தற்பிரிந்து அருள்புரி தருமம் – அருணாச்சலம் மகராஜன்

solvalar_kaadu_epi_55

சொல்வளர்காடின் உச்சம் கந்தமாதன மலையின் எரி வந்தறையும் எல்லையில், தன்னையே அவியாக்கி தருமர் மேற்கொள்ளும் பெரு வேள்வி. அந்த அத்தியாயத்தைப் படித்து முடிக்கையில் மனதில் தோன்றிய எண்ணம், தருமரும் சீதையும் ஒன்றோ என்பது தான். வெண்முரசில் இவ்வாறு இராமாயண பாத்திரங்கள் நினைவிற்கு வருவது தற்செயல் அல்ல என்பது எனது அனுபவம். நாவலில் வேறு எங்கேனும் அதற்கான தகவல்கள் தரப்பட்டிருக்கும். அப்படியே சொல்வளர்காடை மீண்டும் வாசிக்கையில்  சௌனகக் காட்டில் தனக்காக விழைந்து செயல்கள் இயற்றும் திருஷ்ணையில் இருந்து ஒரு அரசன் விடுபடவேண்டும் என்று கூறுகையில் மிதிலையின் ராஜரிஷியான ஜனகரை வணங்குக என்று வருவது முதல் யக்ஷவன அத்தியாயத்தின் முதல் பகுதி வரை பல இடங்களில் சீதை வந்து சென்றிருப்பதை அறியலாம்.

முக்கியமாக கார்கி யாக்ஞவல்கியரின் விவாதம் நடைபெறும் ஜனகர் அவையைப் பற்றிய விவரங்களில் மிக விரிவாகவே சீதை வருகிறாள். அரசனின் முதல் புதல்வியை மண்ணில் புதைத்து, அவளை மண்ணில் இருந்து அகழ்ந்து எடுப்பதை ஒரு குல முறைச் சடங்காகச் செய்யும், பெண்ணை தலைமையாகக் கொண்ட ஒரு தொல்குலத்தைச் சார்ந்தவள் என்பது சீதையைப் பற்றிய பார்வையை முழுமையாக மாற்றுகிறது. அவள் ராமனைத் திருமணம் செய்ததால் அரசி ஆனவள் அல்ல, அவள் பிறப்பில் இருந்தே தன் நாட்டிற்கு, குலத்திற்கு வழிகாட்டும், தலைமை தாங்கும் அரசி, கற்றவள். தாய். எப்போதும் குளிர்ந்தவள் – சீதளமானவள். எரி புகுகிறாள். ஏன்? ரகுகுல ராமன் அவளை சந்தேகித்தான் என்றா?

ராவணன் சிறையில் இருந்த தன் ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை பத்து மாதங்களுக்குப் பின் முதன் முறையாக ராமன் பார்ப்பதை

“கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை,
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான்”

என்கிறான் கம்பன். ‘தற்பிரிந்து அருள்புரி தருமம் போலி’ – சுய தர்மம், குடும்ப தர்மம், குல தர்மம், மானுட தர்மம் என பலவாறாகப் பிரிந்து நின்றாலும் ஒவ்வொரு தர்மமும் அருள் மட்டுமே புரிபவை. அப்படிப்பட்ட தர்மம் போன்றவள் என்கிறான் கம்பன். மற்றொரு பார்வையில் தன்னைப் பிரிந்தாலும் அருள் மட்டுமே பொழியும் தருமத்தை ஒத்தவள் என ராமன் எண்ணுகிறான். அப்படிப்பட்டவளை அன்புடன் அள்ளி அள்ளி பருகும் பார்வையால் நோக்கிக் கொண்டேயிருக்கிறான் ராமன்.

அப்படி காதலுடன் கண்ணுற்றவன், அடுத்த கணத்தில், அக ஆழத்தில் இருந்து படம் விரித்தாடும் பாம்பென நாவில் ஊறிய அமிலத்தால் அவளை அர்ச்சனை செய்கிறான். பலவாறாக சீதையை ஏசும் ராமன் பெரும்பாலான ஆண்களைப் போலவே

“நன்மைசால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்”

என்று அவள் பிறப்பை குறை கூறுகிறான். வாழ்வில் குறிக்கோள் எதுவும் இல்லாமல், உயிர் வாழ்வது ஒன்று மட்டுமே தன்னறம் என்று கொண்டு, அதற்காக மட்டுமே உண்டு கொண்டே இருக்கும் புழுவைப் போல் மண்ணில் பிறந்ததை நிரூபித்து விட்டாய் என்கிறான். ஆனால் அவள் தன்னுயிர் பேணும் புழுவல்ல, மண்ணுக்கே உயிரளிக்கும் மண்புழு என்பதை அவன் அறியாமல் கூறி விடுகிறான் – இது கம்பன் டச்.

அவள் பேசத் தெரியாதவள் அல்ல. தனக்கு வாய்த்தவற்றை விதியே என்று ‘அகழ்வாரைத் தாங்கும் நிலமாய்’ பொறுப்பவளும் அல்ல. அவள் அரசி, பிறப்பிலேயே. தருமத்தின் மாற்றுரு. தன் முன் நின்ற லங்கேசனையே புல்லென மதித்துச் சீறியவள். எல்லை நீத்த உலகங்கள் யாவையும் தன் சொல்லினால் சுடுவேன் என்று தன்திறம் உணர்ந்தவள். தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்பதால் அவ்வெண்ணத்தை வீசியவள். அப்படிப்பட்டவள் மேலே காய்ந்து, உள்ளே நிணமும், குருதியும் சொட்டிக் கொண்டிருக்கும் புண்ணில் கோல் பட்டுக் கீறிய உடல் கொள்ளும் வலியின் மெய்ப்பு கொண்டு மண்ணை நோக்கி தன்னிலை உணர்ந்து தன்னிரக்கம் கொள்கிறாள். பலவாறாக தன்னுள் ஆழ்ந்து, தன்னுள் பேசி, தன்னை மாய்க்க முடிவு செய்து இலக்குவனைப் பார்த்து ‘இடுதி தீ’ என்கிறாள். அலறிப் பின்வாங்கும் இளைய பெருமாளை கண்ணாலேயே தீ மூட்டும்படி சொல்கிறான் ராமன். அவ்வாறு விதி முறை அமைத்த எரியை நோக்கி,

“நீந்தரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள்”

என சென்று பாய்கிறாள் சீதை. நீந்தக் கடினமான பெருகியோடும் புனலில் மலர்ந்து நிற்கும் தாமரையில் அமைந்த தன் வீடு நோக்கி செல்பவள் போலச் செல்கிறாள் என்கிறான் கம்பன். ஆம், அவள் சோகத்தில், தன்னிரக்கத்தில், ஆழ்ந்த துயரில், உயிரை மாய்க்க முடிவு செய்துதான் எரி அமைக்கச் சொல்கிறாள். ஆனால் புகுகையில் அவள் தான் முன்பு இருந்த இடத்திற்கே மீள்வதற்காகச் செல்லும் விருப்புடன் பாய்கிறாள். அவள் முன்பு எங்கு இருந்தாள்? எவ்வாறு இருந்தாள்? எதனால் இவ்வாறு ஆனாள்? எது அவளை இந்த எரியை நோக்கி விருப்புடன் செலுத்தியது?

இந்த கேள்விகளுக்கான பதிலை வெண்முரசின் சொல்வளர்காடு நல்குகிறது. பலமுறை சொன்னதுபோல நம் மரபை துலக்கிக்காட்டுவதில், நம் ஆழ்மனப் படிமங்களை விளக்கிக் காட்டுவதில் வெண்முரசின் மற்றொரு சாதனை அதன் சீதையைப் பற்றிய பார்வை.

கம்பனே சொல்கிறான், அவள் தருமத்தின் மாற்றுரு என்று. அந்த தருமம் எங்கே பிழைத்தது? பிராட்டியின் விழைவு முந்திய தருணத்தில் பிழைத்தது. அவள் விழைவு அந்த மாய மான், பொன் மாரீச மான். இலக்குவன் தான் சென்று பிடித்து வருவதாகச் சொல்லியும், “நாயக! நீயே பற்றி நல்கலைபோலும்” என்றபோது முந்திய விழைவு. கடத்தலுக்கரிய கடலைக் கடந்து, வெல்லுதற்கரிய இலங்கேஸ்வரனை கொல்வான் என ராவணன் சிறையில் இருக்கையில்கூட தன் கணவன் திறனை முழுதும் உணர்ந்தவள், அவன் குரலில் கூவிய மாரீசனின் வார்த்தைகளை நம்பி இலக்குவனை கொதிக்கும் உள்ளத்தோடு, தன்னைக் கொல்லும் இன்னலில் எடுத்த சீற்றத்தோடு “அண்ணன் மடிய, என்னருகில் நிற்பது நெறியில்லை” எனத் தகாதது கூறிக் கடிந்தபோது முந்திய விழைவு.

ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்;
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ
வெருவலை நின்றனை; வேறு என்? யான், இனி
எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு’ எனா

என்றதால் எரிகிறாள். உண்மையில் சீதை அந்த பத்து மாதங்கள் என்ன நினைத்திருப்பாள்? இளையபெருமாளை வைததை எண்ணி எண்ணி தன்னையே குற்ற உணர்வில் கொன்று கொண்டிருந்திருப்பாள். தன் விழைவு தன்னை மீறி வெளிப்பட்ட அக்கணத்தை எண்ணி எண்ணி உலைந்திருப்பாள். உண்மையில் அவள் உள்ளத்தால் எரிந்துகொண்டிருப்பதைவிட உடலால் எரிந்து விடுவது மேல் என்றே அம்முடிவை எடுக்கிறாள். இவையெல்லாம் ஒரு வகையில் புறவயமான காரணங்கள். உயிரை மாய்க்கும் எல்லைக்கு ஓர் மானுட உயிர் செல்லுமென்றால் அவ்வுயிருக்கே உரிய மிக மிக காத்திரமான அகவயமான ஒரு காரணம் இருக்க வேண்டும். சீதைக்கே உரித்தான அப்படிப்பட்ட காரணம் என்ன? அதை அறிய நாம் தருமரை அறிய வேண்டும்.

சொல்வளர்காட்டில் தருமர் ஆரண்யகங்கள் தோறும் சென்று சொல் தேர்ந்து கொண்டேயிருக்கிறார். ஏன்? மிகத்தெளிவாகவே திரௌபதி, ‘நாம் ஏன் மனிதர்கள் வாழும் வேதநிலைகளுக்குச் செல்ல வேண்டும்? அவை மானுடர்களின் விழைவுகளின் தொகை, அச்சங்களின் தொகை’ என்கிறாள். இருப்பினும் தருமர் அனைவரையும் அழைத்துச் செல்கிறார். காரணம், எந்த வேதத்திலாவது தன்னுடைய செயல்களை நியாயப்படுத்த, அல்லது அந்தத் தவறில் இருந்து விடுபடும் வழியை அறிய ஏதேனும் ஒன்று கிடைக்குமா என்பதே!! பன்னிரு படைக்களத்திற்கு அவர் ஒப்புவதே  குருதியின்றி ஒரு நிகரிப் போருக்குத்தான். கூடவே அதன் மறைபொருளாக அவரின் ஆழ்மன விழைவு, அவருக்கே கூட பருவடிவாக தெளிவாகத் தோன்றாத ஒரு விழைவும் இருக்கிறது. நால்வரிலும் தருமர் மட்டுமே தனக்கென எந்தத் தனித்தன்மையும் கொண்டிராதவர். அவரிடம் இருக்கும் ஒரே சிறப்பு அவரின் நூல் வாசிப்பும், அவரது அறக் குழப்பங்களும்தாம். அரசை விழைகிறாரா, திரௌபதியை விழைகிறாரா, அவளிடம் தனக்கென ஒரு பீடம் கோருகிறாரா என்பதெல்லாம் அவருக்கே விளங்காதவை. எவ்விதத்திலாயினும் ஒரு வெற்றி, தன் திறமையால் மட்டுமே ஈட்டப்படும் ஒரு வெற்றி, அதை அவள் முன் பெருமிதத்துடன் படைத்தல் என்பவையும் அவரை பன்னிரு படைக்களத்திற்குச் செலுத்திய விசைகள். இந்த விழைவுகளின் விபரீதம் அவரை வதைக்கிறது. உண்மையில் தம்பியர் இருவரும் வஞ்சினம் உரைப்பதன் மூலமும், பீமன் அவரை இகழ்ந்ததன் மூலம் அவர் ஓரளவிற்கு விடுபடுகிறார். ஆயினும் அவர் வேண்டும் முழு விடுதலையை அளிக்க வேண்டியவளோ அவரை முற்றிலுமாக புறக்கணிக்கிறாள். அவள் முன் அவர் இயலாமையே பேருருவம் கொண்டு எழுகிறது. இயலாமையை சந்திக்கும்தோறும் அவர் சினமும், குரோதமும், தன்னிரக்கமும் கொண்டவராக மாறி மாறி ஊசலாடிக்கொண்டே இருக்கிறார். இந்த வதையில் இருந்து விடுபடவே அவர் ஒவ்வொரு காடாக அலைகிறார். இந்த எல்லைக்கு அவரைத் துரத்திய அவரின் விழைவு நாவல் முழுவதும் மான் வடிவில் வந்து கொண்டேயிருக்கிறது.

இந்தப் பின்னணியில் வைத்துதான் சொல்வளர்காடு நாவலை அணுக வேண்டும். இந்த நாவலில் வரும் வேத நிலைகளின் இடம், அவ்வேதங்களின் சாரம், அவை கொள்ளும் முரண்கள், அவற்றில் வரும் வேதக் கதைகள் என அனைத்தையும் தருமனின் அகத்தை மற்றும் அவர் தேடலை மையமாக வைத்து அணுகும்போதே இந்நாவலின் முழு விரிவும் நமக்குக் கிடைக்கும்.  இந்நாவலைத் துவங்கும் சமயத்தில் தருமர் தன்னளவில் மட்டுமல்லாமல் வாசகர்களாகிய நம்மளவிலும் பாதாளத்தில் இருப்பவராகவே உள்ளார். அந்த இருளில் இருந்து ஒளியை நோக்கிய ஒரு பயணமாக, மண்ணுக்கடியில் ஆழத்தில், அழுத்தத்தில், பல்வேறு மாசுகளோடு இருக்கும் பொன் தாது வெளிக்கொணரப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டு, உருக்கப்படும் எரியை சுவர்ணதாரையாக்கி, ஜடாக்னியாக உருமாறும் ஒரு பயணமாக, தருமர் தன்னைத் தானே கண்டடையும் பயணமாக இந்நாவலை பார்க்கலாம். நாவலின் மையத் தரிசனம் என்பது தருமர் தன் விழைவைக் கண்டடைவதும், அதை முழுவதுமாக அறுத்து மீள்வதுமே.

சௌனகம்:

தருமருக்கு முதல் வேத சாரம் சௌனக வனத்தில், பிரமாணம் என்ற பேரால மரத்தின் நிழலில் சௌனகரால் வழங்கப்படுகிறது. இந்த வேதநிலையின் தத்துவம் முழுவதும் விழைவையும், அதனால் வரும் துன்பத்தையும், ஒரு அரசன் எவ்வாறு தனக்கு மட்டுமான விழைவான திருஷ்ணையில் இருந்து வெளிவந்து செயலாற்ற வேண்டும் என்பதையும் விரிவாகக் கூறுகிறது. இங்கே விழைவு என்பது ஒவ்வொரு உயிரின் இயல்பான நிலை என்பதையும், அவ்விழைவை வேட்பதற்கே வேள்விகள் எனவும் விளக்குகிறது. விழைவு என்பது சரிதான், ஆனால் ஒரு அரசன் தன் பொருட்டான விழைவை தவிர்த்தாக வேண்டும் என்கிறது சௌனக வேத அறிதல். ஒரு அரசன் அரசை விழைவது என்பது எரி விறகை அணுகுவது போல நடக்க வேண்டும் என்கிறது. மாறாக புலி இரையை அணுகுவது போல அணுகினால் அவன் துயரையே அடைகிறான். இங்கே தருமருக்கு தன்னைப் பற்றிய முதல் அறிதல் கிடைக்கிறது. காட்டிற்கு வந்தவர்களில் அவர் ஒருவர் மட்டுமே நகரைப் பற்றியும், அரசைப் பற்றியும் எண்ணிக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் அனைவரும் காட்டின் ஆழத்திற்கு தன்னைக் கொடுத்துவிட்டிருக்கின்றனர். முன்பு சதசிருங்கத்தில் குந்தி இருந்தாற்போல் தருமர் இப்போது இருக்கிறார்.

துவைதம்:

தருமர் இங்கிருந்து செல்வது துவைதக் காட்டிற்கு. இங்குதான் மான் என்ற உருவகம் முதன் முதலாக சொல்வளர்காட்டில் வருகிறது. ஒரு பாறை இரண்டாகப் பிளந்து விழும் ஒலியை தருமர், பீமன், அர்ஜுனன் மற்றும் திரௌபதி அவரவரின் மனநிலைக்கு ஏற்றாற்போல் கனவில் கற்பனை செய்துகொள்கின்றனர். தருமருக்கு அது அம்பு பட்டு அலறும் மானாக கனவில் தோன்றுகிறது. காலையில் விழித்தெழுகையில் அது அவருக்கு அந்த மானின் நகைப்பொலியாகத் தோன்றுகிறது. ஆம், தன் விழைவால் வருந்திக் கொண்டிருப்பவர் அவர். அதே சமயம் அந்த விழைவை ஏற்றிருப்பவரும் அவரே. இது தருமரின் இருமை.

துவைதக் காட்டில் சார்வாகத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களின் அறிதல், எரிதல் என்பதும் விறகின் ஒரு நிலையே என்கிறது. எனவே விறகைப் பேண ஆணையிடுகிறது. அதாவது விழைவு என்பது மானுட உடலின் ஒரு நிலையே, எனவே மானுட உடலால் சாத்தியமான அனைத்தையும் அடையலாம், விழையலாம். அதற்காக அவ்வுடலைப் பேண வேண்டும். அதன் புலன்களின் எல்லைகளுக்குட்பட்ட அறிவே அவ்வுடல் கொள்ளச் சாத்தியமானது. எனவே அனைத்து அறிவும் அவ்வுடலைச் சார்ந்தே இருந்தாக வேண்டும், அதுவே முதல் மெய்மை. மற்றவையெல்லாம் அந்த முதல் மெய்மையைச் சார்ந்தவையே. எனவேதான் இது சார்வாகம். உடலைப் பேணும் மருத்துவமும் இங்கே நடக்கிறது. இக்காட்டில்தான் தருமர் தான் எவ்வளவு கொந்தளிப்புடன், தத்தளிப்புடன் இருக்கிறோம் என்பதை முழுமையாக உணர்கிறார். அவர் நீரில் மூழ்கும் பொழுதுதான் அலைகள் எழுந்து கரையில் இருந்த பாறைகளில் மோதி ஓசை வருகிறது. இத்தனைக்கும் அவர் சிற்றுடலர். பேருடலனான பீமன் மூழ்குகையில் அலையே எழும்புவதில்லை. ஒருபுறம் தனக்கான தேடலில் இருக்கும் தருமர், மீண்டும் மீண்டும் திரௌபதியிடம் மன்னிக்கக் கோருகிறார். அவள் தன்னை இறுக்கி, அமைதியாய் இருக்க இருக்க மேலும் மேலும் துன்பமடைகிறார். அது சினமாக மாறி அவளை பல முறை மானசீகமாகக் கொல்வது வரைகூட செல்கிறார்.

ராமன் சீதையை அவள் பிறப்பைச் சொல்லி வசைபாடியது போன்றே, திரௌபதியும் தருமனை ‘யாரறிவார்? மரவுரி அணிந்து காட்டிலிருக்கையிலும் மணிமுடியைக் கனவுகண்ட ஏதோ முனிவரின் விதையை அவர் ஏந்தியிருக்கலாம்.’ என கொன்று செல்கிறாள்.

ஐதரேயம்:

விழைவு மானுட இயல்பு நிலை, அது உடலின் ஒரு விருப்பே என்று அறிந்த பிறகும் தனக்கான விடை அமையாத தருமர் அடுத்ததாகச் செல்வது ஐதரேயக் காட்டுக்கு. இக்காட்டில் வேத அறிதலின் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்கிறது. இந்நிலையின் முதல் ஆசிரியரான மகிதாசர் தன் அன்றாடச் செயல்களையே, தன் பன்னிரு ஆண்டுகளின் குயவன் வாழ்வையே தவமாக்கி, ‘பிரக்ஞையே பிரம்மம்’ என்னும் ஆப்த வாக்கியத்தை கண்டடைகிறார். எங்கும் நிறைந்திருக்கும் பிரம்மம், ஒரு மானுடனால் அறிய இயன்ற அளவுக்கு அவனுள் நிறைந்திருக்கும் என்று பொருள்படும்படியான குடத்தில் மொள்ளப்பட்ட ஆகாயம் என்ற படிமத்தை முன்வைக்கிறது இம்மெய்யறிதல். எனவே அறியச் சொல்கிறது. ஐதரேய மெய்யறிதல் சிறகு என்பது பறக்கத்துடிக்கும் விழைவே, இப்பருவுடலே அது கொண்ட விழைவுகளால் ஆனதே என்கிறது. குடத்தில் அள்ளப்பட்ட வானம் போல அனைத்தும் அமைந்துள்ள முடிவிலிப் பெருக்கில் இருந்து விளிம்பு கட்டிப் பிரித்து இருப்பை உருவாக்கி அளிக்கும் சூரிய ஒளியை பருவடிவான பிரக்ஞை என்கிறது இம்மரபு. சார்வாகம் கூறும் காரண காரியங்களின் சுழற்சியை மேலும் மெருகேற்றி, சுழற்சியால் துவங்கும் எதுவும் சுழற்சியால் அழியுமாறும் ஆகும் என அறிகிறது ஐதரேயம். ஒவ்வொரு மனிதனும் ஒரு விழைவென்றால் அவ்விழைவுகள் பின்னிப் பின்னி விரிந்து உருவாவதை, அப்பெரு விழைவு சென்று எய்துவதை ஊழ் என்கிறது இது.

இங்கும் தருமருக்கு தான் முறைமைகளிலும், அரண்மனை வசதிகளிலும் எத்துணை ஆழ்ந்திருக்கிறோம் என்பதை அறியும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஐதரேய வேதநிலை ஏழு அரசர்களால் புரக்கப்படுகிறது. அளவான காற்றோட்டம் உள்ள அறையில், மென்பஞ்சுத் தூளியில், கொசுத் தொல்லை இன்றி வெகுநாட்களுக்குப் பிறகு நிம்மதியாகத் தூங்குகிறார் தருமர். அவர் முகத்தில் எஞ்சிய புன்னகையாக இந்த வசதிகள் மறுநாள் காலையில் இருக்கின்றன.

தைத்திரியம்:

ஒரு வேத நிலையின் சாரத்தை உணர்ந்தபின் நிறைவுறாமல் மேலும் தேடி அடுத்த ஆரண்யகத்தைக் கண்டடைவதைப் போலன்றி இக்காட்டிற்கு விதுரரின் வருகையால் கிளம்புகின்றனர் பாண்டவர்கள். இக்காட்டில்தான் முதன் முதலாக ஒரு தன்னறிதலும், மறுபிறப்பும் ஒரு பாத்திரத்திற்கு நடப்பதைப் பார்க்கிறோம். விதுரர்தான் அவர். கிட்டத்தட்ட மரணத்தை அணுகி, சகதேவன் கூறும் தன்னிலையை அறிந்து அவர் மீள்கிறார். அவர் மானுட விழைவுகளின் அடிப்படை ஒரு உயிர் மற்றொன்றின் மீது கொள்ளும் பற்றே என்று கண்டடைகிறார். அன்பென்றும், பாசமென்றும் உருமாறிக் காட்டும் மானுட உயிர்கள் கொண்டுள்ள பற்றே வாழ்வின் ஆதாரம் என உரைக்கிறார்.

இக்காட்டில்தான் தருமர் மானுட வாழ்வில் விழைவைப் போலவே பின்னிப் படர்ந்து நின்றிருக்கும் பற்றைக் காண்கிறார். ஒவ்வொரு வேத நிலையிலும் இளைய யாதவருக்கு எதிரான மனநிலை இருப்பதற்கு அவை அவற்றின் கொள்கைகள், வேத அறிதல்கள் மீது கொண்டுள்ள பற்றே காரணம் என விளங்கிக் கொள்கிறார். விழைவுகளை ஒறுத்தவர்கூட பற்றில் இருந்து விடுபட இயலவில்லை என்பதை அறிகிறார். அனைத்துக்கும் மேலாக அவரே ஒரு உயிர் பிறிதொரு உயிரின் மீது வைக்கும் பற்றின் எல்லையை ஒரு குரங்கின் வடிவில் அறிகிறார். இக்குரங்கு சர்வ சாதாரணமாக ஒரு மானின் கொம்பில் ஏறி விளையாடிச் செல்கிறது.

இங்கே சொல்லப்படும் சுனக்ஷேபரின் கதை மிக முக்கியமான ஒன்று. இது பற்றுக்கும் விழைவுக்குமான போரில் அன்பால் செலுத்தப்பட்ட அறம் வெல்வதைப் பற்றியது. தன் ஒரே மகன் மீது கொண்ட பற்றால் வருணனுக்கு பலி அளிக்க, வேத உச்சத்தை அடையும் பெருவிழைவு கொண்ட அஜிகர்த்தர் என்ற அந்தணரின் இரண்டாம் மைந்தனான சுனக்ஷேபனை பலி கொடுக்க முனைகிறான் ஹரிச்சந்திரன். மானுடப் பலி கொடுக்க விரும்பாததால் எந்த அந்தணரும் அவ்வேள்வியைச் செய்ய முன்வரவில்லை. எனவே தன் விழைவை தானே இயற்ற அஜிகர்த்தரே முன்வந்து தன் மைந்தனை பலி கொடுக்கும் வேள்வியைச் செய்கிறார். ஒரு மானுடன் பலியாவதைத் தாங்க இயலாத விஸ்வாமித்ரர் சுனக்ஷேபனை தன் மைந்தனாக ஏற்று தான் அதுகாறும் செய்த வாழ்நாள் தவத்தை அவனுக்கு அளித்து மீட்கிறார். இங்கே வரும் விஸ்வாமித்ரரின் கொடை தருமரின் ஆழ்மனதில் பிறிதில்லாது, அள்ளக் குறையாது, அளிக்க வேண்டும் என்ற எண்ணம் விழுந்த முதல் விதை.

பிருஹதாரண்யகம்:

சொல்வளர்காட்டில் ஒரு குறுநாவல் என சொல்லப்படத் தக்க வகையில் அமைந்த ஒரு பகுதி இது. ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற ஆப்த வாக்கியத்தின் கதை. யாக்ஞவல்கியர், காத்யாயினி மற்றும் மைத்ரேயி அன்னையின் கதை. இப்பகுதியில்தான் சீதையின் மிதிலை மற்றும் ராஜரிஷி ஜனகர் பற்றிய விரிவான விவரணைகள் வருகின்றன. முதலில் ஏன் சீதையைப் பற்றியும், மிதிலையைப் பற்றியும் இவ்வளவு விரிவான விவரணைகள் தேவை? வெண்முரசில் எந்தப் பகுதியும் வீணாக எழுதப்படுவதில்லை. மிக நேரடியாக ஒரு தொடர்பை நாம் கண்டறிய இயலாவிட்டாலும், அத்தொடர்பிற்கான முகாந்திரங்கள் தரப்பட்டிருக்கும். அவற்றைக் கண்டறிவதே ஒரு வாசகருக்கு முன்னுள்ள சவால். தருமர் அடைந்து கொண்டிருக்கும் அனைத்து அவஸ்தைகளையும் காடேகி, கவரப்பட்டு சிறையுற்று, பொருந்தாப் புறக்கணிப்பால் மனம் நொந்து எரியேகிய பொறையின் மகள் அல்லவா அவள்? அவளும் அவரும் இணையும் புள்ளி இதுவே. அவள் உணர்ந்து அடைந்ததையே இவரும் அடையப் போகிறார். எனவே அவள் விரிவாக வருகிறாள்.

பிற ஆரண்யகங்கள் எல்லாம் ஒறுத்துச் செல்வதைச் சொன்னால், இக்குருநிலை அனைத்தையும் கொண்ட முழுமைக் கல்வியை முன்வைக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் இக்கல்விநிலையிலேயே பெண்களுக்கு இருக்கும் தத்துவத் தேடலுக்கான சாத்தியம் முன்வைக்கப்படுகிறது. இதற்கு முன்பு ஐதரேயம் மகிதாசரின் தாயின் கூற்றில் இருந்துதான் துவங்குகிறதென்றாலும் அங்கு அவளுக்கென்று எந்த மெய்யறிதலும் அளிக்கப்படவில்லை. எங்கும் பெண்களுக்கு மெய்யறிதல் வழங்கப்படவில்லை. ‘நானே பிரம்மம்’ என்ற சொல்லில் துவங்கினாலும் யாக்ஞவல்கியருக்கு அது வெறும் சொல்லாகவே இருந்ததன் காரணம் அவர் தன் துணைவி காத்யாயினியின் மெய்த் தேடலை கடைசி வரை உணரவே இல்லை என்பதே. அதை அவருக்கு உணர வைத்தவள் மைத்ரேயி. இக்காட்டில்தான் பெண்களுக்கும் தேடல் உண்டு என்பதையே தருமர் உணர்கிறார். பிருஹதாரண்யகத்தை தற்போது இருக்கும் கலைகளையும் உள்ளடக்கிய முழுமைக் கல்வியை நோக்கி செலுத்திய மைத்ரேயி அன்னை, காத்யாயினியுடன் சென்று சேர்ந்த கார்கியின் குருநிலை பற்றி அறிகிறார். முதன் முறையாக திரௌபதியை அறிய வேண்டிய தேவை அவருக்கு புரிகிறது. அதுவரையில் “தான் இவ்வளவு இறங்கிப் போய் கெஞ்சிய பிறகும், ஆணென்றுகூட பாராமல் தன்னை மதியாமல் இருக்கிறாளே இவள்” என்ற எண்ணமே அவருக்கு இருந்துகொண்டிருக்கிறது. அவ்வெண்ணம் மாறுமிடம் இது.

சாந்தீபனி:

நியாயமாக கார்கியின் குருநிலைக்குச் செல்வதே இயல்பான போக்காக இருந்திருக்கும். மாறாக பார்த்தனின் அறிவுறுத்தலால் அவர்கள் சாந்தீபனி குருநிலைக்கு செல்கிறார்கள். இங்கே அவர்கள் மீண்டும் கிருஷ்ணனை பார்க்கிறார்கள். சாந்தீபனி குருநிலை மொத்த வேதக் கல்வியையும் இணைத்து ஒரு சமன்வயத்தை ஏற்படுத்துகிறது. முதன் முதலாக அனைத்துமே லீலை, எதற்கும் எப்பொருளும் இல்லை, அவை நடந்தாக வேண்டும், எனவே நடக்கின்றன. பெரும் லீலை. விழைவும் அதன் விளைவும் நம் கையில் இல்லை. நம் வழியாக ஒழுகிச் செல்பவையே அவை என்பதாக தருமர் புரிந்துகொள்கிறார். சற்றே தன் குற்ற உணர்வில் இருந்து தெளிகிறார். நடந்தவற்றை மாற்ற இயலாது என்பதையும் அவை ஒரு பெரும் பெருக்கின் சிறு துளிகள் எனவும் உணர்கிறார். ஒரு எல்லையில் கிருஷ்ணனுக்கே ஒரு பதில் சொல்லும் தெளிவை அடைகிறார்.

இங்கே தருமர் பற்றின் மற்றொரு முகத்தைக் காண்கிறார். கிருஷ்ணனின் குரு தன் மகன் மீது கொண்ட பற்றால் தன் ஞான முழுமையை அடையாமல் இருந்ததையும், மிகக் குரூரமாக கிருஷ்ணனின் கேள்வியால் துளைக்கப்பட்டதையும், அத்துயரும், அதன் உண்மையும் அவரை கிருஷ்ணன் மீது தீச்சொல்லிட வைத்ததையும் அவர் அறிகிறார். மைந்தன் மீதான பற்று, குருவின் மீதான பத்ரரின் பற்று போன்ற மானுட உயிர்களின் மீதான அன்பு என்னும் விலங்கு மானுடத்தின் மீது செலுத்தும் தளையை அறிகிறார். அனைத்துக்கும் உச்சமாக இந்த பற்று கிருஷ்ணனையே தளர்வுறச் செய்வதையும் காண்கிறார். மறு எல்லையில் அந்தப் பற்றே எவ்வாறு ஒருவரை துயரில் இருந்து மீட்டு வர இயலும் என்பதையும் அவர் தைத்ரியத்தில் சந்தித்த குரங்குக் குட்டியின் நினைவை மீட்டுவதன் மூலம் உணர்கிறார்.

மைத்ராயனியம்:

இக்காட்டிற்கு கிருஷ்ணரின் வழிகாட்டலின் பேரில் வந்து சேர்கிறார்கள். கிருஷ்ணன் மிகத்தெளிவாகவே அனைத்து ஆரண்யகங்களும் இணையும் புள்ளி என இக்காட்டைச் சொல்கிறார். அதை அனுபவபூர்வமாக உணர்கிறார் தருமர். இக்காட்டிலேயே அவரின் அனைத்து அறிதல்களும் முனை கொள்கின்றன. முக்கியமாக ‘பசியும் ருசியும் விலகியபின்னரே நீ அன்னத்தை அறியத்தொடங்குகிறாய். அதன்பின்னரே அருஞ்சுவை உன் கைகளில் வந்தமைகிறது’ என்ற உண்மை. இந்தப் பசி, ருசியை விடுதல் என்பதை பற்று, விழைவை விடுதல் என்று பொருள் கொண்டால் கிருஷ்ணனின் கோலாகல மனநிலையை அறிந்து கொள்ளலாம். இக்காட்டிலே தருமர் கேட்கும் இரு கதைகள் அவரின் தேடலை முழுமை செய்கின்றன.

மாந்தாதா: இக்கதையில் மைந்தர் மேல் கொள்ளும் பற்று எவ்வாறு ஒரு வாழ்வின் தரிசனம் ஆகிறது என்பதை அறிகிறார். இதன் மாந்தாதா ‘என்னை உண்ணுக’ என்று சொல்லுமிடம் உச்சமானது. அதை அவர் தன் நாட்டில் உளவறிய வந்து மாட்டிக் கொள்ளும் எதிரி நாட்டு ஒற்றனிடம் சொல்கிறார். ‘என்னை உண்ணுக’ என்ற சொல்லின் பரு வடிவை அவர் மைத்ரி என்ற ஆலமரமாகக் காண்கிறார். அம்மரம் எங்குமே செல்லவில்லை. ஆனால் அதை உண்ட பறவைகள் வழியாக அம்மரத்தின் கன்று தென்முனை குமரி வரை கூடச் சென்றிருக்கும் என்ற தரிசனம் அபாரமான ஒன்று. அளிக்க அளிக்க அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்ற உண்மையை அவர் அகம் ஏற்ற தருணம் அது. அள்ள அள்ளக் குறையாத அறங்களின் ஊற்றாக அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என தன்னறத்தை அவர் ஆழுள்ளம் உணர்ந்த தருணம். அசோக வனத்தில் சீதையும் இப்படித் தானே தன்னைச் சூழ்ந்த அரக்கியருக்கு இருக்கிறாள்? இன்னும் குறிப்பாக திரிசடைக்கு.

ஜந்து: வெண்முரசில் பல கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் வந்தவற்றிலேயே மிகக் கொடூரமான கதை என்றால் அது இந்த ஜந்துவின் கதைதான். மானுடரின் விழைவு எந்த எல்லை வரை செல்லும் என்பதை முழுமையாக தருமருக்கும், நமக்கும் உரைக்கும் கதை இது. இதில் அந்தத் தந்தை ஜந்துவின் கழுத்தை அறுக்கப் போகும் நேரத்திலும் அதன் அதரத்தின் புன்னகை மனதில் இருந்து நீங்க பல நாளாகும். மானுடம் இதுநாள் வரை பேணிய அனைத்து அறங்களும், விழுமியங்களும் அதன் விழைவுகளுக்காக அவியிடப்படுகின்றன. இதில் யமன் ஜந்துவின் தந்தையான சோமகனிடம் கேட்கும், ‘அரசே, சொல்க! இந்த நூறு மைந்தரும் ஆயிரம் பெயர் மைந்தரும் பன்னீராயிரம் மறுபெயரரும் உனக்கு எவ்வகையில் பொருட்டு? எதற்காக இவர்களை இழக்கச் சித்தமாவாய்?’ என்ற கேள்விக்கு பதில் விழைவு என்றே ஆவதைக் காண்கையில் விழைவு என்பதன் வீரியத்தை உணர்கிறார். மிகத்தெளிவாகவே தன் விழைவின் விபரீதத்தை உணர்கிறார். எங்கோ சொல்லப்பட்ட இரு கதைகளை விழைவு, பற்று என்ற வகையில் ஒரு புள்ளியில் கோர்த்து ஒரு தரிசனத்தை உருவாக்கிய ஆசிரியரின் கண்டடைதல் அபாரமானது. இத்தகைய அடைதல்களே அவரை வெண்முரசை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கின்றன.

விழைவு:

இதுகாறும் அடைந்த அனைத்து அறிதல்களையும் விழைவு ஒரு புள்ளியில் ஒரு அருகப் படிவர் மூலம் கொண்டு வந்து சேர்க்கிறது சொல்வளர்காடு. ஏன் அருகர்? வேத முனிவர்கள் வேள்வியின் மூலம் விழைவை அறிவித்து, வேட்டு வேண்டியதைப் பெறுகிறார்கள். மாறாக அருகர்கள் ஊரில் இருந்து விலகி, ஆழங்களில், அவற்றின் இருளில் ஊழ்கத்தில் அமர்ந்து தங்கள் விழைவை அறுத்து மெய்மை அடைகிறார்கள். எனவே விழைவு என்பதைப் பற்றி ஒரு அருகர் பேசுவதே முறையாக இருக்க முடியும். மட்டுமலாமல் முன்பே ஒருமுறை தருமராக அவர் காந்தியை எழுதிக் கொண்டிருப்பதாக ஜெ சொல்லியிருந்தார். காந்தியின் சமணத் தொடர்பும் நாம் அறிந்ததே!! இனி அருகரின் வார்த்தைகள்:

“அரசே, இப்புவியில் அறமென்றும் அன்பென்றும் ஏதுமில்லை. இருப்பது விழைவு ஒன்றே. விழைவுக்குரியதை நாடும் வழியையும் அதை பேணும் முறைமையையும் மானுடர் அறமென வகுத்தனர். விழைவை அன்பென்று ஆக்கி அழகுறச்செய்தனர். விழைவை வெல்லாதவனால் தன் விழைவை அன்றி எதையும் அறியமுடியாது. அறிபடுபொருள் அனைத்தும் விழைவால் உன்னிடம் தொடர்புகொண்டிருக்கையில் வேறெதை அறியும் உன் சித்தம்?. அரசே, இப்புவியில் அனைத்துக் கொடுமைகளும் விழைவின் விளைவாகவே செய்யப்படுகின்றன. இங்கு மெய்மையும் அறமும் விழைவுகளால் விளக்கப்பட்ட வடிவில்மட்டுமே கிடைக்கின்றன. விழைவறுத்து விடுதலை கொள்க! அறிவதறிந்து அமைக! அருகனருள் அதற்குத் துணை கூடுக!”.

“களிம்பும் துருவுமென படர்பவை ஆணவமும் அறியாமையும் பிறவும். விழைவோ உலோகக்கலவை என உள்கலந்து உருவென்றாகியது. உருகியழிந்து பிறந்தெழாமல் விழைவறுத்து மீளமுடியாது.”

மீண்டும் மீண்டும் திரௌபதியை நாடும் தன் மனதை, தன் விழைவை என்ன செய்வது எனக் கேட்கும் தருமரிடம் அருகர், “அவளை அறிக!  அறிதலே கடத்தல். கடப்பதே விழைவை வெல்லும் ஒரே வழி. அவளை அறிதலென்பது அவள் அழலை அறிதலே. அழலுக்கு அஞ்சி அப்பால் நிற்பவர்கள் அதை அறிவதில்லை.  தீயில் இறங்கி உருகி மாசுகளைந்து வெளிவரும் பொன் அறியும் தீயென்றால் என்னவென்று. ஆகவே பொன்னை ஜடாக்னி என்கிறார்கள். தீயை சுவர்ணதாரா என்கிறார்கள்.” – ஆம் அறியவே அவர் எரிபுகுகிறார். சீதையும் அதற்காகவே.

யக்ஷவனம்:

தருமன் என்னும் காதலன்: இவ்வனத்திற்கு அவர்கள் வருவதற்கு முன்பு வரும் ஒரு இளிவரல் சூதனின் பகுதிகள் மிக முக்கியமானவை. வெண்முரசில் சூதர்கள் பல பகுதிகளில் வந்தாலும் இளிவரல் சூதர்கள் வரும் பகுதிகள் எளிதில் கடக்க முடியாதவை. இவர்கள் அனைத்தையும் கவிழ்த்துப் போட்டு பகடி செய்பவர்களே. இருப்பினும் இவர்களின் பகடிகள் பல அறிதல்களைத் தருபவை. இப்பகுதியில் இந்த சூதன் பேசுபவை மிகத் தெளிவாகவே சீதையை காட்டி விடுகின்றன.

முதலில் அந்த நாரையின் இறகைப் பார்த்து முண்டக உபநிஷத்தின் ‘ஒரு பறவை உண்ண, மறு பறவை பார்த்திருந்த’ கதையைச் சொல்பவன் அடுத்ததாக நேரடியாக வால்மீகியின் முதல் சுலோகத்தின் கதையைச் சொல்கிறான். அந்த ஆண் துணையை இழந்து தவிக்கும் பெண் நாரைக்கு தன் தவத்தின் பலனைத் தந்து கவி பாடி, அப்பறவைகளை வாக்தேவியின் கையில் விளையாட விட்டு சாகா வரமளித்தவர்தானே சீதையைப் பாடிய புற்றுறை முனி. இவையும் போதாது என்று தருமனின் நீர் என்ன பித்தரா என்ற கேள்விக்குப் பதிலாக சூதன் “பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும் பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ என்பார்களே?” என்று கம்பனை வேறு துணைக்கு அழைக்கிறான்.

சீதையின் கதையைச் சொல்லிவிட்டு அவள் உதிர்த்த இந்த இறகின் பெயர் என்ன என்று கேட்கும் சூதனிடம் தருமர் “ராமா” என்று பதிலிறுக்கிறார். அவனும் அதுதான் சரியான பதில், காதல் கொண்டவளுக்குப் பெயரே இல்லை, காதலனின் பெயரையே சூடிக் கொள்கிறாள் என்கிறான். அக்காடு முழுவதும் நிறைத்திருக்கும் ராமனின் துயரக் குரலில் ஒலிக்கும் சீதா என்ற ஒலியை தருமர் மட்டுமே கேட்கிறார். இங்கே நம்முன் வரும் தருமன் அறத்தின் மூர்த்தி அல்ல, பெருங்காதலன். தருமரின் மிக முக்கியமான ஒரு பரிமாணம் நமக்கு வெளிப்படும் தருணம் இது. இந்தப் புள்ளியில் தருமர் அவளை வெறுக்கவில்லை. அவளிடம் மன்னிப்பும் கோரவில்லை. அவளை அவளாக விரும்புகிறார். மானுடம் கண்டடைந்த சாமானிய தளத்தில் செயல்படும் தரிசனங்களில் உச்சம் என காதலையே சொல்ல இயலும். வேறு எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு உயிர் பிறிதொரு உயிரிடம் கொள்ளக்கூடிய பெரும் பற்று காதலே. அக்காதலை அறியாத ஒருவரால் எவ்வாறு மானுடத்தை, உயிர்களை, இப்புடவியை ஏற்கவும், விரும்பவும், கொள்ளவும் இயலும்?

விழைவு என்னும் மான்:

இப்பகுதியில் தருமரை கந்தமாதன மலை நோக்கி கொண்டு செல்லும் மற்றொரு கதாபாத்திரமாக சுஃப்ர கௌசிகர் என்னும் வேதியர் வருகிறார். இவரும் வேள்விதான் செய்கிறார். பலியும் இடப்போகிறார். இன்னும் குறிப்பாக ஜந்து கதையில் வந்த அதர்வ வேள்விக்கு இணையான ஒரு பூத வேள்வியே இவர் செய்வது. ஒரே ஒரு மாற்றம், அவியாக தன்னையே பலியிடப் போகிறார். ‘தன்னையே’ தன் சமூகத்தை உண்ணச் சொல்கிறார். மாந்தாதாவும் சோமகனும் சந்திக்கும் புள்ளி. தன்னையே உருக்கி சமூகத்துக்காக அர்ப்பணிக்கும் ஒருவர்.

இவரின் சிஷ்யர்களில் ஒருவருக்கு அவர் எரி புகுவதில் விருப்பமில்லை. எனவே அவர் வேள்வி எரி எழுப்பும் அரணிக் கட்டையை தூக்கி எறிந்து விடுகிறார். அதை ஒரு மான் எடுத்துக் கொண்டு செல்கிறது. அரணிக் கட்டை இருந்தால்தானே சுஃப்ர கௌசிகர் எரி புகுவார்? மானின் முக்கியமான இயல்பு, அது மிக அழகான மிருகம். ஆனால் மிகுந்த அச்சம் கொண்டதும் கூட. நிலையற்ற மனம் கொண்டது. விழைவு அப்படிப்பட்டதுதான். அது நிறைவேறுவதுவரை அப்படித்தான் அச்சம் கொண்டு கால் மாற்றி நின்று கொண்டிருக்கும் மானைப் போலவே நம் மனதை வைத்திருக்கும். அதை முற்றிலுமாக புறக்கணிப்பது என எண்ணினால் அதைத் தடுக்கும் வகையில் அப்புறக்கணிக்கும் எண்ணத்தையே எடுத்துக்கொண்டு யாரும் அணுக இயலாத நச்சுப் பொய்கைக்கு கொண்டு சென்று விடும். அப்படி ஒரு எண்ணம் நம்மில் வந்தாலே அது மறைந்து விடும். அதன் காலடித்தடங்களையும், மணத்தையும் வைத்தே அதை பின்தொடர இயலும். அதையும் மீறி அதைத் துறக்க விரும்பினால் நம்முடன் நம் விருப்பங்களை நிறைவேற்றுவதாக பேரம் பேசும். அதையும் தாண்டி வருகையிலேயே ஒருவர் விழைவின் ஆழத்தை, அது தன்னுள் கலந்து ஒன்றுடன் ஒன்றாக உருகி இணைந்திருப்பதை முழுமையாக உணர இயலும். இதையே தருமர் யக்ஷவனத்தில் இருந்து திரும்பும் வழியில் உணர்கிறார். எரிபுகத் தயாராகிறார்.

கந்தமாதனம்:

தருமர் கந்தமாதன மலையில் செய்வது தன் விழைவை அவியாகச் சொரிந்து செய்யும் ஒரு வேள்வி. அவர் அதுகாறும் தன்னுள் சேர்ந்த தன் விழைவின் வெவ்வேறு வடிவுகளை காண்கிறார். அவற்றை நெருப்புக்கு அவியும் இடுகிறார்.

  1. கந்தர்வர்கள்: அவர் முதலில் காணும் தன் விழைவின் உருவங்களாக கந்தர்வர்கள் வருகின்றனர். இவை அவர் தன் இளமையில் பாண்டுவின் தோளில் அமர்ந்து கேட்டவை, அவ்வயதில் அவருள் குடியேறியவை. இனிமையே உருவானவை. எனவேதான் தீயில் சென்று விழுந்தபின்னும் இசையாக எஞ்சுபவை.
  2. பொன் தேவன்: இரண்டாவதாக வருபவன் பொன்னை உருக்கி வடித்தெடுத்த ஒரு பேரழகன். இத்தேவன் வரிசையாக தன்னைப் போன்றவர்களால் பெருகுகிறான். அவர்களே முதல் முதலாக அவருள் இருந்த விழைவை ஒரு சொல்லாக எடுத்து தங்கள் முன் போட்டு விளையாடுகின்றனர். அவ்விழைவை சரியாக உணரவேண்டி அதைத்தன்னிடம் வீசுமாறு கூவுகிறார் தருமர். இந்த பொற்தேவன் அவர் உள்ளே இருந்த அழகனான, அறத்தின் உருவினனான ஒரு அரசன் என்ற விழைவே. இன்னும் குறிப்பாக பொற்கவசம் அணிந்த தேவன் என்பதும், அழகன் என்பதும் இவன் கர்ணனின் உருவமே என்றுகூட வாசிக்கலாம். அவன் அங்க நாட்டு பட்டாபிஷேகப் பகுதியில் அவனை அழகன் என்றும், அறத்தான் என்றும் உணர்ந்தவர்தானே இவர்! எங்கோ உள்ளத்தின் ஒரு மூலையில் திரௌபதியிடம் காதல் கொள்ளத் தேவையான ஒரு உருவாக, உடல் மொழியாக இவ்வுருவமே இருந்திருக்கக் கூடும்.
  3. நாகம்: இப்பொற்தேவர்களை தீயிலிட்டு அவர்கள் உருட்டி விளையாடிய சொல்லை ஒரு நாகமணிக்கல்லாக மாற்றுகிறது ஓர் நாகம். பொதுவாக நாகம் நம் மரபில் விழைவுக்கு குறியீடாகப் பயன்படுவது. மாறாக இங்கே நாகம் தருமரின் விழைவின் ஒரு முகமாக சினத்தின் குறியீடாக வருகிறது. இந்த நாகமே அச்சொல்லை, அவர் விழைவை அவர் விழியறியத் தருகிறது. அவரின் அறத்தான் என்றாகும் விழைவு.
  4. கரிய தெய்வம்: தன் சினத்தையும் அவியிடும் அவர் முன் அடுத்ததாக அவர் விழைவு ஒரு கரிய தெய்வமாக எழுந்து வருகிறது. அதற்கு விழியில்லை. ஆம் விழைவு எவ்வாறு விழி கொண்டிருக்க இயலும்? அது அவரின் விழைவையே விழியாக்கிக் கொள்கிறது. இது உண்மையில் அவரின் அறத்தான் என்னும் பிம்பத்தையே அரசனாவதற்கான மூலதனமாக்கிய குந்தியே. தன் தாய் மீதான விழைவையும் அவர் அவியாக்குகிறார். மிகச் சரியாக அது அவரை மைந்தா என அழைக்கிறது. அதுவும் குருதி மணத்துடன். ஆம், கர்ணனைக் கொன்று உண்டதே இதற்காகத் தானே. மற்றொரு வகையில் அரச பதவி என்பதே குருதி வாசம் கொண்டது என்றும் வாசிக்கலாம்.
  5. பதினாறு முகம் கொண்ட தெய்வம்: அன்னையையும் துறக்கும் அவர்முன் பதினாறு முகம் கொண்ட தேவியாக உருமாறுகிறது அந்த தெய்வம். ஆம், குந்தியின் மாற்றுருதானே திரௌபதியும்? அவரின் அறத்தானாக வேண்டும் என்ற விழைவை மகாருத்ரமாக அவர் கையில் தருகிறது இத்தெய்வம். அவர் இதையும் துறக்கிறார்.
  6. அன்னம்: ஒரு வழியாக தன்னில் விழைவை ஏற்படுத்திய அனைத்தையும் துறக்கும் தருமர் தன் கையில் ஒரு நீல மணியாக வந்திருக்கும் விழைவை பார்க்கிறார். அது அன்னமாகத் தெரிகிறது. பசித்தவருக்கெல்லாம் அவியாகும் அன்னம். பசி என்பதை அறிவுப் பசி, உடல் பசி, பொருள் பசி என பலவாறாகப் பிரித்தால் அவை அனைத்தையும் தீர்க்கும் ஒரு அறத்தானாக, ஒரு அரசனாக அமைவதே அவர் கையில் வைத்திருக்கும் அன்னத்தின் பொருள். ஆயினும் அந்த அன்னம் அல்ல அவர், எனவே அதையும் துறக்கிறார். அதுவரையிலும் அவருள் எரிந்து கொண்டிருந்த ஏதோ ஒன்று ஒரு கணம் அடங்குவதை உணர்கிறார். அதைப் போன்றே கந்தமாதனத்தின் நெருப்பும் ஒரு கணம் அடங்கி அமைகிறது.
  7. தன்னையே அவியாக்கல்: அடுத்த கணம் மீண்டும் எரியும் அந்த நெருப்பின் முன், தன்னையே ஆகுதியாக இடும் தருமன் தன் விழைவை, தானாக இருக்கும் ஒன்றை முற்றிலுமாக துறக்கிறார்.

இதன் பிறகு மீண்டு வரும் தருமருக்கு அனைத்தும் ஒன்றாகத் தெரிகிறது. அவர் தன்னையே மாந்தாதாவாக உணர்கிறார். எப்பசியுடையாருக்கும் பசியாற்றும் அன்னம் குறையாக்கலமாக மாறுகிறார். எப்படி பிரிந்தாலும் அருள் புரியும் தருமமாகவே ஆகிறார்.

சீதையும் இவ்வாறே தன்னை தூய்மை செய்துகொள்ள, தன் விழைவை முற்றிலுமாகத் துறந்து, தன் குலத்துக்கு, அரசுக்கு அன்னம் குறையாக் கலமாக வழிகாட்டிக் கொண்டிருந்த அரசியாக இருந்த அதே நிலைக்குத் திரும்பும் வகையில், ராமனை மட்டுமன்றி மானுடரையும், எவ்வுயிரையும் அறியும் தாயாக மாற எரி புகுகிறாள். இவ்விடத்தில் கம்பன் காட்டும் சீதை துயருற்றவள் அல்ல. மானுடக் கீழ்மையைக் கண்டு அயர்வுற்றவளும் அல்ல. பிறவிப் பெருங்கடல் நீந்தி தன்னில்லம் நோக்கி செல்லும் ஒருத்தி. அவள் முழுமையானவள். துயரற்றவள். அனைத்தையும் காண்பவள். கடந்து சென்றவள். அமைந்தவள். அவள் ராமன் மீது சினம் கொள்ளவில்லை என்பதே அவள் ராமனைக் கடந்து விடுகிறாள் என்பதற்கு மிகச் சிறந்த சான்று. இதற்குப் பிறகு அவள் கம்பனில் பேசவே இல்லை. மலர்ந்த முகத்துடன் அனைவருக்கும் அருள் புரியும் பேரரசியாக அவள் இருக்கிறாள். தருமனும் அவ்வாறே. தற்பிரிந்து அருள் புரி தருமம் அவ்வாறுதான் இருக்க முடியும்.

Aside