மகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு

வண்ணக்கடல் –  முன்னுரையில் ஆசிரியரே சொல்வது போல,  இது வண்ணங்களின் கதை அல்ல. வண்ணத் திரிபுகளின் கதை. வண்ணபேதங்கள் ஒன்று கலந்தால் எஞ்சுவது அதன் ஆதி வண்ணம். கருமை. இருளின் வண்ணம். குரோதத்தின் வண்ணம். பேராற்றலும், பேரன்பும், பெருந்தன்மையும்  துதிக்கையாக, தந்தமாக, மத்தகமாகக் கொண்டு மாவேழமென எழும் துரியன், அவனை மகாக்ரோத ரூபனாக்க  உயர்ந்து வந்த  நியதிகளின் கதை.

இளநாகன்:

ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன்,   பதினாறு வயது, ஏழுதெங்குநாட்டு சேந்தூர்க்கிழான் தோயன்பழையன்  அவையில்   பாடிப் பரிசில் பெறக் காத்திருக்கிறான். பாணர்களின் சொல்மறம் அறியா  பழையன்  அவையில் பாணர்களுக்கு நிகழும் அவமதிப்புக்கு  நிகராக  பழயனை இளிவரல் செய்து கவி இயற்றி  அவன் முன்பே  பாடிக் காட்டுகிறான்.

மிக மிகப் பிந்தி இதை உணரும் பழயனின் காவலர்கள் வசமிருந்து தப்பி வடக்கு நோக்கி நகர்கிறான்.  மதுரை, புகார், காஞ்சி, வெற்றித் திருநகர், நெற்குவை நகர், அரசப் பெருநகர், களிங்கபுரி, கதிரெழு நகர், பொன்னகரம் வழியே பல்வேறு பெண்கள், பல்வேறு போதைகள், பல்வேறு பாணர்கள், வித விதமான நிலக் காட்சிகள், ஒன்றை ஒன்று மறுக்கும், பின்னிக் கடக்கும், தொகுக்கும் மெய்த் தேட்டங்கள், உணர்வு நிலைகள், வழியே  அஸ்தினபுரியை நோக்கி பயணிக்கிறான்.  அகத்திலும் புறத்திலும் அவனை செலுத்தும் தேடல்களுடன், சூதர்கள் நாவில் அழியாச்சொல்லென வாழும் பலநூறு அஸ்தினபுரிகளில் ஏதோ ஒன்றினில் அவனும் ஒரு சொல்லாகி நிறைகிறான்.

அவன் காணும் இரண்டு தலையாய நிலக் காட்சிகளில் ஒன்று, முதுமதுரை. கடல் கொண்ட பஃறுளி  ஆற்றைக் கடந்து காணும் முது மதுரை. இரண்டாவது  விண்ணில் இருந்து விழுந்த அசுரர்களின் நகரமான ஹிரண்மயம்.  வெண்முரசு வரிசையில் வளர்ந்துகொண்டே வரும்  நில, பருவ கால மாற்றங்களின்  அழகிய சித்தரிப்பின் வளர்ச்சி  இந்த நாவலில் பல இடங்களில் அழுத்தமாகவும், சில இடங்களில் பூடகமாகவும்  முன் வைக்கப்படுகிறது. குறிப்பாக  காடு நீங்கி தன் மைந்தர்களுடன்  அஸ்தினபுரி  செல்லும் குந்தி, கடந்து செல்லும் நிலங்களில், கந்தமாதன மலையும் ஒன்று.  அவர்கள் கடந்து செல்லும் அம்மலைதான் அடுத்த நாற்பதாண்டுகளில் எரி குழம்பு பொங்கும் எரி மலையாகிறது,  சொல்வளர்காடு நாவலில் தருமனை மாந்தாதாவாக மாற்றும் அந்த எரிமலை  இப்போது உறங்கிக் கொண்டிருக்கிறது.   இந்த நாவலின் குறியீட்டு ரீதியான அழகாக இக்காட்சி மாறுகிறது. நாவலின் மொத்த மையமும்  உறங்கிக்கொண்டிருக்கும் எரிமலை ஒன்று, உறுமத் துவங்கும் கணத்தை நோக்கியதே.

இளநாகனின் பயணத்தில்  இரண்டு நிறுத்தங்கள் முக்கியமானவை.  அவன் விதவிதமான அனுபவங்களைக் கடந்து சென்றாலும், அவனது அகத்தை ஒரு எல்லையில் ஒளியாலும் மறு எல்லையில் இருளாலும்  வகுத்து வரம்பமைத்த இரு நிறுத்தங்கள்.

வெற்றித் திருநகரை ஆளும், கிருஷ்ணப்ப வீரகுந்தலரை விட உயர்ந்து நிற்கும், இல்லை என்றார்க்கு இல்லை எனாது உணவிடும்  சென்னம்மையின் பண்பு கீகடரின் சொல்லில் பாடலாகும் நாள்.   இன் நிலமாளும் அன்னையை  தரிசித்து விட்டீர் பாணரே  உம்மை வணங்குகிறேன், என்று மன்னனே பாணரை வணங்கும் மாண்பு. பாரதப் பண்பாடு கண்டடைந்த ஒளி.  இளநாகன் பயணத்தில் ஒளி நிறைந்த நிறுத்தம்.

வித விதமான மெய்த்தேட்டங்களின் பாதைகளை அறிகிறான் இளநாகன். சைலஜமித்ரர் புகார் நகரின் மத்தியில்  உணவு படைக்கப்படும்  சதுக்கபூதம்  தொட்டு  சாங்கியத்துக்குள் நுழைந்து அதன் நோக்கை விளக்குகிறார்.

அஸ்தினபுரியின் சௌனகருடன் இணைமாணவனாக இருந்த சகபாணன் காரகன், தார்க்கிகம்  வகுத்துச் சொல்லும் மெய்மை நோக்கை உரைக்கிறான். நெற்குவை நகரில் நாகநந்தி வசம் அருக நெறியை கேட்டு அறிகிறான். கலிங்கபுரியில் நீர்த்துமி பறக்கும் அறைக்குள், பெருமழை பொழியும் இரவில், ஆர்ப்பரிக்கும் கடல்முக நகரில் வைசேஷிக மெய்மையை கேட்டறிகிறான். பொன்னகரத்தில் சூதர் சொல் வழியே ஜடவாதம் அறிகிறான். எல்லா தரிசனங்களும் ”கண்டு” உரைப்பதை பாரத நிலமெங்கும் அலைந்து கேட்டு அறிகிறான் இளநாகன். ஆம் கேட்டு மட்டுமே அறிகிறான்.   காளாமுக மெய்மையை மட்டும் ”கண்டு” உணரும் வாய்ப்பு அவனுக்கு கிட்டுகிறது.

நாவலின் இறுதியில் வரும் சூதர்பாடலில், பாரத நிலமெங்கும் பாடப்பட்டுக் கொண்டிருக்கும் பாரதக்கதைகளின் நிலை சொல்லப்படுகிறது. ஒரு நாவில் இன்னும் தருமன் பிறக்கவே இல்லை, வேறொரு நாவில் தருமன் சொர்க்கத்தின் வாயிலில் தனியே நிற்கிறான்.  எனில்  இளநாகன்  பாரதக்கதையின் வேறு பகுதிகளை கேட்காமல், ஏன் குரோதம்  முளைத்த  தருணக் கதைகளை கேட்கிறான்?   காரணம்  காளஹஸ்தி  இரவில் இருக்கிறது.  காளாமுக  மார்க்க  ”முக்தியை” மட்டுமே  இந்தப் பயணத்தில் இளநாகன் நேரடியாக கண்டு உணர்கிறான். இளநாகன் காணும் இருள் நிறுத்தம். இருளையே ஆதி அந்தமாகக் கண்டு  அதில் கரையும் மார்க்கம்.  இந்த  இருள் வழியே  சூரியமைந்தன் போன்ற மாமனிதர்களும் சென்று வீழும் ஆதி இருளை புரிந்துகொள்ள விழையும் இளநாகனின் யத்தனமே  இக்கதைகள் அவன் முன் விரியக் காரணமாகிறது.

குந்தி:

கிராதம் நாவலில்  நெறி தவறி, கட்டற்ற படைப்புத் தொழிலில் இறங்கித் திளைக்கும் பிரம்மனைத் தடுக்க,  காலபைரவன் எழும் சித்திரம் மிக உக்கிரமாகவும் அமானுஷ்யமாகவும் உருவாகி இருக்கும்.  அதன் நேர் எதிர் வடிவம்  சோமசகலிகரின் பாடல் வழியே இந்த நாவலில் நிகழ்கிறது. பிரம்மனிடம் முடியல முடியல என்று கதறுகிறார் விஷ்ணு. பிரம்மனை கட்டுப்படுத்த அவர் உருவாக்கிய சிவம், கணக்கு சொல்லிக் கொண்டு நிற்கிறார்.  விஷ்ணுவின் புலம்பல் அனைத்தும் வேதமாகிறது. இப்பிரபஞ்ச நிகழ்வின் காரணமான முத்தொழிலும் நகைச்சுவையாக  முன் வைக்கப்பட்டு அங்கிருந்து  பாண்டவ கௌரவ பிறப்புக்கு செல்கிறார் கலிகர்.

தருமன் காணும் உலகம் ஒலிகளாலும், பீமன் காணும் உலகம் மிருகங்களாலும், அர்ஜுனன் காணும் உலகம் பறவைகளாலும், நகுலனின் உலகம் வண்டுகளாலும், சகதேவன் காணும் உலகம் பூக்களாலும் அவர்கள் முன்னே உருவாகி விரிந்து அவர்களை அழைக்கிறது. ஐவருடனும் குந்தி, அஸ்தினபுரி  செல்ல வனம் நீங்குகிறாள்.  வன எல்லை  நதியில் அவள் உளஉலகின்  கார்க்கோடகன்  எழுந்து வருகிறான். கர்ணனை அவளுக்கு காட்டுகிறான்.

// ஒளிரும் இரு கருவிழிகளை. குடுமிக்கட்டில் இருந்து மீறி தோளிலாடிய சுரிகுழலை. கூர்ந்த நாசியை. வெண்பல் தெரிய சற்றே மலர்ந்த உதடுகளை. ஒளிவிடும் மணிக்குண்டலங்களை. குழந்தைமை விலகா இளமார்பை. நீண்ட கைகளை.

அவனுடைய உள்ளங்கைகள் சிவந்து மென்மையாக இருந்தன. அவள் அந்தக்கைகளை நோக்கியபின் வேறெதையும் நோக்கவில்லை. அணைப்பவை. கண்ணீர் துடைப்பவை. அன்னமளிப்பவை. அஞ்சேலென்பவை. வழிகாட்டுபவை. வருக என்பவை. என்றுமிருப்பேன் என்பவை. எஞ்சுபவன் நானே என்பவை. என்னிலிரு என்பவை. கைகள். அக்கைகள் மலர்ந்த மரமென அவனுடல்.//

உனக்கென்ன வேண்டும்? கார்கோடகனின் வினா.

“நான் ஓர் அன்னை” என்று குந்தி சொன்னாள். “அன்னையர் வேண்டுவது மைந்தரின் நலம் அன்றி வேறென்ன? என் மைந்தன் அஸ்தினபுரியை ஆளவேண்டும். அவன் தம்பியர் அவனைச்சூழ்ந்து காக்கவேண்டும். என் குலம் அவர்களின் குருதியில் தழைக்கவேண்டும்.”

கார்கோடகன்:  பாண்டுவின் கானீனபுத்திரனான இளஞ்சூரியனே வைதிகமுறைப்படி அஸ்தினபுரியின் அரியணைக்குரியவன் என்பதை நீ மன்றுகூட்டிச் சொன்னால் அவர்களால் மறுக்கவா முடியும்?”

குந்தி  வாளேந்தி கர்ணன் உடலை வெட்டி சிதைக்கிறாள்.    அவள் வேண்டுவது  மிக அருகில் இருந்தும் அதை குந்தி ஏன் தவிர்த்தாள்?

பூக்குலைகளில் தேனுண்ணப் பூசலிட்டன பூச்சிகள். அவற்றைத் துரத்தி வேட்டையாடின பறவைகள். ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று வேட்டையாடிக்கொண்டிருந்தது. கொல்வனவற்றின் உறுமலும் இறப்பவற்றின் ஓலங்களும் இணைந்தெழும் ஓங்காரத்தில் அனைத்தும் பிணைக்கப்பட்டிருந்தன.

இதுதான் இப்போது குந்தி காணும் உலகு. குந்திதான் கர்ணனை நகுல சகதேவர் அருகே இருக்க அனுமதிக்கிறாள், குந்திதான் கர்ணனுக்கு தனுர்வேதம் கற்க உத்தரவளிக்கிறாள், இந்திரமைந்தனும், சூரியமைந்தனும் களத்தில் எதிர் நிற்கிறார்கள். சொல்வளர்காடு நாவலில் மைந்தர் கான் புகும்போது  தருமனுக்கு ஆசி அளிக்கும் குந்தி சொல்கிறாள்  ”ஆம், இப்போது உணர்கிறேன். இவை அனைத்துக்கும் நானே காரணம்.”

ஆம் அனைத்துக்கும் காரணம் குந்திதான்.  குந்தியாகி மண் நிகழ்ந்ததோ அந்த மகா மாயை!

துரோணர்:

ஹ்ருதாஜி  என்னும் வேடப்பெண்ணுக்கும், பரத்வாஜர் எனும் பிராமணனுக்கும் பிறந்து தனுர் வேதம் கற்று, வேடனாகவோ, பிராமணனாகவோ, சத்ரியனாகவோ ஏதோ ஒரு குலத்துக்குள் அமைய முடியாமல்  அவமதிப்பின் துயரில் விளைந்த கண்ணீரில் உழலும் துரோணர்.

