அருட்செல்வ பேரரசனுடன் மகாபாரத உரையாடல்

2017 ஆம் ஆண்டின் முதல் வெண்முரசு கூடுகையின் முத்தாய்ப்பாக அமைந்தது திரு அருட்செல்வ பேரரசனின் வருகையும், அவருடனான உரையாடலும். திரு அருட்செல்வ பேரரசன் குறித்த அறிமுகம், வெண்முரசு வாசகர்களுக்குத் தேவையில்லை. ஜெ வால் ‘உங்கள் தளத்திற்கு அடிக்கடி வருகிறேன், தகவல்களை சரி பார்க்க. உங்களுக்கு கடமைப் பட்டுள்ளேன்’, என வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றவர் இவர். இந்தியாவின் ஒப்பற்ற மகா காவியமான மகாபாரதம், உக்கிர சிரவஸ் சௌதியால் நைமிசாரண்ய வன ரிஷிகளுக்குச் சொல்லப்பட்டது. இப்பாரத நிலத்தில் புழங்கிய அனைத்துக் கதைகளும் வந்து இணைந்த கதைக்கடலான இது சமஸ்கிருதத்திலேயே இருந்தது. ஒருவகையில் இதுவே பாரதத்தின் முழுமையாக விரிவாக்கப்பட்ட மூலம். கி.பி 1883 முதல் 1896 வரை திரு. கிஸாரி மோகன் கங்குலியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அன்றும் அது ஒரு தனி நபர் முயற்சி தான். கிட்டத்தட்ட ஒரு முழு நூற்றாண்டு கடந்தும் இந்த மூல நூலின் மொழிபெயர்ப்பு இல்லை. உண்மையில் தமிழுக்கு ஒரு பெரிய இழப்பு. தமிழகத்தில் இருக்கும் சில தமிழ் பல்கலைக் கழகங்கள், இங்கு இருக்கும் நிதி ஆதாரங்களுடன் கூடிய பிற பல்கலைக்கழகங்களின் தமிழ் ‘இருக்கைகள்’, மக்கள் விளையாட பெரிய மனதுடன் தோரண வாயில் அமைத்து இடம் அளித்திருக்கும் செம்மொழி ஆய்வு நிறுவனம் போன்றவை ஒரு பெரிய குழு அமைத்து, பல ‘பேராசிரியர்கள்’, ‘பேரறிஞர்கள்’ இணைந்து தமிழுக்கு ஆற்ற வேண்டிய இப்பெரும்பணி இது. ஆனால் அவையெல்லாம் செய்யாததை, செய்ய முன்வராததை தன் சுய முனைப்பாலும், மகாபாரதம் மேலுள்ள விருப்பாலும், தன் தளரா ஊக்கத்தாலும் ஒரு தனி மனிதராகச் செய்து வருகிறார் இவர். ஆம், 2012 ஆம் ஆண்டு துவங்கி இப்போது வரை இந்த மூல மகாபாரதம் இவரின் முயற்சியால் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. தற்போது கர்ண பருவம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அருமுயற்சி அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும் வகையில் http://mahabharatham.arasan.info/ என்னும் தளத்தில் இலவசமாகவே தரப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பருவத்தையும் ஒலி வடிவிலும் வெளியிட்டு வருகிறார். அவரின் இம்முயற்சியில் அவருக்கு உறுதுணையாக விளங்கும் அவரது நண்பர் திரு. ஜெயவேல் மற்றும் அவரது துணைவி திருமதி. தேவகி ஜெயவேல் இருவரின் வருகையும் இம்மாலையை மேலும் இனிதாக்குகிறது.

பாரதம் என்னும் ஆதி படைப்பு:

ஒவ்வொரு மொழியிலும் காலத்தால் முந்திய படைப்புகள், மொழி அதன் முழு வளர்ச்சியை எட்டும் முன் எழுதப்பட்ட படைப்புகள், அவற்றின் காலாதீதமான தன்மையாலேயே, காலத்தைக் கடந்து வந்து நிகழ்காலத்தில் கிடைப்பதாலேயே செவ்வியல் தன்மையை எட்டிவிட்ட படைப்புகள் இருக்கும். இவையே ஆதி படைப்புகள் – Primitive Text. இப்படைப்புகள் ஒவ்வொரு காலத்திலும் அந்த காலத்திற்கு ஏற்றார்போல பொருள் கொள்ளப்படும். அவை உதிரி வரிகளாக, சமூக விழுமியங்களை, சமூக அறங்களை, சமூக நெறிகளை நிலைநிறுத்துபவையாக, மக்களிடையே புழங்கிக் கொண்டு தான் இருக்கும். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பது துவங்கி முறத்தால் புலி விரட்டிய மூதமிழ் நங்கை வரை அந்நூல்கள் ஏதோ ஒரு விதத்தில் பொது சமூகத்தின் பொதுப்புத்தியில் வைக்கப்பட்டிருக்கும். தமிழில் தொல்காப்பியம், புறநானூறு, குறுந்தொகை என பல படைப்புகளைச் சொல்லலாம். இன்று (January 22) கூட மெரீனா சென்றால் இந்நூல்களின் பெயர்களைக் கேட்கலாம். இன்றும் கூட அவற்றில் பயன்படுத்தப்படும் உவமைகள், சொல்லாட்சிகள் நம்மில் இருந்து கொண்டிருக்கின்றன. பாரதம் அதைப் போன்றதொரு ஆதி படைப்பு. அதை நாம் கதையாகப் படிக்கலாம். நம் மரபை, அதன் தத்துவங்களை அறிய படிக்கலாம். ஒரு நாட்டை எவ்வாறு நிர்வாகிப்பது என்ற சமூக நோக்கிலோ, குடும்ப உறவுகள், அண்ணன் தம்பி பாசம், போன்ற தனிமனித நோக்கிலோ படிக்கலாம். அதன் இடைவெளிகளை ஒரு வாசகனாக நம் கற்பனையில் நிரப்பலாம். இவையனைத்தையும் அந்நூல் நேரடியாகச் சொல்லாமல் வாசிப்பவரின் கையிலேயே விடுவதால் தான் இது ஆதி படைப்பாக இருக்கிறது. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவருக்கான ஒரு நூலாக உருவெடுக்கும் தன்மை கொண்டதே இந்த ஆதி படைப்பை ஒரு செவ்வியல் படைப்பாக்குகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியிலும், இங்கு உள்ள ஒவ்வொரு சமூகக் குழுவிடமும் ஒரு மகாபாரதம் இருக்கிறது. உதாரணத்திற்கு சமணர்கள் தங்களுக்கென ஒரு பாரதத்தைக் கொண்டுள்ளனர் – ஜைன பாரதம். அதே போல நாகர்கள் அவர்களுக்கென ஒரு மகாபாரதத்தைக் கொண்டுள்ளனர் – பஸ்தர் பகுதியில் இன்றும் கிடைக்கும். இவ்வவளவு ஏன், வரிவடிவம் அற்ற மொழிகள் கூட தங்களுக்கென ஒரு மகாபாரதத்தைக் கொண்டுள்ளன. மணிப்பூரின் லோக்தக் ஏரியின் மிதக்கும் தீவுகளில் இருப்பவர் கூட தாங்கள் அர்ஜுனனுக்கு பெண் கொடுத்தவர்கள் எனப் பெருமையாகக் கூறும் ஓர் நீண்ட நெடிய பண்பாட்டின் இணைப்புச் சரடாக விளங்குவதே, ‘ஜய’ – ‘வெற்றி முழக்கம்’ என்ற பெயரில் வியாசரால் யாக்கப்பட்ட இந்நூலை மகாபாரதம் ஆக்குகிறது.

இந்த ஆதி படைப்பு என்பது பொது வாசகப் பரப்பில் பெரும்பாலும் வழக்கொழிந்து போயிருக்கும். மாறாக அதை அடித்தளமாகக் கொண்டு மேலெழுந்த மற்ற படைப்புகள், நிகழ்த்துக் கலைகள், நாட்டாரியல் பாட்டுகள் வழியாக அது சமூகத்தில் இயல்பாகப் புழங்கிக் கொண்டிருக்கும். ராமாயணம் அப்படித்தான் நம்முன் வந்தது. கேரளாவில் இஸ்லாமியர்களுக்கென்று ‘மாப்ளா ராமாயணம்’ கூட உண்டு. உளுவத்தலையனும் உச்சிக்குடும்பனும் ராமாயணத்தின் வானரங்களாகவே தோல்பாவைக் கூத்தில் இருந்து வருகிறார்கள். மகாபாரதம் அப்படித் தான் நம்மிடம் வந்து சேர்கிறது, தொலைகாட்சி வாயிலாக, கூத்துகள் வாயிலாக, தெரு நாடகங்கள் வாயிலாக, அதையொட்டி எழுதப்பட்ட நூல்களாக. மக்கள் கலைகளாக புழங்கும் இந்த ஆதி படைப்பு அடுத்த கட்டமாக அதே போன்று காலத்தை வெல்லும் ஒரு செவ்வியல் ஆக்கமாக பரிணமிக்கவும் செய்யும். புற்றுறை முனி யாத்த ஆதி படைப்பான வான்மீகத்தில் இருந்து தான் கம்பன் ஒரு மாபெரும் ஆக்கத்தைக் கொடுத்தான். இதோ வியாசனின் பாதங்களில் இருந்து வெண்முரசு எழுந்து வருகிறது. இங்ஙனம் பலவாறாக வடிவம் கொண்ட இந்த ஆதி படைப்புகள் அதன் மூலத்தில் எங்ஙனம் இருந்தது என்பதை அறிவது ஒரு இலக்கிய வாசகனுக்கு ஆர்வமூட்டுவதே. ஏனென்றால் பல தார மணம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஒரு சமூகத்தில் ‘இம்மைப் பிறப்பில் பிறிதொரு மாதரை சிந்தையாலும் தொடேன்’ என ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை ஏற்படுத்திய மூல வரியைக் கண்டடைவது என்பது அத்தனை வருட மானுட பரிணாம வளர்ச்சியைக் தரிசிப்பதே தான். எனவே ஒரு வாசகன் ஆதி படைப்பை வாசிப்பது அவசியம். அது அதன் மேல் அமைந்த நிகழ்த்துக் கலைகள் துவங்கி, செவ்வியல் ஆக்கம் வரை அவன் புரிதலில் ஒரு பெரிய திறப்பை நிகழ்த்தும், அதிலும் குறிப்பாக பாரதத்தின் மூலம்.

அத்தகைய மகாபாரதத்தின் முழுமையான ஆதி படைப்பு தமிழில் இல்லை என்பது நமக்கு ஓர் பேரிழப்பே. அந்த இழப்பை சரி செய்யும் சவாலை ஏற்றுச் செயல்பட்டுக்கொண்டிருப்பதாலேயே திரு அரசனின் இந்த மொழிபெயர்ப்பு முயற்சி மிக மிக முக்கியமானது.

வெண்முரசும் மூலமும்:

வெண்முரசு மூலத்தை ஒட்டி எழுதப்படுகிறது அல்லது படவில்லை என்பது ஒரு சுவாரசியமான விவாதமே. இருப்பினும் வெண்முரசின் மூலங்களைக் கண்டறிவதும் ஆர்வமூட்டும் ஒன்றே. அவ்வகையில் அரசன் அவர் படித்த வெண்முரசின் பகுதிகள் மூல மகாபாரதத்தை ஒட்டியே அமைந்திருப்பதாகக் கூறினார்.

கர்ணன் ஜராசந்தன் நட்பு:

வெய்யோன் வருகையில் பலருக்கும் புருவத்தைத் தூக்க வைத்த ஒன்று கர்ணன் ஜராசந்தனின் நட்பு. இது சாத்தியமற்ற ஒன்று, ஜெ வின் புனைவே இது என்று விவாதங்கள் வந்திருந்தன. ஆனால் கர்ண பருவத்தின் முதல் மூன்று அத்தியாயங்களில், கர்ணனின் வீழ்ச்சியைக் கேட்டு புலம்பும் திருதராஷ்டிரன் கர்ணனால் தான் ஜராசந்தனின் நட்பு துரியனுக்குக் கிட்டியது எனப் புலம்புகிறான். கர்ணனால் தான் ஜராசந்தன் துரியனைத் தவிர்த்த ஷத்ரிய அரசர்களைக் கொள்கிறான் என்கிறான் திருதராஷ்டிரன். எனவே இந்த நட்பு மூலத்தில் இருந்திருக்கிறது.

சகுனியின் பாத்திர வார்ப்பு:

சகுனிக்கு பீஷ்மர் மீது ஒரு பிதாமகர் என்ற மரியாதை இருந்ததற்கான நேரடி விவரணைகள் கிசாரியில் இல்லை. ஆனால் அவ்வாறு இருந்திருப்பதற்கான சாத்தியங்கள், இடைவெளிகள் மூலத்தில் இருக்கிறது. மேலும் சகுனி பெரும்பாலான சமயங்களில், வாரணவதம் தவிர, துரியனுக்கு நல்ல புத்தியே சொல்கிறான். கர்ணன் நட்பு கூட சகுனி எதுவும் சொல்வதில்லை. அது இயல்பாக துரியனுக்கும், அவனுக்கும் இடையே மலர்கிறது. இன்னும் சொல்லப்போனால் துரியனை திரௌபதியை அவமானப் படுத்தத் தூண்டுவது துவங்கி, போர் வரை கர்ணனே செய்கிறான். இதைப் பற்றிய பகுதிகள் மொழிபெயர்க்கப்படுகையில் பாரதத்தின் முக நூல் பக்கம் கொந்தளித்தது. பிறகு கர்ணனை எப்படி கீழ்மையாக்கலாம்?!

கர்ணன் – குந்தி உரையாடல்:

போருக்கு முன் கர்ணன் குந்தியின் உரையாடல் நமது நிகழ்த்துக் கலைகளில் முக்கியமான ஒன்று. சிவாஜி வேறு இதை நம் கண்முன் காட்டிச் சென்று விட்டார். ஆனால் மூலத்தில் அவர்களின் உரையாடல் இரண்டே பாடல்களில் முடிவடைந்து விடுகிறது என்பது முதலில் ஒரு வாசகனுக்கு அதிர்ச்சியையே தரும். அதிலும் கர்ணன் குந்தியைப் ‘பெண்ணே’ என்று தான் அழைக்கிறான். மேலும் குந்தி அவனிடம் வரம் கேட்கவில்லை. கர்ணன் தானே முன்வந்து அவ்வரங்களை நல்குகிறான்.

பீமன் – துரியன் நட்பு:

வெண்முரசின் மற்றொரு முக்கிய ஆச்சரியம் பீமனுக்கும் துரியனுக்குமான நட்பு. அதற்கான மூகாந்திரங்கள் மூலத்தில் இருக்கிறதா என்றால் இல்லை. ஆனால் துரியன் பாண்டவர்களை வரவேற்கவே செய்கிறான். ஆனால் அவன் பீமனைக் கண்டு, அவன் காட்டுத் தனத்தைக் கண்டு அஞ்சுகிறான். தன்னைக் குறித்தும், தன் தம்பியரைக் குறித்துமான துரியனின் அச்சமே பீமன் மீதான பகையாக மாறுகிறது. பீமனும் சற்று பொறாமை கொண்டவனாகவே காட்டப்படுகிறான். ஒவ்வொரு புள்ளியிலும் அவன் துரியனுடன் போட்டியிடுகிறான். பீமனின் இக்குணச்சித்திரம் மிகச் சரியாக வண்ணக்கடலில் வந்துள்ளது. வெண்முரசு துரியன் பீமன் பகையை ஒரு காலாதீதமான ஒன்றாகக் காட்டுகிறது. இருவரும் எந்நாளும் ஒன்றாகவே ஆக இயலாது என்ற வகையில் காட்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு பெரும்பகை ஒரு பெரும் நட்பிலிருந்தே துளிர்க்க இயலும் என்ற வகையில் அவர்கள் நட்பை அணுகுகிறது.

கிருஷ்ணன் – அர்ச்சுனன் போர்:

கிராதத்தில் வரும் இப்போருக்கான மூகாந்திரம் கிஸாரியில் இல்லை. ஆனால் இக்கதையை ஜெ பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டு நடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தெலுங்கு நாடகத்தில் இருந்து எடுத்திருக்கலாம் என்கிறார் அரசன். வெண்முரசின் ஆகப் பெரிய சாதனையே மகாபாரதத்திற்கு இருக்கும் எண்ணிறந்த பாடபேதங்களை ஒரு சரியான வடிவில் தொகுத்து அளிப்பதே. அதற்கு இடைவிடாத பயிற்சியும், தொடர்புகளைக் கண்டு கொள்ளும் கண்களும் வேண்டும். ஜெவின் 25 வருட உழைப்பின் கனியே வெண்முரசு

மகாபாரதம் மொழிபெயர்ப்புகள்:

தமிழில் முழு மகாபாரதம் கும்பகோணம் பதிப்பாக, திரு ராமானுஜாச்சாரியாரின் மொழிபெயர்ப்பில் 1908 ஆம் ஆண்டு துவங்கி 1932 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு நீடித்த இந்த இமாலய முயற்சி 9000 பக்கங்கள் கொண்டது. 45 பகுதிகள் வந்தன. சுமார் 1,35,000 ரூபாய் செலவானது(அன்றைய மதிப்பில்). இயல்பாகவே ஒரே பதிப்பு மட்டுமே கண்டது இது. மணிப்பிரவாள நடையில், அன்றிருந்த மகாபாரதத்தின் தென்னக பாடத்தை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டது. தென்னக பாடம் தமிழ் வரிவடிவில் எழுதப்பட்ட சமஸ்கிரத மொழியில் அமைந்த நூல். இதன் மறுபதிப்பு சில ஆண்டுகளுக்கு முன் வந்தது. அதுவும் ஒரே பதிப்பில் நின்று விட்டது. இதன் PDF வடிவம் இணையத்தில் உள்ளது.

கிஸாரி மோகன் கங்குலி ஒரு பன்மொழி வித்தகர். அவர் வங்க வரியில் சம்ஸ்கிருத மொழியில் அமைந்த வங்க பாடத்தைப் பின்பற்றி தன் ஆங்கில மொழியாக்கத்தைச் செய்தார். அவருக்கும் முன்னதாக M.N. தத் என்றழைக்கப்படும் மன்மத நாத தத் மொழிபெயர்த்திருக்கிறார். இவரின் மொழியாக்கத்தில் சுலோக எண்களைத் தந்திருப்பார். ஆனால் கிஸாரி ஒவ்வொரு மொழிபெயர்ப்புக்கும் கீழே அடிக்குறிப்புகள், மறை பொருளுக்கான விளக்கங்கள் தந்திருப்பார். கிஸாரி மோகன் கங்குலியை ரமேஷ் மேனன் சற்று எளிமைப் படுத்தி கதையோட்டமாக பாரதத்தைச் சொல்லியிருப்பார்.

இவர்கள் அனைவருமே ஒப்புக்கொண்ட ஒன்று மூலம் என்று கிடைத்துள்ள சம்ஸ்கிருத வடிவிலேயே பல இடைச்செருகல்கள் உள்ளன என்பது தான். இந்த இடைச்செருகல்களைக் கண்டடைந்து களைய புனேவில் அமைந்துள்ள பண்டார்க்கர் கீழையியல் ஆய்வு மையம் (Bandarkar Oriental Research Institute – BORI) ஒரு பெரும் திட்டத்தைத் தீட்டி நிறைவேற்றவும் செய்தது. கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்கள் (1919 – 1966) நீண்ட இப்பெருந்திட்டம், திரு. சுக்தங்கர், திரு. பெல்வால்கர், திரு. தண்டேகர் போன்ற பேரறிஞர்களின் பெரு முயற்ச்சியால் கிட்டத்தட்ட 1259 வெவ்வேறு சுவடிகளில் இருந்து தொகுக்கப்பட்டு 18 பருவங்களும் 89000 சுலோகங்களும் கொண்ட முழுமையாகத் திருத்தப்பட்ட வடிவில் நமது முதல் குடிமகனான திரு. ராதாகிருஷ்ணன் அவர்களால் 1966 ல் வெளியிடப்பட்டது. இந்த திருத்தப்பட்ட வடிவின் ஆங்கில மொழியாக்கத்தை விவேக் தேப்ராய் செய்துள்ளார்.

அரசனின் மொழிபெயர்ப்பு:

இவற்றில் அரசன் கிஸாரி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததை தமிழில் மொழி பெயர்த்து வருகிறார். இம்மொழிபெயர்ப்பில் அவர் எந்த இடத்திலும் தன் கருத்தையோ, தன் புரிதலையோ முன்வைப்பதில்லை. இதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார். முடிந்த அளவு வார்த்தைக்கு வார்த்தை, அவ்வாறு செய்ய இயலாத போது வரிக்கு வரி மொழி பெயர்ப்பு என்பதையே செய்கிறார். மேலதிகமாக அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் புகழ் மொழிகள் சுட்டும் நபர்களை அடைப்புக்குறிக்குள் தருவது, முக்கியமான, வேறு பொருள் தரச் சாத்தியமான பகுதிகள் என்பதைக் குறித்து M. N. தத், விவேக் தேப்ராய் மற்றும் தமிழ் பழைய பதிப்பு என்ன சொல்கிறது என்பதையும் கொடுக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தை மொழிபெயர்க்கையிலும் அந்த அத்தியாயம் மேற்கூறிய மூன்று பதிப்புகளிலும் எவ்வாறு வந்துள்ளது என்பதைப் படித்து, அதை கிசாரியுடன் பொருத்திப் பார்த்துப் பொருள் கொண்டு மொழிபெயர்க்கிறார். ஒரு அத்தியாயம் மொழிபெயர்க்க கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் ஆகிவிடும் என்கிறார். காலை 9 துவங்கி இரவு 9 வரை தன் வரைகலைத் தொழிலைச் செய்யும் இவர் மொழிபெயர்ப்பைச் செய்வது இரவில். அதாவது 11 மணி துவங்கி 2 மணி வரை. இது உண்மையிலேயே அசுரத்தனமான உழைப்பு.

திட்டுவதற்குக் கூட ஏதேனும் பாரதப் பாடலைப் பாடக்கூடிய அளவு மகாபாரதம் புழங்கிய வீட்டுச்சூழலில் இருந்து வந்த அரசன் B. R. சோப்ரா பாரதத்தாலும், சோ வின் மகாபாரதம் பேசுகிறது தொடராலும் இயல்பாகவே ஈர்க்கப்பட்டார். தன் இடதுசாரி நண்பர்களுடனான உரையாடல்களில் அவர்களின் பாரதப் புரிதல் தொடர்பான விவாதங்களில் ஆதாரத்துடன் பதிலளிப்பதற்காக கிஸாரியை மேற்கோள் காட்டத் துவங்கியிருக்கிறார். ஆங்கிலம் சரியாக வராத நண்பர்களுக்காக கிஸாரியின் சில பகுதிகளை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். பின்னர் ஏன் முழுமையாகவே மொழிபெயர்க்கக் கூடாது என்று மொழியாக்கத்தைத் துவங்கியிருக்கிறார். இவரின் மொழியாக்கத்தின் பிழை நோக்குனராக இருப்பவர் 9௦ வயதைக் கடந்த இவரது தந்தை. இவர் ஒரு உண்மையான தமிழாசிரியர்.

திரு ஜெயவேலின் பங்கு:

2012 ல் துவங்கப்பட்ட இந்த மொழிபெயர்ப்பு அரசனின் சில நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. பொதுவாக இணையதளத்தில் வெளியிட்டு வந்திருந்தாலும் தொடர்ச்சியாக வெளியிடுவதில் சில ஆரம்ப கட்ட தொய்வுகள் இருந்திருக்கின்றன. அந்தத் தருணத்தில் தான் நூறு அத்தியாயங்கள் மொழியாக்கம் செய்யப்பட்ட பிறகு திரு ஜெயவேல் அரசனிடம் வருகிறார். அவருக்கு உண்மையிலேயே அரசன் தான் இந்த மொழியாக்கத்தைச் செய்கிறாரா என்ற ஆச்சரியம் தான். அதை விட அவநம்பிக்கை கொஞ்சம் இருந்திருக்கிறது. அவரைப் பொறுத்த வரை பாரத மொழியாக்கம் என்பதெல்லாம் ஆயுட்காலம் கோரக் கூடியது. அதைச் செய்யத் துவங்கியவர் மடிந்து போன கதைகளே அதிகம். இவரால் செய்ய முடியுமா என்ற அவநம்பிக்கையே அது. இருப்பினும் அரசனின் ஆர்வமும், அவருக்கு பாரதத்தில் இருந்த ஆழ்ந்த அறிவும் அவருக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. ஒரு வகையில் இந்த மொழியாக்கத்திற்கு ஒரு புரவலர் என்ற வகையில் துவங்கிய ஜெயவேலின் பங்களிப்பு தற்போது பிழை திருத்தல், கூட்டுச் சொற்களை பிரித்துக் கொடுத்தல், முன் அத்தியாயங்களுக்கு சரியான இணைப்பைக் கொடுத்தல், முக்கியமான உரையாடல்கள், கதைப் பகுதிகள் போன்றவற்றிற்கு வேறு நிறம் கொடுத்து கவனப்படுத்துதல், ஒவ்வொரு அத்தியாயத்தின் பொருள், மொழியாக்கம் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் செய்தல் என பல தளங்களில் விரிந்துள்ளது. இரவு 2 மணிக்கு அரசன் வலையேற்றிய பிறகு 3 அல்லது 3:30 மணிக்கு எழுந்து மேற்கூறியவற்றை செய்கிறார் இவர்.

திருமதி தேவகி ஜெயவேல்:

சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் இந்த முயற்சிக்கு குரல் வடிவம் கொடுத்து வருகிறார். விளையாட்டாக சத்தமாகப் படிக்கத் துவங்கிய இவர் அதையே ஏன் ஒரு ஒலி வடிவ நூலாகக் கொண்டு வரக்கூடாது என்ற கணவரின் யோசனையைச் செயல்படுத்தி வருகிறார். வனபருவம் முழுமையாக குரல் வடிவில் கிடைக்கிறது. இணையத்தில் கிடைக்கும் மென்பொருள்களைக் கொண்டு இதைச் செய்து வருகிறார். ஒரு அத்தியாயத்திற்கு ஒரு மணி நேரத்தில் ஒலி வடிவு கொடுத்து விடுகிறார்.

இவர்கள் மூவரும் தங்கள் அன்றாட உலகியல் பணிகளில் எந்த குறையும் வைப்பதில்லை. இப்படி ஒரு பெரு முயற்சி செய்கிறோமே அதனால் இதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் தங்களை உடலாலும், மனதாலும் வருத்திக் கொள்ளவில்லை. எந்த உலகியல் தேவைகளையும், கடமைகளையும் தவற விடுவதில்லை. கூடவே தாங்கள் துவங்கிய இப்பணியையும் கைவிடுவதில்லை. உண்மையில் இவர்களிடம் பேசிய பிறகு தோன்றியது ஒன்றே ஒன்று தான். ஆர்வம், தளராத ஆர்வம். அது இருப்பின் எதுவும் சாத்தியமே. இந்த கூட்டம் முடிகையில் தனிப்பட்ட வகையில் ஒரு பெரும் உத்வேகத்தைத் தந்தது. மிகுந்த புத்துணர்ச்சி தந்த கூட்டம்.

Advertisements

தற்பிரிந்து அருள்புரி தருமம் – அருணாச்சலம் மகராஜன்

solvalar_kaadu_epi_55

சொல்வளர்காடின் உச்சம் கந்தமாதன மலையின் எரி வந்தறையும் எல்லையில், தன்னையே அவியாக்கி தருமர் மேற்கொள்ளும் பெரு வேள்வி. அந்த அத்தியாயத்தைப் படித்து முடிக்கையில் மனதில் தோன்றிய எண்ணம், தருமரும் சீதையும் ஒன்றோ என்பது தான். வெண்முரசில் இவ்வாறு இராமாயண பாத்திரங்கள் நினைவிற்கு வருவது தற்செயல் அல்ல என்பது எனது அனுபவம். நாவலில் வேறு எங்கேனும் அதற்கான தகவல்கள் தரப்பட்டிருக்கும். அப்படியே சொல்வளர்காடை மீண்டும் வாசிக்கையில்  சௌனகக் காட்டில் தனக்காக விழைந்து செயல்கள் இயற்றும் திருஷ்ணையில் இருந்து ஒரு அரசன் விடுபடவேண்டும் என்று கூறுகையில் மிதிலையின் ராஜரிஷியான ஜனகரை வணங்குக என்று வருவது முதல் யக்ஷவன அத்தியாயத்தின் முதல் பகுதி வரை பல இடங்களில் சீதை வந்து சென்றிருப்பதை அறியலாம்.

முக்கியமாக கார்கி யாக்ஞவல்கியரின் விவாதம் நடைபெறும் ஜனகர் அவையைப் பற்றிய விவரங்களில் மிக விரிவாகவே சீதை வருகிறாள். அரசனின் முதல் புதல்வியை மண்ணில் புதைத்து, அவளை மண்ணில் இருந்து அகழ்ந்து எடுப்பதை ஒரு குல முறைச் சடங்காகச் செய்யும், பெண்ணை தலைமையாகக் கொண்ட ஒரு தொல்குலத்தைச் சார்ந்தவள் என்பது சீதையைப் பற்றிய பார்வையை முழுமையாக மாற்றுகிறது. அவள் ராமனைத் திருமணம் செய்ததால் அரசி ஆனவள் அல்ல, அவள் பிறப்பில் இருந்தே தன் நாட்டிற்கு, குலத்திற்கு வழிகாட்டும், தலைமை தாங்கும் அரசி, கற்றவள். தாய். எப்போதும் குளிர்ந்தவள் – சீதளமானவள். எரி புகுகிறாள். ஏன்? ரகுகுல ராமன் அவளை சந்தேகித்தான் என்றா?

ராவணன் சிறையில் இருந்த தன் ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை பத்து மாதங்களுக்குப் பின் முதன் முறையாக ராமன் பார்ப்பதை

“கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை,
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான்”

என்கிறான் கம்பன். ‘தற்பிரிந்து அருள்புரி தருமம் போலி’ – சுய தர்மம், குடும்ப தர்மம், குல தர்மம், மானுட தர்மம் என பலவாறாகப் பிரிந்து நின்றாலும் ஒவ்வொரு தர்மமும் அருள் மட்டுமே புரிபவை. அப்படிப்பட்ட தர்மம் போன்றவள் என்கிறான் கம்பன். மற்றொரு பார்வையில் தன்னைப் பிரிந்தாலும் அருள் மட்டுமே பொழியும் தருமத்தை ஒத்தவள் என ராமன் எண்ணுகிறான். அப்படிப்பட்டவளை அன்புடன் அள்ளி அள்ளி பருகும் பார்வையால் நோக்கிக் கொண்டேயிருக்கிறான் ராமன்.

அப்படி காதலுடன் கண்ணுற்றவன், அடுத்த கணத்தில், அக ஆழத்தில் இருந்து படம் விரித்தாடும் பாம்பென நாவில் ஊறிய அமிலத்தால் அவளை அர்ச்சனை செய்கிறான். பலவாறாக சீதையை ஏசும் ராமன் பெரும்பாலான ஆண்களைப் போலவே

“நன்மைசால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்”

என்று அவள் பிறப்பை குறை கூறுகிறான். வாழ்வில் குறிக்கோள் எதுவும் இல்லாமல், உயிர் வாழ்வது ஒன்று மட்டுமே தன்னறம் என்று கொண்டு, அதற்காக மட்டுமே உண்டு கொண்டே இருக்கும் புழுவைப் போல் மண்ணில் பிறந்ததை நிரூபித்து விட்டாய் என்கிறான். ஆனால் அவள் தன்னுயிர் பேணும் புழுவல்ல, மண்ணுக்கே உயிரளிக்கும் மண்புழு என்பதை அவன் அறியாமல் கூறி விடுகிறான் – இது கம்பன் டச்.

அவள் பேசத் தெரியாதவள் அல்ல. தனக்கு வாய்த்தவற்றை விதியே என்று ‘அகழ்வாரைத் தாங்கும் நிலமாய்’ பொறுப்பவளும் அல்ல. அவள் அரசி, பிறப்பிலேயே. தருமத்தின் மாற்றுரு. தன் முன் நின்ற லங்கேசனையே புல்லென மதித்துச் சீறியவள். எல்லை நீத்த உலகங்கள் யாவையும் தன் சொல்லினால் சுடுவேன் என்று தன்திறம் உணர்ந்தவள். தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்பதால் அவ்வெண்ணத்தை வீசியவள். அப்படிப்பட்டவள் மேலே காய்ந்து, உள்ளே நிணமும், குருதியும் சொட்டிக் கொண்டிருக்கும் புண்ணில் கோல் பட்டுக் கீறிய உடல் கொள்ளும் வலியின் மெய்ப்பு கொண்டு மண்ணை நோக்கி தன்னிலை உணர்ந்து தன்னிரக்கம் கொள்கிறாள். பலவாறாக தன்னுள் ஆழ்ந்து, தன்னுள் பேசி, தன்னை மாய்க்க முடிவு செய்து இலக்குவனைப் பார்த்து ‘இடுதி தீ’ என்கிறாள். அலறிப் பின்வாங்கும் இளைய பெருமாளை கண்ணாலேயே தீ மூட்டும்படி சொல்கிறான் ராமன். அவ்வாறு விதி முறை அமைத்த எரியை நோக்கி,

“நீந்தரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள்”

என சென்று பாய்கிறாள் சீதை. நீந்தக் கடினமான பெருகியோடும் புனலில் மலர்ந்து நிற்கும் தாமரையில் அமைந்த தன் வீடு நோக்கி செல்பவள் போலச் செல்கிறாள் என்கிறான் கம்பன். ஆம், அவள் சோகத்தில், தன்னிரக்கத்தில், ஆழ்ந்த துயரில், உயிரை மாய்க்க முடிவு செய்துதான் எரி அமைக்கச் சொல்கிறாள். ஆனால் புகுகையில் அவள் தான் முன்பு இருந்த இடத்திற்கே மீள்வதற்காகச் செல்லும் விருப்புடன் பாய்கிறாள். அவள் முன்பு எங்கு இருந்தாள்? எவ்வாறு இருந்தாள்? எதனால் இவ்வாறு ஆனாள்? எது அவளை இந்த எரியை நோக்கி விருப்புடன் செலுத்தியது?

இந்த கேள்விகளுக்கான பதிலை வெண்முரசின் சொல்வளர்காடு நல்குகிறது. பலமுறை சொன்னதுபோல நம் மரபை துலக்கிக்காட்டுவதில், நம் ஆழ்மனப் படிமங்களை விளக்கிக் காட்டுவதில் வெண்முரசின் மற்றொரு சாதனை அதன் சீதையைப் பற்றிய பார்வை.

கம்பனே சொல்கிறான், அவள் தருமத்தின் மாற்றுரு என்று. அந்த தருமம் எங்கே பிழைத்தது? பிராட்டியின் விழைவு முந்திய தருணத்தில் பிழைத்தது. அவள் விழைவு அந்த மாய மான், பொன் மாரீச மான். இலக்குவன் தான் சென்று பிடித்து வருவதாகச் சொல்லியும், “நாயக! நீயே பற்றி நல்கலைபோலும்” என்றபோது முந்திய விழைவு. கடத்தலுக்கரிய கடலைக் கடந்து, வெல்லுதற்கரிய இலங்கேஸ்வரனை கொல்வான் என ராவணன் சிறையில் இருக்கையில்கூட தன் கணவன் திறனை முழுதும் உணர்ந்தவள், அவன் குரலில் கூவிய மாரீசனின் வார்த்தைகளை நம்பி இலக்குவனை கொதிக்கும் உள்ளத்தோடு, தன்னைக் கொல்லும் இன்னலில் எடுத்த சீற்றத்தோடு “அண்ணன் மடிய, என்னருகில் நிற்பது நெறியில்லை” எனத் தகாதது கூறிக் கடிந்தபோது முந்திய விழைவு.

ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்;
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ
வெருவலை நின்றனை; வேறு என்? யான், இனி
எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு’ எனா

என்றதால் எரிகிறாள். உண்மையில் சீதை அந்த பத்து மாதங்கள் என்ன நினைத்திருப்பாள்? இளையபெருமாளை வைததை எண்ணி எண்ணி தன்னையே குற்ற உணர்வில் கொன்று கொண்டிருந்திருப்பாள். தன் விழைவு தன்னை மீறி வெளிப்பட்ட அக்கணத்தை எண்ணி எண்ணி உலைந்திருப்பாள். உண்மையில் அவள் உள்ளத்தால் எரிந்துகொண்டிருப்பதைவிட உடலால் எரிந்து விடுவது மேல் என்றே அம்முடிவை எடுக்கிறாள். இவையெல்லாம் ஒரு வகையில் புறவயமான காரணங்கள். உயிரை மாய்க்கும் எல்லைக்கு ஓர் மானுட உயிர் செல்லுமென்றால் அவ்வுயிருக்கே உரிய மிக மிக காத்திரமான அகவயமான ஒரு காரணம் இருக்க வேண்டும். சீதைக்கே உரித்தான அப்படிப்பட்ட காரணம் என்ன? அதை அறிய நாம் தருமரை அறிய வேண்டும்.

சொல்வளர்காட்டில் தருமர் ஆரண்யகங்கள் தோறும் சென்று சொல் தேர்ந்து கொண்டேயிருக்கிறார். ஏன்? மிகத்தெளிவாகவே திரௌபதி, ‘நாம் ஏன் மனிதர்கள் வாழும் வேதநிலைகளுக்குச் செல்ல வேண்டும்? அவை மானுடர்களின் விழைவுகளின் தொகை, அச்சங்களின் தொகை’ என்கிறாள். இருப்பினும் தருமர் அனைவரையும் அழைத்துச் செல்கிறார். காரணம், எந்த வேதத்திலாவது தன்னுடைய செயல்களை நியாயப்படுத்த, அல்லது அந்தத் தவறில் இருந்து விடுபடும் வழியை அறிய ஏதேனும் ஒன்று கிடைக்குமா என்பதே!! பன்னிரு படைக்களத்திற்கு அவர் ஒப்புவதே  குருதியின்றி ஒரு நிகரிப் போருக்குத்தான். கூடவே அதன் மறைபொருளாக அவரின் ஆழ்மன விழைவு, அவருக்கே கூட பருவடிவாக தெளிவாகத் தோன்றாத ஒரு விழைவும் இருக்கிறது. நால்வரிலும் தருமர் மட்டுமே தனக்கென எந்தத் தனித்தன்மையும் கொண்டிராதவர். அவரிடம் இருக்கும் ஒரே சிறப்பு அவரின் நூல் வாசிப்பும், அவரது அறக் குழப்பங்களும்தாம். அரசை விழைகிறாரா, திரௌபதியை விழைகிறாரா, அவளிடம் தனக்கென ஒரு பீடம் கோருகிறாரா என்பதெல்லாம் அவருக்கே விளங்காதவை. எவ்விதத்திலாயினும் ஒரு வெற்றி, தன் திறமையால் மட்டுமே ஈட்டப்படும் ஒரு வெற்றி, அதை அவள் முன் பெருமிதத்துடன் படைத்தல் என்பவையும் அவரை பன்னிரு படைக்களத்திற்குச் செலுத்திய விசைகள். இந்த விழைவுகளின் விபரீதம் அவரை வதைக்கிறது. உண்மையில் தம்பியர் இருவரும் வஞ்சினம் உரைப்பதன் மூலமும், பீமன் அவரை இகழ்ந்ததன் மூலம் அவர் ஓரளவிற்கு விடுபடுகிறார். ஆயினும் அவர் வேண்டும் முழு விடுதலையை அளிக்க வேண்டியவளோ அவரை முற்றிலுமாக புறக்கணிக்கிறாள். அவள் முன் அவர் இயலாமையே பேருருவம் கொண்டு எழுகிறது. இயலாமையை சந்திக்கும்தோறும் அவர் சினமும், குரோதமும், தன்னிரக்கமும் கொண்டவராக மாறி மாறி ஊசலாடிக்கொண்டே இருக்கிறார். இந்த வதையில் இருந்து விடுபடவே அவர் ஒவ்வொரு காடாக அலைகிறார். இந்த எல்லைக்கு அவரைத் துரத்திய அவரின் விழைவு நாவல் முழுவதும் மான் வடிவில் வந்து கொண்டேயிருக்கிறது.

இந்தப் பின்னணியில் வைத்துதான் சொல்வளர்காடு நாவலை அணுக வேண்டும். இந்த நாவலில் வரும் வேத நிலைகளின் இடம், அவ்வேதங்களின் சாரம், அவை கொள்ளும் முரண்கள், அவற்றில் வரும் வேதக் கதைகள் என அனைத்தையும் தருமனின் அகத்தை மற்றும் அவர் தேடலை மையமாக வைத்து அணுகும்போதே இந்நாவலின் முழு விரிவும் நமக்குக் கிடைக்கும்.  இந்நாவலைத் துவங்கும் சமயத்தில் தருமர் தன்னளவில் மட்டுமல்லாமல் வாசகர்களாகிய நம்மளவிலும் பாதாளத்தில் இருப்பவராகவே உள்ளார். அந்த இருளில் இருந்து ஒளியை நோக்கிய ஒரு பயணமாக, மண்ணுக்கடியில் ஆழத்தில், அழுத்தத்தில், பல்வேறு மாசுகளோடு இருக்கும் பொன் தாது வெளிக்கொணரப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டு, உருக்கப்படும் எரியை சுவர்ணதாரையாக்கி, ஜடாக்னியாக உருமாறும் ஒரு பயணமாக, தருமர் தன்னைத் தானே கண்டடையும் பயணமாக இந்நாவலை பார்க்கலாம். நாவலின் மையத் தரிசனம் என்பது தருமர் தன் விழைவைக் கண்டடைவதும், அதை முழுவதுமாக அறுத்து மீள்வதுமே.

சௌனகம்:

தருமருக்கு முதல் வேத சாரம் சௌனக வனத்தில், பிரமாணம் என்ற பேரால மரத்தின் நிழலில் சௌனகரால் வழங்கப்படுகிறது. இந்த வேதநிலையின் தத்துவம் முழுவதும் விழைவையும், அதனால் வரும் துன்பத்தையும், ஒரு அரசன் எவ்வாறு தனக்கு மட்டுமான விழைவான திருஷ்ணையில் இருந்து வெளிவந்து செயலாற்ற வேண்டும் என்பதையும் விரிவாகக் கூறுகிறது. இங்கே விழைவு என்பது ஒவ்வொரு உயிரின் இயல்பான நிலை என்பதையும், அவ்விழைவை வேட்பதற்கே வேள்விகள் எனவும் விளக்குகிறது. விழைவு என்பது சரிதான், ஆனால் ஒரு அரசன் தன் பொருட்டான விழைவை தவிர்த்தாக வேண்டும் என்கிறது சௌனக வேத அறிதல். ஒரு அரசன் அரசை விழைவது என்பது எரி விறகை அணுகுவது போல நடக்க வேண்டும் என்கிறது. மாறாக புலி இரையை அணுகுவது போல அணுகினால் அவன் துயரையே அடைகிறான். இங்கே தருமருக்கு தன்னைப் பற்றிய முதல் அறிதல் கிடைக்கிறது. காட்டிற்கு வந்தவர்களில் அவர் ஒருவர் மட்டுமே நகரைப் பற்றியும், அரசைப் பற்றியும் எண்ணிக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் அனைவரும் காட்டின் ஆழத்திற்கு தன்னைக் கொடுத்துவிட்டிருக்கின்றனர். முன்பு சதசிருங்கத்தில் குந்தி இருந்தாற்போல் தருமர் இப்போது இருக்கிறார்.

துவைதம்:

தருமர் இங்கிருந்து செல்வது துவைதக் காட்டிற்கு. இங்குதான் மான் என்ற உருவகம் முதன் முதலாக சொல்வளர்காட்டில் வருகிறது. ஒரு பாறை இரண்டாகப் பிளந்து விழும் ஒலியை தருமர், பீமன், அர்ஜுனன் மற்றும் திரௌபதி அவரவரின் மனநிலைக்கு ஏற்றாற்போல் கனவில் கற்பனை செய்துகொள்கின்றனர். தருமருக்கு அது அம்பு பட்டு அலறும் மானாக கனவில் தோன்றுகிறது. காலையில் விழித்தெழுகையில் அது அவருக்கு அந்த மானின் நகைப்பொலியாகத் தோன்றுகிறது. ஆம், தன் விழைவால் வருந்திக் கொண்டிருப்பவர் அவர். அதே சமயம் அந்த விழைவை ஏற்றிருப்பவரும் அவரே. இது தருமரின் இருமை.

துவைதக் காட்டில் சார்வாகத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களின் அறிதல், எரிதல் என்பதும் விறகின் ஒரு நிலையே என்கிறது. எனவே விறகைப் பேண ஆணையிடுகிறது. அதாவது விழைவு என்பது மானுட உடலின் ஒரு நிலையே, எனவே மானுட உடலால் சாத்தியமான அனைத்தையும் அடையலாம், விழையலாம். அதற்காக அவ்வுடலைப் பேண வேண்டும். அதன் புலன்களின் எல்லைகளுக்குட்பட்ட அறிவே அவ்வுடல் கொள்ளச் சாத்தியமானது. எனவே அனைத்து அறிவும் அவ்வுடலைச் சார்ந்தே இருந்தாக வேண்டும், அதுவே முதல் மெய்மை. மற்றவையெல்லாம் அந்த முதல் மெய்மையைச் சார்ந்தவையே. எனவேதான் இது சார்வாகம். உடலைப் பேணும் மருத்துவமும் இங்கே நடக்கிறது. இக்காட்டில்தான் தருமர் தான் எவ்வளவு கொந்தளிப்புடன், தத்தளிப்புடன் இருக்கிறோம் என்பதை முழுமையாக உணர்கிறார். அவர் நீரில் மூழ்கும் பொழுதுதான் அலைகள் எழுந்து கரையில் இருந்த பாறைகளில் மோதி ஓசை வருகிறது. இத்தனைக்கும் அவர் சிற்றுடலர். பேருடலனான பீமன் மூழ்குகையில் அலையே எழும்புவதில்லை. ஒருபுறம் தனக்கான தேடலில் இருக்கும் தருமர், மீண்டும் மீண்டும் திரௌபதியிடம் மன்னிக்கக் கோருகிறார். அவள் தன்னை இறுக்கி, அமைதியாய் இருக்க இருக்க மேலும் மேலும் துன்பமடைகிறார். அது சினமாக மாறி அவளை பல முறை மானசீகமாகக் கொல்வது வரைகூட செல்கிறார்.

ராமன் சீதையை அவள் பிறப்பைச் சொல்லி வசைபாடியது போன்றே, திரௌபதியும் தருமனை ‘யாரறிவார்? மரவுரி அணிந்து காட்டிலிருக்கையிலும் மணிமுடியைக் கனவுகண்ட ஏதோ முனிவரின் விதையை அவர் ஏந்தியிருக்கலாம்.’ என கொன்று செல்கிறாள்.

ஐதரேயம்:

விழைவு மானுட இயல்பு நிலை, அது உடலின் ஒரு விருப்பே என்று அறிந்த பிறகும் தனக்கான விடை அமையாத தருமர் அடுத்ததாகச் செல்வது ஐதரேயக் காட்டுக்கு. இக்காட்டில் வேத அறிதலின் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்கிறது. இந்நிலையின் முதல் ஆசிரியரான மகிதாசர் தன் அன்றாடச் செயல்களையே, தன் பன்னிரு ஆண்டுகளின் குயவன் வாழ்வையே தவமாக்கி, ‘பிரக்ஞையே பிரம்மம்’ என்னும் ஆப்த வாக்கியத்தை கண்டடைகிறார். எங்கும் நிறைந்திருக்கும் பிரம்மம், ஒரு மானுடனால் அறிய இயன்ற அளவுக்கு அவனுள் நிறைந்திருக்கும் என்று பொருள்படும்படியான குடத்தில் மொள்ளப்பட்ட ஆகாயம் என்ற படிமத்தை முன்வைக்கிறது இம்மெய்யறிதல். எனவே அறியச் சொல்கிறது. ஐதரேய மெய்யறிதல் சிறகு என்பது பறக்கத்துடிக்கும் விழைவே, இப்பருவுடலே அது கொண்ட விழைவுகளால் ஆனதே என்கிறது. குடத்தில் அள்ளப்பட்ட வானம் போல அனைத்தும் அமைந்துள்ள முடிவிலிப் பெருக்கில் இருந்து விளிம்பு கட்டிப் பிரித்து இருப்பை உருவாக்கி அளிக்கும் சூரிய ஒளியை பருவடிவான பிரக்ஞை என்கிறது இம்மரபு. சார்வாகம் கூறும் காரண காரியங்களின் சுழற்சியை மேலும் மெருகேற்றி, சுழற்சியால் துவங்கும் எதுவும் சுழற்சியால் அழியுமாறும் ஆகும் என அறிகிறது ஐதரேயம். ஒவ்வொரு மனிதனும் ஒரு விழைவென்றால் அவ்விழைவுகள் பின்னிப் பின்னி விரிந்து உருவாவதை, அப்பெரு விழைவு சென்று எய்துவதை ஊழ் என்கிறது இது.

இங்கும் தருமருக்கு தான் முறைமைகளிலும், அரண்மனை வசதிகளிலும் எத்துணை ஆழ்ந்திருக்கிறோம் என்பதை அறியும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஐதரேய வேதநிலை ஏழு அரசர்களால் புரக்கப்படுகிறது. அளவான காற்றோட்டம் உள்ள அறையில், மென்பஞ்சுத் தூளியில், கொசுத் தொல்லை இன்றி வெகுநாட்களுக்குப் பிறகு நிம்மதியாகத் தூங்குகிறார் தருமர். அவர் முகத்தில் எஞ்சிய புன்னகையாக இந்த வசதிகள் மறுநாள் காலையில் இருக்கின்றன.

தைத்திரியம்:

ஒரு வேத நிலையின் சாரத்தை உணர்ந்தபின் நிறைவுறாமல் மேலும் தேடி அடுத்த ஆரண்யகத்தைக் கண்டடைவதைப் போலன்றி இக்காட்டிற்கு விதுரரின் வருகையால் கிளம்புகின்றனர் பாண்டவர்கள். இக்காட்டில்தான் முதன் முதலாக ஒரு தன்னறிதலும், மறுபிறப்பும் ஒரு பாத்திரத்திற்கு நடப்பதைப் பார்க்கிறோம். விதுரர்தான் அவர். கிட்டத்தட்ட மரணத்தை அணுகி, சகதேவன் கூறும் தன்னிலையை அறிந்து அவர் மீள்கிறார். அவர் மானுட விழைவுகளின் அடிப்படை ஒரு உயிர் மற்றொன்றின் மீது கொள்ளும் பற்றே என்று கண்டடைகிறார். அன்பென்றும், பாசமென்றும் உருமாறிக் காட்டும் மானுட உயிர்கள் கொண்டுள்ள பற்றே வாழ்வின் ஆதாரம் என உரைக்கிறார்.

இக்காட்டில்தான் தருமர் மானுட வாழ்வில் விழைவைப் போலவே பின்னிப் படர்ந்து நின்றிருக்கும் பற்றைக் காண்கிறார். ஒவ்வொரு வேத நிலையிலும் இளைய யாதவருக்கு எதிரான மனநிலை இருப்பதற்கு அவை அவற்றின் கொள்கைகள், வேத அறிதல்கள் மீது கொண்டுள்ள பற்றே காரணம் என விளங்கிக் கொள்கிறார். விழைவுகளை ஒறுத்தவர்கூட பற்றில் இருந்து விடுபட இயலவில்லை என்பதை அறிகிறார். அனைத்துக்கும் மேலாக அவரே ஒரு உயிர் பிறிதொரு உயிரின் மீது வைக்கும் பற்றின் எல்லையை ஒரு குரங்கின் வடிவில் அறிகிறார். இக்குரங்கு சர்வ சாதாரணமாக ஒரு மானின் கொம்பில் ஏறி விளையாடிச் செல்கிறது.

இங்கே சொல்லப்படும் சுனக்ஷேபரின் கதை மிக முக்கியமான ஒன்று. இது பற்றுக்கும் விழைவுக்குமான போரில் அன்பால் செலுத்தப்பட்ட அறம் வெல்வதைப் பற்றியது. தன் ஒரே மகன் மீது கொண்ட பற்றால் வருணனுக்கு பலி அளிக்க, வேத உச்சத்தை அடையும் பெருவிழைவு கொண்ட அஜிகர்த்தர் என்ற அந்தணரின் இரண்டாம் மைந்தனான சுனக்ஷேபனை பலி கொடுக்க முனைகிறான் ஹரிச்சந்திரன். மானுடப் பலி கொடுக்க விரும்பாததால் எந்த அந்தணரும் அவ்வேள்வியைச் செய்ய முன்வரவில்லை. எனவே தன் விழைவை தானே இயற்ற அஜிகர்த்தரே முன்வந்து தன் மைந்தனை பலி கொடுக்கும் வேள்வியைச் செய்கிறார். ஒரு மானுடன் பலியாவதைத் தாங்க இயலாத விஸ்வாமித்ரர் சுனக்ஷேபனை தன் மைந்தனாக ஏற்று தான் அதுகாறும் செய்த வாழ்நாள் தவத்தை அவனுக்கு அளித்து மீட்கிறார். இங்கே வரும் விஸ்வாமித்ரரின் கொடை தருமரின் ஆழ்மனதில் பிறிதில்லாது, அள்ளக் குறையாது, அளிக்க வேண்டும் என்ற எண்ணம் விழுந்த முதல் விதை.

பிருஹதாரண்யகம்:

சொல்வளர்காட்டில் ஒரு குறுநாவல் என சொல்லப்படத் தக்க வகையில் அமைந்த ஒரு பகுதி இது. ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற ஆப்த வாக்கியத்தின் கதை. யாக்ஞவல்கியர், காத்யாயினி மற்றும் மைத்ரேயி அன்னையின் கதை. இப்பகுதியில்தான் சீதையின் மிதிலை மற்றும் ராஜரிஷி ஜனகர் பற்றிய விரிவான விவரணைகள் வருகின்றன. முதலில் ஏன் சீதையைப் பற்றியும், மிதிலையைப் பற்றியும் இவ்வளவு விரிவான விவரணைகள் தேவை? வெண்முரசில் எந்தப் பகுதியும் வீணாக எழுதப்படுவதில்லை. மிக நேரடியாக ஒரு தொடர்பை நாம் கண்டறிய இயலாவிட்டாலும், அத்தொடர்பிற்கான முகாந்திரங்கள் தரப்பட்டிருக்கும். அவற்றைக் கண்டறிவதே ஒரு வாசகருக்கு முன்னுள்ள சவால். தருமர் அடைந்து கொண்டிருக்கும் அனைத்து அவஸ்தைகளையும் காடேகி, கவரப்பட்டு சிறையுற்று, பொருந்தாப் புறக்கணிப்பால் மனம் நொந்து எரியேகிய பொறையின் மகள் அல்லவா அவள்? அவளும் அவரும் இணையும் புள்ளி இதுவே. அவள் உணர்ந்து அடைந்ததையே இவரும் அடையப் போகிறார். எனவே அவள் விரிவாக வருகிறாள்.

பிற ஆரண்யகங்கள் எல்லாம் ஒறுத்துச் செல்வதைச் சொன்னால், இக்குருநிலை அனைத்தையும் கொண்ட முழுமைக் கல்வியை முன்வைக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் இக்கல்விநிலையிலேயே பெண்களுக்கு இருக்கும் தத்துவத் தேடலுக்கான சாத்தியம் முன்வைக்கப்படுகிறது. இதற்கு முன்பு ஐதரேயம் மகிதாசரின் தாயின் கூற்றில் இருந்துதான் துவங்குகிறதென்றாலும் அங்கு அவளுக்கென்று எந்த மெய்யறிதலும் அளிக்கப்படவில்லை. எங்கும் பெண்களுக்கு மெய்யறிதல் வழங்கப்படவில்லை. ‘நானே பிரம்மம்’ என்ற சொல்லில் துவங்கினாலும் யாக்ஞவல்கியருக்கு அது வெறும் சொல்லாகவே இருந்ததன் காரணம் அவர் தன் துணைவி காத்யாயினியின் மெய்த் தேடலை கடைசி வரை உணரவே இல்லை என்பதே. அதை அவருக்கு உணர வைத்தவள் மைத்ரேயி. இக்காட்டில்தான் பெண்களுக்கும் தேடல் உண்டு என்பதையே தருமர் உணர்கிறார். பிருஹதாரண்யகத்தை தற்போது இருக்கும் கலைகளையும் உள்ளடக்கிய முழுமைக் கல்வியை நோக்கி செலுத்திய மைத்ரேயி அன்னை, காத்யாயினியுடன் சென்று சேர்ந்த கார்கியின் குருநிலை பற்றி அறிகிறார். முதன் முறையாக திரௌபதியை அறிய வேண்டிய தேவை அவருக்கு புரிகிறது. அதுவரையில் “தான் இவ்வளவு இறங்கிப் போய் கெஞ்சிய பிறகும், ஆணென்றுகூட பாராமல் தன்னை மதியாமல் இருக்கிறாளே இவள்” என்ற எண்ணமே அவருக்கு இருந்துகொண்டிருக்கிறது. அவ்வெண்ணம் மாறுமிடம் இது.

சாந்தீபனி:

நியாயமாக கார்கியின் குருநிலைக்குச் செல்வதே இயல்பான போக்காக இருந்திருக்கும். மாறாக பார்த்தனின் அறிவுறுத்தலால் அவர்கள் சாந்தீபனி குருநிலைக்கு செல்கிறார்கள். இங்கே அவர்கள் மீண்டும் கிருஷ்ணனை பார்க்கிறார்கள். சாந்தீபனி குருநிலை மொத்த வேதக் கல்வியையும் இணைத்து ஒரு சமன்வயத்தை ஏற்படுத்துகிறது. முதன் முதலாக அனைத்துமே லீலை, எதற்கும் எப்பொருளும் இல்லை, அவை நடந்தாக வேண்டும், எனவே நடக்கின்றன. பெரும் லீலை. விழைவும் அதன் விளைவும் நம் கையில் இல்லை. நம் வழியாக ஒழுகிச் செல்பவையே அவை என்பதாக தருமர் புரிந்துகொள்கிறார். சற்றே தன் குற்ற உணர்வில் இருந்து தெளிகிறார். நடந்தவற்றை மாற்ற இயலாது என்பதையும் அவை ஒரு பெரும் பெருக்கின் சிறு துளிகள் எனவும் உணர்கிறார். ஒரு எல்லையில் கிருஷ்ணனுக்கே ஒரு பதில் சொல்லும் தெளிவை அடைகிறார்.

இங்கே தருமர் பற்றின் மற்றொரு முகத்தைக் காண்கிறார். கிருஷ்ணனின் குரு தன் மகன் மீது கொண்ட பற்றால் தன் ஞான முழுமையை அடையாமல் இருந்ததையும், மிகக் குரூரமாக கிருஷ்ணனின் கேள்வியால் துளைக்கப்பட்டதையும், அத்துயரும், அதன் உண்மையும் அவரை கிருஷ்ணன் மீது தீச்சொல்லிட வைத்ததையும் அவர் அறிகிறார். மைந்தன் மீதான பற்று, குருவின் மீதான பத்ரரின் பற்று போன்ற மானுட உயிர்களின் மீதான அன்பு என்னும் விலங்கு மானுடத்தின் மீது செலுத்தும் தளையை அறிகிறார். அனைத்துக்கும் உச்சமாக இந்த பற்று கிருஷ்ணனையே தளர்வுறச் செய்வதையும் காண்கிறார். மறு எல்லையில் அந்தப் பற்றே எவ்வாறு ஒருவரை துயரில் இருந்து மீட்டு வர இயலும் என்பதையும் அவர் தைத்ரியத்தில் சந்தித்த குரங்குக் குட்டியின் நினைவை மீட்டுவதன் மூலம் உணர்கிறார்.

மைத்ராயனியம்:

இக்காட்டிற்கு கிருஷ்ணரின் வழிகாட்டலின் பேரில் வந்து சேர்கிறார்கள். கிருஷ்ணன் மிகத்தெளிவாகவே அனைத்து ஆரண்யகங்களும் இணையும் புள்ளி என இக்காட்டைச் சொல்கிறார். அதை அனுபவபூர்வமாக உணர்கிறார் தருமர். இக்காட்டிலேயே அவரின் அனைத்து அறிதல்களும் முனை கொள்கின்றன. முக்கியமாக ‘பசியும் ருசியும் விலகியபின்னரே நீ அன்னத்தை அறியத்தொடங்குகிறாய். அதன்பின்னரே அருஞ்சுவை உன் கைகளில் வந்தமைகிறது’ என்ற உண்மை. இந்தப் பசி, ருசியை விடுதல் என்பதை பற்று, விழைவை விடுதல் என்று பொருள் கொண்டால் கிருஷ்ணனின் கோலாகல மனநிலையை அறிந்து கொள்ளலாம். இக்காட்டிலே தருமர் கேட்கும் இரு கதைகள் அவரின் தேடலை முழுமை செய்கின்றன.

மாந்தாதா: இக்கதையில் மைந்தர் மேல் கொள்ளும் பற்று எவ்வாறு ஒரு வாழ்வின் தரிசனம் ஆகிறது என்பதை அறிகிறார். இதன் மாந்தாதா ‘என்னை உண்ணுக’ என்று சொல்லுமிடம் உச்சமானது. அதை அவர் தன் நாட்டில் உளவறிய வந்து மாட்டிக் கொள்ளும் எதிரி நாட்டு ஒற்றனிடம் சொல்கிறார். ‘என்னை உண்ணுக’ என்ற சொல்லின் பரு வடிவை அவர் மைத்ரி என்ற ஆலமரமாகக் காண்கிறார். அம்மரம் எங்குமே செல்லவில்லை. ஆனால் அதை உண்ட பறவைகள் வழியாக அம்மரத்தின் கன்று தென்முனை குமரி வரை கூடச் சென்றிருக்கும் என்ற தரிசனம் அபாரமான ஒன்று. அளிக்க அளிக்க அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்ற உண்மையை அவர் அகம் ஏற்ற தருணம் அது. அள்ள அள்ளக் குறையாத அறங்களின் ஊற்றாக அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என தன்னறத்தை அவர் ஆழுள்ளம் உணர்ந்த தருணம். அசோக வனத்தில் சீதையும் இப்படித் தானே தன்னைச் சூழ்ந்த அரக்கியருக்கு இருக்கிறாள்? இன்னும் குறிப்பாக திரிசடைக்கு.

ஜந்து: வெண்முரசில் பல கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் வந்தவற்றிலேயே மிகக் கொடூரமான கதை என்றால் அது இந்த ஜந்துவின் கதைதான். மானுடரின் விழைவு எந்த எல்லை வரை செல்லும் என்பதை முழுமையாக தருமருக்கும், நமக்கும் உரைக்கும் கதை இது. இதில் அந்தத் தந்தை ஜந்துவின் கழுத்தை அறுக்கப் போகும் நேரத்திலும் அதன் அதரத்தின் புன்னகை மனதில் இருந்து நீங்க பல நாளாகும். மானுடம் இதுநாள் வரை பேணிய அனைத்து அறங்களும், விழுமியங்களும் அதன் விழைவுகளுக்காக அவியிடப்படுகின்றன. இதில் யமன் ஜந்துவின் தந்தையான சோமகனிடம் கேட்கும், ‘அரசே, சொல்க! இந்த நூறு மைந்தரும் ஆயிரம் பெயர் மைந்தரும் பன்னீராயிரம் மறுபெயரரும் உனக்கு எவ்வகையில் பொருட்டு? எதற்காக இவர்களை இழக்கச் சித்தமாவாய்?’ என்ற கேள்விக்கு பதில் விழைவு என்றே ஆவதைக் காண்கையில் விழைவு என்பதன் வீரியத்தை உணர்கிறார். மிகத்தெளிவாகவே தன் விழைவின் விபரீதத்தை உணர்கிறார். எங்கோ சொல்லப்பட்ட இரு கதைகளை விழைவு, பற்று என்ற வகையில் ஒரு புள்ளியில் கோர்த்து ஒரு தரிசனத்தை உருவாக்கிய ஆசிரியரின் கண்டடைதல் அபாரமானது. இத்தகைய அடைதல்களே அவரை வெண்முரசை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கின்றன.

விழைவு:

இதுகாறும் அடைந்த அனைத்து அறிதல்களையும் விழைவு ஒரு புள்ளியில் ஒரு அருகப் படிவர் மூலம் கொண்டு வந்து சேர்க்கிறது சொல்வளர்காடு. ஏன் அருகர்? வேத முனிவர்கள் வேள்வியின் மூலம் விழைவை அறிவித்து, வேட்டு வேண்டியதைப் பெறுகிறார்கள். மாறாக அருகர்கள் ஊரில் இருந்து விலகி, ஆழங்களில், அவற்றின் இருளில் ஊழ்கத்தில் அமர்ந்து தங்கள் விழைவை அறுத்து மெய்மை அடைகிறார்கள். எனவே விழைவு என்பதைப் பற்றி ஒரு அருகர் பேசுவதே முறையாக இருக்க முடியும். மட்டுமலாமல் முன்பே ஒருமுறை தருமராக அவர் காந்தியை எழுதிக் கொண்டிருப்பதாக ஜெ சொல்லியிருந்தார். காந்தியின் சமணத் தொடர்பும் நாம் அறிந்ததே!! இனி அருகரின் வார்த்தைகள்:

“அரசே, இப்புவியில் அறமென்றும் அன்பென்றும் ஏதுமில்லை. இருப்பது விழைவு ஒன்றே. விழைவுக்குரியதை நாடும் வழியையும் அதை பேணும் முறைமையையும் மானுடர் அறமென வகுத்தனர். விழைவை அன்பென்று ஆக்கி அழகுறச்செய்தனர். விழைவை வெல்லாதவனால் தன் விழைவை அன்றி எதையும் அறியமுடியாது. அறிபடுபொருள் அனைத்தும் விழைவால் உன்னிடம் தொடர்புகொண்டிருக்கையில் வேறெதை அறியும் உன் சித்தம்?. அரசே, இப்புவியில் அனைத்துக் கொடுமைகளும் விழைவின் விளைவாகவே செய்யப்படுகின்றன. இங்கு மெய்மையும் அறமும் விழைவுகளால் விளக்கப்பட்ட வடிவில்மட்டுமே கிடைக்கின்றன. விழைவறுத்து விடுதலை கொள்க! அறிவதறிந்து அமைக! அருகனருள் அதற்குத் துணை கூடுக!”.

“களிம்பும் துருவுமென படர்பவை ஆணவமும் அறியாமையும் பிறவும். விழைவோ உலோகக்கலவை என உள்கலந்து உருவென்றாகியது. உருகியழிந்து பிறந்தெழாமல் விழைவறுத்து மீளமுடியாது.”

மீண்டும் மீண்டும் திரௌபதியை நாடும் தன் மனதை, தன் விழைவை என்ன செய்வது எனக் கேட்கும் தருமரிடம் அருகர், “அவளை அறிக!  அறிதலே கடத்தல். கடப்பதே விழைவை வெல்லும் ஒரே வழி. அவளை அறிதலென்பது அவள் அழலை அறிதலே. அழலுக்கு அஞ்சி அப்பால் நிற்பவர்கள் அதை அறிவதில்லை.  தீயில் இறங்கி உருகி மாசுகளைந்து வெளிவரும் பொன் அறியும் தீயென்றால் என்னவென்று. ஆகவே பொன்னை ஜடாக்னி என்கிறார்கள். தீயை சுவர்ணதாரா என்கிறார்கள்.” – ஆம் அறியவே அவர் எரிபுகுகிறார். சீதையும் அதற்காகவே.

யக்ஷவனம்:

தருமன் என்னும் காதலன்: இவ்வனத்திற்கு அவர்கள் வருவதற்கு முன்பு வரும் ஒரு இளிவரல் சூதனின் பகுதிகள் மிக முக்கியமானவை. வெண்முரசில் சூதர்கள் பல பகுதிகளில் வந்தாலும் இளிவரல் சூதர்கள் வரும் பகுதிகள் எளிதில் கடக்க முடியாதவை. இவர்கள் அனைத்தையும் கவிழ்த்துப் போட்டு பகடி செய்பவர்களே. இருப்பினும் இவர்களின் பகடிகள் பல அறிதல்களைத் தருபவை. இப்பகுதியில் இந்த சூதன் பேசுபவை மிகத் தெளிவாகவே சீதையை காட்டி விடுகின்றன.

முதலில் அந்த நாரையின் இறகைப் பார்த்து முண்டக உபநிஷத்தின் ‘ஒரு பறவை உண்ண, மறு பறவை பார்த்திருந்த’ கதையைச் சொல்பவன் அடுத்ததாக நேரடியாக வால்மீகியின் முதல் சுலோகத்தின் கதையைச் சொல்கிறான். அந்த ஆண் துணையை இழந்து தவிக்கும் பெண் நாரைக்கு தன் தவத்தின் பலனைத் தந்து கவி பாடி, அப்பறவைகளை வாக்தேவியின் கையில் விளையாட விட்டு சாகா வரமளித்தவர்தானே சீதையைப் பாடிய புற்றுறை முனி. இவையும் போதாது என்று தருமனின் நீர் என்ன பித்தரா என்ற கேள்விக்குப் பதிலாக சூதன் “பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும் பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ என்பார்களே?” என்று கம்பனை வேறு துணைக்கு அழைக்கிறான்.

சீதையின் கதையைச் சொல்லிவிட்டு அவள் உதிர்த்த இந்த இறகின் பெயர் என்ன என்று கேட்கும் சூதனிடம் தருமர் “ராமா” என்று பதிலிறுக்கிறார். அவனும் அதுதான் சரியான பதில், காதல் கொண்டவளுக்குப் பெயரே இல்லை, காதலனின் பெயரையே சூடிக் கொள்கிறாள் என்கிறான். அக்காடு முழுவதும் நிறைத்திருக்கும் ராமனின் துயரக் குரலில் ஒலிக்கும் சீதா என்ற ஒலியை தருமர் மட்டுமே கேட்கிறார். இங்கே நம்முன் வரும் தருமன் அறத்தின் மூர்த்தி அல்ல, பெருங்காதலன். தருமரின் மிக முக்கியமான ஒரு பரிமாணம் நமக்கு வெளிப்படும் தருணம் இது. இந்தப் புள்ளியில் தருமர் அவளை வெறுக்கவில்லை. அவளிடம் மன்னிப்பும் கோரவில்லை. அவளை அவளாக விரும்புகிறார். மானுடம் கண்டடைந்த சாமானிய தளத்தில் செயல்படும் தரிசனங்களில் உச்சம் என காதலையே சொல்ல இயலும். வேறு எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு உயிர் பிறிதொரு உயிரிடம் கொள்ளக்கூடிய பெரும் பற்று காதலே. அக்காதலை அறியாத ஒருவரால் எவ்வாறு மானுடத்தை, உயிர்களை, இப்புடவியை ஏற்கவும், விரும்பவும், கொள்ளவும் இயலும்?

விழைவு என்னும் மான்:

இப்பகுதியில் தருமரை கந்தமாதன மலை நோக்கி கொண்டு செல்லும் மற்றொரு கதாபாத்திரமாக சுஃப்ர கௌசிகர் என்னும் வேதியர் வருகிறார். இவரும் வேள்விதான் செய்கிறார். பலியும் இடப்போகிறார். இன்னும் குறிப்பாக ஜந்து கதையில் வந்த அதர்வ வேள்விக்கு இணையான ஒரு பூத வேள்வியே இவர் செய்வது. ஒரே ஒரு மாற்றம், அவியாக தன்னையே பலியிடப் போகிறார். ‘தன்னையே’ தன் சமூகத்தை உண்ணச் சொல்கிறார். மாந்தாதாவும் சோமகனும் சந்திக்கும் புள்ளி. தன்னையே உருக்கி சமூகத்துக்காக அர்ப்பணிக்கும் ஒருவர்.

இவரின் சிஷ்யர்களில் ஒருவருக்கு அவர் எரி புகுவதில் விருப்பமில்லை. எனவே அவர் வேள்வி எரி எழுப்பும் அரணிக் கட்டையை தூக்கி எறிந்து விடுகிறார். அதை ஒரு மான் எடுத்துக் கொண்டு செல்கிறது. அரணிக் கட்டை இருந்தால்தானே சுஃப்ர கௌசிகர் எரி புகுவார்? மானின் முக்கியமான இயல்பு, அது மிக அழகான மிருகம். ஆனால் மிகுந்த அச்சம் கொண்டதும் கூட. நிலையற்ற மனம் கொண்டது. விழைவு அப்படிப்பட்டதுதான். அது நிறைவேறுவதுவரை அப்படித்தான் அச்சம் கொண்டு கால் மாற்றி நின்று கொண்டிருக்கும் மானைப் போலவே நம் மனதை வைத்திருக்கும். அதை முற்றிலுமாக புறக்கணிப்பது என எண்ணினால் அதைத் தடுக்கும் வகையில் அப்புறக்கணிக்கும் எண்ணத்தையே எடுத்துக்கொண்டு யாரும் அணுக இயலாத நச்சுப் பொய்கைக்கு கொண்டு சென்று விடும். அப்படி ஒரு எண்ணம் நம்மில் வந்தாலே அது மறைந்து விடும். அதன் காலடித்தடங்களையும், மணத்தையும் வைத்தே அதை பின்தொடர இயலும். அதையும் மீறி அதைத் துறக்க விரும்பினால் நம்முடன் நம் விருப்பங்களை நிறைவேற்றுவதாக பேரம் பேசும். அதையும் தாண்டி வருகையிலேயே ஒருவர் விழைவின் ஆழத்தை, அது தன்னுள் கலந்து ஒன்றுடன் ஒன்றாக உருகி இணைந்திருப்பதை முழுமையாக உணர இயலும். இதையே தருமர் யக்ஷவனத்தில் இருந்து திரும்பும் வழியில் உணர்கிறார். எரிபுகத் தயாராகிறார்.

கந்தமாதனம்:

தருமர் கந்தமாதன மலையில் செய்வது தன் விழைவை அவியாகச் சொரிந்து செய்யும் ஒரு வேள்வி. அவர் அதுகாறும் தன்னுள் சேர்ந்த தன் விழைவின் வெவ்வேறு வடிவுகளை காண்கிறார். அவற்றை நெருப்புக்கு அவியும் இடுகிறார்.

  1. கந்தர்வர்கள்: அவர் முதலில் காணும் தன் விழைவின் உருவங்களாக கந்தர்வர்கள் வருகின்றனர். இவை அவர் தன் இளமையில் பாண்டுவின் தோளில் அமர்ந்து கேட்டவை, அவ்வயதில் அவருள் குடியேறியவை. இனிமையே உருவானவை. எனவேதான் தீயில் சென்று விழுந்தபின்னும் இசையாக எஞ்சுபவை.
  2. பொன் தேவன்: இரண்டாவதாக வருபவன் பொன்னை உருக்கி வடித்தெடுத்த ஒரு பேரழகன். இத்தேவன் வரிசையாக தன்னைப் போன்றவர்களால் பெருகுகிறான். அவர்களே முதல் முதலாக அவருள் இருந்த விழைவை ஒரு சொல்லாக எடுத்து தங்கள் முன் போட்டு விளையாடுகின்றனர். அவ்விழைவை சரியாக உணரவேண்டி அதைத்தன்னிடம் வீசுமாறு கூவுகிறார் தருமர். இந்த பொற்தேவன் அவர் உள்ளே இருந்த அழகனான, அறத்தின் உருவினனான ஒரு அரசன் என்ற விழைவே. இன்னும் குறிப்பாக பொற்கவசம் அணிந்த தேவன் என்பதும், அழகன் என்பதும் இவன் கர்ணனின் உருவமே என்றுகூட வாசிக்கலாம். அவன் அங்க நாட்டு பட்டாபிஷேகப் பகுதியில் அவனை அழகன் என்றும், அறத்தான் என்றும் உணர்ந்தவர்தானே இவர்! எங்கோ உள்ளத்தின் ஒரு மூலையில் திரௌபதியிடம் காதல் கொள்ளத் தேவையான ஒரு உருவாக, உடல் மொழியாக இவ்வுருவமே இருந்திருக்கக் கூடும்.
  3. நாகம்: இப்பொற்தேவர்களை தீயிலிட்டு அவர்கள் உருட்டி விளையாடிய சொல்லை ஒரு நாகமணிக்கல்லாக மாற்றுகிறது ஓர் நாகம். பொதுவாக நாகம் நம் மரபில் விழைவுக்கு குறியீடாகப் பயன்படுவது. மாறாக இங்கே நாகம் தருமரின் விழைவின் ஒரு முகமாக சினத்தின் குறியீடாக வருகிறது. இந்த நாகமே அச்சொல்லை, அவர் விழைவை அவர் விழியறியத் தருகிறது. அவரின் அறத்தான் என்றாகும் விழைவு.
  4. கரிய தெய்வம்: தன் சினத்தையும் அவியிடும் அவர் முன் அடுத்ததாக அவர் விழைவு ஒரு கரிய தெய்வமாக எழுந்து வருகிறது. அதற்கு விழியில்லை. ஆம் விழைவு எவ்வாறு விழி கொண்டிருக்க இயலும்? அது அவரின் விழைவையே விழியாக்கிக் கொள்கிறது. இது உண்மையில் அவரின் அறத்தான் என்னும் பிம்பத்தையே அரசனாவதற்கான மூலதனமாக்கிய குந்தியே. தன் தாய் மீதான விழைவையும் அவர் அவியாக்குகிறார். மிகச் சரியாக அது அவரை மைந்தா என அழைக்கிறது. அதுவும் குருதி மணத்துடன். ஆம், கர்ணனைக் கொன்று உண்டதே இதற்காகத் தானே. மற்றொரு வகையில் அரச பதவி என்பதே குருதி வாசம் கொண்டது என்றும் வாசிக்கலாம்.
  5. பதினாறு முகம் கொண்ட தெய்வம்: அன்னையையும் துறக்கும் அவர்முன் பதினாறு முகம் கொண்ட தேவியாக உருமாறுகிறது அந்த தெய்வம். ஆம், குந்தியின் மாற்றுருதானே திரௌபதியும்? அவரின் அறத்தானாக வேண்டும் என்ற விழைவை மகாருத்ரமாக அவர் கையில் தருகிறது இத்தெய்வம். அவர் இதையும் துறக்கிறார்.
  6. அன்னம்: ஒரு வழியாக தன்னில் விழைவை ஏற்படுத்திய அனைத்தையும் துறக்கும் தருமர் தன் கையில் ஒரு நீல மணியாக வந்திருக்கும் விழைவை பார்க்கிறார். அது அன்னமாகத் தெரிகிறது. பசித்தவருக்கெல்லாம் அவியாகும் அன்னம். பசி என்பதை அறிவுப் பசி, உடல் பசி, பொருள் பசி என பலவாறாகப் பிரித்தால் அவை அனைத்தையும் தீர்க்கும் ஒரு அறத்தானாக, ஒரு அரசனாக அமைவதே அவர் கையில் வைத்திருக்கும் அன்னத்தின் பொருள். ஆயினும் அந்த அன்னம் அல்ல அவர், எனவே அதையும் துறக்கிறார். அதுவரையிலும் அவருள் எரிந்து கொண்டிருந்த ஏதோ ஒன்று ஒரு கணம் அடங்குவதை உணர்கிறார். அதைப் போன்றே கந்தமாதனத்தின் நெருப்பும் ஒரு கணம் அடங்கி அமைகிறது.
  7. தன்னையே அவியாக்கல்: அடுத்த கணம் மீண்டும் எரியும் அந்த நெருப்பின் முன், தன்னையே ஆகுதியாக இடும் தருமன் தன் விழைவை, தானாக இருக்கும் ஒன்றை முற்றிலுமாக துறக்கிறார்.

இதன் பிறகு மீண்டு வரும் தருமருக்கு அனைத்தும் ஒன்றாகத் தெரிகிறது. அவர் தன்னையே மாந்தாதாவாக உணர்கிறார். எப்பசியுடையாருக்கும் பசியாற்றும் அன்னம் குறையாக்கலமாக மாறுகிறார். எப்படி பிரிந்தாலும் அருள் புரியும் தருமமாகவே ஆகிறார்.

சீதையும் இவ்வாறே தன்னை தூய்மை செய்துகொள்ள, தன் விழைவை முற்றிலுமாகத் துறந்து, தன் குலத்துக்கு, அரசுக்கு அன்னம் குறையாக் கலமாக வழிகாட்டிக் கொண்டிருந்த அரசியாக இருந்த அதே நிலைக்குத் திரும்பும் வகையில், ராமனை மட்டுமன்றி மானுடரையும், எவ்வுயிரையும் அறியும் தாயாக மாற எரி புகுகிறாள். இவ்விடத்தில் கம்பன் காட்டும் சீதை துயருற்றவள் அல்ல. மானுடக் கீழ்மையைக் கண்டு அயர்வுற்றவளும் அல்ல. பிறவிப் பெருங்கடல் நீந்தி தன்னில்லம் நோக்கி செல்லும் ஒருத்தி. அவள் முழுமையானவள். துயரற்றவள். அனைத்தையும் காண்பவள். கடந்து சென்றவள். அமைந்தவள். அவள் ராமன் மீது சினம் கொள்ளவில்லை என்பதே அவள் ராமனைக் கடந்து விடுகிறாள் என்பதற்கு மிகச் சிறந்த சான்று. இதற்குப் பிறகு அவள் கம்பனில் பேசவே இல்லை. மலர்ந்த முகத்துடன் அனைவருக்கும் அருள் புரியும் பேரரசியாக அவள் இருக்கிறாள். தருமனும் அவ்வாறே. தற்பிரிந்து அருள் புரி தருமம் அவ்வாறுதான் இருக்க முடியும்.

Aside

வெய்யோன் : ஒரு பார்வை – ராகவ்

மிக விரைவில் புத்தகமாக வரவிருக்கும், நாம் தளத்தில் படித்த வெய்யோனை பற்றி இன்று கொஞ்சம் விவாதிக்கலாம்.

வெய்யோன் – கர்ணனை பற்றிய ஒரு தனிப்புத்தகம் என்று எடுத்துக்கொன்டால் அது சரியாக அமைந்துள்ளது என்றே படுகிறது. அதற்கு முழுமையான நியாயம் செய்யும் ஒரு படைப்பாகவும் உள்ளது. ஆனால் அப்படி சொல்வதற்கு முன்னால்

நமக்கு பொதுவாக தெரிந்த கர்ணன் (தொலைகாட்சி நாடகங்கள், பிரியபட்ட ஆக்கங்களில்) எப்படி உள்ளான் என்றும் பார்கலாம். அதே நேரத்தில், நம் வெண்முரசு தொடரில் இதுவரை கர்ணன் யார். எவ்வாறாக உருவாகி உள்ளான் என்றும் தொகுத்து கொள்வதும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.

அந்த வகையில், மற்ற ஆக்கங்களில் கர்ணனுக்கு சில குறிப்பிடும் கட்டங்கள், உச்சங்கள் உன்டு. அவன் பிறப்பு – குந்தி திருமணம் ஆகும் முன்பு கர்ணனை பெற்று பின் ஆற்றில் விட்டு விடுகிறாள். கல்வி, துரோணரால் மறுக்கபடுகிறது, அதன் பின் பரசுராமர் மூலம் சாபம் பெறுகிறான். ஒரு முதற்கட்ட மோதலாக அர்ஜுனனைவிடவும் சிறந்த வில்லாளி என்று சபைக்கு முன்னால் வந்து நிற்கிறான். பீமன் கொந்தளிப்பதும், அவன் வில்லாட சபை மறுப்பதும், அந்த சபையில் துரியோதனன் கர்ணனுக்கு அங்க தேச மன்னனாக மகுடம் சூட்டுவதும் நிகழ்கிறது. அதன் பின் நாம் கர்ணனின் கொடுத்து கொடுத்து சிவந்து போகும் கைகளை காண்போம். துரியோதனன் கர்ணன் இடையே ஆண நட்பு அதிகம் பேசபடும் ஒன்று. எடுக்கவோ கொர்க்கவோ போன்ற உச்ச காட்சிகள். இவை பொதுவாக நாம் கண்ட கர்ணனின் முன் வரைவு.

பின் கர்ணனின் திருமணம். துரியோதனன் இந்திரப்ரஸ்தத்தில் பிழையாக குளத்தில் விழுவது இதெல்லாம். இந்த புத்தகத்தில், வெண்முரசில் முதல் முறையாக, கதையின் அம்சமாக இந்த இருவரிகள் மட்டுமே என்பதை ஒரு குறிப்பாக இங்கு சொல்கிறேன்.

இதற்கு பின் கர்ணன் துஷ்ட சதுத்தர்களில் (துரியோதன, துச்சாதன, கர்ண, சகுனி) ஒருவனாக ஐக்கியமாகி செயல் படுவது

அதற்கு பின் நாம் அறிந்த சம்பவங்கள், உச்சங்கள். முடிவில் குந்தி கர்ணன் எல்லோருக்கும் மூத்தவன் என்று தெரியபடுத்துவது. இவை நாம் மற்ற ஆக்கங்களில் பொதுவாக பார்க்கும் கர்ணன்.

வெண்முரசில் வெய்யோன் வருவதற்கு முன்னமே கர்ணனுக்கு ஒரு குறுநாவல் அளவுக்கு வடிவம் வந்து விட்டது.

குந்தி கர்ணனை பெற்றெடுப்பது. பின் ஆற்றில் விடுவது. இதுவே ஒரு ஆழம் மிக்க கதையாக உள்ளது. குந்தியின் கர்ப்ப காலம்.  அவளை பார்த்துகொள்ள வரும் செவிலி. அவர்கள் ஊடாக, குந்தி கரு உற்றது முதல், அங்கே உலவி வரும் ராஜ நாகம். செவிலி அந்த நாகத்தை கொல்ல முயல்வதும், பதிலுக்கு நாகம் அவளை முடிக்க நேர்வதும். இப்படி கர்ப்ப காலமே ஒரு கதையாக. அதன் பின் குந்தி கர்ணனை ஆற்றில் விட்டு விட நேர்கிறது. கர்ணனை அவள் தேடவும் செய்கிறாள். பாண்டுவை மணம் புரிந்த பின், அவனுடனான பேச்சில் – அன்று இருந்த ஷத்ரியனான பாண்டு – கர்ணனை ஒரு மகனாக ஏற்காமல் போகலாம் என்ற எண்ணம் கொன்டு குந்தி கர்ணனை பற்றி சொல்லாமல் விடுகிறாள். பின் அவர்கள் காட்டுக்கு செல்லும்போது அது வெளிபடுகிறது. மறுபுரம் ராதையும் அதிரதனும். ஆற்றில் கண்டு எடுத்த மகன் வசுஷேனனுடன் அதிரதன் எனும் குதிரைகாரனும் அவன் மனைவி ராதையும் இருந்து வருகிறார்கள். உருக்கமான பல அத்தியாயங்கள் அவர்களுடன்.  அவர்கள் சூரியனார் கோவில் உள்ள சம்பாபுரி செல்வதும் அங்கு கர்ணன் வளர்வதுமாக கதை நேர்கிறது. அங்கேயே அவன் மன்னனுக்கு தேரோட்ட நேர்வது பின் மன்னனை காப்பாற்றும்படி ஆவதும் நிகழ்கிறது. சூதன் மன்னனை காப்பாற்றுவதா என்ற இடத்துக்கு பின்னால் அங்கிருந்து கர்ணன் ஹஸ்தினபுரி வருவதும் நிகழ்கிறது.

ஹஸ்தினபுரிக்கு வரும் கர்ணன், பான்டவர்களில் முக்கியமாக பீமனால் வெறுக்கபடுவது – குந்தியால் அவன் கவனிக்கபடுவது. பின் சூதன் ஆணாலும் துரோனர் குருகுலத்தில் அவன் இருப்பதும் அங்கு நிகழ்பவையும் அவன் சூதன் எனும் காரனமே அவனை துரத்த அவன் குருகுலம் நீங்குவ்வதும் வெண்முரசில் கர்ணனின் பயணம்.

அதன் பின் ஒரு உச்சமாக அர்ஜுனனை விட அவன் சிறந்தவன் என்று அவன் களம் நிற்பதும் அங்கேயே அவனுக்கு துரியோதனன் அங்க மன்னனாக முடி சூட்டுவதும், அதன் பின் யுதிஷ்டிரன், கர்ணன் அவன் அறம் மூலம் மட்டுமே பாண்டவர் ஐவரையும் வெல்வான் என்று, நம் எழுத்தாளர் தொடும் உச்சம்.

இவ்வளவு பெரிய முன்வரைவுக்கு பின்னர் தான் வெய்யோன் தொடங்குகிறது. இதற்கு பின்னும் கர்ணனை சொல்கிறது.

இனி வெய்யோனின் பயணம். இந்த புத்தகத்தில் வரும் அத்தியாங்கள், அதன் பெயர்களும் ஒவ்வொன்றும் எத்தனை நாள் சென்றன என்பவையும் குறிப்பிட்டு, சில கருத்க்களை சொல்ல விழைகிறேன்.

செந்தழல் வளையம் – 3

முதல் பகுதியில் 3 அத்தியாயம். இது பரசுராமனில் ஆரம்பித்து கர்ணனில் ஒரு வட்டத்தின் முழுமை போல முடிகிறது.

* தம்சன் வன்டு – மிக முக்கியமாக பாத்திரமாக வருகிறது. கியாதி, புலோமை முதல் ரேணுகை வரை ஒரு கட்டம். கடைசியில் குந்தி த்ரொளபதியுடன் முடிவது.

கர்ணனின் இட தொடை துளைக்க படுவதும், பரசுராமனிடம் சாபம் பெறுவதும் நிகழ்கிறது(முன்னம் ப்ரயாகையில் இது சொல்ல பட்டு விட்டது ஆணாலும் இங்கு நடப்பது வேறு).

தம்சன் ஒருவகையில் அன்னையிடமே சேரும் விழைவில் ஆரம்பிக்க – தொடர்ந்து அன்னை மகளாக கர்ணனுக்கு ஆகும் இடத்தில் முடிகிறது.

“ஆணவம் அமைந்திருப்பது இடத்தொடையில். அங்குதான் மங்கையை அமரவைக்க வேண்டுமென்பார் ஆன்றோர்” என்றான் தம்சன். அவன் சொல்வதென்ன என்று விளங்காமல் “என்ன?” என்று அவன் மீண்டும் கேட்டான். “அங்கிருக்கட்டும் இந்த ஆறா வடுவின் அணையா பெருவலி”

இதோடு கர்ணனின் தொடையை துளைத்த பின்பு தம்சன் சாபம் நீங்கி மீட்சி பெற அத்தியாயம் முழுமை கொள்கிறது.

தாழொலிக்கதவுகள் – 9

* சிவதர், ஹரிதர்

* தீர்க்கசியாமர்

* மனைவி –  விருஷாலி, சுப்ரியை

அத்தியாயத்தின் பெயரே சொல்லும்படி, கர்ணனின் அங்கத்தில் காணும் அவமானங்கள், அவன் மீது வைக்கபடும் சுமைகள். அவன் பாத்திரத்தின் போதமை இவைகள் இந்த அத்தியாயத்தில். கர்ணனின் அனுக்கனாக சிவதரும். அங்கத்துக்கு ஒரு அமைச்சனாக ஹரிதரும் வந்து அமைகிறார்கள். ராஜ்ஜியத்தின் அவைக்குள் பல்வேறு குடிகளும் உள்வருவது ஒரு அத்தியாயம் நிறைய வருகிறது. கர்ணன் திருமணம் செய்ய வேண்டிய இடம் – அன்னை மூலமும் ஒருவளும், நண்பன் மற்றும் நண்பனின் மனைவி வைக்கும் சுமையால் ஷத்ரிய பெண்ணை மணக்க வேண்டும் எனும் நிர்பந்தம். கர்ணன் என்றுமே தன்னை ராதேயனாக பார்கிறான் – வளர்த்த அன்னை ராதை மகனாகவே உள்ளான் – அவளுக்கு வாக்கு அளிக்கின்றான். வெண்முரசு கர்ணனின் ஆரம்பகாலத்திலேயே ராதையிடம், தான் நீர் கொடுக்கும் போது, அதிரதனுக்கு தான் நீர் கொடுப்பேன் என்று சொல்கிறான். தொடர்ந்து நண்பனிடமும் அவையிலும் அவன் ராதேயன் என்று நின்று விருஷாலியை மணம் புரிய முடிவெடுக்கிறான். அந்த கட்டத்துக்கு முன். கர்ணன் ஹஸ்தினபுரி முதல் முறை நுழையும் போது ப்ரும்ம முகூர்த்ததிலேயே சூரியன் எழுவ்வதும், அன்று கண்தெரியாத சூதர் தீர்கசியாமரின் அம்சமாக பிறக்கும் கண் தெரியாத சிறுவன் தீர்கசியாமனால் கவச குண்டலம் அனிந்தவன் என்று சுட்ட படுகிறான். அந்த தீர்கசியாமனை அவை நின்று அவன் ராதேயன் என்று நிறுவும் முன்னர், பல நாட்களுக்கு (அத்தியாயங்கள்,புத்தகங்களுக்கு) பின், காண்பதும் வருகிறது. மூத்த தீர்கசியாமர் பீஷ்மருக்கும், பின் திருதராஷ்டிரருக்கும் கிட்ட தட்ட ஒரு குரு என்று சொல்வது இங்கு தகும்.

சிறைபெருந்தாழ் – 11

* தீர்க்கதமஸ் – தீர்க்கதமஸ்! முடிவுறா இருள்!

* சுப்ரியை – மணப்பது

இந்த அத்தியாயங்களில் பெரும் தந்தை வடிவமான தீர்கதமஸ்சின் கதை நிகழ்கிறது. இது முழுமை பெரும்போது எங்கும் வந்து உட்காராத கதையாக, மனதை மேலும் பாரம் கொள்ள செய்வதாக உள்ளது. ஆனால் வெய்யோனின் கர்ணன் பின் வரும் கட்டங்களில் யார் என்னும் போது, இந்த பெரும் தந்தையின் கதை மிக முக்கியமான ஒன்று என்பது அர்த்த படுகிறது.

தீர்கதமஸ் ஒரு முடிவுறா இருள். கண் தெரியாத பிராமணர், பிறப்பில் இருந்து. அவருக்கு விழைவு ஒன்றே வாழ்வில். மேலும் மேலும் மூர்கமாக காமம் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவரது மகன்கள் அவரது தொல்லை தாங்காமல் அவரை ஆற்றில் விட, பல நாட்களுக்கு பின் கரை சேர்கிறார். வாலி என்பவன் தன் குடிகளோடு அங்கு இருந்து வருகிறான். சிங்கத்தின் முறை என்று முன்பே வெண்முரசில் சொல்லப்பட்ட ஒரு முறை உள்ளது. அதாவது நாடாளுபவனை மற்போர் க்கு யாரும் அழைக்கலாம். வென்றவன் மன்னன். தோற்பவன் கொல்லபட வேண்டும். அந்த வழி முறை வாலியின் குலத்தில் நாள்தோறுன் நடைபெறுகிறது. ஒரு கட்டத்தில் வாலி தன் குடியில் இருந்து இப்படி மற்போரில் ஒருவன் நாளும் பொழுதும் வந்து அவன் கையாலேயே கொல்லபட்டு சாவதை தன் மகன்கள் மற்போருக்கு அறிவு கெட்டு வந்து தன் கையாலேயே சாவதாக எண்னி நொந்து இருக்கிறான். தீர்க்கதமஸ் அங்கு வந்து சேர்கிறார். தீர்கதமஸ் கண் இல்லாவிட்டாலும் அவரிடம் வேதம் கட்டு பட்டது. வா என்றால் மழை வரும். அப்படி பட்டவரை கொன்டு தன் குடியை சீர் செய்கிறான் வாலி. அதன் பொறுட்டு ஏற்பட்டதே அங்கம், வங்கம், கலிங்கம் முதலான தேசங்கள்.

இதற்கு பின் துரியோதனனும், கர்ணனும் கலிங்கத்து இளவரசிகளை கவர்ந்து வரும் அத்தியாயங்கள்.

கூற்றெனும் கேள் – 17

* சுஜாதன்

* சரபை

* துச்சளை, ஜயத்ரதன்

* துரியோதனன் – ஜயத்ரதன்

* திருதராஷ்டிரன் – கர்ணன்

* பீமன்

வெய்யோனின் நீளமான கட்டம் கூற்றெனும் கேள். சுஜாதன், 100 வது கௌரவன்.

அங்கத்தில் நடக்கும் நாடகங்களும் அதன் முன் வரைவும் சுஜாதனுக்கு தெரியாது. கர்ணனின் முதல் மனைவி விருஷாலி கருவுற்று இருக்கிறாள், ஆணால் அவள், அவள் மனதில் கர்ணனுக்கு தான் ஏற்றவள் அல்ல என்று எண்ணுகிறாள். அதன் காரணம் தான் கருவுற்று இருப்பதை வெளியிடவே இல்லை. மாறாக கலிங்கத்து சுப்ரியை தான் கருவுற்று இருப்பதாக, பொய்யாக, மறுக்கபடவும் முடியாத செய்தியை, அவையில் அறிவிக்கிறாள். மறைமுகமாக சிந்து தேசத்து ஷத்ரிய மன்னன் ஜயத்ரனுக்கு கூட செய்தி அனுப்பிகிறாள்.

இந்த நிலையில் சுஜாதன் முன் கலிங்கத்து இளவரசி சுப்ரியையின் அனுக்கமாக இருக்கும் முதியவள் சரபை கர்ணனை ஆணையிடும் தோரனையில் கலிங்கத்த அரசியின் மாளிகைக்கு அன்று இரவு கர்ணன் வர வேண்டும் என்று சொல்கிறாள்.

கௌரவர்கள் யார் என்பதை சுஜாதன் மூலம் அங்கு காண்கிறோம். அவன் சரபையிடம் கர்ணனை இழிவாக நினைக்கும் எண்னம் கலிகம் சம்பந்த பட்ட ஒருவரில் எழுந்தால் கூட கௌரவர் கலிங்கத்தை சாம்பல் ஆக்கி மன்னில் அப்படி ஒரு  தேசம் இருந்த சுவடே இல்லாமல் ஆக்குவோம் என்று சூள் உரைக்கிறான். முதல் கௌரவன் தொட்டு நூறாமவன் ஈராக அவர்கள் கர்ணன்பால் கொண்ட உணர்வை இங்கு அறிகிறோம்.

இதம் பின் மூத்தவரை அங்கு விட்டு செல்ல கூடாது என்றெண்னி கர்ணனுடன் ஹஸ்தினபுரம் புறப்படுகிறார்கள்.

அங்கு பூத்து குலுங்கும் மலர்களின் குவியலாக கௌரவர்களின் மகன்கள். நீன்ட நெடிய நாட்களுக்கு பின் வெண்முரசு அளிக்கும் மகிழ்ச்சியான தருணங்களில். அங்கு கௌரவர்களின் தங்கை துச்சளை கனவன் ஜயத்ரதனுடன் வருகிறாள். அவள் மகன் அந்த பூகுவியலில் ஐக்கியமாகிறான்.

ஜயத்ரதன் கர்ணன் மீது கொன்ட எண்ணங்களும் களையபடும் தருணமாக உண்டாட்டில் துரியோதனன் ஒரு வார்த்தை சொல்கிறான். கள் மிகுந்து இருந்தாலும் துரியன் ஜயத்ரதனையும் வைத்து கொன்டு கர்ணனை சுட்டி நூற்றுவரும் அவன் சொல்லுக்கு அவன் கால் அடியில் கட்டுண்டவர்கள் என்று சொல்கிறான். வெண்முரசில் வார்த்தையில் அறியப்படாவிட்டாலும் அனைவருக்கும், இந்த கட்டம், கர்ணன் 105 தம்பியரும் ஒரு தங்கையும் கொன்ட மூத்தவன் என்பதை வாசகனாக அறிகிறோம். இங்கு கர்ணனின் காட்சிகளும் வருகிறது, திருதராஷ்டிரருடனான குழந்தைகள் சுற்ற நடக்கும் சந்திப்பு உட்பட.

இதன் பின் தான் பீமன் ஒற்றையாக குதிரையில் வந்து, இந்திரப்ரஸ்தம் கட்டி முடிக்க பட்டு அணையாவிளக்கு ஏற்றபடும் நிகழ்வுக்கு, அழைக்க வருகிறான். அந்த தருணத்தில் கர்ணனுடனான உரையாடல்களில் துரியன் தன்னை தந்தையாக உணர்வதாகவும், செய்த பிழைகள் இருந்து ஒரு மீட்சியாகவும், வாள் ஏந்தி அனையாவிளக்குக்கு காவலாக நிற்பதாக சொல்கிறான். அதன் பின் பீமன் கர்ணனுக்கு ப்ருதையின் அழைப்பை தெரிவிக்கிறான். அங்கு பீமனில் உறையும் ஒரு கசப்பு உள்ளது, ஆனால், என் தனிபட்ட அனுமானம் – இன்று தந்தையாக இருக்கும் பீமனுக்கும் அங்கு கர்ணனை அவன் எப்போதும் குத்தி கிழித்து கீழ்மை படுத்தும் எண்ணம் இன்று இல்லையோ என்பதாக படுகிறது. இதை ஹஸ்தினபுரி இந்திரப்ரஸ்தம் இரு நிலைகளிலும் உள்ள உள்ளங்களின் நிலைகளாக எடுத்துகொள்கிறேன்.

பன்னிரண்டாவது பகடை – 5

இது இந்த புத்தகத்தின் 40வது நாள், கிட்டத்தட்ட மத்தியில் – ஒரு உச்சமாக இந்த அத்தியாயத்தை பார்க்கிறேன்.

கணிகர் அமைவதற்குள்ளாகவே எண்களை பார்த்துவிட்டிருந்தார். உதடுகளை இறுக்கியபடி சுட்டுவிரலால் காய்களை தொட்டுத்தொட்டுச் சென்று புரவி ஒன்றைத் தூக்கி ஒரு வேல்வீரனைத்தட்டிவிட்டு அங்கே வைத்தார். சகுனி புன்னகைத்தபடி “ஆம்” என்றார். கணிகர் “தன்னந்தனியவன்” என்றார். சகுனி “மொத்தப்படையின் விசையும் தனியொருவனின்மீது குவியும் கணம்” என்றார். “ஊழின் திருகுகுடுமி… அவன் இன்னமும் அதை அறியவில்லை.” கணிகர் நகைத்து “அவர்கள் எப்போதுமே அறிவதில்லை” என்றார்.

இது கர்ணன் கணிகரையும் சகுனியையும் பார்க்க வரும் தருணத்தில் வரும் சம்பாஷனை.

அவர்கள் இருவரும் துரியோதனன் ராஜநாகமாக எழும் தருனம் இன்னொரு ராஜநாகம் துணை இருத்தல் நல்லது என்று கர்ணனை துணை செல்ல சொல்கிறார்கள்.

விழிநீரனல் – 6

* இந்திரபிரஸ்த்த்திற்கு புறப்படுவது

* கியாதி, புலோமை, ரேணுகை, அம்பை, பிருதை, திரௌபதி

* மகாகுரோதை

கர்ணன் இந்திரப்ரஸ்தத்துக்கு உலகமே செல்லும் போது எதிர் திசையில் செல்லும் நாகர்களுடன் இந்திரப்ரஸ்தத்துக்கு எதிர் திசையில் ஒரு சிறு பயனம் மேற்கொள்கிறான். நாகர்கள் வரலாறும் கர்ணனுடன் பயணிக்கும் நாகம் பற்றிய அறிதல் கர்ணனுக்கேவும் கிடைக்கிறது.

நச்சாடல் – 5

* ஜராசந்தன்

இந்த அத்தியாயத்தின் பெயர் குறிப்பாக கவனிக்க வேண்டியது.

அந்த சந்திப்புக்கு பிறகு கர்ணன் காணும் முதல் சந்திப்பு ஜராசந்தனுடன். கௌரவர் நிரை இந்திரப்ரஸ்தத்தில் ஜராசந்தனுடன் இறங்குகிறாகள். அங்கு பீமனும் பின் அர்ஜுனனும் இந்த நிரையை கண்டு விலகுகிறார்கள்.

நூறிதழ் நகர் – 7

* கர்ணன் நகருக்கு அடியில் செல்கிறான்

* அரங்குசொல்லி

முழுமை அடைந்த இந்திரப்ரஸ்தத்தை அனுபவிக்கிறோம். கூடவே அங்கு கர்ணனுக்கு கொடியோ, மாளிகையோ, ரதமோ, அமரும் ஆசனமோ இல்லை. கர்ணனின் அணுக்கன் சிவதர் இல்லாத வழக்கமாய் கர்ணனை விலகுவதும் நிகழ்கிறது. கர்ணன் நகருக்கு அடியில் ஒரு பயனம் மேற்கொள்கிறான். வெண்முரசில் புலங்களில் இருந்து மீளுவது எல்லாமே மறு உரு பெறுவது என்று வென்முரசின் வாசகருக்கு சொல்ல தேவையில்லை.

அதன் பின்பான அத்தியாயங்கள் அரங்கு சொல்லியும் நடக்கும் ப்ரகசன நாடகமும். அங்கு காண்டவ காடு எரிக்க ப்படும் கதை விவரிக்கப்படுகிறது. மிக நீண்ட கதை.

மயனீர் மாளிகை – 13

* நாகர்கள் கதை

* துரியோதனன் தண்ணீரில் விழுவது

அதே கதை, கர்ணன் மஞ்சத்துக்கு உறங்க, நாடகம் முடிந்து வந்த பிறகு, நாகனால் இன்னும் மனம் கனத்து போகும் படி சொல்லப்படுகிறது.

அதன் பின் ஒரு உன்டாட்டு நடக்கிறது. துரியனின் நிலை இங்கு குறிப்பிட தக்கது. அவன் ஹஸ்தினபுரியின் செல்வத்தை சரி பாதியாக பிரித்து, அங்கிருந்து புரப்படும் தருணத்தில் தேவயானி அசிந்த மணிமுடியை மூத்தவர் கர்ணன், இந்திரப்ரஸ்தம் உறையும் சிறுக்கிக்கு தரும் படி, கையோடு எடுத்து கொண்டும் வரும் நிலையில் இருக்கும் ஒரு உனர்வு உச்சத்தில் இருக்கும் துரியோதனன். அங்கு இந்திரப்ரஸ்ததில் அவன் இருக்கும் நிலையே காரணமாக ஜராசந்தன், சிசுபாலன் மற்றும் ருக்மி ஆகியோரும் தன் நிலையில் உள்ளவர்களாக எண்ணி கூட்டு சேர்ந்து – எல்லாம் நிலை கொன்டு இனி வாழும் என்ற ஒரு மயக்க நிலையில் உழல்பவனாக ஆகிறான். அங்கு நிகழ்கிறது மயனீர் மாளிகை. அங்கு அவர்கள் ஒவொருவரும் காணும் காட்சிகள், அதன் மாயங்கள். உண்டாட்டும் அந்த கட்டத்தில் நிகழ்வது.

துரியன் ஒரு தண்ணீர் நிரம்பிய சிறு குளத்தில் விழுகிறான். தன் நிலையினாலேயே மிக ஆழத்தில் புண்படுகிறான்.

நிழல் கவ்வும் ஒளி – 3

முடிவாக. ஒளியை நிழல் கவ்வுகிறது. அதன் கீழ் கர்ணன் குதிரையில் செல்கிறான். அங்கு அவனுக்கு ஒரு பயணம். இருக்கும் இடத்தில் இருந்தெ. அங்கு அவன் பாண்டவர்க்கு எதிர் நிலை தானும் எடுக்கிறான் – பிறப்பில் இருந்தே இன்னும் முழுமை பெறாத அஸ்வசேனனை பார்க்கிறான்.

“இவன் என் மைந்தன். இவன் ஒருவனின் பொருட்டு இவ்வுலகை ஏழுமுறை எரிக்கும் பெருவஞ்சம் என்னில் குடியேறுக! இச்சிரிப்புக்குப் பழிநிகராக நான் பாண்டவர்களை அழிப்பேன்” என்றான்.

இதற்கு பின் இனி வருபவையாக துரியோத்னனின் பக்கம் ஸ்தூனகர்ணன் நிற்பதாகவும். ஒரு பெரிய இரும்பு கதையின் உருவும் காட்சி படுகிறது.

வெய்யோனின் முடிவில் – காடு எரிந்து அழிந்தபின்னும் – எரித்து உருகுலையாததாக இருக்கும் ஒரு நீண்ட ஊன்றுகோலாக.. மகாபாரதம் உள் உறையும், எரிந்து உருகுலையாத ஒருவனாக, கர்ணன் மிஞ்சுவதாக பார்க்க தோன்றுகிறது.

காளிப்ரஸாத்:

கர்ணனை பற்றி இவ்வளவு சொல்ல பட்ட பின்பும், கர்ணனின் சில உச்ச பட்சமான குணங்கள் கூட தெளிவாக வந்த பின்பும், வெய்யோனில் சொல்வதர்க்கு ஒரு நாவல் அளவுக்கு இருக்கிறது என்பதே வியக்கவைக்கும் ஒரு விஷயம் தான்.

ராஜகோபாலன்:

வெய்யோன் ஒரு நாவலாக பார்க்கும் போது அது ஒரு மிக உயர்ந்த ஒரு பாத்திரத்தின் வீழ்ச்சியை சொல்லும் நாவலாக உள்ளது. கர்ணனுடய பாத்திரம் வெண்முரசில் நுழையும் போதே சூரிய உதயத்துடன் நுழைகிறான் ஆணால் அப்படியான ஒரு பாத்திரம் முடியும் தருவாயில் ஒரு சூரிய க்ரகனத்துடன் முடிகிறது. இந்த நாவல் சொல்ல வருவது, கர்ணன் போன்ற ஒரு பெரும் கதாபாத்திரம் மேன்மை மூலம் விழும் வீழ்ச்சியை தான். அதை சொல்வது தான் ஒரு எழுத்தாளனுக்கான சவாலான பனி. அதை நம் எழுத்தாளர் எடுத்த புள்ளி, கொன்டு போன பாதை, முடித்த கணம் இவை தான் இந்த நாவலை வேறு தளத்திர்க்கு கொண்டு செல்கிறது.

கர்ணன், ஒரு வளர்ந்த, உச்சத்தை தொட்டு நிற்க்கும் ஒரு பாத்திரம். அது மெல்ல மெல்ல சரிந்து வீழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று சேருகிறது. அதன் ஒரு முழு வடிவம் இப்போது வரும் பன்னிரு படைகளத்தில் பார்கிறோம்.

ராகவ்:

ஆம். கர்ணனை பொறுத்தவரை – பீஷ்மரை விடவும் உயரத்தில் மிகுதியாக இருக்கும் ஒரே மனிதன் கர்ணன் என்று வெண்முரசில் காண்கிறோம். அவன் சிறு வயதிலேயே, 12 வதிலேயே, அவன் யாரை விடவும் உயரந்தவனாக இருக்கின்றான். அதுவே அவனை ஒரு ஷத்ரியன், ஒரு மன்னன் என்றும் சொல்கிறது. சூதனுக்கு ஏன் இவ்வளவு உயரம் என்ற கேள்வி பல முறை கேட்க படுகிறது. கர்ணனை விட உயரத்தில் அதிகமாக சொல்லபடும் ஒரே நபர் அரிஷ்டநேமி(நேமிநாதர்) அவர் பயணிக்கும் தளம் வேறு. அப்படி இருக்க கர்ணன் அவன் உருவம் மூலமே, பீஷ்மரின் தொடக்கத்தில் அவர் இருந்தது போல, அவன் இருப்பின் மூலமே தன்னை ஒரு ராஜன் என்றுன் ஷத்ரியன் என்றும் நிறுவுகிறான்.

சுனீல் க்ருஷ்ணன்/ தனா – (இருவரும் அருகருகில் அமர்ந்திருந்தால் இப்போது யார் சொன்னார்கள் என்று நியாபகம் வரவில்லை):

கர்ணனின் பாத்திரம் சொல்ல போனால் ஒரு உயர்ந்த அழகுடனே கூட வரும் ஒரு பாத்திரம் தான்.

ராஜகோபாலன்:

வ்யாச பாரதத்திலேயே கூட வ்யாசர் பாடல்களாக உச்சபட்சமாக வர்ணிப்பது கர்ணனை தான். வ்யாசரின் ‘ஜய’-வை எடுத்துகொண்டால் அது ஒரு செய்தி வாசிப்பு நடையில், கிட்ட தட்ட படிக்கவே முடியாத, தொடர்ந்தும் சீராகவும் செல்லாத ஒரு நடையில் தான் உள்ளது. அந்த பாரதத்திலேயே கூட ஒரு பாத்திரம் வர்ணிக்கப்படும் என்றால் அது கர்ணன் மட்டும் தான்.

நீங்கள் சொன்னது போல கர்ணன் ஏற்கனவே வர்ணிக்க படுவதும் அதனால் தான். அவன் பிறப்பிலேயே ஒரு உச்சமாக திகழும் ஒரு பாத்திரம்.

ஓன்றை கவனிக்க வேண்டும், நாம் பேசும்போது இங்கு எழுத்தாளன் எனும் ஒரு பாத்திரத்தையே பேசுவதில்லை. காரனம் நம்மை வெண்முரசு கட்டி இழுத்து செல்கிறது. வற்புறுத்தி, கொஞ்சம் நின்று பாத்தால் தெரியும், ஒரு பாத்திரம் அந்த அளவு உச்சம் ஏன் செல்கிறது என்பதை பார்த்தால் புரியும். அது பெறும் வீழ்ச்சியில் சென்று செற்கிறது, சொல்லப்போனால் – கணிகரும் சகுனியும் – அதை தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அவர்களை எழுத்தாளரும் அந்த வீழ்ச்சியை சொல்லும் காரனமாகவே அந்த உச்சத்தில் அவர்களை வைக்கிறார்.

பாரதத்தை படிக்க போனால் நமக்கு கிடைப்பது வ்யாச பாரம் போன்ற வடிவங்கள், பன்படுத்தபட்ட மறுபடியும் மறுபடியும் தொன்மயாக சொல்ல படும் வடிவம் ஒன்று மற்ற வடிவம் தான் கலைகளில், folklore போன்ற வடிவங்களில். முந்தைய வடிவங்களில் நமக்கு கிடைக்காத பதில்களை பிந்தைய வடிவங்கள் கொன்டு நாம் முழுமை செய்ய வேண்டும். நம் எழுத்தாளர் இந்த வெய்யோன் நாவலிலும் அதை தான் செய்கிறார்.

குறிப்பிட்ட படி, இந்திரப்ரஸ்தத்திர்க்கு படகுகள் செல்லும் போது கர்ணன் எதிர் திசையில் செல்வது, பிறகு பிலங்களில் வரும் பயனம், பூமிக்கு அடியில் சென்று மீள்வதே ஒரு வீழ்ச்சியை சொல்வது தான். அவன் வான் அளவு இருப்பவன் இன்று மன்னுக்கும் அடியில் செல்கிறான் போன்ற பிம்பங்கள் எல்லாமே குறியீடுகள் தான்.

அதன் உச்சமாக தான் கர்ணன் சூரிய கிரகணத்தின் கீழேயே போய் நிர்ப்பது. ஒளியை நிழல் கவ்வுவதாக அதை தான் சித்தரிக்கிறார் ஜெயமோகன் அவர்கள்.

ராகவ்:

கதை என்று எடுத்துகொன்டால் இதில் பெரிய நிகழ்வுகள் கிடையாது. முதல் முறையாக இந்திரப்ரஸ்தம் முழுமை அடந்ததை பார்க்கிறோம். கர்ணனின் கல்யாணமும் அதன் பின் துரியோதணன் மயனீர் மாளிகைக்கு பின் குளத்தில் விழுவதும். அவன் அந்த குளத்தில் விழுந்து தானாகவே புன் படுகிறான்.

அருணாசலம் மகாராஜன்:

அந்த தருனத்தை கணிகரும் சகுனியும் தான் முன்னமே அறிகிறார்கள். அதனால் தான் கர்ணனை துனைக்கு செல்ல சொல்கிறார்கள்.

யாரோ:

ஆம் அப்பொது கர்ணன் கூட தனக்கு பதில் ஜயத்ரதனை அனுப்ப நினைக்கிறான்.

 

ராகவ்:

அப்போது தான் பீமன் கர்ணனிடம் ப்ருதையிடம் இருந்து வரும் அழைப்பை தெரிவிக்கிறான்.

துரியோதனனும் ஹஸ்தினபுரியின் செல்வம் அனைத்தும் சரிபாதியாக பிரித்து எடுத்து, தேவயானியின் மனிமுடியையும் கொன்டு செல்கிறான். கர்ணனிடம் அந்த ‘சிறுக்கி’ யிடம் அளிப்போம் என்கிறான்.

முத்து கிருஷ்ணன்:-

அந்த குளத்தில் விழும் போது துரியோதனன் அவ்வளவு புன் பட காரனங்கள் வெளியில் இருந்து இல்லை.

அவனாகவேதான் அப்படி புண் படுகிறான்.

ராஜகோபாலன்:

துரியோதனன் அவ்வளவு புண்பட்ட காரணமாகவே கூட அங்கே கர்ணன் தான் இருக்கிறான்.

அருணாசலம் மகாராஜன்:

துரியோதனன் அங்கே புண் பட்ட பின் கர்ணன் தான் துரியோதனனை தாங்கி செல்கிறான். கிட்ட தட்ட துரியோதனன் நடந்தே செல்வது போல.

தனா:

எனக்கு கர்ணனை படிக்கும் போது அவன் ஏன் துரியோதனனுடன் இவ்வளவு பெரிய நட்பு உருவாகுகிறது என்பது ஒரு கேள்வியாகவே தொக்கி நிற்கிறது. அவ்வளவு ஆழமான நட்புக்கு காரணமாக எது உள்ளது.

தியாகராஜன்:

கர்ணனுக்கு துரியோதனன் அளிக்கும் அங்கீகாரம், அங்க நாட்டு மகுடம் மூலம், பல ஆக்கங்களில் துரியோதனன் தன் பக்கம் அர்ஜுனனை போன்ற ஒரு வில்லாளி வேண்டும் என்றே அடை செய்வாதாகவும் அதை சகுனி மாமாவின் தூன்டுதலால் செய்வதாகவும் தான் வருகிறது. அவர்கள் இருவருமே இது போன்ற கொடுத்து பெருதல்களால் தங்களை நிரப்பி கொண்டு தொடங்குகிறார்கள் பின்னர் அது தீவிரமான நட்பாக ஆவதாக எண்ணுகின்றேன்.

ராகவ்:

அவர்கள் நட்பில் இந்த கணக்குகள் வருகின்றன என்றாலும் வென்முரசில் அப்படி அதை மட்டுமாக சொல்லவில்லை. உதாரனத்துக்கு சுஜாதன் அந்த முதிய தாதியிடம் விடும் சபதம். அது முதல் கௌரவன் தொடங்கி நூறாமவன் வரைக்கும் இருக்கும் அதே உனர்ச்சி நிலையைதான் சொல்கிறது.

தனா:

எனக்கு இது தான் கேள்வி, அப்படி நூற்று்வரும் கொந்தளிக்க அவன் செய்வது என்ன, அல்லது அவனிடம் அப்படியான நட்பின் காரனம் என்ன?
முத்துகிருஷ்ணன்:-

கர்ணன் ஒரு ஒழுங்கு இல்லாத இடத்தின் மூலம் தொடங்குகிறான். அவன் அஸ்தினபுரியில் இயல்பாக அடைவது துரியோதனன் போன்ற ஒழுங்கில் கொஞ்சம் குறைபட்ட கூட்டத்தை. அவன் அவர்களை இந்த சரடு மூலமாகவே இயல்பாக அடைவதாக எனக்கு படுகிறது. வென்முரசில் அப்படி உள்ளதாக தோன்றுகிறது

ராகவ்:

இல்லை, எனக்கு ஏற்றுக் கொள்ளுபடியாக இல்லை. ஒழுக்க கேடு என்று வந்தால், அந்த அளவில் ஒரு காட்சி வென்முரசில் வருகிறது. பீமன் ஹஸ்தினபுரியின் ஒரு சந்தை மூலையில் பாத்திரம் கழுவும் இடத்துக்கு பக்கத்தில் மிச்சம் உள்ள உனவை உன்டு கொன்டு இருக்கிறான். அந்த இடத்துக்கு எங்கோ அருகில் தான் அர்ஜுனன் எவள் படுக்கை அரையிலேயோ கிடக்கின்றான். அங்கே பாத்திரம் தெய்ப்பவர்கள் சொல்வார்கள், இளவரசன் என்று ஒருவனை சொன்னார்கள். அவன் வீதியில் செல்லும் போது பார்த்தேன். உடல் எல்லாம் தங்க நகைகளாக, களையே இல்லாத, ஆணா என்று சந்தேகம் கொள்ளும் அளவில் ஒருவன் வந்தான். அவன் தான் ராஜாவாக ஆவானாம் என்று யுதிஷ்டிரன் பற்றீ பீமனிடமே சொல்வார்கள். ஆக ஒழுக்கம் ஒரு அளவு கொல் என்றால் அதில் பான்டவர்கள், வென்முரசை பொருத்த மட்டில், ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று தானே சொல்ல தோன்றுகிறது.

முத்துகிருஷ்ணன்:

அப்படி அல்ல, நான் சொல்வது ஒரு மன நிலை அளவில்.

அருணாசலம் மகாராஜன்:

எனக்கு வென்முரசில் துரியோதனன், கர்ணன் நட்புக்கு முக்கியமான புள்ளியாக இருப்பது அவர்கள் இருவருக்கும் அவர்கள் பிறப்பின் மூலம் ஏற்படும் கலங்கமும் அதணால் அவர்கள் வெறுக்க படுவதும் என்று தான் தொன்றுகிறது. அதாவது, துரியோதனன் பிறந்த பொழுது அவணால் அழிவு மட்டும் தான் என்று சொல்லபடுகிறது. அவனும் மற்றவர்கள் அவனை அவ்வாறாகவே பார்ப்பதால், பாறைகளை உடைத்து செல்பவனாகவே இருக்கின்றான். ஒரு தளத்தில் கர்ணனும் அப்படிதானே. அவனுக்கு இயல்பாக கிடைக்க வேண்டிய எல்லாமே அவன் உடைத்து உடைத்து பெற வேண்டி உள்ளது, காரனம் அவன் பிறப்பு மட்டுமே.

பீமனை அஸ்தினபுரியில் முதன் முறையாக திருதராஷ்டிரன் முன் அழைத்து வருகையில் ஏற்படும் சஞ்சலம் துரியோதனனிடம் கர்ணனை திருதராஷ்டிரன் ஏற்க்கும் போது ஏற்படவ்வில்லை. மாறாக அந்த தருனங்களில் கர்ணன் அங்கு தேவையான ஒருவனாகவே இருக்கின்றான்.

ராகவ்:

துரியோதனன் திருமனத்தின் பின், கர்ணனும், ஏன் துச்சாதனனுமே கூட, பானுமதியின் வருகை கன்டு விலகுவதை வெண்முரசு சொல்கிறது. அவர்கள் பந்தம் அந்த தருனத்திலும் கூட உணரக்கூடியது.

அருணாசலம் மகாராஜன்:

ஆம் அந்த அளவுக்கான நட்பின் ஆரம்ப புள்ளியாக இந்த தருணங்களில் அமைகின்றன. வெண்முரசில் இவைகள் நன்றாகவே காட்சி படுத்தபட்டுள்ளது.

ராஜகோபாலன்:

துரியோதனனின் இந்த நட்பின் பலம் காரணமாகவே பல தவறுகள் அவன் செய்ய துணிகின்றான். மேலும் இப்போது வரும் பன்னிருபடைகளத்தில் தொடர்ந்து காண்கின்றோம், கர்ணன் பொருட்டே பல தவறுகள் இழைக்கபடுகிறது.

இந்த நாவல் கர்ணன் பாத்திரத்தின் உச்சமும் வீழ்ச்சியும் என்றே சொல்லலாம்.

~~~~~~~~~~

மேலும் பல திரிகளாக விவாதங்கள் விரிந்து சென்றன. இப்போது பன்னிரு படைகளம் எழுத பட்டுகொன்டு இருப்பதால் விவாதம் கர்ணனையும் பன்னிருபடைக்களத்தையும் திரும்ப திரும்ப பின்னிப்பின்னியே வந்தது.

எப்போதும் போல நம் குருஜீயின் திக்கு முக்காட வைக்கும் உபசரிப்புடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

 

பீஷ்மரின் அறம்

முதற்கனலில் பீஷ்மர் சப்தசிந்துவைக் கடந்து ஒரு நாக சூதரைக் காண வருவார். அவர் நாக ரசம் நிரம்பிய தாலத்தில் பீஷ்மரை முகம் பார்க்கச் சொல்வார். அதில் தெரியும் முகம் யயாதியினுடையதாக இருக்கும். பீஷ்மரின் கதை அறிந்த அனைவருமே அதில் புருவின் முகம் தெரியும் என்று தான் எதிர்பார்த்திருப்போம். பீஷ்மரே அம்முகத்தை தான் எதிர்நோக்கியிருப்பார். ஆனால் தெரிவதோ புருவிடமிருந்து இளமையைப் பெற்று, அதைத் தர மறுத்ததால் மற்ற புதல்வர்களைத் தீச்சொல்லிட்ட யயாதியின் முகம். பீஷ்மருடன் நாமும் சேர்ந்தே அதிர்ச்சியடைகிறோம்.

யயாதி – குரு குலத்தின் நாயகர்களில் ஒருவர். அவரைப் பற்றி வெண்முரசு, தருமதேவனே தேர்ந்த அரசன் என்கிறது. வாழ்நாள் முழுக்க அறச்செல்வனாக வாழ்ந்து, இந்திரனையே ஆட்டிப்பார்த்துக் கொண்டிருக்கும் அவனை காமத்தில் விழ வைக்கிறான் இந்திரன். காமம் மீதூறியவனை வயதாக்கி, நிறைவின்மையால் நிறைக்கிறான். வயதின் துயரத்தால் காமம் நிறைவேறாத யயாதியின் மனம், ரதியின் துயரத்தில் பிறந்த அஸ்ருபிந்துமதியைக் கண்டவுடன் கரையுடைகிறது. முறை மீறி, இளமையில் துள்ளும் அவளிடம் தன்னை ஏற்கும்படி கோருகிறான். இளமையுடன் வந்தால் ஏற்கிறேன் என்றவளுக்காகத் தம் மைந்தரிடம் இளமையை யாசிக்கிறான். தராத மைந்தருக்கு அவரவர் விரும்பியவை கிட்டாமல் போகட்டும் என்று தீச்சொல்லும் இடுகிறான். இறுதியில் கடைசி மகன் புரு தன் இளமையை அளிக்கிறான். ஐம்பது வருடம் காமம் உணர்ந்து மீண்டு, தன் மகனிடம் மீண்டும் இளமையை தரும் நேரம், புரு, ‘நான் காமத்தை முதுமையாயிருக்கும்போதே முழுதுணர்ந்து விட்டேன், எனவே இனி இளமை வேண்டேன்’ என்கிறான். அக்கணம் மீண்டும் நிறைவின்மையில் விழும் யயாதி, இறுதியில் தன் மகளைக் காணும்போது நிறைவடைந்து விண்ணேகுகிறான். இந்நிகழ்வை அக்டோபர் மாத சென்னை வெண்முரசு கூடுகையில் விவரித்த காளி, யயாதி தான் காம நிறைவு கொள்ள வேண்டும் என்கிற இச்சையால் குரு குலத்தின் வரலாறை மாற்றியமைத்தான் என்றார்.

இந்த யயாதியா பீஷ்மர்? தன் தந்தைக்காக, தேச நலனுக்காக, சத்தியவதி போன்ற சக்ரவர்த்தினி அஸ்தினாபுர அரியணையை அலங்கரிக்க வேண்டும் என்பதற்காக மானுடன் ஒருவன் கொள்ளச் சாத்தியமற்ற காம ஒறுப்பையும், ஷத்ரியன் ஒருவன் கொள்ளச் சாத்தியமற்ற ராஜ்ஜியத் துறப்பையும் விரதமாக ஏற்றுக்கொள்கிறார்  தேவவிரதன். சத்தியவதியை விட்டால் பிறிதொரு ராச்சியத்தின் ராணியாகி அவளின் சக்ரவர்த்தினி ஆசையாலே பெரும் போர் மூளச் செய்வாள். அத்தகைய பெரும் போர் பாரத வர்ஷத்தையே அழிக்கும் என்று உணர்ந்த அவரின் அரசியல் அறம் அந்த செயற்கரிய செயலை செய்ய வைத்து பீஷ்மராக்கியது. எளியோர்பால் கொண்ட கருணை அவரின் அறமாகியது அன்று.

இதே பீஷ்மர் தான் ஒரு ஷத்ரியன் என்றும், ஷத்ரியனின் தன்னறம் என்பது தன் நாட்டுக்காக, தன் தேச மக்களின் நலனுக்காக எதையும் செய்யலாம் என்பதை உணர்ந்து, தன் தம்பிக்காக காசி நாட்டு இளவரசியரை கவர்கிறார். இது அற மீறல்தான். எந்த ஒரு ஷத்ரியனும் தான் மணக்கவிருக்கும் பெண்ணை மட்டுமே இவ்வாறு கவர்ந்து வர ஒப்புதல் உள்ளது. எனினும் எளியோர் நலன், தேச நலன் என்று வருகையில், ஒரு ஷத்ரியனுக்கு இத்தகைய அற மீறலைச் செய்யவும் ஒப்புதல் உள்ளது. எனினும் பீஷ்மரே எதிர்பாரா வண்ணம் அவரையும் மீறி மானுட இயல்பான எதிர்பாலின ஈர்ப்பினை அம்பையிடம் அடைகிறார். காமம் என்று ஒற்றைச் சொல்லால் இதை குறுக்கிவிடவும் இயலாது. அவர் அம்பையைக் காணும் அந்த கணம், அதில் தன்னை தூக்க வரும் பீஷ்மரின் எட்டு சீடர்களில் முதலாமவனை தன் கையிலிருந்த வாளால் கொல்கிறாள், பின்னர் தன்னைச் சூழ்ந்தவர்களுடன் திகிரி என கைவாள் சுழல சமரிடுகிறாள். அக்காட்சியைப் பார்த்து மெய்மறந்து நிற்கிறார் பீஷ்மர். அந்த ஒரு கண ஈர்ப்பினைக் கச்சிதமாக பற்றிக் கொள்கிறது அம்பையின் கருப்பை. ஆம், அங்கே கண்டவன் ஆண்களில் சிறந்தவன், அவனைக் கொள்ள விழைந்தது சிறந்தவற்றை மட்டுமே ஏற்றாக வேண்டிய ஒரு கருப்பை. அது பிரபஞ்ச நியதி. மாறாப் பேரறம்.

பீஷ்மர் அம்பையின் உள்ளத்தில் நுழைந்த தருணம் படகில் நடக்கிறது. தன் மனமுவந்த சால்வனது தவிர வேறு எவருடைய பிள்ளையரையும் கங்கையிலே மூழ்கடிப்பேன் என்று கங்கை நீரை கையில் வைத்து வஞ்சினம் உரைத்த அம்பையைக் கையாள இயலாமல் பதறி அவளை படகிலிருந்து வெளியேற்றுகிறார் பீஷ்மர். தன் கோபத்தையும் மிக நிதானத்துடன் கையாண்ட ஒருவன், தான் கங்கை மீது செய்த ஆணையால் அகமழிந்ததைக் கண்ட அம்பை சிறு படகில் இறங்கும்போது, பீஷ்மரின் முதன்மைச் சீடனிடம் கங்கைக்கும் பீஷ்மருக்குமான உறவைப்பற்றி கேட்டறிகிறாள். “முகத்தில் வந்து விழுந்த கூந்தலை கைகளால் அள்ளி பின்னால் தள்ளியபடி ஆடும் படகில் உடலை சமநிலை செய்தபடி பீஷ்மரை ஏறிட்டாள்“, என்று வெண்முரசு அவளின் அந்த அறிதலுக்குப் பின்பான செயல்களைச் சொல்கிறது. அங்கே தன் முன் இருந்த சால்வனை பின்னுக்குத் தள்ளி ஆடியுலைந்த தன் மனதை பீஷ்மரிடம் திருப்பி சமநிலை கொள்வதாகவே இவ்வரிகள் அர்த்தம் கொள்கின்றன. என்ன இருந்தாலும் ஆழ்மனம் உணர்ந்ததை மேல் மனம் உணர சாட்சியங்களும், அனுபவங்களும் தேவையல்லவா! அதைத்தான் அவள் சால்வனிடமும், தன் தந்தையிடமும் அடைகிறாள். அதன் பிறகே தான் முழுமைடைய விரும்பிய ஆத்மா பீஷ்மரே என்று தெளிகிறாள். பீஷ்மரிடம் சென்று இறைஞ்சுகிறாள்.

ஆனால் பீஷ்மர் தன்னறத்தை மேற்கோள் காட்டி அவளை ஏற்க மறுக்கிறார். ஆணையிட்டே பழகிய குரல் குழைய பலவாறு அம்பை அவரின் வாதங்களனைத்தையும் தூள் தூளாக்குகிறாள். ஆடையின்றி அன்னை முன் நிற்கும் குழவியென தன்னை உணரும் பீஷ்மர், தான் தன்னைச் சுற்றி கட்டிய அனைத்துக் கோட்டைகளும் புகையால் ஆனவை என்பதை உணர்ந்து துணுக்குறுகிறார். இந்தச் சிறு துணுக்குறல்தான் அவளை வென்றே ஆக வேண்டிய ஆகப்பெரிய எதிரியாக அவருக்குக் காட்டுகிறது. வெண்முரசில் காதலில் கனிந்த எத்தனையோ பெண்களை பார்க்கிறோம். ஆனால் தான் கொண்ட காதலுக்காக தன்னையே முற்றிலும் அழித்து – ஆம் அழித்து – காதல் கொண்டவன் முன் ‘நான் உங்கள் தாசியல்லவா?’ என்று இறைஞ்சிய ஒரு பாத்திரம் அம்பை தவிர வேறு யாருமேயில்லை.

அப்படி முற்றிலும் வேறாக, பெண்ணின் நிறைவான அன்னையின் கனிவுடனும், அன்னையாகி நிறைவாக வேண்டும் என்ற விருப்புடனும் முன் நின்று கெஞ்சும் பெண்ணை இறுதியாக வென்ற களிப்பில் அவரின் முகத்தில் வரும் அந்தப் புன்னகை, அது தான் பீஷ்மரை யயாதிக்கு ஒப்பானவராக்க்குகிறது.

பீஷ்மர் செய்த தவறு என்ன? அவர் அம்பையை நிராகரித்ததுதான் தவறு. உண்மையில் சத்தியவதியால் நிகழச் சாத்தியமான பெரும் போரைத் தவிர்த்து, குடி நலம் காக்கவே அவர் அந்த விரதத்தை மேற்கொள்கிறார். இப்போது அதே குடி நலனுக்காக அந்த விரதத்தை அவர் கைவிட்டிருக்க வேண்டும். அம்பையை ஏற்றிருக்க வேண்டும். விசித்திர வீரியனின் குழந்தைகளுக்கு குருதித் தந்தையாக இருந்திருக்க வேண்டும். இவையனைத்துமே அந்தத் தருணத்தில் மனிதனாகவும், ஷத்ரியனாகவும் அவரின் அறமாக இருந்திருக்கும். ஆனால் அவர் தன் விரதத்தின் பெயரில் கொண்ட இச்சையால் அறம் பிழைக்கிறார். தனக்காகவே வந்த பெண்ணை, அவள் பலவீனத்தைப் பயன்படுத்தி வென்றது எவ்வகையில் பார்க்கினும் தன் இச்சையின் காரணமாக செய்த அறப்பிழையே. பீஷ்மரின் விரதம் இப்போது அவரைத் தவிர வேறு யாருக்கும் தேவையாய் இருக்கவில்லை. அவருக்கே அவ்விரதம் தேவையில்லைதான். இருப்பினும் அவ்விரதமே தன்னை ஆக்குகிறது என்ற எண்ணம், இத்தனை நாள் உடனிருந்தது என்ற ஒரே காரணத்தால் பழையனவற்றை கழிக்க மறுக்கும் இச்சை, அதுதான் அவரை அவ்விரதத்தை தன்னறமாக உணரச்செய்கிறது. அவ்வாறு எண்ணுவதாலேயே அவர் அம்பையை நிராகரிக்கிறார். அவரின் இந்த இச்சை பெரும் சுமையை விசித்திரவீரியனின் மீது சுமத்துகிறது. இதை உணர்ந்ததால்தான் பீஷ்மர் புருவின் முகம் யாருடையது என்பது தனக்குத் தெரியும் என்று நாக சூதரிடம் சொல்கிறார்.

பீஷ்மர் செய்த தவறு ஒரு வகையில் சித்ரரதன் செய்த தவறுக்கு இணையானது. அவன் தேரில் செல்கையில் சிற்றுயிர்கள் வதைபடுவது ஒன்றும் அவன் தவறல்ல என்கிறான். அது அவன் அறம் என்கிறான். ஆயினும் அவன் செய்தது தவறே என்றாகிறது. அவன் செய்த தவறாக அர்ஜுனன், “சிற்றுயிர்கள் வதைபடுவது அவற்றின் நலனை இலக்காக்கிய ஒரு பயணத்தால் என்றால் அது தவறல்ல. அன்று நீர் ரதத்தில் சென்று கொண்டிருந்தது உமது உவகைக்காக மட்டுமே. ஆணவத்துக்காகவும், அகமகிழ்வுக்காகவும் இலக்கு கொள்பவன் பழி சுமந்தாக வேண்டும்” என்கிறான். இங்கே பீஷ்மர் அம்பையைத் துறந்தது முழுக்க முழுக்க அவரின் விரதம் கலைக்கப்படலாகாது என்ற இச்சையின் பால் என்ற வகையில் அவர் பழி சூழ்ந்தவராகத் தானே வேண்டும்.

மகாபாரதம் என்பது சரிக்கும் தவறுக்கும், நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான ஒரு போர் அல்ல. மாறாக ஒரு அறத்துக்கும், மற்றொரு அறத்துக்கும் இடையேயான போர் என்றே வழங்கப்படுகிறது. இங்கே பீஷ்மரின் விரதம் என்ற அறத்திற்கும், அம்பை என்ற பெண்ணின் மூலம் விஸ்வரூபமெடுக்கும் மானுடப் பேரறமான மானுட நீட்சிக்குமிடையே நடக்கும் யுத்தமாகவே முதற்கனல் அமைகிறது என்ற வகையில் மகாபாரதத் தொடரின் மிகச்சரியான துவக்கமாக அது அமைகிறது.

நாம் பிதாமகரை ஒரு தொன்மமாக, செய்த சத்தியத்திற்காக மொத்த வாழ்வையும் தியாகம் செய்த விழுமியத்தின் அடையாளமாகப் பார்க்கவே பழகியிருக்கிறோம். இதனால் அவருக்கும் அம்பையின் பால் காதல் இருந்திருக்கும் என்ற எண்ணத்தைக் கூட அண்டாமல் விரட்ட வேண்டும் என விரும்புகிறோம். வெண்முரசு அவரையும் உடைத்துப் பார்க்கிறது. ஏன் அவரும் ஒரு மனிதர்தானே? அவருக்குள்ளும் ஆசைகள் இருக்கத்தானே செய்திருக்கும்? அத்தகைய ஆசைகள் இருப்பதாலேயே அவரின் தொன்மமும், அவர் கொண்ட விழுமியங்களும் மதிப்பிழந்து போகுமென்றால் அது யாருடைய பிழை? என்று நம்முன் நின்று அறைகூவுகிறது. ஏற்பதும் ஏற்காததும் நம் கையில்!

– மகராஜன் அருணாச்சலம்