அருட்செல்வ பேரரசனுடன் மகாபாரத உரையாடல்

2017 ஆம் ஆண்டின் முதல் வெண்முரசு கூடுகையின் முத்தாய்ப்பாக அமைந்தது திரு அருட்செல்வ பேரரசனின் வருகையும், அவருடனான உரையாடலும். திரு அருட்செல்வ பேரரசன் குறித்த அறிமுகம், வெண்முரசு வாசகர்களுக்குத் தேவையில்லை. ஜெ வால் ‘உங்கள் தளத்திற்கு அடிக்கடி வருகிறேன், தகவல்களை சரி பார்க்க. உங்களுக்கு கடமைப் பட்டுள்ளேன்’, என வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றவர் இவர். இந்தியாவின் ஒப்பற்ற மகா காவியமான மகாபாரதம், உக்கிர சிரவஸ் சௌதியால் நைமிசாரண்ய வன ரிஷிகளுக்குச் சொல்லப்பட்டது. இப்பாரத நிலத்தில் புழங்கிய அனைத்துக் கதைகளும் வந்து இணைந்த கதைக்கடலான இது சமஸ்கிருதத்திலேயே இருந்தது. ஒருவகையில் இதுவே பாரதத்தின் முழுமையாக விரிவாக்கப்பட்ட மூலம். கி.பி 1883 முதல் 1896 வரை திரு. கிஸாரி மோகன் கங்குலியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அன்றும் அது ஒரு தனி நபர் முயற்சி தான். கிட்டத்தட்ட ஒரு முழு நூற்றாண்டு கடந்தும் இந்த மூல நூலின் மொழிபெயர்ப்பு இல்லை. உண்மையில் தமிழுக்கு ஒரு பெரிய இழப்பு. தமிழகத்தில் இருக்கும் சில தமிழ் பல்கலைக் கழகங்கள், இங்கு இருக்கும் நிதி ஆதாரங்களுடன் கூடிய பிற பல்கலைக்கழகங்களின் தமிழ் ‘இருக்கைகள்’, மக்கள் விளையாட பெரிய மனதுடன் தோரண வாயில் அமைத்து இடம் அளித்திருக்கும் செம்மொழி ஆய்வு நிறுவனம் போன்றவை ஒரு பெரிய குழு அமைத்து, பல ‘பேராசிரியர்கள்’, ‘பேரறிஞர்கள்’ இணைந்து தமிழுக்கு ஆற்ற வேண்டிய இப்பெரும்பணி இது. ஆனால் அவையெல்லாம் செய்யாததை, செய்ய முன்வராததை தன் சுய முனைப்பாலும், மகாபாரதம் மேலுள்ள விருப்பாலும், தன் தளரா ஊக்கத்தாலும் ஒரு தனி மனிதராகச் செய்து வருகிறார் இவர். ஆம், 2012 ஆம் ஆண்டு துவங்கி இப்போது வரை இந்த மூல மகாபாரதம் இவரின் முயற்சியால் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. தற்போது கர்ண பருவம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அருமுயற்சி அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும் வகையில் http://mahabharatham.arasan.info/ என்னும் தளத்தில் இலவசமாகவே தரப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பருவத்தையும் ஒலி வடிவிலும் வெளியிட்டு வருகிறார். அவரின் இம்முயற்சியில் அவருக்கு உறுதுணையாக விளங்கும் அவரது நண்பர் திரு. ஜெயவேல் மற்றும் அவரது துணைவி திருமதி. தேவகி ஜெயவேல் இருவரின் வருகையும் இம்மாலையை மேலும் இனிதாக்குகிறது.

பாரதம் என்னும் ஆதி படைப்பு:

ஒவ்வொரு மொழியிலும் காலத்தால் முந்திய படைப்புகள், மொழி அதன் முழு வளர்ச்சியை எட்டும் முன் எழுதப்பட்ட படைப்புகள், அவற்றின் காலாதீதமான தன்மையாலேயே, காலத்தைக் கடந்து வந்து நிகழ்காலத்தில் கிடைப்பதாலேயே செவ்வியல் தன்மையை எட்டிவிட்ட படைப்புகள் இருக்கும். இவையே ஆதி படைப்புகள் – Primitive Text. இப்படைப்புகள் ஒவ்வொரு காலத்திலும் அந்த காலத்திற்கு ஏற்றார்போல பொருள் கொள்ளப்படும். அவை உதிரி வரிகளாக, சமூக விழுமியங்களை, சமூக அறங்களை, சமூக நெறிகளை நிலைநிறுத்துபவையாக, மக்களிடையே புழங்கிக் கொண்டு தான் இருக்கும். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பது துவங்கி முறத்தால் புலி விரட்டிய மூதமிழ் நங்கை வரை அந்நூல்கள் ஏதோ ஒரு விதத்தில் பொது சமூகத்தின் பொதுப்புத்தியில் வைக்கப்பட்டிருக்கும். தமிழில் தொல்காப்பியம், புறநானூறு, குறுந்தொகை என பல படைப்புகளைச் சொல்லலாம். இன்று (January 22) கூட மெரீனா சென்றால் இந்நூல்களின் பெயர்களைக் கேட்கலாம். இன்றும் கூட அவற்றில் பயன்படுத்தப்படும் உவமைகள், சொல்லாட்சிகள் நம்மில் இருந்து கொண்டிருக்கின்றன. பாரதம் அதைப் போன்றதொரு ஆதி படைப்பு. அதை நாம் கதையாகப் படிக்கலாம். நம் மரபை, அதன் தத்துவங்களை அறிய படிக்கலாம். ஒரு நாட்டை எவ்வாறு நிர்வாகிப்பது என்ற சமூக நோக்கிலோ, குடும்ப உறவுகள், அண்ணன் தம்பி பாசம், போன்ற தனிமனித நோக்கிலோ படிக்கலாம். அதன் இடைவெளிகளை ஒரு வாசகனாக நம் கற்பனையில் நிரப்பலாம். இவையனைத்தையும் அந்நூல் நேரடியாகச் சொல்லாமல் வாசிப்பவரின் கையிலேயே விடுவதால் தான் இது ஆதி படைப்பாக இருக்கிறது. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவருக்கான ஒரு நூலாக உருவெடுக்கும் தன்மை கொண்டதே இந்த ஆதி படைப்பை ஒரு செவ்வியல் படைப்பாக்குகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியிலும், இங்கு உள்ள ஒவ்வொரு சமூகக் குழுவிடமும் ஒரு மகாபாரதம் இருக்கிறது. உதாரணத்திற்கு சமணர்கள் தங்களுக்கென ஒரு பாரதத்தைக் கொண்டுள்ளனர் – ஜைன பாரதம். அதே போல நாகர்கள் அவர்களுக்கென ஒரு மகாபாரதத்தைக் கொண்டுள்ளனர் – பஸ்தர் பகுதியில் இன்றும் கிடைக்கும். இவ்வவளவு ஏன், வரிவடிவம் அற்ற மொழிகள் கூட தங்களுக்கென ஒரு மகாபாரதத்தைக் கொண்டுள்ளன. மணிப்பூரின் லோக்தக் ஏரியின் மிதக்கும் தீவுகளில் இருப்பவர் கூட தாங்கள் அர்ஜுனனுக்கு பெண் கொடுத்தவர்கள் எனப் பெருமையாகக் கூறும் ஓர் நீண்ட நெடிய பண்பாட்டின் இணைப்புச் சரடாக விளங்குவதே, ‘ஜய’ – ‘வெற்றி முழக்கம்’ என்ற பெயரில் வியாசரால் யாக்கப்பட்ட இந்நூலை மகாபாரதம் ஆக்குகிறது.

இந்த ஆதி படைப்பு என்பது பொது வாசகப் பரப்பில் பெரும்பாலும் வழக்கொழிந்து போயிருக்கும். மாறாக அதை அடித்தளமாகக் கொண்டு மேலெழுந்த மற்ற படைப்புகள், நிகழ்த்துக் கலைகள், நாட்டாரியல் பாட்டுகள் வழியாக அது சமூகத்தில் இயல்பாகப் புழங்கிக் கொண்டிருக்கும். ராமாயணம் அப்படித்தான் நம்முன் வந்தது. கேரளாவில் இஸ்லாமியர்களுக்கென்று ‘மாப்ளா ராமாயணம்’ கூட உண்டு. உளுவத்தலையனும் உச்சிக்குடும்பனும் ராமாயணத்தின் வானரங்களாகவே தோல்பாவைக் கூத்தில் இருந்து வருகிறார்கள். மகாபாரதம் அப்படித் தான் நம்மிடம் வந்து சேர்கிறது, தொலைகாட்சி வாயிலாக, கூத்துகள் வாயிலாக, தெரு நாடகங்கள் வாயிலாக, அதையொட்டி எழுதப்பட்ட நூல்களாக. மக்கள் கலைகளாக புழங்கும் இந்த ஆதி படைப்பு அடுத்த கட்டமாக அதே போன்று காலத்தை வெல்லும் ஒரு செவ்வியல் ஆக்கமாக பரிணமிக்கவும் செய்யும். புற்றுறை முனி யாத்த ஆதி படைப்பான வான்மீகத்தில் இருந்து தான் கம்பன் ஒரு மாபெரும் ஆக்கத்தைக் கொடுத்தான். இதோ வியாசனின் பாதங்களில் இருந்து வெண்முரசு எழுந்து வருகிறது. இங்ஙனம் பலவாறாக வடிவம் கொண்ட இந்த ஆதி படைப்புகள் அதன் மூலத்தில் எங்ஙனம் இருந்தது என்பதை அறிவது ஒரு இலக்கிய வாசகனுக்கு ஆர்வமூட்டுவதே. ஏனென்றால் பல தார மணம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஒரு சமூகத்தில் ‘இம்மைப் பிறப்பில் பிறிதொரு மாதரை சிந்தையாலும் தொடேன்’ என ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை ஏற்படுத்திய மூல வரியைக் கண்டடைவது என்பது அத்தனை வருட மானுட பரிணாம வளர்ச்சியைக் தரிசிப்பதே தான். எனவே ஒரு வாசகன் ஆதி படைப்பை வாசிப்பது அவசியம். அது அதன் மேல் அமைந்த நிகழ்த்துக் கலைகள் துவங்கி, செவ்வியல் ஆக்கம் வரை அவன் புரிதலில் ஒரு பெரிய திறப்பை நிகழ்த்தும், அதிலும் குறிப்பாக பாரதத்தின் மூலம்.

அத்தகைய மகாபாரதத்தின் முழுமையான ஆதி படைப்பு தமிழில் இல்லை என்பது நமக்கு ஓர் பேரிழப்பே. அந்த இழப்பை சரி செய்யும் சவாலை ஏற்றுச் செயல்பட்டுக்கொண்டிருப்பதாலேயே திரு அரசனின் இந்த மொழிபெயர்ப்பு முயற்சி மிக மிக முக்கியமானது.

வெண்முரசும் மூலமும்:

வெண்முரசு மூலத்தை ஒட்டி எழுதப்படுகிறது அல்லது படவில்லை என்பது ஒரு சுவாரசியமான விவாதமே. இருப்பினும் வெண்முரசின் மூலங்களைக் கண்டறிவதும் ஆர்வமூட்டும் ஒன்றே. அவ்வகையில் அரசன் அவர் படித்த வெண்முரசின் பகுதிகள் மூல மகாபாரதத்தை ஒட்டியே அமைந்திருப்பதாகக் கூறினார்.

கர்ணன் ஜராசந்தன் நட்பு:

வெய்யோன் வருகையில் பலருக்கும் புருவத்தைத் தூக்க வைத்த ஒன்று கர்ணன் ஜராசந்தனின் நட்பு. இது சாத்தியமற்ற ஒன்று, ஜெ வின் புனைவே இது என்று விவாதங்கள் வந்திருந்தன. ஆனால் கர்ண பருவத்தின் முதல் மூன்று அத்தியாயங்களில், கர்ணனின் வீழ்ச்சியைக் கேட்டு புலம்பும் திருதராஷ்டிரன் கர்ணனால் தான் ஜராசந்தனின் நட்பு துரியனுக்குக் கிட்டியது எனப் புலம்புகிறான். கர்ணனால் தான் ஜராசந்தன் துரியனைத் தவிர்த்த ஷத்ரிய அரசர்களைக் கொள்கிறான் என்கிறான் திருதராஷ்டிரன். எனவே இந்த நட்பு மூலத்தில் இருந்திருக்கிறது.

சகுனியின் பாத்திர வார்ப்பு:

சகுனிக்கு பீஷ்மர் மீது ஒரு பிதாமகர் என்ற மரியாதை இருந்ததற்கான நேரடி விவரணைகள் கிசாரியில் இல்லை. ஆனால் அவ்வாறு இருந்திருப்பதற்கான சாத்தியங்கள், இடைவெளிகள் மூலத்தில் இருக்கிறது. மேலும் சகுனி பெரும்பாலான சமயங்களில், வாரணவதம் தவிர, துரியனுக்கு நல்ல புத்தியே சொல்கிறான். கர்ணன் நட்பு கூட சகுனி எதுவும் சொல்வதில்லை. அது இயல்பாக துரியனுக்கும், அவனுக்கும் இடையே மலர்கிறது. இன்னும் சொல்லப்போனால் துரியனை திரௌபதியை அவமானப் படுத்தத் தூண்டுவது துவங்கி, போர் வரை கர்ணனே செய்கிறான். இதைப் பற்றிய பகுதிகள் மொழிபெயர்க்கப்படுகையில் பாரதத்தின் முக நூல் பக்கம் கொந்தளித்தது. பிறகு கர்ணனை எப்படி கீழ்மையாக்கலாம்?!

கர்ணன் – குந்தி உரையாடல்:

போருக்கு முன் கர்ணன் குந்தியின் உரையாடல் நமது நிகழ்த்துக் கலைகளில் முக்கியமான ஒன்று. சிவாஜி வேறு இதை நம் கண்முன் காட்டிச் சென்று விட்டார். ஆனால் மூலத்தில் அவர்களின் உரையாடல் இரண்டே பாடல்களில் முடிவடைந்து விடுகிறது என்பது முதலில் ஒரு வாசகனுக்கு அதிர்ச்சியையே தரும். அதிலும் கர்ணன் குந்தியைப் ‘பெண்ணே’ என்று தான் அழைக்கிறான். மேலும் குந்தி அவனிடம் வரம் கேட்கவில்லை. கர்ணன் தானே முன்வந்து அவ்வரங்களை நல்குகிறான்.

பீமன் – துரியன் நட்பு:

வெண்முரசின் மற்றொரு முக்கிய ஆச்சரியம் பீமனுக்கும் துரியனுக்குமான நட்பு. அதற்கான மூகாந்திரங்கள் மூலத்தில் இருக்கிறதா என்றால் இல்லை. ஆனால் துரியன் பாண்டவர்களை வரவேற்கவே செய்கிறான். ஆனால் அவன் பீமனைக் கண்டு, அவன் காட்டுத் தனத்தைக் கண்டு அஞ்சுகிறான். தன்னைக் குறித்தும், தன் தம்பியரைக் குறித்துமான துரியனின் அச்சமே பீமன் மீதான பகையாக மாறுகிறது. பீமனும் சற்று பொறாமை கொண்டவனாகவே காட்டப்படுகிறான். ஒவ்வொரு புள்ளியிலும் அவன் துரியனுடன் போட்டியிடுகிறான். பீமனின் இக்குணச்சித்திரம் மிகச் சரியாக வண்ணக்கடலில் வந்துள்ளது. வெண்முரசு துரியன் பீமன் பகையை ஒரு காலாதீதமான ஒன்றாகக் காட்டுகிறது. இருவரும் எந்நாளும் ஒன்றாகவே ஆக இயலாது என்ற வகையில் காட்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு பெரும்பகை ஒரு பெரும் நட்பிலிருந்தே துளிர்க்க இயலும் என்ற வகையில் அவர்கள் நட்பை அணுகுகிறது.

கிருஷ்ணன் – அர்ச்சுனன் போர்:

கிராதத்தில் வரும் இப்போருக்கான மூகாந்திரம் கிஸாரியில் இல்லை. ஆனால் இக்கதையை ஜெ பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டு நடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தெலுங்கு நாடகத்தில் இருந்து எடுத்திருக்கலாம் என்கிறார் அரசன். வெண்முரசின் ஆகப் பெரிய சாதனையே மகாபாரதத்திற்கு இருக்கும் எண்ணிறந்த பாடபேதங்களை ஒரு சரியான வடிவில் தொகுத்து அளிப்பதே. அதற்கு இடைவிடாத பயிற்சியும், தொடர்புகளைக் கண்டு கொள்ளும் கண்களும் வேண்டும். ஜெவின் 25 வருட உழைப்பின் கனியே வெண்முரசு

மகாபாரதம் மொழிபெயர்ப்புகள்:

தமிழில் முழு மகாபாரதம் கும்பகோணம் பதிப்பாக, திரு ராமானுஜாச்சாரியாரின் மொழிபெயர்ப்பில் 1908 ஆம் ஆண்டு துவங்கி 1932 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு நீடித்த இந்த இமாலய முயற்சி 9000 பக்கங்கள் கொண்டது. 45 பகுதிகள் வந்தன. சுமார் 1,35,000 ரூபாய் செலவானது(அன்றைய மதிப்பில்). இயல்பாகவே ஒரே பதிப்பு மட்டுமே கண்டது இது. மணிப்பிரவாள நடையில், அன்றிருந்த மகாபாரதத்தின் தென்னக பாடத்தை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டது. தென்னக பாடம் தமிழ் வரிவடிவில் எழுதப்பட்ட சமஸ்கிரத மொழியில் அமைந்த நூல். இதன் மறுபதிப்பு சில ஆண்டுகளுக்கு முன் வந்தது. அதுவும் ஒரே பதிப்பில் நின்று விட்டது. இதன் PDF வடிவம் இணையத்தில் உள்ளது.

கிஸாரி மோகன் கங்குலி ஒரு பன்மொழி வித்தகர். அவர் வங்க வரியில் சம்ஸ்கிருத மொழியில் அமைந்த வங்க பாடத்தைப் பின்பற்றி தன் ஆங்கில மொழியாக்கத்தைச் செய்தார். அவருக்கும் முன்னதாக M.N. தத் என்றழைக்கப்படும் மன்மத நாத தத் மொழிபெயர்த்திருக்கிறார். இவரின் மொழியாக்கத்தில் சுலோக எண்களைத் தந்திருப்பார். ஆனால் கிஸாரி ஒவ்வொரு மொழிபெயர்ப்புக்கும் கீழே அடிக்குறிப்புகள், மறை பொருளுக்கான விளக்கங்கள் தந்திருப்பார். கிஸாரி மோகன் கங்குலியை ரமேஷ் மேனன் சற்று எளிமைப் படுத்தி கதையோட்டமாக பாரதத்தைச் சொல்லியிருப்பார்.

இவர்கள் அனைவருமே ஒப்புக்கொண்ட ஒன்று மூலம் என்று கிடைத்துள்ள சம்ஸ்கிருத வடிவிலேயே பல இடைச்செருகல்கள் உள்ளன என்பது தான். இந்த இடைச்செருகல்களைக் கண்டடைந்து களைய புனேவில் அமைந்துள்ள பண்டார்க்கர் கீழையியல் ஆய்வு மையம் (Bandarkar Oriental Research Institute – BORI) ஒரு பெரும் திட்டத்தைத் தீட்டி நிறைவேற்றவும் செய்தது. கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்கள் (1919 – 1966) நீண்ட இப்பெருந்திட்டம், திரு. சுக்தங்கர், திரு. பெல்வால்கர், திரு. தண்டேகர் போன்ற பேரறிஞர்களின் பெரு முயற்ச்சியால் கிட்டத்தட்ட 1259 வெவ்வேறு சுவடிகளில் இருந்து தொகுக்கப்பட்டு 18 பருவங்களும் 89000 சுலோகங்களும் கொண்ட முழுமையாகத் திருத்தப்பட்ட வடிவில் நமது முதல் குடிமகனான திரு. ராதாகிருஷ்ணன் அவர்களால் 1966 ல் வெளியிடப்பட்டது. இந்த திருத்தப்பட்ட வடிவின் ஆங்கில மொழியாக்கத்தை விவேக் தேப்ராய் செய்துள்ளார்.

அரசனின் மொழிபெயர்ப்பு:

இவற்றில் அரசன் கிஸாரி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததை தமிழில் மொழி பெயர்த்து வருகிறார். இம்மொழிபெயர்ப்பில் அவர் எந்த இடத்திலும் தன் கருத்தையோ, தன் புரிதலையோ முன்வைப்பதில்லை. இதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார். முடிந்த அளவு வார்த்தைக்கு வார்த்தை, அவ்வாறு செய்ய இயலாத போது வரிக்கு வரி மொழி பெயர்ப்பு என்பதையே செய்கிறார். மேலதிகமாக அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் புகழ் மொழிகள் சுட்டும் நபர்களை அடைப்புக்குறிக்குள் தருவது, முக்கியமான, வேறு பொருள் தரச் சாத்தியமான பகுதிகள் என்பதைக் குறித்து M. N. தத், விவேக் தேப்ராய் மற்றும் தமிழ் பழைய பதிப்பு என்ன சொல்கிறது என்பதையும் கொடுக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தை மொழிபெயர்க்கையிலும் அந்த அத்தியாயம் மேற்கூறிய மூன்று பதிப்புகளிலும் எவ்வாறு வந்துள்ளது என்பதைப் படித்து, அதை கிசாரியுடன் பொருத்திப் பார்த்துப் பொருள் கொண்டு மொழிபெயர்க்கிறார். ஒரு அத்தியாயம் மொழிபெயர்க்க கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் ஆகிவிடும் என்கிறார். காலை 9 துவங்கி இரவு 9 வரை தன் வரைகலைத் தொழிலைச் செய்யும் இவர் மொழிபெயர்ப்பைச் செய்வது இரவில். அதாவது 11 மணி துவங்கி 2 மணி வரை. இது உண்மையிலேயே அசுரத்தனமான உழைப்பு.

திட்டுவதற்குக் கூட ஏதேனும் பாரதப் பாடலைப் பாடக்கூடிய அளவு மகாபாரதம் புழங்கிய வீட்டுச்சூழலில் இருந்து வந்த அரசன் B. R. சோப்ரா பாரதத்தாலும், சோ வின் மகாபாரதம் பேசுகிறது தொடராலும் இயல்பாகவே ஈர்க்கப்பட்டார். தன் இடதுசாரி நண்பர்களுடனான உரையாடல்களில் அவர்களின் பாரதப் புரிதல் தொடர்பான விவாதங்களில் ஆதாரத்துடன் பதிலளிப்பதற்காக கிஸாரியை மேற்கோள் காட்டத் துவங்கியிருக்கிறார். ஆங்கிலம் சரியாக வராத நண்பர்களுக்காக கிஸாரியின் சில பகுதிகளை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். பின்னர் ஏன் முழுமையாகவே மொழிபெயர்க்கக் கூடாது என்று மொழியாக்கத்தைத் துவங்கியிருக்கிறார். இவரின் மொழியாக்கத்தின் பிழை நோக்குனராக இருப்பவர் 9௦ வயதைக் கடந்த இவரது தந்தை. இவர் ஒரு உண்மையான தமிழாசிரியர்.

திரு ஜெயவேலின் பங்கு:

2012 ல் துவங்கப்பட்ட இந்த மொழிபெயர்ப்பு அரசனின் சில நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. பொதுவாக இணையதளத்தில் வெளியிட்டு வந்திருந்தாலும் தொடர்ச்சியாக வெளியிடுவதில் சில ஆரம்ப கட்ட தொய்வுகள் இருந்திருக்கின்றன. அந்தத் தருணத்தில் தான் நூறு அத்தியாயங்கள் மொழியாக்கம் செய்யப்பட்ட பிறகு திரு ஜெயவேல் அரசனிடம் வருகிறார். அவருக்கு உண்மையிலேயே அரசன் தான் இந்த மொழியாக்கத்தைச் செய்கிறாரா என்ற ஆச்சரியம் தான். அதை விட அவநம்பிக்கை கொஞ்சம் இருந்திருக்கிறது. அவரைப் பொறுத்த வரை பாரத மொழியாக்கம் என்பதெல்லாம் ஆயுட்காலம் கோரக் கூடியது. அதைச் செய்யத் துவங்கியவர் மடிந்து போன கதைகளே அதிகம். இவரால் செய்ய முடியுமா என்ற அவநம்பிக்கையே அது. இருப்பினும் அரசனின் ஆர்வமும், அவருக்கு பாரதத்தில் இருந்த ஆழ்ந்த அறிவும் அவருக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. ஒரு வகையில் இந்த மொழியாக்கத்திற்கு ஒரு புரவலர் என்ற வகையில் துவங்கிய ஜெயவேலின் பங்களிப்பு தற்போது பிழை திருத்தல், கூட்டுச் சொற்களை பிரித்துக் கொடுத்தல், முன் அத்தியாயங்களுக்கு சரியான இணைப்பைக் கொடுத்தல், முக்கியமான உரையாடல்கள், கதைப் பகுதிகள் போன்றவற்றிற்கு வேறு நிறம் கொடுத்து கவனப்படுத்துதல், ஒவ்வொரு அத்தியாயத்தின் பொருள், மொழியாக்கம் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் செய்தல் என பல தளங்களில் விரிந்துள்ளது. இரவு 2 மணிக்கு அரசன் வலையேற்றிய பிறகு 3 அல்லது 3:30 மணிக்கு எழுந்து மேற்கூறியவற்றை செய்கிறார் இவர்.

திருமதி தேவகி ஜெயவேல்:

சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் இந்த முயற்சிக்கு குரல் வடிவம் கொடுத்து வருகிறார். விளையாட்டாக சத்தமாகப் படிக்கத் துவங்கிய இவர் அதையே ஏன் ஒரு ஒலி வடிவ நூலாகக் கொண்டு வரக்கூடாது என்ற கணவரின் யோசனையைச் செயல்படுத்தி வருகிறார். வனபருவம் முழுமையாக குரல் வடிவில் கிடைக்கிறது. இணையத்தில் கிடைக்கும் மென்பொருள்களைக் கொண்டு இதைச் செய்து வருகிறார். ஒரு அத்தியாயத்திற்கு ஒரு மணி நேரத்தில் ஒலி வடிவு கொடுத்து விடுகிறார்.

இவர்கள் மூவரும் தங்கள் அன்றாட உலகியல் பணிகளில் எந்த குறையும் வைப்பதில்லை. இப்படி ஒரு பெரு முயற்சி செய்கிறோமே அதனால் இதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் தங்களை உடலாலும், மனதாலும் வருத்திக் கொள்ளவில்லை. எந்த உலகியல் தேவைகளையும், கடமைகளையும் தவற விடுவதில்லை. கூடவே தாங்கள் துவங்கிய இப்பணியையும் கைவிடுவதில்லை. உண்மையில் இவர்களிடம் பேசிய பிறகு தோன்றியது ஒன்றே ஒன்று தான். ஆர்வம், தளராத ஆர்வம். அது இருப்பின் எதுவும் சாத்தியமே. இந்த கூட்டம் முடிகையில் தனிப்பட்ட வகையில் ஒரு பெரும் உத்வேகத்தைத் தந்தது. மிகுந்த புத்துணர்ச்சி தந்த கூட்டம்.

Advertisements