தந்தையைப் பார்த்துக் கொண்டு மட்டுமே சமையலறைக்குள் வாழும் துரோணர். தந்தையின் மிச்சிலை ஆவலுடன் உண்ணும் துரோணர்.  தந்தை அருகே துரோணர் செல்லும் முதல் வாய்ப்பு, ஒரே வாய்ப்பு அப்போதே முடிகிறது. துரோணர் புல்லை எடுத்து பறவையை வீழ்த்தியதும் பரத்வாஜர் அடையும் ஆசுவாசம். துரோணர் அடைந்த துயர்கள் அனைத்தையும் காட்டிலும் எடை கூடியது.  தன்னை வளர்த்த சமையலர் விடூரரை அவரது முதுக்குக்குப் பின்னால் தந்தையே என அழைத்துவிட்டு அவர் திரும்புவதற்குள் அக்னிவேசர் குடிலுக்குள் ஓடி  மறையும் துரோணன்.  கலங்க வைக்கும் தருணம்.

துரோணன் சிறந்த மாணவனாக உயர்கிறான். குல அவமதிப்பு கூடவே உயர்கிறது. குரு சேர்க்க மறுக்கும் மாணவனை, அவன் தன்னை பிராம்மணோத்தமரே என விளித்தமைக்காக அவனை தனது மாணவனாக சேர்த்துக்கொள்கிறான்.  பாஞ்சாலத்தின் பாதியை அவனுக்கு அளிப்பதாக வாக்களிக்கிறான் அந்த மாணவன். மாணவன் பெயர்  துருபதன்.

அக்னிவேசர் மரணத் தருவாயில், துரோணரை பரசுராமர் வசம் அனுப்புகிறார். துரோணர் குல அடையாளத்தை பெறும் வாய்ப்பு நூலிழையில் தவறுகிறது. அவர் சரத்வானை கை காட்டுகிறார். சரத்வான் துரோணரை மனையறம் கண்டு அமைந்து இத்தவிப்பில் இருந்து ஆறுதல் அடைய வழி காட்டுகிறார். கிருபி அவருக்கு மனைவி ஆகிறாள். அஸ்வத்தாமன் பிறக்கிறான். நிமித்திகர் வசம் துரோணர் சொல்கிறார் ”விடூரர் மகன் துரோணன் சத்ரியனுக்கு மைந்தன் பிறந்திருக்கிறான்.”

தான் அடைந்த இழிவு ஏதும் அவனை அண்டாமல் காக்கிறார் துரோணர். அவரது ஏழ்மை அவனைத் தொடுகிறது. கிருபி துரோணர் வசம் சொல்கிறாள் ”நீர் எக்குலம் என நீர் தீர்மானித்திருக்கிறீரோ அக்குலத்தொழில் ஏதேனும் செய்து இந்த வறுமையை நீக்குங்கள்.” கண்ணீருடன் புறப்படும் துரோணர்,  துருபதனை சந்திக்கச் செல்கிறார். வாசலிலேயே அவமானப்படுகிறார். இறுதியில் துருபதன் வருகிறான். வாழ்வின் ஆகச் சிறந்த அவமதிப்பை அவன் வழங்குகிறான்.

சரத்வான் ஒரு முறை துரோணர் வசம் சொல்கிறார் “ஒருவனுள் அணையாமல் எரியும் பெருங் குரோதமே அவனை பிராமணனில் இருந்து சத்ரியன் ஆக்குகிறது.”

அணையாத குரோதம் கொண்டவர் ஆகிறார் துரோணர்.

கர்ணன்:

சூரிய விழவு துவங்கி, அங்கு உதிக்கும் கர்ணனின் தோற்றமே அவனுக்கு எதிரிகளை கொண்டு வந்து விடுகிறது, அவன் இருக்கும் குலமே அவனுக்கு கீழ்மைகளை கொண்டு வந்து விடுகிறது. இந்த நிலைக்கு உள்ளூர அஞ்சியபடியே வாழ்கிறாள் ராதை.   சூரியன் தனது மைந்தனை காண வருகிறான். கண் தொட்டு பெருங்கல் ஒன்றினை பொன்னாக்கித் தருகிறான்.  கர்ணன் அதை படகில் ஏற்றி ஆற்றில் விடுகிறான்.

கர்ணன் நீரைத்தொட்டு “கங்கையே, வாழ்நாளெல்லாம் பிறர் பசியைப்பற்றி மட்டுமே எண்ணுபவன் ஒருவன் இன்றுகாலை உன்னில் நீராடுவானென்றால் அவன் கையில் இதைக்கொண்டுசென்று கொடு. இதை அளித்த கர்ணன் அந்த மாமனிதனின் பாதங்களில் மும்முறை பணிந்தெழுந்து இதை அவனுக்கு காணிக்கையாக்கினான் என்று சொல். ஆணை! ஆணை! ஆணை!” என்று சொல்லி ஒரு துளி எடுத்து சென்னியில் விட்டுக்கொண்டு திரும்பினான். “எந்தையே, பெருஞ்செல்வத்தைக் கொண்டு நிறைவடையும் வழி இது ஒன்றே.”

சென்னம்மையையும்  கர்ணனையும் இணைக்கும் இச்சரடு  இக்கணத்தை மீள மீள வாசிக்க வைக்கும் ஒன்று.  கர்ணன் அஸ்தினபுரி நுழையும் பிரம்மமுகூர்த்தத்தில் வானத்து சூரியனும் உடன் உதித்து உயரும் வர்ணனை இந்த நாவலின் அழகுகளில் தலையாயது.

நகர் நுழைகிறான். கிருபர் வசம் மாணவனாக சேர்க்கப்படுகிறான்.  பீமனாலும் அர்ஜுனனாலும் அவமதிப்பை சுமக்கிறான்.  அவமதிப்புகளின் உச்சம்  துரோணர் முன் பீமன் கேட்பது. துரோணருக்காவது  அத்தனை அவமதிப்பு கடந்தும் இவர்தான் எனது குருதித் தந்தை என சுட்டிக்காட்ட ஒருவர் இருக்கிறார். கர்ணனுக்கு? உள்ளே அவமதிப்பில் வெந்து தகிக்கும் ஆன்மாவை சுமந்தபடி கர்ணன், துரோணர் குருநிலையை விட்டு வெளியேற, வெளியேறும் அவனது  அவமதிப்பின் வெம்மையை உணர்ந்தபடி உள்ளே வருகிறான் ஏகலவ்யன்.

ஏகலவ்யன்:

ஏகலவ்யனைக் கண்ட நொடி முதல் மனம் பேதலிக்கிறார் துரோணர்.  குசை அன்னை மடியில் படுத்து, உள்ளே கதறி அழுதபடி அவனை மறுத்து அனுப்புகிறார்.

துரோணர்  அக்னிவேசரின்  குருநிலையில் ஆசிரியராக இருக்கையில், அவரிடம் பயிற்சி முடித்த இளவரசர்கள் அவருக்கு காணிக்கை தர விரும்புகையில், துரோணர் ”வேதியருக்கு, ஆநிரைகளுக்கு, அறத்துக்கு உங்கள் வில் துணை நிற்கட்டும். அது போதும். அதுவே எனக்கான காணிக்கை” என்கிறார்.  இளவரசர்கள் உள்ளம் எரிய அதை சகித்துச் செல்கிறார்கள்.  அந்த துரோணர்  அர்ஜுனன் வசம் வாக்குறுதி கேட்கிறார். தனது மகனுக்காக.

 துரோணர் குடிலின் படலை மூடியபின் திரும்பி கனத்த குரலில் “உன் குருவாக என் ஆணை இது. நீ என்றென்றும் இதற்கு கட்டுப்பட்டவன்” என்றார். “ஆணையிடுங்கள் குருநாதரே” என்றான் அர்ஜுனன். “ஒருதருணத்திலும் நீ என் மைந்தனை கொல்லலாகாது. எக்காரணத்தாலும்” என்றார் துரோணர். மறுகணமே “ஆணை” என்றான் அர்ஜுனன். துரோணர் நடுங்கும் குரலில் “அவன் ஒருவேளை மானுடர் கற்பனைக்கே அப்பாற்பட்ட பெரும் அறப்பிழையை செய்தாலும்” என்றார். “ஆம், அவ்வாறே” என்றான் அர்ஜுனன்.

அவனருகே வந்து சற்று குனிந்து உதடுகள் நடுங்க துரோணர் சொன்னார் “நாளை உன் குலத்துக்கும் உனக்கும் பெரும்பழியை அவன் அளித்தாலும்… உன் பிதாமகர்களையும் அன்னையரையும் உடன்பிறந்தாரையும் மைந்தர்களையும் உன் கண்ணெதிரே அவன் கொன்றாலும் உன் கை அவனை கொல்லக்கூடாது.” அர்ஜுனன் “ஆம் குருநாதரே. மூதாதையரும் மும்மூர்த்திகளும் ஆணையிட்டாலும் அவ்வண்ணமே” என்றான். பெருமூச்சுடன் உடல்தளர்ந்த துரோணர் அவன் தலையில் கை வைத்து “மானுடரில் உன்னை எவரும் வெற்றிகொள்ளமாட்டார்கள்” என்றார்.

ஆக அஸ்வத்தாமன் எந்த எல்லை வரை செல்வான் என்பதை துரோணர் உள்ளுணர்வால் அறிந்தே இருக்கிறார்.

சுவர்ணை ஏகலவ்யன் வசம் சொல்கிறாள் ”காட்டில் கோடி மரம் உண்டு. மின்னல் ஏதோ ஒரு மரத்தைதான் தேர்ந்தெடுக்கிறது.”  ஏகலவ்யன் தானடைந்த கலையைக்கொண்டு உயரப் புகும் கணம்  துரோணர் வருகிறார். கரையற்ற அன்பு, அளவற்ற கோடை, மதியற்ற கருணை  இவற்றால் சரிந்த அசுர குலத்தின் வாரிசு, ஏகலவ்யனின் தந்தை வாக்களிக்கிறார். துரோணர் ஏகலவ்யனின் கட்டை விரலை காணிக்கையாகக் கேட்கிறார். கணமும் சிந்திக்காமல் காணிக்கை அளிக்கிறான் ஏகலவ்யன்.  அந்தக் காணிக்கையைத் தொட்டு துரோணர் ஆசி அளிக்கிறார் ”உன் விற்கலை வளரட்டும்.”

தந்தை கேட்கிறார் “இது என்ன அறம்? பிராமண அறமா? ஷத்ரிய அறமா?”  துரோணர் சொல்கிறார் ”பிராமணனாகவோ ஷத்ரியனாகவோ ஆக இயலாதவனின் அறம்.”

அன்னையின் சாபம் சுமந்து  துரோணர் அஸ்தினபுரி சேர்கிறார்.

அர்ஜுனன்:

நாவலுக்குள் இந்திர விழவின்  துவக்கத்தோடுதான் அர்ஜுனனின் வரவு நிகழ்கிறது.  தனது தனது எனும் விழைவைக் கொண்டே உருவாகும் ஷத்ரிய பாலகன். தனதென்று எண்ணும் அன்னை குந்தியின் அண்மையை  என்றுமே அடையாதவன்.  இந்திர விழவில்  விதுரனின் விழிகள் வழியே “வயதடைகிறான்”.  அன்னையை நோக்கிய அவ்விழிகளின் குணரூபத்தைக் கொண்டு, ”இங்குள்ளவற்றிலிருந்து” அர்ஜுனனின் முதல் விலகல் நிகழ்கிறது.  [மிக மிக பின்னால், கிராதம் நாவலில்  அர்ஜுனனின் ஊழ்கத்தில், விதுரராக தோற்றம் கொண்டு வரும் இந்திரன்தான் அர்ஜுனனின் விழிகளை நேராக சந்திக்கிறான்.]

விற்கலையில் முதன்மை கொள்ளும் அர்ஜுனனை கிருபர் பாராட்டும் போதே ”இந்திரனுக்கு இணையானவன் சூரியன். நான் ‘இங்கிருந்து’ அடைந்த அனைத்தையும் இங்கிருந்தே அவனாலும் அடைய முடியும்.  என் வில்லுக்கான நிகர் எதிரி அவனே”  என்கிறான்.

அஸ்வத்தாமன் உடன் அர்ஜுனன் கொள்ளும் கோபத்தின் வேர் ஆழமான உளவியல் சிக்கல் கூடியது. அர்ஜுனனுக்கு இணையான அவன் குருவுக்கு குருதியால் மகன். மாணவர்களாக குருவுக்கு இருவருமே சமம்தான்.  ஆனால் குருதி உறவு எனும் ஒரு எல்லையில் அர்ஜுனனின் பொறாமைக்கு ஆளாகிறான் அஸ்வத்தாமன். துரோணர் ஒரு சமயம் சொல்கிறார், இளம் குதிரை சம ஆற்றல் கொண்ட மற்றொரு இளம் குதிரையை தனக்கு நிகராக நிற்க அனுமதிக்காது,  அதுவே நிகழ்கிறது. வில் கோக்கும் தருணம் வருகிறது.  வித்தையில் தன் மகனை அர்ஜுனன் விஞ்சும் எல்லையில் குரு அர்ஜுனன் வசம் அஸ்வத்தாமன் உயிர்காக்க சத்தியம் வாங்கிக் கொள்கிறார். அர்ஜுனன் எதிரே ஒரு நிகர் எதிரி. ஆனால் என்றென்றும் கட்டப்பட்டுவிட்டது அர்ஜுனனின் கைகள். முழு ஆற்றலுடனும் இருந்து அதை பிரயோகிக்க வழி இன்றி நிற்கும்  நரக நிலையில், அவன் எதிரே கர்ணன் வருகிறான்.

குந்தியால் அவன் அரண்மனையில் நுழைகையில், அவன்  வில் கற்கும் முதல் புள்ளியிலேயே அனைத்தும் துவங்கி விடுகிறது. குந்தியின் அண்மையை இழந்து வளரும் அர்ஜுனன். இளமை பூக்கும் சூழலில் அவனுக்கு இணையான அல்லது மேலான கர்ணனை குந்தி அவர்கள் மத்தியில் கொண்டு வருகிறாள்.

அந்தச் சூழலில் விற்கலையில்  அர்ஜுனனைவிட கர்ணனே ஒரு எல்லை முன்னணியில் நிற்கிறான்.   எதிர்நின்று வில்லேந்துகிறார்கள். பீமன்  இடை புகுந்து தடுக்கிறான். என்ன செய்தால் கர்ணன் பின் வாங்குவானோ அதை செய்கிறான். ஒரு சூதனை தனது குருவாக கொள்ளும் பீமன். கர்ணனை சூதன் மகன் என இழிவு செய்கிறான். சொல் அந்தச் சூதனாவது உன் தந்தையா? நீர் தொட்டு சொல் என்கிறான். நூறு அம்பால்  நிகழ்த்த முடியாதை ஒரு சொல்லால் நிகழ்த்துகிறான். அவமானத்தால் குன்றி கர்ணன் வெளியேறுகிறான்.

அர்ஜுனனால் காயம்பட்ட யானை ஒன்று. அடங்காத சினத்துடன் கட்டற்று  உழல்கிறது. அந்த யானை  வேறொரு அரசுக்கு அந்த அரசின் மன்னனுக்கு ஒரு செய்தியாக பரிசளிக்கப் படுகிறது. அப்போது  அர்ஜுனன் தர்மன் வசம் சொல்கிறான் ”ஒருவனிடம் பெருவஞ்சம் கொண்டு விலகும் எதுவும், பிறிதொரு சமயம் அவன் எதிர் நின்றே தீரும். இயற்கையின் நியதி’.’

துரியோதனன்:

துரியனின் உலகம் பாறைகளால் ஆனதாக இருக்கிறது.  அவனால் சிதறடிக்கப்பட்ட பாறைகள், அவனால் சிதறடிக்கப்படவேண்டிய பாறைகள் இவற்றின் வழியே அவன் ஆற்றல் வளருகிறது.

”பாறைகள் கண்ணற்றவை. எதிரிகளை அவற்றால் நோக்க இயலாது. ஆகவே அதன் ஆற்றல் குன்றுவதில்லை” என துரியன் தம்பிகள் வசம் சொல்லும்போது தம்பிகள் ஏதும் புரியாமல் தலை ஆட்டுகிறார்கள்.  துரியன் தசைகள் நொறுக்கிப் பார்க்க விரும்பும் ஆற்றல் அவன் தந்தைக்குள் உறைந்து கிடக்கிறது.  செயல்படுத்திப் பார்க்க இயலா அளவற்ற ஆற்றல்  கொண்டு துரியன் ததும்பும் எல்லையில் பீமன் அவன் எதிரே வருகிறான்.

பீமன் வலிமையான உள்ளுணர்வு கொண்டவன்.  அர்ஜுனனும் கர்ணனும் எதிர் நிற்கும் அக் கணமே  பீமன் உள்ளுணர்வால் வெல்லப்போவது கர்ணன்தான் என அறிந்து விடுகிறான். அது நடந்தால் எதுவும், எந்த ஒழுங்கிலும் தரிக்காது. ஆகவே தான் எந்தக் கீழ்மைக்கு சென்றேனும் அவர்களின் சமரை நிறுத்துகிறான். அவனது வலிமையான உள்ளுணர்வே அவனது எதிரியை அவனிடம் அழைத்து வருகிறது. மிருகங்களால் விரியும் பீமன் உலகில் வேழமாக  அறிமுகமாகிறான் துரியன்.

கார்க்கோடகன் வழி காட்ட, துரியன் தனது உள்ளுணர்வால்  ஒரு வேழமென பீமனை எதிர்கொள்கிறான்.  பீமன் நகர் நுழையும் வரை கூட அவனது ஆற்றல் பொறுமை கொள்ளவில்லை. கானேகி மதம் கொண்டு திரியும் சியாமையை அடக்குகிறான்.  நகர் நுழையும் பீமனை கண்ணுக்குள் கண்ணாக சந்திக்கிறான். இரு வேழங்கள் இருள் ஆழத்தில் ஒரு கணம் மத்தகத்தால் மோதுகின்றன.

திருதா பீமனை சந்தித்த முதல் கணமே களிப்போர் வழியே நெருக்கம் கொள்ள, துரியனின் அகத்தில் முதல் இறுக்கம் விழுகிறது. துரியனும் பீமனும் ஒரு களிப்போர் வழியே நெருங்குகிறார்கள்.  பீஷ்மரின் வருகையில், அவர் பீமனைத் தவிர அனைவரையும் எந்தச் சலனமும் அற்று நோக்கிக் கடக்கையில், துரியனின் அகத்தில் குரோதத்தின் முதல் விதை விழுகிறது.

தம்பியர் புடை சூழ நிகழும் கானாடலில்  துரியன் அன்னைக்கரடி வசம் சிக்குகிறான். “துரியா உம் விடாதே கிழித்து வீசு” என திருதா ஒரு சொல் சொல்லி இருந்தால் அந்த விதை முளைக்காமல் போய் இருக்கும். அல்லது முளைக்கும் தருணம் சற்று விலகியாவது சென்றிருக்கும். திருதாவோ துரியனைக் காக்க பீமனுக்கு ஆணையிடுகிறார்.   பீமனால் காக்கப்பட்ட கணம் துரியனுக்குள் முளைக்கிறது வஞ்சத்தின் விதை.

துரியன் ஸ்தூனகர்ணனை சந்திக்கும் இடமும், அங்கு நிகழும் உளவியல் நாடகங்களும், தன்னுள் உள்ள பெண்ணைக் கொன்று துரியன் கொள்ளும் மாற்றமும் இந்த நாவலின் ஆணிவேர் தருணம். தன்னுள் அவன் கொன்ற பெண்ணே பின்னர் அவன் முன் திரௌபதியாக எழப் போகிறாள், கடக்க இயலாப் பெண்ணென எதிர் நிற்கப் போகிறாள், அவன் மகளெனப் பிறந்து மடி நிறைக்கப் போகிறாள். ஸ்தூனகர்ணனை நீங்குகையில் துரியன் அவன் வசம் சொல்கிறான் ”இனி எனக்கு தெய்வங்களும் இல்லை.”   நாவலுக்குள் ஒரு வரி வருகிறது, தெய்வங்களால் கைவிடப்படும் மனிதன் நிலையை விட, அத்தகு மனிதர்களால் கைவிடப்படும் தெய்வங்களின் நிலை  மேலும் துயரமானது.  தெய்வங்கள் அற்றவனாகி தெய்வங்களும் அஞ்சும் பழியை சுமக்கப் போகிறான். தெய்வங்கள் அற்ற துரியன் விழிகளை பீமன் காண்கிறான். விருகோதரன், வாயு மைந்தன், அச்சம் என்பதை அறியாதவன், முதன்முறையாக அஞ்சுகிறான்.

களம். பெரும் ஆசிரியர்களிடம் அறிவுப்பிச்சை இடுங்கள் என யாசகம் பெற்று ஆயுதம் பழகிய மாணவர்கள், தங்கள் திறன் காட்டும் இடம், அத்தனை தகுதிகளோடும் அர்ஜுனன் முன் குறுகி நிற்கும்  கர்ணன் அங்க மன்னன் ஆகிறான். அவன் தாள் பணிந்து அவனை அரசனாக்குகிறான் துரியன், பெண் பழி சூடிய பீஷ்மர், அன்னைப் பழி சூடிய துரோணர், நாளை  அன்னையின் சாபம் கொள்ளப்போகும் நூறு தம்பியர்  இவர்கள் மத்தியில் கர்ணனும் துரியனும் தோள் சேர்கிறார்கள். இந்திரன் மகனுக்கு எதிரே சூரிய மைந்தன். நாகருலக நஞ்சருந்தி நூறு யானை பலத்துடன் பீமன் எழுகிறான். பூத யாகம் செய்து கார்த்தவீர்யனின் நூறு கரங்களுடன் துரியன் எழுகிறான். பீமனுடன் துரியன் களிப் போரில் வீழ்ந்த துளி குருதியின் சுவையை  நினைவில் மீட்டியபடி காத்திருக்கிறது  களம்.

இருள் மெய்:

“காமம் குரோதம் மோகம் என்னும் இம்மூன்று இருள்களில் காமம் இன்னொரு ஆன்மாவைச் சார்ந்தது. மோகமோ புறவுலகைச் சார்ந்தது. எதையும் சாராமல் தன்னுள் தானென நிறைந்திருப்பது குரோதமேயாகும். குரோதம் அனைத்தையும் அவியாக்கி எரிந்தெழும் நெருப்பு. எரிதலின் பேரின்பம் அது. எரிதலின் உச்சம் அணைதலே. குரோதம் தன்னைத் தானழித்துக்கொள்கையிலேயே முழுமை கொள்கிறது.” – காளாமுக மெய்மை

[12.11.2016 அன்று சென்னையில் நடைபெற்ற வெண்முரசு கலந்துரையாடலில் ஆற்றிய உரை)

3 Comments (+add yours?)

 1. Logamadevi Annadurai
  Nov 16, 2016 @ 18:34:05

  சீனுவின் உரை அற்புதம்
  -லோகமாதேவி

  Like

  Reply

 2. R.Meenakshisundaram
  Nov 24, 2016 @ 22:35:40

  ILANAAGAN KAANUM MAHA KROTHA RUPAM- FINE.

  Like

  Reply

 3. R.Meenakshisundaram
  Nov 24, 2016 @ 22:37:58

  The lecture by Cuddalore Seenu about Maha Krotha Rubhaya is excellent.

  Like

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: