வெண்முரசின் வெகுமக்கள் – சுனீல் கிருஷ்ணன்

“காடேகும் செய்தியை குடிகள் கேட்டால் என்ன நினைப்பார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் கொந்தளிப்பார்கள்” என்றார் சௌனகர். பீமன் வெடித்து நகைத்து “ஆம், கொந்தளிப்பார்கள். கண்ணீர்விடுவார்கள். ஏனென்றால் அவர்களால் கூட்டாக செய்யத்தக்க எளிய செயல் அது மட்டுமே. வாளாவிருக்கவில்லை, உகந்ததை செய்துவிட்டோம் என்று நிறைவுகொண்டு தங்கள் அன்றாடச் சிறுமைகளுக்கு மீளவும் முடியும்” என்றான். கும்பலும் கொந்தளிப்பும் தற்காலிகமானது அதற்கப்பால் மக்களும் பழகி விடுவார்கள் என்கிறான் பீமன். மக்களின் இந்த இயல்பை குறித்து நுட்பமான ஒரு பார்வையை அளிக்கிறான். “மந்தா, மக்களை வெறுப்பவன் காலப்போக்கில் அவர்களால் வெறுக்கப்படுவான்” என்றார் யுதிஷ்டிரர். “இல்லை மூத்தவரே, மக்களை புரிந்துகொண்டவன் அவர்களை வெறுப்பான். அவன் மட்டுமே அவர்களை கட்டுப்படுத்தவும் முடியும். கட்டுப்பாடான ஆட்சியை அளிப்பதனால் அவனை அவர்கள் விரும்புவார்கள்” என்றான் பீமன்.- வெண்முரசு, சொல்வளர்காடு.

வரலாற்று நிகழ்வு அல்லது வரலாற்று ஆளுமையை கொண்டு புனையப்படும் கதைகள் பொதுவாக சாமானியனின் பார்வையில் சொல்லப்படும்போது, அது கதைக்கு கூடுதல் நெகிழ்வை அளிக்கிறது. அது அவனுடைய கதையாக, அவனுடைய கோணத்திலும் வரலாற்றை விசாரணைக்கு உட்படுத்துகிறது. கம்யுனிச சுத்திகரிப்பாகட்டும், ஃபாசிசத்தின் கோரமுகமாட்டும், இறுகிய கொள்கை பாறைகள் மூச்சுமுட்ட நம்மை சூழும் தோறும் அதை பிளந்து வருவதும், அம்முயற்சியில் வீழ்வதுமே கதைகளாக நம்மை வந்தடைகின்றன. காவியங்கள் நாயகர்களை எழுப்பி, அவர்களின் அற குழப்பங்களை பேசிய போது, நவீன இலக்கியங்கள் முகமிலிகளின் முகமாக, குரலிலிகளின் குரலாக தன்னை வரித்துக்கொண்டது. தன்னை மீறிய, தனக்கப்பால் உள்ள ஆற்றல்களிடம் சிக்குண்டு அலைகழிகிறான் நவீன இலக்கிய நாயகன். மூர்க்கமாக எதிர்க்கிறான் அல்லது பணிந்து அமைகிறான். அவ்வகையில் அவன் செவ்வியல் துன்பியல் காவியங்களின் நீட்சியாகிறான்.
வெண்முரசு இன்று எழுத படுகிறது, பாரதத்தின் காலத்திலிருந்து வெகு தொலைவில், ராஜராஜனும், அக்பரும், கிருஷ்ண தேவராயனும், ராபர்ட் கிளைவும் ஆண்ட பின், தொழில் புரட்சி, காலனியம், தாது வருட பஞ்சங்கள், இரு உலக போர்கள், அணு விஞ்ஞான வளர்ச்சி, சுதந்திரம், மக்களாட்சி, தொழில்நுட்ப புரட்சி, இவையெல்லாம் நிகழ்ந்த பின், மானுட அறிவு இவைகளில் முங்கி முயங்கி உருண்டு, இழிவுகளையும் உன்னதங்களையும் ஒரு சேர திரட்டி ஒரு பெரும் கோளமாக ஆகிக்கொண்டிருக்கும் இன்றைய தினத்தில் எழுதப்படுகிறது. நூற்றாண்டுகால மானுட அறிதல்கள் காவிய நாயகர்களின் அற குழப்பங்களுடன் முயங்கும் போது அது இன்றைய கதையகாவும் ஆகிறது.

ஜெயமோகன் வெண்முரசின் எழுத்துமுறையை சூட்டும் போது “புராண யதார்த்தவாதம்” என்கிறார். அதன் அத்தனை சாதக பாதகங்களோடும், செவ்வியல் இயல்புகளும் நவீன இலக்கிய கூறு முறையும், கட்டற்ற மொழி பிரயோகமும் கற்பனையும், வரலாற்று நோக்கும் இயைந்து உருவாகும் எழுத்துமுறை என கொள்ளலாம். இந்நாவல் விமர்சனத்திற்கு உள்ளாவதும் இந்த எழுத்துமுறை பொருட்டே. வரலாற்றை அணுகும் மார்க்சிய சட்டகங்களை புராணங்களை அணுக பயன்படுத்தி இருக்கிறார். குறிப்பாக அரசுகளின் எழுச்சி மற்றும் வீழ்சிகளின் காரணிகளை ஆராயும் போது மார்க்சிய பொருளியல் கொள்கைகள் மற்றும் நவீன பொருளாதார நிலவியல் பார்வைகள் சரளமாக பயன்படுத்தபடுகின்றன. இந்த அளவில் வரலாற்று நாவல்களின் சாமானியர்களை போல், புராண யதார்த்தவாத நாவலான வெண்முரசிலும் சாமானியர்கள் கவனம் பெறுகிறார்கள். வெண்முரசின் மிக முக்கியமான சிறப்பம்சம் பாரதத்தில் இல்லாத அல்லது வெறும் ஒரு பெயராக நாம் கடந்து செல்லும் பாத்திரங்களை விரித்தெடுப்பது என கொள்ளலாம். இவர்கள் நாவலுக்கு புதிய வண்ணத்தையும் கோணத்தையும் அளிக்கிறார்கள்.
வெண்முரசின் வெகுமக்கள் எனும் பேசு பொருளை மூன்று கோணங்களில் அணுகலாம்.

1. ஆளுகை சார்ந்து – குடிமக்கள் எனும் கோணத்தில் 2. கூட்டு நடத்தை – கும்பல் மனப்பாங்கு 3. வெகுமக்களின் பிரதிநிதிகளாக வரும் சிறிய பாத்திரங்கள்.

இதில் மூன்றாவது அம்சத்தை இந்த கட்டுரையில் நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் அது மிக விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. நிருதன், ஸ்தானகர் போன்ற மறக்க முடியாத பாத்திரங்கள், சிறு கீற்றாக மின்னி செல்லும் மாருதன், சிவதர் மட்டுமின்றி சொல்வளர்காட்டின் நூற்றுவர் தலைவன், விடுதியில் கதை சொல்லும் சூதன் என பெயரற்றவர்களால் நிரம்பியது. அரசிகளின் அணுக்க செடிகள் வழியாக மட்டுமே கூட வெண்முரசை வாசிக்க முடியும். வெண்முரசை பற்றி இது போன்ற கட்டுரைகளை எழுதுவதில் உள்ள சவாலே, தேவையான மேற்கோள்களை தேடி எடுப்பது தான்.

வெண்முரசு போன்ற விரிந்த பரப்புடைய நாவல் வரிசையில் பல்வேறு அடுக்குகளை தனித்தனியாக ஆராய்வது அதை குறுக்குவதற்காக அல்ல, மேலும் இந்த கட்டுரை நவீன அறிவியல், சமூகவியல் கோட்பாடுகள் எல்லாம் வெண்முரசிலும் உள்ளது என மார்தட்டிகொள்வதற்காக எழுதப்பட்டது அல்ல. மாறாக வெண்முரசை வாசிக்க புதிய கோணங்களையும் புரிதலையும் அளிப்பதை அன்றி வேறு நோக்கங்கள் ஏதுமில்லை.

பேரமைச்சர் யக்ஞசர்மர் புன்னகைசெய்து “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன” என்றார். – முதற்கனல்

ஜெயமோகன் காந்தியை பற்றிய ஓர் கட்டுரையில் அந்தோனியோ கிராம்சி பற்றி குறிப்பிடுகிறார். கிராம்சியின் கோட்பாடுகள் காந்தியை அணுக மிக உகந்ததாக இருக்கும் என்கிறார். கிராம்சி ஒரு இத்தாலிய மார்க்சிய அறிஞர். ஃபாசிச இத்தாலிய அரசு அவரை சிறையில் அடைத்தது. சிறையில் அவர் எழுதிய குறிப்புகள் நோய்வாய்பட்டு அவர் மரித்த பின்னர் அவருடைய மனைவியின் சகோதரியால் மிகுந்த சிரமங்களுக்கு இடையே வெளிகொணரபட்டது. மார்க்ஸ் பார்க்க தவறியதை கிராம்சி காண்கிறார் என கூறலாம். வலுவின் வழியன்றி அதிகாரம் உண்மையில் கருத்தியல், பண்பாட்டு, அறிவுதள ஆதிக்கங்கள் வழியாக கட்டமைக்கபடுகிறது என்பதை சுட்டி காட்டினார். மேலாதிக்கம் திணிக்கப்பட வேண்டும் என்பதில்லை, மவுனமாக பெருவாரியாக ஏற்கபட்டாலே போதும் என்றார். மேலாதிக்கத்தை நியாயபடுத்த, அங்கீகரிக்க தேவையான கருத்தியல் நிலைபெற்றிருத்தல் அவசியம். ஆளும் வர்க்கம் என்றல்ல எவரும் இப்படி திரட்டி தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கி அதிகாரத்தை கோர முடியும் என்றார். உழைக்கும் வர்க்கம் வன்முறையின்றி அதிகாரத்தை அடைய இதுவே உகந்த வழி என கருதினார். மேலாதிக்கத்தை அடைந்த பின்னர் அதை தக்க வைக்க தொடர்ந்து முயல வேண்டும், மீண்டும் மீண்டும் புதுப்பித்துகொள்ள வேண்டும். அறிவுதள மற்றும் பண்பாட்டு இயக்கங்கள் வழியாகவே இந்த மேலாதிக்கத்தை பிறரை ஒப்புகொள்ள செய்ய முடியும். தன் தரப்பு மட்டுமின்றி எதிர் தரப்பையும் உள்ளடக்கிய பொதுவான திசைக்கு பயணிக்க வேண்டும். சமூக பண்பாட்டு புலத்தில் ‘பொது புரிதல்’ என மக்கள் திரள் மேலாதிக்கத்தை ஏற்க வேண்டும். தலைமையின் செல்திசையை பெருந்திரள் மக்கள் ஏற்றாக வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் அதை முன்னடத்தி செல்லும் அறிவுஜீவிகள் இருப்பார்கள் அவர்களே குழுவின் திசையை தீர்மானிப்பவர்கள் என்கிறார் கிராம்சி. மேலாதிக்கம் பரவலாக ஏற்கபடாத போது அதன் அதிகாரத்தை நிறுவ நேரடி வன்முறை சில நேரங்களில் அவசியமாய் இருக்கலாம். மனமுவந்து வலுவானவர்களின் உலக பார்வையை ஏற்பதன் வழியாகவும் அவர்களின் மேலாதிக்கத்தை அங்கீகரிக்கலாம். கிராம்சியின் கோட்பாடுகள் பிரித்தானிய பேரரசு இங்கே காலூன்றிய பின்புலத்தில் புரிந்து கொள்ளலாம். அதற்கு எதிராக காந்தி அதே முறையை வளைத்து இந்திய விடுதலையை சாத்தியமாக்கி கொண்டதையும் கவனிக்கலாம்.

வெண்முரசில் கிராம்சியின் கோட்பாடுகள் கணிசமாக பொருந்தி போகிறது. க்ஷத்ரியர்கள் வேதத்தின் பெயராலேயே அதிகாரத்தை பெறுகிறார்கள். வேள்வி காவலனாக அரசன் திகழ்கிறான். நால் வேதங்களின் அங்கீகாரம் தான் அவர்களை மன்னர்களாக ஆக்குகிறது. இந்த அங்கீகாரத்தை உடைத்து புதிய அதிகாரத்தை உருவாக்க முயல்பவர்கள் ஜராசந்தனும் கிருஷ்ணனும். ஜராசந்தன் நால் வேதங்கள் தொகுக்கபடுவதற்கு முன்பான தொல் வேதங்களை நோக்கி தனக்கான அங்கீகாரம் வேண்டி செல்கிறான். நாக வேதத்தை மீட்டு எடுக்கிறான். அதன் வழியாக நாகர்களையும் நிஷாதர்களையும் அரசாளும் தகுதி உடையவர்களாக முன்வைக்கிறான். தன்னை அவன் ஜரையின் மைந்தனாகவே காட்டிகொள்கிறான். ஆளும் வர்கத்தின் மீதான வெறுப்பை தனக்கு சாதகமாக்கி கொள்கிறான். க்ஷத்ரியர்களையும் பிராமணர்களையும் தயக்கமின்றி கொல்வது மூலம் க்ஷத்ரிய மேலாதிக்கத்திற்கு அறைகூவல் விடுக்கிறான்.

கிருஷ்ணனும் தன் போக்கில் க்ஷத்ரியர்களின் மேலாதிக்கத்தை உடைக்க முயல்கிறான். வேதத்தை கேள்விக்குட்படுத்துவதன் வழியாக அவன் அதை நிகழ்த்துகிறான். ஜராசந்தனும் சரி கிருஷ்ணனும் சரி நால் வேதத்தை கேள்விக்குட்படுத்துவதன் வழியாகவே க்ஷத்ரியர்களின் மேலாதிக்கத்தை எதிர்க்கிறார்கள். வெண்முரசின் கிருஷ்ணன் இன்னும் தனது சித்தாந்தத்தை முன்வைக்கவில்லை. எனினும் தொல் வேதத்திலிருந்து நால் வேதம், நால் வேதங்களில் இருந்து வேதாந்த சாரம் என முன்னோக்கிய பரிணாமமாகவே அது இருக்கும். நோக்கங்கள் ஒன்றாயினும் பாதைகள் வேறாகிறது. கிருஷ்ணன் கட்டற்ற தொல் வேதத்திற்கு செல்லாமல் மேலும் நுண்மையான, அதே வேளை பரந்து பலரையும் உள்ளடக்கிய வேதாந்தத்திற்கு செல்கிறான். அண்மையில் கூட ஜெயமோகன் கண்ணனை வழிபடலாமா எனும் கட்டுரையில் இந்த அதிகார மாற்றத்தை முன்வைக்கிறார்.

கொடுங்கோலன் ஏன் மக்களாதரவு பெறுகிறான்? ஃபாசிச ஆதரவாளர்கள் பற்றிய ஆய்வை செய்த வில்லியம் ரைஸ்ச் வளரும் பிராயத்தின் பாலியல் அடக்குமுறைகள் ஃபாசிச ஆதரவாக பரிணமிக்கிறது என ஆய்வுகள் மூலம் சொல்கிறார். எனினும் இந்த கூற்று வெண்முரசில் பொருத்தி பார்க்க முடியாது. ஜராசந்தனும் சரி கண்ணனும் சரி எதிரிகளை முற்றழிக்க அஞ்சாதவர்கள். ஜராசந்தன் கொடுங்கோலனாக கருதப்படுகிறான். ஆனால் மக்களின் நேசமும் ஆதரவும் அவனுக்கிருக்கிறது. கொடுங்கோலன் அதிகாரத்தை நிலைநிறுத்த எந்த எல்லைக்கும் செல்வான் எனும் அச்சம் நிலை பெற வேண்டும். ஜராசந்தனுக்கு சற்றும் குறைவில்லாதவான் கிருஷ்ணன். இசைத்துக்கொண்டே சலனமின்றி போர் புரிந்து கொன்றொழிக்கும் கிருஷ்ணனை எண்ணிக்கொண்டேன். கொந்தளிப்பான காலங்களில் வலிமையான மற்றும் மாற்றத்தை அளிக்ககூடிய, நீடித்து நிற்கும் தலைமையை மக்கள் விழைகிறார்கள். அதுவும் கூட இருவருக்கும் பொருத்தம். கொடுங்கோன்மைக்கு மிக முக்கியமான தேவை நாம் பிறர் எனும் பாகுபாட்டின் வழியாக எதிரிகளை கட்டமைத்தல். எதிரிகளை காட்டி தம்மவர்களை வலுவாக ஒருங்கிணைத்தல். கிருஷ்ணன் ஞானியாகவும் அனைவரின் நேசத்துக்குரியவனாகவும் ஆவது அவன் இந்த பாகுபாட்டை அங்கீகரிக்கவில்லை என்பதாலேயே என தோன்றுகிறது. யாதவர்களை அவனால் இறுதிவரை ஒருங்கிணைக்க முடியாமல் போனதற்கு ஒரு பொது எதிரி போதிய அளவில் கட்டமைக்கப்படவில்லை. மேலும் அவனுடைய மாற்றத்திற்கான அறைகூவல் முன்னோக்கியதாக இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம்.

ஜராசந்தனை தொல் வேதத்தின் பிரதிநிதியாகவும் பீஷ்மரை நால் வேதத்தின் பிரதிநிதியாகவும் கிருஷ்ணனை வேதாந்தத்தின் பிரதிநிதியாகவும் கொண்டோமேயானால் வெண்முரசின் அதிகார மோதல்கள் புதிய கோணங்களில் அணுக முடியும்.

மேலும் முக்கியமான அரச முடிவுகள் உருவாவதில் பொதுமக்களும் பங்கு வகிக்கிறார்கள். திருதிராஷ்டிரனை விட்டுவிட்டு பாண்டுவை தேர்வு செய்வது ஒருவகையில் மக்களின் இச்சையாக முன்வைக்கபடுகிறது. துரியோதனன் தீமையின், கலியின் வடிவமாக மக்களின் மனதில் நிலை பெறுவதும், தர்மன் அற செல்வனாக புகழ் பெறுவதும் கதையின் போக்கை தீர்மானிக்கிறது. துரியன் பிறந்ததில் இருந்தே அவனை பற்றிய கதைகள் அவனை பாதித்ததை பற்றி திருதிருராஷ்டிரர் வருந்துகிறார். சொல்வளர்காடில் கூட தர்மன் மக்களால் மறக்க படுவான் என குந்தி அஞ்சுகிறாள். வனவாசத்திற்கு பிறகு திரும்பும் போது போராட்டம் நீர்த்து விடும் என எண்ணுகிறாள். போர் புரியலாம் என தர்மன் முடிவெடுக்கும் போது அற செல்வன் எனும் அவன் பெயர் களங்கப்படுவதை தவிர்க்க சொல்கிறான். அவனுடைய ஆற்றல் என்பது அவனுடைய இந்த பிம்பம் பொருட்டு எழும் மக்கள் ஆதரவில் உள்ளது தான். அர்ஜுனன் சுபத்திரையை சிவயோகியாக தோற்றம் கொண்டு துவாரகையிலிருந்து கவர்ந்து செல்லும்போது முழு மக்கள் ஆதரவுடனே செல்கிறான். இளைய பாண்டவனே தங்கள் அரசிக்கு உகந்தவர் என மக்கள் விழைந்தது காரணமாக சொல்லப்படும். கர்ணன் அங்க தேசத்தில் புதிய அவையில் சூத்திரர்களை இடம் பெற செய்கிறான். அதுவரை அவை பழகாதவர்கள் குறுகிய காலத்தில் ஒரு மரபை உருவாக்கிகொள்கிறார்கள். கர்ணன் அவர்களின் ஆதரவையும் பெறுகிறான். குடிமக்களின் பிரதிநிதிகளாக உருவாகும் குலசபை உருவாக்கம் வெகுமக்கள் எப்படி ஒருங்கிணைக்கப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது. அங்கீகாரமும், அதிகார பூசலும் அவர்களை உருவாக்குகிறது.

வெகுமக்களின் விழைவை பற்றி புரிந்துகொள்ள காண்டீபத்தின் இப்பகுதி உதவும்.

காண்டீபம் நாவலில் வரும் பல்வேறு பகுதிகள் மிக விரிவாக வெகுமக்களின் ஆட்டங்களை பதிவு செய்கிறது. இந்த பத்தியில் கிருஷ்ணன் அரிஷ்டநேமியுடன் மற்போரிட்டு தோற்றதை பற்றி அர்ஜுனனிடம் கூறுகிறான். “பார்த்தரே, எளிய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அம்மாற்றத்தால் தங்கள் வாழ்வு தலைகீழாகுமென்றாலும் சரி. முந்தைய கணம் வரை சார்ந்திருந்த ஒன்று சரிவதைக்கூட அதன் பொருட்டு விழைவார்கள். ஏதேனும் ஒன்று நிகழ்ந்து தாங்கள் கொண்டாடிய ஒன்று வீழ்ச்சியடையுமென்றால் அதில் அவர்களின் அகம் களிக்கும். எழுந்தவை அனைத்தையும் நிலம் இழுப்பதுபோல எளியோர் வென்றவரையும் நின்றவரையும் பற்றிச்சரிக்க ஒவ்வொரு கணமும் தவிக்கிறார்கள். இப்புவியை ஆளும் வல்லமைகளில் ஒன்று எளியோரின் வஞ்சம். அதை நன்கறிந்திருந்தபோதும்கூட அன்று நான் என் நகர்மக்களின் விழிகளைக் கண்டு அஞ்சினேன். ஒவ்வொருவரும் என் விழிகளைத் தவிர்த்து மிகையாக வணங்கி கடந்துசென்றனர். என் முதுகில் நோக்கு நட்டு தங்கள் உள்ளவிழைவை உணர்ந்து பின் பிறர் விழிகளை நோக்கி அவ்விழைவை அவர்கள் அறிகிறார்களா என்று கூர்ந்தனர். அங்கும் அதையே காணும்போது தங்கள் பேருருவை தாங்களே கண்டு திடுக்கிட்டனர்.

ஆனால் நாள் நெருங்க நெருங்க அவர்களின் தன்னடக்கமும் கரவும் மறைந்தன. தாங்களனைவரிலும் நுரைப்பது ஒரே விழைவு என அவர்கள் உணர்ந்தபோது ஒற்றைப் பெரும்பரப்பென ஆயினர். அந்த விராடவடிவம் மானுடர் எவருக்கும் அஞ்சாதது. கரப்பதற்கோ நாணுதற்கோ ஏதுமில்லாதது. பேருருக்கொண்ட அம்முகத்திலிருந்த கசப்பும் இளிப்பும் என்னை பதறச்செய்தன. சத்யபாமையை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தேன். முதலில் அவள் நானே வெல்வேன் என எண்ணியிருந்தாள். பின் நகர்மக்களிடமிருந்து நான் வெல்லமுடியாதென்னும் உணர்வை அவள் அடைந்தாள். அவள் அடைந்த அனைத்தையும் இழக்கப்போகிறாள் என்னும் எண்ணம் அவளை துவளச்செய்ததை கண்டேன். அவ்வெண்ணம் வலுப்பெறுந்தோறும் என் மீதான கசப்பாக மாறியது. கசப்பு மூப்படைகையில் ஏளனமாகிறது. ஏளனம் பழுத்து புறக்கணிப்பாகிறது. என்னை அவள் விழிகள் நோக்குவதேயில்லை என்னும் நிலை வந்தது.

அதுவரை ஓசையற்றிருந்த துவாரகையின் மக்கள் பெருங்குரலில் வெடித்தெழுந்து வாழ்த்தொலி எழுப்பினர். யாருக்கான வாழ்த்து அது என என்னால் கணிக்கமுடியவில்லை. ஆனால் அது அவர்கள் விழைந்த முடிவு. அவர்கள் எதையும் இழக்காமல் விரும்பியதை அடைந்ததன் மகிழ்வா அது? இல்லை, அவர்களின் சிறுமைகளை கோடைகாலத்துமுதல்மழை புழுதியை அடித்துக்கொண்டு செல்வதுபோல அவரது பெருமை கழுவியகற்றியதன் நிறைவா?

“ஆம், அறிவேன்” என்றான் அர்ஜுனன். “அவர்களுக்குத் தேவை தலைவனல்ல. தந்தை. தந்தையை வழிபடுவார்கள், தெய்வ நிலைக்கு கொண்டு சென்று வைப்பார்கள். அதற்குரிய அனைத்துக் கதைகளையும் சமைப்பார்கள். ஆனால் தந்தை என்று ஆன பிறகு அவரை மறுக்கத் தொடங்குவார்கள். அவரை மீறுகையில் உள்ளக்கிளர்ச்சிக்கு ஆளாவார்கள். அவர் குறைகளை எந்நேரமும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அவரை இழிவுசெய்ய வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வார்கள். இவர் அவர்களுக்கு இன்று ஒரு வாழும் மூதாதை மட்டுமே.”

இன்று நிகழ்ந்துள்ள இவ்விணைவு அரியது. சூரசேனரும் வசுதேவரும் பலராமரும் இயல்பாக ஒருங்கிணைந்து ஒரு தரப்பாக நிற்க மறுதரப்பாக இளைய யாதவர் நிற்கும் ஒரு சூழல் அமைந்துள்ளது. இளைய யாதவர் வெல்வது அரிது என்னும் நிலையும் உள்ளது. சூரசேனரின் தரப்பைச் சார்ந்து நின்று பேசும்போது இளைய யாதவரை எதிர்க்க முடியும். அவர் தோற்கையில் மகிழ்ந்து கூத்தாட முடியும். ஆனால் யாதவர் குடிநன்மைக்காகவும் யாதவர்களின் மூதாதை சூரசேனரின் சொல்லுக்காகவும் நிலை கொள்வதாக தங்களை விளக்கிக் கொள்ளவும் முடியும். குற்ற உணர்வின்றி ஒரு அத்துமீறல். யாதவர்கள் இன்று கொண்டாடுவது அதைத்தான்” என்றான் அர்ஜுனன்.

‘யதா ராஜா ததா பிரஜா’ , அதாவது ‘அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்றொரு பழமையான சொல்வழக்கு உண்டு. நவீன யுகத்தின் மிக முக்கியமான மாற்றம் என்பது இச்சமன்பாடை திருப்பி போட்டது என கூறலாம். “மக்கள் எவ்வழியோ அரசன் அவ்வழி” என்பதே மக்களாட்சியின் ஆதாரம். இதுவே பாரதத்திற்கும் வெண்முரசிற்குமான வேறுபாடும் கூட.

வெண்முரசின் அனைத்து நாவல்களில்ளும் வெகுமக்கள் கூடுகிறார்கள், களிக்கிறார்கள், கொந்தளிக்கிறார்கள், வெறி நடனமிடுகிறார்கள், சோகத்தில் ஆழ்கிறார்கள், ஆவேசமாக மோதி மரிக்கிறார்கள், அஞ்சுகிறார்கள், அழிக்கிறார்கள், அறத்தின் பொருட்டு அரற்றுகிறார்கள், ஆர்பரிக்கிறார்கள். வெண்முரசு முழுக்க பல்வேறு விழவுகளும், உண்டாட்டுகளும், கொண்டாட்டங்களும் நிகழ்ந்தபடி இருக்கிறது. வெகுமக்களின் பகுதியாக இருந்து அதை அனுபவமாக கடத்துவது, வெகுமக்கள் நடத்தையை அவர்களுக்கு வெளியிலிருந்து விமர்சன நோக்கில் அணுகுவது, வெகுமக்கள் கொந்தளிப்பை கட்டுக்குள் கொணரும் யுத்திகள் என வெண்முரசு வெகுமக்களின் உளவியலை சார்ந்து மூன்று விஷயங்களை நுட்பமாக பதிவு செய்கிறது.

கும்பலில் இருந்து பொதுமக்களை பிரிக்கலாம். கும்பல் உணர்வுகளால் இயக்கபடுகிறது. பொதுமக்கள் கூடுகை ‘பிரச்சனைகளால்’ ஈர்க்கப்பட்டு உருவாகிறது என்கிறார்கள் ப்ளுமரும் பங்கும். மக்கள் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தும் போது வரும் கும்பலை ‘மாஸ்’ என வகைபடுத்தலாம் என்கிறார் ப்ளுமர். பிற்காலத்தில் கும்பல் நடத்தை என்பது போய் ‘கூட்டு நடத்தை’ எனும் கோட்பாடு உருவாகிறது. வதந்தி, பொதுமக்கள், சமூக இயக்கங்கள், கலவரம், போலி நம்பிக்கைகள், வெறித்தனமான ஈர்ப்புகள் என ‘கூட்டு நடத்தை’ என்பது கும்பலை காட்டிலும் விரிவான தளங்களை உள்ளடக்கியது.

லே பான் குஸ்டாவ் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கவனிக்கத்தக்க உளவியலாளர். கும்பல் மனப்பான்மை குறித்து அவர் எழுதியுள்ள நூல் (the crowd – a study of popular mind) அவ்வகையில் முதன்மை நூலாக கருதபடுகிறது.

மனிதர்கள் கும்பலாக ஆகும்போது சிந்திக்கும் திறனை இழக்கிறார்கள். தனி மனம் மரித்து ஒரு குழுமனம் எழுகிறது. உணர்சிகளால் கட்டுண்டு ஒருவித மயக்க நிலையில் செயல்படுகிறார்கள் என்கிறார். குறுகிய காலத்திற்கு தெளிவான ஒற்றை இலக்கை கொண்ட ‘குழு மனம்’ உருவாகிறது. இக்குழு மனம் உணர்வு தளத்தில் தனித்து இயங்குகிறது. சிந்திக்கும், பகுத்தறியும் திறன் அற்றது. தனித்து அடையாளம் காண முடியாது என்பதாலேயே கும்பல் கட்டற்றதாக ஆகிறது. எந்த எல்லைக்கும் செல்கிறது என்கிறார்.

லே பான் கும்பல் மனப்பாங்கு ‘தொற்றிக் கொள்வது’ என கருதினார். கும்பல் அளிக்கும் அடையாளமின்மை பகுத்தறிவை போக்குகிறது. ஆகவே கும்பல் எதற்கும் துணிந்ததாக ஆகிறது. உகந்த உணர்வுநிலைக்கு எதிரான எல்லாவற்றையும் நிராகரிக்கிறது என்றார். கும்பல் மனிதர்களை குறிப்பிட்ட விதமாக இயக்குகிறது எனும் இவருடைய கோட்பாடுக்கு மாற்றாக ஆல்போர்ட் முன்வைக்கும் கோட்பாட்டின் படி ஒரே விதமான நடத்தையை வெளிபடுத்த விரும்பும் மக்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக ஆகின்றனர் என்றார். ஒரு நிகழ்வில் பங்குபெறும் அனைவரின் உள்ளும் மறைந்திருக்கும் நோக்கங்களை வெளிகொனர்கிறது என்றார். கும்பல் எந்த தனி மனிதரையும் பொறுப்பாக்காது என்பதால் தனி மனிதராக செய்ய துணியாதவற்றை கும்பலில் செய்ய துணிகிறான்.

கும்பலில் இருப்பவன் எவ்வித விமர்சனமும் இன்றி சக உறுப்பினர்களின் தூண்டுதல்களை வாங்கிகொள்கிறான். ஒருவகையில் கும்பல் மனிதன் பய்ரிசியின் விளைவு. அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் மதிப்பு மிக்கவர்களின் அவாக்களை அவன் இயல்பின் படியே ஏற்று கொள்கிறான். சிறு வயது முதலே அவனுடைய முடிவுகளுக்கு பிறரை சார்ந்திருக்கும் வழக்கம் உள்ளவனாக அவன் இருக்க கூடும். ஆகவே அவன் அதே உணர்வு நிலை கொண்ட கும்பலின் ஒரு பகுதியாக எளிதில் கலந்துவிட முடிகிறது.

டர்னர் மற்றும் கிளிணன் கூற்றுப்படி, கும்பல் வெவ்வேறு நோக்கங்களும் ஆர்வங்களும் கொண்ட மனிதர்களால் ஆனதாக இருக்கிறது. குறிப்பாக நிலையற்ற கும்பல், அதுவும் வெளிபடுத்தும் இயல்புகள் கொண்ட, எதிர்ப்பு மன அமைப்பு கொண்ட கும்பலில் பொதுவான விதிமுறைகள் என எதையும் கண்டறிவது கடினம். உடனக்குடன் இயல்புகள் மாறுவதும் ஆகும். ஒருவர் சாளர கண்ணாடியை உடைக்கும் நேரத்தில் மற்றும் சிலர் கடைகளை சூறையாட கூடும். குழப்பமான சூழலில் புதிய விதிமுறைகள் அவ்வப்போது எழும், வழமைக்கு மீறிய சமூக நடத்தைகளாக அத இருந்தாலும் கூட அதையே மக்கள் பின்பற்றுவார்கள்.

காண்டீபம் நாவலின் இப்பகுதிகளை பார்க்கலாம்.

– யானை நின்றுவிட்டமை முன்னரே கூட்டத்தை செயலறச்செய்திருந்தது. அத்தனை விழிகளும் யானையையும் அதைச் சூழ்ந்து நின்றிருந்த ஏவலர்களையும் பாகர்களையும்தான் நோக்கிக் கொண்டிருந்தன. மதம் வழிகிறதா என்று அவன் தொட்டுப் பார்க்கிறான் என்று உணர்ந்ததும் கூட்டத்தினர் “மதம்! மதம்!” என்று கூவினர். உலர்நாணலில் தீப்பற்றி பரவிச் செல்வது போல சில கணங்களுக்குள் அச்செய்தி கூட்டம் முழுக்க சென்றது. பல்லாயிரம் தொண்டைகள் “மதம்! வெள்ளை யானைக்கு மதம்!” என்று கூவத் தொடங்கின. சுற்றிலும் கோட்டைச்சுவர் போல செறிந்திருந்த மக்கள்திரள் இடிந்து பின்னால் சரிவதுபோல் அகன்று விலகத்தொடங்கியது. அலை அலையென ஒருவரை ஒருவர் முட்டிச் செறிந்து பின்னால் இருந்த மாளிகைச் சுவர்களை அடைந்து பரவி விலகினர்.

– வீரர்கள் வேல் முனைகளை ஒன்றுடன் ஒன்று பற்றி வேலி ஒன்றை அமைத்து கூட்டத்தை தொடராமல் தடுத்தனர். அது மக்களை மேலும் அகவிரைவு கொள்ளச் செய்தது. குரல்கள் மேலும் வலுத்தன. ஒவ்வொரு முகமும் உணர்ச்சிகளால் நெளிந்துகொண்டிருந்தது. “மதம்கொண்டுவிட்டது” என்றது ஒருகுரல். “அவரால் இறங்கமுடியவில்லை” என்றது பிறிதொன்று. “அவர் அதை செலுத்துகிறார்… கடற்கரைக்குச் செல்கிறார்” என்றது அப்பால் ஒன்று. “அவர் சிவாலயங்களுக்கு செல்கிறார். அவர் அருகநெறியினர் அல்ல. ரைவதமலையில் அவர் சிவயோகம் செய்தார்.”

– அக்கணமே அந்த ஒற்றைக்கருத்து ஒரு பொதுக்கருத்தாக மாறியது. “அவருடன் செல்பவன் சிவயோகி.” “அவர் இடதுமரபைச் சேர்ந்தவர்.” “பிணம் மீது அமர்ந்து ஊழ்கம் செய்பவர்.” “அங்கே மானுடப்பலி கொடுக்கப்போகிறார்கள். அவர் அத்திசைக்கே யானையை செலுத்துகிறார்.” “பலியான மானுடர்களின் குருதியை அவர் தலைவழியாக ஊற்றி நீராட்டுவர்.” “அவர் மானுட ஊன் ஒரு துண்டு உண்பார். அது அவரைச் சூழ்ந்துள்ள பாதாளதெய்வங்களுக்கு உகந்தது.” “நிகரற்ற வல்லமை கொண்டபின் இளைய யாதவரைக் கொன்று துவாரகையை வெல்வார்.” “அவரை வெல்ல எவராலும் இயலாது. அவர் மண்ணிற்கு வந்த இருளரக்கர்.”

– அந்த ஒரு வீதியிலேயே நகரமக்கள் அனைவரும் கூடிவிட்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். மாளிகைகள் மக்களையே மேலே மேலே என ஏற்றிக்கட்டப்பட்டவை போலிருந்தன. மாளிகைகளின் மேல் நின்று கூவி ஆர்த்தவர்களில் இளம்பெண்கள் பலர் இருந்தனர். அவர்கள் கொண்டாடுபவர் ஒரு பெண்ணை உதறி நகர்விட்டுச் செல்பவர். அப்பெண்ணுடன் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளவில்லையா? அவர்களுக்கு துயரோ சினமோ இல்லையா?

– அவர்கள்தான் நேற்றுவரை அந்த மணநிகழ்வை களியாட்டமாக கொண்டாடியவர்கள். அப்போது மதுராவின் இளவரசி ராஜமதியாக இருந்தார்கள். அப்போதே அதை நோக்கி பொறாமைகொண்டிருந்த பிறிதொருத்தி அவர்கள் அனைவருக்குள்ளும் இருந்தாள் போலும். இப்போது இவர்கள் மகிழ்வது ராஜமதியின் இழப்பையா? அவர்களின் ஆழம் கொண்ட வஞ்சத்தையா?

– இல்லை என அர்ஜுனன் தலையசைத்தான். இவர்கள் கொண்டாடுவது அவரது முழுமையை. ஒரு பெண்ணுக்கு உரியவராகும்போது அவர் சுருங்குகிறார். மாமலை முடிகள் எவராலும் அணுகமுடியாது முகிலாடி நின்றாகவேண்டும். ஆம், அதைத்தான். அப்படித்தான். அக்கணமே அவன் அந்தப்பெருந்திரளில் ஒரு முதியபெண்ணின் முகத்தை கண்டான். அவள் நெஞ்சில் கை அழுத்தி விம்மியழுது கொண்டிருந்தாள். அவள் தசைகள் எரிந்து உருகிக்கொண்டிருந்தன. அவள் அன்னையாக இருக்கவேண்டும். அவர் அப்போது அவள் மைந்தனாகிவிட்டிருக்கவேண்டும்

மிக குறுகிய இடைவேளையில் வெகுமக்களின் மனம் மாறியபடி இருக்கும் சித்திரத்தை இப்பகுதி நமக்கு கிடத்துகிறது. வதந்தி, வெறுப்பு, உவகை என மாறி மாறி பயணிக்கிறது. வெகுமக்கள் உளவியலை சொல்ல இப்பகுதி ஒரு நல்ல உதாரணம்.

ஆழ் மன இச்சைகளால் கும்பலின் மனிதன் இயக்க படுகிறான் என்கிறார். ஃப்ராய்ட் அவர் கோணத்தில் பாலியல் அழுத்தத்தை காரணியாக சேர்க்கிறார். ஃப்ராய்டிய கோட்பாடு ‘அடக்கப்பட்ட உணர்வு’ நிலைகள், கட்டுபாடுகள் கும்பலின் போது வெளிப்படுவதாக கூறுகிறது. கும்பலின் ஒரு சில நடத்தைகளை விளக்கிக்கொள்ள இவ்வகையான கோட்பாடுகள் உதவலாம் ஆனால் எல்லாவித கூடுகைகளையும் நோய்மை கூராக அணுகுவது பிழையானது என்கிறார்கள் விமர்சகர்கள். சமூக – பண்பாட்டு வேறுபாடுகளை பொறுத்து வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் கூடும் கும்பல்கள் வேறு வேறு எதிர்வினைகளை ஆற்றுகின்றன.

வெண்முரசின் களியாட்டுக்களின் ஒரு பொது அம்சம் அவை கட்டற்றவை மற்றும் தற்காலிகமானவையாக இருக்கிறது. விழவுகளை அரசே ஒருங்கமைக்கிறது. நெறிப்படி வாழும் மக்கள் நெறிகள் பொருளற்று போகும் அன்றைய தினத்துக்காக காத்திருக்கிறார்கள். ‘அடக்கிய உணர்வுகளை’ கட்டவிழ்த்து சமநிலை பேணும் வழிமுறையாக விழவுகளை காண இடமுண்டு. சட்டென எனக்கு ‘கிளாடியேட்டர்’ திரைப்படம் நினைவுக்கு வந்தது. அரசுக்கு எதிரான அதிருப்தியை திசைதிருப்ப அல்லது நீர்க்க செய்ய, அரசின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இத்தகைய களியாட்டுக்கள் இன்றுவரை பயன்படுத்தபடுகின்றன.

வெய்யோனில் கர்ணன் இந்திரபிரஸ்தத்தில் நுழையும் போது வரும் பகுதி இது. “விழவுகளில் மானுடர் தெய்வங்களாகின்றனர், தெய்வங்கள் மானுடராகின்றனர். இருளும் மிடிமையும் அச்சமும் சிறுமதியும் பின்கடக்க மானுடர் சிறகெழுந்து களியாடுகிறார்கள். உள்நிறைந்த விண்ணிசையை அணைத்து தெய்வங்கள் தங்கள் கால்களை மண்ணில் வைக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தின் தெருக்களில் தோள்களால் முட்டிமுட்டி அலைக்கழிக்கப்படும் உடலுடன் அலையொழுக்கில் சிறுநெற்று என சென்றுகொண்டிருந்தபோது கர்ணன் அச்சொற்களை நினைவுகூர்ந்தான்.

அவன் அத்தனை முகங்களையும் விழிதொட்டு உலவி உளம்சலித்தான். அனைத்திலும் இருந்தது களிக்கொந்தளிப்பு. மானுடர் மறக்கவிரும்புவது எதை? ஒவ்வொரு கணமும் உள்ளத்தில் பொத்தி அணைத்திருக்கும் அனைத்தையும்தானா? நிணம்வழுக்க குருதிமழைக்க தலைகள் காலில் இடறும் போர்க்களத்தில் அவன் அக்களியாட்டை கண்டிருக்கிறான். இறந்த முகங்களிலும் சிலைத்திருக்கும் அக்களிவெறி. மானுடர் வெறுப்பது பொழுதென்று சுருண்டு எழுந்து நாள்என்று நெளிந்து காலமென்று படமெடுக்கும் நச்சை. காலத்தை வெல்வதே அமுது. அமுதுண்டவர் இவர். தேவர்கள் இவர்கள்”

காண்டீபத்தின் மற்றொரு பகுதியில்
ஒளிப்பரப்புக்குள் வந்த முதல் யாதவக்கூட்டத்தில் இருந்த களிவெறியை கண்டபோது தன் முகம் அறியாது மலர்ந்ததை எண்ணி அவனே துணுக்குற்றான். சற்று முன் ஐவர் ஆலயத்தின் முன் கைக்கூப்பி நின்ற மக்கள் எவர் முகத்திலும் இல்லாதது அக்களிவெறி. தன்னை மறந்த பேருவகை அவர்களுக்கு இயல்வதல்ல. உள்ளுறைந்த அவ்வன்முறை தெய்வத்தை ஒவ்வொரு கணமும் கடிவாளம் பற்றி தன்னுணர்வால் இழுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அதை அவர்கள் விடமுடியாது. கடும் நோன்பு என முழு வாழ்க்கையும் ஆக்கிக் கொண்டவர்கள் எவரும் இடைக்கச்சையை அவிழ்த்து தலைமேல் வீசி கூத்தாடி வரும் இந்த யாதவனின் பேருவகையை அடைய முடியாது. இக்களிவெறியின் மறுபக்கமென இருக்கிறது குருதியும் கண்ணீரும் உண்டு விடாய் தணிக்கும் அத்தெய்வம்.

பந்த ஒளிப்பெருக்கின் உள்ளே யாதவர்களின் வெறித்த கண்களும் கூச்சலில் திறந்த வாய்களும் அலையடித்த கைகளும் வந்து பெருகி எங்கும் நிறைந்தபடியே இருந்தன. கைகளை தட்டியபடியும் ஆடைகளை தலைமேல் சுழற்றி வீசி குதித்தபடியும் தொண்டைநரம்புகள் அடிமரத்து வேர்களென புடைக்க, அடிநா புற்றுக்குள் அரவென தவிக்க கூச்சலிட்டபடி அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

கும்பலின் மூலம் அடையப்படும் களிப்பு விடுதலையாக, பேருவகையாக மேற் சொன்ன இரண்டு தருணங்களில் மட்டுமின்றி வெவ்வேறு விழவுகளின் களியாட்டங்களின் போது முன்வைக்கபடுகிறது. டிரோட்டர் மனிதர்களுக்கு இயல்பிலேயே மந்தை மனநிலை உள்ளதாக முன்வைக்கிறார். அதன் ஒரு வெளிப்பாடே அவன் கும்பலாக ஆகிறான். ஒரு கும்பலாக ஆகும் போது அதன் ஒருமையை பாதிக்கும் எதையும் செய்ய அவன் விரும்புவதில்லை என்கிறார். மந்தையில் மனிதன் பாதுகாப்பாக உணர்கிறானா? அதன் பொருட்டே இக்கட்டுகளில் அவன் அதற்குள் புதைகிறானோ?

காண்டீபத்தில் வரும் இப்பகுதி மனிதன் மந்தையாகவும், வெறும் உயிரிச்சையால் இயங்குபவனாகவும் ஆவதை உக்கிரமாக சித்தரிக்கிறது. “தலைவன் சிரித்தபடி “முதலில் நெறி மீறுபவன் அங்கேயே வெட்டி வீழ்த்தபடுவான். அவனது தலையை ஒரு வேலில் குத்தி ஒரு ஓரமாக நிறுத்தி வைப்போம். அதன் பிறகு எச்சரிக்கை தேவையிருக்காது” என்றான்.

அர்ஜுனன் திகைப்புடன் “விடாய் கொண்ட ஒருவனை வெட்டுவதா?” என்றான். “நிறைவுறாது செத்தான் என்றால் அவனுக்கு ஒரு குவளை நீரை படையல் வைத்தால் போதும்” என்று தலைவன் புன்னகை செய்தான். “அந்தத் தலையை வேலில் குத்தி நீர் அருகே நிலைநிறுத்துவேன். எஞ்சியவர்களுக்கு அதைவிடச் சிறந்த அறிவிப்பு தேவையில்லை.” அவனருகே நின்ற இருகாவலர்கள் புன்னகைத்தனர். அர்ஜுனன் தன் உடல் ஏன் படபடக்கிறது என்று வியந்தான். “நீங்கள் இதில் தலையிடவேண்டியதில்லை யோகியே. இது போர்க்களத்தின் வழிமுறை. யாதவர்கள் இன்னும் பெரும்போர்கள் எதையும் காணவில்லை. அவர்களுக்கு இவ்வாறுதான் இவற்றை கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது.”

அர்ஜுனன் புரவியை இழுத்து ஓரமாக நிறுத்திக்கொண்டு அந்நிரையின் ஒவ்வொரு முகமாக பார்த்துக் கொண்டிருந்தான். சோலையைப் பார்த்ததும் ஒவ்வொருவரும் மாறுவதை கண்டான். அதுவரை நீரைப் பற்றிய எண்ணமே இல்லாதவர்கள் போல் இருந்தனர். நீரெனும் விழைவுக்கு மேல் எதை எதையோ சொல்லென அள்ளிப்போட்டு மூடியிருந்தனர். அவை காற்றில் புழுதியென விலகிப்பறக்க அனலை நெருங்குபவர்கள் போல அத்தனை முகங்களிலும் ஒரே எரிதல் தெரியத் தொடங்கியது.

ஒவ்வொருவரும் அப்பெருந்திரளிலிருந்து பிரிந்து தனது விடாயைப் பற்றி மட்டுமே எண்ணியவர்கள் ஆனார்கள். மழைநீர் பெருகிய ஏரியின் பரப்பு எடைகொண்டு நாற்புறமும் பெருவிசையுடன் கரையை அழுத்திக் கொண்டிருக்கையில் மறுபக்கம் நின்று நோக்குவது போல ஒரு உணர்வு அவனுக்கு எழுந்தது.”

கும்பல் தன்னியல்பாக கலைந்து விட கூடியது. குறிப்பிட்ட உணர்வுநிலை மறைந்த பின் அது வடிந்துவிடும். கும்பலின் இந்த இயல்பை வெண்முரசின் பல்வேறு பகுதிகள் சூட்டுகின்றன. பல நேரங்களில் கும்பலை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள், அல்லது மெல்லிய திசை திருப்பல் அல்லது ஐயத்தை விதைக்கிறார்கள். விதுரர், கனிகர், சகுனி போன்ற அரசியல் சூழ்கை அறிந்தவர்கள் இத்தகைய வழிமுறையை கையாள்கிறார்கள். காண்டீபத்தில் வரும் மேலே கொடுக்கப்பட்ட நிகழ்வு அச்சத்தின் வெளிப்பாடு. உயிரச்சம் அவர்களை இயக்குகிறது. அதை ஒடுக்க அதே உயிர் அச்சத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறான் காவலர் தலைவன்.

லேபான் கும்பலை முழுவதும் எதிர்மறை நிலையில் மட்டுமே காண்கிறார் என்பது அவரது கோட்பாட்டின் மீது வைக்கப்படும் விமர்சனம். ஆத்திரம், அச்சம், களிப்பு என மூன்று உணர்வுகளுமே பெரும்பாலும் கும்பல் நிலைக்கு பின் இயங்குகிறது. டர்னர் மற்றும் கிளிணன் தங்களது ஆய்வுகளில் தனித்து இயங்கும் குழு மணத்தை நிராகரிக்கிறார்கள். கும்பலின் தனி மனிதர்களின் மனம் நன்றாக இயங்குவதாகவே கூறுகிறார்கள். வெண்முரசில் வெகுமக்கள் நேர்மறை எதிர்மறை என இரு விதங்களிலும் சித்தரிக்கபடுகிறார்கள். அவர்கள் அறத்தின் காப்பாளர்களாக சூட்டபடுகிறார்கள். பாண்டுவின் மரணம், வாரனவதம் என பல்வேறு இடங்களை கூறலாம். அவ்வகையில் கர்ணனை கண்டு எழுச்சிகொள்ளும் சித்திரம் மனதை விட்டு நீங்காமல் நிறைக்கிறது. “கர்ணனின் புரவி விரைந்ததைக் கண்டு துரியோதனனின் கரிய புரவியும் விரைவு கொண்டது. அவர்கள் மேய்ச்சல் நிலப்பரப்பை கடந்தோட இருநாய்கள் வால்களைச் சுழற்றியபடி மகிழ்ச்சியுடன் பின்னால் துரத்தி வந்தன. வேளிர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து படைக்கலங்களையும் உழுபடைக்கருவிகளையும் ஏந்தியபடி தெருக்களில் வந்து குழுமினர். பெண்களும் குழந்தைகளும் முதியவரும் வழிகளை அடைத்தனர். முன்னால் நின்ற முதுமகன் உரத்தகுரலில் “எங்கள் ஊருக்குள் படைகள் நுழையலாகாது. எங்கள் உடல்கள் மேல்தான் புரவிகள் செல்ல வேண்டும்” என்று கூவியபடி முன்னால் ஓடினான். முழு விரைவில் வந்த கலிங்கப் புரவிகள் அந்தத் தடையை எதிர்பாராததால் தயங்கி பிரிந்து விலக அவர்களுக்குப் பின்னால் வந்த புரவிகளால் முட்டுண்டு குழம்பி சிதறிப் பரவினர். “விலகுங்கள்… விலகுங்கள்” என்றான் தலைவன். “கதிர்மைந்தருக்காக இங்கே குருதி சிந்துவோம். எங்கள் குலங்களுக்கு அன்னமிட்ட வெய்யோன் அறிக நாம் அவனுக்கு அளிக்கும் கொடையை” என்றாள் ஒருத்தி. மிகுந்த மன எழுச்சியை அளித்த பகுதி இது. வாரணவத பகுதி, குந்தி பாண்டுவை இழந்து நகர் புகுதல் என பல்வேறு பகுதிகள் எழுச்சியூட்டுபவை.

எஸ்பினாஸ் ஒரு உயிரியல் நிபுணர் அவர் உயிரணுக்களின் செயல்பாட்டில் உள்ள ஒருமையை கொண்டு “கூட்டு நனவிலி” கோட்பாடை முன்வைத்தார். குழு மனத்தை “சமூக நனவிலி” என்கிறார். வெளியிலிருந்து அதன் பண்பாட்டு கூறுகள் தாக்கப்படும் போது அதற்காக எழுகிறது என்கிறார். துர்கிம் ‘சமூக நனவிலி ‘ கோட்பாடை மேலும் முன்னெடுக்கிறார். ஒரு வேதியல் கூட்டு அணு பல்வேறு இயல்புகள் தனித்தனி அணுக்களால் ஆனதாக இருந்தாலும் அதன் மொத்த இயல்பு வேறாக இருக்கிறது. ‘சமூக நனவிலி’ தனி மனிதர்களால் உருவானதாக இருந்தாலும் அதன் இயல்பு வேறாக இருக்கிறது. சமூக நனவிலி தனி மனிதனின் நனவிலியை காட்டிலும் மேலானது என்கிறார் துர்கிம். வெய்யோனில் வரும் நாகர்களின் பகுதி, வண்ணக்கடல் பகுதியில் வரும் அசுரர்கள் பகுதி, இடும்ப வதம் ஆகியவை ‘சமூக நனவிலிக்கு’ உதாரணமாக கொள்ள முடியுமா என நோக்கலாம்.

பொறுப்பேற்க வேண்டியதில்லை, பின்பற்றுதல், குறைந்த அறிவு திறன், தூண்டுதல், அடையாளமின்மை, ஆழ் மன இச்சைகள், ஆளுமைகளின் தாக்கம், கீழ்படிதல் என பல்வேறு காரணிகளின் கலவையாகவே கும்பல் மனப்பான்மையை உருவாகிறது.

பண்பாட்டு தாக்கம் போதிய அளவிருந்தால் மனிதன் கும்பலின் பகுதியாக அத்தனை எளிதில் கலக்க மாட்டான். அதே போல் அவனது பண்பாட்டு புலமும் கும்பலின் பண்பாட்டு புலமும் நேரெதிராக இருந்தாள் அப்போதும் அவன் அதன் ஒரு பகுதியாக ஆக மாட்டான். வெண்முகில் நகரத்தில் பூரி சிரவஸ் திரளுக்கு வெளியே நின்று நோக்குகிறான். “திரௌபதியின் வருகை மட்டுமல்ல அவர்களுக்கு. அதன்பொருட்டு ஒட்டுமொத்த நகரமுமே தன்னை ஒரு கலையரங்காக ஆக்கிக்கொண்டிருந்தது. முகபடாமணிந்த யானைகளும் இறகணிசூடிய புரவிகளும் கவச உடையணிந்த காவலர்களும் வண்ணத்தலைப்பாகைகள் அணிந்த ஏவலர்களும் சூதர்களும் அயல்நாட்டினரும் அவர்களை மகிழ்விக்க நடித்துக்கொண்டிருந்தனர்.”

அந்த எண்ணம் வந்ததுமே அனைத்தும் அப்படி தோன்றத்தொடங்கிவிட்டது. உண்மையிலேயே நடித்துக்கொண்டிருந்தனர் அவர்கள். அவர்கள் மேல் நூற்றுக்கணக்கான விழிகள் படும்போது அவ்விழிகளுக்கு எதிர்வினையாற்றாமலிருக்கமுடியவில்லை. கீழே கிடந்த ஒரு தலைப்பாகைச்சுருளை ஒரு வீரன் வேல்நுனியால் சுண்டி எடுத்து சுழற்றி அப்பால் இட்டான். குதிரையில் சென்ற ஒருவன் தேவையில்லாமலே அதை வால்சுழற்றி தாவச்செய்தான். தானும் கேளிக்கையாளனாகி நடித்துக்கொண்டிருக்கிறோமோ என அவன் நினைத்துக்கொண்டான். அந்நினைப்பே அவன் அசைவுகளை செயற்கையாக ஆக்கியது.
வெண்முரசின் வெகுமக்கள் பல்வேறு வகைகளில் ஒரு பாத்திரமாக உருவாகி நாவலில் பங்கேற்கிறார்கள். நாவலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகிறார்கள்.

திரௌபதி துகிலுரிப்பின் போது அவை நிறைந்த பெண்கள் அவளை சூழ்வது, வண்ணகடலில் சன்னதத்தில் சூலத்தில் பாய்ந்து உயிர்விடும் துறவிகள், என இன்னும் பல வெகுமக்கள் பங்கேற்புக்கள் வெண்முரசில் விரவிக்கிடக்கின்றன. மேலும் விரிவாக விவாதிக்க இடமுண்டு. இக்கட்டுரையை எழுத தூண்டிய சொல்வளர்காடின் இப்பகுதியுடன் நிறைவு செய்வதே நியாயமாக இருக்கும்.

மரவுரி ஆடையை இடையில் நன்றாகச் சுற்றியபடி யுதிஷ்டிரர் முதலில் நடந்தார். தொடர்ந்து திரௌபதி சென்றாள். பீமனும் அர்ஜுனனும் தொடர்ந்து செல்ல நகுலனும் சகதேவனும் அவர்களுக்குப்பின்னால் சென்றனர். முகப்பில் தௌம்யர் தன் மாணவர்களுடன் நடந்தார். இறுதியில் சௌனகர் சென்றார். அரண்மனையின் அனைத்துச் சாளரங்களிலும் உப்பரிகைகளிலும் முகங்கள் செறிந்திருந்தன. கீழே இடைநாழியில் தோளோடுதோள் ஒட்டி காவலரும் ஏவலரும் நின்றிருந்தனர். முற்றத்தின் ஓரங்களில் அசைவற்ற குறுங்காடு போல அரண்மனைச்சூதர் நெருங்கி நின்றனர்.

அரசப்பாதையில் அதற்குள் மக்கள் கூடத்தொடங்கியிருந்தனர். அவர்கள் அவ்வழி செல்லக்கூடுமென முன்னரே அவர்களுக்கு தெரிந்திருந்தது. அவர்களைப் பார்த்தவர்கள் குரல்கொடுக்க வீடுகளுக்குள் இருந்தும் ஊடுபாதைகளுக்குள்ளிருந்தும் மக்கள் வந்து கூடினர். கூப்பியகைகளுடன் நீர் வழியும் விழிகளுடன் வெறுமனே அவர்களை நோக்கி நின்றனர். அவர்களின் நோக்குகளுக்கு நடுவே யுதிஷ்டிரர் கைகளைக் கூப்பியபடி தலைகுனிந்து நடந்தார். அவர் மாலைவெயிலில் தழல்போல சுடர்விட்ட தாடியுடன் தெய்வமுகம் கொண்டிருந்தார். திரௌபதி எதிர்வெயிலுக்கு விழிகூச மரவுரியால் தன் முகத்தை மறைத்துக்கொண்டு நடந்தாள். தொலைவுப்புள்ளி ஒன்றை நோக்கியவனாக அர்ஜுனன் செல்ல பீமன் சிறிய விழிகளால் இருபக்கமும் நோக்கி கைகளை ஆட்டியபடி கரடியைப்போல நடந்தான்.

அவர்கள் செல்லச்செல்ல இருபக்கமும் செறிந்த கூட்டம் அணுகி வந்தது. ஓசைகளும் கூடின. அவர்கள் ஒருவரை ஒருவர் முட்டி முன்னால் வர பூசலும் உதிரிச்சொற்களும் விம்மல்களும் தேம்பல்களும் கலந்து ஓசையாயின. ஒரு முதியவள் கூட்டத்திலிருந்து கிளம்பி கைகளை விரித்து “பெண்பழி சூடிய இந்நகர் கல்மீது கல்நிற்காது அழிக! என் கொடிவழியினரும் இதற்காகப் பழிகொள்க!” என்று கூவியபடி திரௌபதியை நோக்கி ஓடிவந்தாள். காலிடறி அவள் சாலையிலேயே குப்புற விழ தொடர்ந்து வந்த இரு பெண்கள் அவளை தூக்கிக்கொண்டனர். முதியவள் மண்படிந்த முகத்தில் பல் பெயர்ந்து குருதிவழிய “கொற்றவையே! அன்னையே! உன் பழிகொள்ளுமாறு ஆயிற்றே” என்று கூச்சலிட்டாள். சன்னதம் கொண்டவள்போல அவள் உடல் நடுங்கியது. அப்படியே மண்டியிட்டு திரௌபதியின் கால்களை பற்றிக்கொண்டாள்.

மேலும் மேலும் பெண்கள் அழுதபடி, கைவிரித்துக் கூவியபடி, வந்து திரௌபதியை சூழ்ந்துகொண்டார்கள். அவள் மரவுரியாடையைத் தொட்டு கண்களில் ஒற்றினர். அவள் காலடியில் தங்கள் தலைகளை வைத்து வணங்கினர். அவள் கைகளை எடுத்து சென்னிசூடினர். அவள் அவர்கள் எவரையும் அறியாமல் கனவில் இருப்பவள் போலிருந்தாள். சற்றுநேரத்தில் பாண்டவர் ஐவரும் விலக்கப்பட்டு அவள் மட்டும் மக்களால் சூழப்பட்டிருந்தாள். அவளைச் சூழ்ந்து பெண்களின் உடல்கள் வண்ணங்களாக கொந்தளித்தன. குரல்கள் பறவைப்பூசலென ஒலித்தன.
….
குனிந்து அஸ்தினபுரியின் மண்ணைத் தொட்டு சென்னிசூடியபின் கைகூப்பி யுதிஷ்டிரர் கோட்டைவாயிலை நோக்கி சென்றார். “அரசே! அரசே!” என்று கூவியபடி கூட்டம் கைகூப்பி கண்ணீர்விட்டு நின்றது. எவரோ “குருகுலமுதல்வர் வாழ்க! மூத்த பாண்டவர் வாழ்க!” என கூவினார். “அறச்செல்வர் வாழ்க! அஸ்தினபுரியின் மைந்தர் வாழ்க!” என கூட்டம் வாழ்த்தொலி எழுப்பியது.

வாழ்த்தொலி நடுவே நடந்த தருமன் கோட்டைவாயிலை அடைந்து அதைக் கடந்ததும் ஒரு முதிய முரசறைவோன் வெறிகொண்டு ஓடிச்சென்று முழைத்தடிகளை எடுத்து முரசொலிக்கத் தொடங்கினான். ஒருகணம் திகைத்த வீரர்கள் ஒற்றைக்குரலில் “குருகுலமூத்தோர் வாழ்க! அறச்செல்வர் வாழ்க!” என வாழ்த்தினர். நூற்றுவர்தலைவர்கள் கைநீட்டி கூச்சலிட்டு அவர்களை தடுக்கமுயன்றனர். மேலும்மேலும் கோல்காரர்கள் சென்று முரசுகளை முழக்கினர். சற்றுநேரத்தில் நகரமெங்கும் முரசொலிகள் எழுந்தன. அஸ்தினபுரி பெருங்களிறென பிளிறி அவர்களுக்கு விடையளித்தது.

நன்றி
சுந்தரவடிவேலன்
அருணாசலம் மகராஜன்

Major Theories to Explain: Why the Crowd Behaves in a Particular Way

https://en.wikipedia.org/wiki/Collective_behavior
https://www.britannica.com/topic/collective-behaviour

Advertisements