நட்பின் அழகியல்

மணியின் கதை

சியமந்தகமணியின் கதையை கூறுகிறது இந்திரநீலம். இளைய யாதவன் சத்யபாமாவையும் ஜாம்பவதியையும் மணப்பதற்கு காரணமாக அமையும் மணி சத்ராஜித்திடமிருந்து சததன்வாவால் பறித்துச் செல்லப்படுகிறது. அவனிடமிருந்து அதை மீட்கச் செல்லும் அக்ரூரரும் கிருதவர்மனும் அதை கைக்கொள்ள நினைக்கின்றனர். அக்ரூரர் தான் செய்தது தவறென்றுணர்கிறார். கிருதவர்மனை திருஷ்டத்யும்னன் பிடித்து வந்து கிருஷ்ணனிடம் ஒப்படைக்கிறான். இப்போது சியமந்தகமணி துவாரகையில். நீலத்திற்காக நீலனின் அரசியரிடையே போர் மூள்கிறது. சாத்யகியையும் நூலிழையில் திருஷ்டத்யும்னனையும் பலியாகக் கொள்ளவிருக்கையில் மணிவண்ணன் சொல்கேட்டு சுபத்திரையால் வீசி எறியப்பட்டு ஆழியின் அடியில் உறங்கச் செல்கிறது.

முதலிலேயே திருஷ்டத்யும்னனுக்கு மதுக்குடுவை வேட்கையின் மணிவடிவமான இந்திரநீலக் கல்லாக தெரிகிறது. முதல் சந்திப்பிலேயே கிருஷ்ணன் திருஷ்டத்யும்னனிடம் ‘சியமந்தகத்தின் ஆடலை நீங்கள் மேலும் காணநேரும்’ என்று சொல்லிவிடுகிறான்.

தன்னை காண்பவர்  அனைவரையும் – ஏன் தன்னைப்பற்றி அறிபவரைக்கூட – அது விழைவென்னும் வலையில் வீழ்த்திவிடுகிறது. இளைய யாதவனையும் காளிந்தியையும் தவிர எல்லோருமே அதை தன்னிடம் வைத்திருக்க விழைகின்றனர்.   அம் மணியின் இப்பண்புக்கு காரணம் அது உருவான விதம்.  பிரம்மயுகத்தில் அக்னி ஒரு பகலுக்கு மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டிருந்துவிட்டு திரும்ப அளிப்பதாக வாக்களித்து சூரியனின் ஒரு செவ்வொளிக்கதிரை பெறுகிறான். ஆனால் தன்னிடம் உள்ள கதிரால் தன்னை மக்கள் வழிபடுவதைக் கண்டு அதை திருப்பியளிக்காமல் மண்ணடியில் மறைந்துகொள்கிறான்.

ஆயிரமாண்டுகள் சென்றபின் மேலே வந்தாகவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது அதை ஒரு மணியாக்கி சியாமாந்தக பிலத்தின் துளைக்குள் போட்டுவிட்டு வெளியேறுகிறான். பல ஆண்டுகளுக்குப் பிறகு சத்வத குலத்துதித்த அந்தகனென்னும் விழியிழந்த வீரசேனன் அதை கண்டடைகிறான். அதனாலேயே பார்வை பெறுகிறான். அவன் பெயராலேயே அறியப்படும் அவனது குலம் வழிவழியாக சியமந்தகமணியை தம் குல இறையாகவே வழிபட்டு வருகிறது. தவறான விழைவால் உருவான மணியின் ஒளி எதிர்வரும் அனைவரிலும் தீய விழைவையே விதைக்கிறது.

‘ஒரு தீயகணத்தில் ஆழத்திலிருந்து இதையன்றி பிறிது எதையும் காணமுடியாத விழி ஒன்றால் மீட்டெடுக்கப்பட்டது இது. அத்தனை ஆழத்திலிருந்து ஒரு பொருள் மண்ணுக்கு வரக்கூடாது. யானையின் மத்தகத்தில் சிற்றுயிர்கள் போல மண்மீது வாழும் மானுடர் ஆழத்தில் உறையும் கன்மதத்தை தாளமாட்டார்கள்’ என்கிறார் சாந்தர்.  காளிந்தி மட்டுமே அதைக் கடந்து மகாயோகியாக நிற்கிறாள்.  அதனாலேயே யாதவனின் அரசியரில் முதன்மையானவளாகிறாள்.

மனம்கவரும் விறலி

சுஃப்ரை எனும் ஆடல்மகள் மீது ஆசைகொள்கிறான் திருஷ்டத்யும்னன். தன் ஏவலன் மூலமாக அவளை தன் மஞ்சத்திற்கு வரவழைக்கிறான்.  தன்னையறியாமல் அவளிடம் தன் அகத்தை வெளிப்படுத்துகிறான். அவளிடம் தான் நெடுநாட்கள் உடல்நலமின்றி இருந்ததை சொல்கிறான். தனக்கு அவள் மேல் ஏற்பட்டுவிட்ட காதலை அவள் உணர்ந்துவிட்டாள் என்று அறிந்து சீண்டப்படுகிறான்.  சினத்துடன் அவளை அவன் வெட்டும்போது  நூலிழையில் தவறுகிறது. சலனமின்றி கிடப்பவளைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான்.  அவள் கண்களில் இருப்பது தன் மேலான காதல் என்பதை உணர்ந்து அதை மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொள்ள விழைகிறான்.

அவர்களிடையே மலரும் காதல் எத்தகையது என்பது சுஃப்ரை நடிக்கும் நாடகத்தின் மூலமே சொல்லப்பட்டுவிடுகிறது. விஸ்வாமித்திரர் நாடகத்தில் இந்திரன் சொல்கிறான்: ‘பெண்ணில் ஆணை கவர்வது அவள்கொள்ளும் காமமே.  அவள் வயிற்றிலுறங்கும் வருங்காலம் விழிகளில் இதழ்களில் முலைகளில் உந்தியில் அல்குலில் திகழ்கையில் அவள் சுடராகிறாள்.  ஆண்கள் விட்டில்களாகிறார்கள்.’  விலகு! இல்லையேல் அழிவாய் என்ற விஸ்வாமித்திரரிடம் ‘அழிந்தால் என்ன? நான் உங்களுள் எஞ்சுவேன் அல்லவா?’ என்கிறாள் மேனகை. அந்த மேனகை சுஃப்ரையாகி திருஷ்டத்யும்னனின் மஞ்சத்திற்கு வரும்போது அதையே உடலால் சொல்கிறாள்.  அவன் தன்னை வெட்ட வரும்போது சிறிதும் அசையாமல் கிடக்கிறாள்.  அவனுள் எஞ்சுகிறாள்!

துவாரகையில் இருக்கும்போது சுஃப்ரையின் நினைவு அவனை அலைக்கழிக்கத் தொடங்குகிறது. ராதாமாதவத்தை பார்த்துவிட்டு சாத்யகியிடம் சுஃப்ரையைப் பற்றி கூறும் திருஷ்டத்யும்னன் பர்சானபுரியின் ராதையின் கண்கள் அவளுடையதைப்போல் இருந்திருக்கும் என்கிறான். ‘மண்ணில் எவரும் பேறெனக்கொள்ளும் பெருங்காதலைப் பெற்றவன் நீ.  அந்தப்பூமரத்தடியில் அமர்வதன்றி வேறென்ன வேலை உனக்கு? என்கிறான் ஒரு சூதன்.  யாதவனின் ஆடல்கள் அனைத்துமே அவனை காதல் வழி ஆற்றுப்படுத்தவே சொல்லப்படுகின்றன. அவனே சொல்கிறான் – “யாதவர் எனக்காகவே யோகம் என்றால் என்ன என்று சொன்னார்.  சுஃப்ரை என் வாள்வீச்சை எதிர்கொண்டது யோகத்தால்தான்.”

எண்மர் மணம்

சத்யபாமாவில் தொடங்கி காளிந்தி முடிய எண்மரை கிருஷ்ணன் மணந்த கதைகளை சொல்வதே காவியத்தின் நோக்கம்.  பாமையின் கதை மிக விரிவாக சொல்லப்படுகிறது.  அடுத்தபடியாக ருக்மிணியை கைபற்றியது.  எட்டு கதைகளையும் கோப்பதற்கான சரடாக அமைகிறது திருஷ்டத்யும்னன்-சாத்யகி இடையேயான நட்பு.

வளரும் நட்பு

இந்திரப்பிரஸ்தம் அமைப்பதற்கான செல்வத்தைப்பெற துவாரகைக்கு வருகிறான். தன்னை வரவேற்க வரும் சாத்யகியை இன்னதென்றறியா வெறுப்புடன் எதிர்கொள்ளும் திருஷ்டத்யும்னன் அவனிடம் பெருநட்பு கொண்டு மீள்கிறான்.  முதலில் காணும்போது அவனுடன் பேசக்கூட செய்யாமல் கடந்துசென்றுவிடவேண்டும் என நினைக்கிறான்.  ஆனால் அவன் பேசத்துவங்கிய மறுகணமே இருவரும் ஒன்றிவிடுகின்றனர். ஒரு இளைஞனாக அவன் உணரவேண்டும் என்று கிருஷ்ணன் விரும்புவதை சாத்யகி சொன்னதுமே திருஷ்டத்யும்னன் தன் உடல் சோர்வை மறந்து புதிதாய் பிறக்கிறான்.  களியாட்டம் அங்கே தொடங்குகிறது.  அவர்களிடையேயான நட்பும்.

அவன் துவாரகையிலிருந்து திரும்பும்போது அவன் பெறும் செல்வங்கள் இவை – சாத்யகியின் நட்பு, மன்னனானாலும் காதலே பெரிதெனும் பாடம், நீலனின் மனதில் சிறப்பிடம். கலத்தில் ஏற்றப்படும் பெரும்செல்வம் அவனுக்கு ஒரு பொருட்டாகவேயில்லை. நட்பாலும் காதலாலும் மனம் நிரம்பி வழிய துவாரகையிலிருந்து மீள்கிறான். திரௌபதிக்கென அளிக்கும் பெருஞ்செல்வத்தை விட அவள் சகோதரனுக்கு சாத்யகி எனும் களித்தோழனை கண்ணன் அளிப்பதே முதன்மை பெறுகிறது.

இவற்றோடு அவனுக்கு கிடைப்பது கிருதவர்மனுடனான பெரும் பகையும். அதையும் அவன் விரும்பி ஏற்கிறான்.  மாபெரும் எதிரியைப் பெறுபவனே மாவீரனாகிறான் என்று அதற்கு நியாயம் கற்பிக்கிறான். ‘என்னை பழிதீர்க்கவென்றே கிருதவர்மன் வாழ்வான்.  அப்பகையே என் வாழ்வை பொருள்கொள்ளச் செய்வது’ என்கிறான்.

சுஃப்ரையிடம் தான் கொண்ட காதல் குறித்து சாத்யகியுடன் பகிர்ந்துகொள்கிறான்.  சல்யரிடமிருந்து வரும் மணத்தூதிற்கு பதிலளிக்கும் நிர்பந்தத்தில் இருக்கும்போது ஒருமாதம் ஒத்திப்போடுவதற்கென ஒரு சொல் வேண்டுமென்று சாத்யகியிடம் கோருகிறான்.

ஜாம்பவதியிடம் அளிக்காமல் சியமந்தகத்தை தானே வைத்துக்கொள்ள எண்ணி தப்பிச்செல்லும் சாத்யகியை தேடிச்செல்கிறான் திருஷ்டத்யும்னன்.  தன் பிழையை ஒப்புக்கொண்டு மணியை ஒப்படைத்துவிட்டு தன்னை மாய்த்துக்கொள்ள முயலும் சாத்யகியை அணைத்து ’ஒவ்வொருவருக்கும் அதுவன்றி ஒரு கணமும் வாழமுடியாது என்று சில உறவுகள் இருக்கும். இப்புவியில் இன்றுவரை நான் அறிந்ததில் உங்கள் உறவொன்றே அத்தகையது. நீர் மாய்க்கும் உயிர் உம்முடையது மட்டுமல்ல. நம்மிடையே உள்ளது நட்புக்கும் அப்பால் ஒரு சொல் இருக்குமென்றால் அது.  இப்புவியில் நான் இருக்கும் காலம் வரை இருங்கள். என்றோ ஒரு நாள் இன்று நான் உங்கள் முன் நின்று விடும் இந்த விழிநீருக்கு ஈடு செய்யுங்கள். பிறிதொரு களம் வரலாம். அங்கு நான் பெரும் பிழைசெய்து களம்படக்கூடும். அக்கணம் எண்ணி என் நெஞ்சமர ஒரு முகம் வேண்டும். நெஞ்சறிந்த என் இளமை முதல் என்னை அச்சுறுத்தும் கொடும்கனவுகளில் மெய்த்துணையென இன்று உங்கள் கை உள்ளது. அதை இழக்க நான் விழையவில்லை’ என்கிறான்.

“கீழ்மை நிறைந்த ஒரு பொது மந்தணம் நட்பு என்றென்றும் உறுதியாக இருக்க இன்றியமையாதது அல்லவா?” என்றும் கேட்கிறான் திருஷ்டத்யுமனன்.

தனக்கு சாத்யகி எத்துணை அணுக்கனாகிவிட்டான் என்பதை தான் யாதவரிடம் சொல்லாமல் விட்டுவிட்டோமே என ஏங்குகிறான் திருஷ்டத்யும்னன்.  சாத்யகி ’ஆனால் அவர் அறிவார். நீங்கள் விடைபெறுவதைப்பற்றி சொன்னபோது புலரிக்குமுன்னரே விடையளிக்கச் செல்வாய் அல்லவா என்றார்’ என்கிறான்.  அதைக்கேட்டு திருஷ்டத்யும்னன் உடல் சிலிர்த்து  ’நாம் உணர்வதைச் சொல்ல அதைவிட சிறந்த சொல் எது?  கிருஷ்ணார்ஜுனர்களைப் போன்றவர் நாம்’ என்கிறான்.  தொடக்கத்தில் திரௌபதி அவனை துவாரகைக்குச் செல்லும்படி கூறும்போது இளையவரும் (அர்ஜுனனும்) அங்குதான் இருக்கிறார் என்று சொன்னவுடன் ‘அவர்கள் இருவரும் இணைபிரியமுடியாதவர்கள்’ என்கிறான்.

அவனை வழியனுப்ப வரும் அக்ரூரர் ’நீங்கள் முடிசூடும்போது வலப்பக்கம் துவாரகையின் படைத்தலைவன் வாளுடன் நின்றிருப்பான் என்றார் (இளைய யாதவர்)’ என்கிறார்.  சாத்யகியின் நட்புக்காக அவன் உயிர்கொடுக்கத் துணிந்ததனாலேயே அவன் யாதவரின் உளம்புகுந்துவிட்டதாக கூறுகிறார். “மெய்நட்பை அறிந்தவன் தெய்வங்களுக்கு மிக உகந்தவன் என்றார்” என்கிறார்.  கலங்கிநிற்கிறான் திருஷ்டத்யும்னன்.

முதல் முறையாக கிருஷ்ணன் தன்னைப்பற்றி பேசுவது அர்ஜுனனுடன் மையம் தேடிச் சென்ற கதையை சொல்லத்தான்.  நண்பனுக்கு தான் காட்டித்தந்த மெய்மையை அவனே விளக்குவது அவர்களிடையேயான நட்பின் பெருமையால்.

அதே போல் காளிந்தியின் கதையை கிருஷ்ணனே சொல்வதும்.  கண்ணன் மீது மாறாத காதல் இருந்தாலும் மற்ற இளவரசியரெல்லாம் மனைவிகளாக, அரசியராக மாறியபின்னும் காளிந்தி மட்டும் தோழியாகவே எஞ்சுகிறாள். .  கண்ணனுக்கு அவனது ஆடலுக்கு எழுவரும் வேண்டும்.  ஆனால் அவனுக்கே என காளிந்தி போதும்.  கண்ணனுக்கான காத்திருப்புகளில் மிகக் குறைவாக சொல்லப்படுவது காளிந்தியுடையதே. ஆனால் அவளே முதன்மையானவளாய் திகழ்கிறாள்.

சியமந்தகத்தின் பயணத்தை சொல்லும் இந்திரநீலம் கிருஷ்ணனின் மணவினைகளை சொல்லிக்கொண்டிருக்கும்போதே திருஷ்டத்யும்னன்-சாத்யகி இடையே மலர்ந்த நட்பை வலுப்படுத்திக் கொண்டே செல்கிறது. அத்தனை கதைகளும் முடிவடையும்போது அவையெல்லாம் பின் நகர்ந்து இருவரிடையேயான நட்புறவே தெளிந்து முன் வருகிறது.   நட்பின் காவியமாகவே இந்திரநீலம் ஒளிர்கிறது.

தொடரும் பயணம்

வெண்முரசில் இதுவரை வந்தவற்றில் முதற்கனல், வண்ணக்கடல், வெண்முகில் நகரம், காண்டீபம் ஆகியவை பயணத்தின் அடிப்படையிலேயே பிறந்தவை.  அன்னையின் கட்டளையை ஏற்று மிகப்பெரும் பணிக்கென அஸ்தினபுரி சென்று மீளும் ஆஸ்திகனின் பயணம் வழியே பாரதத்திற்கான விதை விழுந்த கதையைச் சொல்லி அமைந்தது முதற்கனல்.  பாரதக்கதையை அறிய விழைந்த இளநாகனெனும் தமிழ்ப்பாணனுடன் இந்தியப் பெருநிலம் முழுவதும் சென்று வந்தது வண்ணக்கடல்.  மண்ணிற்காகவும் பெண்ணிற்காகவும் பெரும்பயணங்களை மேற்கொண்டு அரசவாழ்வு குறித்து தெளிவு பெற்ற பூரிசிரவஸின் பயணத்தை சொன்னது வெண்முகில் நகரம்.  நீலம் கூட காதலைத் தேடி தினம்தினம் ஆயர்பாடிக்குச் சென்று மீண்ட நப்பின்னையின் பயணம்தான்.  காண்டீபம் வில்லவனின் காதல் பயணமாய் தொடங்கி ஆன்மீகப் பயணமாய் முடிந்தது. இந்திரநீலம் திருஷ்டத்யும்னன் மேற்கொண்ட துவாரகைப் பயணத்தின் கதையாய் உருக்கொண்டுள்ளது.

தொடக்கம்-முடிவு – முழுமையும் இணைவும்

தனிமை என்று தொடங்குகிறது இந்திரநீலம். தனியனாய் தத்தளிப்பு நிறைந்தவனாய் துவாரகை செல்லும் திருஷ்டத்யும்னன் திரும்பும்போது இணையென சாத்யகியையும் அழியாத் துணையாக இளைய யாதவரையும் பட்டத்தரசியாய் அமரப்போகும் சுஃப்ரையையும் தன்னுடன் கொண்டு செல்கிறான்.

கடலில் எழும் சூரியக்கதிர் தன் பிறப்பிடம் தேடி அமைகிறது.

‘திரும்பி வருகையில் அந்நகரம் உங்கள் விழிகளில் இருக்கட்டும். அந்த விழிகளால் இந்திரப்பிரஸ்தத்தை பாருங்கள்’ என்கிறாள் திரௌபதி. இதுவே முடிவில் நிகழ்கிறது.  துவாரகையிலிருந்து திரும்பும் திருஷ்டத்யும்னனுக்கு அந்நகரின் பெருவாயிலை அணுகிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

இந்திரப்பிரஸ்தம் அமைப்பதில் உதவுவதற்காகவா? இல்லை… உற்ற தோழன் அங்கிருப்பதனால் தன்னையே அங்கு விட்டுச்செல்கிறான்.

– ஸ்ரீனிவாசன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: