நட்பின் அழகியல்

மணியின் கதை

சியமந்தகமணியின் கதையை கூறுகிறது இந்திரநீலம். இளைய யாதவன் சத்யபாமாவையும் ஜாம்பவதியையும் மணப்பதற்கு காரணமாக அமையும் மணி சத்ராஜித்திடமிருந்து சததன்வாவால் பறித்துச் செல்லப்படுகிறது. அவனிடமிருந்து அதை மீட்கச் செல்லும் அக்ரூரரும் கிருதவர்மனும் அதை கைக்கொள்ள நினைக்கின்றனர். அக்ரூரர் தான் செய்தது தவறென்றுணர்கிறார். கிருதவர்மனை திருஷ்டத்யும்னன் பிடித்து வந்து கிருஷ்ணனிடம் ஒப்படைக்கிறான். இப்போது சியமந்தகமணி துவாரகையில். நீலத்திற்காக நீலனின் அரசியரிடையே போர் மூள்கிறது. சாத்யகியையும் நூலிழையில் திருஷ்டத்யும்னனையும் பலியாகக் கொள்ளவிருக்கையில் மணிவண்ணன் சொல்கேட்டு சுபத்திரையால் வீசி எறியப்பட்டு ஆழியின் அடியில் உறங்கச் செல்கிறது.

முதலிலேயே திருஷ்டத்யும்னனுக்கு மதுக்குடுவை வேட்கையின் மணிவடிவமான இந்திரநீலக் கல்லாக தெரிகிறது. முதல் சந்திப்பிலேயே கிருஷ்ணன் திருஷ்டத்யும்னனிடம் ‘சியமந்தகத்தின் ஆடலை நீங்கள் மேலும் காணநேரும்’ என்று சொல்லிவிடுகிறான்.

தன்னை காண்பவர்  அனைவரையும் – ஏன் தன்னைப்பற்றி அறிபவரைக்கூட – அது விழைவென்னும் வலையில் வீழ்த்திவிடுகிறது. இளைய யாதவனையும் காளிந்தியையும் தவிர எல்லோருமே அதை தன்னிடம் வைத்திருக்க விழைகின்றனர்.   அம் மணியின் இப்பண்புக்கு காரணம் அது உருவான விதம்.  பிரம்மயுகத்தில் அக்னி ஒரு பகலுக்கு மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டிருந்துவிட்டு திரும்ப அளிப்பதாக வாக்களித்து சூரியனின் ஒரு செவ்வொளிக்கதிரை பெறுகிறான். ஆனால் தன்னிடம் உள்ள கதிரால் தன்னை மக்கள் வழிபடுவதைக் கண்டு அதை திருப்பியளிக்காமல் மண்ணடியில் மறைந்துகொள்கிறான்.

ஆயிரமாண்டுகள் சென்றபின் மேலே வந்தாகவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது அதை ஒரு மணியாக்கி சியாமாந்தக பிலத்தின் துளைக்குள் போட்டுவிட்டு வெளியேறுகிறான். பல ஆண்டுகளுக்குப் பிறகு சத்வத குலத்துதித்த அந்தகனென்னும் விழியிழந்த வீரசேனன் அதை கண்டடைகிறான். அதனாலேயே பார்வை பெறுகிறான். அவன் பெயராலேயே அறியப்படும் அவனது குலம் வழிவழியாக சியமந்தகமணியை தம் குல இறையாகவே வழிபட்டு வருகிறது. தவறான விழைவால் உருவான மணியின் ஒளி எதிர்வரும் அனைவரிலும் தீய விழைவையே விதைக்கிறது.

‘ஒரு தீயகணத்தில் ஆழத்திலிருந்து இதையன்றி பிறிது எதையும் காணமுடியாத விழி ஒன்றால் மீட்டெடுக்கப்பட்டது இது. அத்தனை ஆழத்திலிருந்து ஒரு பொருள் மண்ணுக்கு வரக்கூடாது. யானையின் மத்தகத்தில் சிற்றுயிர்கள் போல மண்மீது வாழும் மானுடர் ஆழத்தில் உறையும் கன்மதத்தை தாளமாட்டார்கள்’ என்கிறார் சாந்தர்.  காளிந்தி மட்டுமே அதைக் கடந்து மகாயோகியாக நிற்கிறாள்.  அதனாலேயே யாதவனின் அரசியரில் முதன்மையானவளாகிறாள்.

மனம்கவரும் விறலி

சுஃப்ரை எனும் ஆடல்மகள் மீது ஆசைகொள்கிறான் திருஷ்டத்யும்னன். தன் ஏவலன் மூலமாக அவளை தன் மஞ்சத்திற்கு வரவழைக்கிறான்.  தன்னையறியாமல் அவளிடம் தன் அகத்தை வெளிப்படுத்துகிறான். அவளிடம் தான் நெடுநாட்கள் உடல்நலமின்றி இருந்ததை சொல்கிறான். தனக்கு அவள் மேல் ஏற்பட்டுவிட்ட காதலை அவள் உணர்ந்துவிட்டாள் என்று அறிந்து சீண்டப்படுகிறான்.  சினத்துடன் அவளை அவன் வெட்டும்போது  நூலிழையில் தவறுகிறது. சலனமின்றி கிடப்பவளைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான்.  அவள் கண்களில் இருப்பது தன் மேலான காதல் என்பதை உணர்ந்து அதை மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொள்ள விழைகிறான்.

அவர்களிடையே மலரும் காதல் எத்தகையது என்பது சுஃப்ரை நடிக்கும் நாடகத்தின் மூலமே சொல்லப்பட்டுவிடுகிறது. விஸ்வாமித்திரர் நாடகத்தில் இந்திரன் சொல்கிறான்: ‘பெண்ணில் ஆணை கவர்வது அவள்கொள்ளும் காமமே.  அவள் வயிற்றிலுறங்கும் வருங்காலம் விழிகளில் இதழ்களில் முலைகளில் உந்தியில் அல்குலில் திகழ்கையில் அவள் சுடராகிறாள்.  ஆண்கள் விட்டில்களாகிறார்கள்.’  விலகு! இல்லையேல் அழிவாய் என்ற விஸ்வாமித்திரரிடம் ‘அழிந்தால் என்ன? நான் உங்களுள் எஞ்சுவேன் அல்லவா?’ என்கிறாள் மேனகை. அந்த மேனகை சுஃப்ரையாகி திருஷ்டத்யும்னனின் மஞ்சத்திற்கு வரும்போது அதையே உடலால் சொல்கிறாள்.  அவன் தன்னை வெட்ட வரும்போது சிறிதும் அசையாமல் கிடக்கிறாள்.  அவனுள் எஞ்சுகிறாள்!

துவாரகையில் இருக்கும்போது சுஃப்ரையின் நினைவு அவனை அலைக்கழிக்கத் தொடங்குகிறது. ராதாமாதவத்தை பார்த்துவிட்டு சாத்யகியிடம் சுஃப்ரையைப் பற்றி கூறும் திருஷ்டத்யும்னன் பர்சானபுரியின் ராதையின் கண்கள் அவளுடையதைப்போல் இருந்திருக்கும் என்கிறான். ‘மண்ணில் எவரும் பேறெனக்கொள்ளும் பெருங்காதலைப் பெற்றவன் நீ.  அந்தப்பூமரத்தடியில் அமர்வதன்றி வேறென்ன வேலை உனக்கு? என்கிறான் ஒரு சூதன்.  யாதவனின் ஆடல்கள் அனைத்துமே அவனை காதல் வழி ஆற்றுப்படுத்தவே சொல்லப்படுகின்றன. அவனே சொல்கிறான் – “யாதவர் எனக்காகவே யோகம் என்றால் என்ன என்று சொன்னார்.  சுஃப்ரை என் வாள்வீச்சை எதிர்கொண்டது யோகத்தால்தான்.”

எண்மர் மணம்

சத்யபாமாவில் தொடங்கி காளிந்தி முடிய எண்மரை கிருஷ்ணன் மணந்த கதைகளை சொல்வதே காவியத்தின் நோக்கம்.  பாமையின் கதை மிக விரிவாக சொல்லப்படுகிறது.  அடுத்தபடியாக ருக்மிணியை கைபற்றியது.  எட்டு கதைகளையும் கோப்பதற்கான சரடாக அமைகிறது திருஷ்டத்யும்னன்-சாத்யகி இடையேயான நட்பு.

வளரும் நட்பு

இந்திரப்பிரஸ்தம் அமைப்பதற்கான செல்வத்தைப்பெற துவாரகைக்கு வருகிறான். தன்னை வரவேற்க வரும் சாத்யகியை இன்னதென்றறியா வெறுப்புடன் எதிர்கொள்ளும் திருஷ்டத்யும்னன் அவனிடம் பெருநட்பு கொண்டு மீள்கிறான்.  முதலில் காணும்போது அவனுடன் பேசக்கூட செய்யாமல் கடந்துசென்றுவிடவேண்டும் என நினைக்கிறான்.  ஆனால் அவன் பேசத்துவங்கிய மறுகணமே இருவரும் ஒன்றிவிடுகின்றனர். ஒரு இளைஞனாக அவன் உணரவேண்டும் என்று கிருஷ்ணன் விரும்புவதை சாத்யகி சொன்னதுமே திருஷ்டத்யும்னன் தன் உடல் சோர்வை மறந்து புதிதாய் பிறக்கிறான்.  களியாட்டம் அங்கே தொடங்குகிறது.  அவர்களிடையேயான நட்பும்.

அவன் துவாரகையிலிருந்து திரும்பும்போது அவன் பெறும் செல்வங்கள் இவை – சாத்யகியின் நட்பு, மன்னனானாலும் காதலே பெரிதெனும் பாடம், நீலனின் மனதில் சிறப்பிடம். கலத்தில் ஏற்றப்படும் பெரும்செல்வம் அவனுக்கு ஒரு பொருட்டாகவேயில்லை. நட்பாலும் காதலாலும் மனம் நிரம்பி வழிய துவாரகையிலிருந்து மீள்கிறான். திரௌபதிக்கென அளிக்கும் பெருஞ்செல்வத்தை விட அவள் சகோதரனுக்கு சாத்யகி எனும் களித்தோழனை கண்ணன் அளிப்பதே முதன்மை பெறுகிறது.

இவற்றோடு அவனுக்கு கிடைப்பது கிருதவர்மனுடனான பெரும் பகையும். அதையும் அவன் விரும்பி ஏற்கிறான்.  மாபெரும் எதிரியைப் பெறுபவனே மாவீரனாகிறான் என்று அதற்கு நியாயம் கற்பிக்கிறான். ‘என்னை பழிதீர்க்கவென்றே கிருதவர்மன் வாழ்வான்.  அப்பகையே என் வாழ்வை பொருள்கொள்ளச் செய்வது’ என்கிறான்.

சுஃப்ரையிடம் தான் கொண்ட காதல் குறித்து சாத்யகியுடன் பகிர்ந்துகொள்கிறான்.  சல்யரிடமிருந்து வரும் மணத்தூதிற்கு பதிலளிக்கும் நிர்பந்தத்தில் இருக்கும்போது ஒருமாதம் ஒத்திப்போடுவதற்கென ஒரு சொல் வேண்டுமென்று சாத்யகியிடம் கோருகிறான்.

ஜாம்பவதியிடம் அளிக்காமல் சியமந்தகத்தை தானே வைத்துக்கொள்ள எண்ணி தப்பிச்செல்லும் சாத்யகியை தேடிச்செல்கிறான் திருஷ்டத்யும்னன்.  தன் பிழையை ஒப்புக்கொண்டு மணியை ஒப்படைத்துவிட்டு தன்னை மாய்த்துக்கொள்ள முயலும் சாத்யகியை அணைத்து ’ஒவ்வொருவருக்கும் அதுவன்றி ஒரு கணமும் வாழமுடியாது என்று சில உறவுகள் இருக்கும். இப்புவியில் இன்றுவரை நான் அறிந்ததில் உங்கள் உறவொன்றே அத்தகையது. நீர் மாய்க்கும் உயிர் உம்முடையது மட்டுமல்ல. நம்மிடையே உள்ளது நட்புக்கும் அப்பால் ஒரு சொல் இருக்குமென்றால் அது.  இப்புவியில் நான் இருக்கும் காலம் வரை இருங்கள். என்றோ ஒரு நாள் இன்று நான் உங்கள் முன் நின்று விடும் இந்த விழிநீருக்கு ஈடு செய்யுங்கள். பிறிதொரு களம் வரலாம். அங்கு நான் பெரும் பிழைசெய்து களம்படக்கூடும். அக்கணம் எண்ணி என் நெஞ்சமர ஒரு முகம் வேண்டும். நெஞ்சறிந்த என் இளமை முதல் என்னை அச்சுறுத்தும் கொடும்கனவுகளில் மெய்த்துணையென இன்று உங்கள் கை உள்ளது. அதை இழக்க நான் விழையவில்லை’ என்கிறான்.

“கீழ்மை நிறைந்த ஒரு பொது மந்தணம் நட்பு என்றென்றும் உறுதியாக இருக்க இன்றியமையாதது அல்லவா?” என்றும் கேட்கிறான் திருஷ்டத்யுமனன்.

தனக்கு சாத்யகி எத்துணை அணுக்கனாகிவிட்டான் என்பதை தான் யாதவரிடம் சொல்லாமல் விட்டுவிட்டோமே என ஏங்குகிறான் திருஷ்டத்யும்னன்.  சாத்யகி ’ஆனால் அவர் அறிவார். நீங்கள் விடைபெறுவதைப்பற்றி சொன்னபோது புலரிக்குமுன்னரே விடையளிக்கச் செல்வாய் அல்லவா என்றார்’ என்கிறான்.  அதைக்கேட்டு திருஷ்டத்யும்னன் உடல் சிலிர்த்து  ’நாம் உணர்வதைச் சொல்ல அதைவிட சிறந்த சொல் எது?  கிருஷ்ணார்ஜுனர்களைப் போன்றவர் நாம்’ என்கிறான்.  தொடக்கத்தில் திரௌபதி அவனை துவாரகைக்குச் செல்லும்படி கூறும்போது இளையவரும் (அர்ஜுனனும்) அங்குதான் இருக்கிறார் என்று சொன்னவுடன் ‘அவர்கள் இருவரும் இணைபிரியமுடியாதவர்கள்’ என்கிறான்.

அவனை வழியனுப்ப வரும் அக்ரூரர் ’நீங்கள் முடிசூடும்போது வலப்பக்கம் துவாரகையின் படைத்தலைவன் வாளுடன் நின்றிருப்பான் என்றார் (இளைய யாதவர்)’ என்கிறார்.  சாத்யகியின் நட்புக்காக அவன் உயிர்கொடுக்கத் துணிந்ததனாலேயே அவன் யாதவரின் உளம்புகுந்துவிட்டதாக கூறுகிறார். “மெய்நட்பை அறிந்தவன் தெய்வங்களுக்கு மிக உகந்தவன் என்றார்” என்கிறார்.  கலங்கிநிற்கிறான் திருஷ்டத்யும்னன்.

முதல் முறையாக கிருஷ்ணன் தன்னைப்பற்றி பேசுவது அர்ஜுனனுடன் மையம் தேடிச் சென்ற கதையை சொல்லத்தான்.  நண்பனுக்கு தான் காட்டித்தந்த மெய்மையை அவனே விளக்குவது அவர்களிடையேயான நட்பின் பெருமையால்.

அதே போல் காளிந்தியின் கதையை கிருஷ்ணனே சொல்வதும்.  கண்ணன் மீது மாறாத காதல் இருந்தாலும் மற்ற இளவரசியரெல்லாம் மனைவிகளாக, அரசியராக மாறியபின்னும் காளிந்தி மட்டும் தோழியாகவே எஞ்சுகிறாள். .  கண்ணனுக்கு அவனது ஆடலுக்கு எழுவரும் வேண்டும்.  ஆனால் அவனுக்கே என காளிந்தி போதும்.  கண்ணனுக்கான காத்திருப்புகளில் மிகக் குறைவாக சொல்லப்படுவது காளிந்தியுடையதே. ஆனால் அவளே முதன்மையானவளாய் திகழ்கிறாள்.

சியமந்தகத்தின் பயணத்தை சொல்லும் இந்திரநீலம் கிருஷ்ணனின் மணவினைகளை சொல்லிக்கொண்டிருக்கும்போதே திருஷ்டத்யும்னன்-சாத்யகி இடையே மலர்ந்த நட்பை வலுப்படுத்திக் கொண்டே செல்கிறது. அத்தனை கதைகளும் முடிவடையும்போது அவையெல்லாம் பின் நகர்ந்து இருவரிடையேயான நட்புறவே தெளிந்து முன் வருகிறது.   நட்பின் காவியமாகவே இந்திரநீலம் ஒளிர்கிறது.

தொடரும் பயணம்

வெண்முரசில் இதுவரை வந்தவற்றில் முதற்கனல், வண்ணக்கடல், வெண்முகில் நகரம், காண்டீபம் ஆகியவை பயணத்தின் அடிப்படையிலேயே பிறந்தவை.  அன்னையின் கட்டளையை ஏற்று மிகப்பெரும் பணிக்கென அஸ்தினபுரி சென்று மீளும் ஆஸ்திகனின் பயணம் வழியே பாரதத்திற்கான விதை விழுந்த கதையைச் சொல்லி அமைந்தது முதற்கனல்.  பாரதக்கதையை அறிய விழைந்த இளநாகனெனும் தமிழ்ப்பாணனுடன் இந்தியப் பெருநிலம் முழுவதும் சென்று வந்தது வண்ணக்கடல்.  மண்ணிற்காகவும் பெண்ணிற்காகவும் பெரும்பயணங்களை மேற்கொண்டு அரசவாழ்வு குறித்து தெளிவு பெற்ற பூரிசிரவஸின் பயணத்தை சொன்னது வெண்முகில் நகரம்.  நீலம் கூட காதலைத் தேடி தினம்தினம் ஆயர்பாடிக்குச் சென்று மீண்ட நப்பின்னையின் பயணம்தான்.  காண்டீபம் வில்லவனின் காதல் பயணமாய் தொடங்கி ஆன்மீகப் பயணமாய் முடிந்தது. இந்திரநீலம் திருஷ்டத்யும்னன் மேற்கொண்ட துவாரகைப் பயணத்தின் கதையாய் உருக்கொண்டுள்ளது.

தொடக்கம்-முடிவு – முழுமையும் இணைவும்

தனிமை என்று தொடங்குகிறது இந்திரநீலம். தனியனாய் தத்தளிப்பு நிறைந்தவனாய் துவாரகை செல்லும் திருஷ்டத்யும்னன் திரும்பும்போது இணையென சாத்யகியையும் அழியாத் துணையாக இளைய யாதவரையும் பட்டத்தரசியாய் அமரப்போகும் சுஃப்ரையையும் தன்னுடன் கொண்டு செல்கிறான்.

கடலில் எழும் சூரியக்கதிர் தன் பிறப்பிடம் தேடி அமைகிறது.

‘திரும்பி வருகையில் அந்நகரம் உங்கள் விழிகளில் இருக்கட்டும். அந்த விழிகளால் இந்திரப்பிரஸ்தத்தை பாருங்கள்’ என்கிறாள் திரௌபதி. இதுவே முடிவில் நிகழ்கிறது.  துவாரகையிலிருந்து திரும்பும் திருஷ்டத்யும்னனுக்கு அந்நகரின் பெருவாயிலை அணுகிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

இந்திரப்பிரஸ்தம் அமைப்பதில் உதவுவதற்காகவா? இல்லை… உற்ற தோழன் அங்கிருப்பதனால் தன்னையே அங்கு விட்டுச்செல்கிறான்.

– ஸ்ரீனிவாசன்

Advertisements

இன்றும் தொடரும் ஒரு மரபின் துவக்கம் – ராகவ்

தொழும்பன் சாத்யகி – சென்னை கூடுகையில் பேசியது

கிழே வருவது அன்று நான் பேசுவதற்காக தட்டச்சி எடுத்து சென்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 
தொழும்பன் சாத்யகி:
 
இன்று நமக்கு படிக்க கிடைக்கும் வென்முரசில் சாத்யகியை 3 விதத்தில் பார்கிறோம்
பகுதி 9 – பெருவாயில்புரம் 1,2,3
இந்த இடத்தில் இருந்து சாத்யகியின் பயனம் தொடங்குகிறது.
 
* சாத்யகி அறிமுகம் ஆகும் போதே, அவன் சந்திக்க போகும் வாழ்வா சாவா என்கிற பூரிஸ்ரவசுடனான இருதி கனம்
* இந்திரநீலத்தில் திஷ்டதுயும்னன் உடன் நட்பும், சியமந்த்க கல்லுடனான பயனமும் 
* சாத்யகி ஒரு தொழும்பனாக
 
இதற்க்கு ஒரு அத்தியாயம் முன் பான்டவர்களிடம் பாஞ்சாலத்தில் கர்னன் தலைமயிலான படை போர்தொடுத்து தோற்று மீளுகின்றது
பல கணவுகளுடன் இருக்கும் பூரிஸ்ரவஸ் துரியோதனனால் ஆட்கொள்ள பட்டு பால்ஹிகர்களின் சார்பு முடிவடைந்ததாகி விட்டது.
பெருவாயில் நகரம் முதல் அத்தியாயத்திலேயே பால்ஹிகர்கள் யாதவர்கள் பகையை பற்றிய குரிப்புகள் வருகின்றது
 
அதே போரில் இன்னொரு முனையில் அஸ்வதாமன் திருஷ்டதுயும்னன் படையினரின் போரின் காரனம் 
தன் முதல் போரில் திருஷ்டதுயும்னன் படுகாயம் அடைந்து கோட்ட்டைக்குள் திரும்புகிறான்.
அவன் பின்பு மீள்வது துவாரகை வந்து அங்கு கிடைக்கும் சூழலும் பகைகளாலும் நட்பாலும் தான்.
 
சாத்யகியின் களம் தெளிவாகவே இந்த இடத்தில் ஆரம்பிக்கிறது.
அதே இடத்தில் அதுவரை கனவு பொருளாகவும் அர்புதங்களின் களமாகவும் இருக்கும் துவாரகையும் விரிகிரது.
 
சாத்யகி துவாரகையின் அரண்மனையில் ஒரு தொழும்பனாக நுழைகிறான்.
எனக்கு இன்று இதை பற்றி தான் பேச எண்ணம்.
 
ஏகலைவனை அத்தை குந்தியின் அஸ்தினபுரி படைத்துனை கொன்டு வென்றதும்
ஒரு அதிர்ஷ்டத்தில் கூர்ஜரத்தின் செல்வம் புதையல் போல கிடைத்து,
பாரத நாட்டின் மற்ற தீவிர தேசங்களின் தொடர்புக்கு சற்று அப்பால் ஒரு நகரத்தை அமைக்க பெற்றதும் யாதவனின் நலூழ் என்பதாக யாதார்களிடம் ஒரு எண்ணம் இருக்கிறது. 
 
அதாவது சாத்யகியின் தந்தை போன்ற யாதவர்களிடம். இது ஒரு அளவு முந்திய தலைமுறையினரின் பார்வையாக இருக்கின்றது.
இதன் இன்னும் ஒரு எடுத்துக்காட்டு விதுரர், அவர் தன் மகன் துவாரகைக்கு செல்ல எண்ணம் தெரிவிக்கும் போதும், பிஷ்மருடன் பேசும் போதும் இதே போன்ற எண்ணங்களை வெளிபடுத்திகிறார்.  
 
இதை நாம் எப்போதும் பார்கலாம், தொன்று தொட்டு வருவதையே தொடர்வது நல்லது என்பது ஒரு எண்ணம்
இரெண்டாவது ‘நேத்து மொளச்ச காளான்’ என்ற எண்ணம்.
 
பீஷ்மர் போல அரிதாக ஒரு சிலரே தங்கள் தலைமுறையில் தான் கண்ட கனவை நிகழ்துபவனை தெயிரியமாக செய் என்று வாழ்துபவர்களாகவும். 
நம்மை போன்ற மானிடர் என்றால் சரியான அறிவுரைகளை அளிக்க கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள்.
 
 
இவை எல்லாம் சாத்யகியை தொழும்பனாக ஆவதற்கு முன்பான  பின்புலம்.
 
சாத்யகியை நாம் அறிமுகம் கொள்ளும் முதல் அத்தியாயத்திலேயே அவனுடைய பயம், தயக்கம், தடைகள் நமக்கு அறிமுகம் ஆகின்றன.
சாத்யகி துவாரகை நகரில் யுயுதானன் என்ற யாதவனாக நுழைகிறான் 
சத்யகரின் மகன் சாத்யகியாக தொழுப்பர் குறிகளுடன் அரண்மனை புகுகிறான்.
 
தொழும்பன் ஆக ஆவதற்கு முன் அவனுக்கு ஒரு யாதவனாகவே துவாரகையில் நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஒரு தொழிலாளியாக அல்லது வியாபாரியாக. அதை விடுத்து சாத்யகி தொழும்பன் ஆகிறான்.
 
தொழும்பர் என்றால் நாம் இன்று படிக்கும் சாத்யகியாக அல்ல.  
அவனிடம் சொல்ல படுவது மிகவும் கடுமையான நிபந்தனைகள். 
சொல்ல போனால் தொழும்பன் ஒரு அடிமை. 
அவனுக்கு உரிமைகள் கிடையாது. குடுப்பம், செல்வம் இவைகள் கிடையாது. இட்ட பணியை செய்து முடிக்க கடமை பட்டவர்கள். 
இன்னும் சொல்ல போனால் இட்ட கட்டளையை தலைவன் இன்புறும் பொருட்டு செய்து முடிப்பதே கடமையாக நினைத்து இருப்பவன்.
அதில் இருந்து விடுதலை எல்லாம் கிடையாது. தப்பித்து சென்றால் என்றேனும் ஒரு நாள் வாளுக்கு பலி.
 
இருந்தும் அரண்மனையில் அடிபணிந்து வாழ்வதே இலக்கு என்று தொழும்பர் குறி ஏற்கிறான்.
 
அந்த இடத்தில் கந்தமன் என்ற சப்தசிந்து பகுதியை சேர்ந்த ஒருவன், ‘என்னய்யா இப்பிடி பண்ணிட்ட’ என்பதாக வறுத்த படுகிறான்.
அவன் துவாரகைக்குள் அறிமுகமானவன், கடல் படைகளில் செர்த்து கொள்ள பட்டான், அதற்க்கான திறமை இருந்ததால்.
 
அடுத்து கரன் என்பவன், சாத்யகியுடன் தொழும்பன் ஆகிறான். அவன் வாழ வழியே இல்லாமல். தன் குளமெல்லாம் அழிந்ததால் வாழ்வு தேடி வந்தவன்.
காடுகளில் வாழ்தவன்.  தனி திறமைகள் எல்லாம் கிடையாது என்று நம்புபவன். அவனுக்கு வேறு வாய்ப்பும் வாழ்வும் கிடையாது.
தொழும்பன் ஆவது பெரும் பேரு.
 
ஆணால் சாத்யகிக்கு முற்றாக அப்படி அல்ல. இவ்வளவுக்கு பிறகும் சாத்யகி தொழும்பன் ஆகிறான்.
 
இங்கிருந்து கொஞ்சம் தாவி… ஒரு 2 நிமிடங்களில்
நம் மரபில் பக்திக்கு ஒரு இன்றிஅமையாத இடம் உள்ளது.
நம் மரபே பக்தி தான் என்றும் சொல்லி விட கூடிய அளவில், 
என் அளவில் மரபுக்கு அறிமுகமே ‘எல்லாமே பக்தி’, பக்தியால் சாத்திய படாதது எதுவுமே இல்லை என்பதாக அமைந்த்து.
அதற்க்கு பிறந்து, வளர்க்க பட்ட சூழலும் ஒரு காரனமோ என்னவோ.
 
ஒரு கட்டத்தில், எல்லாமே பக்தியா? 
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் குடுத்து தமிழ் மூன்றும் வாங்குவது தான் பக்தியா? என்கின்ற கேள்வியும் எழுகின்றது.
 
பிறகு பக்தியை தெரிந்து கொள்ள முற்படும் போது மேலும் ஒரு புரிதல் வருகிறது.
 
எதனுடன் பக்தி.. வடிவமில்லாத பரம் ஒன்றுடனா,  ஒரு வடிவம் அளிக்க பட்ட பரமே பொருளாக வரிக்க பட்டதுத்தனா
அடுத்து  எதன் பொருட்டு காப்பாத்து என்றா, அல்லது இதை கொடு அதை கொடு என்றா 
இவைகள் இல்லாமல் எதன் பொருட்டும் இல்லாமல் பக்தி செய்யவே பக்தியாக.
 
அடுத்து எப்படி பக்தி.. அதில் ஒரு 9 வகைகள் உள்ளது. அதில் தாசனாக பக்தி செய்வதும் ஒன்று.
 
இன்று வைணவத்தில் பல கிளைகள் உள்ளன. நம் தமிழ் நாட்டில் உள்ள வைணவத்தில்  கூட நமக்கு தெரியும் இரண்டு உள்ளன.
 
அதில் சமாஸ்ரயணம் என்ற ஒரு ‘சடங்கு’- ஆகவே ஒன்று உள்ளது அதை ஒரு சம்ஸ்காரமாகவே செய்கிறார்கள்.
அதில் இவன் தான் இறைவன் இவன் அன்ரி எனக்கு வேறு இல்லை என்று ஏற்க்கும் ஒரு சடங்கு.
அதன் பகுதியாக சங்கு சக்கரம், ஒரு கோலில் செய்து அதை தீயில் இட்டு  தோள்களில் பொறித்து கொள்வார்கள்.
அந்த சடங்கு இறைவனுடனான தனி மனிதனின் ஒரு தொடக்கம். 
 
இதை ஒருவர் தானாக முன் வந்தும் ஏற்று கொள்ளலாம்.
 
தோளில் சங்கு சக்கரம் ஏற்கும் முன் அவர்களும் கொள்ளும் மனதின் தடுமாற்றங்கள்
அதற்க்கான பதில்கள். இவைகள் எல்லாம் வரிசையாக வகுத்து வழிகாட்டும் படியாக ஒரு அமைப்பு உள்ளது
 
 
மறுபடியும் சாத்யகிக்கி வருவோம் .
துவாரகைக்குள் நுழையும் முன் வனிகர்கள் கூட்டம் ஒன்றுடன் சாத்யகி பயணிக்கிறான்.
அங்கே சக்ரிகன் கதை சொல்ல படுகிறது. தாய் தந்தையருக்கு படைப்பது போலவே (சாலிக்ராமம்  ??) கல் ஒன்றுக்கும் படைத்து வரும் சக்ரிகன்.
ஒருநாள் அவனுக்கு வரும் சோதனையும் இறைவன் அவனை ஆட்கொள்ளுதலும்.
 
அப்படியே தொழும்பன் ஆன பின்பான வாழ்க்கை. முதல் தருணமே சாத்யகியை அடையாளம் கண்டு கண்ணனை காண அழைத்து போகிறார்கள்.
அங்கு ஏற்கனவே கரணுடன் கண்ணன் பேசி கொண்டு இருக்கின்றான். கரனுக்கு 500 வகை பறவைகள் ஒலி கேட்டு அவைகள் பெயர் சொல்லவும் 100 புஉச்சிகள் பெயர் சொல்ல்லவும் தெரியும். இங்கே ஒருத்திக்கு நுறு நாணயங்களின் ஒலி கேட்டு எந்த நாட்டு நாணயம் என்று சொல்ல தெரியும் வா அறிமுகம் செய்கிரேன் என்கிறான். 
 
அங்கே கிட்ட தட்ட கரனும்  சாத்யகியும் ஒன்றே.
சமாஸ்ரயனுத்திக்கு பின்னும் அப்படித்தான்
 
சாத்யகிக்கி நம் வென்முரசில் பார்க்கும் போது இந்த பக்தி இருப்பதாக தான் நான் பார்கிறேன். 
அல்லது வெளிப்படையாக இல்லாவிட்டாலும் அது ஒரு ஊடு பாவாக நிகழ்கிறது.
 
நாம் பார்த்து கேட்டு வருபவைகளிலேயே நம் எழுத்தாளரிடம் ‘வென்முரசில் நீங்கள் எழுதுவது எது கற்பனை எது பாரதம்’ என்றும்
சாரமாக இதில் உங்கள் சரக்கு என்ன? என்ற கேள்விக்குமான ஒரு விடை போல இது எனக்கு படுகிறது.
நெடுக எங்கிலும் நம் மரபை, அதன் ஒரு சரடான பக்தியையுமே கூட நமக்கு புதிதாக அளிக்கிறார்.
அதில் நாம் தெரிந்து கொல்லாத்வையாக இருப்பதற்கும் ஒரு அறிமுகம் அல்லது தெளிவை தந்த படி பயணிக்கிறார்.
 
ஒரு விதத்தில் இந்த தோளில் குறி இடுவது துவாரகையில் இருந்து  தான் பாரததில் ஆரம்பித்து இருக்குமோ என்பது போல கோடு இட்டு காட்டுகிறது பெருவாயில் நகரம்.
அது அந்த தருனத்திர்க்கு ஏற்றாற்பொல (புதிய நகரம், புதிய குறி வைத்துக்கொள்ளும் பழக்கம்) வந்து அமறுகிறது.
அதுவே நிகழ்கால பழக்கதுடன் தொடர்பு பட்டு வருவதாக அமைகிறது.
 
எண்ணி பார்த்தால் ஒரு நாளும் என்னால் அப்படி ஒருவருக்கு தொழும்பனாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை.
 
வென்கடல் தொகுப்பில் வெறும் முள் என்ற கதை.
அதில் கிழிந்த ஒன்றுக்கும் ஆகாத துணிகளை, கந்தல்களை சேர்த்து வைத்து மூட்டை ஆக சுமக்கும் ஐசக் – முட்களில் சிக்கி ஆடை முற்றும் கிழிந்து பிரர்ந்த குழநதை போல ஓடி இலக்கை சேருவான். படித்த மது அருந்தி மயக்கத்திலும் இலக்கை சேரும் உந்துதல் இருந்தாலும் செஸபாண் முள்ளுக்கு பயந்து ஐசக்கை அவன் விட்டு சென்ற மூட்டையை பார்த்து நிற்கும் செஸியனாகவும் இருக்கலாம்.
 
~~~~~~~~~~~~~~~~~~
இதுவரை அன்று பேசியது, அதற்க்கு பின்னான விவாதத்தில் வந்த சில சுருக்கங்களை கீழே முயற்சிக்கிறேன் 
 
மகராஜன் அருனாசலம் :
இந்த தொழும்பர் குறி ஏற்ற என் நண்பர் ஒருவரிடம் இது பற்றி கேட்டு இருக்கிறேன். அவர் சொன்ன பதில் என்னை ஸ்தம்பிக்க வைத்தது.
‘அவன் தான் என்  கடவுள் அவனை தவிர வேறு ஒரு கடவுளின் கோவிலில் ஈடு படமாட்டேன் அப்படி போனால் நான் சோரம் போனவனாவேன் (கற்ப்பு இழந்ததர்க்கு சமம்)  ‘- என்பதாக சொன்னார். அந்த பதிலை உண்மையிலேயே என்னை ஆடி போக வைத்தது. நான் சாதாரணமாக கேட்ட கேள்விதான் அது.
 
பக்திக்கு நம் மரபில் உயர்ந்த இடமே அளிக்க பட்டு இருக்கிறது. கீதையிலே குட கர்ம யோகம், ஞான யோகங்களை விட சாத்தியமானது பக்தியோகம்  என்பதாக சொல்ல படுகிறது . 
 
ராஜகோபாலன் (ஜாஜா) :
இதற்க்கு ஒரு நீண்ட பின்புலன் உள்ளது.  இந்தியாவில் இப்போது நாம் பார்க்கும் வைனவத்திற்க்கு முன் ஜைனம் இந்தியா முழுவதும் பரவி இருந்தது. ஜைனம் எங்கெல்லாம் தீவிரமாக பின்பற்ற பட்டதோ அந்த இடங்களில் பின்நாளில் தீவிரமாக பிடிப்புடன் இன்று பின் பற்றப்படும் தீவிர சைவம் அல்லது வைணவம் நிலைத்துள்ளதை காண முடிகிறது.
 
இந்த வெறும் முள் கதையிலேயே கூட ஒன்றை கவனிக்கலாம் ஐசக் முன்னாளில் ஒரு போர்வீரனாக இருந்தவன். இது போன்ற ஒரு தீவிர தன்மையை வாழ்க்கையில் கொண்டவர்களிடம் தான் அப்படியே முற்றாக எதிர் எல்லைக்கு போகும் தன்மை அமைகிறது.
சாத்யகியின் பயணம் இன்னும் நீள்கிறது. இந்திரநீலத்தில் அதன் முழுமையும் பார்க்கிறோம்.
 
திருஷ்டதியும்ணன் சாத்யகியை அந்த பாலையின் கிட்ட தட்ட எல்லையில் இருந்து மீட்டு வருகிறான். இது யோகத்தில் உள்ள ஒரு தளம் ( சௌந்தரை தேடினோம், இடையில் வெளியில் சென்று இருந்தார்).  தொழும்பர் துவாரகையின் வாளுக்கு பலிஆவார்கள் என்பது அது தான், அந்த பாலையை சாத்யகி  கடந்து இருந்தால் பிறகு மீட்பு இல்லை. அந்த இடத்தில் தான் சாத்யகியை திருஷ்டதுயும்ணன் வந்து மீட்கிறான். 
 
மகராஜன் அருனாசலம் :
திருஷ்டதுயும்ணன் அதை சொல்கிறான், நான் சென்றிருந்தால் எங்கு போயிருப்பேனோ அங்கு தான் தேடி கண்டுகொண்டேன் என்கிறான். சொல்ல போனால் அவன் கண்ணை மூடி கொண்டு தான் செல்கிறான். 
 
ராஜகோபாலன் (ஜாஜா) :
ஆம், அந்த நிலையில் அப்படி அந்த பயணத்தின் சக பயணிதான் உதவ வர கூட முடியும்.
 
இது தான் யோகத்தில் இருக்கும் நிலை. அந்த நிலையை தாண்ட வேண்டும் என்றால் குருவின் உதவி இல்லாமல் முடியாது  (சௌந்தர்  வந்து மீண்டும் கலந்து கொண்டார் ) இதை தான் நம் எழுத்தாளர் இங்கு உருவாக்குகிறார்.
 
சௌந்தர் :
அந்த நிலையை கடக்க தான் குருவின் உதவி தேவையாய் உள்ளது. அதை கடந்து வராமல் போனால் மீட்பு இல்லை.
இங்கே கண்ணனிடமே சாத்யகி திரும்புகிறான் , அவனுக்கு கிருஷ்ணனே தொடக்கம், குரு அனைத்துமே. தொடங்கிய இடத்தில் தான் அவனால் அமைய முடியும். அதானால் கண்ணனிடமே வந்து கலக்கிறான்.
 
நான் :
அந்த இடத்தில்  கண்ணனும் இங்கே உன்னைவிட்டால் நான் யாரிடம் விளையாட முடியும் என்று கூறுகிறான்.
 
மகராஜன் அருனாசலம் :
கிருஷ்ணன் நீ சென்ற இடம் பேசியது எல்லாம் நான் அறிய மாட்டேனா என்றும் சொல்கிறான். சாத்யகி ஒரு இடத்தில் மது மயக்கத்தில் கண்ணனை பின்னாலேயே அடிப்பேன், அவன் வரட்டும் என்று கூட சொல்கிறான்.
 
சாத்யகி கண்ணனை சந்திக்கும் அந்த இடம் முழுமையான ஒரு நேர்காணல் தான், கிட்ட தட்ட நம் அலுவலகங்களில் நடப்பது போல. கிருஷ்ணனிடம் அவன் பேசிய பிறகு சரி உனக்கு போர் என்பது புரிகிறது உன்னை அடுத்த கட்ட பயிற்சிக்கு அனுப்பிகிறேன் என்கிறான். அது போலவே அந்த கரன்னை ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கிறான், அவனுக்கான அடுத்த கட்டமாக நாணயங்கள் ஒலி கேட்டு நாட்டின் பெயர் சொல்பவள்ளிடம் அறிமுக படுத்துகிறான். கண்ணனின் செயல்பாடு ஒரு தேர்ந்த நிர்வாகியின் செயல்பாடாக இருக்கிறது.
 
தியாகராஜன் :
கல்பாக்கத்தில் உள்ள கோவிலில் ஒரு வயதான அம்மா ஒருவர் வருவார். அங்கு  உள்ள கண்ணன், ராமன் அனுமன் சந்நிதியை மட்டும் தரிசனம் செய்வார். அவரிடம் கூட இந்த கேள்வியை கேட்டு இது போல ஒரு பதிலையே பேற்றேன் என்று சொன்னார் தியாகராஜன்.
 
ராஜகோபாலன் (ஜாஜா) :
நம் மரபில் தீவிர குழுக்கள் சில இருக்கும் . ஆணால் பலர் திங்கள் கிழமை ஒரு கோவிலுக்கும் செவ்வாய் கிழைமை ஒரு கோவிலிலும் தீபம் ஏற்றுவார்கள். அவர்கள் தான் உண்மையாக நம் மரபை காத்து வருபவர்கள். அந்த தீவிர குழுக்களுக்கு ஆள் சேர்க்கும் சிலர் உள்ளனர், அவர்களை தான் நம் எழுத்தாளரும் குறிப்பிட்டு தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்.
 
(ராஜகோபாலன் அவர்கள் இன்னும் நிறைய பேசி, நான் பலத்தை மறந்து விட்டேன் என்றே தோன்றுகிறது. 
என்னை போன்று இன்று புதிதாக படித்து ஆர்வமுடன் வருபவர்கள் நிறைய இந்த சந்திப்புகளில் வருகின்றோம். அதில் சில சமயம் கண்முழி பிதிங்கி போகும் சில கருத்தகள் ஆணித்தனமாக சொல்பவர்கள் வரும் போது சினம் கொண்டு வந்த யானை முன் நின்ற பீமனை போல் நிற்கிறார். அவருக்கு நன்றி. )
 
நான்:
இந்த தொழும்பர் குறி நம் மரபில் உள்ளது. அதை அதன் சூழளுடன் சிக்கல்களுடன் கிட்ட தட்ட மறு அறிமுகம் செய்கிறார். இது மட்டும் அல்ல, வன்னகடலில் இள நாகன் பயணத்தின் அண்ண மந்திரம் போல இன்னும் பலவும் நமக்கு வென்முரசின் மூலம் மறு அறிமுகம்  தொடர்ந்து செய்ய படுகிறது.
 
அப்போது யார் என்று நியாபகம் இல்லை, ஓடிஸா பகுதி வரும் பொது ஏன் வாமன அவதாரம் பற்றி கதை  வந்து கேரளம் பற்றி சொல்கிறார் ? என்று கேட்டார் 
என்ன பதில் வந்தது என்று நியாபகம் இல்லை.
 
என் பெயர் ஸ்ரீனிவாசன் ஊர் கடலுர் என்று அறிமுக படுத்தி கொண்ட இவர் கூடுகையில் புதிதாக வந்தவர்.
அவர் சொன்னது சொன்னது.. கரனை பற்றி சொல்லும் பொது கரனுக்கு அங்கு வர சோறு தான் காரணம் அவன் எல்லை அதோடு முடிகிறது. கண்ணன் அதனால் அதை இலக்காக கொண்டவனிடம் அதையும், சாத்யகி போல தீவிர இலக்கை அடைய கூடியவனுக்கு அந்த இலக்கையும் அளிக்கிறார். எல்லோரையும் சியமந்தக மணியுடன் பாளைக்குள் அனுப்பவில்லை சாத்யகியும் திருஷ்டதும்ணனும் போல வெகு சிலர் மட்டுமே சென்று சேர கூடிய இலக்கு அது. அங்கு சென்று திரும்புபவர்கள் தான் கண்ணனிடம் சேருபவர்கள் என்பதாக சொன்னார். புதியவராக, முற்றிலும் அமைதி காத்தவராக இருந்தாலும் இவர் கருத்துக்கள் நான்றாக இருந்தது.
 
பிறகு பல விஷயங்கள் பேச பட்டது
 
வென்முரசின் முதல் வாசகர் ஸ்ரீனிவாசன் அவர்கள் சிறிய கதாபாத்திரங்கள் கூட மனதில் நின்று விடுகின்றபடி உள்ளது என்று நிருதன் பற்றி சொன்னார்.
 
மகராஜன் அருனாசலம் அம்பை படகில் வரும் காட்சியின் அழகு, வென்முரசில் ‘அகலில் தீபம் போல இருந்தாள்’ என்பதை நினைவு கூர்ந்தார்.
 
பிறகு தேங்காய் சாதம், தொட்டு கொள்ள தட்டை சீடை, முறுக்கு ஊறுகாயுடன் நல்ல படியாக கூட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. (இவைகள் பற்றியும் அவசியம் கூற வேண்டும் என்று தோன்றியது – உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.)
 
சாப்பிட்டு கொண்டே ஒருவரிடம் பேச்சு கொடுத்த பொது அவர் சொன்னது.. இண்ணும் நான் வெண்முகில் நகரமும் இந்திரநீலமும் படிக்க வில்லை அதனால் ஏதும் கருத்து தெரிவிக்க முடியவில்லை. நம் இந்திய மரபில் தான் இன்று இருப்பதை பல்லாயிரம் வருடம் முன்பு இருந்த வழக்கங்களுடன் தொரட்பு படுத்த முடியும், இப்போதும் சில பழங்குடியினரிடம் இந்த தோளில் சுட்டு கொள்வது இருக்கலாம். வேறு பல மதங்களில் இது சாத்தியம் அல்ல. பேகன், நார்டிக் போன்றவைகளிலோ அல்லது வேறு பழைய மாதங்களிலோ கூட அங்கிருந்து இங்கு வரை தொடர்புகள் உள்ளன என்று சொல்ல முடியாது.  இந்த தொழும்பர் குறி போன்ற விஷயங்கள் இன்னும் கூட எதோ ஒரு பழங்குடியினரிடம் இருக்கலாம் அதில் இருந்து இங்கு வரை தொடர்புகளை ஒரே கோட்டில் கொண்டு வர முடியலாம். அந்த பார்வையிலும் இது பார்க்கலாம் என்று கூறினார். (இவர் நம் குழுமத்தில் அவ்வபோது வந்து போவாராம், ஆணால் இவர் பெயரை வைத்து கண்டுபிடிக்க முடிவதில்லை. இவர்தான் என்று சில சமயம் இவர் தந்தையார் மட்டும் கண்டுபிடிப்பதுண்டு என்று ரகசியமாக சொன்னார். சரி ரகசியமாகவே இருக்கட்டும்  🙂 )
 
பிறகு பலர் வீட்டிற்கு புறப்பட்ட பிறகும் பக்கத்து மொட்ட மாடியில் அரட்டை தொடர்த்து.
 
மேலே குறிப்பிட்ட வற்றில் ஒருவர் சொன்னதை இன்னொருவர் சொன்னதாக போட்டு இருக்கலாம். யாராவது சொன்னதை முற்றிலும் கோட்டை விட்டு இருக்கலாம். நீங்கள் சொன்ன கருத்தை நான் சொன்னதாக போட்டும் இருக்கலாம். அதை எல்லாம் மன்னித்து. இந்த இவ்வளவு பெரிய தொகுப்பை எழுதியமைக்கு என்னை வாழ்த்துங்கள்.
நன்றி
வெ. ராகவ்
 
பி கு: முன்னமே தருகிறேன் என்று சொல்லி இப்போது தான் அனுப்புகிறேன். அடுத்த முறை இப்படி ஆகாமல் இருகும்படி பார்த்து கொள்கிறேன். இம்முறை மன்னிக்கவும்