சிறியன சிந்தியாதான் – மகராஜன் அருணாசலம்

வெண்முரசு போன்ற பெருநாவல்களில் வரும் கதாபாத்திரங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று வளர்ந்து, மாறிக் கொண்டே, கதை நெடுக வரும் கதாபாத்திரங்கள், மற்றொன்று கதையின் ஒரு பகுதியில் மட்டுமே வரும், நிலையான கதாபாத்திரங்கள். இரண்டாவது வகைக்கு உதாரணமாக சிறு பாத்திரங்களான செவிலித்தாய், அணுக்கர்கள் முதல் பீஷ்மர், விதுரர் போன்றவற்றை குறிப்பிடலாம். முதல் வகைக்கு உதாரணமாக பெரும் கதைமாந்தர்களான துரியன், தருமன், திருதா போன்றவர்களை குறிப்பிடலாம். ஆனால் இக்கதாபாத்திரங்களின் வளர்ச்சி, மாற்றம் போன்றவை அவற்றின் அடிப்படை இயல்பில் ஏற்படும் சிறிய மாறுபாடுகள் மட்டுமே. அவையும் அந்தந்த கதாபாத்திரங்களின் அடிப்படை இயல்புக்கு இயைந்ததாக மட்டுமே இருக்கும். அதாவது அக்கதாபாத்திரங்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்படும்போதே அவற்றின் பின்னாளைய வளர்சிதை மாற்றங்களுக்கான வேர்களும் நமக்கு தெரியத் தரப்படும். பெரும்பாலான சமயங்களில் நாம் அவற்றை தவறவிட்டிருக்கலாம் அல்லது அந்த நேரத்தின் செயல்களை வைத்து பொருள் கொண்டிருக்கலாம். மொத்தத்தில் ஒரு கதாபாத்திரத்தின் இயல்புக்கு ஒவ்வாத ஒரு மாற்றம் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்படாது. ஒரு நேர்மையான கதாபாத்திரம் சட்டென்று ஊழலில் திளைக்காது. இந்தத் தன்மையை வெண்முரசு முழுவதிலும் நாம் நன்றாகக் காணலாம்.

இன்று அப்படி ஒரு வளர்ந்து மாறும் ஒரு முக்கியமான, பாரத நாயகர்களில் ஒருவரான துரியோதனனைப் பற்றி பேசப் போகிறோம். நான் படித்த, பார்த்த மகாபாரதங்களில் எல்லாம் துரியோதனன் ஒரு வில்லன். முழுக்க முழுக்க எதிர்மறைக் குணங்கள் மட்டுமே நிறைந்த ஒருவன். வெண்முரசின் மொழியில் சொன்னால் இருளின் தெய்வங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன். ஆனால் வெண்முரசு காட்டும் துரியோதனன் முற்றிலும் வேறானவன். அவன் எதிர்மறை நாயகனே இல்லை. நல்லவன், அன்பானவன், பெருந்தன்மையானவன், சற்றே அதீதமான ஆணவம்(ego) கொண்டவன், பேரரசன். அவன் பிறக்கையில் அவனைப் பற்றி எதிர்மறை எண்ணங்களே மிகுந்துள்ளன. ஆனால் அவனின் ‘கல்யாண குணங்கள்’ அவனை ஒரு அரசனாக மக்கள் மத்தியில் சென்று சேர்த்துள்ளன. அவனுடைய இந்த மாற்றம் வெண்முரசில் எவ்வாறு நிகழ்கிறது? இந்த மாற்றம் அவனுடைய இயல்புக்கு உகந்ததா என்பதே இன்றைய பேசுபொருள்.

யுக புருஷனின் வரவு:

வெண்முரசு துரியனின் பிறப்பை ஒரு வகை புராணத்தன்மையுடன் விவரிக்கிறது. வெண்முரசில் புராணத் தன்மையுடன் நிகழ்வுகளை உரைத்தல் என்பது ஒரு முக்கியமான உத்தி. அதாவது நடந்த நிகழ்வை அதோடு தொடர்புடைய ஒரு மாயத்தோடு விவரிப்பது. மாய எதார்த்தம் என்பதை விட புராணமாக்கல் என்பதே இந்த உத்திக்கு சரியாகப் பொருந்தி வரும். ஏனென்றால் புராணமாக்கல் என்பது நமது இந்திய வழி. வெண்முரசு புராணமாக்கலை இரு விதமாகப் பயன்படுத்துகிறது. ஒன்று நிகழ்ந்தவற்றை ஒரு வித புராணத் தன்மையுடன் கூறுவது என்பது அந்நிகழ்வு எவ்வாறு சமூகத்தின் மனதில் பதிந்து விட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க. மற்றொன்று ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை, நிகழ்வை ஒரு கவித்துவ உச்சத்திற்குக் கொண்டு சென்று அதன் வீரியத்தை இன்னும் பல மடங்காகப் பெருக்கி நமக்குத் தெரிவிக்க. துரியனின் பிறப்பின் புராணத் தன்மை முதல் வகைக்கு எடுத்துக் காட்டு. துரோணர் குசையின் மடியில் ஆறுதல் தேடும் நிகழ்வு, பீமனின் வாசுகி விஷம் அருந்துதல் போன்றவை இரண்டாம் வகைக்கு உதாரணங்கள்.

புராண கங்கையின் உள்ளே இருந்த, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பலியும், பூசனையும் கொள்ளும் கலியின் திறந்த கண்களைக் கண்டு ஊளையிட்டுக் கொண்டே ஊருக்குள் புகும் நூற்றியொரு நரிகளின் ஊடாக துரியனின் கரு நிகழ்வு நமக்கு அறியத்தரப்படுகிறது. அந்த நரிகளின் காலடித் தடத்தைத் தொடர்ந்து சென்ற ஒரு கோட்டைக்காவலன் சகுனியின் கனவை நேரில் கண்டு மரணமடைகிறான். நள்ளிரவில் சத்யவதியின் பட்டத்து யானையான உபாலன் அரண்மனை முற்றத்தில் வந்து சின்னம் விளித்து உயிரை விடுகிறது. காந்தாரியும் மலைப்பாம்பின் உடலில் புகுந்த யானையின் கனவின் ஊடாக துரியன் அவளுள் நுழைந்ததை உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறாள். அவள் கனவில் யானைகளும், பெரிய பெரிய காகங்களும் – யானைகளைத் தூக்கிச் செல்லும் காகங்கள் – வருவதாகக் கூறுகிறாள். சகுனி கூட தான் முதல் முறையாக ஒருவனிடம் பகடையில் தோற்றதாகக் கனவு கண்டதாகக் கூறுகிறான். எதிரிலிருக்கும் இருளில் இருந்து வந்த ஒரு கை உருட்டும் பகடையில் அவன் தோற்றதாக அந்த கனவு சொல்லப்படுகிறது. அவன் கருவில் வளர வளர நகரில் காகங்கள் வரத் துவங்குகின்றன. அஸ்தினாபுரம் அதுவரை காணாத ஒரு நீண்ட கோடையைச் சந்திக்கிறது. புராண கங்கையின் இருபது கிணறுகளைத் தவிர்த்து வேறு எங்கும் நீர் கூட இல்லை. ஒட்டுமொத்தத்தில் நிகழச் சாத்தியமான அனைத்து தீய குறிகளும் அமைகின்றன.

பொதுவாகவே துரியன் கலியின் அவதாரமாகப் பார்க்கப்படுகிறான். கலியின் அவதாரம் என்பதாலேயே அதை ஒரு எதிர்மறை அம்சமாக பார்க்கத் தேவையில்லை. ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் துவங்க வேண்டிய வேளையில் அதை நிகழ்த்துவதற்காக வரும் யுக புருஷன் என்ற வகையில் அவனைப் பார்க்க வேண்டும். இயந்திரங்களின் யுகம் முடிந்து கணிணி யுகம் துவங்கியதால் பில் கேட்சும், ஸ்டீவ் ஜாப்சும் கெட்டவர்கள் ஆகி விடுவார்களா என்ன?

வேழத்தின் வருகை:

துரியனின் பிறப்பில் மீண்டும் மீண்டும் வருபவை யானைகள். இதை வேழம் என்ற சொல்லால் வெண்முரசு குறிப்பிடுகிறது. வேழம் என்பது திருதாவையும் குறிப்பது. பெருந்தன்மையின், உள விரிவின் அடையாளம். வெண்முரசு முழுவதிலுமே துரியன் பெருந்தன்மையின் உச்சமாகவே காட்டப்படுகிறான்.

தருமனின் பிறப்பை அறிந்த அம்பிகை, அவனுக்கு முன்பே கரு நிகழ்ந்து பன்னிரண்டு மாதங்கள் கழிந்தும் வெளிவராத துரியனை, வலுக்கட்டாயமாகத் தலை திருப்பியாவது பிறக்க வைக்கவேண்டும் என்பதற்காக அனுபவம் மிக்க, முதிய மருத்துவரான மச்ச்சரை வரவழைக்கிறாள். அனைத்து மருத்துவச்சியரும் இளவரசர் நலமே, ஆனால் வெளிவர அவர் இன்னும் விழையவில்லை என்கிறாள். வெண்முரசு இந்த பிறத்தல் நிகழ்வை ஒரு கவித்துவமான உவமையால் பின்வருமாறு சொல்கிறது. “அரசி, கருவறையில் வளரும் உயிர் விதையிலிருந்து செடிமுளைப்பதுபோல வானோக்கி எழுகிறது. பத்துமாதம் அதற்கு விண் மட்டுமே உள்ளது, மண் இல்லை. கருமுதிர்ந்து அதற்குள் சித்தம் அமைந்ததுமே அது நான் என்று உணர்கிறது. நான் மண்ணில்வாழவேண்டியவன், மண்ணை உண்டு மண்ணால் உண்ணப்படவேண்டியவன் என்று அறிகிறது. அக்கணமே அதை மண்ணும் அறிந்துகொள்கிறது. கண்ணுக்குத்தெரியாத கைகளால் நிலமங்கை அதை இழுக்கிறாள். அது கீழ்நோக்கித் திரும்பி மண்ணை எதிர்கொள்கிறது. அதில் மானுடர் செய்வதேதும் இல்லை. மண்மகளும் உயிர்களும் கொள்ளும் விளையாட்டு அது”

காந்தாரியின் நாடியைப் பார்க்கும் மச்சர், “கஜராஜவிராஜித மந்தகதி என்று சொல்லலாம். யானைக்குரிய வல்லமையும் சீர்மையும் கொண்ட மென்னடை. கருவுற்றிருக்கும் பெண்ணில் இப்படியொரு நாடித்துடிப்பைக் கண்டதில்லை. நடைக்குதிரை, நொண்டிக்குதிரை, அஞ்சியகுதிரை என மூன்றே நான் கண்டிருக்கிறேன்… உடலில் குருதி வெளுக்கவுமில்லை” என்கிறார். இது மதங்க கர்ப்பம் தான். குழந்தை இன்னும் ஆறு மாதங்கள் கழித்தே வெளிவரும், அது வரை காத்திருக்க வேண்டியது தான் என்கிறார். “ஹேஹயகுலத்து கார்த்தவீரியார்ஜுனனும் புலஸ்தியகுலத்து ராவணனும் மதங்ககர்ப்பத்தில் பிறந்தனர் என்கின்றன எங்கள் நூல்கள். ஆயிரம் கைகள் கொண்டவன் கார்த்தவீரியன். பத்துமுகங்கள் கொண்டவன் ராவணன். இந்த மைந்தனும் அவ்வாறே ஆகலாம்.” என்றும் சொல்கிறார். தம்பியரின் ஆயிரம் கரங்களையும் சேர்த்து கார்த்தவீரியன் ஆயிரம் கரங்களையுடைவனான். தம்பியரின் பத்து தலைகளையும் சேர்த்து ராவணன் தசமுகன் ஆனான். அது போல் இவனும் நூறு தம்பியரின் கரங்களைக் கொண்டு சதபாகு ஆவான் என்றும் சொல்கிறார்.

யானை என்பது நமது மரபில் தாமச குணத்தின் குறியீடாகவும் குறிப்பிடப்படுகிறது. வாரணவதத்தின் யானையைக் கொன்ற சிவன் தாமச குணத்தைக் கொல்பவனாகவே வழிபடப்படுகிறான். உண்மையில் துரியனின் மற்றொரு முக்கியமான குணம் அவனது தாமசம். அவனது வாழ்வின் பெரும்பகுதி அவன் பெரியாதாக எதுவுமே செய்யாமல் இருப்பதாகவே அமைகிறது. அவனது அரசை விதுரரும், பானுவும் கவனித்துக் கொள்கிறார்கள். அவனுடைய அரசு சூழ்தல் உட்பட அந்தரங்க முடிவுகளை எடுக்க கர்ணன் உடனிருக்கிறான். முழுமையான தாமச குணத்தோடு வாழ்கிறான் அவன்.

மகா குரோத ரூபாயன்:

காந்தாரியின் கனவில் வரும் யானைகளைத் தூக்கிப் போகும் காகங்கள் மற்றொரு முக்கியமான குறியீடு. காகங்கள் என்பவற்றை பித்ருக்கள், மூதாதையர் என்று கொண்டால் குருகுல மூதாதையர் அனைவரும் வந்திருந்து வாழ்த்த துரியன் பிறக்கிறான் என்று சொல்லலாம். ஆனால் இங்கே காகங்கள் அமங்கலத்தின் அடையாளமாகவே எடுத்தாளப்பட்டுள்ளன. நம் தாந்த்ரீக மரபில் தசவித்யா அல்லது மகா வித்யாக்கள் என்று காளியின் பத்து அவதாரங்கள் உள்ளன. அவற்றில் ஒரு தெய்வம் ‘தூமவதி’. இந்த தூமவதியின் வாகனம் காகம். தூமவதி விதவையாகவே குறிப்பிடப்படுகிறாள். ஒருமுறை பெரும்பசியால் சிவனையே உண்டவள் இவள் என்பதும், தட்சனின் யாகத்தில் எரிந்த சதியின் எஞ்சிய புகை – தூமம் – இவள் என்பதும் இவளைப் பற்றிய தொன்மங்கள். கரிய நிறமுடைய, இருள் தெய்வங்களில் ஒன்றான இவள் குரோதத்தின் வடிவம். அவள் சிவனையள்ளி உண்ட நிகழ்வு அவளின் முழு குரோதத்திற்கு சான்று.

“சைவத்தின் வலநெறியினர் பெருமானின் ஒளிவடிவை உருவகித்துக்கொள்கிறார்கள். இடநெறியினர் இருளே முடிவற்றதும், அழிவற்றதும் என்று எண்ணுகிறார்கள். மானுட அகத்தில் அவ்விருளே காமகுரோதமோகம் என நிறைந்திருக்கிறது. ஒளியை மானுடன் உருவாக்கி நிலைநிறுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது. இருளோ இயல்பாக அங்குள்ளது. ஒளியை வழிபடுபவன் இருளுடன் போரிடுகிறான். இருளை அறிபவனுக்கு ஒளி துணைநிற்கிறது. இருளாகவும் ஒளியாகவும் இருப்பவனை எவ்வழியில் அறிந்தாலும் விடுதலையே என்கிறார்கள் இடநெறியினர்.

காமம் குரோதம் மோகம் என்னும் இம்மூன்று இருள்களில் காமம் இன்னொரு ஆன்மாவைச் சார்ந்தது. மோகமோ புறவுலகைச் சார்ந்தது. எதையும் சாராமல் தன்னுள் தானென நிறைந்திருப்பது குரோதமேயாகும். எனவே குரோதத்தை அறிபவன் சிவத்தை அறிகிறான். குரோதம் அனைத்தையும் அவியாக்கி எரிந்தெழும் நெருப்பு. எரிதலின் பேரின்பம் அது. எரிதலின் உச்சம் அணைதலே. குரோதம் தன்னைத் தானழித்துக்கொள்கையிலேயே முழுமை கொள்கிறது.”, என்கிறது வெண்முரசு.

துரியன் குரோதத்தின் உச்சம். அவன் வாழ்வை இயக்கும் சக்தியாகப் போவது இந்த குரோதம் தான். இது ஒரு வகை எதிர்மறை உச்சம். உண்மையில் மேற்கூறிய வரிகள் துரியனின் மொத்த வாழ்வையும் வரையறுப்பவை. அவன் குரோதத்தால் நிறைபவன். தூய இருளை அறிபவன். இருளை அறிபவனுக்கு ஒளியின் மைந்தன், கர்ணனும், சூரிய சந்திரர்களும் – பானு மதி – துணை நிற்கிறார்கள். மிகச் சுருக்கமாக வண்ணக்கடலிலேயே ‘இருளை அறிபவனுக்கு ஒளி துணைநிற்கிறது’ என்று வெண்முரசு சொல்லிவிடுகிறது.

சூதர் சொல்:

துரியனின் மண் நிகழ்வு தாமதமாகிக் கொண்டிருக்கையில் அம்பிகை அவனைக் குறித்த மக்களின் அச்சம் அம்பாலிகையால் உருவாக்கி பரப்பட்டது எனக் குற்றம் சாட்டுவாள். அபாலிகையோ, குந்தியோ இத்தகைய சொற்களுக்குப் பின்னால் இருக்கலாம் என்று யூகிக்க வாய்ப்புகள் உள்ளன. உண்மையில் காட்டில் பிறந்த தருமனை தர்மதேவனின் புதல்வன் என்று கூறி நிலைநிறுத்தியது இயல்பான ஒரு விஷயமாக இருக்கச் சாத்தியங்கள் மிக மிகக் குறைவே. பாண்டுவால் அரசிகள் தாய்மை கொள்ளச் சாத்தியம் இல்லை என்பதைத் தெரிந்தே அனைவரும் உள்ளனர். அப்படியிருக்க பாண்டுவின் புதல்வர்கள் நியோக முறையிலேயே பிறந்திருக்க இயலும் என்பதும் அனைவருக்குமே தெரிந்த விஷயம். இத்தனையையும் மீறித் தான் அவர்களைப் பற்றிய சூதர் பாடல்கள் புனையப்படுகின்றன. அவர்களைப் பற்றி நேர்மறையான விஷயங்கள் மட்டுமே பகிரப்படுகின்றன. மாறாக நரிகள் ஊருக்குள் நுழைவது, காகங்கள் ஊருக்குள் வருவது போன்ற இயற்கை நிகழ்வுகளின் எதிர்மறை அம்சங்கள் அனைத்தும் துரியன் மீது ஏற்றப்படுகின்றன. உண்மையில் அஸ்தினபுரி பெருங்கோடையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஊரில் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களும் வற்றிய நிலையில் புராண கங்கையின் 20 கிணறுகள் மட்டுமே நீருடன் இருக்கின்றன. சுற்றிலும் காடுகளும் கருகும் நிலையில் நீரும், உணவும் இருக்கச் சாத்தியமான நகருக்கு நரிகளும், காகங்களும் வருவது இயல்பே. ஏனென்றால் இவை இரண்டும் மிச்சங்களைத் தின்பவை. எனவே எச்சூழ்நிலையிலும் உயிரைத் தக்க வைத்துக்கொள்ளும் திறன் படைத்தவை. அவை ஊருக்குள் வருவது என்பது இயற்கையின் வழி.

சகுனி சொல்வது போல அஸ்தினபுரியினர் தாம் அனுபவிக்கும் அனைத்துத் துயரங்களையும் துரியன் மீது ஏற்றி விடுகின்றனர். சூதர்களும் அவற்றையே பெருக்கிப் பாடுகின்றனர். துரியன் கருவாசல் திறந்து வெளிவருகையில் அஸ்தினபுரிக்கு வந்த அனைத்துக் காகங்களும் ஈற்றரைக்கு வருகின்றன. தென்திசையில் இருந்து புழுதியை வாரித் தூக்கிக்கொண்டு ஒரு பெரும்காற்று அவ்வறைக்குள் சுழன்று வீசுகிறது. அவன் மண் நிகழ்ந்ததும் அனைத்துக் காகங்களும் சொல்லிவைத்தாற்போல் ஊரை விட்டுக் கிளம்பிவிடுகின்றன. மீண்டும் தென்திசை – அஸ்தினபுரியின் மயான திசை. மேலும் தென்திசை நீத்தாரின், பித்ருக்களின் திசையும் கூட. நல்லதாகச் சொல்வதென்றால் துரியன் மண் நிகழ்கையில் அனைத்து மூதாதையரும் வந்திருந்து வாழ்த்தினர் என்று பாடியிருக்கலாம். ஆனால் தெற்கே இருந்த மயானமும், தூமவதியும் தான் மக்களுக்கு நினைவுக்கு வருகின்றனர்.

அஸ்தினபுரியில் இருந்து வெகு தொலைவில் பிறக்கும் தருமனைப் பற்றிய நல்ல விஷயங்கள் தொலைவைத் தாண்டி எட்டுகின்றன. அது நன்மையின் பலம். நல்லவை பரவ தொலைவு ஒரு தடையில்லை. நல்லவை மட்டுமே தூரம் கடக்கும். தீயவை குறுகிய தொலைவுக்கே பரவும் சக்தி கொண்டவை. தூரம் குறைய குறைய அவற்றின் வீச்சும் அதிகரிக்கும். துரியன் விஷயத்தில் இதை நாம் கண்கூடாகக் காணலாம். இறுதி வரையிலும் அவனால் விளைந்த தீயவை அனைத்தும் அவனையண்டிய தீய சக்திகள் அவனருகிலேயே இருந்தமையே காரணம். கணிகர் ஒரு சிறந்த உதாரணம்.

உண்மையில் வேழங்கள் துரியனின் பெருந்தன்மையின் அடையாளம்  என்றால் குரோதத்தின் குறியீடான காகங்களால் அந்த யானைகள் தூக்கிச் செல்லப்படுவது குரோதம் அவன் பெருந்தன்மையைக் கொண்டுசெல்வதையே குறிக்கிறது. (நன்றி: மாரி)

தந்தையாதல்:

முதன்முறையாக திருதா தன் மைந்தனைப் பார்க்கச் செல்கிறார். உள்ளே மைந்தன் இருக்கிறான். அறை வாயிலில் தயங்கி நிற்கிறார் திருதா. வெண்முரசின் வாழ்வியல் கட்டங்களில் சிறப்பான ஒரு இடம் இது. இன்றும் முதன்முதலாக தலைச்சன் பிள்ளையைத் தூக்கப் போகும் ஒரு தந்தைக்கு வரும் அதே தயக்கம். இங்கே கூடுதலாக தான் விழியிழந்தவன் என்னும் கழிவிரக்கம் கொண்ட ஒருவர். எப்பேற்ப்பட்ட தயக்கம் அது?! அப்படி தயங்கும் மகனை செல்லமாக பின்னிருந்து தள்ளி உள்ளே அனுப்புகிறாள் அம்பிகை. இத்தகைய இடங்களே வெண்முரசை மனதிற்கு மிக மிக அணுக்கமாக்குகிறது.

உள்ளே செல்லும் திருதா தன் மைந்தனைத் தடவித் தடவிப் பார்க்கிறார். விரல்களாலே மகனை அறிகிறார். அதற்கு முன்பே மைந்தனைப் பார்த்துச் சென்ற சத்யவதி தன்னைக் கண்டவுடன் திரும்பிப்பார்த்த குழந்தையின் உடல் மொழியில் இருந்த அசாதாரணத்தாலும், மைந்தனின் வாயில் முளைத்த பற்களாலும், ஏற்கனவே சூதர்களால் பாடப்பட்டு மக்கள் மத்தியில் நிலைபெற்று விட்ட எதிர்மறை செய்திகளாலும், நிமித்திகர்கள் குறிப்பிட்ட தீய அறிகுறிகளாலும் சிந்தாகூலமடைந்து தனியறையில் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்கிறாள். மைந்தனைத் துறந்து விடுவதே அஸ்தினபுரிக்கு நல்லது என அவளும் எண்ணுகிறாள். இந்த நிலையில் திருதாவிடம் இதை எப்படித் தெரிவிப்பது எனக் குழம்பியிருக்கும் விதுரர் முதன்முதலாக மைந்தனைப் பார்க்கச் செல்லும் திருதாவுடன், விழியிழந்த இசைச் சூதரான தீர்க்க சியாமரையும் உடனழைத்துச் செல்கிறார். தீர்க்க சியாமருக்கும் சத்யவதிக்கு கிடைத்த அதே அனுபவம் கிடைக்கிறது. அவர் மிகத் தெளிவாகவே குழந்தையைப் பார்க்கிறார். இன்னும் தெளிவாக குழந்தை அவரை நோக்கித் திரும்பியதையும், அதன் வாயிலிருந்த பற்களையும் காண்கிறார். விழியிழந்த அவருக்கு துரியன் கலியின் அவதாரமாகவே காட்சி கொடுக்கிறான். அதில் நினைவிழந்தவர் அவ்வாறே முக்தியடைகிறார்.

மரபை மீறி, விழியிழந்த ஆசிரியர் என்பதற்காகவே அவரின் இல்லம் வரை சென்று மரியாதை செலுத்துகிறார் திருதா. தீர்க்கசியாமரின் மரணமும், அவரின் இல்லம் அமைந்த அஸ்தினபுரியின் சூதர் தெரு வரையிலான பயணமும் திருதாவுக்கு மைந்தன் பிறப்பைச் சுற்றி ஏற்பட்டிருக்கும் கருத்தியல் நிலைகளையும், அஸ்தினபுரியின் எண்ணத்தையும் ஓரளவுக்குப் புரிய வைக்கின்றன. ஒரு ஷத்ரியனாக, அஸ்தினபுரியின் அரசனாக நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்கக் கூடிய முடிவை எடுக்க அவர் மனதளவில் தயாராகிறார். திருதாவை அம்முடிவுக்குத் தள்ள விதுரருக்கு தீர்க்கசியாமரின் சிதையேறும் சுடுகாட்டில் அவர் சந்திக்கும் சார்வாகன் காரணமாகிறான். விதுரரிடம், “மக்கள் அவனை அரசனாக ஏற்கப் போவதில்லை. மக்கள் வெறுக்கும் அரசன் மக்களையும் வெறுக்கிறான். அவர்கள் மேல் வாளை வைக்கிறான்.” என்று எச்சரிக்கிறான்.

தமையனின் மனதை உடைப்பதைப் பற்றிய தயக்கங்களுடன் இருந்த விதுரரும் திடமாக துரியன் காட்டிலே சென்று விடப்பட வேண்டியவனே என்ற முடிவுக்கு வருகிறார். அதையே திருதாவிடம் தெரிவிக்கவும் செய்கிறார். திருதாவும் பெருமூச்சோடு துரியனைக் காட்டில் கொண்டு சென்று விடச் சம்மதிக்கிறார். அந்த நேரத்தில் தெய்வீகக் குறுக்கீடு போல உள்ளே நுழைகிறாள் அம்பிகை. திருதாவிடம் அவர் பிறந்த சமயத்திலும் அவரின் விழியின்மையைக் காரணமாகக் கூறி அவரைக் காட்டில் விடச் சொன்னதையும், ஒரு தாயாக அதைத் தான் தடுத்ததையும் சொல்கிறாள். மிகச் சரியாக திருதாவின் பலவீனமான விழியின்மை பற்றி பேசுகிறாள். மன்னனாக முடிவெடுத்த திருதா அந்நொடியில் அவர் வாழ்வில் என்றென்றைக்குமாய் இருக்கப்போகும் தந்தையாக மாறுகிறார். இதோ அவரின் சொற்கள் – “விதுரா, இந்த நகரும் நாடும் உலகும் ஒன்றுசேர்ந்து வெறுக்கும்படி என் மைந்தன் செய்த பிழை என்ன? ஒருவன் பிறக்கும்போதே வெறுக்கப்படுகிறான் என்றால் அவனைவிட எளியவன் யார்? அவனுக்கு அவனைப்பெற்ற தந்தையின் அன்பும் இல்லையென்றால் அதை தெய்வங்கள் பொறுக்குமா? யார் என்ன சொன்னாலும் சரி நான் என் மைந்தனை கைவிடப்போவதில்லை. ஆம், நாங்கள் பழிகொண்டவர்கள். நாங்கள் வெறுக்கப்பட்டவர்கள். ஆகவே தன்னந்தனிமையில் நிற்பவர்கள். எங்களுக்கு வேறு எவரும் இல்லை. தெய்வங்கள்கூட இல்லை”

ஆன்மாவின் தோழன்:

இந்த இடத்தில் ஒரு சின்ன விலகல் – தலைப்பில் இருந்து. அம்பிகை வந்து திருதாவைச் சந்திக்கும் வேளை, ஒரே ஒரு கணம் விதுரரின் கண்கள் விப்ரரைத் தொட்டுச் செல்கின்றன. ஆம், அவர் தான் அம்பிகையை அங்கே வரவழைத்தவர். விப்ரருக்கு இத்தகைய எந்த உத்தரவும் இல்லை. அம்பிகை கூட அவருக்கு அப்படி எதையும் தெரிவித்திருக்கவும் இல்லை. இருப்பினும் மிகச் சரியாக தன் தலைவன் தன் ஆன்மாவைக் கொன்று எடுக்க வேண்டிய ஒரு முடிவில் இருந்து அவனைக் காக்க ஒரு அணுக்கன் செய்யும் செயலாகவே இதைக் காண வேண்டும். அதனால் தான் பிறிதொரு இடத்தில் விதுரர் ‘விப்ரர் அவரின் ஆன்மாவின் தோழர்’ என்கிறார். தற்போதைய வெய்யோனில் கூட வயதான விப்ரரைப் பற்றிச் சொல்கையில் திருதா தான் விப்ரரைத் தாங்கிச் செல்வதாக வரும். வெண்முரசின் சிறப்புகளில் ஒன்று இத்தகைய சிறு பாத்திரங்கள் வரலாற்றுக்கு அளிக்கும் பங்களிப்பு.

அமுதில் விளைந்த நஞ்சு:

துரியனுக்கு பெயர் கோள் விழா நடந்த இரவு, ஒரு முதுநாகினி காந்தாரியைக் காண வருகிறாள். தங்கள் அரசன் வாசுகி பிறந்த அதே ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த இவனால் தங்கள் இடமான காண்டவ வனம் அழியாமல் காக்கப்படலாம் என்கிறாள். அதற்காக துரியன் காக்கப்பட வேண்டும் என்கிறாள். காந்தாரியிடம் அன்றைய இரவில் பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறை வரும் அமுத வேளையில் அவள் மைந்தனை முதன் முறையாக, முழுமையாக, உடலில் துணியில்லாமல் பார்க்க வேண்டும் என்கிறாள். அவள் பார்வையால் வருடப்பட்ட அவனுடலை எந்த ஆயுதமும் தாக்க இயலாது என்றும் கூறுகிறாள். ஏற்கனவே அவள் முலைப்பாலில் நீராடி வழுக்கும் உடலுடன் இருக்கும் துரியனின் ஆடைகளை அவசர அவசரமாக கழற்றுகிறாள் காந்தாரி. மைந்தனைக் கண் கட்டு அவிழ்த்துப் பார்க்கும் அவள், மீண்டும் கண்ணைக் கட்டிய பிறகே அவனுடலின் இடத் தொடை காற்றால் அடித்து வரப்பட்ட துணியால் மறைந்ததை அறிகிறாள். அவன் இடத்தொடையைப் பாதுகாக்கும் நூறு தம்பியர் அவனுக்கு வேண்டும் என்று அவள் சகோதரிகளுக்கு ஆணையிடுகிறாள் அவள். அவ்வாறாக அவனுடலின் ஒரே பலவீனமான பாகமாக அந்த இடத்தொடை அமைகிறது. அதிலும் ஒரு வருங்காலத்திற்கான குறிப்பை வைக்க வெண்முரசு தவறவில்லை. அந்த இடத் தொடை மறைக்கக் காரணமானது காற்று. இதே காற்றின் மைந்தன் தானே பீமன். அவனால் தானே இவனும் முடிவுறப் போகிறான். நாம் பொதுவாக அறிந்த பாரதத்தில் போரின் போதே துரியன் தாயின் முன் திசையாடையுடன் வருவதும், கிருஷ்ணனின் தூண்டலால் தொடைப் பகுதியை மட்டும் வாழையிலையால் மறைத்துச் சென்றதும் வரும். ஆனால் அது ஒரு வித தொன்மமே. மிக அபாரமாக இவ்வாறு மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. பாரத மறு ஆக்கம் என்ற சவாலில் ஜெ அனாயாசமாக வென்ற இடங்களுள் இதுவும் ஒன்று.

இந்த இடத்திலும் விதி துரியனுக்கு எதிராக சற்று விளையாடுகிறது. மைந்தனின் தொடை மறைக்கப்பட்டதை உணர்ந்த காந்தாரி ஆவேசமாக இனி என் மகனின் பெயர் சுயோதனன் அல்ல துரியோதனன் என்று சொல்கிறாள். யோதனக் (யுத்தத்தில்) கலையில் சிறந்தவன் என்ற பொருள் படும் சுயோதனன் என்ற பெயரை அவனுக்கு இட்டவர் பீஷ்மர். அப்பெயர் அவனைச் சுருக்கி விடுகிறது என்பதாலும், மைந்தன் எவராலும் வெல்லப்படக் கூடாது என்ற அன்னையுள்ளத்தின் ஆசையாலும் அவள் யுத்தத்தில் வெல்வாரற்றவன் – துரி யோதனன் என்று பெயரிடுகிறாள். ஆனால் துரியோதனன் என்பதை தீய போர்க்கருவிகள் கொண்டவன் என்றும் கூட மொழி பெயர்க்கலாம் என்று கூறும் குந்தி, மக்கள் அப்பெயரையே விரும்புவர் என்கிறாள்.

நாகம் என்னும் பொன் பட்டு நூல்:

தன் பெற்றோரைத் தவிர சுற்றி இருக்கும் அனைவராலும் அச்சத்தோடும், இவன் அழியவேண்டும் என்ற எண்ணத்தோடும் பார்க்கப்படும் ஒருவனின் உலகு எவ்வாறு இருக்கும்? பாறைகளால் ஆனதாகத்தானே!! வெண்முரசு துரியனின் உலகு பாறைகளால் ஆனது என்றே சொல்கிறது. ஏனென்றால் பாறைகள் அசைவற்று இருப்பவை அல்ல, மாறாக தன்னைச் சூழ்ந்த காலப் பெருவெளியின் விசையை தன் முழு அக ஆற்றலாலும் எதிர்த்து நிற்கும் சமநிலைப் புள்ளியே அவற்றின் அசைவின்மையாக வெளிப்படுகிறது. துரியன் தன் தந்தையிடம் இருந்து பெற்ற பெருந்தன்மையாலேயே அவர்களை எதிர்த்து நின்றுகொண்டிருக்கிறான். எனவே பாறைகளின் தனிமை அவனிடம் கூடி விட்டிருப்பது இயற்கை தானே. தன்னைப்போலவே இருக்கும் பாறைகளைப் பிளப்பதே துரியனின் இளமைக்கால பொழுதுபோக்காகிறது. கற்களைப் பற்றி எண்ணியபடி, அவை தனக்களிக்கும் சவாலை எண்ணியபடி, தான் வெல்ல வேண்டிய முடிவிலா கல் நிறைகளை எண்ணியபடி, தனக்குள் ஆழ்ந்திருந்த துரியன் ஒரு நொடியில் வெடிக்கிறான். நமக்கே நாம் செய்து முடிக்கவேண்டிய சவால்கள் நம் கண் முன் நிறைந்து நிற்கும் போது வருமே ஒரு ஆத்திரம், அதைப் போன்ற ஒன்று. தன் தம்பியரை கற்களாகக் காண்கிறான். அடிக்கிறான். அவன் கற்களை அடிக்கும் போது கண்களை மூடிக்கொள்கிறான். விழியின்மையே ஆற்றல் என உணருகிறான். எனவே தான் தம்பியரைக் கூட அடிக்க முடிகிறது. முதல் அடி துச்சாதனன் மீது தான். அப்போது அதை வாங்கிக் கொள்பவன், பிற தம்பியரையும் அடிக்கத் துவங்குகையில் மொத்த அடிகளையும் தான் ஒருவனாகவே வாங்கத் துவங்குகிறான்.

தம்பியரை அடித்து ஓய்ந்து அயர்ந்து தூங்கி விடும் துரியன் அதன் பிறகு நடு இரவில் விழிக்கிறான். தன் தேரில் மேற்கு ஏரிக்குச் செல்கிறான். எந்த ஏரியின் வழியாக கலி உள்ளே வந்ததோ அந்த எரி. அங்கே கார்க்கோடகனைச் சந்திக்கிறான். அங்கே அவன் தன் முழு முதல் எதிரியான பீமனைப் பற்றி அறிகிறான். மேலும் கார்க்கோடகன் “நீ அஞ்சுவது உன் பெருந்தன்மையை. உன்னுள் நிறைந்துள்ள பேரன்பை. உன் வலிமையையெல்லாம அழிப்பது அதுவே. குருகுலத்தோன்றலே, சொல். ஒவ்வொரு முறை சினம்கொள்ளும்போதும் ஏன் இடது தொடையை ஓங்கியறைந்து கொள்கிறாய்?” துரியோதனன் “தெரியவில்லை. அது என் பிறவிப்பழக்கம்” என்றான். “ஏனென்றால் உன் தாயின் பேரன்பெல்லாம் திரண்டு நிறைந்திருக்கும் இடம் உன் இடது தொடை. உன் ஆற்றலெல்லாம் ஒழுகிப்போகும் மடையும் அதுவே.” என்று மிகத் தெளிவாகவே அவனை வரையறுத்து விடுகிறான்.

கார்க்கோடகன் வரும் அத்தியாயம் வரை துரியனிடம் பெருந்தன்மை உள்ளது என்பது நமக்கெல்லாம் அறியத் தரப்படவில்லை. ஆனால் அதன் பிறகு அவன் பெருந்தன்மையும், பேரன்பும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. துரியன் கார்க்கோடகனைச் சந்திப்பதில் மேலும் ஒரு நுட்பம் உள்ளது. கார்க்கோடகன் துரியனைச் சந்திக்கும் அந்த இரவின் முன் குந்தியிடம் அவள் முதல் மகன் கர்ணனைப் பற்றி கூறி, அவள் அவனை வேண்டாம் என்று முடிவெடுத்த நிகழ்வு நடந்திருக்கிறது. அவ்வகையில் கர்ணனுக்கும், துரியனுக்குமான உறவின் ஒரு முன்னறிவிப்பாக கார்க்கோடகனின் சந்திப்பைக் காணலாம். இவர்களிடையேயான உறவு தான் பீமனின் கர்ணன் மீதான வெறுப்புக்கும் அடிப்படையாகப் போகிறது. அவ்வகையில் இந்த சந்திப்பு அல்லது கனவு மிக மிக முக்கியமானதாகிறது. வெண்முரசின் வடிவ ஒருமைக்கும் சான்றாகிறது.

விலக்கம் தந்த விழைவு:

கார்க்கோடகன் உடனான சந்திப்பிற்குப் பிறகு துரியன் மேலும் மேலும் தன்னுள் ஆழ்ந்தவனாக ஆகிறான். சில நாட்களில் பாண்டவர் ஐவரும், குந்தியும் அஸ்தினபுரிக்கு வருகின்றனர். அடைக்கலமாக வந்தவர்களிடம் முழு அன்போடு நடந்து கொள்கிறான் துரியன். அவன் பேரன்பும், பெருந்தன்மையும் வெளிப்படையாக வெளிப்படும் முதல் தருணம் என்று இதைச் சொல்லலாம். பாண்டவர்களிடம், குறிப்பாக பீமனிடம் அவன் கொள்ளும் பேரன்பு வாசகர்களாகிய நம்மையே விம்மச் செய்வது. இருவருமே இணைபிரியாதவர்கள் ஆகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கானாடலில் அதுவும் துரியன் உயிரைக் காத்த நிகழ்வால் பிரிகிறார்கள் என்பது முதல் பார்வைக்கு சற்று அந்நியமாகத் தான் தெரியும். ஆயினும் துரியனின் குணாதிசயத்தின் முழுமையான சித்திரத்தை நமக்கு  அளித்த தருணம் அது. அவர்களின் பிரிவுக்கு அந்நிகழ்வு மட்டும் தான் காரணமா? துரியனுக்கும் பீமனுக்குமான உறவின் நிகழ்வுகளில் வரும் மிகச் சிறிய, மிக மிகச் சிறய விரிசல்களை வெண்முரசு தெளிவாகவே நமக்கு அறியத்தருகிறது.

சந்திக்கும் முதல் தருணத்திலேயே திருதாவுடன் தோள் கோர்த்து தன் பலத்தைக் காட்டும் பீமனுக்குத் தன் கதாயுதத்தை அளிக்கிறார் திருதா. இது தான் துரியனிடம் ஏற்பட்ட முதல் விலக்கம். அவனிடம் ததும்பும் பெருந்தன்மையினால் அவன் அதை உணரவும் இல்லை வெளிக்காட்டவும் இல்லை. ஆனால் மிகச்சரியாக அவ்வுணர்வை துச்சாதனன் அவ்விடத்தில் பிரதிபலிக்கிறான். அந்த விலக்கத்தின் வெளிப்பாடாகவே பீமனை உடல் கோர்க்க அழைக்கிறான் துரியன். அக்களிப்போரின் இறுதியில் நிகர் நிலை நின்றாலும் பீமனே இருவரிலும் அதிகமாக சோர்வடைந்தவன். அவ்வகையில் துரியனே அதில் வென்றான் எனலாம். பீமனை அள்ளி அணைக்கும் துரியன் யாருக்காகவாவது களத்தில் உயிர் துறப்பேன் என்றால் அது உனக்காகவே என பீமனுக்கு வாக்களிக்கிறான்.

இரண்டாவது விலக்கம் பீஷ்மரின் முன். நூற்றியாறு பெயரர்களைப் பெற்ற முதுதாதை எவ்வளவு மகிழ்வைப் பெற்றிருக்க வேண்டும்? ஆனால் எதுவும் இல்லாமல், எதோ பிடிக்காத நாடகத்தை வலுக்கட்டாயமாக பார்க்க வைக்கப்பட்ட முதியவராக அவர் அவர்கள் முன் அமர்ந்திருக்கிறார். முதலில் அவரிடம் ஆசி வாங்கிய தருமனை அவரின் உள்ளிருந்த மலைக்கங்கன் வெறுத்தான் என்றே சொல்கிறது வெண்முரசு. அடுத்ததாக துரியனும், பீமனும் ஆசி வாங்க வருகிறார்கள். துரியனையும் சம்பிரதாயமாகவே வாழ்த்தும் பீஷ்மர் முன் பீமன் குனிகையில் அவன் மடியில் இருந்த நனைந்த தாழம்பூவில் இருந்து ஒரு நாகக்குஞ்சு வெளியே வருகிறது. அனைவரும் அஞ்சி, பின் அதைக் கொல்லத் தொடர்கையில் பீஷ்மர் மிக ஆர்வமாக அந்த நாகம் எவ்வாறு வந்தது என பீமனிடம் வினவுகிறார். உண்மையில் அவருள் இருந்த மலைக்கங்கனுக்கு உவப்பான ஒரு பெயரனாக பீமனை அவர் எண்ணிய தருணம் அது. அந்த இடத்தில் துரியனின் அகங்காரம் முதன்முறையாக, வெளிப்படையாக அவன் அறியும் வண்ணமே புண்படுகிறது.

இங்கும் வெண்முரசு ஒரு அபாரமான கதையொருமையை வெளிப்படுத்தத் தவறவில்லை. அந்த நாகத்தை வெளியில் விடுவது பீமன். அந்நாகம் சென்று மறைவதோ அவரின் ஆயுதசாலையின் ஆயுதக் குவியலிடையே. வெறுப்பிற்கான முதல் அச்சாரம் இடுவது பீமனே. துரியனிடம் தோற்ற நிகழ்வால் வந்த வஞ்சம் காரணமாயிருக்கலாம். வஞ்சம் என்பது குழந்தைகளிடையே விளையுமா என்றால் விளையும் என்றே சொல்ல இயலும். அவர்களின் வயதளவே அந்த வஞ்சத்தின் காரணமும் விளைவும் இருக்கும். எப்படியாயினும் துரியனிடம் குரோதத்தைத் தூண்டிய முதல் நிகழ்வாக இது ஆகிவிட்டது. இந்த வஞ்சம் தான் வளர்ந்து தான் புகுந்து கொண்ட ஆயுதங்களாலேயே அழிவைக் கொண்டு வருகிறது. நாகம் என்பது வஞ்சம் மட்டுமல்ல, விழைவின் குறியீடாகவும் நமது மரபில் குறிப்பிடப்படுகிறது. அவ்வகையில் முந்தியிருக்க வேண்டும் என்ற துரியனின் விழைவைத் துரத்தும் ஆயுதங்களால் அவனும் ஆயுதம் எடுக்கத் தூண்டப்பட்டான் என்றும் இந்நிகழ்வை வாசிக்கலாம்.

பெருந்தன்மை என்னும் பலவீனம்:

இவ்வளவு தூரம் தன் ஆணவம் புண்பட்ட பின்னும் துரியன் தன் பெருந்தன்மையினால் அதைத் தாண்டி வருகிறான். எப்போதும் போல் பீமனுடனும், தம்பியருடனும் மகிழ்ந்தே இருக்கிறான். இந்நிலையில் கிருபரின் பாடசாலையில் மாணவர்களுக்கான ஆயுதத் தேர்வின் தினம் வருகிறது. தன்னை விட ஒன்றரை மடங்கு உயரமான நிலை வில்லைத் தூக்கியதோடு மட்டுமல்லாமல் அதை நாணேற்றி அம்பும் எய்கிறான் பார்த்தன். உடனே துரியன் அவனை

தூக்கிக் கொண்டு கொற்றவை ஆலயத்தில் வைத்து அவனுக்கு கண்ணேறு கழிக்கிறான். திருதா அது தான் செய்ய வேண்டியது என்றும் அதை அவன் செய்கிறான் என்றும் பெருமைப்படுகிறார். பார்க்கும் அனைவரிடமும் ஒரு அபாரமான மன எழுச்சியைத் தூண்டிய இந்நிகழ்வு பீஷ்மரிடம் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இதன் பிறகு துரியனும், பீமனும் கதை கோர்க்கிறார்கள். இருவரும் கிட்டத்தட்ட சமநிலையில் போர் புரிகிறார்கள். இந்த களிப்போர் நடக்கையில் பீமனிடம் ஒரு முறையாவது பின்வாங்குமாறு கண்களால் மன்றாடுகிறார் விதுரர். எனினும் அது நடப்பதில்லை. ஏற்கனவே துரியனிடம் மல்யுத்தத்தில் தன்னை இழந்தவன் அவன். எப்படி பின்வாங்குவான்? மாறாக பீமன் துரியனின் வலக்கை கட்டை விரலைச் சிதைத்து விடுகிறான். அந்த வலியைப் பொருட்படுத்தாது கதையை இடக்கைக்கு மாற்றிக் கொண்டு முன்னேறி தாக்கும் துரியனின் வலிமை முன் தடுமாறி கதையை ஊன்றி தன்னைச் சமநிலைப் படுத்திக்கொள்கிறான் பீமன். பீமன் கதையை ஊன்றிய சமயத்தில் மிக எளிதாக துரியன் அவனை வீழ்த்தியிருக்க இயலும். அது முழுக்க முழுக்க யுத்த நியதிக்கு உட்பட்டதே. எனினும் தன்னில் ஊறும் பெருந்தன்மையால் அவன் அதைச் செய்யவில்லை. மாறாக பீமனுக்கு அவன் தவறைப் புரிய வைத்து மீண்டும் கதை கோர்க்கிறான். அவன் உள்ளூறும் இந்த பெருந்தன்மையாவது பீஷ்மரை அசைக்கும் என்றும் ஆசை கொள்கிறான் சிறுவனான துரியன். அதுவும் அவனுக்கு ஏமாற்றமே. அந்த களத்தில் விழுந்த அந்த ஒரு துளி ரத்தம் அவனுள் குரோதத்தைத் தூண்டத் துவங்கி விடுகிறது.

கானடலில் வந்த விரிசல்:

மேற்கூறிய மூன்று சம்பவங்களிலும் புண்பட்ட அவனது ஆணவம் அத்தனை தம்பியர் முன்னிலும், தந்தையால் அனுப்பப்பட்டு தன்னைக் காப்பாற்றிய பீமனின் மீது ஒட்டுமொத்தமாக வெடித்துக் கிளம்புகிறது. அவனது முக்கிய கோபமே பீமனை திருதா ஏவி விட்டது தான். இறுதியில் தந்தையும் தன்னை விட அவனைப் பெரிதாகக் கருதிவிட்டாரே?! அந்த குரோதம் அவனை வாரணவதம் வரை கொண்டு வந்து சேர்க்கிறது. மிகச் சரியாக துரியனின் மனநிலையை வெண்முரசு “அமைச்சரே ஆணவம் மிக்கவர்களே பெருந்தன்மையானவர்கள், பெருங்கொடையாளர்கள். அவர்களால் உலகையே கொடுக்க முடியும். ஆனால் கொடுக்குமிடத்தில் மட்டுமே அவர்களால் இருக்க முடியும்”, என்று காரகன் என்னும் நியாய சாஸ்திரவாதியின் கூற்றாகச் சொல்கிறது. இதைக் கேட்கும் தர்க்கவாதியான சௌனகர் தான் தற்போது இந்திரபிரஸ்தத்தின் முதன்மை அமைச்சர்.

நிகர் நிலை கொண்ட பேரழகன்:

மிகச் சரியாக கார்க்கோடகன் கூறியது போன்றே துரியனின் பெருந்தன்மையே அவனை எரிக்கத் துவங்குகிறது. தன் ஆணவம் புண்பட்ட துரியன் தன்னையே வெறுத்து, உயிர் துறக்க காட்டில் செல்லாத இடங்களுக்கெல்லாம் செல்கிறான். அந்த வழியில் அடைய இயலாத ஒரு இடத்தில் கோவில் கொண்ட ஸ்தூனகர்ணன் என்ற தெய்வத்தைச் சந்திக்கிறான் அவன். இந்த ஸ்தூனகர்ணன் ஒரே சமயத்தில் ஆணாகவும், பிம்பம் பெண்ணாகவும் மறு சமயத்தில் உருவம் பெண்ணாகவும், பிம்பம் ஆணாகவும் தோன்றும் தெய்வம். இதே தெய்வம் தான் சிகண்டியில் இருந்து பெண்மையை வெளியே எடுத்தது. இது ஒரு அபாரமான தொன்மம். அதன் சிலை கூட ஒரு புறம் ஆணாகவும் மறுபுறம் பெண்ணாகவும் இருப்பதாகத் தான் இருக்கிறது. உளவியல் வரிகளில் இது கார்ல் யுங்கின் அனிமா / அனிமஸ் ஆழ்படிமங்களுக்கு இணையானது. சுருக்கமாக அனிமா என்பது ஆணில் இருக்கும் பெண் தன்மை. அனிமஸ் என்பது பெண்ணில் இருக்கும் ஆண் தன்மை. வழமையாக இந்த ஸ்தூனகர்ணனை ஒரு காட்டு வைத்தியர் என்பதாகவே மறு ஆக்கம் செய்ய இயலும். வடக்கு முகம் நாடகத்தில் ஜெ வும் ஒரு வைத்தியர் என்ற வகையிலேயே எழுதியிருப்பார். ஆனால் அதை ஆணும் பெண்ணும் ஒன்றாக இருக்கும் ஒரு தெய்வம் என்று மறு ஆக்கம் செய்கையில் அது ஒரு பெரும் படிமமாக மாறி விடுகிறது. அதன் முன் ஒருவர் தன்னில் எத்தன்மை மட்டுமே இருக்க வேண்டும் என முடிவு செய்வது என்பது ஒரு வித உளவியல் செயல்பாடே.

பீஷ்மரிடம் தனக்கேற்பட்ட புறக்கணிப்பும், திருதாவும் தன் வலிமையை தம்பியர் முன் விட்டுக் கொடுத்தமையும் தான் துரியனை பெருமளவில் பாதித்துள்ளது என்பது ஸ்தூனகர்ணன் அவனிடம் சொல்லும், “நீ அவனைக் கொல்லவேண்டும். உன் தம்பியர் கண்முன், உன் தந்தையின் சொல்முன். இல்லையா? அச்செய்தியை பீஷ்மர் அறியவும் வேண்டும். அவரது விழியிலிருந்து கண்ணீர் சொட்ட வேண்டும் இல்லையா?” என்ற வரிகளில் வெண்முரசு மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஸ்தூனகர்ணன் பீமனைக் கொல்ல துரியனுக்கு ரௌப்யை எனும் கதாயுதத்தைக் காட்டுகிறான். நீருக்கடியில் ஆழத்தில் கிடக்கும் ரௌப்யை உண்மையில் கங்கையின் ஒரு துணை நதி. ஜமதக்னி முனிவருக்கு அவள் செய்த சேவையால் மகிழ்ந்து அவள் வேண்டிய விழைவிற்கேற்ப விரிந்து செல்லும் வரத்தை அவரிடம் இருந்து பெற்றவள். அவளை ஒரு கதையாக ஸ்தூனகர்ணன் துரியனுக்குக் கொடுப்பதாகச் சொல்கிறான். மீண்டும் ஒரு உளவியல் நுட்பம். ஆழத்தில் கிடக்கும் குரோதமே அது. அவன் வளர வளர அதுவும் வளரும், வீங்கும். ஆனால் அவனால் அதை எடுக்க இயலவில்லை. அதன் எடையைத் தூக்க இயலவில்லை. அதன் காரணம் அவனுள் இருந்த மென்மை. அது அவனை குரோதத்தை நோக்கி செலுத்தவில்லை. அந்த சுயோதனையை அவன் அழித்து விடுகிறான். அதிலும் மீண்டும் உளவியல். ஒரு ஆணால் தன் அனிமஸ் – தன்னுள் இருக்கும் பெண்ணை மொத்தமாக அழிப்பது என்பது இயலாது. இங்கே துரியன் முதலில் அவன் வயதளவே உள்ள ஒரு பெண்ணை அழிக்கிறான். அதன் பிறகு வரும் சிறுமியையும் அழிக்கிறான். அதன் பிறகும் ஒரு கருக்குழந்தையாக அப்பெண் அங்கு வருகிறாள். அதையும் அழிக்கும் அவன் முழு ஆணாகிறான். இந்த கடைசி அழிப்பையும் செய்ய முடிந்ததால் தான் அவன் விதியின் ஆயுதமாகிறான். ஆம். கம்சன் கூட தோற்ற இடம் இது. அத்தனை குழந்தைகளை அழிக்க உத்தரவிட்ட அவன் மனதிலும் ஒரு சிறு நீலக் குருவி தங்கிவிட்டதே!!

இந்த பெண்ணையும் அழித்த பின் அவனைப் பார்ப்பவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை வெண்முரசு இன்னும் நுட்பமாக ஆராய்கிறது. அவன் தம்பியர் அனைவரும் அவனிடம் இருந்து சற்று விலகுகின்றனர். அவன் சற்று அழகு குறைந்ததாகக் கூட எண்ணுகின்றனர். அவன் தான் அவனிடமிருந்த பெண்ணைக் கொன்றுவிட்டானே, பின் எப்படி பிற ஆண்களின் கண்ணில் அழகாத் தெரிய முடியும்? ஏன், துரியனே கூட கண்ணாடியில் தன்னழகைக் காணும் பழக்கத்தை விட்டு விடுகிறான். மாறாக அரண்மனை பெண்டிர் அனைவருமே, துச்சளை உட்பட அவனில் பொங்கும் ஆண்மையையும், அவனில் எழுந்த பேரழகனையும் காண்கின்றனர்.

வெய்யோன் ஒளியில் சுடரும் தங்கம்:

வெண்முரசு கர்ணனுக்கும் துரியனுக்குமான நட்பை, அது ஏற்பட்ட சூழ்நிலையை விளக்கமாகச் சொல்லலவில்லை. கர்ணன் அஸ்தினபுரிக்கு வருகையிலும் திருதா மட்டுமே சந்திக்கிறார். ஆனால் அம்முதல் சந்திப்பிலேயே அவர் அவனை அடையாளம் கண்டுகொள்வதுடன் அவனை குருகுலத்தின் மைந்தர்களில் ஒருவனாகவும் ஏற்றுக் கொள்கிறார். வெண்முரசின் கதையொருமைக்கு இதுவும் ஒரு சான்று. அவன் அஸ்தினபுரி வரக் காரணமாயிருந்தவள் குந்தி. ஆயினும் முதலில் பார்த்தவர் திருதா.வேழத்தின் அணைப்பில் சென்றவர் மீள முடியுமா என்ன? இயல்பாகவே கர்ணனுக்கும், கௌரவர்களுக்குமான உறவு அந்தப் புள்ளியில் துவங்கிவிட்டது. கர்ணன் மீதான திருதாவின் அபிமானமும், தன்னைப் போன்றே ஓர் இனம்புரியா வஞ்சத்தினால் எரியும் அவன் தனிமையுமே துரியனை கர்ணன் பால் ஈர்க்கிறது. மிக இயல்பான ஒரு நட்பு அவர்களுக்கிடையே உருவாகிறது.

அந்த செண்டுவெளியில் கர்ணன் அவமானப்படுத்தப்படுவது வரை துரியனுக்கும், கர்ணனுக்குமான சந்திப்போ, அளவலாவலோ நிகழவேயில்லை. ஆயினும் துரியன் கர்ணனின் வரவை எதிர்நோக்கி இருக்கிறான். அவன் பீஷ்மர் அஞ்சுவது கர்ணனின் வரவைத் தான் என துச்சாதனனிடம் சொல்கிறான். அவனுக்கு கர்ணன் யார் என்பதும், அவன் முக்கியத்துவம் என்ன என்பதும் ஓரளவிற்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த செண்டுவெளியில் துரியனின் செயல்கள் இந்த புறக் காரணங்களை எல்லாம் சிந்தித்து வெளிப்பட்டதல்ல. அது அவன் இயல்பும் அல்ல. அன்று வெளிப்பட்டது துரியனின் பெருந்தன்மையே. அங்கிருந்தவன் வேழமான திருதாவின் மைந்தன். மேலும் அங்கே கர்ணனின் திறமை அவமதிக்கப்பட்டது. துரியனுக்கு பீஷ்மரிடம் கிடைக்காத அதே அங்கீகாரம், இங்கே கர்ணனுக்கும் மறுக்கப்படுகிறது. அந்த கணத்தில் துரியன் வெளிப்படுகிறான். தானடைந்த துயரை தன்னைப் போன்ற மற்றொருவன் அடையலாகாது என்ற உந்துதலில் செயல்படுகிறான். என்ன வார்த்தைகள்!! கர்ணன் முன் தானும், தன் குலமும் முழுக்கத் தோற்றதாக அறிவிக்கிறான். அதுவும் ஒரு பொது சபையில். அந்தக் கணத்தில் துரியன் அஸ்தினபுரியில் பேருருவம் எடுக்கிறான். அவனை அஞ்சிய மக்கள் மத்தியிலும், அமைச்சர் குழாத்திலும் அவன் மீதான பார்வை அந்த நொடியில் மாறுகிறது. அவன் குலமழிக்க வந்த கலியில்ல, விழி கொண்ட வேழம், மாமன்னன் ஹஸ்தியின் மறுபிறப்பு என பீஷ்மர் உட்பட ஒவ்வொருவரும் உணர்ந்த கணம்.

அதன் பிறகு கர்ணனும், துரியனும் இணை பிரியா நண்பர்கள் ஆகின்றனர். உள்ளம் திறக்க வார்த்தை தேவையில்லை என்றாகின்றனர். அதுவரை ஒரு சிறு விலக்கத்துடனே இருந்து வந்த விதுரரும் முழு மனதோடு, விருப்போடு துரியனை ஏற்றுக்கொள்கிறார். அத்துணை நாள் அவன் விரும்பிய பீஷ்மரின் நல்லெண்ணம் அவனுக்குக் கிடைக்கிறது. ஆனால் அவன் அதைத் தாண்டிச் செல்கிறான். முழுமையான நட்பு அமைகையில் உள்ளம் ஒழிவது எளிதன்றோ! துரியன் தன் இருளனைத்தும் மறைய வெய்யோன் ஒளியில் பொலியத் துவங்குகிறான். அவன் பெருந்தன்மையும், பேரன்பும் விரிந்து கொண்டே செல்கிறது. தன் தந்தையைப் போன்றே சிறுமை தீண்டாத, மனத்துக்கண் மாசிலாதவனாக ஆகிறான்.

ஆன்மாவில் விழுந்த தீ:

அப்படிப்பட்டவன் தான் வாரணவதத்திற்கு உடன்படுகிறான். ஏன்? அவன் வாக்கு பொய்க்கின்றது, அதுவும் தன் குருவுக்குக் கொடுத்த வாக்கு. அது அவனுக்கு இறப்பின் கணம். அதற்கு மேலும் அவனை பொம்மையாக ஒரு படை நடத்தச் சொல்லி மேலும் அவமானப்படுத்துகிறார்கள். மீண்டும் குரோதத்தில் எரிகிறான். அதுவே வாரணவதத்தில் எரிகிறது. அவனக்கு தாங்க முடியா கோபம் தருமன் மீது தான். பீமனிடம் ஏற்கனவே இருந்த வஞ்சம். அவர்கள் இருவரும் வாரணவதம் கிளம்புகையில் சலனமேயின்றி விடை கொடுக்கும் துரியன், அர்ஜுனன் விடைபெறுகையில் விழியில் தன் ஆற்றாமையைக் காட்டி விடுகிறான். இதைக் காணும் விதுரர் தருமனிடம் எச்சரிக்கிறார். அந்த தீ எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு அவன் அவனாக இல்லை. தம்பியர் முன் வரவே கூசுகிறான். மதுவின் மயக்கத்திலேயே இருக்கிறான். சிகரங்களுக்கு நடுவே சிறுத்துப் போயிருக்கும் கூழாங்கல் என தன்னை உணர்கிறான். மீண்டும் கர்ணன் வந்து தான் அவனை மீட்க வேண்டியிருந்தது. கர்ணன் மூலமாக அவர்கள் இறக்கவில்லை என உறுதி செய்து கொண்ட துரியன் அடைவது ஒரு பெரிய விடுதலையையே.

அளிக்கும் உவகை:

துரியன் திரௌபதியின் சுயம்வரத்திற்கு வருகையில் கர்ணனின் அவளின் மீதான ஆசையை அறிந்து கொள்கிறான். அக்கணத்தில் அஸ்தினபுரி சார்பாக கர்ணன் அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தான் அப்போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அறிவிக்கிறான். உண்மையில் அவன் வருந்தியிருக்க வேண்டும். ஆனால் கர்ணனிடம் அவ்வாறு அறிவித்து விட்டு வந்த பின் அவன் உடலெங்கும் ஒரு உவகையை உணர்கிறான். இந்த இடத்தில் இருந்து துரியன் மிக மிக மகிழ்வானவனாக, நிறைவானவனாக மாறுகிறான். காம்பிலயப் போரில் தோற்ற பிறகு, தந்தையால் கிட்டத் தட்ட மரணத்தை எட்டிப்பார்த்த பிறகு அவன் மீண்டும் பெருந்தன்மை மட்டுமே இருக்கும் ஒரு அரசானாக பரிணமிக்கிறான்.

பாரதத்தில் வேறு யாருக்கும், ஏன் கிருஷ்ணனுக்குக் கூட கிடைக்காத ஒரு மண வாழ்வு துரியனுக்கு வாய்க்கிறது. பகலிலும், இரவிலும் ஒளியோடு இருக்கும் மனைவியின் அரவணைப்பில் அவன் இருள் மொத்தமாக ஆழத்திற்குச் செல்கிறது. அனைத்தையும் மறந்து, மன்னிக்கத் தெரிந்த மாவீரனாக, மக்களைப் புரக்கும் பேரரசனாக துரியன் மாறுகிறான். அவனைச் சூழ்ந்து எங்கும் மகிழ்ச்சி மட்டுமே இருக்கிறது. நிறைவானவனாக இருக்கிறான். அனைத்தையும் அடைந்தவனாகவும் இருக்கிறான். சிறியன எதுவும் அவன் சிந்தையைத் தீண்டுவதில்லை.

சிறியன சிந்தியாதான்:

வண்ணக்கடலில் இளநாகன் காஞ்சியில் வாலிக்கும், சுக்ரீவனுக்கும் நடக்கும் போரைப் பற்றிய ஒரு நாடகத்தைப் பார்ப்பான். அதில் வாலி விதியிடம் தான் பேரறத்தான் ஒருவனால் கீழறத்தால் கொல்லப்பட வேண்டும் என வேண்டுகிறான். அவ்வாறே அவன் ராமனால் வதம் செய்யப்படுகிறான். மீண்டும் வாலி துரியோதனனாகவும், சுக்ரீவன் பீமனாவும் பிறப்பார்கள் என்கிறது விதி. வாலி மடிகையில் ராமனை பலவாறாக வினாவுக்குட்படுத்தும் வாலி இறுதியில் தான் செய்த சிறு தவறை உணர்ந்து தன் மரணம் தவிர்க்க இயலாதது என்பதை உணர்ந்த பிறகு ராமனிடம் இறுதியாக “தீயன பொறுத்தி” என்கிறான். அச்சமயத்தில் கம்பர் வாலியை சிறியன சிந்தியாதான் என்கிறார். இங்கே துரியனும் எவ்வகையிலும் அதே போன்றவன் தான். முற்றிலும் ஒளியால் சூழப்பட்டவனின் காலடியில் பதுங்கியிருக்கும் இருளாக அவன் சிறு நிழல் மறைந்திருக்கிறது. செய்த ஒரு சிறு தவறுக்காக பீமனால் முறை மீறி, பேரறம் கொண்ட தருமன், கிருஷ்ணன் முன் வதைக்கப்படுகிறான். வதைபட்டால் என்ன அவன் என்றும் ‘சிறியன சிந்தியாதான்’!!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: