வெண்முரசின் ஓவியங்கள் பற்றிய கலந்துரையாடல் – சௌந்தர்

ஒவ்வொரு வெண்முரசு கலந்துரையாடலும் அதன் முந்தைய காலங்களைவிட சிறப்பாக அமைவது சந்தோஷமான ஒன்று. அப்படி ஒரு  நிகழ்வுதான் நேற்றும். சண்முகம் என்னிடம் “ஜி எனக்கு கூட்டத்தில் பேச சற்று தயக்கமாக உள்ளது. அதனால் ஓரமாக அமர்ந்து கவனித்துக்கொள்கிறேன்” என்று  சொல்லித்தான் வர சம்மதித்தார். ஆனால் நம் நண்பர்களின் உற்சாகத்தை பார்த்துவிட்டு சபைநடுவே அமர்ந்து 3 மணி நேரமும் அவரே நேற்றைய கலந்துரையாடலை முன்னெடுத்துச் சென்றார்.

9

நேற்று  ஆஷ்ரம லேப்டாப்பில் படங்களை தரவிறக்கம் செய்து சுரேஷ்பாபுவின் ப்ரொஜெக்டரில் படங்களை தொகுத்து வழங்கி மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 25 நண்பர்கள் வந்திருந்து  அனைவரும் ஒவ்வொரு ஓவியம் பற்றியும் தங்கள் பார்வையை பகிர்ந்துகொண்டனர். எப்போதும் போல் ஜாஜா, அருணாசலம், ரகு, கவர்னர் சீனு சார், ராதிகா, கவிதா, சுதா மாமி, என்று ”பழையவர்கள்” பேசத்தொடங்க  தங்கம், மாரி, ராஜேஷ், விமல் போன்ற புதியவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு ஷண்முகவேலிடம் ஓவியம் சார்ந்த கேள்விகளை முன்வைத்தனர்.

கிட்டத்தட்ட 3 மணி நேர உடையாடலில், ஷண்முகவேல் மிக நிதானமாகவும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் பதிலளிப்பதில்  சந்தோசமாக உணர்ந்ததாக சொன்னார். ஒவ்வொரு ஓவியமாக திரையில் ஓடிக்கொண்டிருக்க, அது வரையப்பட்ட முறை, நுணுக்கமாக ஒரு ஓரத்தில் காட்டப்படும் சிறு குறிப்பின் மூலம் அந்தக் காட்சி முழுவதும் எப்படி துலங்குகிறது, போன்ற விவரங்களை சொன்னார்.  உதாரணமாக, இசைச்சூதன் பாண்டியனிடம் பரிசு பெரும் காட்சியில், அந்த ஆசனத்தின் மேல் முகட்டில் இருக்கும் ஒரு மீன் இலச்சினை அதே வேளையில் பாண்டியனின் முகமும் மறைந்து இருப்பது.

4

கர்ணனுக்கு துரியன் பட்டாபிஷேகம் செய்துவைக்கும்போது அவன் மேல் கொட்டப்படும் கலச நீர் பட்டு அவன் குண்டலங்கள், கவசம் துலங்குதல்,  கிந்தூரம் முறிக்கப்படும்போது அந்த சபையில் கிருஷ்ணனும் அமர்ந்திருப்பதை, மயிற்பீலியின் மூலம் உணர்த்துவது – இப்படி பல்வேறு ஓவியங்கள்.

பின்னர், மரபிலிருந்து விலகாமலும் அதே வேளையில் புதிதாகவும் செய்யப்பட்ட முயற்சிகள் பற்றிய பேச்சு வந்தபோது,  எனக்குத் தோன்றிய ஓவியமான, விசித்ரவீர்யனின் உடலில் மூலாதாரம் முதல் சஹஸ்ராரம் வரையிலான  சக்கரங்கள், மலர்களாக வரையப்பட்ட ஓவியம் பற்றி பேசினோம். அதிலும்  அனாகதம் 12 இதழ்களால் ஆன ஒரு மலர் அல்லது சக்கரம், அது வாடிய நிலையில் இருக்கும் மலராக வைத்த ஓவியம் முக்கியமான ஒன்று.

முகங்கள் இல்லாமல் வரையப்பட்ட அத்தனை ஓவியங்களுக்கு மத்தியிலும் ஒருசில ஓவியங்கள் முகங்களோடு அற்புதமாக வந்திருப்பது பற்றி பேசும்போது அத்தகைய ஓவியங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.  பீஷ்மர் குறுவாளில் தன் முகத்தை பார்ப்பது முதல், 2 நாள் முந்தைய அத்தியாயத்தில் வந்த ”அரங்கு சொல்லி” வரைபேசினோம்.

8

நிறைவாகவும், சந்தோஷமாகவும் இருந்த இந்த தருணத்தை அப்படியே  தன் காமிராவில் படங்களை எடுத்து தள்ளினார் நம் தங்கமான வேல். அருணா சொல்வது போல் இனி ஒவ்வொரு படமாக பார்த்து மீண்டும் ஒருமுறை யார் என்ன பேசினார் என்பதை மீட்டெடுக்க வேண்டும்.

மேலும் படங்கள்

Advertisements