுகிறேன். நன்றி. ……

  அனந்த முருகன்.

  Like

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: