ஜூலை 2016 மாத கூட்டம் – மணிமாறன் உரை

வெண்முரசு மீதான எனது வாசிப்பனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வது என்பது வானுயர் சிகரத்தின் மீதேறி சென்று கொண்டிருப்பவர்களிடம் அடிவாரத்தில் இருந்து அண்ணாந்து பார்த்தவன் அடைந்த பரவசத்தை பெருமையாக  முன்வைப்பது போன்றது.

அது கடந்த மாத வெண்முரசு கலந்துரையாடல் தந்த ஆர்வமிகுதியால் ஒப்புக்கொள்ள நேரிட்டது.

அவையறிந்து ஆராய்ந்து இடைதெரிந்து நன்குணர்ந்து கசடறச் சொல்தெரிந்து ஆற்ற வேண்டிய உரையை பெயரளவில் மொழிவதென்பது களம் அமைக்காமல் பகடை உருட்டுவது போலாகும் என்ற எண்ணம் தோன்றியது.

வெண்முரசின் தீவிர முழுநேர அல்லது அதிலேயே முற்றும் தோய்ந்த வாசகர்கள் மத்தியில் நான் சொல்லெடுத்தல் என்பது கல்லாதான் சொற்காமுறுதலேதான்.  எனவே வெண்முரசினுள் நுழையாமல் அது என்னுள் நுழைந்து ஏற்படுத்திய ஒருசில தாக்கங்களை முன்வைக்கும் பொருட்டு தனிப்பட்ட வாசிப்பு, ரசனை மற்றும் வாழ்வனுபவங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட என் சின்னஞ்சிறு பகடைக்களத்தில் எனது பகடையை உருள விடுகிறேன்.

இதனால் யாவர்க்கு யாது பயன் என்பதை பொருட்படுத்தாமல் முற்றிலும் எனதொருவித சுய ஆற்றுப்படுத்தலுக்காக மட்டுமே நான் முயற்சித்தது என்பதை கருத்திற்கொண்டு நண்பர்கள் பொருத்தருள வேண்டுகிறேன்.

ஒரு வாசகனாக எல்லா வருடங்களைப் போலவும் தான் 2014 ஆம் ஆண்டும் பிறந்ததென்று கூறிவிடமுடியாது. ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் வழக்கமாக பகிரப்படும் பிரதான வாழ்த்துச் செய்தி – ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும் என்பது.  அதன்படி அம்முதல் நாளே செய்தவமேதுமின்றி விருப்பத்திற்குரிய ஓரரிய வரம் கிட்டயதில் நான் அடைந்த வியப்பானந்தத்திற்கு அளவில்லை.  ஜனவரி 1, 2014 – வெண்முரசு இணையத்தில் வெளிவரத் துவங்கிய தினம், நன்றியோடும் பணிவோடும் நெஞ்சத்தில்  பசும்பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.  அன்றைய தினமே அதன் பிரம்மாண்டத்தையும் அது எடுக்கவிருக்கும்  விஸ்வரூபத்தையும் உள்வாங்கிக் கொண்டு ஜெவுக்கு ஆண்டாளின் வரிகளில், “வெண்முரசு – அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்ததாக  ஒலிக்கும்” என  ஒரு வாழ்த்தனுப்பினேன்.  மதித்து பதில் மின்னஞ்சலுமிட்டார். பெருமைக்காக குறிப்பிடவில்லை.  வெண்முரசு தொடர்பாக நான் எழுதிய முதல் மற்றும் ஒரே கடிதம் அதுதான்.

சிறு வயதிலிருந்தே தாத்தா பாட்டிகள் மூலம் மகாபாரதக் கதைகளைக் கேட்டு வளரும் பேறு பெறாதவன்.  எனவே ஏழெட்டு வயது சிறுவனை தூர்தர்ஷன் மகாபாரதம் செல்லமாக ஒரு சிற்றெறும்பு கடி கடித்தது.  அதாவது பாரதம் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போர் என மட்டுமே.  பதின்ம வயதின் முடிவு வரை அதுவே எனது முடிபு.  கதையைப் பற்றி சொல்லிக்கொள்ளும் படியான புரிதலொன்றும் எற்படவில்லை.  வில் அம்பு தேர் அர்ச்சுனன் கண்ணன்  மீதெல்லாம் மட்டுமே ஒரு வித இனம்புரியாத ஈர்ப்பு.

 ஒரு சிற்றதிர்விற்கு வழி செய்தது சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படம்.  வணிகத் திரைப்படங்கள் வார்த்தெடுத்த ரசிக மனோநிலையின் விளைவாக கர்ணன் படம் பார்த்த அந்த இரவு கிட்டத்தட்ட உறக்கமற்றது.  கண்ணன் மீது அதுவரை இருந்த மருள் மறைந்து கர்ணன் மீது தனிப்பெரும் ப்ரியம் உருவானது.  அவனுக்கு எதிராக பல தவறுகள் நடந்தேறி விட்டன.  அவன் மரணித்ததை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.  நிச்சயம் அவன் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும் என விரும்பினேன்.  அவ்விருப்பத்தை தளபதி திரைப்படம் மூலம் நிறைவேற்றித் தந்தமைக்கு இயக்குனர் மணிரத்னத்திற்கு எப்போதும் என் நன்றிகள்.

மகாபாரதம் தொடர்பான எனது முதல் நூல் வாசிப்பு எஸ்ராவின் உபபாண்டவம் வாயிலாக நிகழ்ந்தது. அந்நாவலின் நேரியல் அல்லாத அமைப்பு முறை வெகுவாக ஈர்த்தது. வாசித்து முடித்ததும் மகாபாரதம் மீதான பிற நவீன ஆக்கங்களைத் தேடும் முயற்சியில் ஈடுபடும் முன்னமே புத்தாண்டுப் பரிசாக ஜெவின் வெண்முரசு வெளிவரத் துவங்கியது.  சிறுகச் சிறுக அதிமதுரம் உண்ணும் யானைக்குட்டி ஆனேன்.

இடையறாது வாசித்தும், இடைவெளி விட்டும், விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தும், விட்ட இடத்தை மறந்தும், மீண்டும் மீண்டும் ஒரே அத்தியாயத்தில் திளைத்தும் அல்லது முற்றிலும் வேறொரு அத்தியாயத்தில் நுழைந்தும், பல நுண்மையான பகுதிகளை உள்வாங்க முடிந்ததும் முடியாமலும் புரிந்தும் புரியாமலும், வெண்முரசின் ஒரு முழு நூல் விட்டு மறு நூல் பாய்ந்தும், பின் ஒரே நேரத்தில் இரு நூலிலும் சவாரி செய்தும் வெண்முரசை இன்றளவும் வாசித்து வருகிறேன்.  வெறும் வாசிப்பின்பத்திற்காக மட்டுமல்ல அதுவளிக்கும் எண்ணற்ற சமகால வாழ்வனுபவங்களுக்காகவும் தான்.  பின் தொடர்வதன் வசீகரம் மட்டும் துளியளவும் குறையவேயில்லை.

வெண்முரசின் மொழி நடை, அதன் அணிமிகு உவமைகள், நிலவியல் சார்ந்த விவரிப்புகள், புராணக் கதைகளின் கச்சிதமான இடைச்செருகல்கள், மகாபாரதத்தின் நீர்க்குமிழ் கதை மாந்தர்களையும் நீரில் சுருளும் நெடுந்திரைச் சம்பவங்களையும் பிரமாண்டமான அழியாப்பொற்சித்திரங்களாக வார்த்தெடுத்த தனித்தன்மை, அனைத்து முக்கிய கதாப்பாத்திரங்களின் மனோநிலைகளையும் எவ்வித சமரசமுமின்றி நேர்த்தியாக சமநிலைத்தன்மையோடு எடுத்துரைத்த நேர்மை ஆகிய யாவும் வெண்முரசு வாசகர்கள் அறியாதவைகளல்ல.  ஆனால் இவைகளே  மகாபாரதம் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போர் எனக் கொண்டிருந்த எனதபிப்ராயத்தை அழித்து அது அறத்திற்கும் மேலான அறத்திற்குமானது என்பதை முன் மொழிந்தது.  என் வரையில் அது ஒரு மிகப்பெரியத் திறப்பு.

விளைவாக தமிழில் கிடைக்கபெறும் மகாபாரதப் புனைவுகளான இனி நான் உறங்கட்டும், இரண்டாமிடம், பருவம், திரௌபதி, கிருஷ்ணா கிருஷ்ணா, கௌரவன் ஆகியவைகளை வாசித்தேன்.  இவற்றை வெண்முரசு வரிசை நூல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி எவ்வித எண்ணமும் தோன்றவில்லை. நல்லவேளை.  அது முழு முதல் வீண் வேலையும் கூட.  நிச்சயம் அவை யாவும் அதனதன் தனித்துவ மிக்க செவ்வியல் தன்மையோடு ஒளிரும் நட்சத்திரங்கள் அல்லது  நித்திலங்கள் தான்.  ஆனால் வெண்முரசின் அந்தஸ்து பிரபஞ்சவெளி அல்லது ஆழ்கடலின் அளப்பரியத் தகுதி கொண்டது என்பதை ஐயம்திரிபறச் சொல்வேன்.

வெண்முரசு உருவாக்கியளிக்கும் உருவகங்கள் பற்றி முதன்மை வாசகர் எவரேனும்   தனியாக ஒரு பெருநூலே எழுதலாம்.  கற்பனைத்திறனில் சற்றே பின்தங்கிய என்போன்ற யாவர்க்கும் அது ஒரு பெருங்கொடையாய் விளங்கும்.  .

இதுவரை அறிந்திடாத, வெண்முரசு வரிசை நூல்களிலும் இடம் பெறாது போன துரியோதனன் சுபத்திரை காதலை முதன்முதலாக ஆனந்த் நீலகண்டனின் கௌரவன் நாவலில் வாசித்தபோது பேருவகை அடைந்தேன்.  எத்தனை கண்ணியமான ஒரு காதலன் துரியோதனன். மேலும் பிறப்படிப்படையில் அல்லாது போர்த்திறனடிப்படையில் மேலெழுந்து வருபவனே க்ஷத்திரியனென கருதப்படவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்து ஏகலைவனை அங்கீகரித்து அவன் நடத்திய விதம் பலனளிக்காது போய் துவண்டிருந்த துரியோதனனின் ஆளுமை,  கர்ணன் தன் குலத்தின் காரணமாக பல்லார் அவை முன் தன் அதியற்புத விற்திறமையை வெளிப்படுத்தியதையும் மீறி இழிவுபடுத்தப்பட்ட தருணத்தில் அவனை அங்க நாட்டிற்கு  அரசனாக முடிசூட்டும் பொழுது உயிர்த்தெழுகிறது.  நூற்றுவர் மீது அவன் கொண்டிருந்த சகோதரப்பாசம், தன் நண்பர்கள் மீதிருந்த அசையா நம்பிக்கை, பரசுராமரிடம் இருந்து நாட்டைக் காக்க அவன் எடுத்துக்கொண்ட பிரயத்தனம், திரௌபதியைத் தான் நடத்திய விதத்தை ஒரு போதும் நியாயப்படுத்தாத தன்மை போன்ற அனைத்துமாகச் சேர்ந்து ஒரு வெறுக்கத்தக்க எதிர்நாயகன் என்பதை விட ஒரு தலைச்சிறந்த கதாநாயகனாக துரியோதனனை ஆக்குகிறது.  துரியோதனாவிரும்பிகள் தவறாது வாசிக்க வேண்டிய நூல்.  அல்லது வாசிக்கும் யாவரும் துரியோதனாவிரும்பிகள் ஆகிவிடுவர்.

துரியோதனன் – கர்ணன் நட்புறவைப் பொறுத்தவரையில் கடந்த மாத வெண்முரசு கலந்துரையாடலில் கூட வாசக அன்பர்கள், கர்ணன் துரியோதனன் மீது கொண்டிருக்கும் விசுவாசத்திற்கும் நட்பிற்கும் யாவரும் அறிந்த ஒரு வெளிப்படையான காரணம் உள்ளது போல் துரியோதனன் கர்ணன் மீது காட்டும் நெஞ்சார்ந்த நட்பிற்கு யாதொரு காரண காரியம் இல்லாதது கேள்விக்குறியே எனும் பாவனையை வந்தடைந்தனர்.  அர்ச்சுணனை தோற்கடிக்க வல்ல ஆற்றலை கர்ணனிடம் கண்டு கொண்டதாலேயே துரியோதனன் அவனை நிலம் தந்து க்ஷத்ரியனாய் கௌரவித்து அரசனாக்கினான் என்றுரைப்பதைப் போல அபத்தம் வேறில்லை என்பதால் இக்கருத்தை விரிவாக்கவில்லை.  பால்யத்தில் இருந்தே பிறப்படிப்படையில் அல்லாது போர்த்திறனடிப்படையில் மேலெழுந்து வருபவனே நிஜ க்ஷத்திரியனென கருதப்படவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்த துரியோதனின் அத்தகையச் செயல் அத்தருணத்தில் எவ்வித கேள்வியையும் என்னுள் எழுப்பவில்லை. மேலும் அஸ்தினாபுரியின் வருங்கால அரசன் எனும் உறுதியான நம்பிக்கையில் அதன் படைப்பிரிவில் கர்ணன் போன்ற மாவீரர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதை முழுதுணர்ந்தவன் அவன் என்பது கௌரவன் நாவல் வாசிப்பின் பாதிப்பு என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

மேலும் கிருஷ்ணனைப் பற்றி சொல்லாமல் போதல் தகாது.  எப்போதும் நம் எதிர்பார்ப்புக்குள் அடங்காமல் குறும்புத்தனமிக்க காதலோடும் மிகுந்த மதிநுட்பத்தோடும் ஒரு முழு நேர அரசியல்வாதியாக கணந்தோறும் தன்னை ஒரு புது வியப்பாகக் காட்டிக் கொள்ளும் தெய்வீகத்தன்மை ஏதுமற்ற கவர்ச்சிதான் கிருஷ்ணனை வெல்லற்கரிய நாயகனாக வெண்முரசு முன்னிறுத்துகிறது எனச் சொல்வேன்.      உடனடி உதாரணத்திற்கு சொல்வதாயின் பன்னிரு படைக்களத்தில் –
ஒரு தீவிர அரசு சூழ்தலுக்குப் பின் கிருஷ்ணனின் மதியூகத்திற்கிணங்க ராஜசூய வேள்வி  நிகழ்த்தவிருக்கும் முடிவை திரௌபதியிடம் அறிவிக்கும் பொருட்டு தருமனும் கிருஷ்ணனும் அவள் அறை நுழையும்போது அவள் ஆடி முன் அமர்ந்து 12 x 12 என களங்கள் கொண்ட, பகடைகளற்ற அதாவது மானுடனை ஆட்டுவிக்கும் தெய்வங்களின் கணக்குகளாக கருதப்படும் பன்னிரு ராசிகளும் உள்நுழையவியலாத யவன நாற்களம் ஆடிக்கொண்டிருப்பாள்.  ஒவ்வொன்றையும் நிறைநிலை வரை எதிரெதிர் வைத்து முற்றிலும் அசைவிழக்கச் செய்திருப்பாள். கிருஷ்ணனின் ஒற்றை காய் நகர்த்தலில் அனைத்தும் அதனதன் நிறைநிலை அழிந்து ஆடல் முடிவுறும்.  பின் ஜராசந்தனை வீழ்த்த வைத்ததும் சிசுபாலனை வதம் செய்ததும் அவனது அரசியல் அதிரடிகள்.  குருக்ஷேத்திரப் போர் நோக்கிய திரௌபதியின் விழைவை தனதாக்கி கொண்டு பிற காவியக் கதாநாயகர்கள் போல் எவ்வித அற அளவுகோல்களுக்கும் ஆட்படாமல்  வெற்றிகரமாக முன்னகர்த்திக் கொண்டு சேர்ப்பித்த இளைய யாதவனே என்றென்றைக்கும் இக்காவியத்திற்கு இன்றியமையாதவன். வெண்முரசு வரிசை நூல்களில் நீலவண்ணக் கண்ணனின் கதையைச் சொல்லும் நீலம் நாவலை வாசிக்கும் தோறும் எனதிருவிழிதனிலவனழகும் செவிதனிலவன் வேய்ங்குழலுமே நிரம்பி வழிகிறது.

இப்படியாக வெண்முரசின் எண்ணற்ற நெகிழ்வுகளை வெறுமனே பட்டியலிடுதல் தேவையற்றது எனினும் தவிர்க்க முடிவதில்லை. முடிவாக பன்னிரு படைக்களத்தின் இறுதி அத்தியாயங்களில் திரௌபதியை துச்சாதனன் துகிலுரிக்கும் போது அவள் மானம் காக்கும் பெருமையை கிருஷ்ணனின் தெய்வீகத்தனத்திற்கு வழங்காமல் இளைய யாதவன் பேர் சொல்லி அப்பெருமையை கௌரவப் பெண்களுக்கு அளித்ததையும், துரியோதனின் ப்ரியமகள் லட்சுமணையை அத்தருணத்தில் அவனுக்கு எதிராக சினம் கொண்டு எழுந்த ஓர் பேரன்னையாக படைப்பித்துக் காண்பித்ததையும் வாசித்த தருணம் வெண்முரசுகர்த்தாவை எண்ணி விழிநீர் சோர கைகூப்பினேன்.

மற்றபடி வெண்முரசின் மீது விமர்சனாபூர்வமாக எந்தவொரு கருத்தை முன்வைக்குமளவிற்கு நான் வளரவில்லை என்பதை பணிவுடன் ஒப்புக்கொள்கிறேன்.  நான் செய்யக்கூடியதெல்லாம் என்வரையில் வெண்முரசை விதந்தோதுதலும் நயம் பாராட்டுதலும் மட்டுமே.  அவற்றை என்னை விட உங்களில் பலர் முற்றிலும் புத்தம் புது கோணத்தில் முன் மொழிய முடியும்.  உதாரணமாக வெய்யோனின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றி கடந்த மாதக் கூடுகையில் ஜாஜா விவரித்த விதம். ஒரு வெண்முரசு வாசகனாக நான் சென்றடைய வேண்டிய தூரம் வெகு தொலைவில் உள்ளது என்பதே உண்மை.  வெண்முரசு வாசிப்பதற்கு மட்டுமானது அல்ல.  வாசித்து கலந்தாலோசித்து விவாதிப்பதற்கென்றே உருவாகி திரண்டெழுந்து பெருகி வருகிறது.  இது போன்ற கலந்துரையாடல்களே அம்மாபெரும் படைப்பிற்கு செய்யப்படும் அடிப்படை மரியாதைகள்.  ஏற்பாட்டாளர்களுக்கு அசைவிலா ஊக்கம் எப்போதும் துணை நிற்கட்டும்.  வாழ்த்துகள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: