தென்திசை – ந.பானுமதி

வெண்முரசு சென்னை யில் நடந்த விவாதங்கள்-பிப்ர &மார்ச் 2017
நான் இதற்கு ‘ஏகம்’ எனப் பெயரிடுள்ளேன். (விவாதத்திற்காககி)
சத்யவான்-சாவித்திரி . எமனை வென்ற பெண்ணின் கதையை நினைவு படுத்தித் தொடங்குகிறேன்.
கிராதையை கங்கை என்று சொல்வார்கள்.காட்டாளனாக சிவனைக் காட்டுகிறது கிராதம்.
கிராதம் என்ற சொல் பொருள்படுவது முகரப்பட்டது எனவும் உணர்கிறேன்.(சப்த கோஷம்)
இங்குள்ள கேள்விஎது, யாரால், எதற்காக,ஏன், எவ்வாறு, எதனால்?
முகரப்பட்டது காலமா, செல்வமா, மழையா,பேரின்பமா,அத்தனை உயிரினமுமா, அனைத்துமா?நேரடியாக ஆசிரியரை அணுகி பெறும் அறிவா அதனையும் கடந்து செல்லும் விழைவா,தனக்கென இல்லாது மெய்ம்மையைத் தேடி,அந்தக் குறிக்கோள் ஒன்றே எனத் தேரும் விசையா?
பார்த்திபன் தென் திசையை முதலில் வெல்ல வேண்டிய திசையென ஏன் நினைக்கிறான்?காலனின் திசை அது. ஞானக் கடவுள் நோக்கியிருக்கும் திசையும் அதுவே.மூன்றை விலக்கி மௌனகுரு சூடும் முத்திரை.மனிதர்கள் அஞ்சும் திசை;தக்ஷிணாமூர்த்திஎன்பதே தக்ஷிண அமூர்த்தி அதாவது செயலற்று, உருவற்று சொல்லாமல் சொல்லும் மொழி,அறிவது அறியாமலே அறிந்து கொள்ளும் வழி, முடிவிலியென செல்லும் அது இருள் பெற்ற ஒளி. கரிபிளந்தெழும் கபாலம்.
பகுதி ஒன்றில் தைத்ரிய மரபில் வைசம்பாயனன் தன்னை மண்ணிலிருந்து வானோக்கி கீறி எழுப்பும் ஒரு ஆசானைத் தேடிவருகிறான்.தன் காட்டில் நீரோடையில் அவன் பார்க்கும் சூரிய பிம்பம் அவனுக்கு யஜுர் வேதத்தைச் சொல்கிறது-அவன் அனாலால் தவத்தை, மொழியால் ப்ரும்மத்தை, ஒளியால் உருவை, இந்திரனால் தேவர்களை,காற்றால் உயிர்ப்பை,சூரியனால் ஒளியை, சந்திரனால் விண்மீண்களை, யமனால் மூதாதையரை,அரசனால் குடிகளை ஆள்கிறான்.அனலால் தவத்தை,மொழியால் ப்ரும்மத்தை ஆளுதல்-அனல் மொழி, மொழியனல் எனக் குறிக்கிறார் ஜெமோ.
காபாலியாகத் தோன்றும் பிச்சாண்டவரின் கண் காணும் தோற்றங்கள் அச்சத்தை உண்டுபண்ணுபவையே.அறிவால் நிறைவடையாத கபாலம் மேலே மேலே எனக் கேட்டுக் கொண்டேயிருக்கும். பல விசாரங்களால் கேள்வியை வெளியே கேட்டுக் கொண்டிருக்கும், அது உள்ளேதிரும்புகையில் கேள்விகள் விடைபெறும். மெய்ம்மை என்றும், இறுதி விடை என்றும்,மீட்பு என்றும் என்னுள் எழுந்த சொல் விலக்கி கண்டடைந்து பேருருக் கொண்ட பிச்சாண்டவர் அர்ச்சுனன் சந்திக்கப் போகும் கால தேவனை நமக்குக் காட்டுகிறார்.
அவன் ஏன் தென் திசையை முதிலில் செல்வதற்கு தேர்ந்தெடுக்கிறான்?அவன் மூத்தோரும்,நீத்தோரும் அவ்விடத்திலே தான் இருக்கிறார்கள் எனும் உள்ளுணர்வாலா?தந்தையென அவன் காணும் யுதிஷ்ட்ரனின் விண்தந்தை தர்ம தேவனாகிய காலன் என்பதாலா?இருள் என்பதே உயிர் தோற்றும் இடம் என்பதாலா? நீத்தார்,பிறந்தார் என்றசுழற்சியின் கரு என்பதாலா? தன் முன்னோர்களின் ஆசி கோரியா?இருளன்று, ஒளியன்று என்பதைச் சொல்ல முடியுமா?
முப்புரிவேலின் எலும்புமணிகளின் ஓசை அவர் குரலென ஒலித்து அவனை அழைத்துச்சென்றது.இதுவும் மௌன உரையாடலே.ஒலியென அழைக்கும் வேதம்.தான் என்னும் உணர்வு அற்றதாலேயே உள் நிறைக்கும் அதைச் சொல்ல வார்த்தைகள் வேண்டுமே?
சொல்லெடுக்கத் தொடங்கினால் விலங்கு உருகி பிறிதுருக்கொண்டு மானுடனாகிறது. மானுடன் அவனுக்குச் சொல்வதற்கு ஏதுமில்லை. அவன் கற்றவற்றுக்கும் தேர்ந்தவற்றுக்கும் அப்பால் சொல் என ஏதுமில்லை. அவன் அறியவேண்டியது சொற்களைத் திறக்கும் முறை. சொல்லின்மையில் இருந்து சொல்லெழும் வகை.

ஓம், ஓம், ஓம் என்பதே ஒலிக்கோர்வையாய் சிவம் என ஆயிற்று.மெய்வேதமென்று ஒன்றில்லை.வேதமெய்ம்மை ஒன்றே உள்ளது.இந்த வாக்கியம் புரிவது போல் தோன்றி புரியாததாகும்.புரியவில்லை எனும் போதே மலர் என மலரும்.அனைத்தும் சிவமே.பாழ் நிலமும், சோலையும்,தளிர்களும், சருகுகளும் சிவமேயாம்.அச்சத்தின் முகங்கள் மூன்று- சந்தேகம்,ஒதுக்குவது,அருவெறுப்பு-இவைகளைக் களைந்தால் தான் சிவமேயாம் என உணரமுடியும்.சிவ வழிபாட்டில்ஆறு பெருநெறிகள். பாசுபதம், காபாலிகம், காளாமுகம், வாமம், மாவிரதம், பைரவம்.
பிச்சாண்டவர் வைசம்பாயனுக்குச் சொல்லும் சத்ருஞ்சயன் வரலாறு ஒரு குறியீடெனத் தோன்றுகிறது.செவி வழி உள் நுழையும் அனைத்தும் மனம் வழி வாழ்கிறது. அதைக் களைகையில் ததும்பும் மௌனமே வேத மெய்ம்மை.
அரணிக்கட்டையின்றி சொல்லாலே அனல் எழுப்பும்108வது அத்ரியும் அவர் மனைவி அனுசுயாவும் 3-ம் பகுதியில் வருகிறார்கள் நறுமணம் தவிர வேறெதும் எழாக் காடு.வேத சபையில் பறக்கும் முதலையின் சிறகுகள் என ஒப்புமை சொல்லிவிட்டு அது தன் ஆணவம் என்று அறிந்தும் அதை மெய்பிக்கப் பார்க்கிறார்.பிரும்மனின் புதல்வன் தக்ஷப் ப்ரஜாபதிக்கும் ப்ரசூதிக்கும் பிறந்த பெண்ணான மேதா தென் திசைதெய்வம் காலதேவனை மணந்தவள். மெய்யின் விலாசமாகிய அவள் அத்ரியின் வேண்டுகோளை மறுதளித்தாலும்,வேள்வியில் அத்ரி தன்நெற்றியில் தர்ப்பை வைத்து சஹஸ்ரத்தில் எழும்முன், பிரும்மன் அத்ரியின் சொல் வேதம் காக்க மேதாவுடன் இணைகிறான்.பருப் பொருள் அனைத்தும் பேருருக் கொள்ள பறக்கும் சிறகுகளுடன் முதலையும் வருகிறது.அத்ரி பெருமைப்பட, அனுசூயை அறிவுறுத்த , பிரும்மன், மேதா தேவியின் ஃசுராசிக் பார்க்கை படைக்கிறார் ஜெமோ.பூமியின் எடை மீதுற யமன் கலைமகளிடம் முறையிடுகிறான். யமன் சொல்லும் ஒரு வாக்கியம் மிக மிக ஆழமானது- மொழி சென்று சொல்லெனச் சுட்டாத ஒன்றை அழிப்பது அவனால் இயலாதது- ஆனாலும் அவன் தர்மத்தைப் பேணியாகவேண்டும்.பிரும்மன் வாக்தேவியின் சொல்லைக் கேட்கவில்லை. கலைமகளும், காலனும், சிவத்தை அணுகுகிறார்கள்.படைப்பவன் மயக்கத்தில் சிவ சன்னிதானம் வர மறுக்கிறான். அனலாக எழும் சிவன் ஒரு கால பைரவ உருக் கொண்டு சென்றும் பிரும்மன் வர மறுக்கவே பைரவ சிவம் தன் விரலால் அவன் செய்த நியதியற்ற உலகை அழித்து தன் கட்டை விரல் மற்றும் சுட்டு விரல் நுனிகளால் அவன் சிரசைக் கொய்து சிவன் முன்னே எழுகிறார்.கலைமகள் தன் கலைகளால் படைப்பவனை மீளச் செய்கிறாள். கரிய நெடு உடலோடு துணை என ஒரு நாயும், நோயும், முதுமையுமான பார்ப்புகொலைப்பேயென ஒரு மூதாட்டியும் கால பைரவனுடன் இருக்க அவர் தன் கை கபாலத்தை உதறப் பார்க்கையில் சிவம் சிரிக்கிறது.கப்பரையில் இரந்து உண்டு வாழ், அது நிறைகையில் பிரும்ம கபாலம் கழன்று விழும்,நோய் அகன்று விடும்.காசியில் கங்கைக் கரையில் விண்ணவன் ஆலயத்தில் தன் கழுத்து நரம்பு துண்டிக்கப்பட அதன் குருதியை சுவைத்து கப்பரை நிறைய கால பைரவம் தன் விமோசனம் பெருகிறது.வேத நாவில் எழும் சொல் உண்மை என ஒரு தபஸ்வி,அந்த ஆணவத்தாலேயே நிலை பெறும் அஹங்காரம்,அவனின் குண்டலினி சஹஸ்ரத்தை தொடும் முன்பாக எழும் படைப்பு, அதற்குத் துணையென நெறி மீறிய ஊக்கம்,அந்தக் களியாடலில் விளையும் விபரீதங்கள்,பெயரற்ற பெரும் திரளை கவர முடியாக் காலன்,அவனின் கடமைக்கு துணை நின்று நல் படைப்பை மீட்டெடுக்கும் ஞானம்,அந்த வழியில் உள் நின்றே சினக்கும் சிவன்,அதன் கரிய வெளியாக பிரியாத நன்றி, மறத்தினுள் அறம் காட்டுவது போல் தன் உணர்வை, முடிவிலியை கொண்டு நிரைக்கும் கப்பரை,இந்த நிகழ்வின் உள்ளாடல் எனத் தெரிகிறது.நிறைவது நீயானால் நிரைப்பது எதுவாக இருந்தாலென்ன?
சௌகந்திக காட்டில் பிச்சாடனார் வருகிறார்.நீலகண்டனின் அழகிய தோற்றம் இல்லை.ஆடையற்ற,புழுதி படிந்த, கப்பரை ஏந்திய,நாயும் ,நோயென ஒரு முதியவளும், கங்காளமும், பிறை சூடிய குழலும்,முப்புரி வேலும் கொண்டவன் அத்ரி குருனிலை அமைவோரை முற்றிலும் மயக்குகிறான். நால் வேதங்களை பசுக்களெனக் காட்டும் அவன் காட்டுச் சுனையை காட்டிலிருந்து பிரிப்பதெப்படி என நகைக்கிறான்.கிராத சிவம் என அத்ரி கதறுகிறார். அனுசூயை மட்டுமே அறிந்த சிவம்.நிறைவோ, குறைவோ, அனலோ, புனலோ,அசுத்தமோ, சுத்தமோ எங்கும் நிறையும் பிரும்மத்தைக் காட்டுகிறது.ஓரு வடிவமைப்பில் வந்துவிடும் எதுவும் அதற்குண்டான சட்டங்களுக்குள்ளே இயங்கி,தன் உயிர்ப்பை உணராது இருப்பது போல் எனக்குப் படுகிறது.
தண்டகாரண்ய வனத்தில் பிச்சாண்டவர், வைசம்பாயனுக்கு கிராத சிவத்தைச் சொல்லி அறு நெறியினர்க்கும் அது முதன்மையானது என உணர்த்துகிறார். தன் குருவின் கட்டளை ஏற்று மாகேந்திர மலைக்குச் சென்றதைப் பற்றி ஜெமோவின் மொழியில் பார்ப்போம்
உடல்சரிந்த பின்னரும் உள்ளம் தான் கொண்ட விசை தீராது மேலும் செல்லும். அங்கே காத்திருப்பது எது?
அவன் எண்ணத்தை உணர்ந்ததுபோல அவர் உரக்க நகைத்து “எது எது என்று தேடிச்செல்பவன் இல்லை இல்லை என்று மறுத்துமறுத்துச் செல்கிறான். அவன் அறியும் பேரிருள் இப்புடவியை ஏழுமுறை மூடியிருக்கிறது. விழியறியும் இருள் சிறுதிரை. உணர்வறியும் இருள் பெருந்திரை. எண்ணம் அறியும் இருள் இயலாத்திரை. இருளுக்கு இருளாவது யோகம் அறியும் இருள்” என்றார்.
வைசம்பாயனன் விரும்புவதோ தொகுக்கும் காவியம். சொல்லேர் கொண்டு உழும் மெய் நிலம். அவன் தன் ஒழுக்க உண்ர்வுகளையும், அழகு உணர்ச்சியையும் அகற்றமுடியாதவன். அவனின் ஒரு சிந்தனை வியப்பானது.
“எல்லா சொல்லும் பிறசொல் குறித்ததே. எல்லா சொல்லும் பொருள் குறிப்பது அவ்வாறே. சொல் என்பது ஓர் ஓடை. சொற்றொடர்களின் ஓடை. நூல்களின் ஓடை. அறிதலின் ஓடை. ஒன்று பிறிதை ஆக்கி ஒன்று பிறிதில் ஊறி ஒன்றென்று ஓடும் பெருக்கு. இங்குள்ளவை ஒவ்வொன்றும் தனித்தவை.”
அவன் எண்திசைகள் யானையெனச் சூழமதி மயங்குகிறான்.
கிராத சிவம் விட்டுச் சென்ற துர் மணம் சௌகந்திகத்தின் தூய்ம்மையில் ஒரு உளம் சார்ந்த கேள்வி எழுப்புகிறது.வேர் தின்னும் விலங்கிற்கும் மேலே மலர்த்தேன் உண்ணும் வண்ணத்துப் பூச்சிக்குமான வேறுபாட்டை அது தக்க வைக்கப் பார்க்கிறது.அழகு, தூய்ம்மை, மேன்மை என உந்துகிறது. அதர்வ வேதத்தின் மகாகாளர் அங்கே வருகிறார்.கூன் விழ்ந்த உடலும், உடைந்த கரிய பற்களும், மனிதர்க்கு அணி செய்யாத பழக்கவழக்கங்களும் கொண்டு இரு சீடருடன் வரும் அவர், சௌகந்திக வன முனிவர்க்காக கரி இரு நாளில் ஒரு வேள்வி செய்கிறார். மூன்று வேதங்களும் முற்றொதுக்கியவற்றால் ஆன நான்காம் வேதம். எந்த ஒலியெய்யும் தான் ஏற்று நடிக்கத்தெரிந்த தழல், அலையாடி, நிழல் காட்டி அவிசை எடுக்க, மஹாகாளர்”இருளெழுக” அழைக்கிறார்.
கரிய பேரிருளாக எட்டு யானைகள். இருட்குவையெனத் தோன்றி இருளாய் இணந்து வேள்வியைச் சுற்ற, மகா காளர் காட்டில் வீசி எறிந்த கங்காள ஒலிஅவற்றை காட்டின் உள்ளே செலுத்துகிறது.கங்காளம் மீட்டிச் சென்ற கிராதனைக் கண்டதும் அவை ஒன்றெனத் திரண்டு பேருடல் கொண்டு அவனை மறிக்கின்றன.

கஜ சர்மம் உள்ளிட்ட அந்தக் கரியாடல் நடந்த 12 இடங்களைப் பற்றி சொல்லும் அவர்தன் இளமைப் பருவத்தில் தான் காலர்களால் சிறை வைக்கப்பட்டு பின் அவர்களின் தலைவன் வந்து இவரை உணர்ந்ததைச் சொல்கிறார்.ஒரு மலைக்குடி தலைவனெனத் திகழும் பூசகர் இவருக்குச் சொல்கின்ற வார்த்தைகள் குருமுக உபதேசம்.
“ஏழுலகைப் பெய்தாலும் நிறையாதது மண்டை. முடிவுள்ளதொன்றாலும் நிறையாத கலம். முடிவிலி நிறைக்கட்டும் அதை. முடிவிலா கடுவெளி நிறைக்கட்டும் அக்கலத்தை. பெரும்பாழே அதை நிறைக்கட்டும்”
இந்த அறியமுடிடாத ஒன்றை புரிய வைக்கும் முகமாக பனி படர்ந்த மலையில் காணும் குகை ஓவியங்களும்,அவை காட்டும் இருள் தோற்றங்களும், நெருப்பென நின்ற சிவமும், யானைகளின் மத்தகங்கள் கிழிபடுவதும்,அவற்றை வெற்றி கொள்ளும் பேராற்றலும் இருள் கொண்டுவந்த ஓளியோ?
மரத்தில் மறைந்த மாமதயானை சொல்வதுதான் என்ன? உலகின் உருவாக்கம், மாயத் தோற்றம், இரண்டாகத் தெரிந்த ஒன்று, ஏகமென உணர்வது.சஹஸ்ராதாளத்தில் விரிந்தெழும் ஏகம்.
“இரு நிலவுகள் எழும் யோகப்பெருநிலை” என்று பிச்சாண்டவர் சொன்னார். “அதைப் பிளந்தெழவேண்டுமென்பதே இலக்கு. கரியுரித்தெழும் கனலால் விடியும் காலை அது. நீளிருள் நீங்கும் தருணம்.”
எண்கரியைக் கண்ட வைசம்பாயனன் காணத் தவறியதுஇரு தந்தங்களும், இரு நிலவும். ஆனால், பிச்சாண்டவர் முழுமையைக் காணத் தவறியவனாகவே அவனை பார்க்கிறார்; விட்டுச் செல்கிறார்.
சூரிய நிலவு, சந்திர நிலவு?
பைரவம், பிச்சாண்டவர், காபாலிகர், மஹாகாளர் என சிவம் எழுந்து தென் திசைப் பயணத்தின் மறுஆடியெனத் தொடர்கிறது.

பைலனும், சண்டனும் எள்ளலும், நகைப்புமாக உண்மையை நாடும், உண்மையைச் சொல்லும் இரு கதாபாத்திரங்கள். ஒன்பது வயதில் பைலன் தன் ஆசானிடம் கேட்கும் கேள்வி-‘வேதங்கள் விழைவை அறிய உதவுகின்றதா?’ அவனே மேலும் சொல்கிறான்’விழைவின் ஊற்றை அறியாமல் விழைவை வெல்ல இயலாதென்று” ஆசான் உட்படவில்லை- அவன், நிறையும் விழைவு எனஏதுமில்லை எனவும் கடவுளின் உன்னதத்தை குறைத்து விட்டோம் என்றும் குருனிலை விட்டு நீங்கி பயணத் துணையாய்க் கிடைத்த சண்டனின் எள்ளல் கலந்தஉண்மையில் திளைக்கிறான்.பார்த்தனின் அறிந்து அளித்துச் செல்லும் விசையின் முன்னோட்டம் என இதை எடுத்துக் கொள்ளலாம். சண்டன் கண்ணனையும், பார்த்தனையும் தன் பேச்சுப் போக்கில் இழுத்து இருவரையும் எதிரெதிர் பொருத்திப் பார்க்கிறான்.

பாற்கடலைக் கடைகையில் சுழன்று சுழன்று ஒன்று பிறிதெனக் காட்டும் ப்ரக்ன்னா தேவி மேலுழுகிறாள்.தென் திசை கொள்பவள் சிவனின் புதல்வியென அழகற்ற தோற்றமும், சுடும் உண்மையுமாக இருக்கிறாள். வடதிசை கொள்பவள் விண்ணளந்தோனின் துணைவி என பொருளும், அழகும் கொண்டு அமைகிறாள்.நாணயத்தின் இருபக்கங்களும் ஒன்றின் மதிப்பையே சுட்டுகின்றன.

துயரம் ,இழிவு, வறுமை போன்றவையும் ஆசானே. அவைகாட்டும் மெய்ம்மையும் வேதமென கண்ணனிடம் சொல்கிறாள் மூத்தவள். 71/2 காலம் அவருள் வசிக்க விரும்புகிறாள்.உளத்திரிபு கொண்ட கண்ணனை இங்கு பார்க்கிறோம்.கொழுவிய கன்னங்கள், பீதாம்பரம், மணிமாலைகள், குழல், மயில்பீலி ,புன்னகை என சொக்க வைக்கும் கண்ணனை,தளர்வாய், மகிழற்றவனாய், அரசனாகத் திகழாதவனாய் இங்கே பார்க்கிறோம்.நம்முடைய பிறழ்வுகள் பரவாயில்லை போலிருக்கிறதே!

முன்னூறு அண்டுகளுக்கு முன் விருஷ்ணி கலத்தில் பிறந்த மதனர் எனும் யாதவர் சிறு பகையால் தன் ஊரை விட்டு 7 பசுக்கள், மூன்று காளைகள், மனைவி மக்களுடன்சப்தபலத்தில் அத்தி கனியின் குறிப்பு கொண்டு குடில் அமைத்து, பசுக்கள் புரந்து செல்வத்தில் மேம்பட்டார். அத் திருமகளும் ஒரு நாள் நீங்கும் வேளை வந்தது. அழிவின் ஆட்சி ,
கசியபப் ப்ரஜாபதிக்கு பிறந்த முதல் 108 கந்தர்வர்களில் சித்ரசேனன் தன் மனைவி சந்த்யையுடன் மகிழ்வோடிருந்தான், அவள் இரவில் இளமையின் அமுதம் புலர்
துவங்கையில் மூதாட்டி- வலிகையான சந்த்யை. அவளை வலிகையாக அறி ந்து கொள்ளும் போது நளினமும், மென்மையும் மறைய விலங்குகளின் களி கொண்ட அவர்கள்,வெற்றிலை எச்சிலை உமிழ அது கௌசிக வம்சத்தவரான காலவர், ஆதவனுக்கு நீர்கொடை அளிக்கையில் அவரது கை களிலே வந்து விழுகிறது.சினம் கொண்ட அவர் 41 நாட்களுக்குள் அந்த கந்தர்வனை அழித்து அவன் சாம்பலை நீறென பூச சபதம் செய்கிறார்.அனல் தெய்வம் சொல்லும் விளக்கங்கள் அவருக்கு ஏற்புடையவனல்ல.அந்தக் காட்டையும், சுனைகளையும், பசுமையையும் தன் இன்னிசையால் படைத்த சித்ர சேனன் அறியாமல் செய்த பிழைக்கு ஈடாக அவன் உயிர் கேட்கும் காலவர் முன்னர் தன் மூத்தோராகிய விஸ்வமித்ரரின் அவை அவமதிப்புக்களை அகற்றும் ஒரு வழியென இதை நினைத்து அதிலேயே குறியாக இருக்கிறார்.யாதவ அரசன் இந்த கந்தர்வனை மாய்க்கும் திறன் பெற்றவன் என்று அவரை அணுகச் செல்கிறார். நம் கதைகளில் வெற்றிலைச் சாறு, எச்சில் முதலியனவும் பெரும் மாற்றத்திற்கு வித்திடுகின்றன.

கராள சிவத்தை பூசனை செய்து கொண்டு தளர் உடலும், எலும்பு துருத்தும் தோலும்(கண்ணனா இது?) சஞ்சலித்த மனதும், நிலை குத்தும் பார்வையுமாக அவனைக் கண்ட காலவர் “உன்னை விராட பெருந்தோற்றம் என்றே காண்கிறேன்”
என்கிறார்.கண்ணனென பிச்சாண்டவர் தோற்றமும் உண்டு. சிவமென கண்ணன் தன்னை காண்பிப்பதும் உண்டு. ஏகம்! அனேகம்! அனேகம் ஏகம்

குருதி என்பது உறவல்ல என இளைய யாதவனே உணர்ந்து கொண்டிருக்கும் தருணம்அவரை செயல் படச் செய்ய இது ஒரு தருணம் என்கிறார் காலவர்.செயலும் விளைவும் மறு செயலெமென பின்னிச் செல்லும் இவ் பெரு வலையில் ஒரு கண்ணியை உணர அனைத்தும் உணர்தாக வேண்டும். கண்ணன் தானாக வாக்களிக்க வில்லை;பின் நின்று ஒலிக்கும் குரலில் அது வெளிப்படுகிறது.
பார்த்தனும் தன் எதிர் நிற்கப் போவது யாரென அறியாமல் சித்ரசேனன் மனைவிக்கு வாக்களிக்கிறான். அவள் மங்களங்கள் அவனை நம்பச் செய்வதாக ஜெமோ சொல்கிறார். வாக்கினால் அமையப்பெற்ற காவியம் இது.அதில் சிக்காமல் இருந்த ஒருவர் க்ருஷ்ணனே. அவரும் சிந்தை அற்று சொல்லிடுகிறார்.இந்த சிக்கலுக்காகத்தான் அவர்கள் வாக்களித்தாலும், நாம் அதை நம்பி வாக்களித்தாலும் மறந்துவிடுகிறார்கள் நம்மை ஆள்வோர்.(!)

அனைத்து மானுடர் வழியாகவும் அறியாத்தெய்வங்கள் கடந்து செல்கின்றன, விண்பறப்பவரும்,இருளூர்பவர்களும்.அவர்களின் கைபாவையென ஆடலே நமக்கு இங்கே விதிக்கப் பட்டிருக்கிறது.காக உருவெடுத்து சப்தஃபல சிற்றூர் கோட்டையைக் கடந்து கண்ணனைக் கண்டு அவன் பேசும் இழி சொல் கேட்டு அர்ஜுனன் தவிக்கிறான்.(காகம் சனியின் வாகனம்)தாங்கள் இருவரும் ஒருவரின் பாதி என இருக்கையில் உள்ளே ஊறிய அன்புடன் பகை வளர்ந்த அந்த விந்தையை அவன் நினைவு கொள்கிறான்.கண்ணன் சொல்லும் ஒரு வார்த்தை கவனிக்கத்தக்கது- ‘உன்னை வென்றால் இனி எனக்கொரு கட்டுமில்லை’. இதற்காகத் தான்- இந்த அன்பு, பாசம், நட்பு- இவற்றிகாகத்தான் வாழ்னாள் முழுதும் ஏங்குகிறோம். அதை தள்ளிவிட ஒரு ஆவல் எழுவதேன்?

ஹரி என்றால் அபகரிப்பவன் என்று பொருள் உண்டு. சஹாதேவன் யஷவனம் திருபிய அர்ச்சுனனிடம் ‘அபஹாரம் என்ர சொல்லை பயன்படுத்துகிறான். இனித்து இனித்து அறிந்ததை கசந்து கசந்து அறியச் சொல்கிறான்.அந்த தருணத்தில் உண்மை தன் பாசாங்குகளற்று எழும்.தன்னுள் இருந்த கசடுகள் தன்னையே வியக்க வைத்து அதை அகற்றி உன்னதத்தை எழுப்பும்.’கர்மஜாலா’ என குருதி பந்தங்களை சொல்கிறான் சஹா.செயல்வலையில் சிக்கிய மானுடர்க்கு செயலுறவே மெய். அப்படிப் பிணைக்கப்பட்ட க்ருஷ்ணனும், பார்த்தனும் இந்த நிலையில் எதிரெதிர் பொருதித்தான் ஆகவேண்டும்.

அஷ்வ பாத சுனையில் தன் துணைவி சந்த்யையுடன் புகுந்த சித்ர சேனன் பார்த்தனை பார்த்து படையாழி கொண்டு தன்னை வதைக்க வரும் இளையயாதவர் பற்றி சொல்கிறான். உன் துணைவன் அவரல்லவா எனக் கேட்கிறான். நான் தனியன் என அர்ச்சுனன் சொல்கையில் நாம் நம் வாழ்வில் பல சமயங்களில் உணர்ந்த தனிமை வெளிப்படுகிறது.
போருக்கு வரும் இளைய யாதவரின் தோற்றம் மீண்டும் சிவத்தையே ஒத்திருக்கிறது.களம் வந்த பின் உறவும், நட்பும் பாரட்டப்படக் கூடாது என அறிந்த வில்வீரானாக காண்டீபன் தன்னை சொல்கிறான். கேட்காத செயியுடன் யாதவர் வருகிறார்.ஒருவரை ஒருவர் முற்றறின்திருந்தனர் இருவரும், ஒன்றேயான பெருஞ்சினம். ஒன்று என்றே ஆன தன்னிலை. தன்னுடன் தான் நடத்தும் போர்.இவர் கை படையாழி அவனிடமும் அவன் கை வில் இவரிடமும் இருவரும் உளம் மாறிப் புகுந்தனர்.

இவ்விடத்திலேயே அர்ச்சுனன் யாதவனின் விஸ்வரூபம் காண்கிறான்.” சிறுதுளி. இன்மையை விட சற்றே பெரிது. ஆனால் கணம்கணமென அது பேருருக்கொண்டது. ஆயிரம் பல்லாயிரம் கைகள் முளைக்க, ஒன்றன்மேல் ஒன்றென விழிகள் வெறிக்க, முகம் மீதேறிய முகங்கள். நகைக்கும் ஒரு வாயும், சினந்து பிளந்ததொரு வாயும், அறைகூவுமொரு வாயும், வசைபாடி வெறுக்குமொரு வாயுமென திசை சூழ்ந்தது. அவனறியாத பேருருவத்தைக் கண்டு அஞ்சியும் அதிர்ந்தும் அவன் எய்த அம்புகள் இலக்கழிந்தன.
கம்சனுக்கென, சிசுபாலனுக்கென அர்ச்சுன்ன் சொல்லும் இடங்கள்-வீழ்வதின் வலியை தெய்வத்திற்கும் உணர்த்தும் மானுடம். மானுடம் வென்றதம்மா!க்ருஷ்ணனின் நிழலில் க்ரிஷ்ணயைக் கண்ட பார்த்தன் , தன் தோழன் கொண்ட வெறியாடலில் ஈடுகொண்ட யாதவன், சம நிலையில் நடந்த சமப் போர்.தெய்வம் என்பதால் மட்டுமே யாதவன் அடிபடாமலில்லை; காண்டீபமென்பதால் மட்டுமே பார்த்தனும் வெல்லவில்லை. இதுவே யதார்த்தம்.

உடல் தேறி பார்த்தன் தன் உளம் நாடும் விழைவால் செலுத்தப்படுகிறான்,தன்னை நிரைத்துக் கொள்ளவே வில் தேடிச் செல்வதாக புறப்படுகிறான்.( புறப்பாடு ஜெமோவின் உள விழைவும் தான்).”நாம் பார்க்காது ஒளிந்திருக்கும் காட்சிகளிலானது இப்புவி நிற்கும் பீடம். நாம் கேட்காத ஒலிகளால் நிறைந்திருக்கும் வெளி.அவற்றைத் தேடிச் செல்பவன் முற்றிருளைத் தான் காண்பான்.முழுமையின் ஒரு சிறு துளி தேடிச் செல்லும் அர்ச்சுனனை கரி பிரித்தெழுந்து ஒளியென வர யுதிஷ்டிரர் ஆசிகள் அளிக்கிறார்.

பைலனும் ,சண்டனும் காடு பாதையில் அருகர்களின் அன்னசாலைக்கு ஏகுகிறார்கள். காடு விரும்பும் உப்பு என உயிரற்ற எதையும் சொல்கிறான் சண்டன். பழையவற்றின் மேல் வளரும் புதியது.தொல் வேதத்தின் மேல் மலரும் புது வேதம். சித்தம் இலக்கை தேர்ந்துவிட்டால் அதை செயல் சென்று அடைவது எளிதே. தடையெனப் படுவது நம் சந்தேகங்களும்,நம்மைப் பற்றிய நம் அவதானிப்புகளுமே!விஷாதை நம்முடன் வினை செய்கிறாள். நாம் உறுதியில் நின்றோம் என்றால் அவள் வாழ்த்துகிறாள்.ஆனால், அடைந்துவிட்டோம் என்கையில் சுபாஷினி நம்மிடம் வருகிறாள்.

ஜைமினி ஒருவர்- சத்வன் எனப்படுபவர் நெறிகளின் தேவையை எடுத்துச் சொல்கிறார். தன் வழக்கம் விடுபடும் போது நெறி சிறிது சிறிதாக மீறப்படும் என்கிறார்.
“ஜைமின்யரே, ஒலியமைவையும் பொருளமைவையும் கடக்கும்போதே சொல் அனல்கொள்கிறது. கனவு சுமக்கையில் கவிதையாகிறது. மெய்மையெனக் கனிந்து வேதமாகிறது” என்றான் பைலன். “பெருவழிச்செல்லும் சொற்களால் அரசமுறைமையையும் உலகியல் வழமைகளையும் மட்டுமே கையாளமுடியும். எழுந்துபறக்கும் உயிர்களுக்குரியது வானம்”பழகிய பாதை, புதிய பாதை இவையே பேசு பொருள்.கண் காட்டும் வடிவம் தாண்டி சித்தம் நோக்கும் வடிவை அறியச் சொல்கிறது இவ்வுரையாடல்.

அர்ஜுனேந்திரம் எனும் காவியத்தைப் பற்றி, பார்த்தன் மெய்ம்மை தேடி சென்று வென்றதைப் பற்றி சூதன் பாடத் தொடங்குகிறான்.
“எரியுமிழும் கந்தமாதன மலைக்கு அப்பாலிருந்தன ஏழு மலைகள். குளிர்ந்துறைந்த சுஃப்ரமுகி, முகில்கள் அமையும் ஜ்வாலாசிரஸ், வானில் மறைந்திருக்கும் சூசிசிருங்கம், கந்தர்வர்கள் வந்திறங்கும் கனகசீர்ஷம், அதற்குமேல் எழுந்த பூர்வசிரஸ், அதற்கும் அப்பால் புகைவடிவெனத் தெரியும் நீலாக்ரம். அதற்குமப்பால் இருந்தது எப்போதும் ஏழுவண்ன மழைவில் சூடியமைந்திருக்கும் இந்திரகீலம். ஆறு மலைகளையும் ஏறிக்கடந்து ஏழாம் மலையை அடைபவன் மண்ணுடலுடன் விண்ணொளியை அடைந்தவனாவான் என்கின்றன நூல்கள்.”
வீரன் தன்னை அறிந்து தன்னைக் கடப்பவன் என்கிறான் சூதன்.
நான் தனியாக இருந்தாலும் என்னுடன் தானே இருக்கிறேன் என்று எழுதிய லா.ச.ராவை நினைவு படுத்துகிறது இது. இந்திர கீல மலை உச்சியில் தவத்தில் ஆழும் பார்த்தன் தன் உறவையும், நட்பையும் இத்தனை தொலைவிற்கும் அப்பால் தன்னுள் கொண்டு வரும் விந்தையை வியக்கிறான்.அனைத்தையும் உதிர்த்து விலக்கி முழு வெறுமையில் பனித்துளி ஒலியுடன் அமர்ந்திருந்தான்.
108 நாட்களுக்குப் பிறகு பிரபா ஹாசன் எனும் கந்தர்வனை பார்க்கிறான்.தேவர்க்கரசை படைக்கலம் பொருட்டு சந்திக்க விழைவதைச் சொல்கிறான். சொல்லை விட சிறந்த வில்லில்லை என்கிறான் கந்தர்வன்,”தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு”
காலப் பயணத்தில் பிரபா ஹாசன் சிறு பையனாக அவனைக் காட்டுகிறான்; வாலிபனாக காட்டில் இளைய யாதவருடன் நடக்கையில் இவன் வில்லின் நுண்மை தேட அவர் சொல்லின் நுண்மை தேடுகிறார்.
மெய் வேதமென கீதை எழும் இடம் இது.வேதம், உபவேதம், பிரசேதசின் தொகுப்பு, சூரியனின் காரண்யோபவேதம், நாரதரின் ஸ்வரானுவாதம்,, சனக, சனாதரரின் ஆயுர் வேதம்,குணாதரின் காம நூல்,என எழும் சிந்தை தொடர்“அறியமுடியாமையைக் கறந்து அறிபடும் ஒன்றை எடுப்பது எப்படி? பார்த்தா, வேதம் விளங்க இன்று எழுந்தாக வேண்டிய நூல் ஒன்று உண்டு. அது முற்றிலும் தெளிவானது. சொல்லெண்ணிப் பயிலவும் உகந்தது. கடலில் திசைமானி போலவும் பாலையில் நீர் போலவும் கொண்டுசெல்ல ஏற்றது.”
முற்றிலும் செயலைப் பற்றி அதைச் செய்யும்வழிகாட்டியாக இந்த சிந்தனை அமைவதாகத் தோன்றுகிறது.
“ஒரு சொல்லில் வந்தமைக முடிவிலி! ஒவ்வொரு சொல்லிலும் முடிவிலி வந்தமைக! முடிவிலியெனத் திறக்கும் சொற்களால் ஆன ஒரு வேதம். கையளவே ஆன கடல்…”
“அது எழுதப்பட்டுவிட்டது, மொழிவழிப்படவில்லை”
பார்த்தனின் பாதையை அவனே தேர்ந்தெடுக்கச் சொல்கிறார் யாதவர்

கால யந்திரத்தில் பார்த்தன் பயணம் செல்கிறான். எங்கெங்கோ என்றன்றோ நிகழ்ந்தவை ஒரு சரடில் இணைந்து உயிர் கொள்கின்றன. அங்கே அவன் அருக முனி நேமினாதரை சந்திக்கிறான்.இருள் குகையுள் அவன் ஊழ்கத்தில் வெண்ணிற ஒளியென அவர் வருகிறார். காலம் மாற்றா தோற்றம். ரைவத மலையில் பார்த்த அதே வடிவம்
அவனை அவர் இருமையற்ற அந்த நிலையில் நிறுத்திக் கொள்ளச் சொல்கிறார். வெல்லுவற்கரியனவற்றை பேராற்றலால், பேர் விழைவால், பேர் ஊக்கத்தால் அவன் அடைந்ததை அவர் நிலை நிறுத்தச் சொல்கிறார்.புவியில் நிலைக்கும் அத்வைதகம் என்று அவனை இங்கே ஒருமையில் நிலைக்கச் சொல்கிறார். விதுரர் வந்து அழைத்த போது திரும்பாத அவன் உள்ளம் தன் மனம் விரும்பும் பூவுலகை தெரிவு செய்கிறது.பிரபாஹாசன் அவனுக்கு நுண் தனுர் மந்திரங்களை அளித்து எத்திசையும் அவன் வெல்ல வரம் தந்து நாரை வடிவில் அவனை கீழே அழைத்துச் செல்கிறான். அர்சுனன் விழைவது அந்த இளைய யாதவனை வென்று நிற்கும் பேறு. சமமெனக் கொள்ளும் விழைவு.
பெற்றவற்றை தக்க வைப்பது மனித இயல்பு.கல்வியில், செல்வத்தில் ஆற்றலில் முடிந்தவரை நினைவு தொடுத்து மனிதன் தன்னை நிலை நிறுத்தப் பார்ப்பான்.அவன் அஞ்சுவது அதை இழப்போமோ என்றே!தன்னிலை தாழாமையும் தாழ்ந்தக்கால் வாழாமையும் மானம் எனப்படும்.ஆனால், பார்த்தன் அதையும் மீறுகிறான்.
பூமியில் அவன் திளைப்பது வாழும் மானிடர் கொள்ளும் களியாட்டம்; மானிடரின் பேரின்பம் வாழ்வு தான் என்கிறான். மெய்மையும் யதார்த்தமும் இணையும் பெரும் புள்ளி இது.ஹிமவாகத்தில் தன்னை ஒரு காலபைரவனெனச் சொல்கிறான்.
ஜடரை பசி என உடல் ஓம்புதல் என வருகிறாள். காமினி வாலிபமென உணர்த்துகிறாள்.வாக்தேவி அழிவின்மையை மனிதன் நாடுவது ஏன் என்றும் அதன் பதில் வேதச் சொல்லில் உறைகிறதா என்றும் அவனுக்குள்ளே வினா எழுப்புகிறாள். மனிதர்கள் கொள்ளும் அறிவு அவர்கள் ஜீரணிக்கத்தக்க அளவிலேயெ வழங்கப்படும் என்பது அழகான நுண்மை.ஏழழகு என்றான வெற்றித் திருமகள் ஐஸ்வர்யம் என வருகிறாள். அவனிடம் சொல்கிறாள்- கனிந்த பின் காத்திருப்பது பெரும் சுமை.
அன்று நள்ளிரவில் அவன் கிராதையை சந்திக்கிறான்.அவள் நாம் தவிர்ப்பவற்றால் ஆனவள். மனிதரை மனிதர் சிறுமை செய்யும் இடத்தில் இருப்பவள். அதை வெற்றி என்றும் தீது என்றும் கூசும் மானிடரிடம் அணைபவள்.அதுவே வென்றெடுக்கும் வழியென அவனைக் கரம் பற்றி அழைக்கிறாள்.
வளர்சிதை மாற்றம் இயல்பே. இயற்கை காட்டும் இன்பங்கள் நீ கொள்வதற்கே. அதுவே இறுதியென செயல் இழக்கையில் நீ உன்னை உணர முடியாது.
தூமக்கிரஹம் என்ற சிற்றூரைச் சேர்ந்த போது அவனில் அரசனின் குருதி பெருகியது. தன் தேவைகளை பணியிட்டுப் பெறுகிறான்.சிம்மத்தின் குரலை மான்கள் அறியும்!அவன் தன்னை காண்டிபத்துடன் அர்ச்சுனன் என அறிவோரை மறுதளிக்கவில்லை. அவன் தோற்றம் பெண்களை ஏங்கச் செய்கிறது. உணவிற்குப்பின் இளம் தாய்கள் அவனிடத்தில் குழைந்தைகளுக்கு ஆசி பெறுகிறார்கள். இளைஞர் படைகலம் தொட்டுப் பெறுகிறார்கள்.அவன் அவர்களுக்குத் தான் என்றென்றும் காப்பு என்று விடை பெறுகையில் இளம் பெண் அவனை தெந்திசை ஏகச் சொல்கிறாள்.மூதாதயரை வெல்லாவதவர்க்கு புதிய பாதைகள் இல்லை என்கிறாள். தொல் வேதத்தின் அடி ஆழத்திலிருந்து முளைக்கும் புது வேதம்.
வஜ்ரகண்டன் எனும் வேதியர் மூலம் ஒரு வினா மீண்டும் எழுப்பப்படுகிறது.என்னிலையிலும் தன் கர்மாவை விட்டு விடக் கூடுமா அல்லது மானுட அறமே மேலானதா? இறக்கும் கன்றிற்குவஜ்ரகண்டனால் மறுக்கப்பட்ட பால் அவர் மைந்தன் ஜாத வேதனின் 9 பிள்ளைகளைக் காவு கொள்கிறது.அன்பில்லாத செயல் தெய்வங்களுக்கு உகந்தது அல்ல என்கிறார் யமன்.அனைத்து தேவ கணங்களும் அவ்வாறே சொல்ல, சோகத்தால் இறக்கிறார் வஜ்ரகண்டன்.பயந்து தனித்து வாழும் ஜாதவேதன் குலம் ஓங்க திருமணம் செய்ய நேர்கிறது.தங்கள் குல சாபத்தை அவன் மனையாளிடம் சொல்லவில்லை. பிள்ளைகள் 8 பிறந்து இறக்கின்றன. உயிரைத் தாங்கும் உரிமை தாயிடமே உள்ளது, அதை தீச்சொல்லிட தெய்வங்களுக்கு உரிமை இல்லை என்கிறாள் அவன் மனைவி.
பரத்வாஜர் ஆசியில் நன் மைந்தர் பெற்று நலமுடன் வாழ அளிக்கப்படும் ஆசியும் பெய்த்துப் போகிறது. அவர் சொல்கிறார்- வேத நாவில் பொய் எழுவதில்லை. 41 நாட்கள் அவன் உடலை நான் பேணுகிறேன், வீரன் ஒருவனைக் கண்டடைந்து குழவியின் உயிர் மிட்டுக் கொள்’ என்று. சப்தப்பலத்தில் சென்று இளைய யாதவரை ஜாத வேதன் வேண்ட அவர் அவனைக் கீழ்மை செய்கிறார். இந்த இழிவினை அவர் சொல்லெடுக்காமலேயே செய்திருக்கலாம். ஒரு எளியவனை ஒன்றும் அற்றவனை, தந்தையினால் மகவு அழிந்தவனை, அச்சமுற்றவனை, அச்சுதன் இப்படிப் பேசினால் …..?. மனம் நடுங்கிவிட்டது. ஊர்நீங்கும் அவனுக்கு இளைய பாண்டவர் உதவுவார் என்று ஒரு மூதாட்டி சொல்லக் கேட்டு ஜாத வேதன்அர்ச்சுனனைக் வேண்டிக்கொள்ள அவனும் அதை ஏற்றுக் கொள்கிறான் தெய்வத்தால் ஆகாதெனினினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் அல்லவா? மீண்டும் ஒரு பாதிக்கும் மறு பாதிக்கும் இடையே எழும் பிளவு!
இருளெதிர்வரைக் கண்டு அவரை அஞ்சாமல் வென்று அர்ச்சுன்ன் காலனை கண்டடையும் வழி பெறுகிறான். “சினம்கொண்ட விழிகளுடன் என்னை நோக்கி எழுந்தது காலப்பெருந்தோற்றம். கைப்பெருக்கு கால்பெருக்கு விழிப்பெருக்கு இருளலைப்பெரும்பெருக்கு. நான் அதன் முன் விழியிமைக்காமல் நின்றேன். அச்சமின்மை கண்டு கனிந்தது இறப்பு. என் அருகே வந்து நான் விழைவதைக் கேட்டது.”’
ஃப்யை, யமி என்போர் பற்றி அறிகிறான்.சூரியனின் ஒளி -அவள் சம்க்னாவில் பிறந்த மூவர் மனு,யமன், யமி . நிழலோ சாயை அவர்கள் பெற்றது அறுவர். ஃப்யை, அஸ்வினி தேவர்கள். ஃப்யை அச்சத்தின் தோழி. யமி யமுனை எனப் பூவுலகில் அறியப்படுகிறாள். ஆழமும், சுழலும் விந்தைகளும் நிறைந்த உயிர் அமுதம் நதி அதுவே கரை மீறக்கூடும்.
ஃப்யைக்கு என்று வடிவம் இல்லை. நம் உள்ளத்தின் அச்சங்கள் கொள்ளும் வடிவங்கள் அவளது.
யமுனையில் சுழலில் ஆழத்தில் கருமையில் சுழல் ஓரம் தன்னைப் பொருத்தி அதன் மையம் தேர்ந்து இன்னும் இன்னுமென அவன் சென்றான். காலமும் தொலைவும் அற்ற சித்தம் மட்டும் எஞ்சிய முடிவிலியில் அவன் சென்று கொண்டிருந்தான். இருளுக்குள் வெளிக்காலம் இருக்கவில்லை. எனவே தொலைவும் இருக்கவில்லை. சித்தமிருந்தது-அகக்காலம் முடிவிலியெனச் சென்று கொண்டிருந்தது.t (ரிலடிவிடி மற்றும் இன்ஃபினிடி).துர் மணமும், பெண் சிரிப்பும் அவனைச் சூழ அவன் தன் இடச் செவியில் வருக என ஒலி கேட்டான்.மோஹினியும், மாலினியும் என அவன் சொன்னவள் யமியின் தோழியாகிய ஃப்யை என்று அவனை வரச் சொன்னாள். அதிர்வுகளால் இழுபட்டு அவன் மின் ஒளி கொண்டு மின்னிய தேரில் யமி அவனை அழைத்துச் சென்றாள். மண்டை ஓடுகளால் ஆன தரை, முகங்களால் ஆன கோட்டை வாயிலில்காகக் கொடி பறந்து அழைத்தது; கதவுகள் இல்லை. சண்டாமிருகன்,சார்த்தூலன்,ஒளதும்பரன்,சம்பரன் ஆகிய நான்கு காவலர்கள். 1000 கோடி யம கிங்கர்ர்களின் வசிப்பிடம் அது.
“இழப்புகளை நினைவுகளாக சமைப்பவர்கள். நினைவுகள் கனிந்து இனிக்கச் செய்பவர்கள். இவர்கள் இல்லையேல் உயிர்கள் வாழமுடியாதென்று அறிக!” என்றாள் யமி
“சொல்லற்றவர்கள், ஆனால்பூவுலகோரின் சொல் அனைத்தும் இவர்களே. ஒன்றேயான விசை கொண்டவர்கள். வருக வருக என அழிப்பவர்கள்.பிரிவும், துயரும் அது மறக்கும் மறதியும் இறப்பவற்றிலிருந்து பிறப்பனவற்றிர்கும் வாழ்பவனவற்றிகும் பெற்றுத் த்ருபவரும் இவரே{“.
சித்ரபுத்தரின் நூறடுக்கு மாளிகையில் அவன் காணும் உருவங்கள் உயிருள்ளவை. எரியூட்டப் பட்டோ புதைக்கப்பட்டோ அங்கு வந்து வெம்மை மாறாத உடல்கள் மருந்தின் வெம்மை தணிய மாறிவிடும் . மனு, எதிர்மனு ஆகியோரை அவன் சந்திக்கிறான்.எதிர் மனு சமைத்த உடல்களோ அவை?
முதல் உயிர் எவ்வாறு தோன்றியது? அது பரு உடலில் எப்படிக் குடியேறியது? அது ஏன் வெளியாகிறது? நாம் நீத்தார் என்று ஏன் சொல்கிறோம்? அந்த சுழற்சியின் நியதி தான் என்ன? காலக் கணக்கு எவ்வாறு வேறுபடுகிறது? புவியின் சமனிலை அங்கேதான் நிர்ணயிக்கப்படுகிறதா?
இருள்-எலிகளின் அலை, யானத்தோல் வாயில், இருண்ட வாயில், செம்பட்டுத் திரை நுழை வாயில்.
வைதரணி நதிக்கரையில் கடக்க உதவும் தவளை. சூசிமுகத்தில் முள்முனைகளில் பாய்ந்து செல்கிறான்.
மானுட உடல்களால் ஆன கூரை மண்டபத்தில், துலாவின் முள்ளென அந்தரத்தில் ஒரு அறவாள் இருக்க தூமர்ணயுடன் காலன் மானுடனை வியந்தான்.தன்னை அரசன் என்றுரைத்த பார்த்தனுக்கு ஆசனமும் அமைத்தான். அந்த பீடம் அவன் குலத்தில் வாழ்வு முற்றாது இறந்த மைந்தர்கள் என்று மறலி சொல்ல இவ் உடல்களல்ல அவர்கள் என்கிறான் இவன். அவர்கள் உதிர்த்துச் சென்ற பொருட்கள் இவை இவற்றில் எஞ்சியிருப்பதுஎதுவென்றாலும் அவர்களுக்கு உகந்ததல்ல என்கிறான். இன்னீரெனச் சென்னீர் தரப்படுகிறது, அது தரும புத்திரரின் தனிமை, இவன் தயங்கவில்லை
காலம் உண்ணும் குருதி.செல்கள் மடிந்து, பிறந்து… “பாலையாம் தன்மை செத்தும்,பாலனாம் தன்மை செத்தும்,காளையாம் தன்மை செத்தும், காமுறும் இளமை செத்தும், மேல் வரும் மூப்புமாகி, நாளும் நாம் சாகின்றோமால், நமக்கு நான் அழாததென்ன?”
இவன் நோக்கத்தைக் கேட்டு யமன் சிரிக்கிறான். நீர் முன்னரே இறந்துவிட்டீர் என்கிறான். அர்ச்சுனன் இழந்து இழந்து எல்லைக்குச் சென்று இழந்ததைப் பெற்றுக் கொள்கிறேன் என்கிறான். என் சொல்லின் பொருட்டு நான் நரகமும் செல்வேன். நான் அழிந்தே பெறுவதாயினும் சரியே,இங்கு நான் தோற்பேன் என்றால் உங்களில் ஒரு கணம் அந்த அந்தணனிடத்திலெ அதைச் சென்று சொல்லட்டும் என்கிறான். நான் மாவீரன். ஆணவம் கொண்டு நான் என்னை நிறுத்தவில்லை.என் தோழனால் புறக்கணிக்கப்பட்ட வேதியருக்காக வந்துள்ளேன், அது யாதவனை வெல்வதற்காக அல்ல. அவனின் ஒரு செயலை நான் ஆற்றி அவன் உள்ளம் பின்னர் தவிக்காதிருக்கும் பொருட்டே.அவன் மேல் ஒரு பழியெழ விடேன். தன் முழு விடுதலை தனிமையில் தான் என்றாலும் இதுவும் என் கடமை. 28 நரகங்களுக்கும், அடியாழ இருளுக்கும் செல்ல சித்தம் என்றான்.
நழுவும் ஆடையை தானாகவே பற்றிப் பொருத்தும் நட்பும்,(உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு) சொல் கொடுத்த கடமையும் அர்ச்சுனனை செலுத்துகின்றன. அஞ்சுவது அஞ்சாமை மேதமை தான்!!
வெல்லப் படாது கொள்ளும் பொருளில் நாட்டமில்லையென அவன் தேவியிடம் சொல்கையில் மனம் துணுக்குறுகிறது.
“ஏழுமுறை எண்ண உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது, இளைய பாண்டவரே. உங்கள் தொல்குலத்தை, உடன்பிறந்தவரை, மைந்தரை, நற்பெயரை, வரும்புகழை, மூதாதையரை, விண்ணுலகை ஒவ்வொரு அடிக்கும் எண்ணிக் கொள்ளுங்கள். ஒன்று தடுத்தால்கூட பின்னடி எடுத்து வைக்க வாய்ப்புள்ளது” என்றார் சித்ரபுத்திரர். “எண்ணத்தால் ஓர் அடி பின்னால் வைத்தால்கூட அங்கே யமுனைக்கரை நாணல்கள் நடுவே விழித்தெழுவீர்கள்.”
ஏழுஅடிகள், ஏழு பிறப்புகள், ஏழு ஸ்வரங்கள், எழு ஏழு
எழுந்தான் வில்லவன். அனைத்தையும் கடந்தான்
கம்சன், சந்தனு,தேவயானி, மாவலி, ஹிரண்யன்,ராவணன் தெரிந்த முகங்கள் புரிந்த தீச் செயல்கள் சுழற்சியின் விசித்திரம். மனித மனம் போடாத வேஷங்களா இவை?ஆறு உலகிற்கு அப்பால் அவன் வைதரணி வருகிறான். துர்பொருட்களில், முள் காடுகளில் அவன் முனைந்து முன் சென்று இறுதிக் கரையை அடைந்தான். அங்கே முதியவளின் (திருணமூலி) துயர் களைந்து அவன் பெற்ற அருள் அமுதென உடல் ஏறியது.. அவளின் ஒரு முலை அவன் கையில் தண்டாயுதமென அவன் யமபுரியில் மீண்டான்.
காலன் அளிக்கத்தயங்க காண்டீபன் நிகழ்திற்குரிய போரை தேர்வு செய்யும் வீரன் நான் என்றான். காலனை வீழ்த்தி அவன் வெல்கையில் இள மைந்தனின் காவல் கணமான யுதிஷ்ட்ரனையும் வீழ்த்துகிறான். நிகரென தன் மைந்தனின் முகம் கொண்ட குழவியையும் தட்டில் வைக்கிறான்(அபிமன்யு).அனைத்துமே நிகர் கொண்டவை.அளித்துப் பெறப்படாதவை, எங்கோ நின்று தவிக்கின்றன.
உடலெங்கும் அமுதாய் அர்ச்சுனன் யமுனைக் கரையை ஜாதவேதனின் மகனுடன் அடைகிறான்.தாயுமாகிறான்.மனிதர்களின் சிறுமதியை உணர்கிறான்.”என் பிள்ளை நோயின்றி உயிர் கொண்டு நிற்கும் போது அவனை விடப் பெரிது பொருள்தான்” என்கிறான் ஜாதவேதன்.
ஒன்று பிறிதொன்றைக் கண்டடைந்து நிறைந்து தானழிவதே உயிர்களுக்கு விண்ணென்றானது வகுத்தளித்த பேரின்பம்.
முகரப்பட்டது காலமா, செல்வமா, மழையா,பேரின்பமா,அத்தனை உயிரினமுமா, அனைத்துமா?நேரடியாக ஆசிரியரை அணுகி பெறும் அறிவா அதனையும் கடந்து செல்லும் விழைவா,தனக்கென இல்லாது மெய்ம்மையைத் தேடி,அந்தக் குறிக்கோள் ஒன்றே எனத் தேரும் விசையா?
(எது முகரப்பட்டது?)
விஜயன் இருண்ட ஆழத்தின் மெய்மை கண்டடைந்தது யமபுரியில். அதை முகரப்பட்டது எனக் கொள்வோம்
(யாரால்?)
பாரதியும், ஜாதவேதனும் காரணிகள்
(எதற்காக?)
இளைய யாதவரின் நலம் காக்க
(ஏன்?)
வில்லை விட சொல் வலியது
(எவ்வாறு?)
சித்தம் கொள்ளும் ஒரே இலக்கு
(எதனால்?)
வீரம் மிக்க ஒரு மானுடனால்
பார்த்தன் பரமனை மீறி நிற்கிறான். கரி பிளந்தெழுந்த ஒளி
பாரதி 66-ல் சொல்கிறார்’அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவுமங்கே அழிந்து போகும்’
பானுமதி.ந

அருட்செல்வ பேரரசனுடன் மகாபாரத உரையாடல்

2017 ஆம் ஆண்டின் முதல் வெண்முரசு கூடுகையின் முத்தாய்ப்பாக அமைந்தது திரு அருட்செல்வ பேரரசனின் வருகையும், அவருடனான உரையாடலும். திரு அருட்செல்வ பேரரசன் குறித்த அறிமுகம், வெண்முரசு வாசகர்களுக்குத் தேவையில்லை. ஜெ வால் ‘உங்கள் தளத்திற்கு அடிக்கடி வருகிறேன், தகவல்களை சரி பார்க்க. உங்களுக்கு கடமைப் பட்டுள்ளேன்’, என வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றவர் இவர். இந்தியாவின் ஒப்பற்ற மகா காவியமான மகாபாரதம், உக்கிர சிரவஸ் சௌதியால் நைமிசாரண்ய வன ரிஷிகளுக்குச் சொல்லப்பட்டது. இப்பாரத நிலத்தில் புழங்கிய அனைத்துக் கதைகளும் வந்து இணைந்த கதைக்கடலான இது சமஸ்கிருதத்திலேயே இருந்தது. ஒருவகையில் இதுவே பாரதத்தின் முழுமையாக விரிவாக்கப்பட்ட மூலம். கி.பி 1883 முதல் 1896 வரை திரு. கிஸாரி மோகன் கங்குலியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அன்றும் அது ஒரு தனி நபர் முயற்சி தான். கிட்டத்தட்ட ஒரு முழு நூற்றாண்டு கடந்தும் இந்த மூல நூலின் மொழிபெயர்ப்பு இல்லை. உண்மையில் தமிழுக்கு ஒரு பெரிய இழப்பு. தமிழகத்தில் இருக்கும் சில தமிழ் பல்கலைக் கழகங்கள், இங்கு இருக்கும் நிதி ஆதாரங்களுடன் கூடிய பிற பல்கலைக்கழகங்களின் தமிழ் ‘இருக்கைகள்’, மக்கள் விளையாட பெரிய மனதுடன் தோரண வாயில் அமைத்து இடம் அளித்திருக்கும் செம்மொழி ஆய்வு நிறுவனம் போன்றவை ஒரு பெரிய குழு அமைத்து, பல ‘பேராசிரியர்கள்’, ‘பேரறிஞர்கள்’ இணைந்து தமிழுக்கு ஆற்ற வேண்டிய இப்பெரும்பணி இது. ஆனால் அவையெல்லாம் செய்யாததை, செய்ய முன்வராததை தன் சுய முனைப்பாலும், மகாபாரதம் மேலுள்ள விருப்பாலும், தன் தளரா ஊக்கத்தாலும் ஒரு தனி மனிதராகச் செய்து வருகிறார் இவர். ஆம், 2012 ஆம் ஆண்டு துவங்கி இப்போது வரை இந்த மூல மகாபாரதம் இவரின் முயற்சியால் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. தற்போது கர்ண பருவம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அருமுயற்சி அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கும் வகையில் http://mahabharatham.arasan.info/ என்னும் தளத்தில் இலவசமாகவே தரப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பருவத்தையும் ஒலி வடிவிலும் வெளியிட்டு வருகிறார். அவரின் இம்முயற்சியில் அவருக்கு உறுதுணையாக விளங்கும் அவரது நண்பர் திரு. ஜெயவேல் மற்றும் அவரது துணைவி திருமதி. தேவகி ஜெயவேல் இருவரின் வருகையும் இம்மாலையை மேலும் இனிதாக்குகிறது.

பாரதம் என்னும் ஆதி படைப்பு:

ஒவ்வொரு மொழியிலும் காலத்தால் முந்திய படைப்புகள், மொழி அதன் முழு வளர்ச்சியை எட்டும் முன் எழுதப்பட்ட படைப்புகள், அவற்றின் காலாதீதமான தன்மையாலேயே, காலத்தைக் கடந்து வந்து நிகழ்காலத்தில் கிடைப்பதாலேயே செவ்வியல் தன்மையை எட்டிவிட்ட படைப்புகள் இருக்கும். இவையே ஆதி படைப்புகள் – Primitive Text. இப்படைப்புகள் ஒவ்வொரு காலத்திலும் அந்த காலத்திற்கு ஏற்றார்போல பொருள் கொள்ளப்படும். அவை உதிரி வரிகளாக, சமூக விழுமியங்களை, சமூக அறங்களை, சமூக நெறிகளை நிலைநிறுத்துபவையாக, மக்களிடையே புழங்கிக் கொண்டு தான் இருக்கும். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பது துவங்கி முறத்தால் புலி விரட்டிய மூதமிழ் நங்கை வரை அந்நூல்கள் ஏதோ ஒரு விதத்தில் பொது சமூகத்தின் பொதுப்புத்தியில் வைக்கப்பட்டிருக்கும். தமிழில் தொல்காப்பியம், புறநானூறு, குறுந்தொகை என பல படைப்புகளைச் சொல்லலாம். இன்று (January 22) கூட மெரீனா சென்றால் இந்நூல்களின் பெயர்களைக் கேட்கலாம். இன்றும் கூட அவற்றில் பயன்படுத்தப்படும் உவமைகள், சொல்லாட்சிகள் நம்மில் இருந்து கொண்டிருக்கின்றன. பாரதம் அதைப் போன்றதொரு ஆதி படைப்பு. அதை நாம் கதையாகப் படிக்கலாம். நம் மரபை, அதன் தத்துவங்களை அறிய படிக்கலாம். ஒரு நாட்டை எவ்வாறு நிர்வாகிப்பது என்ற சமூக நோக்கிலோ, குடும்ப உறவுகள், அண்ணன் தம்பி பாசம், போன்ற தனிமனித நோக்கிலோ படிக்கலாம். அதன் இடைவெளிகளை ஒரு வாசகனாக நம் கற்பனையில் நிரப்பலாம். இவையனைத்தையும் அந்நூல் நேரடியாகச் சொல்லாமல் வாசிப்பவரின் கையிலேயே விடுவதால் தான் இது ஆதி படைப்பாக இருக்கிறது. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவருக்கான ஒரு நூலாக உருவெடுக்கும் தன்மை கொண்டதே இந்த ஆதி படைப்பை ஒரு செவ்வியல் படைப்பாக்குகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியிலும், இங்கு உள்ள ஒவ்வொரு சமூகக் குழுவிடமும் ஒரு மகாபாரதம் இருக்கிறது. உதாரணத்திற்கு சமணர்கள் தங்களுக்கென ஒரு பாரதத்தைக் கொண்டுள்ளனர் – ஜைன பாரதம். அதே போல நாகர்கள் அவர்களுக்கென ஒரு மகாபாரதத்தைக் கொண்டுள்ளனர் – பஸ்தர் பகுதியில் இன்றும் கிடைக்கும். இவ்வவளவு ஏன், வரிவடிவம் அற்ற மொழிகள் கூட தங்களுக்கென ஒரு மகாபாரதத்தைக் கொண்டுள்ளன. மணிப்பூரின் லோக்தக் ஏரியின் மிதக்கும் தீவுகளில் இருப்பவர் கூட தாங்கள் அர்ஜுனனுக்கு பெண் கொடுத்தவர்கள் எனப் பெருமையாகக் கூறும் ஓர் நீண்ட நெடிய பண்பாட்டின் இணைப்புச் சரடாக விளங்குவதே, ‘ஜய’ – ‘வெற்றி முழக்கம்’ என்ற பெயரில் வியாசரால் யாக்கப்பட்ட இந்நூலை மகாபாரதம் ஆக்குகிறது.

இந்த ஆதி படைப்பு என்பது பொது வாசகப் பரப்பில் பெரும்பாலும் வழக்கொழிந்து போயிருக்கும். மாறாக அதை அடித்தளமாகக் கொண்டு மேலெழுந்த மற்ற படைப்புகள், நிகழ்த்துக் கலைகள், நாட்டாரியல் பாட்டுகள் வழியாக அது சமூகத்தில் இயல்பாகப் புழங்கிக் கொண்டிருக்கும். ராமாயணம் அப்படித்தான் நம்முன் வந்தது. கேரளாவில் இஸ்லாமியர்களுக்கென்று ‘மாப்ளா ராமாயணம்’ கூட உண்டு. உளுவத்தலையனும் உச்சிக்குடும்பனும் ராமாயணத்தின் வானரங்களாகவே தோல்பாவைக் கூத்தில் இருந்து வருகிறார்கள். மகாபாரதம் அப்படித் தான் நம்மிடம் வந்து சேர்கிறது, தொலைகாட்சி வாயிலாக, கூத்துகள் வாயிலாக, தெரு நாடகங்கள் வாயிலாக, அதையொட்டி எழுதப்பட்ட நூல்களாக. மக்கள் கலைகளாக புழங்கும் இந்த ஆதி படைப்பு அடுத்த கட்டமாக அதே போன்று காலத்தை வெல்லும் ஒரு செவ்வியல் ஆக்கமாக பரிணமிக்கவும் செய்யும். புற்றுறை முனி யாத்த ஆதி படைப்பான வான்மீகத்தில் இருந்து தான் கம்பன் ஒரு மாபெரும் ஆக்கத்தைக் கொடுத்தான். இதோ வியாசனின் பாதங்களில் இருந்து வெண்முரசு எழுந்து வருகிறது. இங்ஙனம் பலவாறாக வடிவம் கொண்ட இந்த ஆதி படைப்புகள் அதன் மூலத்தில் எங்ஙனம் இருந்தது என்பதை அறிவது ஒரு இலக்கிய வாசகனுக்கு ஆர்வமூட்டுவதே. ஏனென்றால் பல தார மணம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஒரு சமூகத்தில் ‘இம்மைப் பிறப்பில் பிறிதொரு மாதரை சிந்தையாலும் தொடேன்’ என ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தை ஏற்படுத்திய மூல வரியைக் கண்டடைவது என்பது அத்தனை வருட மானுட பரிணாம வளர்ச்சியைக் தரிசிப்பதே தான். எனவே ஒரு வாசகன் ஆதி படைப்பை வாசிப்பது அவசியம். அது அதன் மேல் அமைந்த நிகழ்த்துக் கலைகள் துவங்கி, செவ்வியல் ஆக்கம் வரை அவன் புரிதலில் ஒரு பெரிய திறப்பை நிகழ்த்தும், அதிலும் குறிப்பாக பாரதத்தின் மூலம்.

அத்தகைய மகாபாரதத்தின் முழுமையான ஆதி படைப்பு தமிழில் இல்லை என்பது நமக்கு ஓர் பேரிழப்பே. அந்த இழப்பை சரி செய்யும் சவாலை ஏற்றுச் செயல்பட்டுக்கொண்டிருப்பதாலேயே திரு அரசனின் இந்த மொழிபெயர்ப்பு முயற்சி மிக மிக முக்கியமானது.

வெண்முரசும் மூலமும்:

வெண்முரசு மூலத்தை ஒட்டி எழுதப்படுகிறது அல்லது படவில்லை என்பது ஒரு சுவாரசியமான விவாதமே. இருப்பினும் வெண்முரசின் மூலங்களைக் கண்டறிவதும் ஆர்வமூட்டும் ஒன்றே. அவ்வகையில் அரசன் அவர் படித்த வெண்முரசின் பகுதிகள் மூல மகாபாரதத்தை ஒட்டியே அமைந்திருப்பதாகக் கூறினார்.

கர்ணன் ஜராசந்தன் நட்பு:

வெய்யோன் வருகையில் பலருக்கும் புருவத்தைத் தூக்க வைத்த ஒன்று கர்ணன் ஜராசந்தனின் நட்பு. இது சாத்தியமற்ற ஒன்று, ஜெ வின் புனைவே இது என்று விவாதங்கள் வந்திருந்தன. ஆனால் கர்ண பருவத்தின் முதல் மூன்று அத்தியாயங்களில், கர்ணனின் வீழ்ச்சியைக் கேட்டு புலம்பும் திருதராஷ்டிரன் கர்ணனால் தான் ஜராசந்தனின் நட்பு துரியனுக்குக் கிட்டியது எனப் புலம்புகிறான். கர்ணனால் தான் ஜராசந்தன் துரியனைத் தவிர்த்த ஷத்ரிய அரசர்களைக் கொள்கிறான் என்கிறான் திருதராஷ்டிரன். எனவே இந்த நட்பு மூலத்தில் இருந்திருக்கிறது.

சகுனியின் பாத்திர வார்ப்பு:

சகுனிக்கு பீஷ்மர் மீது ஒரு பிதாமகர் என்ற மரியாதை இருந்ததற்கான நேரடி விவரணைகள் கிசாரியில் இல்லை. ஆனால் அவ்வாறு இருந்திருப்பதற்கான சாத்தியங்கள், இடைவெளிகள் மூலத்தில் இருக்கிறது. மேலும் சகுனி பெரும்பாலான சமயங்களில், வாரணவதம் தவிர, துரியனுக்கு நல்ல புத்தியே சொல்கிறான். கர்ணன் நட்பு கூட சகுனி எதுவும் சொல்வதில்லை. அது இயல்பாக துரியனுக்கும், அவனுக்கும் இடையே மலர்கிறது. இன்னும் சொல்லப்போனால் துரியனை திரௌபதியை அவமானப் படுத்தத் தூண்டுவது துவங்கி, போர் வரை கர்ணனே செய்கிறான். இதைப் பற்றிய பகுதிகள் மொழிபெயர்க்கப்படுகையில் பாரதத்தின் முக நூல் பக்கம் கொந்தளித்தது. பிறகு கர்ணனை எப்படி கீழ்மையாக்கலாம்?!

கர்ணன் – குந்தி உரையாடல்:

போருக்கு முன் கர்ணன் குந்தியின் உரையாடல் நமது நிகழ்த்துக் கலைகளில் முக்கியமான ஒன்று. சிவாஜி வேறு இதை நம் கண்முன் காட்டிச் சென்று விட்டார். ஆனால் மூலத்தில் அவர்களின் உரையாடல் இரண்டே பாடல்களில் முடிவடைந்து விடுகிறது என்பது முதலில் ஒரு வாசகனுக்கு அதிர்ச்சியையே தரும். அதிலும் கர்ணன் குந்தியைப் ‘பெண்ணே’ என்று தான் அழைக்கிறான். மேலும் குந்தி அவனிடம் வரம் கேட்கவில்லை. கர்ணன் தானே முன்வந்து அவ்வரங்களை நல்குகிறான்.

பீமன் – துரியன் நட்பு:

வெண்முரசின் மற்றொரு முக்கிய ஆச்சரியம் பீமனுக்கும் துரியனுக்குமான நட்பு. அதற்கான மூகாந்திரங்கள் மூலத்தில் இருக்கிறதா என்றால் இல்லை. ஆனால் துரியன் பாண்டவர்களை வரவேற்கவே செய்கிறான். ஆனால் அவன் பீமனைக் கண்டு, அவன் காட்டுத் தனத்தைக் கண்டு அஞ்சுகிறான். தன்னைக் குறித்தும், தன் தம்பியரைக் குறித்துமான துரியனின் அச்சமே பீமன் மீதான பகையாக மாறுகிறது. பீமனும் சற்று பொறாமை கொண்டவனாகவே காட்டப்படுகிறான். ஒவ்வொரு புள்ளியிலும் அவன் துரியனுடன் போட்டியிடுகிறான். பீமனின் இக்குணச்சித்திரம் மிகச் சரியாக வண்ணக்கடலில் வந்துள்ளது. வெண்முரசு துரியன் பீமன் பகையை ஒரு காலாதீதமான ஒன்றாகக் காட்டுகிறது. இருவரும் எந்நாளும் ஒன்றாகவே ஆக இயலாது என்ற வகையில் காட்டுகிறது. அப்படிப்பட்ட ஒரு பெரும்பகை ஒரு பெரும் நட்பிலிருந்தே துளிர்க்க இயலும் என்ற வகையில் அவர்கள் நட்பை அணுகுகிறது.

கிருஷ்ணன் – அர்ச்சுனன் போர்:

கிராதத்தில் வரும் இப்போருக்கான மூகாந்திரம் கிஸாரியில் இல்லை. ஆனால் இக்கதையை ஜெ பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டு நடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தெலுங்கு நாடகத்தில் இருந்து எடுத்திருக்கலாம் என்கிறார் அரசன். வெண்முரசின் ஆகப் பெரிய சாதனையே மகாபாரதத்திற்கு இருக்கும் எண்ணிறந்த பாடபேதங்களை ஒரு சரியான வடிவில் தொகுத்து அளிப்பதே. அதற்கு இடைவிடாத பயிற்சியும், தொடர்புகளைக் கண்டு கொள்ளும் கண்களும் வேண்டும். ஜெவின் 25 வருட உழைப்பின் கனியே வெண்முரசு

மகாபாரதம் மொழிபெயர்ப்புகள்:

தமிழில் முழு மகாபாரதம் கும்பகோணம் பதிப்பாக, திரு ராமானுஜாச்சாரியாரின் மொழிபெயர்ப்பில் 1908 ஆம் ஆண்டு துவங்கி 1932 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு நீடித்த இந்த இமாலய முயற்சி 9000 பக்கங்கள் கொண்டது. 45 பகுதிகள் வந்தன. சுமார் 1,35,000 ரூபாய் செலவானது(அன்றைய மதிப்பில்). இயல்பாகவே ஒரே பதிப்பு மட்டுமே கண்டது இது. மணிப்பிரவாள நடையில், அன்றிருந்த மகாபாரதத்தின் தென்னக பாடத்தை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டது. தென்னக பாடம் தமிழ் வரிவடிவில் எழுதப்பட்ட சமஸ்கிரத மொழியில் அமைந்த நூல். இதன் மறுபதிப்பு சில ஆண்டுகளுக்கு முன் வந்தது. அதுவும் ஒரே பதிப்பில் நின்று விட்டது. இதன் PDF வடிவம் இணையத்தில் உள்ளது.

கிஸாரி மோகன் கங்குலி ஒரு பன்மொழி வித்தகர். அவர் வங்க வரியில் சம்ஸ்கிருத மொழியில் அமைந்த வங்க பாடத்தைப் பின்பற்றி தன் ஆங்கில மொழியாக்கத்தைச் செய்தார். அவருக்கும் முன்னதாக M.N. தத் என்றழைக்கப்படும் மன்மத நாத தத் மொழிபெயர்த்திருக்கிறார். இவரின் மொழியாக்கத்தில் சுலோக எண்களைத் தந்திருப்பார். ஆனால் கிஸாரி ஒவ்வொரு மொழிபெயர்ப்புக்கும் கீழே அடிக்குறிப்புகள், மறை பொருளுக்கான விளக்கங்கள் தந்திருப்பார். கிஸாரி மோகன் கங்குலியை ரமேஷ் மேனன் சற்று எளிமைப் படுத்தி கதையோட்டமாக பாரதத்தைச் சொல்லியிருப்பார்.

இவர்கள் அனைவருமே ஒப்புக்கொண்ட ஒன்று மூலம் என்று கிடைத்துள்ள சம்ஸ்கிருத வடிவிலேயே பல இடைச்செருகல்கள் உள்ளன என்பது தான். இந்த இடைச்செருகல்களைக் கண்டடைந்து களைய புனேவில் அமைந்துள்ள பண்டார்க்கர் கீழையியல் ஆய்வு மையம் (Bandarkar Oriental Research Institute – BORI) ஒரு பெரும் திட்டத்தைத் தீட்டி நிறைவேற்றவும் செய்தது. கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்கள் (1919 – 1966) நீண்ட இப்பெருந்திட்டம், திரு. சுக்தங்கர், திரு. பெல்வால்கர், திரு. தண்டேகர் போன்ற பேரறிஞர்களின் பெரு முயற்ச்சியால் கிட்டத்தட்ட 1259 வெவ்வேறு சுவடிகளில் இருந்து தொகுக்கப்பட்டு 18 பருவங்களும் 89000 சுலோகங்களும் கொண்ட முழுமையாகத் திருத்தப்பட்ட வடிவில் நமது முதல் குடிமகனான திரு. ராதாகிருஷ்ணன் அவர்களால் 1966 ல் வெளியிடப்பட்டது. இந்த திருத்தப்பட்ட வடிவின் ஆங்கில மொழியாக்கத்தை விவேக் தேப்ராய் செய்துள்ளார்.

அரசனின் மொழிபெயர்ப்பு:

இவற்றில் அரசன் கிஸாரி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததை தமிழில் மொழி பெயர்த்து வருகிறார். இம்மொழிபெயர்ப்பில் அவர் எந்த இடத்திலும் தன் கருத்தையோ, தன் புரிதலையோ முன்வைப்பதில்லை. இதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார். முடிந்த அளவு வார்த்தைக்கு வார்த்தை, அவ்வாறு செய்ய இயலாத போது வரிக்கு வரி மொழி பெயர்ப்பு என்பதையே செய்கிறார். மேலதிகமாக அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் புகழ் மொழிகள் சுட்டும் நபர்களை அடைப்புக்குறிக்குள் தருவது, முக்கியமான, வேறு பொருள் தரச் சாத்தியமான பகுதிகள் என்பதைக் குறித்து M. N. தத், விவேக் தேப்ராய் மற்றும் தமிழ் பழைய பதிப்பு என்ன சொல்கிறது என்பதையும் கொடுக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தை மொழிபெயர்க்கையிலும் அந்த அத்தியாயம் மேற்கூறிய மூன்று பதிப்புகளிலும் எவ்வாறு வந்துள்ளது என்பதைப் படித்து, அதை கிசாரியுடன் பொருத்திப் பார்த்துப் பொருள் கொண்டு மொழிபெயர்க்கிறார். ஒரு அத்தியாயம் மொழிபெயர்க்க கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் ஆகிவிடும் என்கிறார். காலை 9 துவங்கி இரவு 9 வரை தன் வரைகலைத் தொழிலைச் செய்யும் இவர் மொழிபெயர்ப்பைச் செய்வது இரவில். அதாவது 11 மணி துவங்கி 2 மணி வரை. இது உண்மையிலேயே அசுரத்தனமான உழைப்பு.

திட்டுவதற்குக் கூட ஏதேனும் பாரதப் பாடலைப் பாடக்கூடிய அளவு மகாபாரதம் புழங்கிய வீட்டுச்சூழலில் இருந்து வந்த அரசன் B. R. சோப்ரா பாரதத்தாலும், சோ வின் மகாபாரதம் பேசுகிறது தொடராலும் இயல்பாகவே ஈர்க்கப்பட்டார். தன் இடதுசாரி நண்பர்களுடனான உரையாடல்களில் அவர்களின் பாரதப் புரிதல் தொடர்பான விவாதங்களில் ஆதாரத்துடன் பதிலளிப்பதற்காக கிஸாரியை மேற்கோள் காட்டத் துவங்கியிருக்கிறார். ஆங்கிலம் சரியாக வராத நண்பர்களுக்காக கிஸாரியின் சில பகுதிகளை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். பின்னர் ஏன் முழுமையாகவே மொழிபெயர்க்கக் கூடாது என்று மொழியாக்கத்தைத் துவங்கியிருக்கிறார். இவரின் மொழியாக்கத்தின் பிழை நோக்குனராக இருப்பவர் 9௦ வயதைக் கடந்த இவரது தந்தை. இவர் ஒரு உண்மையான தமிழாசிரியர்.

திரு ஜெயவேலின் பங்கு:

2012 ல் துவங்கப்பட்ட இந்த மொழிபெயர்ப்பு அரசனின் சில நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. பொதுவாக இணையதளத்தில் வெளியிட்டு வந்திருந்தாலும் தொடர்ச்சியாக வெளியிடுவதில் சில ஆரம்ப கட்ட தொய்வுகள் இருந்திருக்கின்றன. அந்தத் தருணத்தில் தான் நூறு அத்தியாயங்கள் மொழியாக்கம் செய்யப்பட்ட பிறகு திரு ஜெயவேல் அரசனிடம் வருகிறார். அவருக்கு உண்மையிலேயே அரசன் தான் இந்த மொழியாக்கத்தைச் செய்கிறாரா என்ற ஆச்சரியம் தான். அதை விட அவநம்பிக்கை கொஞ்சம் இருந்திருக்கிறது. அவரைப் பொறுத்த வரை பாரத மொழியாக்கம் என்பதெல்லாம் ஆயுட்காலம் கோரக் கூடியது. அதைச் செய்யத் துவங்கியவர் மடிந்து போன கதைகளே அதிகம். இவரால் செய்ய முடியுமா என்ற அவநம்பிக்கையே அது. இருப்பினும் அரசனின் ஆர்வமும், அவருக்கு பாரதத்தில் இருந்த ஆழ்ந்த அறிவும் அவருக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. ஒரு வகையில் இந்த மொழியாக்கத்திற்கு ஒரு புரவலர் என்ற வகையில் துவங்கிய ஜெயவேலின் பங்களிப்பு தற்போது பிழை திருத்தல், கூட்டுச் சொற்களை பிரித்துக் கொடுத்தல், முன் அத்தியாயங்களுக்கு சரியான இணைப்பைக் கொடுத்தல், முக்கியமான உரையாடல்கள், கதைப் பகுதிகள் போன்றவற்றிற்கு வேறு நிறம் கொடுத்து கவனப்படுத்துதல், ஒவ்வொரு அத்தியாயத்தின் பொருள், மொழியாக்கம் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் செய்தல் என பல தளங்களில் விரிந்துள்ளது. இரவு 2 மணிக்கு அரசன் வலையேற்றிய பிறகு 3 அல்லது 3:30 மணிக்கு எழுந்து மேற்கூறியவற்றை செய்கிறார் இவர்.

திருமதி தேவகி ஜெயவேல்:

சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் இந்த முயற்சிக்கு குரல் வடிவம் கொடுத்து வருகிறார். விளையாட்டாக சத்தமாகப் படிக்கத் துவங்கிய இவர் அதையே ஏன் ஒரு ஒலி வடிவ நூலாகக் கொண்டு வரக்கூடாது என்ற கணவரின் யோசனையைச் செயல்படுத்தி வருகிறார். வனபருவம் முழுமையாக குரல் வடிவில் கிடைக்கிறது. இணையத்தில் கிடைக்கும் மென்பொருள்களைக் கொண்டு இதைச் செய்து வருகிறார். ஒரு அத்தியாயத்திற்கு ஒரு மணி நேரத்தில் ஒலி வடிவு கொடுத்து விடுகிறார்.

இவர்கள் மூவரும் தங்கள் அன்றாட உலகியல் பணிகளில் எந்த குறையும் வைப்பதில்லை. இப்படி ஒரு பெரு முயற்சி செய்கிறோமே அதனால் இதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் தங்களை உடலாலும், மனதாலும் வருத்திக் கொள்ளவில்லை. எந்த உலகியல் தேவைகளையும், கடமைகளையும் தவற விடுவதில்லை. கூடவே தாங்கள் துவங்கிய இப்பணியையும் கைவிடுவதில்லை. உண்மையில் இவர்களிடம் பேசிய பிறகு தோன்றியது ஒன்றே ஒன்று தான். ஆர்வம், தளராத ஆர்வம். அது இருப்பின் எதுவும் சாத்தியமே. இந்த கூட்டம் முடிகையில் தனிப்பட்ட வகையில் ஒரு பெரும் உத்வேகத்தைத் தந்தது. மிகுந்த புத்துணர்ச்சி தந்த கூட்டம்.

தற்பிரிந்து அருள்புரி தருமம் – அருணாச்சலம் மகராஜன்

solvalar_kaadu_epi_55

சொல்வளர்காடின் உச்சம் கந்தமாதன மலையின் எரி வந்தறையும் எல்லையில், தன்னையே அவியாக்கி தருமர் மேற்கொள்ளும் பெரு வேள்வி. அந்த அத்தியாயத்தைப் படித்து முடிக்கையில் மனதில் தோன்றிய எண்ணம், தருமரும் சீதையும் ஒன்றோ என்பது தான். வெண்முரசில் இவ்வாறு இராமாயண பாத்திரங்கள் நினைவிற்கு வருவது தற்செயல் அல்ல என்பது எனது அனுபவம். நாவலில் வேறு எங்கேனும் அதற்கான தகவல்கள் தரப்பட்டிருக்கும். அப்படியே சொல்வளர்காடை மீண்டும் வாசிக்கையில்  சௌனகக் காட்டில் தனக்காக விழைந்து செயல்கள் இயற்றும் திருஷ்ணையில் இருந்து ஒரு அரசன் விடுபடவேண்டும் என்று கூறுகையில் மிதிலையின் ராஜரிஷியான ஜனகரை வணங்குக என்று வருவது முதல் யக்ஷவன அத்தியாயத்தின் முதல் பகுதி வரை பல இடங்களில் சீதை வந்து சென்றிருப்பதை அறியலாம்.

முக்கியமாக கார்கி யாக்ஞவல்கியரின் விவாதம் நடைபெறும் ஜனகர் அவையைப் பற்றிய விவரங்களில் மிக விரிவாகவே சீதை வருகிறாள். அரசனின் முதல் புதல்வியை மண்ணில் புதைத்து, அவளை மண்ணில் இருந்து அகழ்ந்து எடுப்பதை ஒரு குல முறைச் சடங்காகச் செய்யும், பெண்ணை தலைமையாகக் கொண்ட ஒரு தொல்குலத்தைச் சார்ந்தவள் என்பது சீதையைப் பற்றிய பார்வையை முழுமையாக மாற்றுகிறது. அவள் ராமனைத் திருமணம் செய்ததால் அரசி ஆனவள் அல்ல, அவள் பிறப்பில் இருந்தே தன் நாட்டிற்கு, குலத்திற்கு வழிகாட்டும், தலைமை தாங்கும் அரசி, கற்றவள். தாய். எப்போதும் குளிர்ந்தவள் – சீதளமானவள். எரி புகுகிறாள். ஏன்? ரகுகுல ராமன் அவளை சந்தேகித்தான் என்றா?

ராவணன் சிறையில் இருந்த தன் ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை பத்து மாதங்களுக்குப் பின் முதன் முறையாக ராமன் பார்ப்பதை

“கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை,
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான்”

என்கிறான் கம்பன். ‘தற்பிரிந்து அருள்புரி தருமம் போலி’ – சுய தர்மம், குடும்ப தர்மம், குல தர்மம், மானுட தர்மம் என பலவாறாகப் பிரிந்து நின்றாலும் ஒவ்வொரு தர்மமும் அருள் மட்டுமே புரிபவை. அப்படிப்பட்ட தர்மம் போன்றவள் என்கிறான் கம்பன். மற்றொரு பார்வையில் தன்னைப் பிரிந்தாலும் அருள் மட்டுமே பொழியும் தருமத்தை ஒத்தவள் என ராமன் எண்ணுகிறான். அப்படிப்பட்டவளை அன்புடன் அள்ளி அள்ளி பருகும் பார்வையால் நோக்கிக் கொண்டேயிருக்கிறான் ராமன்.

அப்படி காதலுடன் கண்ணுற்றவன், அடுத்த கணத்தில், அக ஆழத்தில் இருந்து படம் விரித்தாடும் பாம்பென நாவில் ஊறிய அமிலத்தால் அவளை அர்ச்சனை செய்கிறான். பலவாறாக சீதையை ஏசும் ராமன் பெரும்பாலான ஆண்களைப் போலவே

“நன்மைசால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்”

என்று அவள் பிறப்பை குறை கூறுகிறான். வாழ்வில் குறிக்கோள் எதுவும் இல்லாமல், உயிர் வாழ்வது ஒன்று மட்டுமே தன்னறம் என்று கொண்டு, அதற்காக மட்டுமே உண்டு கொண்டே இருக்கும் புழுவைப் போல் மண்ணில் பிறந்ததை நிரூபித்து விட்டாய் என்கிறான். ஆனால் அவள் தன்னுயிர் பேணும் புழுவல்ல, மண்ணுக்கே உயிரளிக்கும் மண்புழு என்பதை அவன் அறியாமல் கூறி விடுகிறான் – இது கம்பன் டச்.

அவள் பேசத் தெரியாதவள் அல்ல. தனக்கு வாய்த்தவற்றை விதியே என்று ‘அகழ்வாரைத் தாங்கும் நிலமாய்’ பொறுப்பவளும் அல்ல. அவள் அரசி, பிறப்பிலேயே. தருமத்தின் மாற்றுரு. தன் முன் நின்ற லங்கேசனையே புல்லென மதித்துச் சீறியவள். எல்லை நீத்த உலகங்கள் யாவையும் தன் சொல்லினால் சுடுவேன் என்று தன்திறம் உணர்ந்தவள். தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்பதால் அவ்வெண்ணத்தை வீசியவள். அப்படிப்பட்டவள் மேலே காய்ந்து, உள்ளே நிணமும், குருதியும் சொட்டிக் கொண்டிருக்கும் புண்ணில் கோல் பட்டுக் கீறிய உடல் கொள்ளும் வலியின் மெய்ப்பு கொண்டு மண்ணை நோக்கி தன்னிலை உணர்ந்து தன்னிரக்கம் கொள்கிறாள். பலவாறாக தன்னுள் ஆழ்ந்து, தன்னுள் பேசி, தன்னை மாய்க்க முடிவு செய்து இலக்குவனைப் பார்த்து ‘இடுதி தீ’ என்கிறாள். அலறிப் பின்வாங்கும் இளைய பெருமாளை கண்ணாலேயே தீ மூட்டும்படி சொல்கிறான் ராமன். அவ்வாறு விதி முறை அமைத்த எரியை நோக்கி,

“நீந்தரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள்”

என சென்று பாய்கிறாள் சீதை. நீந்தக் கடினமான பெருகியோடும் புனலில் மலர்ந்து நிற்கும் தாமரையில் அமைந்த தன் வீடு நோக்கி செல்பவள் போலச் செல்கிறாள் என்கிறான் கம்பன். ஆம், அவள் சோகத்தில், தன்னிரக்கத்தில், ஆழ்ந்த துயரில், உயிரை மாய்க்க முடிவு செய்துதான் எரி அமைக்கச் சொல்கிறாள். ஆனால் புகுகையில் அவள் தான் முன்பு இருந்த இடத்திற்கே மீள்வதற்காகச் செல்லும் விருப்புடன் பாய்கிறாள். அவள் முன்பு எங்கு இருந்தாள்? எவ்வாறு இருந்தாள்? எதனால் இவ்வாறு ஆனாள்? எது அவளை இந்த எரியை நோக்கி விருப்புடன் செலுத்தியது?

இந்த கேள்விகளுக்கான பதிலை வெண்முரசின் சொல்வளர்காடு நல்குகிறது. பலமுறை சொன்னதுபோல நம் மரபை துலக்கிக்காட்டுவதில், நம் ஆழ்மனப் படிமங்களை விளக்கிக் காட்டுவதில் வெண்முரசின் மற்றொரு சாதனை அதன் சீதையைப் பற்றிய பார்வை.

கம்பனே சொல்கிறான், அவள் தருமத்தின் மாற்றுரு என்று. அந்த தருமம் எங்கே பிழைத்தது? பிராட்டியின் விழைவு முந்திய தருணத்தில் பிழைத்தது. அவள் விழைவு அந்த மாய மான், பொன் மாரீச மான். இலக்குவன் தான் சென்று பிடித்து வருவதாகச் சொல்லியும், “நாயக! நீயே பற்றி நல்கலைபோலும்” என்றபோது முந்திய விழைவு. கடத்தலுக்கரிய கடலைக் கடந்து, வெல்லுதற்கரிய இலங்கேஸ்வரனை கொல்வான் என ராவணன் சிறையில் இருக்கையில்கூட தன் கணவன் திறனை முழுதும் உணர்ந்தவள், அவன் குரலில் கூவிய மாரீசனின் வார்த்தைகளை நம்பி இலக்குவனை கொதிக்கும் உள்ளத்தோடு, தன்னைக் கொல்லும் இன்னலில் எடுத்த சீற்றத்தோடு “அண்ணன் மடிய, என்னருகில் நிற்பது நெறியில்லை” எனத் தகாதது கூறிக் கடிந்தபோது முந்திய விழைவு.

ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்;
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ
வெருவலை நின்றனை; வேறு என்? யான், இனி
எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு’ எனா

என்றதால் எரிகிறாள். உண்மையில் சீதை அந்த பத்து மாதங்கள் என்ன நினைத்திருப்பாள்? இளையபெருமாளை வைததை எண்ணி எண்ணி தன்னையே குற்ற உணர்வில் கொன்று கொண்டிருந்திருப்பாள். தன் விழைவு தன்னை மீறி வெளிப்பட்ட அக்கணத்தை எண்ணி எண்ணி உலைந்திருப்பாள். உண்மையில் அவள் உள்ளத்தால் எரிந்துகொண்டிருப்பதைவிட உடலால் எரிந்து விடுவது மேல் என்றே அம்முடிவை எடுக்கிறாள். இவையெல்லாம் ஒரு வகையில் புறவயமான காரணங்கள். உயிரை மாய்க்கும் எல்லைக்கு ஓர் மானுட உயிர் செல்லுமென்றால் அவ்வுயிருக்கே உரிய மிக மிக காத்திரமான அகவயமான ஒரு காரணம் இருக்க வேண்டும். சீதைக்கே உரித்தான அப்படிப்பட்ட காரணம் என்ன? அதை அறிய நாம் தருமரை அறிய வேண்டும்.

சொல்வளர்காட்டில் தருமர் ஆரண்யகங்கள் தோறும் சென்று சொல் தேர்ந்து கொண்டேயிருக்கிறார். ஏன்? மிகத்தெளிவாகவே திரௌபதி, ‘நாம் ஏன் மனிதர்கள் வாழும் வேதநிலைகளுக்குச் செல்ல வேண்டும்? அவை மானுடர்களின் விழைவுகளின் தொகை, அச்சங்களின் தொகை’ என்கிறாள். இருப்பினும் தருமர் அனைவரையும் அழைத்துச் செல்கிறார். காரணம், எந்த வேதத்திலாவது தன்னுடைய செயல்களை நியாயப்படுத்த, அல்லது அந்தத் தவறில் இருந்து விடுபடும் வழியை அறிய ஏதேனும் ஒன்று கிடைக்குமா என்பதே!! பன்னிரு படைக்களத்திற்கு அவர் ஒப்புவதே  குருதியின்றி ஒரு நிகரிப் போருக்குத்தான். கூடவே அதன் மறைபொருளாக அவரின் ஆழ்மன விழைவு, அவருக்கே கூட பருவடிவாக தெளிவாகத் தோன்றாத ஒரு விழைவும் இருக்கிறது. நால்வரிலும் தருமர் மட்டுமே தனக்கென எந்தத் தனித்தன்மையும் கொண்டிராதவர். அவரிடம் இருக்கும் ஒரே சிறப்பு அவரின் நூல் வாசிப்பும், அவரது அறக் குழப்பங்களும்தாம். அரசை விழைகிறாரா, திரௌபதியை விழைகிறாரா, அவளிடம் தனக்கென ஒரு பீடம் கோருகிறாரா என்பதெல்லாம் அவருக்கே விளங்காதவை. எவ்விதத்திலாயினும் ஒரு வெற்றி, தன் திறமையால் மட்டுமே ஈட்டப்படும் ஒரு வெற்றி, அதை அவள் முன் பெருமிதத்துடன் படைத்தல் என்பவையும் அவரை பன்னிரு படைக்களத்திற்குச் செலுத்திய விசைகள். இந்த விழைவுகளின் விபரீதம் அவரை வதைக்கிறது. உண்மையில் தம்பியர் இருவரும் வஞ்சினம் உரைப்பதன் மூலமும், பீமன் அவரை இகழ்ந்ததன் மூலம் அவர் ஓரளவிற்கு விடுபடுகிறார். ஆயினும் அவர் வேண்டும் முழு விடுதலையை அளிக்க வேண்டியவளோ அவரை முற்றிலுமாக புறக்கணிக்கிறாள். அவள் முன் அவர் இயலாமையே பேருருவம் கொண்டு எழுகிறது. இயலாமையை சந்திக்கும்தோறும் அவர் சினமும், குரோதமும், தன்னிரக்கமும் கொண்டவராக மாறி மாறி ஊசலாடிக்கொண்டே இருக்கிறார். இந்த வதையில் இருந்து விடுபடவே அவர் ஒவ்வொரு காடாக அலைகிறார். இந்த எல்லைக்கு அவரைத் துரத்திய அவரின் விழைவு நாவல் முழுவதும் மான் வடிவில் வந்து கொண்டேயிருக்கிறது.

இந்தப் பின்னணியில் வைத்துதான் சொல்வளர்காடு நாவலை அணுக வேண்டும். இந்த நாவலில் வரும் வேத நிலைகளின் இடம், அவ்வேதங்களின் சாரம், அவை கொள்ளும் முரண்கள், அவற்றில் வரும் வேதக் கதைகள் என அனைத்தையும் தருமனின் அகத்தை மற்றும் அவர் தேடலை மையமாக வைத்து அணுகும்போதே இந்நாவலின் முழு விரிவும் நமக்குக் கிடைக்கும்.  இந்நாவலைத் துவங்கும் சமயத்தில் தருமர் தன்னளவில் மட்டுமல்லாமல் வாசகர்களாகிய நம்மளவிலும் பாதாளத்தில் இருப்பவராகவே உள்ளார். அந்த இருளில் இருந்து ஒளியை நோக்கிய ஒரு பயணமாக, மண்ணுக்கடியில் ஆழத்தில், அழுத்தத்தில், பல்வேறு மாசுகளோடு இருக்கும் பொன் தாது வெளிக்கொணரப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டு, உருக்கப்படும் எரியை சுவர்ணதாரையாக்கி, ஜடாக்னியாக உருமாறும் ஒரு பயணமாக, தருமர் தன்னைத் தானே கண்டடையும் பயணமாக இந்நாவலை பார்க்கலாம். நாவலின் மையத் தரிசனம் என்பது தருமர் தன் விழைவைக் கண்டடைவதும், அதை முழுவதுமாக அறுத்து மீள்வதுமே.

சௌனகம்:

தருமருக்கு முதல் வேத சாரம் சௌனக வனத்தில், பிரமாணம் என்ற பேரால மரத்தின் நிழலில் சௌனகரால் வழங்கப்படுகிறது. இந்த வேதநிலையின் தத்துவம் முழுவதும் விழைவையும், அதனால் வரும் துன்பத்தையும், ஒரு அரசன் எவ்வாறு தனக்கு மட்டுமான விழைவான திருஷ்ணையில் இருந்து வெளிவந்து செயலாற்ற வேண்டும் என்பதையும் விரிவாகக் கூறுகிறது. இங்கே விழைவு என்பது ஒவ்வொரு உயிரின் இயல்பான நிலை என்பதையும், அவ்விழைவை வேட்பதற்கே வேள்விகள் எனவும் விளக்குகிறது. விழைவு என்பது சரிதான், ஆனால் ஒரு அரசன் தன் பொருட்டான விழைவை தவிர்த்தாக வேண்டும் என்கிறது சௌனக வேத அறிதல். ஒரு அரசன் அரசை விழைவது என்பது எரி விறகை அணுகுவது போல நடக்க வேண்டும் என்கிறது. மாறாக புலி இரையை அணுகுவது போல அணுகினால் அவன் துயரையே அடைகிறான். இங்கே தருமருக்கு தன்னைப் பற்றிய முதல் அறிதல் கிடைக்கிறது. காட்டிற்கு வந்தவர்களில் அவர் ஒருவர் மட்டுமே நகரைப் பற்றியும், அரசைப் பற்றியும் எண்ணிக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் அனைவரும் காட்டின் ஆழத்திற்கு தன்னைக் கொடுத்துவிட்டிருக்கின்றனர். முன்பு சதசிருங்கத்தில் குந்தி இருந்தாற்போல் தருமர் இப்போது இருக்கிறார்.

துவைதம்:

தருமர் இங்கிருந்து செல்வது துவைதக் காட்டிற்கு. இங்குதான் மான் என்ற உருவகம் முதன் முதலாக சொல்வளர்காட்டில் வருகிறது. ஒரு பாறை இரண்டாகப் பிளந்து விழும் ஒலியை தருமர், பீமன், அர்ஜுனன் மற்றும் திரௌபதி அவரவரின் மனநிலைக்கு ஏற்றாற்போல் கனவில் கற்பனை செய்துகொள்கின்றனர். தருமருக்கு அது அம்பு பட்டு அலறும் மானாக கனவில் தோன்றுகிறது. காலையில் விழித்தெழுகையில் அது அவருக்கு அந்த மானின் நகைப்பொலியாகத் தோன்றுகிறது. ஆம், தன் விழைவால் வருந்திக் கொண்டிருப்பவர் அவர். அதே சமயம் அந்த விழைவை ஏற்றிருப்பவரும் அவரே. இது தருமரின் இருமை.

துவைதக் காட்டில் சார்வாகத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களின் அறிதல், எரிதல் என்பதும் விறகின் ஒரு நிலையே என்கிறது. எனவே விறகைப் பேண ஆணையிடுகிறது. அதாவது விழைவு என்பது மானுட உடலின் ஒரு நிலையே, எனவே மானுட உடலால் சாத்தியமான அனைத்தையும் அடையலாம், விழையலாம். அதற்காக அவ்வுடலைப் பேண வேண்டும். அதன் புலன்களின் எல்லைகளுக்குட்பட்ட அறிவே அவ்வுடல் கொள்ளச் சாத்தியமானது. எனவே அனைத்து அறிவும் அவ்வுடலைச் சார்ந்தே இருந்தாக வேண்டும், அதுவே முதல் மெய்மை. மற்றவையெல்லாம் அந்த முதல் மெய்மையைச் சார்ந்தவையே. எனவேதான் இது சார்வாகம். உடலைப் பேணும் மருத்துவமும் இங்கே நடக்கிறது. இக்காட்டில்தான் தருமர் தான் எவ்வளவு கொந்தளிப்புடன், தத்தளிப்புடன் இருக்கிறோம் என்பதை முழுமையாக உணர்கிறார். அவர் நீரில் மூழ்கும் பொழுதுதான் அலைகள் எழுந்து கரையில் இருந்த பாறைகளில் மோதி ஓசை வருகிறது. இத்தனைக்கும் அவர் சிற்றுடலர். பேருடலனான பீமன் மூழ்குகையில் அலையே எழும்புவதில்லை. ஒருபுறம் தனக்கான தேடலில் இருக்கும் தருமர், மீண்டும் மீண்டும் திரௌபதியிடம் மன்னிக்கக் கோருகிறார். அவள் தன்னை இறுக்கி, அமைதியாய் இருக்க இருக்க மேலும் மேலும் துன்பமடைகிறார். அது சினமாக மாறி அவளை பல முறை மானசீகமாகக் கொல்வது வரைகூட செல்கிறார்.

ராமன் சீதையை அவள் பிறப்பைச் சொல்லி வசைபாடியது போன்றே, திரௌபதியும் தருமனை ‘யாரறிவார்? மரவுரி அணிந்து காட்டிலிருக்கையிலும் மணிமுடியைக் கனவுகண்ட ஏதோ முனிவரின் விதையை அவர் ஏந்தியிருக்கலாம்.’ என கொன்று செல்கிறாள்.

ஐதரேயம்:

விழைவு மானுட இயல்பு நிலை, அது உடலின் ஒரு விருப்பே என்று அறிந்த பிறகும் தனக்கான விடை அமையாத தருமர் அடுத்ததாகச் செல்வது ஐதரேயக் காட்டுக்கு. இக்காட்டில் வேத அறிதலின் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்கிறது. இந்நிலையின் முதல் ஆசிரியரான மகிதாசர் தன் அன்றாடச் செயல்களையே, தன் பன்னிரு ஆண்டுகளின் குயவன் வாழ்வையே தவமாக்கி, ‘பிரக்ஞையே பிரம்மம்’ என்னும் ஆப்த வாக்கியத்தை கண்டடைகிறார். எங்கும் நிறைந்திருக்கும் பிரம்மம், ஒரு மானுடனால் அறிய இயன்ற அளவுக்கு அவனுள் நிறைந்திருக்கும் என்று பொருள்படும்படியான குடத்தில் மொள்ளப்பட்ட ஆகாயம் என்ற படிமத்தை முன்வைக்கிறது இம்மெய்யறிதல். எனவே அறியச் சொல்கிறது. ஐதரேய மெய்யறிதல் சிறகு என்பது பறக்கத்துடிக்கும் விழைவே, இப்பருவுடலே அது கொண்ட விழைவுகளால் ஆனதே என்கிறது. குடத்தில் அள்ளப்பட்ட வானம் போல அனைத்தும் அமைந்துள்ள முடிவிலிப் பெருக்கில் இருந்து விளிம்பு கட்டிப் பிரித்து இருப்பை உருவாக்கி அளிக்கும் சூரிய ஒளியை பருவடிவான பிரக்ஞை என்கிறது இம்மரபு. சார்வாகம் கூறும் காரண காரியங்களின் சுழற்சியை மேலும் மெருகேற்றி, சுழற்சியால் துவங்கும் எதுவும் சுழற்சியால் அழியுமாறும் ஆகும் என அறிகிறது ஐதரேயம். ஒவ்வொரு மனிதனும் ஒரு விழைவென்றால் அவ்விழைவுகள் பின்னிப் பின்னி விரிந்து உருவாவதை, அப்பெரு விழைவு சென்று எய்துவதை ஊழ் என்கிறது இது.

இங்கும் தருமருக்கு தான் முறைமைகளிலும், அரண்மனை வசதிகளிலும் எத்துணை ஆழ்ந்திருக்கிறோம் என்பதை அறியும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஐதரேய வேதநிலை ஏழு அரசர்களால் புரக்கப்படுகிறது. அளவான காற்றோட்டம் உள்ள அறையில், மென்பஞ்சுத் தூளியில், கொசுத் தொல்லை இன்றி வெகுநாட்களுக்குப் பிறகு நிம்மதியாகத் தூங்குகிறார் தருமர். அவர் முகத்தில் எஞ்சிய புன்னகையாக இந்த வசதிகள் மறுநாள் காலையில் இருக்கின்றன.

தைத்திரியம்:

ஒரு வேத நிலையின் சாரத்தை உணர்ந்தபின் நிறைவுறாமல் மேலும் தேடி அடுத்த ஆரண்யகத்தைக் கண்டடைவதைப் போலன்றி இக்காட்டிற்கு விதுரரின் வருகையால் கிளம்புகின்றனர் பாண்டவர்கள். இக்காட்டில்தான் முதன் முதலாக ஒரு தன்னறிதலும், மறுபிறப்பும் ஒரு பாத்திரத்திற்கு நடப்பதைப் பார்க்கிறோம். விதுரர்தான் அவர். கிட்டத்தட்ட மரணத்தை அணுகி, சகதேவன் கூறும் தன்னிலையை அறிந்து அவர் மீள்கிறார். அவர் மானுட விழைவுகளின் அடிப்படை ஒரு உயிர் மற்றொன்றின் மீது கொள்ளும் பற்றே என்று கண்டடைகிறார். அன்பென்றும், பாசமென்றும் உருமாறிக் காட்டும் மானுட உயிர்கள் கொண்டுள்ள பற்றே வாழ்வின் ஆதாரம் என உரைக்கிறார்.

இக்காட்டில்தான் தருமர் மானுட வாழ்வில் விழைவைப் போலவே பின்னிப் படர்ந்து நின்றிருக்கும் பற்றைக் காண்கிறார். ஒவ்வொரு வேத நிலையிலும் இளைய யாதவருக்கு எதிரான மனநிலை இருப்பதற்கு அவை அவற்றின் கொள்கைகள், வேத அறிதல்கள் மீது கொண்டுள்ள பற்றே காரணம் என விளங்கிக் கொள்கிறார். விழைவுகளை ஒறுத்தவர்கூட பற்றில் இருந்து விடுபட இயலவில்லை என்பதை அறிகிறார். அனைத்துக்கும் மேலாக அவரே ஒரு உயிர் பிறிதொரு உயிரின் மீது வைக்கும் பற்றின் எல்லையை ஒரு குரங்கின் வடிவில் அறிகிறார். இக்குரங்கு சர்வ சாதாரணமாக ஒரு மானின் கொம்பில் ஏறி விளையாடிச் செல்கிறது.

இங்கே சொல்லப்படும் சுனக்ஷேபரின் கதை மிக முக்கியமான ஒன்று. இது பற்றுக்கும் விழைவுக்குமான போரில் அன்பால் செலுத்தப்பட்ட அறம் வெல்வதைப் பற்றியது. தன் ஒரே மகன் மீது கொண்ட பற்றால் வருணனுக்கு பலி அளிக்க, வேத உச்சத்தை அடையும் பெருவிழைவு கொண்ட அஜிகர்த்தர் என்ற அந்தணரின் இரண்டாம் மைந்தனான சுனக்ஷேபனை பலி கொடுக்க முனைகிறான் ஹரிச்சந்திரன். மானுடப் பலி கொடுக்க விரும்பாததால் எந்த அந்தணரும் அவ்வேள்வியைச் செய்ய முன்வரவில்லை. எனவே தன் விழைவை தானே இயற்ற அஜிகர்த்தரே முன்வந்து தன் மைந்தனை பலி கொடுக்கும் வேள்வியைச் செய்கிறார். ஒரு மானுடன் பலியாவதைத் தாங்க இயலாத விஸ்வாமித்ரர் சுனக்ஷேபனை தன் மைந்தனாக ஏற்று தான் அதுகாறும் செய்த வாழ்நாள் தவத்தை அவனுக்கு அளித்து மீட்கிறார். இங்கே வரும் விஸ்வாமித்ரரின் கொடை தருமரின் ஆழ்மனதில் பிறிதில்லாது, அள்ளக் குறையாது, அளிக்க வேண்டும் என்ற எண்ணம் விழுந்த முதல் விதை.

பிருஹதாரண்யகம்:

சொல்வளர்காட்டில் ஒரு குறுநாவல் என சொல்லப்படத் தக்க வகையில் அமைந்த ஒரு பகுதி இது. ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற ஆப்த வாக்கியத்தின் கதை. யாக்ஞவல்கியர், காத்யாயினி மற்றும் மைத்ரேயி அன்னையின் கதை. இப்பகுதியில்தான் சீதையின் மிதிலை மற்றும் ராஜரிஷி ஜனகர் பற்றிய விரிவான விவரணைகள் வருகின்றன. முதலில் ஏன் சீதையைப் பற்றியும், மிதிலையைப் பற்றியும் இவ்வளவு விரிவான விவரணைகள் தேவை? வெண்முரசில் எந்தப் பகுதியும் வீணாக எழுதப்படுவதில்லை. மிக நேரடியாக ஒரு தொடர்பை நாம் கண்டறிய இயலாவிட்டாலும், அத்தொடர்பிற்கான முகாந்திரங்கள் தரப்பட்டிருக்கும். அவற்றைக் கண்டறிவதே ஒரு வாசகருக்கு முன்னுள்ள சவால். தருமர் அடைந்து கொண்டிருக்கும் அனைத்து அவஸ்தைகளையும் காடேகி, கவரப்பட்டு சிறையுற்று, பொருந்தாப் புறக்கணிப்பால் மனம் நொந்து எரியேகிய பொறையின் மகள் அல்லவா அவள்? அவளும் அவரும் இணையும் புள்ளி இதுவே. அவள் உணர்ந்து அடைந்ததையே இவரும் அடையப் போகிறார். எனவே அவள் விரிவாக வருகிறாள்.

பிற ஆரண்யகங்கள் எல்லாம் ஒறுத்துச் செல்வதைச் சொன்னால், இக்குருநிலை அனைத்தையும் கொண்ட முழுமைக் கல்வியை முன்வைக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் இக்கல்விநிலையிலேயே பெண்களுக்கு இருக்கும் தத்துவத் தேடலுக்கான சாத்தியம் முன்வைக்கப்படுகிறது. இதற்கு முன்பு ஐதரேயம் மகிதாசரின் தாயின் கூற்றில் இருந்துதான் துவங்குகிறதென்றாலும் அங்கு அவளுக்கென்று எந்த மெய்யறிதலும் அளிக்கப்படவில்லை. எங்கும் பெண்களுக்கு மெய்யறிதல் வழங்கப்படவில்லை. ‘நானே பிரம்மம்’ என்ற சொல்லில் துவங்கினாலும் யாக்ஞவல்கியருக்கு அது வெறும் சொல்லாகவே இருந்ததன் காரணம் அவர் தன் துணைவி காத்யாயினியின் மெய்த் தேடலை கடைசி வரை உணரவே இல்லை என்பதே. அதை அவருக்கு உணர வைத்தவள் மைத்ரேயி. இக்காட்டில்தான் பெண்களுக்கும் தேடல் உண்டு என்பதையே தருமர் உணர்கிறார். பிருஹதாரண்யகத்தை தற்போது இருக்கும் கலைகளையும் உள்ளடக்கிய முழுமைக் கல்வியை நோக்கி செலுத்திய மைத்ரேயி அன்னை, காத்யாயினியுடன் சென்று சேர்ந்த கார்கியின் குருநிலை பற்றி அறிகிறார். முதன் முறையாக திரௌபதியை அறிய வேண்டிய தேவை அவருக்கு புரிகிறது. அதுவரையில் “தான் இவ்வளவு இறங்கிப் போய் கெஞ்சிய பிறகும், ஆணென்றுகூட பாராமல் தன்னை மதியாமல் இருக்கிறாளே இவள்” என்ற எண்ணமே அவருக்கு இருந்துகொண்டிருக்கிறது. அவ்வெண்ணம் மாறுமிடம் இது.

சாந்தீபனி:

நியாயமாக கார்கியின் குருநிலைக்குச் செல்வதே இயல்பான போக்காக இருந்திருக்கும். மாறாக பார்த்தனின் அறிவுறுத்தலால் அவர்கள் சாந்தீபனி குருநிலைக்கு செல்கிறார்கள். இங்கே அவர்கள் மீண்டும் கிருஷ்ணனை பார்க்கிறார்கள். சாந்தீபனி குருநிலை மொத்த வேதக் கல்வியையும் இணைத்து ஒரு சமன்வயத்தை ஏற்படுத்துகிறது. முதன் முதலாக அனைத்துமே லீலை, எதற்கும் எப்பொருளும் இல்லை, அவை நடந்தாக வேண்டும், எனவே நடக்கின்றன. பெரும் லீலை. விழைவும் அதன் விளைவும் நம் கையில் இல்லை. நம் வழியாக ஒழுகிச் செல்பவையே அவை என்பதாக தருமர் புரிந்துகொள்கிறார். சற்றே தன் குற்ற உணர்வில் இருந்து தெளிகிறார். நடந்தவற்றை மாற்ற இயலாது என்பதையும் அவை ஒரு பெரும் பெருக்கின் சிறு துளிகள் எனவும் உணர்கிறார். ஒரு எல்லையில் கிருஷ்ணனுக்கே ஒரு பதில் சொல்லும் தெளிவை அடைகிறார்.

இங்கே தருமர் பற்றின் மற்றொரு முகத்தைக் காண்கிறார். கிருஷ்ணனின் குரு தன் மகன் மீது கொண்ட பற்றால் தன் ஞான முழுமையை அடையாமல் இருந்ததையும், மிகக் குரூரமாக கிருஷ்ணனின் கேள்வியால் துளைக்கப்பட்டதையும், அத்துயரும், அதன் உண்மையும் அவரை கிருஷ்ணன் மீது தீச்சொல்லிட வைத்ததையும் அவர் அறிகிறார். மைந்தன் மீதான பற்று, குருவின் மீதான பத்ரரின் பற்று போன்ற மானுட உயிர்களின் மீதான அன்பு என்னும் விலங்கு மானுடத்தின் மீது செலுத்தும் தளையை அறிகிறார். அனைத்துக்கும் உச்சமாக இந்த பற்று கிருஷ்ணனையே தளர்வுறச் செய்வதையும் காண்கிறார். மறு எல்லையில் அந்தப் பற்றே எவ்வாறு ஒருவரை துயரில் இருந்து மீட்டு வர இயலும் என்பதையும் அவர் தைத்ரியத்தில் சந்தித்த குரங்குக் குட்டியின் நினைவை மீட்டுவதன் மூலம் உணர்கிறார்.

மைத்ராயனியம்:

இக்காட்டிற்கு கிருஷ்ணரின் வழிகாட்டலின் பேரில் வந்து சேர்கிறார்கள். கிருஷ்ணன் மிகத்தெளிவாகவே அனைத்து ஆரண்யகங்களும் இணையும் புள்ளி என இக்காட்டைச் சொல்கிறார். அதை அனுபவபூர்வமாக உணர்கிறார் தருமர். இக்காட்டிலேயே அவரின் அனைத்து அறிதல்களும் முனை கொள்கின்றன. முக்கியமாக ‘பசியும் ருசியும் விலகியபின்னரே நீ அன்னத்தை அறியத்தொடங்குகிறாய். அதன்பின்னரே அருஞ்சுவை உன் கைகளில் வந்தமைகிறது’ என்ற உண்மை. இந்தப் பசி, ருசியை விடுதல் என்பதை பற்று, விழைவை விடுதல் என்று பொருள் கொண்டால் கிருஷ்ணனின் கோலாகல மனநிலையை அறிந்து கொள்ளலாம். இக்காட்டிலே தருமர் கேட்கும் இரு கதைகள் அவரின் தேடலை முழுமை செய்கின்றன.

மாந்தாதா: இக்கதையில் மைந்தர் மேல் கொள்ளும் பற்று எவ்வாறு ஒரு வாழ்வின் தரிசனம் ஆகிறது என்பதை அறிகிறார். இதன் மாந்தாதா ‘என்னை உண்ணுக’ என்று சொல்லுமிடம் உச்சமானது. அதை அவர் தன் நாட்டில் உளவறிய வந்து மாட்டிக் கொள்ளும் எதிரி நாட்டு ஒற்றனிடம் சொல்கிறார். ‘என்னை உண்ணுக’ என்ற சொல்லின் பரு வடிவை அவர் மைத்ரி என்ற ஆலமரமாகக் காண்கிறார். அம்மரம் எங்குமே செல்லவில்லை. ஆனால் அதை உண்ட பறவைகள் வழியாக அம்மரத்தின் கன்று தென்முனை குமரி வரை கூடச் சென்றிருக்கும் என்ற தரிசனம் அபாரமான ஒன்று. அளிக்க அளிக்க அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்ற உண்மையை அவர் அகம் ஏற்ற தருணம் அது. அள்ள அள்ளக் குறையாத அறங்களின் ஊற்றாக அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என தன்னறத்தை அவர் ஆழுள்ளம் உணர்ந்த தருணம். அசோக வனத்தில் சீதையும் இப்படித் தானே தன்னைச் சூழ்ந்த அரக்கியருக்கு இருக்கிறாள்? இன்னும் குறிப்பாக திரிசடைக்கு.

ஜந்து: வெண்முரசில் பல கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் வந்தவற்றிலேயே மிகக் கொடூரமான கதை என்றால் அது இந்த ஜந்துவின் கதைதான். மானுடரின் விழைவு எந்த எல்லை வரை செல்லும் என்பதை முழுமையாக தருமருக்கும், நமக்கும் உரைக்கும் கதை இது. இதில் அந்தத் தந்தை ஜந்துவின் கழுத்தை அறுக்கப் போகும் நேரத்திலும் அதன் அதரத்தின் புன்னகை மனதில் இருந்து நீங்க பல நாளாகும். மானுடம் இதுநாள் வரை பேணிய அனைத்து அறங்களும், விழுமியங்களும் அதன் விழைவுகளுக்காக அவியிடப்படுகின்றன. இதில் யமன் ஜந்துவின் தந்தையான சோமகனிடம் கேட்கும், ‘அரசே, சொல்க! இந்த நூறு மைந்தரும் ஆயிரம் பெயர் மைந்தரும் பன்னீராயிரம் மறுபெயரரும் உனக்கு எவ்வகையில் பொருட்டு? எதற்காக இவர்களை இழக்கச் சித்தமாவாய்?’ என்ற கேள்விக்கு பதில் விழைவு என்றே ஆவதைக் காண்கையில் விழைவு என்பதன் வீரியத்தை உணர்கிறார். மிகத்தெளிவாகவே தன் விழைவின் விபரீதத்தை உணர்கிறார். எங்கோ சொல்லப்பட்ட இரு கதைகளை விழைவு, பற்று என்ற வகையில் ஒரு புள்ளியில் கோர்த்து ஒரு தரிசனத்தை உருவாக்கிய ஆசிரியரின் கண்டடைதல் அபாரமானது. இத்தகைய அடைதல்களே அவரை வெண்முரசை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கின்றன.

விழைவு:

இதுகாறும் அடைந்த அனைத்து அறிதல்களையும் விழைவு ஒரு புள்ளியில் ஒரு அருகப் படிவர் மூலம் கொண்டு வந்து சேர்க்கிறது சொல்வளர்காடு. ஏன் அருகர்? வேத முனிவர்கள் வேள்வியின் மூலம் விழைவை அறிவித்து, வேட்டு வேண்டியதைப் பெறுகிறார்கள். மாறாக அருகர்கள் ஊரில் இருந்து விலகி, ஆழங்களில், அவற்றின் இருளில் ஊழ்கத்தில் அமர்ந்து தங்கள் விழைவை அறுத்து மெய்மை அடைகிறார்கள். எனவே விழைவு என்பதைப் பற்றி ஒரு அருகர் பேசுவதே முறையாக இருக்க முடியும். மட்டுமலாமல் முன்பே ஒருமுறை தருமராக அவர் காந்தியை எழுதிக் கொண்டிருப்பதாக ஜெ சொல்லியிருந்தார். காந்தியின் சமணத் தொடர்பும் நாம் அறிந்ததே!! இனி அருகரின் வார்த்தைகள்:

“அரசே, இப்புவியில் அறமென்றும் அன்பென்றும் ஏதுமில்லை. இருப்பது விழைவு ஒன்றே. விழைவுக்குரியதை நாடும் வழியையும் அதை பேணும் முறைமையையும் மானுடர் அறமென வகுத்தனர். விழைவை அன்பென்று ஆக்கி அழகுறச்செய்தனர். விழைவை வெல்லாதவனால் தன் விழைவை அன்றி எதையும் அறியமுடியாது. அறிபடுபொருள் அனைத்தும் விழைவால் உன்னிடம் தொடர்புகொண்டிருக்கையில் வேறெதை அறியும் உன் சித்தம்?. அரசே, இப்புவியில் அனைத்துக் கொடுமைகளும் விழைவின் விளைவாகவே செய்யப்படுகின்றன. இங்கு மெய்மையும் அறமும் விழைவுகளால் விளக்கப்பட்ட வடிவில்மட்டுமே கிடைக்கின்றன. விழைவறுத்து விடுதலை கொள்க! அறிவதறிந்து அமைக! அருகனருள் அதற்குத் துணை கூடுக!”.

“களிம்பும் துருவுமென படர்பவை ஆணவமும் அறியாமையும் பிறவும். விழைவோ உலோகக்கலவை என உள்கலந்து உருவென்றாகியது. உருகியழிந்து பிறந்தெழாமல் விழைவறுத்து மீளமுடியாது.”

மீண்டும் மீண்டும் திரௌபதியை நாடும் தன் மனதை, தன் விழைவை என்ன செய்வது எனக் கேட்கும் தருமரிடம் அருகர், “அவளை அறிக!  அறிதலே கடத்தல். கடப்பதே விழைவை வெல்லும் ஒரே வழி. அவளை அறிதலென்பது அவள் அழலை அறிதலே. அழலுக்கு அஞ்சி அப்பால் நிற்பவர்கள் அதை அறிவதில்லை.  தீயில் இறங்கி உருகி மாசுகளைந்து வெளிவரும் பொன் அறியும் தீயென்றால் என்னவென்று. ஆகவே பொன்னை ஜடாக்னி என்கிறார்கள். தீயை சுவர்ணதாரா என்கிறார்கள்.” – ஆம் அறியவே அவர் எரிபுகுகிறார். சீதையும் அதற்காகவே.

யக்ஷவனம்:

தருமன் என்னும் காதலன்: இவ்வனத்திற்கு அவர்கள் வருவதற்கு முன்பு வரும் ஒரு இளிவரல் சூதனின் பகுதிகள் மிக முக்கியமானவை. வெண்முரசில் சூதர்கள் பல பகுதிகளில் வந்தாலும் இளிவரல் சூதர்கள் வரும் பகுதிகள் எளிதில் கடக்க முடியாதவை. இவர்கள் அனைத்தையும் கவிழ்த்துப் போட்டு பகடி செய்பவர்களே. இருப்பினும் இவர்களின் பகடிகள் பல அறிதல்களைத் தருபவை. இப்பகுதியில் இந்த சூதன் பேசுபவை மிகத் தெளிவாகவே சீதையை காட்டி விடுகின்றன.

முதலில் அந்த நாரையின் இறகைப் பார்த்து முண்டக உபநிஷத்தின் ‘ஒரு பறவை உண்ண, மறு பறவை பார்த்திருந்த’ கதையைச் சொல்பவன் அடுத்ததாக நேரடியாக வால்மீகியின் முதல் சுலோகத்தின் கதையைச் சொல்கிறான். அந்த ஆண் துணையை இழந்து தவிக்கும் பெண் நாரைக்கு தன் தவத்தின் பலனைத் தந்து கவி பாடி, அப்பறவைகளை வாக்தேவியின் கையில் விளையாட விட்டு சாகா வரமளித்தவர்தானே சீதையைப் பாடிய புற்றுறை முனி. இவையும் போதாது என்று தருமனின் நீர் என்ன பித்தரா என்ற கேள்விக்குப் பதிலாக சூதன் “பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும் பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ என்பார்களே?” என்று கம்பனை வேறு துணைக்கு அழைக்கிறான்.

சீதையின் கதையைச் சொல்லிவிட்டு அவள் உதிர்த்த இந்த இறகின் பெயர் என்ன என்று கேட்கும் சூதனிடம் தருமர் “ராமா” என்று பதிலிறுக்கிறார். அவனும் அதுதான் சரியான பதில், காதல் கொண்டவளுக்குப் பெயரே இல்லை, காதலனின் பெயரையே சூடிக் கொள்கிறாள் என்கிறான். அக்காடு முழுவதும் நிறைத்திருக்கும் ராமனின் துயரக் குரலில் ஒலிக்கும் சீதா என்ற ஒலியை தருமர் மட்டுமே கேட்கிறார். இங்கே நம்முன் வரும் தருமன் அறத்தின் மூர்த்தி அல்ல, பெருங்காதலன். தருமரின் மிக முக்கியமான ஒரு பரிமாணம் நமக்கு வெளிப்படும் தருணம் இது. இந்தப் புள்ளியில் தருமர் அவளை வெறுக்கவில்லை. அவளிடம் மன்னிப்பும் கோரவில்லை. அவளை அவளாக விரும்புகிறார். மானுடம் கண்டடைந்த சாமானிய தளத்தில் செயல்படும் தரிசனங்களில் உச்சம் என காதலையே சொல்ல இயலும். வேறு எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு உயிர் பிறிதொரு உயிரிடம் கொள்ளக்கூடிய பெரும் பற்று காதலே. அக்காதலை அறியாத ஒருவரால் எவ்வாறு மானுடத்தை, உயிர்களை, இப்புடவியை ஏற்கவும், விரும்பவும், கொள்ளவும் இயலும்?

விழைவு என்னும் மான்:

இப்பகுதியில் தருமரை கந்தமாதன மலை நோக்கி கொண்டு செல்லும் மற்றொரு கதாபாத்திரமாக சுஃப்ர கௌசிகர் என்னும் வேதியர் வருகிறார். இவரும் வேள்விதான் செய்கிறார். பலியும் இடப்போகிறார். இன்னும் குறிப்பாக ஜந்து கதையில் வந்த அதர்வ வேள்விக்கு இணையான ஒரு பூத வேள்வியே இவர் செய்வது. ஒரே ஒரு மாற்றம், அவியாக தன்னையே பலியிடப் போகிறார். ‘தன்னையே’ தன் சமூகத்தை உண்ணச் சொல்கிறார். மாந்தாதாவும் சோமகனும் சந்திக்கும் புள்ளி. தன்னையே உருக்கி சமூகத்துக்காக அர்ப்பணிக்கும் ஒருவர்.

இவரின் சிஷ்யர்களில் ஒருவருக்கு அவர் எரி புகுவதில் விருப்பமில்லை. எனவே அவர் வேள்வி எரி எழுப்பும் அரணிக் கட்டையை தூக்கி எறிந்து விடுகிறார். அதை ஒரு மான் எடுத்துக் கொண்டு செல்கிறது. அரணிக் கட்டை இருந்தால்தானே சுஃப்ர கௌசிகர் எரி புகுவார்? மானின் முக்கியமான இயல்பு, அது மிக அழகான மிருகம். ஆனால் மிகுந்த அச்சம் கொண்டதும் கூட. நிலையற்ற மனம் கொண்டது. விழைவு அப்படிப்பட்டதுதான். அது நிறைவேறுவதுவரை அப்படித்தான் அச்சம் கொண்டு கால் மாற்றி நின்று கொண்டிருக்கும் மானைப் போலவே நம் மனதை வைத்திருக்கும். அதை முற்றிலுமாக புறக்கணிப்பது என எண்ணினால் அதைத் தடுக்கும் வகையில் அப்புறக்கணிக்கும் எண்ணத்தையே எடுத்துக்கொண்டு யாரும் அணுக இயலாத நச்சுப் பொய்கைக்கு கொண்டு சென்று விடும். அப்படி ஒரு எண்ணம் நம்மில் வந்தாலே அது மறைந்து விடும். அதன் காலடித்தடங்களையும், மணத்தையும் வைத்தே அதை பின்தொடர இயலும். அதையும் மீறி அதைத் துறக்க விரும்பினால் நம்முடன் நம் விருப்பங்களை நிறைவேற்றுவதாக பேரம் பேசும். அதையும் தாண்டி வருகையிலேயே ஒருவர் விழைவின் ஆழத்தை, அது தன்னுள் கலந்து ஒன்றுடன் ஒன்றாக உருகி இணைந்திருப்பதை முழுமையாக உணர இயலும். இதையே தருமர் யக்ஷவனத்தில் இருந்து திரும்பும் வழியில் உணர்கிறார். எரிபுகத் தயாராகிறார்.

கந்தமாதனம்:

தருமர் கந்தமாதன மலையில் செய்வது தன் விழைவை அவியாகச் சொரிந்து செய்யும் ஒரு வேள்வி. அவர் அதுகாறும் தன்னுள் சேர்ந்த தன் விழைவின் வெவ்வேறு வடிவுகளை காண்கிறார். அவற்றை நெருப்புக்கு அவியும் இடுகிறார்.

  1. கந்தர்வர்கள்: அவர் முதலில் காணும் தன் விழைவின் உருவங்களாக கந்தர்வர்கள் வருகின்றனர். இவை அவர் தன் இளமையில் பாண்டுவின் தோளில் அமர்ந்து கேட்டவை, அவ்வயதில் அவருள் குடியேறியவை. இனிமையே உருவானவை. எனவேதான் தீயில் சென்று விழுந்தபின்னும் இசையாக எஞ்சுபவை.
  2. பொன் தேவன்: இரண்டாவதாக வருபவன் பொன்னை உருக்கி வடித்தெடுத்த ஒரு பேரழகன். இத்தேவன் வரிசையாக தன்னைப் போன்றவர்களால் பெருகுகிறான். அவர்களே முதல் முதலாக அவருள் இருந்த விழைவை ஒரு சொல்லாக எடுத்து தங்கள் முன் போட்டு விளையாடுகின்றனர். அவ்விழைவை சரியாக உணரவேண்டி அதைத்தன்னிடம் வீசுமாறு கூவுகிறார் தருமர். இந்த பொற்தேவன் அவர் உள்ளே இருந்த அழகனான, அறத்தின் உருவினனான ஒரு அரசன் என்ற விழைவே. இன்னும் குறிப்பாக பொற்கவசம் அணிந்த தேவன் என்பதும், அழகன் என்பதும் இவன் கர்ணனின் உருவமே என்றுகூட வாசிக்கலாம். அவன் அங்க நாட்டு பட்டாபிஷேகப் பகுதியில் அவனை அழகன் என்றும், அறத்தான் என்றும் உணர்ந்தவர்தானே இவர்! எங்கோ உள்ளத்தின் ஒரு மூலையில் திரௌபதியிடம் காதல் கொள்ளத் தேவையான ஒரு உருவாக, உடல் மொழியாக இவ்வுருவமே இருந்திருக்கக் கூடும்.
  3. நாகம்: இப்பொற்தேவர்களை தீயிலிட்டு அவர்கள் உருட்டி விளையாடிய சொல்லை ஒரு நாகமணிக்கல்லாக மாற்றுகிறது ஓர் நாகம். பொதுவாக நாகம் நம் மரபில் விழைவுக்கு குறியீடாகப் பயன்படுவது. மாறாக இங்கே நாகம் தருமரின் விழைவின் ஒரு முகமாக சினத்தின் குறியீடாக வருகிறது. இந்த நாகமே அச்சொல்லை, அவர் விழைவை அவர் விழியறியத் தருகிறது. அவரின் அறத்தான் என்றாகும் விழைவு.
  4. கரிய தெய்வம்: தன் சினத்தையும் அவியிடும் அவர் முன் அடுத்ததாக அவர் விழைவு ஒரு கரிய தெய்வமாக எழுந்து வருகிறது. அதற்கு விழியில்லை. ஆம் விழைவு எவ்வாறு விழி கொண்டிருக்க இயலும்? அது அவரின் விழைவையே விழியாக்கிக் கொள்கிறது. இது உண்மையில் அவரின் அறத்தான் என்னும் பிம்பத்தையே அரசனாவதற்கான மூலதனமாக்கிய குந்தியே. தன் தாய் மீதான விழைவையும் அவர் அவியாக்குகிறார். மிகச் சரியாக அது அவரை மைந்தா என அழைக்கிறது. அதுவும் குருதி மணத்துடன். ஆம், கர்ணனைக் கொன்று உண்டதே இதற்காகத் தானே. மற்றொரு வகையில் அரச பதவி என்பதே குருதி வாசம் கொண்டது என்றும் வாசிக்கலாம்.
  5. பதினாறு முகம் கொண்ட தெய்வம்: அன்னையையும் துறக்கும் அவர்முன் பதினாறு முகம் கொண்ட தேவியாக உருமாறுகிறது அந்த தெய்வம். ஆம், குந்தியின் மாற்றுருதானே திரௌபதியும்? அவரின் அறத்தானாக வேண்டும் என்ற விழைவை மகாருத்ரமாக அவர் கையில் தருகிறது இத்தெய்வம். அவர் இதையும் துறக்கிறார்.
  6. அன்னம்: ஒரு வழியாக தன்னில் விழைவை ஏற்படுத்திய அனைத்தையும் துறக்கும் தருமர் தன் கையில் ஒரு நீல மணியாக வந்திருக்கும் விழைவை பார்க்கிறார். அது அன்னமாகத் தெரிகிறது. பசித்தவருக்கெல்லாம் அவியாகும் அன்னம். பசி என்பதை அறிவுப் பசி, உடல் பசி, பொருள் பசி என பலவாறாகப் பிரித்தால் அவை அனைத்தையும் தீர்க்கும் ஒரு அறத்தானாக, ஒரு அரசனாக அமைவதே அவர் கையில் வைத்திருக்கும் அன்னத்தின் பொருள். ஆயினும் அந்த அன்னம் அல்ல அவர், எனவே அதையும் துறக்கிறார். அதுவரையிலும் அவருள் எரிந்து கொண்டிருந்த ஏதோ ஒன்று ஒரு கணம் அடங்குவதை உணர்கிறார். அதைப் போன்றே கந்தமாதனத்தின் நெருப்பும் ஒரு கணம் அடங்கி அமைகிறது.
  7. தன்னையே அவியாக்கல்: அடுத்த கணம் மீண்டும் எரியும் அந்த நெருப்பின் முன், தன்னையே ஆகுதியாக இடும் தருமன் தன் விழைவை, தானாக இருக்கும் ஒன்றை முற்றிலுமாக துறக்கிறார்.

இதன் பிறகு மீண்டு வரும் தருமருக்கு அனைத்தும் ஒன்றாகத் தெரிகிறது. அவர் தன்னையே மாந்தாதாவாக உணர்கிறார். எப்பசியுடையாருக்கும் பசியாற்றும் அன்னம் குறையாக்கலமாக மாறுகிறார். எப்படி பிரிந்தாலும் அருள் புரியும் தருமமாகவே ஆகிறார்.

சீதையும் இவ்வாறே தன்னை தூய்மை செய்துகொள்ள, தன் விழைவை முற்றிலுமாகத் துறந்து, தன் குலத்துக்கு, அரசுக்கு அன்னம் குறையாக் கலமாக வழிகாட்டிக் கொண்டிருந்த அரசியாக இருந்த அதே நிலைக்குத் திரும்பும் வகையில், ராமனை மட்டுமன்றி மானுடரையும், எவ்வுயிரையும் அறியும் தாயாக மாற எரி புகுகிறாள். இவ்விடத்தில் கம்பன் காட்டும் சீதை துயருற்றவள் அல்ல. மானுடக் கீழ்மையைக் கண்டு அயர்வுற்றவளும் அல்ல. பிறவிப் பெருங்கடல் நீந்தி தன்னில்லம் நோக்கி செல்லும் ஒருத்தி. அவள் முழுமையானவள். துயரற்றவள். அனைத்தையும் காண்பவள். கடந்து சென்றவள். அமைந்தவள். அவள் ராமன் மீது சினம் கொள்ளவில்லை என்பதே அவள் ராமனைக் கடந்து விடுகிறாள் என்பதற்கு மிகச் சிறந்த சான்று. இதற்குப் பிறகு அவள் கம்பனில் பேசவே இல்லை. மலர்ந்த முகத்துடன் அனைவருக்கும் அருள் புரியும் பேரரசியாக அவள் இருக்கிறாள். தருமனும் அவ்வாறே. தற்பிரிந்து அருள் புரி தருமம் அவ்வாறுதான் இருக்க முடியும்.

Aside

மகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு

வண்ணக்கடல் –  முன்னுரையில் ஆசிரியரே சொல்வது போல,  இது வண்ணங்களின் கதை அல்ல. வண்ணத் திரிபுகளின் கதை. வண்ணபேதங்கள் ஒன்று கலந்தால் எஞ்சுவது அதன் ஆதி வண்ணம். கருமை. இருளின் வண்ணம். குரோதத்தின் வண்ணம். பேராற்றலும், பேரன்பும், பெருந்தன்மையும்  துதிக்கையாக, தந்தமாக, மத்தகமாகக் கொண்டு மாவேழமென எழும் துரியன், அவனை மகாக்ரோத ரூபனாக்க  உயர்ந்து வந்த  நியதிகளின் கதை.

இளநாகன்:

ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன்,   பதினாறு வயது, ஏழுதெங்குநாட்டு சேந்தூர்க்கிழான் தோயன்பழையன்  அவையில்   பாடிப் பரிசில் பெறக் காத்திருக்கிறான். பாணர்களின் சொல்மறம் அறியா  பழையன்  அவையில் பாணர்களுக்கு நிகழும் அவமதிப்புக்கு  நிகராக  பழயனை இளிவரல் செய்து கவி இயற்றி  அவன் முன்பே  பாடிக் காட்டுகிறான்.

மிக மிகப் பிந்தி இதை உணரும் பழயனின் காவலர்கள் வசமிருந்து தப்பி வடக்கு நோக்கி நகர்கிறான்.  மதுரை, புகார், காஞ்சி, வெற்றித் திருநகர், நெற்குவை நகர், அரசப் பெருநகர், களிங்கபுரி, கதிரெழு நகர், பொன்னகரம் வழியே பல்வேறு பெண்கள், பல்வேறு போதைகள், பல்வேறு பாணர்கள், வித விதமான நிலக் காட்சிகள், ஒன்றை ஒன்று மறுக்கும், பின்னிக் கடக்கும், தொகுக்கும் மெய்த் தேட்டங்கள், உணர்வு நிலைகள், வழியே  அஸ்தினபுரியை நோக்கி பயணிக்கிறான்.  அகத்திலும் புறத்திலும் அவனை செலுத்தும் தேடல்களுடன், சூதர்கள் நாவில் அழியாச்சொல்லென வாழும் பலநூறு அஸ்தினபுரிகளில் ஏதோ ஒன்றினில் அவனும் ஒரு சொல்லாகி நிறைகிறான்.

அவன் காணும் இரண்டு தலையாய நிலக் காட்சிகளில் ஒன்று, முதுமதுரை. கடல் கொண்ட பஃறுளி  ஆற்றைக் கடந்து காணும் முது மதுரை. இரண்டாவது  விண்ணில் இருந்து விழுந்த அசுரர்களின் நகரமான ஹிரண்மயம்.  வெண்முரசு வரிசையில் வளர்ந்துகொண்டே வரும்  நில, பருவ கால மாற்றங்களின்  அழகிய சித்தரிப்பின் வளர்ச்சி  இந்த நாவலில் பல இடங்களில் அழுத்தமாகவும், சில இடங்களில் பூடகமாகவும்  முன் வைக்கப்படுகிறது. குறிப்பாக  காடு நீங்கி தன் மைந்தர்களுடன்  அஸ்தினபுரி  செல்லும் குந்தி, கடந்து செல்லும் நிலங்களில், கந்தமாதன மலையும் ஒன்று.  அவர்கள் கடந்து செல்லும் அம்மலைதான் அடுத்த நாற்பதாண்டுகளில் எரி குழம்பு பொங்கும் எரி மலையாகிறது,  சொல்வளர்காடு நாவலில் தருமனை மாந்தாதாவாக மாற்றும் அந்த எரிமலை  இப்போது உறங்கிக் கொண்டிருக்கிறது.   இந்த நாவலின் குறியீட்டு ரீதியான அழகாக இக்காட்சி மாறுகிறது. நாவலின் மொத்த மையமும்  உறங்கிக்கொண்டிருக்கும் எரிமலை ஒன்று, உறுமத் துவங்கும் கணத்தை நோக்கியதே.

இளநாகனின் பயணத்தில்  இரண்டு நிறுத்தங்கள் முக்கியமானவை.  அவன் விதவிதமான அனுபவங்களைக் கடந்து சென்றாலும், அவனது அகத்தை ஒரு எல்லையில் ஒளியாலும் மறு எல்லையில் இருளாலும்  வகுத்து வரம்பமைத்த இரு நிறுத்தங்கள்.

வெற்றித் திருநகரை ஆளும், கிருஷ்ணப்ப வீரகுந்தலரை விட உயர்ந்து நிற்கும், இல்லை என்றார்க்கு இல்லை எனாது உணவிடும்  சென்னம்மையின் பண்பு கீகடரின் சொல்லில் பாடலாகும் நாள்.   இன் நிலமாளும் அன்னையை  தரிசித்து விட்டீர் பாணரே  உம்மை வணங்குகிறேன், என்று மன்னனே பாணரை வணங்கும் மாண்பு. பாரதப் பண்பாடு கண்டடைந்த ஒளி.  இளநாகன் பயணத்தில் ஒளி நிறைந்த நிறுத்தம்.

வித விதமான மெய்த்தேட்டங்களின் பாதைகளை அறிகிறான் இளநாகன். சைலஜமித்ரர் புகார் நகரின் மத்தியில்  உணவு படைக்கப்படும்  சதுக்கபூதம்  தொட்டு  சாங்கியத்துக்குள் நுழைந்து அதன் நோக்கை விளக்குகிறார்.

அஸ்தினபுரியின் சௌனகருடன் இணைமாணவனாக இருந்த சகபாணன் காரகன், தார்க்கிகம்  வகுத்துச் சொல்லும் மெய்மை நோக்கை உரைக்கிறான். நெற்குவை நகரில் நாகநந்தி வசம் அருக நெறியை கேட்டு அறிகிறான். கலிங்கபுரியில் நீர்த்துமி பறக்கும் அறைக்குள், பெருமழை பொழியும் இரவில், ஆர்ப்பரிக்கும் கடல்முக நகரில் வைசேஷிக மெய்மையை கேட்டறிகிறான். பொன்னகரத்தில் சூதர் சொல் வழியே ஜடவாதம் அறிகிறான். எல்லா தரிசனங்களும் ”கண்டு” உரைப்பதை பாரத நிலமெங்கும் அலைந்து கேட்டு அறிகிறான் இளநாகன். ஆம் கேட்டு மட்டுமே அறிகிறான்.   காளாமுக மெய்மையை மட்டும் ”கண்டு” உணரும் வாய்ப்பு அவனுக்கு கிட்டுகிறது.

நாவலின் இறுதியில் வரும் சூதர்பாடலில், பாரத நிலமெங்கும் பாடப்பட்டுக் கொண்டிருக்கும் பாரதக்கதைகளின் நிலை சொல்லப்படுகிறது. ஒரு நாவில் இன்னும் தருமன் பிறக்கவே இல்லை, வேறொரு நாவில் தருமன் சொர்க்கத்தின் வாயிலில் தனியே நிற்கிறான்.  எனில்  இளநாகன்  பாரதக்கதையின் வேறு பகுதிகளை கேட்காமல், ஏன் குரோதம்  முளைத்த  தருணக் கதைகளை கேட்கிறான்?   காரணம்  காளஹஸ்தி  இரவில் இருக்கிறது.  காளாமுக  மார்க்க  ”முக்தியை” மட்டுமே  இந்தப் பயணத்தில் இளநாகன் நேரடியாக கண்டு உணர்கிறான். இளநாகன் காணும் இருள் நிறுத்தம். இருளையே ஆதி அந்தமாகக் கண்டு  அதில் கரையும் மார்க்கம்.  இந்த  இருள் வழியே  சூரியமைந்தன் போன்ற மாமனிதர்களும் சென்று வீழும் ஆதி இருளை புரிந்துகொள்ள விழையும் இளநாகனின் யத்தனமே  இக்கதைகள் அவன் முன் விரியக் காரணமாகிறது.

குந்தி:

கிராதம் நாவலில்  நெறி தவறி, கட்டற்ற படைப்புத் தொழிலில் இறங்கித் திளைக்கும் பிரம்மனைத் தடுக்க,  காலபைரவன் எழும் சித்திரம் மிக உக்கிரமாகவும் அமானுஷ்யமாகவும் உருவாகி இருக்கும்.  அதன் நேர் எதிர் வடிவம்  சோமசகலிகரின் பாடல் வழியே இந்த நாவலில் நிகழ்கிறது. பிரம்மனிடம் முடியல முடியல என்று கதறுகிறார் விஷ்ணு. பிரம்மனை கட்டுப்படுத்த அவர் உருவாக்கிய சிவம், கணக்கு சொல்லிக் கொண்டு நிற்கிறார்.  விஷ்ணுவின் புலம்பல் அனைத்தும் வேதமாகிறது. இப்பிரபஞ்ச நிகழ்வின் காரணமான முத்தொழிலும் நகைச்சுவையாக  முன் வைக்கப்பட்டு அங்கிருந்து  பாண்டவ கௌரவ பிறப்புக்கு செல்கிறார் கலிகர்.

தருமன் காணும் உலகம் ஒலிகளாலும், பீமன் காணும் உலகம் மிருகங்களாலும், அர்ஜுனன் காணும் உலகம் பறவைகளாலும், நகுலனின் உலகம் வண்டுகளாலும், சகதேவன் காணும் உலகம் பூக்களாலும் அவர்கள் முன்னே உருவாகி விரிந்து அவர்களை அழைக்கிறது. ஐவருடனும் குந்தி, அஸ்தினபுரி  செல்ல வனம் நீங்குகிறாள்.  வன எல்லை  நதியில் அவள் உளஉலகின்  கார்க்கோடகன்  எழுந்து வருகிறான். கர்ணனை அவளுக்கு காட்டுகிறான்.

// ஒளிரும் இரு கருவிழிகளை. குடுமிக்கட்டில் இருந்து மீறி தோளிலாடிய சுரிகுழலை. கூர்ந்த நாசியை. வெண்பல் தெரிய சற்றே மலர்ந்த உதடுகளை. ஒளிவிடும் மணிக்குண்டலங்களை. குழந்தைமை விலகா இளமார்பை. நீண்ட கைகளை.

அவனுடைய உள்ளங்கைகள் சிவந்து மென்மையாக இருந்தன. அவள் அந்தக்கைகளை நோக்கியபின் வேறெதையும் நோக்கவில்லை. அணைப்பவை. கண்ணீர் துடைப்பவை. அன்னமளிப்பவை. அஞ்சேலென்பவை. வழிகாட்டுபவை. வருக என்பவை. என்றுமிருப்பேன் என்பவை. எஞ்சுபவன் நானே என்பவை. என்னிலிரு என்பவை. கைகள். அக்கைகள் மலர்ந்த மரமென அவனுடல்.//

உனக்கென்ன வேண்டும்? கார்கோடகனின் வினா.

“நான் ஓர் அன்னை” என்று குந்தி சொன்னாள். “அன்னையர் வேண்டுவது மைந்தரின் நலம் அன்றி வேறென்ன? என் மைந்தன் அஸ்தினபுரியை ஆளவேண்டும். அவன் தம்பியர் அவனைச்சூழ்ந்து காக்கவேண்டும். என் குலம் அவர்களின் குருதியில் தழைக்கவேண்டும்.”

கார்கோடகன்:  பாண்டுவின் கானீனபுத்திரனான இளஞ்சூரியனே வைதிகமுறைப்படி அஸ்தினபுரியின் அரியணைக்குரியவன் என்பதை நீ மன்றுகூட்டிச் சொன்னால் அவர்களால் மறுக்கவா முடியும்?”

குந்தி  வாளேந்தி கர்ணன் உடலை வெட்டி சிதைக்கிறாள்.    அவள் வேண்டுவது  மிக அருகில் இருந்தும் அதை குந்தி ஏன் தவிர்த்தாள்?

பூக்குலைகளில் தேனுண்ணப் பூசலிட்டன பூச்சிகள். அவற்றைத் துரத்தி வேட்டையாடின பறவைகள். ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று வேட்டையாடிக்கொண்டிருந்தது. கொல்வனவற்றின் உறுமலும் இறப்பவற்றின் ஓலங்களும் இணைந்தெழும் ஓங்காரத்தில் அனைத்தும் பிணைக்கப்பட்டிருந்தன.

இதுதான் இப்போது குந்தி காணும் உலகு. குந்திதான் கர்ணனை நகுல சகதேவர் அருகே இருக்க அனுமதிக்கிறாள், குந்திதான் கர்ணனுக்கு தனுர்வேதம் கற்க உத்தரவளிக்கிறாள், இந்திரமைந்தனும், சூரியமைந்தனும் களத்தில் எதிர் நிற்கிறார்கள். சொல்வளர்காடு நாவலில் மைந்தர் கான் புகும்போது  தருமனுக்கு ஆசி அளிக்கும் குந்தி சொல்கிறாள்  ”ஆம், இப்போது உணர்கிறேன். இவை அனைத்துக்கும் நானே காரணம்.”

ஆம் அனைத்துக்கும் காரணம் குந்திதான்.  குந்தியாகி மண் நிகழ்ந்ததோ அந்த மகா மாயை!

துரோணர்:

ஹ்ருதாஜி  என்னும் வேடப்பெண்ணுக்கும், பரத்வாஜர் எனும் பிராமணனுக்கும் பிறந்து தனுர் வேதம் கற்று, வேடனாகவோ, பிராமணனாகவோ, சத்ரியனாகவோ ஏதோ ஒரு குலத்துக்குள் அமைய முடியாமல்  அவமதிப்பின் துயரில் விளைந்த கண்ணீரில் உழலும் துரோணர்.

தந்தையைப் பார்த்துக் கொண்டு மட்டுமே சமையலறைக்குள் வாழும் துரோணர். தந்தையின் மிச்சிலை ஆவலுடன் உண்ணும் துரோணர்.  தந்தை அருகே துரோணர் செல்லும் முதல் வாய்ப்பு, ஒரே வாய்ப்பு அப்போதே முடிகிறது. துரோணர் புல்லை எடுத்து பறவையை வீழ்த்தியதும் பரத்வாஜர் அடையும் ஆசுவாசம். துரோணர் அடைந்த துயர்கள் அனைத்தையும் காட்டிலும் எடை கூடியது.  தன்னை வளர்த்த சமையலர் விடூரரை அவரது முதுக்குக்குப் பின்னால் தந்தையே என அழைத்துவிட்டு அவர் திரும்புவதற்குள் அக்னிவேசர் குடிலுக்குள் ஓடி  மறையும் துரோணன்.  கலங்க வைக்கும் தருணம்.

துரோணன் சிறந்த மாணவனாக உயர்கிறான். குல அவமதிப்பு கூடவே உயர்கிறது. குரு சேர்க்க மறுக்கும் மாணவனை, அவன் தன்னை பிராம்மணோத்தமரே என விளித்தமைக்காக அவனை தனது மாணவனாக சேர்த்துக்கொள்கிறான்.  பாஞ்சாலத்தின் பாதியை அவனுக்கு அளிப்பதாக வாக்களிக்கிறான் அந்த மாணவன். மாணவன் பெயர்  துருபதன்.

அக்னிவேசர் மரணத் தருவாயில், துரோணரை பரசுராமர் வசம் அனுப்புகிறார். துரோணர் குல அடையாளத்தை பெறும் வாய்ப்பு நூலிழையில் தவறுகிறது. அவர் சரத்வானை கை காட்டுகிறார். சரத்வான் துரோணரை மனையறம் கண்டு அமைந்து இத்தவிப்பில் இருந்து ஆறுதல் அடைய வழி காட்டுகிறார். கிருபி அவருக்கு மனைவி ஆகிறாள். அஸ்வத்தாமன் பிறக்கிறான். நிமித்திகர் வசம் துரோணர் சொல்கிறார் ”விடூரர் மகன் துரோணன் சத்ரியனுக்கு மைந்தன் பிறந்திருக்கிறான்.”

தான் அடைந்த இழிவு ஏதும் அவனை அண்டாமல் காக்கிறார் துரோணர். அவரது ஏழ்மை அவனைத் தொடுகிறது. கிருபி துரோணர் வசம் சொல்கிறாள் ”நீர் எக்குலம் என நீர் தீர்மானித்திருக்கிறீரோ அக்குலத்தொழில் ஏதேனும் செய்து இந்த வறுமையை நீக்குங்கள்.” கண்ணீருடன் புறப்படும் துரோணர்,  துருபதனை சந்திக்கச் செல்கிறார். வாசலிலேயே அவமானப்படுகிறார். இறுதியில் துருபதன் வருகிறான். வாழ்வின் ஆகச் சிறந்த அவமதிப்பை அவன் வழங்குகிறான்.

சரத்வான் ஒரு முறை துரோணர் வசம் சொல்கிறார் “ஒருவனுள் அணையாமல் எரியும் பெருங் குரோதமே அவனை பிராமணனில் இருந்து சத்ரியன் ஆக்குகிறது.”

அணையாத குரோதம் கொண்டவர் ஆகிறார் துரோணர்.

கர்ணன்:

சூரிய விழவு துவங்கி, அங்கு உதிக்கும் கர்ணனின் தோற்றமே அவனுக்கு எதிரிகளை கொண்டு வந்து விடுகிறது, அவன் இருக்கும் குலமே அவனுக்கு கீழ்மைகளை கொண்டு வந்து விடுகிறது. இந்த நிலைக்கு உள்ளூர அஞ்சியபடியே வாழ்கிறாள் ராதை.   சூரியன் தனது மைந்தனை காண வருகிறான். கண் தொட்டு பெருங்கல் ஒன்றினை பொன்னாக்கித் தருகிறான்.  கர்ணன் அதை படகில் ஏற்றி ஆற்றில் விடுகிறான்.

கர்ணன் நீரைத்தொட்டு “கங்கையே, வாழ்நாளெல்லாம் பிறர் பசியைப்பற்றி மட்டுமே எண்ணுபவன் ஒருவன் இன்றுகாலை உன்னில் நீராடுவானென்றால் அவன் கையில் இதைக்கொண்டுசென்று கொடு. இதை அளித்த கர்ணன் அந்த மாமனிதனின் பாதங்களில் மும்முறை பணிந்தெழுந்து இதை அவனுக்கு காணிக்கையாக்கினான் என்று சொல். ஆணை! ஆணை! ஆணை!” என்று சொல்லி ஒரு துளி எடுத்து சென்னியில் விட்டுக்கொண்டு திரும்பினான். “எந்தையே, பெருஞ்செல்வத்தைக் கொண்டு நிறைவடையும் வழி இது ஒன்றே.”

சென்னம்மையையும்  கர்ணனையும் இணைக்கும் இச்சரடு  இக்கணத்தை மீள மீள வாசிக்க வைக்கும் ஒன்று.  கர்ணன் அஸ்தினபுரி நுழையும் பிரம்மமுகூர்த்தத்தில் வானத்து சூரியனும் உடன் உதித்து உயரும் வர்ணனை இந்த நாவலின் அழகுகளில் தலையாயது.

நகர் நுழைகிறான். கிருபர் வசம் மாணவனாக சேர்க்கப்படுகிறான்.  பீமனாலும் அர்ஜுனனாலும் அவமதிப்பை சுமக்கிறான்.  அவமதிப்புகளின் உச்சம்  துரோணர் முன் பீமன் கேட்பது. துரோணருக்காவது  அத்தனை அவமதிப்பு கடந்தும் இவர்தான் எனது குருதித் தந்தை என சுட்டிக்காட்ட ஒருவர் இருக்கிறார். கர்ணனுக்கு? உள்ளே அவமதிப்பில் வெந்து தகிக்கும் ஆன்மாவை சுமந்தபடி கர்ணன், துரோணர் குருநிலையை விட்டு வெளியேற, வெளியேறும் அவனது  அவமதிப்பின் வெம்மையை உணர்ந்தபடி உள்ளே வருகிறான் ஏகலவ்யன்.

ஏகலவ்யன்:

ஏகலவ்யனைக் கண்ட நொடி முதல் மனம் பேதலிக்கிறார் துரோணர்.  குசை அன்னை மடியில் படுத்து, உள்ளே கதறி அழுதபடி அவனை மறுத்து அனுப்புகிறார்.

துரோணர்  அக்னிவேசரின்  குருநிலையில் ஆசிரியராக இருக்கையில், அவரிடம் பயிற்சி முடித்த இளவரசர்கள் அவருக்கு காணிக்கை தர விரும்புகையில், துரோணர் ”வேதியருக்கு, ஆநிரைகளுக்கு, அறத்துக்கு உங்கள் வில் துணை நிற்கட்டும். அது போதும். அதுவே எனக்கான காணிக்கை” என்கிறார்.  இளவரசர்கள் உள்ளம் எரிய அதை சகித்துச் செல்கிறார்கள்.  அந்த துரோணர்  அர்ஜுனன் வசம் வாக்குறுதி கேட்கிறார். தனது மகனுக்காக.

 துரோணர் குடிலின் படலை மூடியபின் திரும்பி கனத்த குரலில் “உன் குருவாக என் ஆணை இது. நீ என்றென்றும் இதற்கு கட்டுப்பட்டவன்” என்றார். “ஆணையிடுங்கள் குருநாதரே” என்றான் அர்ஜுனன். “ஒருதருணத்திலும் நீ என் மைந்தனை கொல்லலாகாது. எக்காரணத்தாலும்” என்றார் துரோணர். மறுகணமே “ஆணை” என்றான் அர்ஜுனன். துரோணர் நடுங்கும் குரலில் “அவன் ஒருவேளை மானுடர் கற்பனைக்கே அப்பாற்பட்ட பெரும் அறப்பிழையை செய்தாலும்” என்றார். “ஆம், அவ்வாறே” என்றான் அர்ஜுனன்.

அவனருகே வந்து சற்று குனிந்து உதடுகள் நடுங்க துரோணர் சொன்னார் “நாளை உன் குலத்துக்கும் உனக்கும் பெரும்பழியை அவன் அளித்தாலும்… உன் பிதாமகர்களையும் அன்னையரையும் உடன்பிறந்தாரையும் மைந்தர்களையும் உன் கண்ணெதிரே அவன் கொன்றாலும் உன் கை அவனை கொல்லக்கூடாது.” அர்ஜுனன் “ஆம் குருநாதரே. மூதாதையரும் மும்மூர்த்திகளும் ஆணையிட்டாலும் அவ்வண்ணமே” என்றான். பெருமூச்சுடன் உடல்தளர்ந்த துரோணர் அவன் தலையில் கை வைத்து “மானுடரில் உன்னை எவரும் வெற்றிகொள்ளமாட்டார்கள்” என்றார்.

ஆக அஸ்வத்தாமன் எந்த எல்லை வரை செல்வான் என்பதை துரோணர் உள்ளுணர்வால் அறிந்தே இருக்கிறார்.

சுவர்ணை ஏகலவ்யன் வசம் சொல்கிறாள் ”காட்டில் கோடி மரம் உண்டு. மின்னல் ஏதோ ஒரு மரத்தைதான் தேர்ந்தெடுக்கிறது.”  ஏகலவ்யன் தானடைந்த கலையைக்கொண்டு உயரப் புகும் கணம்  துரோணர் வருகிறார். கரையற்ற அன்பு, அளவற்ற கோடை, மதியற்ற கருணை  இவற்றால் சரிந்த அசுர குலத்தின் வாரிசு, ஏகலவ்யனின் தந்தை வாக்களிக்கிறார். துரோணர் ஏகலவ்யனின் கட்டை விரலை காணிக்கையாகக் கேட்கிறார். கணமும் சிந்திக்காமல் காணிக்கை அளிக்கிறான் ஏகலவ்யன்.  அந்தக் காணிக்கையைத் தொட்டு துரோணர் ஆசி அளிக்கிறார் ”உன் விற்கலை வளரட்டும்.”

தந்தை கேட்கிறார் “இது என்ன அறம்? பிராமண அறமா? ஷத்ரிய அறமா?”  துரோணர் சொல்கிறார் ”பிராமணனாகவோ ஷத்ரியனாகவோ ஆக இயலாதவனின் அறம்.”

அன்னையின் சாபம் சுமந்து  துரோணர் அஸ்தினபுரி சேர்கிறார்.

அர்ஜுனன்:

நாவலுக்குள் இந்திர விழவின்  துவக்கத்தோடுதான் அர்ஜுனனின் வரவு நிகழ்கிறது.  தனது தனது எனும் விழைவைக் கொண்டே உருவாகும் ஷத்ரிய பாலகன். தனதென்று எண்ணும் அன்னை குந்தியின் அண்மையை  என்றுமே அடையாதவன்.  இந்திர விழவில்  விதுரனின் விழிகள் வழியே “வயதடைகிறான்”.  அன்னையை நோக்கிய அவ்விழிகளின் குணரூபத்தைக் கொண்டு, ”இங்குள்ளவற்றிலிருந்து” அர்ஜுனனின் முதல் விலகல் நிகழ்கிறது.  [மிக மிக பின்னால், கிராதம் நாவலில்  அர்ஜுனனின் ஊழ்கத்தில், விதுரராக தோற்றம் கொண்டு வரும் இந்திரன்தான் அர்ஜுனனின் விழிகளை நேராக சந்திக்கிறான்.]

விற்கலையில் முதன்மை கொள்ளும் அர்ஜுனனை கிருபர் பாராட்டும் போதே ”இந்திரனுக்கு இணையானவன் சூரியன். நான் ‘இங்கிருந்து’ அடைந்த அனைத்தையும் இங்கிருந்தே அவனாலும் அடைய முடியும்.  என் வில்லுக்கான நிகர் எதிரி அவனே”  என்கிறான்.

அஸ்வத்தாமன் உடன் அர்ஜுனன் கொள்ளும் கோபத்தின் வேர் ஆழமான உளவியல் சிக்கல் கூடியது. அர்ஜுனனுக்கு இணையான அவன் குருவுக்கு குருதியால் மகன். மாணவர்களாக குருவுக்கு இருவருமே சமம்தான்.  ஆனால் குருதி உறவு எனும் ஒரு எல்லையில் அர்ஜுனனின் பொறாமைக்கு ஆளாகிறான் அஸ்வத்தாமன். துரோணர் ஒரு சமயம் சொல்கிறார், இளம் குதிரை சம ஆற்றல் கொண்ட மற்றொரு இளம் குதிரையை தனக்கு நிகராக நிற்க அனுமதிக்காது,  அதுவே நிகழ்கிறது. வில் கோக்கும் தருணம் வருகிறது.  வித்தையில் தன் மகனை அர்ஜுனன் விஞ்சும் எல்லையில் குரு அர்ஜுனன் வசம் அஸ்வத்தாமன் உயிர்காக்க சத்தியம் வாங்கிக் கொள்கிறார். அர்ஜுனன் எதிரே ஒரு நிகர் எதிரி. ஆனால் என்றென்றும் கட்டப்பட்டுவிட்டது அர்ஜுனனின் கைகள். முழு ஆற்றலுடனும் இருந்து அதை பிரயோகிக்க வழி இன்றி நிற்கும்  நரக நிலையில், அவன் எதிரே கர்ணன் வருகிறான்.

குந்தியால் அவன் அரண்மனையில் நுழைகையில், அவன்  வில் கற்கும் முதல் புள்ளியிலேயே அனைத்தும் துவங்கி விடுகிறது. குந்தியின் அண்மையை இழந்து வளரும் அர்ஜுனன். இளமை பூக்கும் சூழலில் அவனுக்கு இணையான அல்லது மேலான கர்ணனை குந்தி அவர்கள் மத்தியில் கொண்டு வருகிறாள்.

அந்தச் சூழலில் விற்கலையில்  அர்ஜுனனைவிட கர்ணனே ஒரு எல்லை முன்னணியில் நிற்கிறான்.   எதிர்நின்று வில்லேந்துகிறார்கள். பீமன்  இடை புகுந்து தடுக்கிறான். என்ன செய்தால் கர்ணன் பின் வாங்குவானோ அதை செய்கிறான். ஒரு சூதனை தனது குருவாக கொள்ளும் பீமன். கர்ணனை சூதன் மகன் என இழிவு செய்கிறான். சொல் அந்தச் சூதனாவது உன் தந்தையா? நீர் தொட்டு சொல் என்கிறான். நூறு அம்பால்  நிகழ்த்த முடியாதை ஒரு சொல்லால் நிகழ்த்துகிறான். அவமானத்தால் குன்றி கர்ணன் வெளியேறுகிறான்.

அர்ஜுனனால் காயம்பட்ட யானை ஒன்று. அடங்காத சினத்துடன் கட்டற்று  உழல்கிறது. அந்த யானை  வேறொரு அரசுக்கு அந்த அரசின் மன்னனுக்கு ஒரு செய்தியாக பரிசளிக்கப் படுகிறது. அப்போது  அர்ஜுனன் தர்மன் வசம் சொல்கிறான் ”ஒருவனிடம் பெருவஞ்சம் கொண்டு விலகும் எதுவும், பிறிதொரு சமயம் அவன் எதிர் நின்றே தீரும். இயற்கையின் நியதி’.’

துரியோதனன்:

துரியனின் உலகம் பாறைகளால் ஆனதாக இருக்கிறது.  அவனால் சிதறடிக்கப்பட்ட பாறைகள், அவனால் சிதறடிக்கப்படவேண்டிய பாறைகள் இவற்றின் வழியே அவன் ஆற்றல் வளருகிறது.

”பாறைகள் கண்ணற்றவை. எதிரிகளை அவற்றால் நோக்க இயலாது. ஆகவே அதன் ஆற்றல் குன்றுவதில்லை” என துரியன் தம்பிகள் வசம் சொல்லும்போது தம்பிகள் ஏதும் புரியாமல் தலை ஆட்டுகிறார்கள்.  துரியன் தசைகள் நொறுக்கிப் பார்க்க விரும்பும் ஆற்றல் அவன் தந்தைக்குள் உறைந்து கிடக்கிறது.  செயல்படுத்திப் பார்க்க இயலா அளவற்ற ஆற்றல்  கொண்டு துரியன் ததும்பும் எல்லையில் பீமன் அவன் எதிரே வருகிறான்.

பீமன் வலிமையான உள்ளுணர்வு கொண்டவன்.  அர்ஜுனனும் கர்ணனும் எதிர் நிற்கும் அக் கணமே  பீமன் உள்ளுணர்வால் வெல்லப்போவது கர்ணன்தான் என அறிந்து விடுகிறான். அது நடந்தால் எதுவும், எந்த ஒழுங்கிலும் தரிக்காது. ஆகவே தான் எந்தக் கீழ்மைக்கு சென்றேனும் அவர்களின் சமரை நிறுத்துகிறான். அவனது வலிமையான உள்ளுணர்வே அவனது எதிரியை அவனிடம் அழைத்து வருகிறது. மிருகங்களால் விரியும் பீமன் உலகில் வேழமாக  அறிமுகமாகிறான் துரியன்.

கார்க்கோடகன் வழி காட்ட, துரியன் தனது உள்ளுணர்வால்  ஒரு வேழமென பீமனை எதிர்கொள்கிறான்.  பீமன் நகர் நுழையும் வரை கூட அவனது ஆற்றல் பொறுமை கொள்ளவில்லை. கானேகி மதம் கொண்டு திரியும் சியாமையை அடக்குகிறான்.  நகர் நுழையும் பீமனை கண்ணுக்குள் கண்ணாக சந்திக்கிறான். இரு வேழங்கள் இருள் ஆழத்தில் ஒரு கணம் மத்தகத்தால் மோதுகின்றன.

திருதா பீமனை சந்தித்த முதல் கணமே களிப்போர் வழியே நெருக்கம் கொள்ள, துரியனின் அகத்தில் முதல் இறுக்கம் விழுகிறது. துரியனும் பீமனும் ஒரு களிப்போர் வழியே நெருங்குகிறார்கள்.  பீஷ்மரின் வருகையில், அவர் பீமனைத் தவிர அனைவரையும் எந்தச் சலனமும் அற்று நோக்கிக் கடக்கையில், துரியனின் அகத்தில் குரோதத்தின் முதல் விதை விழுகிறது.

தம்பியர் புடை சூழ நிகழும் கானாடலில்  துரியன் அன்னைக்கரடி வசம் சிக்குகிறான். “துரியா உம் விடாதே கிழித்து வீசு” என திருதா ஒரு சொல் சொல்லி இருந்தால் அந்த விதை முளைக்காமல் போய் இருக்கும். அல்லது முளைக்கும் தருணம் சற்று விலகியாவது சென்றிருக்கும். திருதாவோ துரியனைக் காக்க பீமனுக்கு ஆணையிடுகிறார்.   பீமனால் காக்கப்பட்ட கணம் துரியனுக்குள் முளைக்கிறது வஞ்சத்தின் விதை.

துரியன் ஸ்தூனகர்ணனை சந்திக்கும் இடமும், அங்கு நிகழும் உளவியல் நாடகங்களும், தன்னுள் உள்ள பெண்ணைக் கொன்று துரியன் கொள்ளும் மாற்றமும் இந்த நாவலின் ஆணிவேர் தருணம். தன்னுள் அவன் கொன்ற பெண்ணே பின்னர் அவன் முன் திரௌபதியாக எழப் போகிறாள், கடக்க இயலாப் பெண்ணென எதிர் நிற்கப் போகிறாள், அவன் மகளெனப் பிறந்து மடி நிறைக்கப் போகிறாள். ஸ்தூனகர்ணனை நீங்குகையில் துரியன் அவன் வசம் சொல்கிறான் ”இனி எனக்கு தெய்வங்களும் இல்லை.”   நாவலுக்குள் ஒரு வரி வருகிறது, தெய்வங்களால் கைவிடப்படும் மனிதன் நிலையை விட, அத்தகு மனிதர்களால் கைவிடப்படும் தெய்வங்களின் நிலை  மேலும் துயரமானது.  தெய்வங்கள் அற்றவனாகி தெய்வங்களும் அஞ்சும் பழியை சுமக்கப் போகிறான். தெய்வங்கள் அற்ற துரியன் விழிகளை பீமன் காண்கிறான். விருகோதரன், வாயு மைந்தன், அச்சம் என்பதை அறியாதவன், முதன்முறையாக அஞ்சுகிறான்.

களம். பெரும் ஆசிரியர்களிடம் அறிவுப்பிச்சை இடுங்கள் என யாசகம் பெற்று ஆயுதம் பழகிய மாணவர்கள், தங்கள் திறன் காட்டும் இடம், அத்தனை தகுதிகளோடும் அர்ஜுனன் முன் குறுகி நிற்கும்  கர்ணன் அங்க மன்னன் ஆகிறான். அவன் தாள் பணிந்து அவனை அரசனாக்குகிறான் துரியன், பெண் பழி சூடிய பீஷ்மர், அன்னைப் பழி சூடிய துரோணர், நாளை  அன்னையின் சாபம் கொள்ளப்போகும் நூறு தம்பியர்  இவர்கள் மத்தியில் கர்ணனும் துரியனும் தோள் சேர்கிறார்கள். இந்திரன் மகனுக்கு எதிரே சூரிய மைந்தன். நாகருலக நஞ்சருந்தி நூறு யானை பலத்துடன் பீமன் எழுகிறான். பூத யாகம் செய்து கார்த்தவீர்யனின் நூறு கரங்களுடன் துரியன் எழுகிறான். பீமனுடன் துரியன் களிப் போரில் வீழ்ந்த துளி குருதியின் சுவையை  நினைவில் மீட்டியபடி காத்திருக்கிறது  களம்.

இருள் மெய்:

“காமம் குரோதம் மோகம் என்னும் இம்மூன்று இருள்களில் காமம் இன்னொரு ஆன்மாவைச் சார்ந்தது. மோகமோ புறவுலகைச் சார்ந்தது. எதையும் சாராமல் தன்னுள் தானென நிறைந்திருப்பது குரோதமேயாகும். குரோதம் அனைத்தையும் அவியாக்கி எரிந்தெழும் நெருப்பு. எரிதலின் பேரின்பம் அது. எரிதலின் உச்சம் அணைதலே. குரோதம் தன்னைத் தானழித்துக்கொள்கையிலேயே முழுமை கொள்கிறது.” – காளாமுக மெய்மை

[12.11.2016 அன்று சென்னையில் நடைபெற்ற வெண்முரசு கலந்துரையாடலில் ஆற்றிய உரை)

வெண்முரசின் வெகுமக்கள் – சுனீல் கிருஷ்ணன்

“காடேகும் செய்தியை குடிகள் கேட்டால் என்ன நினைப்பார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் கொந்தளிப்பார்கள்” என்றார் சௌனகர். பீமன் வெடித்து நகைத்து “ஆம், கொந்தளிப்பார்கள். கண்ணீர்விடுவார்கள். ஏனென்றால் அவர்களால் கூட்டாக செய்யத்தக்க எளிய செயல் அது மட்டுமே. வாளாவிருக்கவில்லை, உகந்ததை செய்துவிட்டோம் என்று நிறைவுகொண்டு தங்கள் அன்றாடச் சிறுமைகளுக்கு மீளவும் முடியும்” என்றான். கும்பலும் கொந்தளிப்பும் தற்காலிகமானது அதற்கப்பால் மக்களும் பழகி விடுவார்கள் என்கிறான் பீமன். மக்களின் இந்த இயல்பை குறித்து நுட்பமான ஒரு பார்வையை அளிக்கிறான். “மந்தா, மக்களை வெறுப்பவன் காலப்போக்கில் அவர்களால் வெறுக்கப்படுவான்” என்றார் யுதிஷ்டிரர். “இல்லை மூத்தவரே, மக்களை புரிந்துகொண்டவன் அவர்களை வெறுப்பான். அவன் மட்டுமே அவர்களை கட்டுப்படுத்தவும் முடியும். கட்டுப்பாடான ஆட்சியை அளிப்பதனால் அவனை அவர்கள் விரும்புவார்கள்” என்றான் பீமன்.- வெண்முரசு, சொல்வளர்காடு.

வரலாற்று நிகழ்வு அல்லது வரலாற்று ஆளுமையை கொண்டு புனையப்படும் கதைகள் பொதுவாக சாமானியனின் பார்வையில் சொல்லப்படும்போது, அது கதைக்கு கூடுதல் நெகிழ்வை அளிக்கிறது. அது அவனுடைய கதையாக, அவனுடைய கோணத்திலும் வரலாற்றை விசாரணைக்கு உட்படுத்துகிறது. கம்யுனிச சுத்திகரிப்பாகட்டும், ஃபாசிசத்தின் கோரமுகமாட்டும், இறுகிய கொள்கை பாறைகள் மூச்சுமுட்ட நம்மை சூழும் தோறும் அதை பிளந்து வருவதும், அம்முயற்சியில் வீழ்வதுமே கதைகளாக நம்மை வந்தடைகின்றன. காவியங்கள் நாயகர்களை எழுப்பி, அவர்களின் அற குழப்பங்களை பேசிய போது, நவீன இலக்கியங்கள் முகமிலிகளின் முகமாக, குரலிலிகளின் குரலாக தன்னை வரித்துக்கொண்டது. தன்னை மீறிய, தனக்கப்பால் உள்ள ஆற்றல்களிடம் சிக்குண்டு அலைகழிகிறான் நவீன இலக்கிய நாயகன். மூர்க்கமாக எதிர்க்கிறான் அல்லது பணிந்து அமைகிறான். அவ்வகையில் அவன் செவ்வியல் துன்பியல் காவியங்களின் நீட்சியாகிறான்.
வெண்முரசு இன்று எழுத படுகிறது, பாரதத்தின் காலத்திலிருந்து வெகு தொலைவில், ராஜராஜனும், அக்பரும், கிருஷ்ண தேவராயனும், ராபர்ட் கிளைவும் ஆண்ட பின், தொழில் புரட்சி, காலனியம், தாது வருட பஞ்சங்கள், இரு உலக போர்கள், அணு விஞ்ஞான வளர்ச்சி, சுதந்திரம், மக்களாட்சி, தொழில்நுட்ப புரட்சி, இவையெல்லாம் நிகழ்ந்த பின், மானுட அறிவு இவைகளில் முங்கி முயங்கி உருண்டு, இழிவுகளையும் உன்னதங்களையும் ஒரு சேர திரட்டி ஒரு பெரும் கோளமாக ஆகிக்கொண்டிருக்கும் இன்றைய தினத்தில் எழுதப்படுகிறது. நூற்றாண்டுகால மானுட அறிதல்கள் காவிய நாயகர்களின் அற குழப்பங்களுடன் முயங்கும் போது அது இன்றைய கதையகாவும் ஆகிறது.

ஜெயமோகன் வெண்முரசின் எழுத்துமுறையை சூட்டும் போது “புராண யதார்த்தவாதம்” என்கிறார். அதன் அத்தனை சாதக பாதகங்களோடும், செவ்வியல் இயல்புகளும் நவீன இலக்கிய கூறு முறையும், கட்டற்ற மொழி பிரயோகமும் கற்பனையும், வரலாற்று நோக்கும் இயைந்து உருவாகும் எழுத்துமுறை என கொள்ளலாம். இந்நாவல் விமர்சனத்திற்கு உள்ளாவதும் இந்த எழுத்துமுறை பொருட்டே. வரலாற்றை அணுகும் மார்க்சிய சட்டகங்களை புராணங்களை அணுக பயன்படுத்தி இருக்கிறார். குறிப்பாக அரசுகளின் எழுச்சி மற்றும் வீழ்சிகளின் காரணிகளை ஆராயும் போது மார்க்சிய பொருளியல் கொள்கைகள் மற்றும் நவீன பொருளாதார நிலவியல் பார்வைகள் சரளமாக பயன்படுத்தபடுகின்றன. இந்த அளவில் வரலாற்று நாவல்களின் சாமானியர்களை போல், புராண யதார்த்தவாத நாவலான வெண்முரசிலும் சாமானியர்கள் கவனம் பெறுகிறார்கள். வெண்முரசின் மிக முக்கியமான சிறப்பம்சம் பாரதத்தில் இல்லாத அல்லது வெறும் ஒரு பெயராக நாம் கடந்து செல்லும் பாத்திரங்களை விரித்தெடுப்பது என கொள்ளலாம். இவர்கள் நாவலுக்கு புதிய வண்ணத்தையும் கோணத்தையும் அளிக்கிறார்கள்.
வெண்முரசின் வெகுமக்கள் எனும் பேசு பொருளை மூன்று கோணங்களில் அணுகலாம்.

1. ஆளுகை சார்ந்து – குடிமக்கள் எனும் கோணத்தில் 2. கூட்டு நடத்தை – கும்பல் மனப்பாங்கு 3. வெகுமக்களின் பிரதிநிதிகளாக வரும் சிறிய பாத்திரங்கள்.

இதில் மூன்றாவது அம்சத்தை இந்த கட்டுரையில் நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் அது மிக விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. நிருதன், ஸ்தானகர் போன்ற மறக்க முடியாத பாத்திரங்கள், சிறு கீற்றாக மின்னி செல்லும் மாருதன், சிவதர் மட்டுமின்றி சொல்வளர்காட்டின் நூற்றுவர் தலைவன், விடுதியில் கதை சொல்லும் சூதன் என பெயரற்றவர்களால் நிரம்பியது. அரசிகளின் அணுக்க செடிகள் வழியாக மட்டுமே கூட வெண்முரசை வாசிக்க முடியும். வெண்முரசை பற்றி இது போன்ற கட்டுரைகளை எழுதுவதில் உள்ள சவாலே, தேவையான மேற்கோள்களை தேடி எடுப்பது தான்.

வெண்முரசு போன்ற விரிந்த பரப்புடைய நாவல் வரிசையில் பல்வேறு அடுக்குகளை தனித்தனியாக ஆராய்வது அதை குறுக்குவதற்காக அல்ல, மேலும் இந்த கட்டுரை நவீன அறிவியல், சமூகவியல் கோட்பாடுகள் எல்லாம் வெண்முரசிலும் உள்ளது என மார்தட்டிகொள்வதற்காக எழுதப்பட்டது அல்ல. மாறாக வெண்முரசை வாசிக்க புதிய கோணங்களையும் புரிதலையும் அளிப்பதை அன்றி வேறு நோக்கங்கள் ஏதுமில்லை.

பேரமைச்சர் யக்ஞசர்மர் புன்னகைசெய்து “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன” என்றார். – முதற்கனல்

ஜெயமோகன் காந்தியை பற்றிய ஓர் கட்டுரையில் அந்தோனியோ கிராம்சி பற்றி குறிப்பிடுகிறார். கிராம்சியின் கோட்பாடுகள் காந்தியை அணுக மிக உகந்ததாக இருக்கும் என்கிறார். கிராம்சி ஒரு இத்தாலிய மார்க்சிய அறிஞர். ஃபாசிச இத்தாலிய அரசு அவரை சிறையில் அடைத்தது. சிறையில் அவர் எழுதிய குறிப்புகள் நோய்வாய்பட்டு அவர் மரித்த பின்னர் அவருடைய மனைவியின் சகோதரியால் மிகுந்த சிரமங்களுக்கு இடையே வெளிகொணரபட்டது. மார்க்ஸ் பார்க்க தவறியதை கிராம்சி காண்கிறார் என கூறலாம். வலுவின் வழியன்றி அதிகாரம் உண்மையில் கருத்தியல், பண்பாட்டு, அறிவுதள ஆதிக்கங்கள் வழியாக கட்டமைக்கபடுகிறது என்பதை சுட்டி காட்டினார். மேலாதிக்கம் திணிக்கப்பட வேண்டும் என்பதில்லை, மவுனமாக பெருவாரியாக ஏற்கபட்டாலே போதும் என்றார். மேலாதிக்கத்தை நியாயபடுத்த, அங்கீகரிக்க தேவையான கருத்தியல் நிலைபெற்றிருத்தல் அவசியம். ஆளும் வர்க்கம் என்றல்ல எவரும் இப்படி திரட்டி தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கி அதிகாரத்தை கோர முடியும் என்றார். உழைக்கும் வர்க்கம் வன்முறையின்றி அதிகாரத்தை அடைய இதுவே உகந்த வழி என கருதினார். மேலாதிக்கத்தை அடைந்த பின்னர் அதை தக்க வைக்க தொடர்ந்து முயல வேண்டும், மீண்டும் மீண்டும் புதுப்பித்துகொள்ள வேண்டும். அறிவுதள மற்றும் பண்பாட்டு இயக்கங்கள் வழியாகவே இந்த மேலாதிக்கத்தை பிறரை ஒப்புகொள்ள செய்ய முடியும். தன் தரப்பு மட்டுமின்றி எதிர் தரப்பையும் உள்ளடக்கிய பொதுவான திசைக்கு பயணிக்க வேண்டும். சமூக பண்பாட்டு புலத்தில் ‘பொது புரிதல்’ என மக்கள் திரள் மேலாதிக்கத்தை ஏற்க வேண்டும். தலைமையின் செல்திசையை பெருந்திரள் மக்கள் ஏற்றாக வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் அதை முன்னடத்தி செல்லும் அறிவுஜீவிகள் இருப்பார்கள் அவர்களே குழுவின் திசையை தீர்மானிப்பவர்கள் என்கிறார் கிராம்சி. மேலாதிக்கம் பரவலாக ஏற்கபடாத போது அதன் அதிகாரத்தை நிறுவ நேரடி வன்முறை சில நேரங்களில் அவசியமாய் இருக்கலாம். மனமுவந்து வலுவானவர்களின் உலக பார்வையை ஏற்பதன் வழியாகவும் அவர்களின் மேலாதிக்கத்தை அங்கீகரிக்கலாம். கிராம்சியின் கோட்பாடுகள் பிரித்தானிய பேரரசு இங்கே காலூன்றிய பின்புலத்தில் புரிந்து கொள்ளலாம். அதற்கு எதிராக காந்தி அதே முறையை வளைத்து இந்திய விடுதலையை சாத்தியமாக்கி கொண்டதையும் கவனிக்கலாம்.

வெண்முரசில் கிராம்சியின் கோட்பாடுகள் கணிசமாக பொருந்தி போகிறது. க்ஷத்ரியர்கள் வேதத்தின் பெயராலேயே அதிகாரத்தை பெறுகிறார்கள். வேள்வி காவலனாக அரசன் திகழ்கிறான். நால் வேதங்களின் அங்கீகாரம் தான் அவர்களை மன்னர்களாக ஆக்குகிறது. இந்த அங்கீகாரத்தை உடைத்து புதிய அதிகாரத்தை உருவாக்க முயல்பவர்கள் ஜராசந்தனும் கிருஷ்ணனும். ஜராசந்தன் நால் வேதங்கள் தொகுக்கபடுவதற்கு முன்பான தொல் வேதங்களை நோக்கி தனக்கான அங்கீகாரம் வேண்டி செல்கிறான். நாக வேதத்தை மீட்டு எடுக்கிறான். அதன் வழியாக நாகர்களையும் நிஷாதர்களையும் அரசாளும் தகுதி உடையவர்களாக முன்வைக்கிறான். தன்னை அவன் ஜரையின் மைந்தனாகவே காட்டிகொள்கிறான். ஆளும் வர்கத்தின் மீதான வெறுப்பை தனக்கு சாதகமாக்கி கொள்கிறான். க்ஷத்ரியர்களையும் பிராமணர்களையும் தயக்கமின்றி கொல்வது மூலம் க்ஷத்ரிய மேலாதிக்கத்திற்கு அறைகூவல் விடுக்கிறான்.

கிருஷ்ணனும் தன் போக்கில் க்ஷத்ரியர்களின் மேலாதிக்கத்தை உடைக்க முயல்கிறான். வேதத்தை கேள்விக்குட்படுத்துவதன் வழியாக அவன் அதை நிகழ்த்துகிறான். ஜராசந்தனும் சரி கிருஷ்ணனும் சரி நால் வேதத்தை கேள்விக்குட்படுத்துவதன் வழியாகவே க்ஷத்ரியர்களின் மேலாதிக்கத்தை எதிர்க்கிறார்கள். வெண்முரசின் கிருஷ்ணன் இன்னும் தனது சித்தாந்தத்தை முன்வைக்கவில்லை. எனினும் தொல் வேதத்திலிருந்து நால் வேதம், நால் வேதங்களில் இருந்து வேதாந்த சாரம் என முன்னோக்கிய பரிணாமமாகவே அது இருக்கும். நோக்கங்கள் ஒன்றாயினும் பாதைகள் வேறாகிறது. கிருஷ்ணன் கட்டற்ற தொல் வேதத்திற்கு செல்லாமல் மேலும் நுண்மையான, அதே வேளை பரந்து பலரையும் உள்ளடக்கிய வேதாந்தத்திற்கு செல்கிறான். அண்மையில் கூட ஜெயமோகன் கண்ணனை வழிபடலாமா எனும் கட்டுரையில் இந்த அதிகார மாற்றத்தை முன்வைக்கிறார்.

கொடுங்கோலன் ஏன் மக்களாதரவு பெறுகிறான்? ஃபாசிச ஆதரவாளர்கள் பற்றிய ஆய்வை செய்த வில்லியம் ரைஸ்ச் வளரும் பிராயத்தின் பாலியல் அடக்குமுறைகள் ஃபாசிச ஆதரவாக பரிணமிக்கிறது என ஆய்வுகள் மூலம் சொல்கிறார். எனினும் இந்த கூற்று வெண்முரசில் பொருத்தி பார்க்க முடியாது. ஜராசந்தனும் சரி கண்ணனும் சரி எதிரிகளை முற்றழிக்க அஞ்சாதவர்கள். ஜராசந்தன் கொடுங்கோலனாக கருதப்படுகிறான். ஆனால் மக்களின் நேசமும் ஆதரவும் அவனுக்கிருக்கிறது. கொடுங்கோலன் அதிகாரத்தை நிலைநிறுத்த எந்த எல்லைக்கும் செல்வான் எனும் அச்சம் நிலை பெற வேண்டும். ஜராசந்தனுக்கு சற்றும் குறைவில்லாதவான் கிருஷ்ணன். இசைத்துக்கொண்டே சலனமின்றி போர் புரிந்து கொன்றொழிக்கும் கிருஷ்ணனை எண்ணிக்கொண்டேன். கொந்தளிப்பான காலங்களில் வலிமையான மற்றும் மாற்றத்தை அளிக்ககூடிய, நீடித்து நிற்கும் தலைமையை மக்கள் விழைகிறார்கள். அதுவும் கூட இருவருக்கும் பொருத்தம். கொடுங்கோன்மைக்கு மிக முக்கியமான தேவை நாம் பிறர் எனும் பாகுபாட்டின் வழியாக எதிரிகளை கட்டமைத்தல். எதிரிகளை காட்டி தம்மவர்களை வலுவாக ஒருங்கிணைத்தல். கிருஷ்ணன் ஞானியாகவும் அனைவரின் நேசத்துக்குரியவனாகவும் ஆவது அவன் இந்த பாகுபாட்டை அங்கீகரிக்கவில்லை என்பதாலேயே என தோன்றுகிறது. யாதவர்களை அவனால் இறுதிவரை ஒருங்கிணைக்க முடியாமல் போனதற்கு ஒரு பொது எதிரி போதிய அளவில் கட்டமைக்கப்படவில்லை. மேலும் அவனுடைய மாற்றத்திற்கான அறைகூவல் முன்னோக்கியதாக இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம்.

ஜராசந்தனை தொல் வேதத்தின் பிரதிநிதியாகவும் பீஷ்மரை நால் வேதத்தின் பிரதிநிதியாகவும் கிருஷ்ணனை வேதாந்தத்தின் பிரதிநிதியாகவும் கொண்டோமேயானால் வெண்முரசின் அதிகார மோதல்கள் புதிய கோணங்களில் அணுக முடியும்.

மேலும் முக்கியமான அரச முடிவுகள் உருவாவதில் பொதுமக்களும் பங்கு வகிக்கிறார்கள். திருதிராஷ்டிரனை விட்டுவிட்டு பாண்டுவை தேர்வு செய்வது ஒருவகையில் மக்களின் இச்சையாக முன்வைக்கபடுகிறது. துரியோதனன் தீமையின், கலியின் வடிவமாக மக்களின் மனதில் நிலை பெறுவதும், தர்மன் அற செல்வனாக புகழ் பெறுவதும் கதையின் போக்கை தீர்மானிக்கிறது. துரியன் பிறந்ததில் இருந்தே அவனை பற்றிய கதைகள் அவனை பாதித்ததை பற்றி திருதிருராஷ்டிரர் வருந்துகிறார். சொல்வளர்காடில் கூட தர்மன் மக்களால் மறக்க படுவான் என குந்தி அஞ்சுகிறாள். வனவாசத்திற்கு பிறகு திரும்பும் போது போராட்டம் நீர்த்து விடும் என எண்ணுகிறாள். போர் புரியலாம் என தர்மன் முடிவெடுக்கும் போது அற செல்வன் எனும் அவன் பெயர் களங்கப்படுவதை தவிர்க்க சொல்கிறான். அவனுடைய ஆற்றல் என்பது அவனுடைய இந்த பிம்பம் பொருட்டு எழும் மக்கள் ஆதரவில் உள்ளது தான். அர்ஜுனன் சுபத்திரையை சிவயோகியாக தோற்றம் கொண்டு துவாரகையிலிருந்து கவர்ந்து செல்லும்போது முழு மக்கள் ஆதரவுடனே செல்கிறான். இளைய பாண்டவனே தங்கள் அரசிக்கு உகந்தவர் என மக்கள் விழைந்தது காரணமாக சொல்லப்படும். கர்ணன் அங்க தேசத்தில் புதிய அவையில் சூத்திரர்களை இடம் பெற செய்கிறான். அதுவரை அவை பழகாதவர்கள் குறுகிய காலத்தில் ஒரு மரபை உருவாக்கிகொள்கிறார்கள். கர்ணன் அவர்களின் ஆதரவையும் பெறுகிறான். குடிமக்களின் பிரதிநிதிகளாக உருவாகும் குலசபை உருவாக்கம் வெகுமக்கள் எப்படி ஒருங்கிணைக்கப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது. அங்கீகாரமும், அதிகார பூசலும் அவர்களை உருவாக்குகிறது.

வெகுமக்களின் விழைவை பற்றி புரிந்துகொள்ள காண்டீபத்தின் இப்பகுதி உதவும்.

காண்டீபம் நாவலில் வரும் பல்வேறு பகுதிகள் மிக விரிவாக வெகுமக்களின் ஆட்டங்களை பதிவு செய்கிறது. இந்த பத்தியில் கிருஷ்ணன் அரிஷ்டநேமியுடன் மற்போரிட்டு தோற்றதை பற்றி அர்ஜுனனிடம் கூறுகிறான். “பார்த்தரே, எளிய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அம்மாற்றத்தால் தங்கள் வாழ்வு தலைகீழாகுமென்றாலும் சரி. முந்தைய கணம் வரை சார்ந்திருந்த ஒன்று சரிவதைக்கூட அதன் பொருட்டு விழைவார்கள். ஏதேனும் ஒன்று நிகழ்ந்து தாங்கள் கொண்டாடிய ஒன்று வீழ்ச்சியடையுமென்றால் அதில் அவர்களின் அகம் களிக்கும். எழுந்தவை அனைத்தையும் நிலம் இழுப்பதுபோல எளியோர் வென்றவரையும் நின்றவரையும் பற்றிச்சரிக்க ஒவ்வொரு கணமும் தவிக்கிறார்கள். இப்புவியை ஆளும் வல்லமைகளில் ஒன்று எளியோரின் வஞ்சம். அதை நன்கறிந்திருந்தபோதும்கூட அன்று நான் என் நகர்மக்களின் விழிகளைக் கண்டு அஞ்சினேன். ஒவ்வொருவரும் என் விழிகளைத் தவிர்த்து மிகையாக வணங்கி கடந்துசென்றனர். என் முதுகில் நோக்கு நட்டு தங்கள் உள்ளவிழைவை உணர்ந்து பின் பிறர் விழிகளை நோக்கி அவ்விழைவை அவர்கள் அறிகிறார்களா என்று கூர்ந்தனர். அங்கும் அதையே காணும்போது தங்கள் பேருருவை தாங்களே கண்டு திடுக்கிட்டனர்.

ஆனால் நாள் நெருங்க நெருங்க அவர்களின் தன்னடக்கமும் கரவும் மறைந்தன. தாங்களனைவரிலும் நுரைப்பது ஒரே விழைவு என அவர்கள் உணர்ந்தபோது ஒற்றைப் பெரும்பரப்பென ஆயினர். அந்த விராடவடிவம் மானுடர் எவருக்கும் அஞ்சாதது. கரப்பதற்கோ நாணுதற்கோ ஏதுமில்லாதது. பேருருக்கொண்ட அம்முகத்திலிருந்த கசப்பும் இளிப்பும் என்னை பதறச்செய்தன. சத்யபாமையை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தேன். முதலில் அவள் நானே வெல்வேன் என எண்ணியிருந்தாள். பின் நகர்மக்களிடமிருந்து நான் வெல்லமுடியாதென்னும் உணர்வை அவள் அடைந்தாள். அவள் அடைந்த அனைத்தையும் இழக்கப்போகிறாள் என்னும் எண்ணம் அவளை துவளச்செய்ததை கண்டேன். அவ்வெண்ணம் வலுப்பெறுந்தோறும் என் மீதான கசப்பாக மாறியது. கசப்பு மூப்படைகையில் ஏளனமாகிறது. ஏளனம் பழுத்து புறக்கணிப்பாகிறது. என்னை அவள் விழிகள் நோக்குவதேயில்லை என்னும் நிலை வந்தது.

அதுவரை ஓசையற்றிருந்த துவாரகையின் மக்கள் பெருங்குரலில் வெடித்தெழுந்து வாழ்த்தொலி எழுப்பினர். யாருக்கான வாழ்த்து அது என என்னால் கணிக்கமுடியவில்லை. ஆனால் அது அவர்கள் விழைந்த முடிவு. அவர்கள் எதையும் இழக்காமல் விரும்பியதை அடைந்ததன் மகிழ்வா அது? இல்லை, அவர்களின் சிறுமைகளை கோடைகாலத்துமுதல்மழை புழுதியை அடித்துக்கொண்டு செல்வதுபோல அவரது பெருமை கழுவியகற்றியதன் நிறைவா?

“ஆம், அறிவேன்” என்றான் அர்ஜுனன். “அவர்களுக்குத் தேவை தலைவனல்ல. தந்தை. தந்தையை வழிபடுவார்கள், தெய்வ நிலைக்கு கொண்டு சென்று வைப்பார்கள். அதற்குரிய அனைத்துக் கதைகளையும் சமைப்பார்கள். ஆனால் தந்தை என்று ஆன பிறகு அவரை மறுக்கத் தொடங்குவார்கள். அவரை மீறுகையில் உள்ளக்கிளர்ச்சிக்கு ஆளாவார்கள். அவர் குறைகளை எந்நேரமும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அவரை இழிவுசெய்ய வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வார்கள். இவர் அவர்களுக்கு இன்று ஒரு வாழும் மூதாதை மட்டுமே.”

இன்று நிகழ்ந்துள்ள இவ்விணைவு அரியது. சூரசேனரும் வசுதேவரும் பலராமரும் இயல்பாக ஒருங்கிணைந்து ஒரு தரப்பாக நிற்க மறுதரப்பாக இளைய யாதவர் நிற்கும் ஒரு சூழல் அமைந்துள்ளது. இளைய யாதவர் வெல்வது அரிது என்னும் நிலையும் உள்ளது. சூரசேனரின் தரப்பைச் சார்ந்து நின்று பேசும்போது இளைய யாதவரை எதிர்க்க முடியும். அவர் தோற்கையில் மகிழ்ந்து கூத்தாட முடியும். ஆனால் யாதவர் குடிநன்மைக்காகவும் யாதவர்களின் மூதாதை சூரசேனரின் சொல்லுக்காகவும் நிலை கொள்வதாக தங்களை விளக்கிக் கொள்ளவும் முடியும். குற்ற உணர்வின்றி ஒரு அத்துமீறல். யாதவர்கள் இன்று கொண்டாடுவது அதைத்தான்” என்றான் அர்ஜுனன்.

‘யதா ராஜா ததா பிரஜா’ , அதாவது ‘அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்றொரு பழமையான சொல்வழக்கு உண்டு. நவீன யுகத்தின் மிக முக்கியமான மாற்றம் என்பது இச்சமன்பாடை திருப்பி போட்டது என கூறலாம். “மக்கள் எவ்வழியோ அரசன் அவ்வழி” என்பதே மக்களாட்சியின் ஆதாரம். இதுவே பாரதத்திற்கும் வெண்முரசிற்குமான வேறுபாடும் கூட.

வெண்முரசின் அனைத்து நாவல்களில்ளும் வெகுமக்கள் கூடுகிறார்கள், களிக்கிறார்கள், கொந்தளிக்கிறார்கள், வெறி நடனமிடுகிறார்கள், சோகத்தில் ஆழ்கிறார்கள், ஆவேசமாக மோதி மரிக்கிறார்கள், அஞ்சுகிறார்கள், அழிக்கிறார்கள், அறத்தின் பொருட்டு அரற்றுகிறார்கள், ஆர்பரிக்கிறார்கள். வெண்முரசு முழுக்க பல்வேறு விழவுகளும், உண்டாட்டுகளும், கொண்டாட்டங்களும் நிகழ்ந்தபடி இருக்கிறது. வெகுமக்களின் பகுதியாக இருந்து அதை அனுபவமாக கடத்துவது, வெகுமக்கள் நடத்தையை அவர்களுக்கு வெளியிலிருந்து விமர்சன நோக்கில் அணுகுவது, வெகுமக்கள் கொந்தளிப்பை கட்டுக்குள் கொணரும் யுத்திகள் என வெண்முரசு வெகுமக்களின் உளவியலை சார்ந்து மூன்று விஷயங்களை நுட்பமாக பதிவு செய்கிறது.

கும்பலில் இருந்து பொதுமக்களை பிரிக்கலாம். கும்பல் உணர்வுகளால் இயக்கபடுகிறது. பொதுமக்கள் கூடுகை ‘பிரச்சனைகளால்’ ஈர்க்கப்பட்டு உருவாகிறது என்கிறார்கள் ப்ளுமரும் பங்கும். மக்கள் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தும் போது வரும் கும்பலை ‘மாஸ்’ என வகைபடுத்தலாம் என்கிறார் ப்ளுமர். பிற்காலத்தில் கும்பல் நடத்தை என்பது போய் ‘கூட்டு நடத்தை’ எனும் கோட்பாடு உருவாகிறது. வதந்தி, பொதுமக்கள், சமூக இயக்கங்கள், கலவரம், போலி நம்பிக்கைகள், வெறித்தனமான ஈர்ப்புகள் என ‘கூட்டு நடத்தை’ என்பது கும்பலை காட்டிலும் விரிவான தளங்களை உள்ளடக்கியது.

லே பான் குஸ்டாவ் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கவனிக்கத்தக்க உளவியலாளர். கும்பல் மனப்பான்மை குறித்து அவர் எழுதியுள்ள நூல் (the crowd – a study of popular mind) அவ்வகையில் முதன்மை நூலாக கருதபடுகிறது.

மனிதர்கள் கும்பலாக ஆகும்போது சிந்திக்கும் திறனை இழக்கிறார்கள். தனி மனம் மரித்து ஒரு குழுமனம் எழுகிறது. உணர்சிகளால் கட்டுண்டு ஒருவித மயக்க நிலையில் செயல்படுகிறார்கள் என்கிறார். குறுகிய காலத்திற்கு தெளிவான ஒற்றை இலக்கை கொண்ட ‘குழு மனம்’ உருவாகிறது. இக்குழு மனம் உணர்வு தளத்தில் தனித்து இயங்குகிறது. சிந்திக்கும், பகுத்தறியும் திறன் அற்றது. தனித்து அடையாளம் காண முடியாது என்பதாலேயே கும்பல் கட்டற்றதாக ஆகிறது. எந்த எல்லைக்கும் செல்கிறது என்கிறார்.

லே பான் கும்பல் மனப்பாங்கு ‘தொற்றிக் கொள்வது’ என கருதினார். கும்பல் அளிக்கும் அடையாளமின்மை பகுத்தறிவை போக்குகிறது. ஆகவே கும்பல் எதற்கும் துணிந்ததாக ஆகிறது. உகந்த உணர்வுநிலைக்கு எதிரான எல்லாவற்றையும் நிராகரிக்கிறது என்றார். கும்பல் மனிதர்களை குறிப்பிட்ட விதமாக இயக்குகிறது எனும் இவருடைய கோட்பாடுக்கு மாற்றாக ஆல்போர்ட் முன்வைக்கும் கோட்பாட்டின் படி ஒரே விதமான நடத்தையை வெளிபடுத்த விரும்பும் மக்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக ஆகின்றனர் என்றார். ஒரு நிகழ்வில் பங்குபெறும் அனைவரின் உள்ளும் மறைந்திருக்கும் நோக்கங்களை வெளிகொனர்கிறது என்றார். கும்பல் எந்த தனி மனிதரையும் பொறுப்பாக்காது என்பதால் தனி மனிதராக செய்ய துணியாதவற்றை கும்பலில் செய்ய துணிகிறான்.

கும்பலில் இருப்பவன் எவ்வித விமர்சனமும் இன்றி சக உறுப்பினர்களின் தூண்டுதல்களை வாங்கிகொள்கிறான். ஒருவகையில் கும்பல் மனிதன் பய்ரிசியின் விளைவு. அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் மதிப்பு மிக்கவர்களின் அவாக்களை அவன் இயல்பின் படியே ஏற்று கொள்கிறான். சிறு வயது முதலே அவனுடைய முடிவுகளுக்கு பிறரை சார்ந்திருக்கும் வழக்கம் உள்ளவனாக அவன் இருக்க கூடும். ஆகவே அவன் அதே உணர்வு நிலை கொண்ட கும்பலின் ஒரு பகுதியாக எளிதில் கலந்துவிட முடிகிறது.

டர்னர் மற்றும் கிளிணன் கூற்றுப்படி, கும்பல் வெவ்வேறு நோக்கங்களும் ஆர்வங்களும் கொண்ட மனிதர்களால் ஆனதாக இருக்கிறது. குறிப்பாக நிலையற்ற கும்பல், அதுவும் வெளிபடுத்தும் இயல்புகள் கொண்ட, எதிர்ப்பு மன அமைப்பு கொண்ட கும்பலில் பொதுவான விதிமுறைகள் என எதையும் கண்டறிவது கடினம். உடனக்குடன் இயல்புகள் மாறுவதும் ஆகும். ஒருவர் சாளர கண்ணாடியை உடைக்கும் நேரத்தில் மற்றும் சிலர் கடைகளை சூறையாட கூடும். குழப்பமான சூழலில் புதிய விதிமுறைகள் அவ்வப்போது எழும், வழமைக்கு மீறிய சமூக நடத்தைகளாக அத இருந்தாலும் கூட அதையே மக்கள் பின்பற்றுவார்கள்.

காண்டீபம் நாவலின் இப்பகுதிகளை பார்க்கலாம்.

– யானை நின்றுவிட்டமை முன்னரே கூட்டத்தை செயலறச்செய்திருந்தது. அத்தனை விழிகளும் யானையையும் அதைச் சூழ்ந்து நின்றிருந்த ஏவலர்களையும் பாகர்களையும்தான் நோக்கிக் கொண்டிருந்தன. மதம் வழிகிறதா என்று அவன் தொட்டுப் பார்க்கிறான் என்று உணர்ந்ததும் கூட்டத்தினர் “மதம்! மதம்!” என்று கூவினர். உலர்நாணலில் தீப்பற்றி பரவிச் செல்வது போல சில கணங்களுக்குள் அச்செய்தி கூட்டம் முழுக்க சென்றது. பல்லாயிரம் தொண்டைகள் “மதம்! வெள்ளை யானைக்கு மதம்!” என்று கூவத் தொடங்கின. சுற்றிலும் கோட்டைச்சுவர் போல செறிந்திருந்த மக்கள்திரள் இடிந்து பின்னால் சரிவதுபோல் அகன்று விலகத்தொடங்கியது. அலை அலையென ஒருவரை ஒருவர் முட்டிச் செறிந்து பின்னால் இருந்த மாளிகைச் சுவர்களை அடைந்து பரவி விலகினர்.

– வீரர்கள் வேல் முனைகளை ஒன்றுடன் ஒன்று பற்றி வேலி ஒன்றை அமைத்து கூட்டத்தை தொடராமல் தடுத்தனர். அது மக்களை மேலும் அகவிரைவு கொள்ளச் செய்தது. குரல்கள் மேலும் வலுத்தன. ஒவ்வொரு முகமும் உணர்ச்சிகளால் நெளிந்துகொண்டிருந்தது. “மதம்கொண்டுவிட்டது” என்றது ஒருகுரல். “அவரால் இறங்கமுடியவில்லை” என்றது பிறிதொன்று. “அவர் அதை செலுத்துகிறார்… கடற்கரைக்குச் செல்கிறார்” என்றது அப்பால் ஒன்று. “அவர் சிவாலயங்களுக்கு செல்கிறார். அவர் அருகநெறியினர் அல்ல. ரைவதமலையில் அவர் சிவயோகம் செய்தார்.”

– அக்கணமே அந்த ஒற்றைக்கருத்து ஒரு பொதுக்கருத்தாக மாறியது. “அவருடன் செல்பவன் சிவயோகி.” “அவர் இடதுமரபைச் சேர்ந்தவர்.” “பிணம் மீது அமர்ந்து ஊழ்கம் செய்பவர்.” “அங்கே மானுடப்பலி கொடுக்கப்போகிறார்கள். அவர் அத்திசைக்கே யானையை செலுத்துகிறார்.” “பலியான மானுடர்களின் குருதியை அவர் தலைவழியாக ஊற்றி நீராட்டுவர்.” “அவர் மானுட ஊன் ஒரு துண்டு உண்பார். அது அவரைச் சூழ்ந்துள்ள பாதாளதெய்வங்களுக்கு உகந்தது.” “நிகரற்ற வல்லமை கொண்டபின் இளைய யாதவரைக் கொன்று துவாரகையை வெல்வார்.” “அவரை வெல்ல எவராலும் இயலாது. அவர் மண்ணிற்கு வந்த இருளரக்கர்.”

– அந்த ஒரு வீதியிலேயே நகரமக்கள் அனைவரும் கூடிவிட்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். மாளிகைகள் மக்களையே மேலே மேலே என ஏற்றிக்கட்டப்பட்டவை போலிருந்தன. மாளிகைகளின் மேல் நின்று கூவி ஆர்த்தவர்களில் இளம்பெண்கள் பலர் இருந்தனர். அவர்கள் கொண்டாடுபவர் ஒரு பெண்ணை உதறி நகர்விட்டுச் செல்பவர். அப்பெண்ணுடன் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளவில்லையா? அவர்களுக்கு துயரோ சினமோ இல்லையா?

– அவர்கள்தான் நேற்றுவரை அந்த மணநிகழ்வை களியாட்டமாக கொண்டாடியவர்கள். அப்போது மதுராவின் இளவரசி ராஜமதியாக இருந்தார்கள். அப்போதே அதை நோக்கி பொறாமைகொண்டிருந்த பிறிதொருத்தி அவர்கள் அனைவருக்குள்ளும் இருந்தாள் போலும். இப்போது இவர்கள் மகிழ்வது ராஜமதியின் இழப்பையா? அவர்களின் ஆழம் கொண்ட வஞ்சத்தையா?

– இல்லை என அர்ஜுனன் தலையசைத்தான். இவர்கள் கொண்டாடுவது அவரது முழுமையை. ஒரு பெண்ணுக்கு உரியவராகும்போது அவர் சுருங்குகிறார். மாமலை முடிகள் எவராலும் அணுகமுடியாது முகிலாடி நின்றாகவேண்டும். ஆம், அதைத்தான். அப்படித்தான். அக்கணமே அவன் அந்தப்பெருந்திரளில் ஒரு முதியபெண்ணின் முகத்தை கண்டான். அவள் நெஞ்சில் கை அழுத்தி விம்மியழுது கொண்டிருந்தாள். அவள் தசைகள் எரிந்து உருகிக்கொண்டிருந்தன. அவள் அன்னையாக இருக்கவேண்டும். அவர் அப்போது அவள் மைந்தனாகிவிட்டிருக்கவேண்டும்

மிக குறுகிய இடைவேளையில் வெகுமக்களின் மனம் மாறியபடி இருக்கும் சித்திரத்தை இப்பகுதி நமக்கு கிடத்துகிறது. வதந்தி, வெறுப்பு, உவகை என மாறி மாறி பயணிக்கிறது. வெகுமக்கள் உளவியலை சொல்ல இப்பகுதி ஒரு நல்ல உதாரணம்.

ஆழ் மன இச்சைகளால் கும்பலின் மனிதன் இயக்க படுகிறான் என்கிறார். ஃப்ராய்ட் அவர் கோணத்தில் பாலியல் அழுத்தத்தை காரணியாக சேர்க்கிறார். ஃப்ராய்டிய கோட்பாடு ‘அடக்கப்பட்ட உணர்வு’ நிலைகள், கட்டுபாடுகள் கும்பலின் போது வெளிப்படுவதாக கூறுகிறது. கும்பலின் ஒரு சில நடத்தைகளை விளக்கிக்கொள்ள இவ்வகையான கோட்பாடுகள் உதவலாம் ஆனால் எல்லாவித கூடுகைகளையும் நோய்மை கூராக அணுகுவது பிழையானது என்கிறார்கள் விமர்சகர்கள். சமூக – பண்பாட்டு வேறுபாடுகளை பொறுத்து வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் கூடும் கும்பல்கள் வேறு வேறு எதிர்வினைகளை ஆற்றுகின்றன.

வெண்முரசின் களியாட்டுக்களின் ஒரு பொது அம்சம் அவை கட்டற்றவை மற்றும் தற்காலிகமானவையாக இருக்கிறது. விழவுகளை அரசே ஒருங்கமைக்கிறது. நெறிப்படி வாழும் மக்கள் நெறிகள் பொருளற்று போகும் அன்றைய தினத்துக்காக காத்திருக்கிறார்கள். ‘அடக்கிய உணர்வுகளை’ கட்டவிழ்த்து சமநிலை பேணும் வழிமுறையாக விழவுகளை காண இடமுண்டு. சட்டென எனக்கு ‘கிளாடியேட்டர்’ திரைப்படம் நினைவுக்கு வந்தது. அரசுக்கு எதிரான அதிருப்தியை திசைதிருப்ப அல்லது நீர்க்க செய்ய, அரசின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இத்தகைய களியாட்டுக்கள் இன்றுவரை பயன்படுத்தபடுகின்றன.

வெய்யோனில் கர்ணன் இந்திரபிரஸ்தத்தில் நுழையும் போது வரும் பகுதி இது. “விழவுகளில் மானுடர் தெய்வங்களாகின்றனர், தெய்வங்கள் மானுடராகின்றனர். இருளும் மிடிமையும் அச்சமும் சிறுமதியும் பின்கடக்க மானுடர் சிறகெழுந்து களியாடுகிறார்கள். உள்நிறைந்த விண்ணிசையை அணைத்து தெய்வங்கள் தங்கள் கால்களை மண்ணில் வைக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தின் தெருக்களில் தோள்களால் முட்டிமுட்டி அலைக்கழிக்கப்படும் உடலுடன் அலையொழுக்கில் சிறுநெற்று என சென்றுகொண்டிருந்தபோது கர்ணன் அச்சொற்களை நினைவுகூர்ந்தான்.

அவன் அத்தனை முகங்களையும் விழிதொட்டு உலவி உளம்சலித்தான். அனைத்திலும் இருந்தது களிக்கொந்தளிப்பு. மானுடர் மறக்கவிரும்புவது எதை? ஒவ்வொரு கணமும் உள்ளத்தில் பொத்தி அணைத்திருக்கும் அனைத்தையும்தானா? நிணம்வழுக்க குருதிமழைக்க தலைகள் காலில் இடறும் போர்க்களத்தில் அவன் அக்களியாட்டை கண்டிருக்கிறான். இறந்த முகங்களிலும் சிலைத்திருக்கும் அக்களிவெறி. மானுடர் வெறுப்பது பொழுதென்று சுருண்டு எழுந்து நாள்என்று நெளிந்து காலமென்று படமெடுக்கும் நச்சை. காலத்தை வெல்வதே அமுது. அமுதுண்டவர் இவர். தேவர்கள் இவர்கள்”

காண்டீபத்தின் மற்றொரு பகுதியில்
ஒளிப்பரப்புக்குள் வந்த முதல் யாதவக்கூட்டத்தில் இருந்த களிவெறியை கண்டபோது தன் முகம் அறியாது மலர்ந்ததை எண்ணி அவனே துணுக்குற்றான். சற்று முன் ஐவர் ஆலயத்தின் முன் கைக்கூப்பி நின்ற மக்கள் எவர் முகத்திலும் இல்லாதது அக்களிவெறி. தன்னை மறந்த பேருவகை அவர்களுக்கு இயல்வதல்ல. உள்ளுறைந்த அவ்வன்முறை தெய்வத்தை ஒவ்வொரு கணமும் கடிவாளம் பற்றி தன்னுணர்வால் இழுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அதை அவர்கள் விடமுடியாது. கடும் நோன்பு என முழு வாழ்க்கையும் ஆக்கிக் கொண்டவர்கள் எவரும் இடைக்கச்சையை அவிழ்த்து தலைமேல் வீசி கூத்தாடி வரும் இந்த யாதவனின் பேருவகையை அடைய முடியாது. இக்களிவெறியின் மறுபக்கமென இருக்கிறது குருதியும் கண்ணீரும் உண்டு விடாய் தணிக்கும் அத்தெய்வம்.

பந்த ஒளிப்பெருக்கின் உள்ளே யாதவர்களின் வெறித்த கண்களும் கூச்சலில் திறந்த வாய்களும் அலையடித்த கைகளும் வந்து பெருகி எங்கும் நிறைந்தபடியே இருந்தன. கைகளை தட்டியபடியும் ஆடைகளை தலைமேல் சுழற்றி வீசி குதித்தபடியும் தொண்டைநரம்புகள் அடிமரத்து வேர்களென புடைக்க, அடிநா புற்றுக்குள் அரவென தவிக்க கூச்சலிட்டபடி அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

கும்பலின் மூலம் அடையப்படும் களிப்பு விடுதலையாக, பேருவகையாக மேற் சொன்ன இரண்டு தருணங்களில் மட்டுமின்றி வெவ்வேறு விழவுகளின் களியாட்டங்களின் போது முன்வைக்கபடுகிறது. டிரோட்டர் மனிதர்களுக்கு இயல்பிலேயே மந்தை மனநிலை உள்ளதாக முன்வைக்கிறார். அதன் ஒரு வெளிப்பாடே அவன் கும்பலாக ஆகிறான். ஒரு கும்பலாக ஆகும் போது அதன் ஒருமையை பாதிக்கும் எதையும் செய்ய அவன் விரும்புவதில்லை என்கிறார். மந்தையில் மனிதன் பாதுகாப்பாக உணர்கிறானா? அதன் பொருட்டே இக்கட்டுகளில் அவன் அதற்குள் புதைகிறானோ?

காண்டீபத்தில் வரும் இப்பகுதி மனிதன் மந்தையாகவும், வெறும் உயிரிச்சையால் இயங்குபவனாகவும் ஆவதை உக்கிரமாக சித்தரிக்கிறது. “தலைவன் சிரித்தபடி “முதலில் நெறி மீறுபவன் அங்கேயே வெட்டி வீழ்த்தபடுவான். அவனது தலையை ஒரு வேலில் குத்தி ஒரு ஓரமாக நிறுத்தி வைப்போம். அதன் பிறகு எச்சரிக்கை தேவையிருக்காது” என்றான்.

அர்ஜுனன் திகைப்புடன் “விடாய் கொண்ட ஒருவனை வெட்டுவதா?” என்றான். “நிறைவுறாது செத்தான் என்றால் அவனுக்கு ஒரு குவளை நீரை படையல் வைத்தால் போதும்” என்று தலைவன் புன்னகை செய்தான். “அந்தத் தலையை வேலில் குத்தி நீர் அருகே நிலைநிறுத்துவேன். எஞ்சியவர்களுக்கு அதைவிடச் சிறந்த அறிவிப்பு தேவையில்லை.” அவனருகே நின்ற இருகாவலர்கள் புன்னகைத்தனர். அர்ஜுனன் தன் உடல் ஏன் படபடக்கிறது என்று வியந்தான். “நீங்கள் இதில் தலையிடவேண்டியதில்லை யோகியே. இது போர்க்களத்தின் வழிமுறை. யாதவர்கள் இன்னும் பெரும்போர்கள் எதையும் காணவில்லை. அவர்களுக்கு இவ்வாறுதான் இவற்றை கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது.”

அர்ஜுனன் புரவியை இழுத்து ஓரமாக நிறுத்திக்கொண்டு அந்நிரையின் ஒவ்வொரு முகமாக பார்த்துக் கொண்டிருந்தான். சோலையைப் பார்த்ததும் ஒவ்வொருவரும் மாறுவதை கண்டான். அதுவரை நீரைப் பற்றிய எண்ணமே இல்லாதவர்கள் போல் இருந்தனர். நீரெனும் விழைவுக்கு மேல் எதை எதையோ சொல்லென அள்ளிப்போட்டு மூடியிருந்தனர். அவை காற்றில் புழுதியென விலகிப்பறக்க அனலை நெருங்குபவர்கள் போல அத்தனை முகங்களிலும் ஒரே எரிதல் தெரியத் தொடங்கியது.

ஒவ்வொருவரும் அப்பெருந்திரளிலிருந்து பிரிந்து தனது விடாயைப் பற்றி மட்டுமே எண்ணியவர்கள் ஆனார்கள். மழைநீர் பெருகிய ஏரியின் பரப்பு எடைகொண்டு நாற்புறமும் பெருவிசையுடன் கரையை அழுத்திக் கொண்டிருக்கையில் மறுபக்கம் நின்று நோக்குவது போல ஒரு உணர்வு அவனுக்கு எழுந்தது.”

கும்பல் தன்னியல்பாக கலைந்து விட கூடியது. குறிப்பிட்ட உணர்வுநிலை மறைந்த பின் அது வடிந்துவிடும். கும்பலின் இந்த இயல்பை வெண்முரசின் பல்வேறு பகுதிகள் சூட்டுகின்றன. பல நேரங்களில் கும்பலை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள், அல்லது மெல்லிய திசை திருப்பல் அல்லது ஐயத்தை விதைக்கிறார்கள். விதுரர், கனிகர், சகுனி போன்ற அரசியல் சூழ்கை அறிந்தவர்கள் இத்தகைய வழிமுறையை கையாள்கிறார்கள். காண்டீபத்தில் வரும் மேலே கொடுக்கப்பட்ட நிகழ்வு அச்சத்தின் வெளிப்பாடு. உயிரச்சம் அவர்களை இயக்குகிறது. அதை ஒடுக்க அதே உயிர் அச்சத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறான் காவலர் தலைவன்.

லேபான் கும்பலை முழுவதும் எதிர்மறை நிலையில் மட்டுமே காண்கிறார் என்பது அவரது கோட்பாட்டின் மீது வைக்கப்படும் விமர்சனம். ஆத்திரம், அச்சம், களிப்பு என மூன்று உணர்வுகளுமே பெரும்பாலும் கும்பல் நிலைக்கு பின் இயங்குகிறது. டர்னர் மற்றும் கிளிணன் தங்களது ஆய்வுகளில் தனித்து இயங்கும் குழு மணத்தை நிராகரிக்கிறார்கள். கும்பலின் தனி மனிதர்களின் மனம் நன்றாக இயங்குவதாகவே கூறுகிறார்கள். வெண்முரசில் வெகுமக்கள் நேர்மறை எதிர்மறை என இரு விதங்களிலும் சித்தரிக்கபடுகிறார்கள். அவர்கள் அறத்தின் காப்பாளர்களாக சூட்டபடுகிறார்கள். பாண்டுவின் மரணம், வாரனவதம் என பல்வேறு இடங்களை கூறலாம். அவ்வகையில் கர்ணனை கண்டு எழுச்சிகொள்ளும் சித்திரம் மனதை விட்டு நீங்காமல் நிறைக்கிறது. “கர்ணனின் புரவி விரைந்ததைக் கண்டு துரியோதனனின் கரிய புரவியும் விரைவு கொண்டது. அவர்கள் மேய்ச்சல் நிலப்பரப்பை கடந்தோட இருநாய்கள் வால்களைச் சுழற்றியபடி மகிழ்ச்சியுடன் பின்னால் துரத்தி வந்தன. வேளிர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து படைக்கலங்களையும் உழுபடைக்கருவிகளையும் ஏந்தியபடி தெருக்களில் வந்து குழுமினர். பெண்களும் குழந்தைகளும் முதியவரும் வழிகளை அடைத்தனர். முன்னால் நின்ற முதுமகன் உரத்தகுரலில் “எங்கள் ஊருக்குள் படைகள் நுழையலாகாது. எங்கள் உடல்கள் மேல்தான் புரவிகள் செல்ல வேண்டும்” என்று கூவியபடி முன்னால் ஓடினான். முழு விரைவில் வந்த கலிங்கப் புரவிகள் அந்தத் தடையை எதிர்பாராததால் தயங்கி பிரிந்து விலக அவர்களுக்குப் பின்னால் வந்த புரவிகளால் முட்டுண்டு குழம்பி சிதறிப் பரவினர். “விலகுங்கள்… விலகுங்கள்” என்றான் தலைவன். “கதிர்மைந்தருக்காக இங்கே குருதி சிந்துவோம். எங்கள் குலங்களுக்கு அன்னமிட்ட வெய்யோன் அறிக நாம் அவனுக்கு அளிக்கும் கொடையை” என்றாள் ஒருத்தி. மிகுந்த மன எழுச்சியை அளித்த பகுதி இது. வாரணவத பகுதி, குந்தி பாண்டுவை இழந்து நகர் புகுதல் என பல்வேறு பகுதிகள் எழுச்சியூட்டுபவை.

எஸ்பினாஸ் ஒரு உயிரியல் நிபுணர் அவர் உயிரணுக்களின் செயல்பாட்டில் உள்ள ஒருமையை கொண்டு “கூட்டு நனவிலி” கோட்பாடை முன்வைத்தார். குழு மனத்தை “சமூக நனவிலி” என்கிறார். வெளியிலிருந்து அதன் பண்பாட்டு கூறுகள் தாக்கப்படும் போது அதற்காக எழுகிறது என்கிறார். துர்கிம் ‘சமூக நனவிலி ‘ கோட்பாடை மேலும் முன்னெடுக்கிறார். ஒரு வேதியல் கூட்டு அணு பல்வேறு இயல்புகள் தனித்தனி அணுக்களால் ஆனதாக இருந்தாலும் அதன் மொத்த இயல்பு வேறாக இருக்கிறது. ‘சமூக நனவிலி’ தனி மனிதர்களால் உருவானதாக இருந்தாலும் அதன் இயல்பு வேறாக இருக்கிறது. சமூக நனவிலி தனி மனிதனின் நனவிலியை காட்டிலும் மேலானது என்கிறார் துர்கிம். வெய்யோனில் வரும் நாகர்களின் பகுதி, வண்ணக்கடல் பகுதியில் வரும் அசுரர்கள் பகுதி, இடும்ப வதம் ஆகியவை ‘சமூக நனவிலிக்கு’ உதாரணமாக கொள்ள முடியுமா என நோக்கலாம்.

பொறுப்பேற்க வேண்டியதில்லை, பின்பற்றுதல், குறைந்த அறிவு திறன், தூண்டுதல், அடையாளமின்மை, ஆழ் மன இச்சைகள், ஆளுமைகளின் தாக்கம், கீழ்படிதல் என பல்வேறு காரணிகளின் கலவையாகவே கும்பல் மனப்பான்மையை உருவாகிறது.

பண்பாட்டு தாக்கம் போதிய அளவிருந்தால் மனிதன் கும்பலின் பகுதியாக அத்தனை எளிதில் கலக்க மாட்டான். அதே போல் அவனது பண்பாட்டு புலமும் கும்பலின் பண்பாட்டு புலமும் நேரெதிராக இருந்தாள் அப்போதும் அவன் அதன் ஒரு பகுதியாக ஆக மாட்டான். வெண்முகில் நகரத்தில் பூரி சிரவஸ் திரளுக்கு வெளியே நின்று நோக்குகிறான். “திரௌபதியின் வருகை மட்டுமல்ல அவர்களுக்கு. அதன்பொருட்டு ஒட்டுமொத்த நகரமுமே தன்னை ஒரு கலையரங்காக ஆக்கிக்கொண்டிருந்தது. முகபடாமணிந்த யானைகளும் இறகணிசூடிய புரவிகளும் கவச உடையணிந்த காவலர்களும் வண்ணத்தலைப்பாகைகள் அணிந்த ஏவலர்களும் சூதர்களும் அயல்நாட்டினரும் அவர்களை மகிழ்விக்க நடித்துக்கொண்டிருந்தனர்.”

அந்த எண்ணம் வந்ததுமே அனைத்தும் அப்படி தோன்றத்தொடங்கிவிட்டது. உண்மையிலேயே நடித்துக்கொண்டிருந்தனர் அவர்கள். அவர்கள் மேல் நூற்றுக்கணக்கான விழிகள் படும்போது அவ்விழிகளுக்கு எதிர்வினையாற்றாமலிருக்கமுடியவில்லை. கீழே கிடந்த ஒரு தலைப்பாகைச்சுருளை ஒரு வீரன் வேல்நுனியால் சுண்டி எடுத்து சுழற்றி அப்பால் இட்டான். குதிரையில் சென்ற ஒருவன் தேவையில்லாமலே அதை வால்சுழற்றி தாவச்செய்தான். தானும் கேளிக்கையாளனாகி நடித்துக்கொண்டிருக்கிறோமோ என அவன் நினைத்துக்கொண்டான். அந்நினைப்பே அவன் அசைவுகளை செயற்கையாக ஆக்கியது.
வெண்முரசின் வெகுமக்கள் பல்வேறு வகைகளில் ஒரு பாத்திரமாக உருவாகி நாவலில் பங்கேற்கிறார்கள். நாவலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகிறார்கள்.

திரௌபதி துகிலுரிப்பின் போது அவை நிறைந்த பெண்கள் அவளை சூழ்வது, வண்ணகடலில் சன்னதத்தில் சூலத்தில் பாய்ந்து உயிர்விடும் துறவிகள், என இன்னும் பல வெகுமக்கள் பங்கேற்புக்கள் வெண்முரசில் விரவிக்கிடக்கின்றன. மேலும் விரிவாக விவாதிக்க இடமுண்டு. இக்கட்டுரையை எழுத தூண்டிய சொல்வளர்காடின் இப்பகுதியுடன் நிறைவு செய்வதே நியாயமாக இருக்கும்.

மரவுரி ஆடையை இடையில் நன்றாகச் சுற்றியபடி யுதிஷ்டிரர் முதலில் நடந்தார். தொடர்ந்து திரௌபதி சென்றாள். பீமனும் அர்ஜுனனும் தொடர்ந்து செல்ல நகுலனும் சகதேவனும் அவர்களுக்குப்பின்னால் சென்றனர். முகப்பில் தௌம்யர் தன் மாணவர்களுடன் நடந்தார். இறுதியில் சௌனகர் சென்றார். அரண்மனையின் அனைத்துச் சாளரங்களிலும் உப்பரிகைகளிலும் முகங்கள் செறிந்திருந்தன. கீழே இடைநாழியில் தோளோடுதோள் ஒட்டி காவலரும் ஏவலரும் நின்றிருந்தனர். முற்றத்தின் ஓரங்களில் அசைவற்ற குறுங்காடு போல அரண்மனைச்சூதர் நெருங்கி நின்றனர்.

அரசப்பாதையில் அதற்குள் மக்கள் கூடத்தொடங்கியிருந்தனர். அவர்கள் அவ்வழி செல்லக்கூடுமென முன்னரே அவர்களுக்கு தெரிந்திருந்தது. அவர்களைப் பார்த்தவர்கள் குரல்கொடுக்க வீடுகளுக்குள் இருந்தும் ஊடுபாதைகளுக்குள்ளிருந்தும் மக்கள் வந்து கூடினர். கூப்பியகைகளுடன் நீர் வழியும் விழிகளுடன் வெறுமனே அவர்களை நோக்கி நின்றனர். அவர்களின் நோக்குகளுக்கு நடுவே யுதிஷ்டிரர் கைகளைக் கூப்பியபடி தலைகுனிந்து நடந்தார். அவர் மாலைவெயிலில் தழல்போல சுடர்விட்ட தாடியுடன் தெய்வமுகம் கொண்டிருந்தார். திரௌபதி எதிர்வெயிலுக்கு விழிகூச மரவுரியால் தன் முகத்தை மறைத்துக்கொண்டு நடந்தாள். தொலைவுப்புள்ளி ஒன்றை நோக்கியவனாக அர்ஜுனன் செல்ல பீமன் சிறிய விழிகளால் இருபக்கமும் நோக்கி கைகளை ஆட்டியபடி கரடியைப்போல நடந்தான்.

அவர்கள் செல்லச்செல்ல இருபக்கமும் செறிந்த கூட்டம் அணுகி வந்தது. ஓசைகளும் கூடின. அவர்கள் ஒருவரை ஒருவர் முட்டி முன்னால் வர பூசலும் உதிரிச்சொற்களும் விம்மல்களும் தேம்பல்களும் கலந்து ஓசையாயின. ஒரு முதியவள் கூட்டத்திலிருந்து கிளம்பி கைகளை விரித்து “பெண்பழி சூடிய இந்நகர் கல்மீது கல்நிற்காது அழிக! என் கொடிவழியினரும் இதற்காகப் பழிகொள்க!” என்று கூவியபடி திரௌபதியை நோக்கி ஓடிவந்தாள். காலிடறி அவள் சாலையிலேயே குப்புற விழ தொடர்ந்து வந்த இரு பெண்கள் அவளை தூக்கிக்கொண்டனர். முதியவள் மண்படிந்த முகத்தில் பல் பெயர்ந்து குருதிவழிய “கொற்றவையே! அன்னையே! உன் பழிகொள்ளுமாறு ஆயிற்றே” என்று கூச்சலிட்டாள். சன்னதம் கொண்டவள்போல அவள் உடல் நடுங்கியது. அப்படியே மண்டியிட்டு திரௌபதியின் கால்களை பற்றிக்கொண்டாள்.

மேலும் மேலும் பெண்கள் அழுதபடி, கைவிரித்துக் கூவியபடி, வந்து திரௌபதியை சூழ்ந்துகொண்டார்கள். அவள் மரவுரியாடையைத் தொட்டு கண்களில் ஒற்றினர். அவள் காலடியில் தங்கள் தலைகளை வைத்து வணங்கினர். அவள் கைகளை எடுத்து சென்னிசூடினர். அவள் அவர்கள் எவரையும் அறியாமல் கனவில் இருப்பவள் போலிருந்தாள். சற்றுநேரத்தில் பாண்டவர் ஐவரும் விலக்கப்பட்டு அவள் மட்டும் மக்களால் சூழப்பட்டிருந்தாள். அவளைச் சூழ்ந்து பெண்களின் உடல்கள் வண்ணங்களாக கொந்தளித்தன. குரல்கள் பறவைப்பூசலென ஒலித்தன.
….
குனிந்து அஸ்தினபுரியின் மண்ணைத் தொட்டு சென்னிசூடியபின் கைகூப்பி யுதிஷ்டிரர் கோட்டைவாயிலை நோக்கி சென்றார். “அரசே! அரசே!” என்று கூவியபடி கூட்டம் கைகூப்பி கண்ணீர்விட்டு நின்றது. எவரோ “குருகுலமுதல்வர் வாழ்க! மூத்த பாண்டவர் வாழ்க!” என கூவினார். “அறச்செல்வர் வாழ்க! அஸ்தினபுரியின் மைந்தர் வாழ்க!” என கூட்டம் வாழ்த்தொலி எழுப்பியது.

வாழ்த்தொலி நடுவே நடந்த தருமன் கோட்டைவாயிலை அடைந்து அதைக் கடந்ததும் ஒரு முதிய முரசறைவோன் வெறிகொண்டு ஓடிச்சென்று முழைத்தடிகளை எடுத்து முரசொலிக்கத் தொடங்கினான். ஒருகணம் திகைத்த வீரர்கள் ஒற்றைக்குரலில் “குருகுலமூத்தோர் வாழ்க! அறச்செல்வர் வாழ்க!” என வாழ்த்தினர். நூற்றுவர்தலைவர்கள் கைநீட்டி கூச்சலிட்டு அவர்களை தடுக்கமுயன்றனர். மேலும்மேலும் கோல்காரர்கள் சென்று முரசுகளை முழக்கினர். சற்றுநேரத்தில் நகரமெங்கும் முரசொலிகள் எழுந்தன. அஸ்தினபுரி பெருங்களிறென பிளிறி அவர்களுக்கு விடையளித்தது.

நன்றி
சுந்தரவடிவேலன்
அருணாசலம் மகராஜன்

Major Theories to Explain: Why the Crowd Behaves in a Particular Way

https://en.wikipedia.org/wiki/Collective_behavior
https://www.britannica.com/topic/collective-behaviour

ஜூலை 2016 மாத கூட்டம் – மணிமாறன் உரை

வெண்முரசு மீதான எனது வாசிப்பனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வது என்பது வானுயர் சிகரத்தின் மீதேறி சென்று கொண்டிருப்பவர்களிடம் அடிவாரத்தில் இருந்து அண்ணாந்து பார்த்தவன் அடைந்த பரவசத்தை பெருமையாக  முன்வைப்பது போன்றது.

அது கடந்த மாத வெண்முரசு கலந்துரையாடல் தந்த ஆர்வமிகுதியால் ஒப்புக்கொள்ள நேரிட்டது.

அவையறிந்து ஆராய்ந்து இடைதெரிந்து நன்குணர்ந்து கசடறச் சொல்தெரிந்து ஆற்ற வேண்டிய உரையை பெயரளவில் மொழிவதென்பது களம் அமைக்காமல் பகடை உருட்டுவது போலாகும் என்ற எண்ணம் தோன்றியது.

வெண்முரசின் தீவிர முழுநேர அல்லது அதிலேயே முற்றும் தோய்ந்த வாசகர்கள் மத்தியில் நான் சொல்லெடுத்தல் என்பது கல்லாதான் சொற்காமுறுதலேதான்.  எனவே வெண்முரசினுள் நுழையாமல் அது என்னுள் நுழைந்து ஏற்படுத்திய ஒருசில தாக்கங்களை முன்வைக்கும் பொருட்டு தனிப்பட்ட வாசிப்பு, ரசனை மற்றும் வாழ்வனுபவங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட என் சின்னஞ்சிறு பகடைக்களத்தில் எனது பகடையை உருள விடுகிறேன்.

இதனால் யாவர்க்கு யாது பயன் என்பதை பொருட்படுத்தாமல் முற்றிலும் எனதொருவித சுய ஆற்றுப்படுத்தலுக்காக மட்டுமே நான் முயற்சித்தது என்பதை கருத்திற்கொண்டு நண்பர்கள் பொருத்தருள வேண்டுகிறேன்.

ஒரு வாசகனாக எல்லா வருடங்களைப் போலவும் தான் 2014 ஆம் ஆண்டும் பிறந்ததென்று கூறிவிடமுடியாது. ஒவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் வழக்கமாக பகிரப்படும் பிரதான வாழ்த்துச் செய்தி – ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும் என்பது.  அதன்படி அம்முதல் நாளே செய்தவமேதுமின்றி விருப்பத்திற்குரிய ஓரரிய வரம் கிட்டயதில் நான் அடைந்த வியப்பானந்தத்திற்கு அளவில்லை.  ஜனவரி 1, 2014 – வெண்முரசு இணையத்தில் வெளிவரத் துவங்கிய தினம், நன்றியோடும் பணிவோடும் நெஞ்சத்தில்  பசும்பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.  அன்றைய தினமே அதன் பிரம்மாண்டத்தையும் அது எடுக்கவிருக்கும்  விஸ்வரூபத்தையும் உள்வாங்கிக் கொண்டு ஜெவுக்கு ஆண்டாளின் வரிகளில், “வெண்முரசு – அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்ததாக  ஒலிக்கும்” என  ஒரு வாழ்த்தனுப்பினேன்.  மதித்து பதில் மின்னஞ்சலுமிட்டார். பெருமைக்காக குறிப்பிடவில்லை.  வெண்முரசு தொடர்பாக நான் எழுதிய முதல் மற்றும் ஒரே கடிதம் அதுதான்.

சிறு வயதிலிருந்தே தாத்தா பாட்டிகள் மூலம் மகாபாரதக் கதைகளைக் கேட்டு வளரும் பேறு பெறாதவன்.  எனவே ஏழெட்டு வயது சிறுவனை தூர்தர்ஷன் மகாபாரதம் செல்லமாக ஒரு சிற்றெறும்பு கடி கடித்தது.  அதாவது பாரதம் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போர் என மட்டுமே.  பதின்ம வயதின் முடிவு வரை அதுவே எனது முடிபு.  கதையைப் பற்றி சொல்லிக்கொள்ளும் படியான புரிதலொன்றும் எற்படவில்லை.  வில் அம்பு தேர் அர்ச்சுனன் கண்ணன்  மீதெல்லாம் மட்டுமே ஒரு வித இனம்புரியாத ஈர்ப்பு.

 ஒரு சிற்றதிர்விற்கு வழி செய்தது சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படம்.  வணிகத் திரைப்படங்கள் வார்த்தெடுத்த ரசிக மனோநிலையின் விளைவாக கர்ணன் படம் பார்த்த அந்த இரவு கிட்டத்தட்ட உறக்கமற்றது.  கண்ணன் மீது அதுவரை இருந்த மருள் மறைந்து கர்ணன் மீது தனிப்பெரும் ப்ரியம் உருவானது.  அவனுக்கு எதிராக பல தவறுகள் நடந்தேறி விட்டன.  அவன் மரணித்ததை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.  நிச்சயம் அவன் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும் என விரும்பினேன்.  அவ்விருப்பத்தை தளபதி திரைப்படம் மூலம் நிறைவேற்றித் தந்தமைக்கு இயக்குனர் மணிரத்னத்திற்கு எப்போதும் என் நன்றிகள்.

மகாபாரதம் தொடர்பான எனது முதல் நூல் வாசிப்பு எஸ்ராவின் உபபாண்டவம் வாயிலாக நிகழ்ந்தது. அந்நாவலின் நேரியல் அல்லாத அமைப்பு முறை வெகுவாக ஈர்த்தது. வாசித்து முடித்ததும் மகாபாரதம் மீதான பிற நவீன ஆக்கங்களைத் தேடும் முயற்சியில் ஈடுபடும் முன்னமே புத்தாண்டுப் பரிசாக ஜெவின் வெண்முரசு வெளிவரத் துவங்கியது.  சிறுகச் சிறுக அதிமதுரம் உண்ணும் யானைக்குட்டி ஆனேன்.

இடையறாது வாசித்தும், இடைவெளி விட்டும், விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தும், விட்ட இடத்தை மறந்தும், மீண்டும் மீண்டும் ஒரே அத்தியாயத்தில் திளைத்தும் அல்லது முற்றிலும் வேறொரு அத்தியாயத்தில் நுழைந்தும், பல நுண்மையான பகுதிகளை உள்வாங்க முடிந்ததும் முடியாமலும் புரிந்தும் புரியாமலும், வெண்முரசின் ஒரு முழு நூல் விட்டு மறு நூல் பாய்ந்தும், பின் ஒரே நேரத்தில் இரு நூலிலும் சவாரி செய்தும் வெண்முரசை இன்றளவும் வாசித்து வருகிறேன்.  வெறும் வாசிப்பின்பத்திற்காக மட்டுமல்ல அதுவளிக்கும் எண்ணற்ற சமகால வாழ்வனுபவங்களுக்காகவும் தான்.  பின் தொடர்வதன் வசீகரம் மட்டும் துளியளவும் குறையவேயில்லை.

வெண்முரசின் மொழி நடை, அதன் அணிமிகு உவமைகள், நிலவியல் சார்ந்த விவரிப்புகள், புராணக் கதைகளின் கச்சிதமான இடைச்செருகல்கள், மகாபாரதத்தின் நீர்க்குமிழ் கதை மாந்தர்களையும் நீரில் சுருளும் நெடுந்திரைச் சம்பவங்களையும் பிரமாண்டமான அழியாப்பொற்சித்திரங்களாக வார்த்தெடுத்த தனித்தன்மை, அனைத்து முக்கிய கதாப்பாத்திரங்களின் மனோநிலைகளையும் எவ்வித சமரசமுமின்றி நேர்த்தியாக சமநிலைத்தன்மையோடு எடுத்துரைத்த நேர்மை ஆகிய யாவும் வெண்முரசு வாசகர்கள் அறியாதவைகளல்ல.  ஆனால் இவைகளே  மகாபாரதம் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போர் எனக் கொண்டிருந்த எனதபிப்ராயத்தை அழித்து அது அறத்திற்கும் மேலான அறத்திற்குமானது என்பதை முன் மொழிந்தது.  என் வரையில் அது ஒரு மிகப்பெரியத் திறப்பு.

விளைவாக தமிழில் கிடைக்கபெறும் மகாபாரதப் புனைவுகளான இனி நான் உறங்கட்டும், இரண்டாமிடம், பருவம், திரௌபதி, கிருஷ்ணா கிருஷ்ணா, கௌரவன் ஆகியவைகளை வாசித்தேன்.  இவற்றை வெண்முரசு வரிசை நூல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி எவ்வித எண்ணமும் தோன்றவில்லை. நல்லவேளை.  அது முழு முதல் வீண் வேலையும் கூட.  நிச்சயம் அவை யாவும் அதனதன் தனித்துவ மிக்க செவ்வியல் தன்மையோடு ஒளிரும் நட்சத்திரங்கள் அல்லது  நித்திலங்கள் தான்.  ஆனால் வெண்முரசின் அந்தஸ்து பிரபஞ்சவெளி அல்லது ஆழ்கடலின் அளப்பரியத் தகுதி கொண்டது என்பதை ஐயம்திரிபறச் சொல்வேன்.

வெண்முரசு உருவாக்கியளிக்கும் உருவகங்கள் பற்றி முதன்மை வாசகர் எவரேனும்   தனியாக ஒரு பெருநூலே எழுதலாம்.  கற்பனைத்திறனில் சற்றே பின்தங்கிய என்போன்ற யாவர்க்கும் அது ஒரு பெருங்கொடையாய் விளங்கும்.  .

இதுவரை அறிந்திடாத, வெண்முரசு வரிசை நூல்களிலும் இடம் பெறாது போன துரியோதனன் சுபத்திரை காதலை முதன்முதலாக ஆனந்த் நீலகண்டனின் கௌரவன் நாவலில் வாசித்தபோது பேருவகை அடைந்தேன்.  எத்தனை கண்ணியமான ஒரு காதலன் துரியோதனன். மேலும் பிறப்படிப்படையில் அல்லாது போர்த்திறனடிப்படையில் மேலெழுந்து வருபவனே க்ஷத்திரியனென கருதப்படவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்து ஏகலைவனை அங்கீகரித்து அவன் நடத்திய விதம் பலனளிக்காது போய் துவண்டிருந்த துரியோதனனின் ஆளுமை,  கர்ணன் தன் குலத்தின் காரணமாக பல்லார் அவை முன் தன் அதியற்புத விற்திறமையை வெளிப்படுத்தியதையும் மீறி இழிவுபடுத்தப்பட்ட தருணத்தில் அவனை அங்க நாட்டிற்கு  அரசனாக முடிசூட்டும் பொழுது உயிர்த்தெழுகிறது.  நூற்றுவர் மீது அவன் கொண்டிருந்த சகோதரப்பாசம், தன் நண்பர்கள் மீதிருந்த அசையா நம்பிக்கை, பரசுராமரிடம் இருந்து நாட்டைக் காக்க அவன் எடுத்துக்கொண்ட பிரயத்தனம், திரௌபதியைத் தான் நடத்திய விதத்தை ஒரு போதும் நியாயப்படுத்தாத தன்மை போன்ற அனைத்துமாகச் சேர்ந்து ஒரு வெறுக்கத்தக்க எதிர்நாயகன் என்பதை விட ஒரு தலைச்சிறந்த கதாநாயகனாக துரியோதனனை ஆக்குகிறது.  துரியோதனாவிரும்பிகள் தவறாது வாசிக்க வேண்டிய நூல்.  அல்லது வாசிக்கும் யாவரும் துரியோதனாவிரும்பிகள் ஆகிவிடுவர்.

துரியோதனன் – கர்ணன் நட்புறவைப் பொறுத்தவரையில் கடந்த மாத வெண்முரசு கலந்துரையாடலில் கூட வாசக அன்பர்கள், கர்ணன் துரியோதனன் மீது கொண்டிருக்கும் விசுவாசத்திற்கும் நட்பிற்கும் யாவரும் அறிந்த ஒரு வெளிப்படையான காரணம் உள்ளது போல் துரியோதனன் கர்ணன் மீது காட்டும் நெஞ்சார்ந்த நட்பிற்கு யாதொரு காரண காரியம் இல்லாதது கேள்விக்குறியே எனும் பாவனையை வந்தடைந்தனர்.  அர்ச்சுணனை தோற்கடிக்க வல்ல ஆற்றலை கர்ணனிடம் கண்டு கொண்டதாலேயே துரியோதனன் அவனை நிலம் தந்து க்ஷத்ரியனாய் கௌரவித்து அரசனாக்கினான் என்றுரைப்பதைப் போல அபத்தம் வேறில்லை என்பதால் இக்கருத்தை விரிவாக்கவில்லை.  பால்யத்தில் இருந்தே பிறப்படிப்படையில் அல்லாது போர்த்திறனடிப்படையில் மேலெழுந்து வருபவனே நிஜ க்ஷத்திரியனென கருதப்படவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்த துரியோதனின் அத்தகையச் செயல் அத்தருணத்தில் எவ்வித கேள்வியையும் என்னுள் எழுப்பவில்லை. மேலும் அஸ்தினாபுரியின் வருங்கால அரசன் எனும் உறுதியான நம்பிக்கையில் அதன் படைப்பிரிவில் கர்ணன் போன்ற மாவீரர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதை முழுதுணர்ந்தவன் அவன் என்பது கௌரவன் நாவல் வாசிப்பின் பாதிப்பு என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

மேலும் கிருஷ்ணனைப் பற்றி சொல்லாமல் போதல் தகாது.  எப்போதும் நம் எதிர்பார்ப்புக்குள் அடங்காமல் குறும்புத்தனமிக்க காதலோடும் மிகுந்த மதிநுட்பத்தோடும் ஒரு முழு நேர அரசியல்வாதியாக கணந்தோறும் தன்னை ஒரு புது வியப்பாகக் காட்டிக் கொள்ளும் தெய்வீகத்தன்மை ஏதுமற்ற கவர்ச்சிதான் கிருஷ்ணனை வெல்லற்கரிய நாயகனாக வெண்முரசு முன்னிறுத்துகிறது எனச் சொல்வேன்.      உடனடி உதாரணத்திற்கு சொல்வதாயின் பன்னிரு படைக்களத்தில் –
ஒரு தீவிர அரசு சூழ்தலுக்குப் பின் கிருஷ்ணனின் மதியூகத்திற்கிணங்க ராஜசூய வேள்வி  நிகழ்த்தவிருக்கும் முடிவை திரௌபதியிடம் அறிவிக்கும் பொருட்டு தருமனும் கிருஷ்ணனும் அவள் அறை நுழையும்போது அவள் ஆடி முன் அமர்ந்து 12 x 12 என களங்கள் கொண்ட, பகடைகளற்ற அதாவது மானுடனை ஆட்டுவிக்கும் தெய்வங்களின் கணக்குகளாக கருதப்படும் பன்னிரு ராசிகளும் உள்நுழையவியலாத யவன நாற்களம் ஆடிக்கொண்டிருப்பாள்.  ஒவ்வொன்றையும் நிறைநிலை வரை எதிரெதிர் வைத்து முற்றிலும் அசைவிழக்கச் செய்திருப்பாள். கிருஷ்ணனின் ஒற்றை காய் நகர்த்தலில் அனைத்தும் அதனதன் நிறைநிலை அழிந்து ஆடல் முடிவுறும்.  பின் ஜராசந்தனை வீழ்த்த வைத்ததும் சிசுபாலனை வதம் செய்ததும் அவனது அரசியல் அதிரடிகள்.  குருக்ஷேத்திரப் போர் நோக்கிய திரௌபதியின் விழைவை தனதாக்கி கொண்டு பிற காவியக் கதாநாயகர்கள் போல் எவ்வித அற அளவுகோல்களுக்கும் ஆட்படாமல்  வெற்றிகரமாக முன்னகர்த்திக் கொண்டு சேர்ப்பித்த இளைய யாதவனே என்றென்றைக்கும் இக்காவியத்திற்கு இன்றியமையாதவன். வெண்முரசு வரிசை நூல்களில் நீலவண்ணக் கண்ணனின் கதையைச் சொல்லும் நீலம் நாவலை வாசிக்கும் தோறும் எனதிருவிழிதனிலவனழகும் செவிதனிலவன் வேய்ங்குழலுமே நிரம்பி வழிகிறது.

இப்படியாக வெண்முரசின் எண்ணற்ற நெகிழ்வுகளை வெறுமனே பட்டியலிடுதல் தேவையற்றது எனினும் தவிர்க்க முடிவதில்லை. முடிவாக பன்னிரு படைக்களத்தின் இறுதி அத்தியாயங்களில் திரௌபதியை துச்சாதனன் துகிலுரிக்கும் போது அவள் மானம் காக்கும் பெருமையை கிருஷ்ணனின் தெய்வீகத்தனத்திற்கு வழங்காமல் இளைய யாதவன் பேர் சொல்லி அப்பெருமையை கௌரவப் பெண்களுக்கு அளித்ததையும், துரியோதனின் ப்ரியமகள் லட்சுமணையை அத்தருணத்தில் அவனுக்கு எதிராக சினம் கொண்டு எழுந்த ஓர் பேரன்னையாக படைப்பித்துக் காண்பித்ததையும் வாசித்த தருணம் வெண்முரசுகர்த்தாவை எண்ணி விழிநீர் சோர கைகூப்பினேன்.

மற்றபடி வெண்முரசின் மீது விமர்சனாபூர்வமாக எந்தவொரு கருத்தை முன்வைக்குமளவிற்கு நான் வளரவில்லை என்பதை பணிவுடன் ஒப்புக்கொள்கிறேன்.  நான் செய்யக்கூடியதெல்லாம் என்வரையில் வெண்முரசை விதந்தோதுதலும் நயம் பாராட்டுதலும் மட்டுமே.  அவற்றை என்னை விட உங்களில் பலர் முற்றிலும் புத்தம் புது கோணத்தில் முன் மொழிய முடியும்.  உதாரணமாக வெய்யோனின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றி கடந்த மாதக் கூடுகையில் ஜாஜா விவரித்த விதம். ஒரு வெண்முரசு வாசகனாக நான் சென்றடைய வேண்டிய தூரம் வெகு தொலைவில் உள்ளது என்பதே உண்மை.  வெண்முரசு வாசிப்பதற்கு மட்டுமானது அல்ல.  வாசித்து கலந்தாலோசித்து விவாதிப்பதற்கென்றே உருவாகி திரண்டெழுந்து பெருகி வருகிறது.  இது போன்ற கலந்துரையாடல்களே அம்மாபெரும் படைப்பிற்கு செய்யப்படும் அடிப்படை மரியாதைகள்.  ஏற்பாட்டாளர்களுக்கு அசைவிலா ஊக்கம் எப்போதும் துணை நிற்கட்டும்.  வாழ்த்துகள்.

வெய்யோன் : ஒரு பார்வை – ராகவ்

மிக விரைவில் புத்தகமாக வரவிருக்கும், நாம் தளத்தில் படித்த வெய்யோனை பற்றி இன்று கொஞ்சம் விவாதிக்கலாம்.

வெய்யோன் – கர்ணனை பற்றிய ஒரு தனிப்புத்தகம் என்று எடுத்துக்கொன்டால் அது சரியாக அமைந்துள்ளது என்றே படுகிறது. அதற்கு முழுமையான நியாயம் செய்யும் ஒரு படைப்பாகவும் உள்ளது. ஆனால் அப்படி சொல்வதற்கு முன்னால்

நமக்கு பொதுவாக தெரிந்த கர்ணன் (தொலைகாட்சி நாடகங்கள், பிரியபட்ட ஆக்கங்களில்) எப்படி உள்ளான் என்றும் பார்கலாம். அதே நேரத்தில், நம் வெண்முரசு தொடரில் இதுவரை கர்ணன் யார். எவ்வாறாக உருவாகி உள்ளான் என்றும் தொகுத்து கொள்வதும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.

அந்த வகையில், மற்ற ஆக்கங்களில் கர்ணனுக்கு சில குறிப்பிடும் கட்டங்கள், உச்சங்கள் உன்டு. அவன் பிறப்பு – குந்தி திருமணம் ஆகும் முன்பு கர்ணனை பெற்று பின் ஆற்றில் விட்டு விடுகிறாள். கல்வி, துரோணரால் மறுக்கபடுகிறது, அதன் பின் பரசுராமர் மூலம் சாபம் பெறுகிறான். ஒரு முதற்கட்ட மோதலாக அர்ஜுனனைவிடவும் சிறந்த வில்லாளி என்று சபைக்கு முன்னால் வந்து நிற்கிறான். பீமன் கொந்தளிப்பதும், அவன் வில்லாட சபை மறுப்பதும், அந்த சபையில் துரியோதனன் கர்ணனுக்கு அங்க தேச மன்னனாக மகுடம் சூட்டுவதும் நிகழ்கிறது. அதன் பின் நாம் கர்ணனின் கொடுத்து கொடுத்து சிவந்து போகும் கைகளை காண்போம். துரியோதனன் கர்ணன் இடையே ஆண நட்பு அதிகம் பேசபடும் ஒன்று. எடுக்கவோ கொர்க்கவோ போன்ற உச்ச காட்சிகள். இவை பொதுவாக நாம் கண்ட கர்ணனின் முன் வரைவு.

பின் கர்ணனின் திருமணம். துரியோதனன் இந்திரப்ரஸ்தத்தில் பிழையாக குளத்தில் விழுவது இதெல்லாம். இந்த புத்தகத்தில், வெண்முரசில் முதல் முறையாக, கதையின் அம்சமாக இந்த இருவரிகள் மட்டுமே என்பதை ஒரு குறிப்பாக இங்கு சொல்கிறேன்.

இதற்கு பின் கர்ணன் துஷ்ட சதுத்தர்களில் (துரியோதன, துச்சாதன, கர்ண, சகுனி) ஒருவனாக ஐக்கியமாகி செயல் படுவது

அதற்கு பின் நாம் அறிந்த சம்பவங்கள், உச்சங்கள். முடிவில் குந்தி கர்ணன் எல்லோருக்கும் மூத்தவன் என்று தெரியபடுத்துவது. இவை நாம் மற்ற ஆக்கங்களில் பொதுவாக பார்க்கும் கர்ணன்.

வெண்முரசில் வெய்யோன் வருவதற்கு முன்னமே கர்ணனுக்கு ஒரு குறுநாவல் அளவுக்கு வடிவம் வந்து விட்டது.

குந்தி கர்ணனை பெற்றெடுப்பது. பின் ஆற்றில் விடுவது. இதுவே ஒரு ஆழம் மிக்க கதையாக உள்ளது. குந்தியின் கர்ப்ப காலம்.  அவளை பார்த்துகொள்ள வரும் செவிலி. அவர்கள் ஊடாக, குந்தி கரு உற்றது முதல், அங்கே உலவி வரும் ராஜ நாகம். செவிலி அந்த நாகத்தை கொல்ல முயல்வதும், பதிலுக்கு நாகம் அவளை முடிக்க நேர்வதும். இப்படி கர்ப்ப காலமே ஒரு கதையாக. அதன் பின் குந்தி கர்ணனை ஆற்றில் விட்டு விட நேர்கிறது. கர்ணனை அவள் தேடவும் செய்கிறாள். பாண்டுவை மணம் புரிந்த பின், அவனுடனான பேச்சில் – அன்று இருந்த ஷத்ரியனான பாண்டு – கர்ணனை ஒரு மகனாக ஏற்காமல் போகலாம் என்ற எண்ணம் கொன்டு குந்தி கர்ணனை பற்றி சொல்லாமல் விடுகிறாள். பின் அவர்கள் காட்டுக்கு செல்லும்போது அது வெளிபடுகிறது. மறுபுரம் ராதையும் அதிரதனும். ஆற்றில் கண்டு எடுத்த மகன் வசுஷேனனுடன் அதிரதன் எனும் குதிரைகாரனும் அவன் மனைவி ராதையும் இருந்து வருகிறார்கள். உருக்கமான பல அத்தியாயங்கள் அவர்களுடன்.  அவர்கள் சூரியனார் கோவில் உள்ள சம்பாபுரி செல்வதும் அங்கு கர்ணன் வளர்வதுமாக கதை நேர்கிறது. அங்கேயே அவன் மன்னனுக்கு தேரோட்ட நேர்வது பின் மன்னனை காப்பாற்றும்படி ஆவதும் நிகழ்கிறது. சூதன் மன்னனை காப்பாற்றுவதா என்ற இடத்துக்கு பின்னால் அங்கிருந்து கர்ணன் ஹஸ்தினபுரி வருவதும் நிகழ்கிறது.

ஹஸ்தினபுரிக்கு வரும் கர்ணன், பான்டவர்களில் முக்கியமாக பீமனால் வெறுக்கபடுவது – குந்தியால் அவன் கவனிக்கபடுவது. பின் சூதன் ஆணாலும் துரோனர் குருகுலத்தில் அவன் இருப்பதும் அங்கு நிகழ்பவையும் அவன் சூதன் எனும் காரனமே அவனை துரத்த அவன் குருகுலம் நீங்குவ்வதும் வெண்முரசில் கர்ணனின் பயணம்.

அதன் பின் ஒரு உச்சமாக அர்ஜுனனை விட அவன் சிறந்தவன் என்று அவன் களம் நிற்பதும் அங்கேயே அவனுக்கு துரியோதனன் அங்க மன்னனாக முடி சூட்டுவதும், அதன் பின் யுதிஷ்டிரன், கர்ணன் அவன் அறம் மூலம் மட்டுமே பாண்டவர் ஐவரையும் வெல்வான் என்று, நம் எழுத்தாளர் தொடும் உச்சம்.

இவ்வளவு பெரிய முன்வரைவுக்கு பின்னர் தான் வெய்யோன் தொடங்குகிறது. இதற்கு பின்னும் கர்ணனை சொல்கிறது.

இனி வெய்யோனின் பயணம். இந்த புத்தகத்தில் வரும் அத்தியாங்கள், அதன் பெயர்களும் ஒவ்வொன்றும் எத்தனை நாள் சென்றன என்பவையும் குறிப்பிட்டு, சில கருத்க்களை சொல்ல விழைகிறேன்.

செந்தழல் வளையம் – 3

முதல் பகுதியில் 3 அத்தியாயம். இது பரசுராமனில் ஆரம்பித்து கர்ணனில் ஒரு வட்டத்தின் முழுமை போல முடிகிறது.

* தம்சன் வன்டு – மிக முக்கியமாக பாத்திரமாக வருகிறது. கியாதி, புலோமை முதல் ரேணுகை வரை ஒரு கட்டம். கடைசியில் குந்தி த்ரொளபதியுடன் முடிவது.

கர்ணனின் இட தொடை துளைக்க படுவதும், பரசுராமனிடம் சாபம் பெறுவதும் நிகழ்கிறது(முன்னம் ப்ரயாகையில் இது சொல்ல பட்டு விட்டது ஆணாலும் இங்கு நடப்பது வேறு).

தம்சன் ஒருவகையில் அன்னையிடமே சேரும் விழைவில் ஆரம்பிக்க – தொடர்ந்து அன்னை மகளாக கர்ணனுக்கு ஆகும் இடத்தில் முடிகிறது.

“ஆணவம் அமைந்திருப்பது இடத்தொடையில். அங்குதான் மங்கையை அமரவைக்க வேண்டுமென்பார் ஆன்றோர்” என்றான் தம்சன். அவன் சொல்வதென்ன என்று விளங்காமல் “என்ன?” என்று அவன் மீண்டும் கேட்டான். “அங்கிருக்கட்டும் இந்த ஆறா வடுவின் அணையா பெருவலி”

இதோடு கர்ணனின் தொடையை துளைத்த பின்பு தம்சன் சாபம் நீங்கி மீட்சி பெற அத்தியாயம் முழுமை கொள்கிறது.

தாழொலிக்கதவுகள் – 9

* சிவதர், ஹரிதர்

* தீர்க்கசியாமர்

* மனைவி –  விருஷாலி, சுப்ரியை

அத்தியாயத்தின் பெயரே சொல்லும்படி, கர்ணனின் அங்கத்தில் காணும் அவமானங்கள், அவன் மீது வைக்கபடும் சுமைகள். அவன் பாத்திரத்தின் போதமை இவைகள் இந்த அத்தியாயத்தில். கர்ணனின் அனுக்கனாக சிவதரும். அங்கத்துக்கு ஒரு அமைச்சனாக ஹரிதரும் வந்து அமைகிறார்கள். ராஜ்ஜியத்தின் அவைக்குள் பல்வேறு குடிகளும் உள்வருவது ஒரு அத்தியாயம் நிறைய வருகிறது. கர்ணன் திருமணம் செய்ய வேண்டிய இடம் – அன்னை மூலமும் ஒருவளும், நண்பன் மற்றும் நண்பனின் மனைவி வைக்கும் சுமையால் ஷத்ரிய பெண்ணை மணக்க வேண்டும் எனும் நிர்பந்தம். கர்ணன் என்றுமே தன்னை ராதேயனாக பார்கிறான் – வளர்த்த அன்னை ராதை மகனாகவே உள்ளான் – அவளுக்கு வாக்கு அளிக்கின்றான். வெண்முரசு கர்ணனின் ஆரம்பகாலத்திலேயே ராதையிடம், தான் நீர் கொடுக்கும் போது, அதிரதனுக்கு தான் நீர் கொடுப்பேன் என்று சொல்கிறான். தொடர்ந்து நண்பனிடமும் அவையிலும் அவன் ராதேயன் என்று நின்று விருஷாலியை மணம் புரிய முடிவெடுக்கிறான். அந்த கட்டத்துக்கு முன். கர்ணன் ஹஸ்தினபுரி முதல் முறை நுழையும் போது ப்ரும்ம முகூர்த்ததிலேயே சூரியன் எழுவ்வதும், அன்று கண்தெரியாத சூதர் தீர்கசியாமரின் அம்சமாக பிறக்கும் கண் தெரியாத சிறுவன் தீர்கசியாமனால் கவச குண்டலம் அனிந்தவன் என்று சுட்ட படுகிறான். அந்த தீர்கசியாமனை அவை நின்று அவன் ராதேயன் என்று நிறுவும் முன்னர், பல நாட்களுக்கு (அத்தியாயங்கள்,புத்தகங்களுக்கு) பின், காண்பதும் வருகிறது. மூத்த தீர்கசியாமர் பீஷ்மருக்கும், பின் திருதராஷ்டிரருக்கும் கிட்ட தட்ட ஒரு குரு என்று சொல்வது இங்கு தகும்.

சிறைபெருந்தாழ் – 11

* தீர்க்கதமஸ் – தீர்க்கதமஸ்! முடிவுறா இருள்!

* சுப்ரியை – மணப்பது

இந்த அத்தியாயங்களில் பெரும் தந்தை வடிவமான தீர்கதமஸ்சின் கதை நிகழ்கிறது. இது முழுமை பெரும்போது எங்கும் வந்து உட்காராத கதையாக, மனதை மேலும் பாரம் கொள்ள செய்வதாக உள்ளது. ஆனால் வெய்யோனின் கர்ணன் பின் வரும் கட்டங்களில் யார் என்னும் போது, இந்த பெரும் தந்தையின் கதை மிக முக்கியமான ஒன்று என்பது அர்த்த படுகிறது.

தீர்கதமஸ் ஒரு முடிவுறா இருள். கண் தெரியாத பிராமணர், பிறப்பில் இருந்து. அவருக்கு விழைவு ஒன்றே வாழ்வில். மேலும் மேலும் மூர்கமாக காமம் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவரது மகன்கள் அவரது தொல்லை தாங்காமல் அவரை ஆற்றில் விட, பல நாட்களுக்கு பின் கரை சேர்கிறார். வாலி என்பவன் தன் குடிகளோடு அங்கு இருந்து வருகிறான். சிங்கத்தின் முறை என்று முன்பே வெண்முரசில் சொல்லப்பட்ட ஒரு முறை உள்ளது. அதாவது நாடாளுபவனை மற்போர் க்கு யாரும் அழைக்கலாம். வென்றவன் மன்னன். தோற்பவன் கொல்லபட வேண்டும். அந்த வழி முறை வாலியின் குலத்தில் நாள்தோறுன் நடைபெறுகிறது. ஒரு கட்டத்தில் வாலி தன் குடியில் இருந்து இப்படி மற்போரில் ஒருவன் நாளும் பொழுதும் வந்து அவன் கையாலேயே கொல்லபட்டு சாவதை தன் மகன்கள் மற்போருக்கு அறிவு கெட்டு வந்து தன் கையாலேயே சாவதாக எண்னி நொந்து இருக்கிறான். தீர்க்கதமஸ் அங்கு வந்து சேர்கிறார். தீர்கதமஸ் கண் இல்லாவிட்டாலும் அவரிடம் வேதம் கட்டு பட்டது. வா என்றால் மழை வரும். அப்படி பட்டவரை கொன்டு தன் குடியை சீர் செய்கிறான் வாலி. அதன் பொறுட்டு ஏற்பட்டதே அங்கம், வங்கம், கலிங்கம் முதலான தேசங்கள்.

இதற்கு பின் துரியோதனனும், கர்ணனும் கலிங்கத்து இளவரசிகளை கவர்ந்து வரும் அத்தியாயங்கள்.

கூற்றெனும் கேள் – 17

* சுஜாதன்

* சரபை

* துச்சளை, ஜயத்ரதன்

* துரியோதனன் – ஜயத்ரதன்

* திருதராஷ்டிரன் – கர்ணன்

* பீமன்

வெய்யோனின் நீளமான கட்டம் கூற்றெனும் கேள். சுஜாதன், 100 வது கௌரவன்.

அங்கத்தில் நடக்கும் நாடகங்களும் அதன் முன் வரைவும் சுஜாதனுக்கு தெரியாது. கர்ணனின் முதல் மனைவி விருஷாலி கருவுற்று இருக்கிறாள், ஆணால் அவள், அவள் மனதில் கர்ணனுக்கு தான் ஏற்றவள் அல்ல என்று எண்ணுகிறாள். அதன் காரணம் தான் கருவுற்று இருப்பதை வெளியிடவே இல்லை. மாறாக கலிங்கத்து சுப்ரியை தான் கருவுற்று இருப்பதாக, பொய்யாக, மறுக்கபடவும் முடியாத செய்தியை, அவையில் அறிவிக்கிறாள். மறைமுகமாக சிந்து தேசத்து ஷத்ரிய மன்னன் ஜயத்ரனுக்கு கூட செய்தி அனுப்பிகிறாள்.

இந்த நிலையில் சுஜாதன் முன் கலிங்கத்து இளவரசி சுப்ரியையின் அனுக்கமாக இருக்கும் முதியவள் சரபை கர்ணனை ஆணையிடும் தோரனையில் கலிங்கத்த அரசியின் மாளிகைக்கு அன்று இரவு கர்ணன் வர வேண்டும் என்று சொல்கிறாள்.

கௌரவர்கள் யார் என்பதை சுஜாதன் மூலம் அங்கு காண்கிறோம். அவன் சரபையிடம் கர்ணனை இழிவாக நினைக்கும் எண்னம் கலிகம் சம்பந்த பட்ட ஒருவரில் எழுந்தால் கூட கௌரவர் கலிங்கத்தை சாம்பல் ஆக்கி மன்னில் அப்படி ஒரு  தேசம் இருந்த சுவடே இல்லாமல் ஆக்குவோம் என்று சூள் உரைக்கிறான். முதல் கௌரவன் தொட்டு நூறாமவன் ஈராக அவர்கள் கர்ணன்பால் கொண்ட உணர்வை இங்கு அறிகிறோம்.

இதம் பின் மூத்தவரை அங்கு விட்டு செல்ல கூடாது என்றெண்னி கர்ணனுடன் ஹஸ்தினபுரம் புறப்படுகிறார்கள்.

அங்கு பூத்து குலுங்கும் மலர்களின் குவியலாக கௌரவர்களின் மகன்கள். நீன்ட நெடிய நாட்களுக்கு பின் வெண்முரசு அளிக்கும் மகிழ்ச்சியான தருணங்களில். அங்கு கௌரவர்களின் தங்கை துச்சளை கனவன் ஜயத்ரதனுடன் வருகிறாள். அவள் மகன் அந்த பூகுவியலில் ஐக்கியமாகிறான்.

ஜயத்ரதன் கர்ணன் மீது கொன்ட எண்ணங்களும் களையபடும் தருணமாக உண்டாட்டில் துரியோதனன் ஒரு வார்த்தை சொல்கிறான். கள் மிகுந்து இருந்தாலும் துரியன் ஜயத்ரதனையும் வைத்து கொன்டு கர்ணனை சுட்டி நூற்றுவரும் அவன் சொல்லுக்கு அவன் கால் அடியில் கட்டுண்டவர்கள் என்று சொல்கிறான். வெண்முரசில் வார்த்தையில் அறியப்படாவிட்டாலும் அனைவருக்கும், இந்த கட்டம், கர்ணன் 105 தம்பியரும் ஒரு தங்கையும் கொன்ட மூத்தவன் என்பதை வாசகனாக அறிகிறோம். இங்கு கர்ணனின் காட்சிகளும் வருகிறது, திருதராஷ்டிரருடனான குழந்தைகள் சுற்ற நடக்கும் சந்திப்பு உட்பட.

இதன் பின் தான் பீமன் ஒற்றையாக குதிரையில் வந்து, இந்திரப்ரஸ்தம் கட்டி முடிக்க பட்டு அணையாவிளக்கு ஏற்றபடும் நிகழ்வுக்கு, அழைக்க வருகிறான். அந்த தருணத்தில் கர்ணனுடனான உரையாடல்களில் துரியன் தன்னை தந்தையாக உணர்வதாகவும், செய்த பிழைகள் இருந்து ஒரு மீட்சியாகவும், வாள் ஏந்தி அனையாவிளக்குக்கு காவலாக நிற்பதாக சொல்கிறான். அதன் பின் பீமன் கர்ணனுக்கு ப்ருதையின் அழைப்பை தெரிவிக்கிறான். அங்கு பீமனில் உறையும் ஒரு கசப்பு உள்ளது, ஆனால், என் தனிபட்ட அனுமானம் – இன்று தந்தையாக இருக்கும் பீமனுக்கும் அங்கு கர்ணனை அவன் எப்போதும் குத்தி கிழித்து கீழ்மை படுத்தும் எண்ணம் இன்று இல்லையோ என்பதாக படுகிறது. இதை ஹஸ்தினபுரி இந்திரப்ரஸ்தம் இரு நிலைகளிலும் உள்ள உள்ளங்களின் நிலைகளாக எடுத்துகொள்கிறேன்.

பன்னிரண்டாவது பகடை – 5

இது இந்த புத்தகத்தின் 40வது நாள், கிட்டத்தட்ட மத்தியில் – ஒரு உச்சமாக இந்த அத்தியாயத்தை பார்க்கிறேன்.

கணிகர் அமைவதற்குள்ளாகவே எண்களை பார்த்துவிட்டிருந்தார். உதடுகளை இறுக்கியபடி சுட்டுவிரலால் காய்களை தொட்டுத்தொட்டுச் சென்று புரவி ஒன்றைத் தூக்கி ஒரு வேல்வீரனைத்தட்டிவிட்டு அங்கே வைத்தார். சகுனி புன்னகைத்தபடி “ஆம்” என்றார். கணிகர் “தன்னந்தனியவன்” என்றார். சகுனி “மொத்தப்படையின் விசையும் தனியொருவனின்மீது குவியும் கணம்” என்றார். “ஊழின் திருகுகுடுமி… அவன் இன்னமும் அதை அறியவில்லை.” கணிகர் நகைத்து “அவர்கள் எப்போதுமே அறிவதில்லை” என்றார்.

இது கர்ணன் கணிகரையும் சகுனியையும் பார்க்க வரும் தருணத்தில் வரும் சம்பாஷனை.

அவர்கள் இருவரும் துரியோதனன் ராஜநாகமாக எழும் தருனம் இன்னொரு ராஜநாகம் துணை இருத்தல் நல்லது என்று கர்ணனை துணை செல்ல சொல்கிறார்கள்.

விழிநீரனல் – 6

* இந்திரபிரஸ்த்த்திற்கு புறப்படுவது

* கியாதி, புலோமை, ரேணுகை, அம்பை, பிருதை, திரௌபதி

* மகாகுரோதை

கர்ணன் இந்திரப்ரஸ்தத்துக்கு உலகமே செல்லும் போது எதிர் திசையில் செல்லும் நாகர்களுடன் இந்திரப்ரஸ்தத்துக்கு எதிர் திசையில் ஒரு சிறு பயனம் மேற்கொள்கிறான். நாகர்கள் வரலாறும் கர்ணனுடன் பயணிக்கும் நாகம் பற்றிய அறிதல் கர்ணனுக்கேவும் கிடைக்கிறது.

நச்சாடல் – 5

* ஜராசந்தன்

இந்த அத்தியாயத்தின் பெயர் குறிப்பாக கவனிக்க வேண்டியது.

அந்த சந்திப்புக்கு பிறகு கர்ணன் காணும் முதல் சந்திப்பு ஜராசந்தனுடன். கௌரவர் நிரை இந்திரப்ரஸ்தத்தில் ஜராசந்தனுடன் இறங்குகிறாகள். அங்கு பீமனும் பின் அர்ஜுனனும் இந்த நிரையை கண்டு விலகுகிறார்கள்.

நூறிதழ் நகர் – 7

* கர்ணன் நகருக்கு அடியில் செல்கிறான்

* அரங்குசொல்லி

முழுமை அடைந்த இந்திரப்ரஸ்தத்தை அனுபவிக்கிறோம். கூடவே அங்கு கர்ணனுக்கு கொடியோ, மாளிகையோ, ரதமோ, அமரும் ஆசனமோ இல்லை. கர்ணனின் அணுக்கன் சிவதர் இல்லாத வழக்கமாய் கர்ணனை விலகுவதும் நிகழ்கிறது. கர்ணன் நகருக்கு அடியில் ஒரு பயனம் மேற்கொள்கிறான். வெண்முரசில் புலங்களில் இருந்து மீளுவது எல்லாமே மறு உரு பெறுவது என்று வென்முரசின் வாசகருக்கு சொல்ல தேவையில்லை.

அதன் பின்பான அத்தியாயங்கள் அரங்கு சொல்லியும் நடக்கும் ப்ரகசன நாடகமும். அங்கு காண்டவ காடு எரிக்க ப்படும் கதை விவரிக்கப்படுகிறது. மிக நீண்ட கதை.

மயனீர் மாளிகை – 13

* நாகர்கள் கதை

* துரியோதனன் தண்ணீரில் விழுவது

அதே கதை, கர்ணன் மஞ்சத்துக்கு உறங்க, நாடகம் முடிந்து வந்த பிறகு, நாகனால் இன்னும் மனம் கனத்து போகும் படி சொல்லப்படுகிறது.

அதன் பின் ஒரு உன்டாட்டு நடக்கிறது. துரியனின் நிலை இங்கு குறிப்பிட தக்கது. அவன் ஹஸ்தினபுரியின் செல்வத்தை சரி பாதியாக பிரித்து, அங்கிருந்து புரப்படும் தருணத்தில் தேவயானி அசிந்த மணிமுடியை மூத்தவர் கர்ணன், இந்திரப்ரஸ்தம் உறையும் சிறுக்கிக்கு தரும் படி, கையோடு எடுத்து கொண்டும் வரும் நிலையில் இருக்கும் ஒரு உனர்வு உச்சத்தில் இருக்கும் துரியோதனன். அங்கு இந்திரப்ரஸ்ததில் அவன் இருக்கும் நிலையே காரணமாக ஜராசந்தன், சிசுபாலன் மற்றும் ருக்மி ஆகியோரும் தன் நிலையில் உள்ளவர்களாக எண்ணி கூட்டு சேர்ந்து – எல்லாம் நிலை கொன்டு இனி வாழும் என்ற ஒரு மயக்க நிலையில் உழல்பவனாக ஆகிறான். அங்கு நிகழ்கிறது மயனீர் மாளிகை. அங்கு அவர்கள் ஒவொருவரும் காணும் காட்சிகள், அதன் மாயங்கள். உண்டாட்டும் அந்த கட்டத்தில் நிகழ்வது.

துரியன் ஒரு தண்ணீர் நிரம்பிய சிறு குளத்தில் விழுகிறான். தன் நிலையினாலேயே மிக ஆழத்தில் புண்படுகிறான்.

நிழல் கவ்வும் ஒளி – 3

முடிவாக. ஒளியை நிழல் கவ்வுகிறது. அதன் கீழ் கர்ணன் குதிரையில் செல்கிறான். அங்கு அவனுக்கு ஒரு பயணம். இருக்கும் இடத்தில் இருந்தெ. அங்கு அவன் பாண்டவர்க்கு எதிர் நிலை தானும் எடுக்கிறான் – பிறப்பில் இருந்தே இன்னும் முழுமை பெறாத அஸ்வசேனனை பார்க்கிறான்.

“இவன் என் மைந்தன். இவன் ஒருவனின் பொருட்டு இவ்வுலகை ஏழுமுறை எரிக்கும் பெருவஞ்சம் என்னில் குடியேறுக! இச்சிரிப்புக்குப் பழிநிகராக நான் பாண்டவர்களை அழிப்பேன்” என்றான்.

இதற்கு பின் இனி வருபவையாக துரியோத்னனின் பக்கம் ஸ்தூனகர்ணன் நிற்பதாகவும். ஒரு பெரிய இரும்பு கதையின் உருவும் காட்சி படுகிறது.

வெய்யோனின் முடிவில் – காடு எரிந்து அழிந்தபின்னும் – எரித்து உருகுலையாததாக இருக்கும் ஒரு நீண்ட ஊன்றுகோலாக.. மகாபாரதம் உள் உறையும், எரிந்து உருகுலையாத ஒருவனாக, கர்ணன் மிஞ்சுவதாக பார்க்க தோன்றுகிறது.

காளிப்ரஸாத்:

கர்ணனை பற்றி இவ்வளவு சொல்ல பட்ட பின்பும், கர்ணனின் சில உச்ச பட்சமான குணங்கள் கூட தெளிவாக வந்த பின்பும், வெய்யோனில் சொல்வதர்க்கு ஒரு நாவல் அளவுக்கு இருக்கிறது என்பதே வியக்கவைக்கும் ஒரு விஷயம் தான்.

ராஜகோபாலன்:

வெய்யோன் ஒரு நாவலாக பார்க்கும் போது அது ஒரு மிக உயர்ந்த ஒரு பாத்திரத்தின் வீழ்ச்சியை சொல்லும் நாவலாக உள்ளது. கர்ணனுடய பாத்திரம் வெண்முரசில் நுழையும் போதே சூரிய உதயத்துடன் நுழைகிறான் ஆணால் அப்படியான ஒரு பாத்திரம் முடியும் தருவாயில் ஒரு சூரிய க்ரகனத்துடன் முடிகிறது. இந்த நாவல் சொல்ல வருவது, கர்ணன் போன்ற ஒரு பெரும் கதாபாத்திரம் மேன்மை மூலம் விழும் வீழ்ச்சியை தான். அதை சொல்வது தான் ஒரு எழுத்தாளனுக்கான சவாலான பனி. அதை நம் எழுத்தாளர் எடுத்த புள்ளி, கொன்டு போன பாதை, முடித்த கணம் இவை தான் இந்த நாவலை வேறு தளத்திர்க்கு கொண்டு செல்கிறது.

கர்ணன், ஒரு வளர்ந்த, உச்சத்தை தொட்டு நிற்க்கும் ஒரு பாத்திரம். அது மெல்ல மெல்ல சரிந்து வீழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று சேருகிறது. அதன் ஒரு முழு வடிவம் இப்போது வரும் பன்னிரு படைகளத்தில் பார்கிறோம்.

ராகவ்:

ஆம். கர்ணனை பொறுத்தவரை – பீஷ்மரை விடவும் உயரத்தில் மிகுதியாக இருக்கும் ஒரே மனிதன் கர்ணன் என்று வெண்முரசில் காண்கிறோம். அவன் சிறு வயதிலேயே, 12 வதிலேயே, அவன் யாரை விடவும் உயரந்தவனாக இருக்கின்றான். அதுவே அவனை ஒரு ஷத்ரியன், ஒரு மன்னன் என்றும் சொல்கிறது. சூதனுக்கு ஏன் இவ்வளவு உயரம் என்ற கேள்வி பல முறை கேட்க படுகிறது. கர்ணனை விட உயரத்தில் அதிகமாக சொல்லபடும் ஒரே நபர் அரிஷ்டநேமி(நேமிநாதர்) அவர் பயணிக்கும் தளம் வேறு. அப்படி இருக்க கர்ணன் அவன் உருவம் மூலமே, பீஷ்மரின் தொடக்கத்தில் அவர் இருந்தது போல, அவன் இருப்பின் மூலமே தன்னை ஒரு ராஜன் என்றுன் ஷத்ரியன் என்றும் நிறுவுகிறான்.

சுனீல் க்ருஷ்ணன்/ தனா – (இருவரும் அருகருகில் அமர்ந்திருந்தால் இப்போது யார் சொன்னார்கள் என்று நியாபகம் வரவில்லை):

கர்ணனின் பாத்திரம் சொல்ல போனால் ஒரு உயர்ந்த அழகுடனே கூட வரும் ஒரு பாத்திரம் தான்.

ராஜகோபாலன்:

வ்யாச பாரதத்திலேயே கூட வ்யாசர் பாடல்களாக உச்சபட்சமாக வர்ணிப்பது கர்ணனை தான். வ்யாசரின் ‘ஜய’-வை எடுத்துகொண்டால் அது ஒரு செய்தி வாசிப்பு நடையில், கிட்ட தட்ட படிக்கவே முடியாத, தொடர்ந்தும் சீராகவும் செல்லாத ஒரு நடையில் தான் உள்ளது. அந்த பாரதத்திலேயே கூட ஒரு பாத்திரம் வர்ணிக்கப்படும் என்றால் அது கர்ணன் மட்டும் தான்.

நீங்கள் சொன்னது போல கர்ணன் ஏற்கனவே வர்ணிக்க படுவதும் அதனால் தான். அவன் பிறப்பிலேயே ஒரு உச்சமாக திகழும் ஒரு பாத்திரம்.

ஓன்றை கவனிக்க வேண்டும், நாம் பேசும்போது இங்கு எழுத்தாளன் எனும் ஒரு பாத்திரத்தையே பேசுவதில்லை. காரனம் நம்மை வெண்முரசு கட்டி இழுத்து செல்கிறது. வற்புறுத்தி, கொஞ்சம் நின்று பாத்தால் தெரியும், ஒரு பாத்திரம் அந்த அளவு உச்சம் ஏன் செல்கிறது என்பதை பார்த்தால் புரியும். அது பெறும் வீழ்ச்சியில் சென்று செற்கிறது, சொல்லப்போனால் – கணிகரும் சகுனியும் – அதை தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அவர்களை எழுத்தாளரும் அந்த வீழ்ச்சியை சொல்லும் காரனமாகவே அந்த உச்சத்தில் அவர்களை வைக்கிறார்.

பாரதத்தை படிக்க போனால் நமக்கு கிடைப்பது வ்யாச பாரம் போன்ற வடிவங்கள், பன்படுத்தபட்ட மறுபடியும் மறுபடியும் தொன்மயாக சொல்ல படும் வடிவம் ஒன்று மற்ற வடிவம் தான் கலைகளில், folklore போன்ற வடிவங்களில். முந்தைய வடிவங்களில் நமக்கு கிடைக்காத பதில்களை பிந்தைய வடிவங்கள் கொன்டு நாம் முழுமை செய்ய வேண்டும். நம் எழுத்தாளர் இந்த வெய்யோன் நாவலிலும் அதை தான் செய்கிறார்.

குறிப்பிட்ட படி, இந்திரப்ரஸ்தத்திர்க்கு படகுகள் செல்லும் போது கர்ணன் எதிர் திசையில் செல்வது, பிறகு பிலங்களில் வரும் பயனம், பூமிக்கு அடியில் சென்று மீள்வதே ஒரு வீழ்ச்சியை சொல்வது தான். அவன் வான் அளவு இருப்பவன் இன்று மன்னுக்கும் அடியில் செல்கிறான் போன்ற பிம்பங்கள் எல்லாமே குறியீடுகள் தான்.

அதன் உச்சமாக தான் கர்ணன் சூரிய கிரகணத்தின் கீழேயே போய் நிர்ப்பது. ஒளியை நிழல் கவ்வுவதாக அதை தான் சித்தரிக்கிறார் ஜெயமோகன் அவர்கள்.

ராகவ்:

கதை என்று எடுத்துகொன்டால் இதில் பெரிய நிகழ்வுகள் கிடையாது. முதல் முறையாக இந்திரப்ரஸ்தம் முழுமை அடந்ததை பார்க்கிறோம். கர்ணனின் கல்யாணமும் அதன் பின் துரியோதணன் மயனீர் மாளிகைக்கு பின் குளத்தில் விழுவதும். அவன் அந்த குளத்தில் விழுந்து தானாகவே புன் படுகிறான்.

அருணாசலம் மகாராஜன்:

அந்த தருனத்தை கணிகரும் சகுனியும் தான் முன்னமே அறிகிறார்கள். அதனால் தான் கர்ணனை துனைக்கு செல்ல சொல்கிறார்கள்.

யாரோ:

ஆம் அப்பொது கர்ணன் கூட தனக்கு பதில் ஜயத்ரதனை அனுப்ப நினைக்கிறான்.

 

ராகவ்:

அப்போது தான் பீமன் கர்ணனிடம் ப்ருதையிடம் இருந்து வரும் அழைப்பை தெரிவிக்கிறான்.

துரியோதனனும் ஹஸ்தினபுரியின் செல்வம் அனைத்தும் சரிபாதியாக பிரித்து எடுத்து, தேவயானியின் மனிமுடியையும் கொன்டு செல்கிறான். கர்ணனிடம் அந்த ‘சிறுக்கி’ யிடம் அளிப்போம் என்கிறான்.

முத்து கிருஷ்ணன்:-

அந்த குளத்தில் விழும் போது துரியோதனன் அவ்வளவு புன் பட காரனங்கள் வெளியில் இருந்து இல்லை.

அவனாகவேதான் அப்படி புண் படுகிறான்.

ராஜகோபாலன்:

துரியோதனன் அவ்வளவு புண்பட்ட காரணமாகவே கூட அங்கே கர்ணன் தான் இருக்கிறான்.

அருணாசலம் மகாராஜன்:

துரியோதனன் அங்கே புண் பட்ட பின் கர்ணன் தான் துரியோதனனை தாங்கி செல்கிறான். கிட்ட தட்ட துரியோதனன் நடந்தே செல்வது போல.

தனா:

எனக்கு கர்ணனை படிக்கும் போது அவன் ஏன் துரியோதனனுடன் இவ்வளவு பெரிய நட்பு உருவாகுகிறது என்பது ஒரு கேள்வியாகவே தொக்கி நிற்கிறது. அவ்வளவு ஆழமான நட்புக்கு காரணமாக எது உள்ளது.

தியாகராஜன்:

கர்ணனுக்கு துரியோதனன் அளிக்கும் அங்கீகாரம், அங்க நாட்டு மகுடம் மூலம், பல ஆக்கங்களில் துரியோதனன் தன் பக்கம் அர்ஜுனனை போன்ற ஒரு வில்லாளி வேண்டும் என்றே அடை செய்வாதாகவும் அதை சகுனி மாமாவின் தூன்டுதலால் செய்வதாகவும் தான் வருகிறது. அவர்கள் இருவருமே இது போன்ற கொடுத்து பெருதல்களால் தங்களை நிரப்பி கொண்டு தொடங்குகிறார்கள் பின்னர் அது தீவிரமான நட்பாக ஆவதாக எண்ணுகின்றேன்.

ராகவ்:

அவர்கள் நட்பில் இந்த கணக்குகள் வருகின்றன என்றாலும் வென்முரசில் அப்படி அதை மட்டுமாக சொல்லவில்லை. உதாரனத்துக்கு சுஜாதன் அந்த முதிய தாதியிடம் விடும் சபதம். அது முதல் கௌரவன் தொடங்கி நூறாமவன் வரைக்கும் இருக்கும் அதே உனர்ச்சி நிலையைதான் சொல்கிறது.

தனா:

எனக்கு இது தான் கேள்வி, அப்படி நூற்று்வரும் கொந்தளிக்க அவன் செய்வது என்ன, அல்லது அவனிடம் அப்படியான நட்பின் காரனம் என்ன?
முத்துகிருஷ்ணன்:-

கர்ணன் ஒரு ஒழுங்கு இல்லாத இடத்தின் மூலம் தொடங்குகிறான். அவன் அஸ்தினபுரியில் இயல்பாக அடைவது துரியோதனன் போன்ற ஒழுங்கில் கொஞ்சம் குறைபட்ட கூட்டத்தை. அவன் அவர்களை இந்த சரடு மூலமாகவே இயல்பாக அடைவதாக எனக்கு படுகிறது. வென்முரசில் அப்படி உள்ளதாக தோன்றுகிறது

ராகவ்:

இல்லை, எனக்கு ஏற்றுக் கொள்ளுபடியாக இல்லை. ஒழுக்க கேடு என்று வந்தால், அந்த அளவில் ஒரு காட்சி வென்முரசில் வருகிறது. பீமன் ஹஸ்தினபுரியின் ஒரு சந்தை மூலையில் பாத்திரம் கழுவும் இடத்துக்கு பக்கத்தில் மிச்சம் உள்ள உனவை உன்டு கொன்டு இருக்கிறான். அந்த இடத்துக்கு எங்கோ அருகில் தான் அர்ஜுனன் எவள் படுக்கை அரையிலேயோ கிடக்கின்றான். அங்கே பாத்திரம் தெய்ப்பவர்கள் சொல்வார்கள், இளவரசன் என்று ஒருவனை சொன்னார்கள். அவன் வீதியில் செல்லும் போது பார்த்தேன். உடல் எல்லாம் தங்க நகைகளாக, களையே இல்லாத, ஆணா என்று சந்தேகம் கொள்ளும் அளவில் ஒருவன் வந்தான். அவன் தான் ராஜாவாக ஆவானாம் என்று யுதிஷ்டிரன் பற்றீ பீமனிடமே சொல்வார்கள். ஆக ஒழுக்கம் ஒரு அளவு கொல் என்றால் அதில் பான்டவர்கள், வென்முரசை பொருத்த மட்டில், ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று தானே சொல்ல தோன்றுகிறது.

முத்துகிருஷ்ணன்:

அப்படி அல்ல, நான் சொல்வது ஒரு மன நிலை அளவில்.

அருணாசலம் மகாராஜன்:

எனக்கு வென்முரசில் துரியோதனன், கர்ணன் நட்புக்கு முக்கியமான புள்ளியாக இருப்பது அவர்கள் இருவருக்கும் அவர்கள் பிறப்பின் மூலம் ஏற்படும் கலங்கமும் அதணால் அவர்கள் வெறுக்க படுவதும் என்று தான் தொன்றுகிறது. அதாவது, துரியோதனன் பிறந்த பொழுது அவணால் அழிவு மட்டும் தான் என்று சொல்லபடுகிறது. அவனும் மற்றவர்கள் அவனை அவ்வாறாகவே பார்ப்பதால், பாறைகளை உடைத்து செல்பவனாகவே இருக்கின்றான். ஒரு தளத்தில் கர்ணனும் அப்படிதானே. அவனுக்கு இயல்பாக கிடைக்க வேண்டிய எல்லாமே அவன் உடைத்து உடைத்து பெற வேண்டி உள்ளது, காரனம் அவன் பிறப்பு மட்டுமே.

பீமனை அஸ்தினபுரியில் முதன் முறையாக திருதராஷ்டிரன் முன் அழைத்து வருகையில் ஏற்படும் சஞ்சலம் துரியோதனனிடம் கர்ணனை திருதராஷ்டிரன் ஏற்க்கும் போது ஏற்படவ்வில்லை. மாறாக அந்த தருனங்களில் கர்ணன் அங்கு தேவையான ஒருவனாகவே இருக்கின்றான்.

ராகவ்:

துரியோதனன் திருமனத்தின் பின், கர்ணனும், ஏன் துச்சாதனனுமே கூட, பானுமதியின் வருகை கன்டு விலகுவதை வெண்முரசு சொல்கிறது. அவர்கள் பந்தம் அந்த தருனத்திலும் கூட உணரக்கூடியது.

அருணாசலம் மகாராஜன்:

ஆம் அந்த அளவுக்கான நட்பின் ஆரம்ப புள்ளியாக இந்த தருணங்களில் அமைகின்றன. வெண்முரசில் இவைகள் நன்றாகவே காட்சி படுத்தபட்டுள்ளது.

ராஜகோபாலன்:

துரியோதனனின் இந்த நட்பின் பலம் காரணமாகவே பல தவறுகள் அவன் செய்ய துணிகின்றான். மேலும் இப்போது வரும் பன்னிருபடைகளத்தில் தொடர்ந்து காண்கின்றோம், கர்ணன் பொருட்டே பல தவறுகள் இழைக்கபடுகிறது.

இந்த நாவல் கர்ணன் பாத்திரத்தின் உச்சமும் வீழ்ச்சியும் என்றே சொல்லலாம்.

~~~~~~~~~~

மேலும் பல திரிகளாக விவாதங்கள் விரிந்து சென்றன. இப்போது பன்னிரு படைகளம் எழுத பட்டுகொன்டு இருப்பதால் விவாதம் கர்ணனையும் பன்னிருபடைக்களத்தையும் திரும்ப திரும்ப பின்னிப்பின்னியே வந்தது.

எப்போதும் போல நம் குருஜீயின் திக்கு முக்காட வைக்கும் உபசரிப்புடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

 

வெண்முரசில் காமமும் வஞ்சமும் – ரகுராமன்

நண்பர்களே, ஜெ முன்னே கட்டுரை வாசித்த பொழுது, மிகவும் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். சென்னை கூடுகை நண்பர்கள் அனைவருக்கும்  மிகவும் நன்றி…

வழக்கம் போல நிறைய எழுத்து பிழைகள் இருக்கலாம், அதையும் பெரிய மனது வைத்து மன்னித்து விடுமாறு கேட்டு கொள்கிறேன்.

இந்த கட்டுரை சார்ந்து அனைத்து விமர்சங்களையும் வரவேற்க்கிறேன், ஏதாவது விட்டு போயிருந்தாலும் சொல்லவும்.

 

 

“காமோ காரிஷீத், மன்யுக காரிஷீத்” – வெண்முரசில் காமமும் வன்மமும்

“காமோ காரிஷீத்,

     மன்யுக காரிஷீத், நமோ நம:”

 

மகா நாராயண உபநிஷித்தில் பாகம் 61 மற்றும் 62 யில் வரும் அழகான மந்திரம் இது. உபகர்மாக்களில் ஒன்றாக வருவது. இங்கு “காமம்” ‘Lust” என்ற அர்த்தத்தில் மட்டும் வருவது இல்லை “Desire” என்ற பொருளில் வருகிறது. “மன்யு” என்றால் “கோபம்”. ““காமோ காரிஷீத்” – ‘இந்த செயல்கள் விழைவினால் /ஆசையினால் செய்யபட்டவை”. “மன்யுக காரிஷீத்” – ‘இந்த செயல்கள் கோபத்தினால் செய்யபட்டவை”. இவை “பாவ மன்னிப்பு” கோரிக்கைகள் அல்ல மாறாக “பாவம் ஏன் செய்யப்பட்டது” என்பதை தன்னளவில் ஆராய தூண்டும் வரிகள்.

இதன் முழு பாடல்

“”Kamoe-akarsheen namoh namah |

Kamo-akarsheet-kaamah karoti naaham karomi

kaamah kartaa naaham kartaa

kaamah kaarayitaa naaham kaarayitaa

eshaa te kaama kaamaaya swaahaa “

 

“ காமம் இந்த நிகழ்வை செய்தது, நானல்ல,

காமம் இந்த செயலை செய்தது, நானல்ல,

காமம் இந்த செயலை செய்கிறது, நானல்ல

காமமே இதற்கு காரணம், நானல்ல.

காமமே செயல் புரிபவனை அவ்வாறு செய்ய வைக்கிறது, நானல்ல

ஏ காமமே, உனக்கே இது சமர்ப்பனம்”.

(இதே போல் மன்யுவிற்கும் ஒரு மந்திரம் உண்டு)
“காமம் (ஆசை)”, “மன்யு (கோபம்) இவையே பாவங்களுக்கு காரணம் ஆதலால் இவைகள் மீது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தும் அற்புதமான வரிகள். இங்கு நாம் கவனிக்க வேண்டியது இந்த சொற்றோடர், “காமம்” அந்த விளைவினால் வருவது “மன்யு”, ஒரு “Cause and Effect” relation போல. பகவத் கீதையிலும் இதே மாதிரி ஒரு வரி வருகிறது.

வெண்முரசு படித்து கொண்டு வருகையிலே இந்த வரிகளின் அர்த்தம் மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே வருகிறது. அதை பதிவு செய்ய முயிற்சிப்பதே இந்த கட்டுரை.

இந்திய மரபில் காமம்: (“Desire” என்னும் அர்தத்தில் அல்ல)

வெண்முரசு வெறும் மகாபாரத மறு ஆக்கம் மட்டும் அல்ல, அது இந்திய மரபை, சமுதாய, பண்பாட்டு அமைப்பை இன்றைய நோக்கில் சொல்ல முயற்சிக்கும் படைப்பு. எனக்கு தெரிந்து எல்லா பழங்குடி குழுமத்திலும் காமம் ஒரு கொண்டாட்டமாகவே பார்க்க பட்டுஉள்ளது. அது ஒரு சமுதாயமாக, மதமாக நிறுவனபடுத்தும் பொழுது, ஒழுக்கவியல் கட்டுபாடுகளும் வந்து விடுகின்றன.  “விக்டோரியா ஒழுக்கவியல்” இதற்கான சிறந்த உதாரணம்.(இதன் வேர் கிரேக்க பண்பாட்டில் இருந்து தழுவ பட்டு இருக்கலாம் என  நினக்கிறேன்). “காமத்தை” இந்திய மரபு அணுகிய விதம் மற்ற நாகரீகங்களை விட முற்றிலும் வேறு விதமாக இருந்து இருக்கிறது. நம் கோவிலில் உள்ள சிற்பங்களை பார்க்கையில் “காமம்” என்பதை மிக வெளிப்படையான, இயல்பான  ஒன்றாகாவே இந்திய மரபு கருதி இருக்கிறது. ரிஷிகளும், முனிவர்களும் கூட காமத்திற்கு அப்பாற்பட்டவார்களாக காட்ட படுவதில்லை. காமத்தை பெண்மை மூலமாக வழிபடும் மார்கமாகவே “சாக்தம்” இருந்திருக்கிறது. இந்திய மரபில் வரும் சமனம் , காமத்தை வேறு விதமாக அணுகியது. சமண முனிவர்கள் “காமம்” என்பதை கட்டுபடுத்த வேண்டிய ஆசைகளில் ஒன்றாக கருதினார்கள், அது சார்பான கடும் கட்டுபாட்டை பேணினார்கள். புத்த மரபிலும் காமம் அவ்வாறே அணுகப்பட்டது. சமண, புத்த மரபின் பாதிப்பு மெல்ல இந்து மரபிலும் பரவ தொடிங்கியது. என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயத்தில் வைணவத்தை விட சைவத்திலே அதன் பாதிப்பு அதிகம் உள்ளதாக நினைக்கிறேன்.

இந்திய மரபில் காமம் எவ்வாறு அணுகபட்டது மற்றும் அதன் பல்வேறு நிலைகளை  வெண்முரசு மிக துல்லியாக பதிவு செய்கிறது.முக்கியமாக “சாக்தம்”, அது சார்ந்த விவரணைகள்.  நவீன தமிழ்/இந்திய இலக்கியத்தில் “சாக்தத்தை” அதன் உச்சபட்ச அழகியல்  நிலையில் பதிவு செய்ய பட்ட நூல்களில்  வெண்முரசுக்கு என்று தனி இடம் இருக்கும்  என்றே நினைக்கிறேன்.

ஜெ, தன்  “வார்த்தை” உளியால் “வெண்முரசு கோவிலில் “காம சிற்பங்களை “ வடித்து கொண்டே செல்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி.

விரும்பி விழையபட்ட காமம்,

விலக்கபட்ட காமம்,

மறுக்கபட்ட காமம்,

அடையாத காமம்,

யோகமாய், ஊந்து சக்தியாய் ஒரு காமம்,

சிறு குழந்தை விளையாட்டு என, கொண்டாட்டமாய் ஒரு காமம்,

ஆற்றலின் வடிவமாய் ஒரு காமம்,

அகங்காராமாய் ஒரு காமம்,

அடங்கா காமம்,

அவமானபடுத்தும் காமம்,

தெளிந்த நீரோடையாய் ஒரு காமம்,

எண்ணியதை அடைய கருவியாய் ஒரு காமம்,

இவை எல்லாவற்றிற்கும் மேலாக , பிரபஞ்ச சக்தியாய், தெய்வமாய், தொழப்படும் ஒரு காமம்.

இக்கட்டுரையில் நாம் இரண்டு விசயங்களை பார்ப்போம்

அ) வெண்முரசில் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களின் “காமம்” சார்ந்த குணங்கள் மிக நுண்ணியமாக வர்ணிக்க பட்டுள்ளன. ஓவ்வொரு கதாபாத்திரங்களை எடுத்து கொண்டு, நாம் அவற்றை பார்ப்போம்.

ஆ) காமும் அதனால் விளைந்த வஞ்சமும் வெண்முரசில் இது வரை எப்பிடி வந்து இருக்கிறது என்பதை பற்றியான ஒரு சிறு கழுகு பார்வை

காமத்தை விரும்பி விழைந்து ஏற்று கொள்ளல்:

யயாதின் காமம்:

குரு பரம்பரையின் முப்பாட்டனான “யயாதியில்” இருந்து தொடங்குகிறது இந்த “விழைவு”. ரதியின் பெருந்துயருக்கு பிறந்த அஸ்ருபிந்துமதியே தன் இச்சையை தீர்க்கமுடியுமென உனர்ந்து அதற்காக தன் முதுமையை ஐம்பதாண்டுகாலம் ஏற்றுக்கொள்ள தன் மகன்களிடம் கேட்கிறார். புரு முதுமையை ஏற்று கொள்ள, துர்வசு, யது மற்றும் த்ருஹ்யூ  அதை மறுக்கிறார்கள், அதன் விளைவாக நாட்டை விட்டு நீங்கவும் பணிக்கப்படுகிறார்கள் . இதில் இருந்து தான் தொடங்குகிறது பராதத்தின் முக்கியமானஅரச குலங்கள். அவ்வாறு செல்லும் துர்வசு காந்தாரநாட்டையும், யது யாதவகுலத்தையும் திருஹ்யூ திவிப்ரநாட்டையும் அமைக்கின்றனர்.பல வருடங்களாக அனுபவித்தும் விழைவு தீராமல்,  கடைசியில் தன் மகளின் பேரழகை விழிகளால் ஆன்மா அறியும் கணம் அவர் காமம் அழிகிறது.

சந்தனுவின் காமம்:

கங்கர் குலத்து பெண்ணை (கங்கா தேவி) கண்டு விழைந்தது அவன் காமம். வெண்முரசின் வரிகளில் இவ்வாறாக சொல்லப்படுகிறது“நெருப்பில் எரிந்தவன் நீரைக் கண்டுகொண்டான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் ,ஒவ்வொரு உறுப்பிலும் அவன் காமத்தை அறிந்தான் . வேள்வியாகும் அவியின் பேரின்பத்தையே சந்தனு கங்காதேவியில் அடைந்தார். . மண்ணில் நெளியும் புழு விண்ணில் பறக்கும் வழி என்ன மானிடரே? விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானே?”.

எட்டாவது குழந்தை பிறக்கும் பொழுது அவன் காமத்தை தாண்டி தந்தை பாசம் வளர்கிறது, கங்கையுடன் அவன் காமமும் முடிகிறது.பிறகு அவர் வெளுத்து மெலிந்து எப்போதும் நடுங்கிக்கொண்டிருப்பவராக ஆனார். கங்கையின் தங்கையான யமுனா நதிக்கரையில் அவர் மீண்டும் சத்யவதியை பார்க்கிறார். மறுபடியும் காமத்தின் விழைவு அவரை ஆட்கொள்ளுகிறது. பெரும் காமமும், புத்ர பாசமும் அவரின் மனதில் மோதி கொள்கிறது. கடைசியில் அவரின் காமத்தின் விழைவே வெல்கிறது, அவரின் மகனின் சபதத்தால்.

காமத்தின் விழைவை நோக்கி செல்பவர்களுக்கு,  தீர்க்கசியாமர், விசிதிரவீர்யனிடம் சொல்லும் இந்த வரி முக்கியமானது

“நீராடிமுடிக்கத்தக்க நதியும் காமத்தால் தாண்டிச்செல்லத்தக்க பெண்ணும் பிரம்மன் அறியாதவை”

‘கன்றுக்கு பாற்கடல் மரணமேயாகும், சந்தனு இறக்கும் பொழுது வரும் முது நிமித்திகாரின் வார்த்தைகள் இவை. “ஆழம்” , “ஆழம்” என்ற சொல்லே அவரின் கடைசி சொல்லாக இருக்கிறது. காமம் எவ்வளவு ஆழமானது, எந்த விழைவாலும் அதை முழுவதுமாக அடைய முடியாது என்பது அப்பொழுது அவருக்கு புரிந்து இருக்கலாம்.

காமத்தை விரும்பி விலக்கி கொள்ளல்:

பீஷ்மரின் காமம்:

இக்கணம் இனி யென் வாழ்க்கையை முடிவு செய்யட்டும். இதோ நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். எந்த நிலையிலும் நான் மணி முடி சூட மாட்டேன்.வாழ்நாளெல்லாம் இல்லறத்தை தவிர்ப்பேன். அதற்கென காமத்தை முற்றிலும் விலக்குவேன். உங்கள் பாதங்கள்மீது ஆணை “.

 

“பீஷ்மர்” என்றால் “அரும்பெரும் காரியத்தை” செய்தவர் என்று வரும். இந்த சபதத்திற்கு பிறகு “தேவவிரதன்”, “பீஷ்மர்” ஆகிறார். ஆண்மையற்றவன் பிரம்ம்சரியமும், ஆற்றல்யற்றவன் ராஜ பதவியை துறப்பதுவும் எளிது. ஆனால் இவை இரண்டும் இருந்தும், முற்றிலும் துறக்கிறார்.

பீஷ்மரின் காமம் ஆமையுடன் ஒப்பிட படுகிறது. அம்பையை பார்த்த உடன்அவரது உள்ளுக்குள் இருந்த ஆமை கால்களையும் தலையையும் இழுத்துக்கொண்டு கல்லாகியது.

காமத்தை விலக்கி வைப்பவர்களுக்கு, அம்பை பீஷ்மரிடம் சொல்லும் இந்த வரி முக்கியமானது

“குழந்தை நெருப்புடன் விளையாடுவதுபோல நாற்பதாண்டுகளாக காமத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்நெருப்பு விளையாட்டுகளை அனுமதிப்பதே இல்லை அரசே”.

மறுக்கபட்ட காமம்:

அம்பையின் காமம்:

“மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும்”.

அறத்திற்கு எதிராக, தன் அன்னையின் ஆணைக்கு இனங்கவும், ஷத்ரிய குல நெறிகளின் படி, வியாசருடன் கலந்து ஆலோசித்து, காசி இளவரசிகளை கவர்கிறார் பீஷ்மர், தன் நோயுற்ற தம்பிக்காக. தன்னை தொட வந்த பீஷ்மரின் ஆட்களை வெட்டி சாய்க்கும் பொழுதே தெரிகிறது இவள் சாதாரணமான பெண் இல்லை என்று.

பீஷ்மருடன் கோபித்து, அளப்பரியா காதலுடன்  சால்வனிடம் செல்லும் பொழுது ஆரம்பிக்கிறது அவளின் முட்பாதை. அங்கு அவமானப்பட்டு மறுபடியும் பீஷ்மரிடம் மன்றாடுகிறாள், தன் காதலை ஏற்க. தன் சொந்த நாட்டிலும் அவள் இருக்க அனுமதிக்கபட வில்லை. எல்லா எடத்திலும் துரத்தபடுகிறாள், புலிகள் இடையே ஓடும் முயல் குட்டி போல. அவளின் காதல் மறுக்கபட மறுக்கபட, மெல்ல மெல்ல கொற்றவையாக  மாறுகிறாள். வராஹியாகி உருமாறி மீண்டும் மீண்டும் முட்டி கொண்டே இருக்கிறாள் பீஷ்மரின் காம கதவை நோக்கி.

அடையமுடியா காமம்:

விட்டில் பூச்சிகளுக்கு வெளிச்சமே மரணம். “காம” வெளிச்சத்தில் முட்டி முட்டி மோதும் விட்டில் பூச்சி வாழ்க்கை தான் விசித்திரவீர்யனுக்கும், பாண்டுவுக்கும் அமைகிறது.

விசித்திரவீர்யனுக்கும் சரி, அவன் மகன் பாண்டுவுக்கும் சரி, “காமம்” அவர்கள் வாழ்கையில் மின்னல் என பாய்கிறது. தொட்டால் இறப்பு உறுதி என்று அவர்களுக்கு தெரியும், ஆனால் அதை நோக்கியே இருக்கிறது அவர்கள் பயணம்.

விசித்திரவீர்யனின் காமம்:

“உனக்கு வெட்கமாக இல்லையா? நீ ஒரு ஆண் என ஒருகணமேனும் உணர்ந்ததில்லையா?”

சத்யவதி விசித்திரவீர்யனை பார்த்து இதை கேட்கிறாள். காமத்தை அடைய முடியாதவர்கள் முதலில் சந்திப்பது அவமானங்களையும், கிண்டலையும் தான். அதற்க்கு பதிலாக அவன் சிரித்து கொண்டே இவ்வுலகின் ஒரே ஆண் நான்தான் என்கிறான் அவன். எவ்வளவு உண்மையான வார்தைகள். காமத்தை அடையா முடியாதவனின் உலகத்தில் அவன் மட்டுமே ஆனாக இருக்க முடியும். சுற்றம் முழுவதும் அவன் ஆனல்ல என்று சொல்ல சொல்ல, அவன் அகம் முழுக்க தான் ஒரு ஆண் என்பதையே பற்றி கொள்ளும்.

மரணம் கண்டு சிறுதும் அவன் சஞ்சல படவில்லை. காமம் புணர்ந்தால் தான் இறப்போம் என்று அவனுக்கு தெரியும். இருந்தும் அன்னையின் ஆணைக்கு இணங்க அவன் அதை செய்கிறான். மாவீரர்கள் மரணத்தை நோக்கி  சிரித்து கொண்டே களம் புகுவது போல, அவனும் சிரித்து கொண்டே மஞ்சம் செல்கிறான் தன் மரணத்தை காண.

அடைய முடிந்த காமம் ஒரு பெண்ணை சார்ந்தே இருக்கும், அடையா காமமோ கொழுந்து எரியும் நெருப்பை போல, அதை தொடுபவனற்றை எல்லாம் பற்றி கொள்ளும். இதை தீர்க்க சியமார் , விசித்திர வீர்யனிடத்தில் சொல்கிறார்

“உன் அடையாத காமத்தால் அவன் (சந்தனு) அடைந்த காமத்தை ஆயிரம்முறை பெரிதாக நீ அறியமாட்டாயா என்ன?”

பெண்ணிடம் வெறும் காமத்தை  நிரப்பி செல்பவன் ஆனல்ல, அவள் மனதை முழுவதும் நிரைத்து செல்பவனே உண்மையான ஆண். சத்யவதி பீஷ்மரிடம் விசித்திர வீர்யன் இறந்த செய்தியை சொல்லும் பொழுது, இதை சொல்லுகிறாள்

“ஆனால் அந்த காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன். அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள் போலஅப்போது என் மனம் நிறைந்தது. ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் செல்வதுதான் ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்…”

விசித்திர வீர்யன் ஒரு ஆனாகவேகவே தான் இறக்கிறான்.

பாண்டுவின் காமம்:

“ நீ ஒரு நாளும் காமத்தை அறிய மாட்டாய். காமத்தை உன் உடலும் உள்ளமும் அறிந்து கொண்டிருக்கும். தீப்பற்றிக்கொள்ளாத அரணிக்கட்டை போல உன் அகம் முடிவில்லாது உரசிக்கொண்டிருக்கும். அவ்வெம்மையில் நீ தகிப்பாய். என்னை போலவே உன் உள்ளம் கவர்ந்த தோழியை நீ அடைவாய். ஆனால் அவளுடன் கூடும்போது அக்காமம் முதிராமலேயே நீ உயிர் துறப்பாய்

இணை மான்களை கொல்லும் பொழுது, பாண்டு பெற்ற சாபம் இது. பாண்டுவின் காமத்தை முழுவதுமாக சொல்ல்க்கூடிய வரிகள்.

“திறனிலியின் துயரம் போல அருவருப்பளிப்பது ஏதுமில்லை”

இது பாண்டு குந்தியுடன் சொல்லும் ஒரு வரி. தன் தாய்மை சிறகால் அவன் ஆற்றல்இன்மையை மூடுகிறாள் குந்தி. பாண்டு குந்தியுடன் ஒரு சேயாகவே உரு மாறி கொள்கிறான். இது தெரிந்தே பாண்டுவுக்கு ஒரு “களித் தோழி” வேண்டும் என்று மாத்ரியை மனம் முடித்து வைக்கிறாள்.

மலடியின் குழந்தை கனவுகள் எப்பொழுது நெகிழ்ச்சியானவையாகவே இருக்கும். பறவை கொத்திய, முளைக்கவே முடியா எச்சில் விதைகளின் விருட்சம் பற்றிய பெருங்கனவே, பாண்டுவின் விழைவு. அவன் ஆறு பாண்டுக்களை கனவு காண்கிறான். கொடைக்கு அதிபதியாய் ஒருவன், அறத்தின் தலைவனாய் ஒருவன், ஆற்றலின் வடிவமாய் ஒருவன், பாண்டு ஏங்கும் காம்த்தின் வடிவமாய் ஒருவன். அவன் கனவில் கண்ட குழந்தைகளே, இன்றளவும்  பாரத பண்பாட்டில் இருந்து பிரிக்கவே முடியா பெரும் நாயகர்களாய் வலம் வருகிறார்கள்.

வேறு மார்கத்தில் குழந்தை பெற , அவன் முழு மனதோடு சம்மதிக்கிறான். தர்மனை பார்த்த உடன் அவன் உடம்பே முலைகளாய் மாறுகிறது. குரங்கு, தன் குட்டிகளுடன் இருப்பதை போல் எப்பொழுதும் குழந்தைகள் கூட இருக்கிறான். பெரும் பசி, எதிரே விஷமுள்ள கனிகள்,உண்டாலோ, உண்ணாமல் விட்டாலோ  எப்பிடியும் மரணம். தன் தந்தையை போலவே சிரித்து கொண்டே மரணத்தை தழுவிகிறான். அன்று அந்த செண்பக தோட்டத்தில் பூத்த ஏதாவது ஒரு மலர் பார்த்து இருக்கும், பாண்டுவின் காமம் சுவைத்த கடைசி புன்னகையை.

எண்ணியதை அடைய கருவியாய் ஒரு காமம்,

குந்தியின் காமம்:

குந்தி தான் பாரதத்தின் முதல் பாஞ்சாலி என்று நினைக்க தோன்றுகிறது. அவளும் ஐந்து வகை ஆண்களை அடைகிறாள்.

“தன் கையில் மிகமிகத் திறனற்ற ஓர் உயிரை ஏந்தும்போதுதான் பெண்ணின் அகம் கனிவும் முழுமையும் கொள்கிறது.

தன் திறணிலியால் குழுங்கி அழும் பாண்டுவை பார்த்து அவள் இந்த வரிகளை சொல்கிறாள்.  பாண்டுவிற்கு அவள் ஒரு தாயாகவே மாறுகிறாள். வெண்முரசில் குந்தி பேரரசியாக பெரும் விழைவு கொண்டவள் ஆகவே காட்ட படுகிறாள். அவள் ஏறக்குறைய சத்யவதி போலவே தோற்றம் அளிக்கிறாள். எப்பிடியாவது வாரிசு வேண்டும் என்றே இருவரும் முயற்சி செய்கிறார்கள்.

வெண்முரசில் குந்தி சார்பான இரண்டு  விஷயங்கள் பூடகமாகவே சொல்ல படுகின்றன. ஒன்று அவளுக்கும் சல்லியனக்கும் உள்ள உறவு. குந்தியே சல்லியனை சுயம்வரத்திற்கு அழைக்கிறாள்.  துருவாச முனிவரிடம் வாங்கிய மந்திரத்தை முயற்சித்து பார்க்கும் அந்த கரிய ஆள் ஏன் சல்லியானாக இருக்கு கூடாது என்றே தோன்றுகிறது. சல்லியன் பாரத போரில் கௌரவர்கள் பக்கம் சேருவது, சல்லியன் கர்ணனுக்கு தேர் ஓட்டுவது போன்றவைகள் இதனால் கூட இருக்கலாம். இதற்கான ஊகங்களை வெண்முரசு நிறைய இடங்களில் அளிக்கிறது.

இரண்டு, குந்திக்கும் விதுரனுக்கும் உள்ள உறவு. முதலில் விதுரருக்கே குந்தியை பேச படுகிறது, பிறகே பாண்டுவிற்கு அது மாறுகிறது. விதுரர் பற்றி பேசும் பொழுது எல்லாம் குந்தியின் முகம் உவகை கொள்கிறது.

யோகமாய் ஒரு காமம்

அர்ஜுனனின் காமம்:

“இந்திரனெழுந்துவிட்டான். இன்று இந்நகரில் கற்பாறைகள் கூட கருவுறும்

விழைவின் அதிபதி இந்திரன். அந்த இந்திரனின் மைந்தன் அர்ஜுனன். காமத்தின் தலைவன். காய்ந்த மரத்தில் படரந்த கொடியின் சுவைமிக்க பழம் தான் ,இந்த பாண்டுவின் மைந்தன்.

வெண்முரசில் அவன் முதல் அறிமுகமே இந்திர விழாவில் தான். அர்ஜுனன் இலக்கை நோக்க தேவை இல்லை, அவன் கைகள் நீட்டினாலே போதும் அம்புகள் தானாகவே இலக்கை சென்று அடையும். அது போலவே அர்ஜுனனின் காமமும். ஒவ்வொரு பெண்ணின் காமும் ஒவ்வொரு மாதிரி. எந்த இடதில், எந்த பெண்ணிடம் எப்பிடி அடிக்க வேண்டும் என்பதை அவன் காமம் இயல்பாகவே கண்டு கொண்டு விடும்.திரௌபதியுடன் அவன் செய்யும் காமும்,உலூபியுடன் அவன் செய்யும் காமும் வெவ்வேறானவை.

சிறுவனாக இருக்கும் போதே அவன் விதுரரை காணும் பொழுது குந்தியிடம் காணும் மாற்றங்களை கண்டு கொள்கிறான். காமத்தின் அவன் முதல் அறிமுகம்,பரத்தையர் வீதியில் இருக்கும் “பிரீதி” என்னும் பெண்ணிடம் இருந்து தொடங்குகிறது. அவனின் ‘காமம்’ எனும் பெரும் பாலைவனத்தின் முதல் மண் அவள். அங்கு இருந்து மீள்கையிலே அவன் முழூ ஆணாக உரு மாறுகிறான். நீராட்டு அறை அணுக்கனான மருதனே அவனுக்கு காமம் பற்றி அனைத்தையும் சொல்லி தருகிறான். சொல்ல போனால் மருதன் என்ற கிருஷ்ணனே நீராட்டு அறை என்னும் போர்க்களதில் “காம” கீதை அவனுக்கு உபதேசிக்கிறான்.

திரௌபதிக்கு தெரிந்தே அவன் மாயையை புணருகிறான்.அவனின் பார்வயில் திரௌபதியும் ஒன்று தான், தாசியும் ஒன்றுதான்.  தான் பாரதவர்ஷத்தின் பேரழகி என்ற அகங்காரத்தை அவன் எளிதே உடைக்கிறான். அதன் மூலமாகவே அவன் அவளின் காமத்தை அடைகிறான். அவனால் தட்டபடும் என்றே அவள் தன் கதவுகளை மூடுகிறாள், அவனால் மீற முடியும் என்றே அவள் தன் எல்லைகளை வகுக்கிறாள், அவனால் பிடிக்க முடியும் என்றே அவள் தன் கோட்டைகளை கட்டுகிறாள், அவனால் உருக்க முடியும் என்றே அவள் தன் மனதை இரும்பாக்கி கொள்கிறாள், அவனால் காதலிக்க முடியும் என்றே அவள் அவனை வெறுக்க தொடங்குகிறாள். திரௌபதி வெறுத்து வெறுத்தே அர்ஜுனன் மீது பெரும் விழைவு கொள்கிறாள்.

‘பிறிதொன்றிலாமை ‘இதுவே உலூபி மீது அர்ஜுனன் கொண்ட காமம். உங்களுக்கு மட்டுமே பூத்த மலர் நான் என்று உலூபி அர்ஜுனன் மீது காதல் கொள்கிறாள். ஆனால் ஒன்றும் சொல்லாமல் அவன் நெடுந்தூரம்  நடந்து பிறகு மீண்டும் அதே இடத்திற்கு வருகிறான். அவன் விட்டுச் சென்று விடுவான் என்று அவள் எண்ணியிருக்கலாகாது. விலகி விட்டான் என்று அவள் ஒரு கணமேனும் நம்பினாள் என்றால் அவள் அவனுக்குரியவள் அல்ல,.பிறிதொன்றிலாமை என்னும் முள்முனையில் நின்றவளல்ல. ஆனால் அவன் திரும்பி வரும் பொழுதும் அவள் அங்கே நின்று கொண்டு இருக்கிறாள் அவனை நோக்கி. அர்ஜுனன் பிறிதொன்றிலாமையை அவளிடமே உணர்கிறான்.

சடங்குகளுக்கு பிறகு அவன் புற்று வாசலில்  அரவம் போல் உள்நுழைந்து உலூபியுடன் காமம் கொள்கிறான். அந்த காமத்தில் அவன் உடல் பெண்ணாகிறது,அவள் காமம் மும்மடங்கு ஆண் ஆகிறது. இரு திசைகளிலும் அவன் இழுக்க படுகின்றான்.  நாகங்கள் பிறக்கையில் ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை என்பார்கள். நாக மகவு வளர்ந்து தன்னை ஆனென்றோ பெண் என்றோ ஆக்கிக் கொள்கிறது. ஆண், பெண்ணாவதோ பெண் ஆணாவதோ நாகங்களில் இயல்பே. இந்த காமத்தில் அர்ஜுனன் பெண் ஆகிறான், உலூபி ஆண் ஆகிறாள்.அந்த இரண்டின்மையை அவன் உணர்கிறான். பெண்ணாக இருக்கும் பெருங்களிப்பை அவன் உணர்கிறான்.

தாகூர் அர்ஜுனன் – சித்ராங்கதை சம்பவத்தை நாடகமாக ஏற்கனவே எழுதி இருக்கிறார் என்றே கேள்வி பட்டதுண்டு.  மணிபுரத்தின் எல்லைக்குள் நுழையும்போது அர்ஜுனன் ஃபால்குனை என்னும் பெண்ணாக இருந்தாள்  . சித்ராங்கதை “சித்ராந்தகன்” என்ற ஆணாக அங்கு இருந்தான். பெண்ணாகவே ஃபால்குனை அவன் மீது காமம் கொண்டாள், சித்ராந்தகனும் ஆனாகவே அவள் மீது காமம் கொண்டான். அவர்கள் இருவரும் தண்ணீர்க்கு அடியில் புணரும் பொழுதே ஃபால்குனை ஆனாகவும், சித்ராந்தகை பெண்ணாகவும் மாறுகிறார்கள். மிக அழகிய சொற்றொடர்களால் அருமையாக விவரிக்கபட்ட பகுதி அது.

சுபத்ரை அர்ஜுனன் என்ற பெயரிலே வெறுப்பு கொள்கிறாள். அவளை சிவயோகியாய் வந்து மணக்கிறான் அர்ஜுனன். சுபகை எனும் பணிப்பெண் அர்ஜுனனிடம் ஒரு இரவே கழிக்கிறாள், அவன் பார்வையில் இருக்கும் தன் பெண்மை மீதான மதிப்பை வைத்தே அவள் தன் வாழ்நாள் முழுவதையும் அவனுக்காக அர்பனிக்கிறாள். அர்ஜுனன் பெண்களின் உடலை மட்டும் பார்ப்பது இல்லை, அவர்களின் கண்களில் இருக்கும் அந்த விழைவையே தேடுகிறான். அதனாலயே அவளின் பருத்த உருவம் அவனுக்கு பெரியதாக தெரிவது இல்லை.

வருவதினால் பெரும் மகிழ்ச்சியும், போவதினால்  கடும் துன்பமும் அர்ஜுனனுக்கு எந்த விஷயத்திலும் இல்லை, காமத்தையும் சேர்த்து. அவனக்கு காமம் பெண்கள் மீது அல்ல, அவனின் காமம் காமத்தின் மீது தான். ஒரு முறைக்கு மேல் அவனுக்கு பெண்கள் சலிப்படைய தொடுங்குகிறார்கள். ஒவ்வொரு மரமாய் தாவும் பறவை அவன், பழைய மரங்களை பற்றிய எந்த நினைவும் அவன் சிறகுகளுக்கு இல்லை.

குழந்தையின் சிரிப்பாய், கொண்டாட்டமையாய் ஒரு காமம்:

ஏழு தமையன்மார்கள் கொல்லப்பட்டு, எட்டாவது மகனாய் பிறந்த பீஷ்மர் காமத்தை விலக்கி சபதம் எடுக்க, இந்த எட்டாவது மகனோ காமமே வாழ்க்கையாய் இருக்கின்றான்.

கிருஷ்ணன் வெண்முரசில் வளரந்து கொண்டே இருக்கிறான். “வார்தைகள்“எனும் தூரிகையால் வண்ண வண்ண ஓவியமாய் அவன் வரைய பட்டு கொண்டே இருக்கிறான். வெண்முரசின் வார்த்தை சிறகுகளால் நம் இதய பறவை கிருஷ்ணனின் நீல வானத்தில் பறந்து கொண்டே இருக்கிறது. சொல்லிசொல்லி, எழுதி எழுதி, உருகி உருகி , பிறகும் சொல்லப்படாத, எழுதபடாத, உருகபடாத ஏதோ ஒரு தருணம் வந்து கொண்டே இருக்கிறது. அவ்வளவு தான் இனியும் விவிரிக்க முடியாது என நினைக்கும் பொழுது, முட்டை உடைந்து வெளி வரும் குஞ்சு போல் , புதிதாய் ஒரு வார்த்தை வெளியில் வந்து நம்மை பார்த்து சிரிக்கிறது.

பசித்து இருக்கும் குழந்தைக்கு அன்னை முலையென, வறண்ட நிலத்திற்கு பெருமழையென, மயங்கும் இளமையில் காதலியின் பெயர்யென, வெண்முரசின் கிருஷ்ணனின் வர்ணனைகள் நம் மனதை கொள்ளை அடித்து கொண்டே இருக்கின்றன.

“வெண்முகில் நகரம்” ஒரு ஆணின் பார்வையில் பல பெண்களை வர்ணிக்கிறது. “இந்திர நீலம்” பல பெண்களின் பார்வையில் ஒரு ஆணை வர்ணிக்கிறது. பெண்களின் பார்வையில் வர்ணிக்க கிருஷ்ணனை தவிர யார் பொருத்தமாக இருப்பார்கள்? எட்டு மனைவியர் பார்வையிலும் மட்டும் அல்ல, அவனை பார்க்கும் எல்லா பெண்களின் பார்வையில் இருந்தும் கிருஷ்ணனை ஆசை தீர தீர வர்ணிக்கிறார் ஜெயமோகனாழ்வார்.

கிருஷ்ணரை வெறும் மன்மதன் என்று சிறியதாக குறுக்க முடியாது. அவனை பார்க்கும் அனைத்து பெண்களக்கும் அககாதலானகவே இருக்கிறான். ஒரு பெண் யார் முன்னால் முற்றிலும் விடுதலை அடைந்தவளாக, தன்னையே முழுவதும் ஆக உணர்கிறாளோ, அவன் மீது அவள் ஒரு பித்தாக மாறி விடுகிறாள். அதே போல், குழந்தையாகவே இருக்கும் ஆண் மீது ஒரு பெண்ணுக்கு தீரா காதல் பொங்கும் .அவன் அனைத்து பெண்கள் முன்னர் குழவியாகவே மாறி விடுகிறான்,அவன் நடிப்பதில்லை அவன் இயல்பாகவே அவ்வாறு மாறி விடுவதை அர்ஜுனன் காண்கிறான். அவன் கண்களில் எப்பொழுதும் மிளிரும் குறும்பு புன்னகை, அவனது நானமில்லா செய்கைகள், இது எல்லாம் பெண்கள் மனதில் அவனை ஒரு அணுக்கமானவனாக இருக்க வைத்து விடுகிறது.

கிருஷ்ணன் எங்கோ ஓரிடத்தில் பெண்களை தீண்டுகிறான். அவர்களின் கட்டுகளை அவிழ்துவிடுகிறான். அவனடித்தில் ஒரு சொல் கூட பேசாதவர்கள் கூட அவன் தனக்கே உரியவன் என என்ன தொடங்குகிறார்கள்.

கிருஷ்ணவபுஸை சிதைத்து சததன்வாவை வெட்டி வீழ்த்த அவனை தேடுகிறார். அப்பொழுது அவனின் மனைவியை பார்த்து அவன் எங்கே போனான் என்று கேட்கிறார், அவள் தான் ஒரு சொல்லும் சொல்ல மாட்டேன் என்று சொல்கிறாள். அவள் விழிகளை நோக்கி புன்னகைத்து “எனக்காகக் கூடவா?” என்கிறான் கிருஷ்ணன். அவள் அவரி விழிகளை ஏறிட்டு “யாதவரே என் உள்ளத்தில் என்றும் உம் பீலிவிழி நோக்கியிருந்தது. ஆனால் அதை சூடியிருந்தது என்கொழுநரின் வாடாத இளமை தான்” என்கிறாள். “அவனும் நானே” என்று கிருஷ்ணர் புன்னகையுடன் சொல்கிறார். பகைவனின் மனைவிடமே இவ்வாறு சொல்ல கிருஷ்ணனை தவிர யாராலும் முடியாது.

அர்ஜுனன் VS கிருஷ்ணன் காமம்:

மேம்போக்காக ஒன்றாக தெரிந்தாலும் இருவரின் காமத்திற்க்கும் நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. அர்ஜுனன் ரகசிய காதலன் போல, அவனை பெண்கள் தனக்குள்ளயே ரசிக்கிறார்கள். கிருஷ்ணன் தவழ்ந்து வரும் சிறு குழவி போல, அவனை தாவி அனைத்து உச்சி முகிர பார்க்கிறார்கள். கிருஷ்ணனை வெளிப்படையாகவே பெண்கள் ரசிக்கிறார்கள். அர்ஜுனன் தான் தொலைத்த ஏதோ ஒன்றை ஒவ்வொரு பெண்களிடம் தேடுகிறான், அது கிடைத்த பின்னே நிறைவுறுகிறான். கிருஷ்ணன் தொலைப்பதும் இல்லை, தேடுவதும் இல்லை.

 

 

 

அகங்காரமாய் ஒரு காமம்:

சுஃப்ரை என்ற நடன பெண் மீது காமம் விழைகிறான் திருஷ்டத்யுன்மன். அவளின் சிறு கேலியை பொறுக்காமல் தன் தமக்கையை போல உடைவாளை எடுத்து உலோக ஒலியுடன் உருவி ஓங்கி அவளை வெட்டுகிறான். அக்கணம் இடையில் ஒரு நரம்பு சற்றே இழுத்துக்கொண்டதனால் அவ்வெட்டு சரிந்து இறகுச்சேக்கையில் அவளுக்கு மிக அருகே விழுந்து புதைந்தது அவள் அச்சமோ விதிர்ப்போ இல்லாமல் அசைவற்று அப்படியே கிடந்தாள். மூச்சில் முலைகள் மெல்ல ஏறியிறங்கின. அவள் விழிகள் அவனை நோக்கி ஒருசொல்லும் இல்லாமல் வெறுமனே விரிந்திருந்தன. பின்னர் ஒரு சொல்லும் சொல்லாமல் அவள் கிளம்பி விட்டு இருந்தாள்.

திருஷ்டத்யும்னன் அவளையே பற்றியே யோசித்து கொண்டு இருக்கிறான். அவள் சற்றும் அசையவில்லை என்பதையும்  அவள் விலகவில்லை என்பதையும் அவன் யோசித்து கொண்டே இருக்கிறான்.

துவாரகையில் நுழையும் போதே , அவன் தெரு எங்கும்க பெண்கள் களியாட்டமாய் இருப்பதை பார்க்கிறான். அங்கு இருக்கும் பெண்களின் அழகை மெல்ல மெல்ல ரசிக்கிறான். கிருஷ்ன்னைன் எட்டு மனைவிகளிடமும் அவனுக்கு மெல்ல மெல்ல அறிமுகம் ஏற்படுகிறது, அதோடு சியாமந்தக மணியின் விழைவும் அவனை சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அவன் நினைவு முழுவதும், இமையா விழிகள் கொண்ட சுஃப்ரையையே நினைத்து கொண்டு இருக்கிறது. மெல்ல மெல்ல அவன் அகங்காரம் அணைந்து அவளையே மணக்க முடிவு எடுக்கிறான்.

தெளிந்த நீரோடையாய் ஒரு காமம்:

துரியனின் காமம்:

“பெருங் வஞ்சம் கொண்டவனே பெருங் கருணை கொள்ள முடியும்”

துரியனின் “கருணை” எனும் பெரு மழையை துளி துளியாக அனுபவிக்கிறாள் பானுமதி. பெரும்பாலும் பெண்களுக்கு அவளின் ஆணின் அகம் முழுவதும் தானே நிறைந்து இருக்க ஆசை இருக்கும். இங்கு துரியனின் அகம் முழுவதும் கர்ணனும், அவனின் தம்பிகளும் நிறைந்து உள்ளனர், ஆனால் அவர்கள் மீது அவளுக்கு கோபமே வருவது இல்லை. கர்ணனின் பாசமிகு சகோதரியாய் மாறுகிறாள்.

துரியனின் பெயரை கேட்டே   அவன் மீது காதல் கொள்கிறாள் பானுமதி. அதை கேள்விபட்ட துரியன் உடனடியாக அவளை மனம் கொள்ள முடிவு செய்து விடுகிறான். தாயின் சொல் கேட்டால், ஓடி சென்று அவளின் காலை கட்டி கொள்ளும் குழந்தை போல உள்ளது துரியனின் அவள் மீதான காமம். இன்னும் சொல்ல போனால், இதுவரை வந்த வெண்முரசின் சிறந்த ஜோடிகளாக இவர்களே உள்ளனர். அவர்களின் காமம் தெளிந்த நீரோடை போல் உள்ளது.

அனைத்து அரசர்கள் போல் அவனக்கும் திரௌபதி மேல் காமம் வருகிறது. ஆனால் தன் நண்பன் கர்ணனுக்காக தன் எண்ணத்தை மாற்றி கொள்கிறான்.

அவமானப்படுத்தும் காமம்:

தன் வாழ்கையில் அவமானங்களையும், பரிகாசங்களையும் மட்டுமே சந்திக்கும் கர்ணன் காமத்திலும் அதையே அடைகிறான். வியாசரின் மொழியாலே அதிகமாக வர்ணிக்க பட்ட அழகன். அவனை பார்க்கும் எல்லா பெண்களும் அவன் மீது ஆசை கொள்கிறார்கள், இருந்தும் அவன் காதலிலும் புற்கணிக்க பட்டு கொண்டே இருக்கிறான்.

லக்ஷ்மி தேவி ஆலயத்தில் முதன் முதலாக திரௌபதி கர்ணனை பார்க்கிறாள். அவள் பார்வை அவனின் மார்பு நோக்கியே இருக்கிறது, அவனின் கவசத்தை தேடி கொண்டே. பார்த்த முதல் பார்வையிலே கர்ணனுக்கு சலனம் உண்டாகிறது. கிந்தூரம் திரௌபதியின் அகம் தான் என்று சொல்ல படுகிறது. கர்ணன் எளிதாக அதை எடுத்து நான் ஏற்றி அடித்து விடுகிறான், ஆனால் கடைசி இலக்கு மட்டும் சற்றே குறி தவறி விடுகிறது, அச்சமயம் ஏதோ ஒரு சலனத்தை அவன் கைகள் உணர்கிறது. அர்ஜுனன் அதை  முழுதாக  வென்று முடிக்கிறான். அர்ஜுனனக்கும் கர்ணனுக்கும் உள்ள வித்தியாசம் அதுவே. கர்ணன் திரௌபதியின் அகத்தின் கடைசி படியில் இருந்து விலக்க படுகிறான். காம்பில்ய போரில் கர்ணன் தோல்வியை தழுவி கொண்டு இருக்கும் பொழுது, உப்பிரிகையில் இருந்து ஒரு சிவப்பு சேலை காட்ட படுகிறது. அதை பார்த்தஉடன் கர்ணன் நிலை குலைந்து போகிறான்.

தன் தந்தை மற்றும் தாயின் வற்புறுத்தலால் விருஷாலியை மணக்கிறான். நண்பன் துரியனுக்காக கலிங்கத்தின் இளைய இளவரசி சுப்ரியை மணக்கிறான். விருஷாலி தான் ஒரு சூத பெண் என்ற சுய இரக்கத்தாலும், சுப்ரியை, ஏற்கனவே ஜயத்ரனை மனதால் விரித்ததாலும்,  கர்ணன் ஒரு சூதன் என்பதாலும் அவனை ஒதுக்கிறார்கள். குழந்தை பிறக்கும் செய்தி கூட அவனுக்கு  தெரிவிக்க படுவது இல்லை. அவர்களின் மஞ்சத்து அறை கதவுகள் கூட அவனுக்காக திறக்க படுவதில்லை. அறை வாசலிலே அவன் உட்கார்ந்து இருக்கிறான் மதுவை குடித்து கொண்டு.

ஆற்றலாய் ஒரு காமம்:

காட்டுவாசிகளின் காமம் விலங்கின் காமம் போல தான் இருக்கும். அங்கு வலிமை உள்ள மிருகத்திற்கே  காமம் கிட்டும். பீமனின் காமும் அது போல தான். ஆற்றல் அதுவே அவனை அமைக்கிறது. இடும்பி பீமன் அளவிற்கே உயரமும், பருமனும் கொண்டவள். அவளிடம் மற்போர் ஈடும் பொழுதே காதல் கொள்கிறான் பீமன். ஆற்றல் ஆற்றலோடு தான் சேர முடியும்.

திரௌபதியும் அந்த ஆற்றலைதான் உணர்ந்தாள். அவனை தெருவில் பார்த்து, தன் தேரை ஓட்ட சொல்லி கேட்கிறாள்,சாட்டை எடுத்து கொண்டு, தேரின் நுக மேடையில் அமர்ந்து கொள்கிறாள். நுகத்தை இழுத்துச்சென்ற பீமனின் புயங்களின் பின்பக்கமும் பின் தோள்களிலும் தசைகள் காற்றுபட்ட பாய்மரம்போல புடைத்து இறுகின. அவனின் பேருடல் முற்றாக அவளை சூழ்கிறது. முதலிரவில் திரௌபதியை முதுகில் ஏற்றி கொண்டு, அவன் கங்கையில் நீச்சல் அடித்தே காமம் புணருகிறான். அர்ஜுனன் திரௌபதியை  உடல்மட்டுமாக உணரச்செய்தான். பீமன்  உடலை மட்டுமே அறிபவளாக அவளை ஆக்குகிறான்.

நீர்க்குமிழியாய் ஒரு காமம்:

புரிசவரசின் காமம்:

புரிசவரசு ஒரு சராசரி முதிரா இளைஞ்சனின் பிரதிநிதி.ஒவ்வொரு பெண்ணையும்  ஒவ்வொரு பெண்ணையும்  தொட்டு தொட்டு செல்கிறான்.  கிராமத்து சிறுவன் நகரத்து ஆடம்பர தெருக்களை பார்ப்பது போல தான் புரிசவரசு பெண்களை பார்க்கிறான்.

பால்கிஹரை கூட்டி வர சிபி நாட்டிற்கு செல்லும் பொழுது இளவரசி தேவகியை பார்க்கிறான். அவளிடம் காதல் கொண்டு மனம் முடிக்க வருவதற்க்குள் பீமன் வந்து தேவகியை கவர்ந்து செல்கிறான் தருமனுக்காக. சகலபுரி இளவரசி விஜயை தன் நாட்டிலே பார்க்கிறான், மறுபடியும் அவள் மீது காதல். ஆனால் அதுவும் கை நழுவி செல்கிறது, சகாதேவனுக்காக அவள் கூட்டி செல்ல பாடுகிறாள். துரியனின் தங்கையான துச்சளை மேலும் காதல் கொள்கிறான். ஆனால் துரியன் மேல் உள்ள சகோதார பாசத்தால் அவளையும் அவனால் அடைய முடியவில்லை. துச்சளை ஜயத்தரனை மனம் புரிகிறாள்.

அவனின் அனைத்து காதலும் காமும் நீர்க்குமிழி என்ன மறைந்து  போகிறது. பெருங் கோபுரங்கள் கட்டி கொண்டு இருக்கும் பொழுது சிறு மணல் வீடு கட்ட முயலும் சிறுவன் போல இருக்கிறது புரிசவரசின் காதல். அஸ்தினாபுரியின்  இளவரசர்கள் தங்கள் அரசியல் சூழ்ச்சிக்காக பரதவார்ஷம் முழுவதும் பெண் தேட,அதில் அடங்கி மறைகிறது அவனின் காதல்கள். பெரும் சண்டை நடக்கும் பொழுது கீழே மீதி படும் எறும்பு போல் உள்ளது அவன் காதல்.  அவன் காதலித்த தேவகி, விஜயை மூலமாகவே அவன் அவமானபடுகிறான்.

வருவதால் மகிழ்கிறான், போவதால் அழுகிறான். என்ன செய்வது அவன் அர்ஜுனன் இல்லையே?

அடங்கா காமம்:

தீர்க்கதமசின் காமம்:

விதையின் வேலை பெருக்கி கொண்டே இருப்பது. அது தான் தீர்க்கதமசின் காமும். முடிவில்லா, கட்டற்ற காமமே அவரின் விழைவு. இது ரிக் வேதத்தில் வருவது. அவர் ஒரு பிரஜாபதியாக வருகிறார். எங்கும் அவர் தோற்றுவித்து கொண்டே இருக்கிறார்

அன்றிருந்த வழக்கப்படி தமையனும் இளையவனும் ஒரே மனைவியையே கொண்டிருந்தனர். உதத்யரால் கருவுற்ற மமதை அவரது தவக்குடிலில் இருந்தபோது இளையவர் பிரஹஸ்பதி மமதையை எண்ணி காமம் கொண்டு உள்ளே வருகிறார். எத்தனையோ மன்றாடியும் அவர் கேட்கவில்லை. அவளின் குருதி அறை முட்டபடுகையில் சீறி எழுகிறான் தீர்க்கஜோதிஷ். தன் காமம் சிதைந்ததால் சினம் கொண்ட முனிவர், அவனை விழி இழக்க சாபமிட்டார். அப்பொழுது பிறக்கிறான் தீர்க்கதமஸ். சூரியன் இல்லாத முடிவற்ற  நீளிருள் , அதுவே அவரின் வாழ்க்கை. இருளின் மைந்தன். இருளை தவிர எதையும் விழையாதவர்.நெறியென்றும், குலமென்றும், அறமென்றும் எதும் அறியா பேரிருள்.

கைகளால் தரையை ஓங்கி அறைந்து அது வீறிட்டழுகிறான். முலைகளை கவ்வி குதறுகிறான். மூர்க்கத்தின் அடையாளமாகாவே ஆகிறான். ஒலியின் மூலமாகவே அனைத்தையும் அறிகிறான். அதனாலயே அழியா சொல்லான வேதங்களை அவன் ஒலியாலே கற்று கொள்கிறான். பெருவிழைவே உளமென்றும் உடலென்றும் ஓயா அசைவென்றும் அறைகூவும் குரலென்றும் ஆன கரியமுனிவரை காடே அஞ்சிகிறது. மூர்கமாகவே அவன் மனைவியை காமுறுகிறான். அவனின் மூர்கத்தை அஞ்சியே அவன் மகன்கள் அவரை படகில் ஏற்றி நதியில் அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

அரக்கர் குல அரசன் வாலி ஒவ்வொரு நாளும் உளம் நிறைந்து ஏங்கி காத்திருந்தான், வேதம் முற்றிலும் அறிந்த முனிவருக்குகாக. அங்கும் தீர பசியுடன், தீரா காமத்துடன் இருக்கிறார். அவர் மூலமாக தன் மனைவியருக்கு மைந்தர்கள் வேண்டும் என தீர்மானிக்க, அங்கன் வங்கன் கலிங்கன் புண்டரன் சுங்கன் என்று ஐந்து பேருடல் மைந்தர்கள் அவரது ஆறாப்பெருவிழைவின் வடிவங்களென அப்பெண்டிரின் வயிறு திறந்து இறங்கி மண்ணுக்கு வந்தனர்.

வயது முற்றி மேழுலகம் செல்லும் பொழுதும் அவர் மாற்றில்லா, அணையமுடியா பெருங் காமத்தை விழைகிறார். அதற்காகவே அவர் வைகுந்தத்தையும்,சிவமுடியும் மறுத்து, முடிவிலி என நீளும் பெருங்காமம் கொண்ட இந்திரலோகத்திற்கே செல்கிறார்.

விழியின்மையால் பெருநெருப்பாக்கப்பட்ட அந்த அடங்கா காமமே பிரம்மம் என்று ஆகிறது.

சித்ராந்தகனின் காமம்:

விசித்திர வீர்யனின் அண்ணான சித்ராந்தங்கன் எப்பொழுது இளைஞர்கள் கூட இருப்பது போல காட்ட பாடுகிறான். அவனுக்கு யோனிக்கான இடமே இல்லை என்று நிமித்திகர்கள் சொல்கிறார்கள். இதனால் அவன் “Homosexual” என்று நினப்பதற்க்கு புனைவில் ஊகம் இருக்கிறது. அடேய் போல் அவன் தன்னையே தான் காணும் மோகத்தில் இருப்பதாகவும் காட்ட படுகிறது. ஆகவே அவனை “Naarcist” என்று நினைக்கவும் இடம் தருகிறது.

  காமமே தெய்வமாய்:

திரௌபதியின் காமம்

ஓம்! சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்

இவையனைத்தும் நீ.  நீயன்றி ஏதுமில்லை.

பிரியாகை ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடம். பாஞ்சாலி ஐந்து வகை காமங்கள் சங்கமிக்கும் கோவில். அக்னியின் புதல்வி. எரிப்பதற்கென்றே வந்தவள். காமரூபிணி. அவள் விழி தொடும் அனைவரும் அவள் மீது காமம் கொள்கின்றனர்.

சுயம்வரதில் ஏன் ஒருவனக்கு மட்டும் மாலையிட வேண்டும் என கேட்பதில் இருந்து தொடங்குகிறது அவளின் காமம். அறிவு என்பதன் மேல் பெண்களுக்கு எப்பொழுதும் பெரு விழைவு இருக்கும். தர்மனின் காமம் அற்ற பார்வையே திரௌபதியை சஞ்சலபடுத்துகிறது. அவளின் தோழியான மாயையும் திரௌபதி போலவே நோக்குகிறார். எல்லா விழிகளிலும் காம்த்தையே கண்டு, காமம் சற்றும் இல்லா அவன் கண்களை கண்டே அவள் காமம் கொள்கிறாள்.

அக்காலங்களில் போரில் வென்ற அரசன் அவன் ஆநிரையும், பெண்களையுமே கொள்வான். ஆதி காலத்தில் இருந்தே பெண்கள் பாதுகாப்பாக வைக்க பட்டு கொண்டே இருகிக்கிறார்கள். எவ்வித தைரியமான பெண்ணும் ஏதோ ஒரு சமயத்தில் பாதுகாப்பை விரும்புவாள். பாதுகாப்பை விழையும் பெண்களுக்கு வலிமையே பிடிக்கும். அந்த வலிமையின் மூலமே அவள் பீமனை காமுறுகிறாள். மெல்லிய காற்று வலிய மரத்தின் மீது முட்டி சிறு இடைவெளியில் வெளி வரும் பொழுதே குழல் இசை உருவாகிறது, அது போலவே அவளின் காமும்.

பெண் தன் உடலாலே  தன்னையே அறிந்து கொள்கிறாள். அந்த உடலை அலங்கரித்து கொள்ளவே அவள் விழைகிறாள். அவ்வாறு அவளை வெறும் உடலாக பார்க்கும் ஆணின் மீது அறிவு பூர்வமாக வெறுப்பு வந்தாலும், அவளின் உடல் அதையே விழையும். அதனாலயே அவள் அர்ஜுணனை காமுறுகிறாள்.

அறிவு, ஆற்றல், காமம் மீது என்னதான் ஒரு மோகம் இருந்தாலும், பெண் முதலில் ஒரு தாய். தாயாகவே படைக்கபடுவது அவள் உடல். தன் ஆண் ஒரு சிறுவனாக தன் முன்னே ஒரு குழுவி போல் குழைவது எல்லா பெண்களுமேஉள்ளூர  விரும்புவார்கள். நகுல, சக தேவனிடம் அவள் அதையே பார்க்கிறாள்,அதனாலயே காமுறுகிறாள்.

கர்ணன் முன்னர் மட்டும்  தான் அறியாசிறுமியாக காதல் புரிய முடியும் என்று அவளுக்கு தெரிந்து இருக்கிறது. ஆனால் பேரரசிக்கான பெரு விழைவு அதை தடுக்கிறது.

வெண்முரசின் உச்சம் “வெண்முகில் நகரத்தில்” பகுதி 19 யில் வரும் அந்த சாக்த உபாசனை தான். மிக சரியாக திரௌபதியை சாக்ததோடு இணைக்கிறது. காமத்தையே தெய்வமாக வழி படுவது. தர்மனை அறிவாலும், பீமனை ஆற்றலாலும், அர்ஜுனனை அகங்காரத்தாலும், நகுல சகா தேவர்களை  புதுமையாலும் காமுறுகிறாள்.

அந்த பகுதியை படித்த உடன் எனக்கு என் ஆழ் மனத்தின் கனவில் தோன்றியது ஒரு காளியின் உருவம். நகுல சக தேவர்களை தன் இடுப்பின் இரு பகுதியிலும் சுமந்து கொண்டு, , அர்ஜுனனை நெஞ்சில் அணைத்தவாறு , பீமனை தோளில் தாங்கிகொண்டு தர்மனிடம் காமுறுகிறாள் அந்த பெருந்தேவி. அவளின் காலுக்கிடையில்  கர்ணன்.

“கொள்க காமம்! தேவி, கலம் நிறைய அள்ளி நிறைக காமம்! மொள்க காமம்! முறைதிகழ மூழ்கி எழுக காமம்! தேவி, காமமென்றாகி வருக! இவ்வுலகை காமமென்றாகி அணைக! காமமென்றாகி புணர்க! இப்புடவியை காமமென்றாகி உண்க! காமமென்றாகி கொள்க! காலத்தை காமமென்றாகி சூடுக! காமினி,காமரூபிணி, கரியவளே, கொள்க என் நெஞ்சக் குருதி பிசைந்த வெம்மாவு. ஓம் ஸ்ரீம் ஹம்!.!.”

வஞ்சம் இயற்கையிலே கொடுரமானது. அதனினும் கொடியது காமம் மூலம் விளைந்த வஞ்சம். வெண்முரசில். அவ்வாறு காமம் மூலம் விளைந்த வஞ்சம் வந்து கொண்டே இருக்கிறது.

  1. இது சுணந்தையில் இருந்து ஆரம்பிக்கிறது. பிரதீபர் அவளை கொஞ்சம் வயதான காலத்தில் மனம் முடித்து கூட்டி வருகிறார். பெரும் வலியில், குருதி குளத்தில் நீந்தியவாறு  அவள் மூன்று மகவுகளை பெற்றுஎடுக்கிறாள். அதுவே முதல் வஞ்சம்.
  2. அம்பையின் காதல் மறுக்க பட்டதால் அவளின் நெஞ்சில் வஞ்சம் துளிர்கிறது. “குருசேத்ரம்” எனும் கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் முதல் கனல்,அம்பை பீஷ்மர் மேல் வைத்து இருந்த காதலும்அது மறுக்கபட்டதால் விளையும் வஞ்சமும்.
  3. கர்ணன் திரௌபதி மேல் வைத்து இருந்த காமம். சிவப்பு சேலைகாட்ட பட்ட பொழுது அவனுள் எரிந்த அந்த வன்மம்.

 

பந்தை வைத்து வித்தை காட்டுபவர்களை நீங்கள் பார்த்து இருக்கீர்களா? இரு கைகளிலும் இரு பந்தை வைத்து அதை மாற்றி மாற்றி சுற்றி கொண்டே இருப்பார்கள்.. அது போல் தான் காமமும் வஞ்சமும். எங்கேனும் புள்ளியில் அவை இணைந்தாலோ அல்ல தொட்டாலோ ஆட்டம் அவ்வளவு தான்.

 

“இதை நான் செய்யவில்லை என் காமமே செயத்தது, இதை நான் செய்யவில்லை என் வன்மமே செயத்தது”. வெண்முரசு படித்து கொண்டு இருக்கும் பொழுது இம்மந்திரம் வெவ்வேறு அர்த்தங்களை என் மனத்தில் விதைப்பதை என்னால் உணர முடிகிறது.

 

“காமோ காரிஷீத்,

மன்யுக காரிஷீத், நமோ நம:”

வெண்முரசு கலந்துரையாடல்-மார்ச் 2016

இம்மாத கலந்துரையாடலுக்கு வந்த முப்பது பேர்களில் ஏழு பேர் இந்த கூட்டத்திற்கு புதியவர்கள் ஆனால் அனைவரிடமும் தேர்ந்த வாசிப்பும் கலந்துரையாடல் குறித்த ஆர்வமும் இருந்தது.

4 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியது 4:30 ஆயிற்று. ஜானகிராமனும் ரகுராமனும் பேசுவதாக இருந்த்து.

ஜானகிராமன், தனது உரையை கவியரங்க பாணியில் வாசித்தார். ஒவ்வொரு கதாபாத்திரமும் எந்த குணத்தை தேடி செல்கின்றன என்பதை வைத்து எழுதப்பட்ட கட்டுரை.  ‘முடிவிலியை தேடி’ என்கிற அந்த கட்டுரையை விரைவில் பதிவேற்றுவார்.

ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் விவாதிக்க பல காரணங்கள் இருந்தன. ஆனால் 90 நிமிடங்களில் அனைவரையும் விவாதிக்க இயலவில்லை. இயல்பாகவே, அதில் துரோணர் மற்றும் துரியனை பற்றி மட்டும் விவாதிக்க இடமிருந்தது. 

துரோணர் குறித்து உரையாடல் துவங்கியது.

துரோணர்  பிராமணராவதையே தன் வாழவின் குறிக்கோளாக கொண்டிருந்தாரா என்ற கேள்வியை அது எழுப்பியது. துரோணர், தன்னை பிராமணர் என கருதி கொண்டாலும் அதை அவர் தன் வாழ்வின் லட்சியமாக கொண்டிருந்தார் என கூற இயலாது. அப்படியிருந்தால் அவர் அஸ்வதாமனை சத்ரியனாக ஆக்கியிருக்க மாட்டார். ஆகவே அவர் ஏதோ ஒரு அங்கீகாரத்திற்கு மட்டுமே ஏங்குபவராக ஆரம்பத்தில் வருகிறார்.அவர் தன்னை பிராமணராக உணர்கிறார் என்பதை அறிந்து துருபதன் அவர் பாதம் பணிந்து சீடனாகிறான். ஆனால் நாளடைவில் அவருக்கு தன் லட்சியத்தைவிடவும் மகனுக்கான அங்கீகாரம் முதன்மையாகிறது என்பதை பீஷ்மரிடம் துரோணர் ” என் மகன் பாரதவர்ஷத்திற்கே சக்கரவர்த்தியாவான்” என சொல்லும் இடத்தில் வெளிப்படுகறது என்பதை விவாதித்தோம்..

இங்கே “சதுர்வர்ணம்’ என குறிப்பிடப்படுபவை வெறும் பிறப்பை மாத்திரம் வைத்து வருவதில்லை என்பதை ஜாஜா எடுத்துக்கூறினார். பரசுராமரோ,சரத்வானோ அவரை பிராமணராக்க முடியும்.. அவர் மகன் சத்ரியனாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ஒரு வர்ணத்தில் இருந்து இன்னொரு வர்ணத்திற்கு மாற முடிகிறது. இது அப்போதைக்கு நடைமுறையில் இருந்த ஒரு சமூக வழக்கத்தை குறிப்பிடுகிறது என்பதையும் அவர் கூறினார்.

துருபதன் அவரின் உள்ளத்தை அறிந்து அவர் சீடனானது போல பீஷ்மரும் அவர் பலவீனம் அவர் மகன்தான் என்பதைஅறிந்து அவரை தன் கட்டுக்குள் வைத்துக்கொண்டிருப்பதை தியாகராஜன் விளக்கினார். இருந்தாலும் தன் மகன் மீதான அவரின் பாசமே அஸ்வத்தாமனை சிரஞ்சீவியாக்கியது என ராகவ் எடு்த்துரைத்தார். இன்றுவரை பாவத்திற்கு அஸ்வத்தாமன் என குறிப்பிடப்படுவது அதில் ஒரு முரண்நகைதான்…

அடுத்து ஜானகிராம்,துரியன் தன் உடல் பலத்தாலேயே முடிவிலியை நோக்கி போவதாக வண்ணக்கடலின் அத்தியாயங்களோடு விளக்கினார். இதுவும் விவாதிக்கப்பட்டது. துரியன் இயல்பாகவே எதிரி என்றொருவனை உணராதவரை, மிகவும் அன்பானவனாகவும் உணரந்தபின் அப்படியே கட்டுக்கோப்பாகவும் மாறுகிறான்.

ஆகவே, அவன் அகங்காரமே அவனை கொண்டு செல்கிறதேயன்றி புஜபலம் இல்லை. கர்ணன் அவனையும் ஜராசந்தனையும் ஒரு கையால் தூக்கி வீசுவது அவனுக்குள்  ஆச்சரியத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. ஆனால் பீமன் வனத்தி்ல் கரடியை விலக்கியது அவனுள் ஏற்படுத்தியது ஒரு பகை உணர்வு அது அவனை வாரணாவதம் வரை இட்டுச்செல்கிறது. ஜானகிராமன் தன் கட்டுரையில் இந்த விவாதங்கள் சார்ந்தும் சற்று மாற்றியமைத்து பதிவதாக கூறினார்.

அடுத்து பேசவேண்டியிருந்த ரகுராமன் மார்ச் மாத ஆடிட்டிங் வேலைகளால் தனது கட்டுரையை செம்மை படுத்த முடியவில்லை ஆதலால் அடுத்த மாதத்தில் தான் பேசுவதாக சொன்னார். எனவே பங்கேற்காளர்களிடம் தங்கள் வாசிப்பனுபவத்தை கேட்டறிந்தோம்.

பாலசுப்ரமணியன், முன்பு வெண்முரசு விவாத தளத்தில் குறிப்பிட்டிருந்த அருணாசலத்தின் கடிதம் குறித்து கூறினார். காய்ந்த பழம் எந்த காற்றுக்கு கீழே விழும் என்கிற திருதராஷ்டிரன் குறித்தான வரிகள் அவை. அதுபோன்ற உவமைகளையும், குறியீடுகளையும் நாம் விவாதிக்கவேண்டும் என குறிப்பிட்டார். இந்த சமயத்தில் எப்போதும் சொல்வது போல, ” யோகமுறைகளை விளக்கும்  இந்திரநீல சுயம்வரம் ஏழு நாகர் உலகம் ( காண்டீபம்)”ஆகியவற்றை தான் விளக்குவதாக செளந்தர் குறிப்பிட்டார். இப்படி இவர் சொல்லுவது இதோடு நூற்றியெட்டாவதுமுறை  என்பது அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஐஐடியில் வரிசையில் நிற்கும் போது அன்றைய வெண்முரசு அத்தியாயம் குறித்து  பேசிக்கொள்வதை அங்கு பயிலும் அரசன் குறிப்பிட்டார். உயர்கல்வி நிறுவனங்கள், எந்த காலத்தில் மற்ற கல்விநிறுவனங்களை போல் subject ஐ மட்டும் படிக்கபோகிறார்களோ என்ற சமூக அக்கறையை பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு வாசகர் வெளியிட்டார். 🙂

இந்த கூட்டத்தில் தத்துவம் குறித்து விவாதிக்கவே இல்லை இதை எதிர்பார்த்து வந்து தான் மிக ஏமாற்றமடைந்ததாக தன் ‘மனக்குமுறலை’ மலைச்சாமி தெரவித்தார். இதற்கு முன் ஈரட்டியில் புதியவர்கள் சந்திப்பில் வைத்து ஜெ.விடம் அம்பை காதல் கொள்வது கருப்பையின் விழைவு என்று ஏன் கூறினீர்கள்.. பெண்களுக்கு மனதே இல்லையா என ‘ஹார்ஷாக’ கேட்டபோது இதேபோல் ஒரு ‘மனக்குமுறல்’ வந்ததை நினைவு கூர்ந்தார். அப்போது, எழுத்தாளரிடமே விளக்கம் கேட்பதை விட கீழான செயல் ஒன்றில்லை என ஜெ. ‘புன்முறுவலோடு’ தெரிவித்ததால் அந்த கேள்வியையும் இந்த சபையில் வைத்தார்..

அந்த கேள்விக்கான பதிலையும் பின் இதற்கு முன் கூட்டங்களில் நடந்த தத்துவ விசாரங்களை எடுத்துரைத்து ஸ்ரீநிவாசன் சாரும், ஜாஜாவும் தியாகராஜனும் ‘சாந்த’ப்படுத்தினார்.

குறிப்பாக பிரகலாதனுக்கும் ஹிரண்யகசபுவிற்கும் நடந்த உரையாடல் குறித்து அவர் விவாதிக்க விரும்பினார். பலரும் பேசிய அந்த விவாதத்தில் விஷ்ணுபுர கெளஸ்துப தத்துவ விசாரத்திலிருந்து இன்னும் மீண்டுவராத இந்த கட்டுரையாளர் மட்டும் வாயை திறக்கவில்லை. அவைகளை அனுபந்தங்களாக தோகுத்ததில்,

 

அ) ஒரு கூட்டத்தில் முழுக்க முழுக்க தத்துவத்தை விவாதிக்க இயலாது அதற்கான பல கேள்விகளும் / பதில்களும் ஏற்கனவே விவாதிக்கபட்டிருக்கும். அவைகளை படித்தவர்கள் மட்டும்விவாதிக்க மற்றவர்கள் அவற்றை கவனித்து அறியலாம்

ஆ) வெண்முரசு தத்துவத்தை மட்டும் சொல்லுவதில்லை. அது ஒட்டு மொத்த பாரத பண்பாட்டையும் திரும்ப எழுதும் முயற்சி. அதில் தத்துவங்களை மட்டும் ஒரு அமர்வில் விவாதிக்கலாமேயன்றி ஒவ்வொரு வாரமும் அதை விவாதிப்பது என்பது வெற்றியடையாது.

( வெங்கட்ராமணன், ஜெ. சொன்ன வாதம், விதண்டாவாதம் ஆகியவை பற்றிய விளக்கத்தை அளித்தார்)

இ) நான்நினைக்கிறேன் அல்லது என்னளவில் என்கிற வார்த்தைகளை கொண்டு தத்துவ விவாதம் செய்யலாகாது. 

ஈ) தத்துவங்களை விவாதிக்கும் முறை பற்றிய நித்யா / டாகடர் தம்பான்  ஆகியோர்களின் கருத்துக்களை ஸ்ரீநிவாசன் விளக்கினார்.

உ) அஜிதன் தத்துவங்களை படம் வரைந்து பாகங்களை குறித்து விளக்கிய நவம்பர் மாத கூட்டம் போல் இன்னொன்று அல்லது அதன் தொடர்ச்சியாக ஒன்று அடுத்தடுத்த மாதங்களில் உரையாற்றுவதாக சொல்லியிருக்கிறார்.

அதன்பின் இறுதியாக, அஜிதன் சுட்டிக காட்டியபடி பிரயாகையில் (77ம் அத்தியாயம்)சரஸ்வதி கோயிலில் திரெளபதியும் கல்பகனும் (யுதிஷ்டிரன்) நீதி/ அறம் குறித்து உரையாடும் அத்தியாயம் விவாதிக்கப்பட்டது. நீதி வழங்கப்படும் போது அது வெறும் அற நூல்களை வைத்து வழங்கப்படலாகாது அப்படியென்றால் அந்த இடங்களில் நீதிபதிக்கு பதிலாக ஒரு கணினியை வைத்து விடலாம். நீதி எப்போதும் அந்த சூழ்நிலையையும் கருத்தில் கொண்டே வழங்கப்படுவதால் அங்கே மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். சில நேரங்களில் மூன்று நான்கு நீதிபதிகளும் அமர்ந்து விவாதிக்கிறார்கள். இந்த விவாதம் நீண்டு கொண்டு போய் நடப்பு அரசியலின் இரு வேறு தீர்ப்புகள் குறித்து உரையாடும் வரை வந்து அங்கேயே தானாக நின்றது.

சென்னை கலந்துரையாடலில் ஒருவித கட்டுக்கோப்பு இருப்பதை தாம் உணர்ந்த்தாக மாரிராஜ் குறிப்பிட்டார்..சில நேரங்களில் அரசியலோ, உலக சினிமாவோ பேச்சில் இடைப்பட்டாலும் அங்கேயே நின்று மீண்டும் வெண்முரசுக்குள் வருவது மற்றும் ஒருவர் பேசி முடிக்கும் வரை யாரும் குறுக்கே பேசாமலிருப்பது ஆகியவைகளை தான் உணரந்ததாக கூறினார். அதற்கு காரணம் முன் மாதிரியாக நாம் கொள்வது ஊட்டி இலக்கிய முகாமின் ஒழுங்குகளைத்தான் என கூற வேண்டும். இருந்தாலும் துவக்கத்தில் ஏற்படும் அரைமணி நேர காலதாமத்தை தவிர்க்க வேண்டும் என தோன்றியது.

அடுத்த மாதம் தங்கமும் ரகுராமனும் பேசுவதாக சொல்லியிருக்கிறார்கள். ‘அண்டை மாநிலத்திலிருந்து’ சிவாத்மா கலந்து கொண்டு சிறப்பித்தார். கவிதா, சுதா மேடம், அறிவழகன் தனா ஆகியோர் சிற்றுண்டி கொண்டு வந்திருந்தார்கள். அதை உண்டு களைத்து புறப்பட்டோம்.

 

 

சிறியன சிந்தியாதான் – மகராஜன் அருணாசலம்

வெண்முரசு போன்ற பெருநாவல்களில் வரும் கதாபாத்திரங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று வளர்ந்து, மாறிக் கொண்டே, கதை நெடுக வரும் கதாபாத்திரங்கள், மற்றொன்று கதையின் ஒரு பகுதியில் மட்டுமே வரும், நிலையான கதாபாத்திரங்கள். இரண்டாவது வகைக்கு உதாரணமாக சிறு பாத்திரங்களான செவிலித்தாய், அணுக்கர்கள் முதல் பீஷ்மர், விதுரர் போன்றவற்றை குறிப்பிடலாம். முதல் வகைக்கு உதாரணமாக பெரும் கதைமாந்தர்களான துரியன், தருமன், திருதா போன்றவர்களை குறிப்பிடலாம். ஆனால் இக்கதாபாத்திரங்களின் வளர்ச்சி, மாற்றம் போன்றவை அவற்றின் அடிப்படை இயல்பில் ஏற்படும் சிறிய மாறுபாடுகள் மட்டுமே. அவையும் அந்தந்த கதாபாத்திரங்களின் அடிப்படை இயல்புக்கு இயைந்ததாக மட்டுமே இருக்கும். அதாவது அக்கதாபாத்திரங்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்படும்போதே அவற்றின் பின்னாளைய வளர்சிதை மாற்றங்களுக்கான வேர்களும் நமக்கு தெரியத் தரப்படும். பெரும்பாலான சமயங்களில் நாம் அவற்றை தவறவிட்டிருக்கலாம் அல்லது அந்த நேரத்தின் செயல்களை வைத்து பொருள் கொண்டிருக்கலாம். மொத்தத்தில் ஒரு கதாபாத்திரத்தின் இயல்புக்கு ஒவ்வாத ஒரு மாற்றம் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்படாது. ஒரு நேர்மையான கதாபாத்திரம் சட்டென்று ஊழலில் திளைக்காது. இந்தத் தன்மையை வெண்முரசு முழுவதிலும் நாம் நன்றாகக் காணலாம்.

இன்று அப்படி ஒரு வளர்ந்து மாறும் ஒரு முக்கியமான, பாரத நாயகர்களில் ஒருவரான துரியோதனனைப் பற்றி பேசப் போகிறோம். நான் படித்த, பார்த்த மகாபாரதங்களில் எல்லாம் துரியோதனன் ஒரு வில்லன். முழுக்க முழுக்க எதிர்மறைக் குணங்கள் மட்டுமே நிறைந்த ஒருவன். வெண்முரசின் மொழியில் சொன்னால் இருளின் தெய்வங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன். ஆனால் வெண்முரசு காட்டும் துரியோதனன் முற்றிலும் வேறானவன். அவன் எதிர்மறை நாயகனே இல்லை. நல்லவன், அன்பானவன், பெருந்தன்மையானவன், சற்றே அதீதமான ஆணவம்(ego) கொண்டவன், பேரரசன். அவன் பிறக்கையில் அவனைப் பற்றி எதிர்மறை எண்ணங்களே மிகுந்துள்ளன. ஆனால் அவனின் ‘கல்யாண குணங்கள்’ அவனை ஒரு அரசனாக மக்கள் மத்தியில் சென்று சேர்த்துள்ளன. அவனுடைய இந்த மாற்றம் வெண்முரசில் எவ்வாறு நிகழ்கிறது? இந்த மாற்றம் அவனுடைய இயல்புக்கு உகந்ததா என்பதே இன்றைய பேசுபொருள்.

யுக புருஷனின் வரவு:

வெண்முரசு துரியனின் பிறப்பை ஒரு வகை புராணத்தன்மையுடன் விவரிக்கிறது. வெண்முரசில் புராணத் தன்மையுடன் நிகழ்வுகளை உரைத்தல் என்பது ஒரு முக்கியமான உத்தி. அதாவது நடந்த நிகழ்வை அதோடு தொடர்புடைய ஒரு மாயத்தோடு விவரிப்பது. மாய எதார்த்தம் என்பதை விட புராணமாக்கல் என்பதே இந்த உத்திக்கு சரியாகப் பொருந்தி வரும். ஏனென்றால் புராணமாக்கல் என்பது நமது இந்திய வழி. வெண்முரசு புராணமாக்கலை இரு விதமாகப் பயன்படுத்துகிறது. ஒன்று நிகழ்ந்தவற்றை ஒரு வித புராணத் தன்மையுடன் கூறுவது என்பது அந்நிகழ்வு எவ்வாறு சமூகத்தின் மனதில் பதிந்து விட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க. மற்றொன்று ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை, நிகழ்வை ஒரு கவித்துவ உச்சத்திற்குக் கொண்டு சென்று அதன் வீரியத்தை இன்னும் பல மடங்காகப் பெருக்கி நமக்குத் தெரிவிக்க. துரியனின் பிறப்பின் புராணத் தன்மை முதல் வகைக்கு எடுத்துக் காட்டு. துரோணர் குசையின் மடியில் ஆறுதல் தேடும் நிகழ்வு, பீமனின் வாசுகி விஷம் அருந்துதல் போன்றவை இரண்டாம் வகைக்கு உதாரணங்கள்.

புராண கங்கையின் உள்ளே இருந்த, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பலியும், பூசனையும் கொள்ளும் கலியின் திறந்த கண்களைக் கண்டு ஊளையிட்டுக் கொண்டே ஊருக்குள் புகும் நூற்றியொரு நரிகளின் ஊடாக துரியனின் கரு நிகழ்வு நமக்கு அறியத்தரப்படுகிறது. அந்த நரிகளின் காலடித் தடத்தைத் தொடர்ந்து சென்ற ஒரு கோட்டைக்காவலன் சகுனியின் கனவை நேரில் கண்டு மரணமடைகிறான். நள்ளிரவில் சத்யவதியின் பட்டத்து யானையான உபாலன் அரண்மனை முற்றத்தில் வந்து சின்னம் விளித்து உயிரை விடுகிறது. காந்தாரியும் மலைப்பாம்பின் உடலில் புகுந்த யானையின் கனவின் ஊடாக துரியன் அவளுள் நுழைந்ததை உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறாள். அவள் கனவில் யானைகளும், பெரிய பெரிய காகங்களும் – யானைகளைத் தூக்கிச் செல்லும் காகங்கள் – வருவதாகக் கூறுகிறாள். சகுனி கூட தான் முதல் முறையாக ஒருவனிடம் பகடையில் தோற்றதாகக் கனவு கண்டதாகக் கூறுகிறான். எதிரிலிருக்கும் இருளில் இருந்து வந்த ஒரு கை உருட்டும் பகடையில் அவன் தோற்றதாக அந்த கனவு சொல்லப்படுகிறது. அவன் கருவில் வளர வளர நகரில் காகங்கள் வரத் துவங்குகின்றன. அஸ்தினாபுரம் அதுவரை காணாத ஒரு நீண்ட கோடையைச் சந்திக்கிறது. புராண கங்கையின் இருபது கிணறுகளைத் தவிர்த்து வேறு எங்கும் நீர் கூட இல்லை. ஒட்டுமொத்தத்தில் நிகழச் சாத்தியமான அனைத்து தீய குறிகளும் அமைகின்றன.

பொதுவாகவே துரியன் கலியின் அவதாரமாகப் பார்க்கப்படுகிறான். கலியின் அவதாரம் என்பதாலேயே அதை ஒரு எதிர்மறை அம்சமாக பார்க்கத் தேவையில்லை. ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் துவங்க வேண்டிய வேளையில் அதை நிகழ்த்துவதற்காக வரும் யுக புருஷன் என்ற வகையில் அவனைப் பார்க்க வேண்டும். இயந்திரங்களின் யுகம் முடிந்து கணிணி யுகம் துவங்கியதால் பில் கேட்சும், ஸ்டீவ் ஜாப்சும் கெட்டவர்கள் ஆகி விடுவார்களா என்ன?

வேழத்தின் வருகை:

துரியனின் பிறப்பில் மீண்டும் மீண்டும் வருபவை யானைகள். இதை வேழம் என்ற சொல்லால் வெண்முரசு குறிப்பிடுகிறது. வேழம் என்பது திருதாவையும் குறிப்பது. பெருந்தன்மையின், உள விரிவின் அடையாளம். வெண்முரசு முழுவதிலுமே துரியன் பெருந்தன்மையின் உச்சமாகவே காட்டப்படுகிறான்.

தருமனின் பிறப்பை அறிந்த அம்பிகை, அவனுக்கு முன்பே கரு நிகழ்ந்து பன்னிரண்டு மாதங்கள் கழிந்தும் வெளிவராத துரியனை, வலுக்கட்டாயமாகத் தலை திருப்பியாவது பிறக்க வைக்கவேண்டும் என்பதற்காக அனுபவம் மிக்க, முதிய மருத்துவரான மச்ச்சரை வரவழைக்கிறாள். அனைத்து மருத்துவச்சியரும் இளவரசர் நலமே, ஆனால் வெளிவர அவர் இன்னும் விழையவில்லை என்கிறாள். வெண்முரசு இந்த பிறத்தல் நிகழ்வை ஒரு கவித்துவமான உவமையால் பின்வருமாறு சொல்கிறது. “அரசி, கருவறையில் வளரும் உயிர் விதையிலிருந்து செடிமுளைப்பதுபோல வானோக்கி எழுகிறது. பத்துமாதம் அதற்கு விண் மட்டுமே உள்ளது, மண் இல்லை. கருமுதிர்ந்து அதற்குள் சித்தம் அமைந்ததுமே அது நான் என்று உணர்கிறது. நான் மண்ணில்வாழவேண்டியவன், மண்ணை உண்டு மண்ணால் உண்ணப்படவேண்டியவன் என்று அறிகிறது. அக்கணமே அதை மண்ணும் அறிந்துகொள்கிறது. கண்ணுக்குத்தெரியாத கைகளால் நிலமங்கை அதை இழுக்கிறாள். அது கீழ்நோக்கித் திரும்பி மண்ணை எதிர்கொள்கிறது. அதில் மானுடர் செய்வதேதும் இல்லை. மண்மகளும் உயிர்களும் கொள்ளும் விளையாட்டு அது”

காந்தாரியின் நாடியைப் பார்க்கும் மச்சர், “கஜராஜவிராஜித மந்தகதி என்று சொல்லலாம். யானைக்குரிய வல்லமையும் சீர்மையும் கொண்ட மென்னடை. கருவுற்றிருக்கும் பெண்ணில் இப்படியொரு நாடித்துடிப்பைக் கண்டதில்லை. நடைக்குதிரை, நொண்டிக்குதிரை, அஞ்சியகுதிரை என மூன்றே நான் கண்டிருக்கிறேன்… உடலில் குருதி வெளுக்கவுமில்லை” என்கிறார். இது மதங்க கர்ப்பம் தான். குழந்தை இன்னும் ஆறு மாதங்கள் கழித்தே வெளிவரும், அது வரை காத்திருக்க வேண்டியது தான் என்கிறார். “ஹேஹயகுலத்து கார்த்தவீரியார்ஜுனனும் புலஸ்தியகுலத்து ராவணனும் மதங்ககர்ப்பத்தில் பிறந்தனர் என்கின்றன எங்கள் நூல்கள். ஆயிரம் கைகள் கொண்டவன் கார்த்தவீரியன். பத்துமுகங்கள் கொண்டவன் ராவணன். இந்த மைந்தனும் அவ்வாறே ஆகலாம்.” என்றும் சொல்கிறார். தம்பியரின் ஆயிரம் கரங்களையும் சேர்த்து கார்த்தவீரியன் ஆயிரம் கரங்களையுடைவனான். தம்பியரின் பத்து தலைகளையும் சேர்த்து ராவணன் தசமுகன் ஆனான். அது போல் இவனும் நூறு தம்பியரின் கரங்களைக் கொண்டு சதபாகு ஆவான் என்றும் சொல்கிறார்.

யானை என்பது நமது மரபில் தாமச குணத்தின் குறியீடாகவும் குறிப்பிடப்படுகிறது. வாரணவதத்தின் யானையைக் கொன்ற சிவன் தாமச குணத்தைக் கொல்பவனாகவே வழிபடப்படுகிறான். உண்மையில் துரியனின் மற்றொரு முக்கியமான குணம் அவனது தாமசம். அவனது வாழ்வின் பெரும்பகுதி அவன் பெரியாதாக எதுவுமே செய்யாமல் இருப்பதாகவே அமைகிறது. அவனது அரசை விதுரரும், பானுவும் கவனித்துக் கொள்கிறார்கள். அவனுடைய அரசு சூழ்தல் உட்பட அந்தரங்க முடிவுகளை எடுக்க கர்ணன் உடனிருக்கிறான். முழுமையான தாமச குணத்தோடு வாழ்கிறான் அவன்.

மகா குரோத ரூபாயன்:

காந்தாரியின் கனவில் வரும் யானைகளைத் தூக்கிப் போகும் காகங்கள் மற்றொரு முக்கியமான குறியீடு. காகங்கள் என்பவற்றை பித்ருக்கள், மூதாதையர் என்று கொண்டால் குருகுல மூதாதையர் அனைவரும் வந்திருந்து வாழ்த்த துரியன் பிறக்கிறான் என்று சொல்லலாம். ஆனால் இங்கே காகங்கள் அமங்கலத்தின் அடையாளமாகவே எடுத்தாளப்பட்டுள்ளன. நம் தாந்த்ரீக மரபில் தசவித்யா அல்லது மகா வித்யாக்கள் என்று காளியின் பத்து அவதாரங்கள் உள்ளன. அவற்றில் ஒரு தெய்வம் ‘தூமவதி’. இந்த தூமவதியின் வாகனம் காகம். தூமவதி விதவையாகவே குறிப்பிடப்படுகிறாள். ஒருமுறை பெரும்பசியால் சிவனையே உண்டவள் இவள் என்பதும், தட்சனின் யாகத்தில் எரிந்த சதியின் எஞ்சிய புகை – தூமம் – இவள் என்பதும் இவளைப் பற்றிய தொன்மங்கள். கரிய நிறமுடைய, இருள் தெய்வங்களில் ஒன்றான இவள் குரோதத்தின் வடிவம். அவள் சிவனையள்ளி உண்ட நிகழ்வு அவளின் முழு குரோதத்திற்கு சான்று.

“சைவத்தின் வலநெறியினர் பெருமானின் ஒளிவடிவை உருவகித்துக்கொள்கிறார்கள். இடநெறியினர் இருளே முடிவற்றதும், அழிவற்றதும் என்று எண்ணுகிறார்கள். மானுட அகத்தில் அவ்விருளே காமகுரோதமோகம் என நிறைந்திருக்கிறது. ஒளியை மானுடன் உருவாக்கி நிலைநிறுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது. இருளோ இயல்பாக அங்குள்ளது. ஒளியை வழிபடுபவன் இருளுடன் போரிடுகிறான். இருளை அறிபவனுக்கு ஒளி துணைநிற்கிறது. இருளாகவும் ஒளியாகவும் இருப்பவனை எவ்வழியில் அறிந்தாலும் விடுதலையே என்கிறார்கள் இடநெறியினர்.

காமம் குரோதம் மோகம் என்னும் இம்மூன்று இருள்களில் காமம் இன்னொரு ஆன்மாவைச் சார்ந்தது. மோகமோ புறவுலகைச் சார்ந்தது. எதையும் சாராமல் தன்னுள் தானென நிறைந்திருப்பது குரோதமேயாகும். எனவே குரோதத்தை அறிபவன் சிவத்தை அறிகிறான். குரோதம் அனைத்தையும் அவியாக்கி எரிந்தெழும் நெருப்பு. எரிதலின் பேரின்பம் அது. எரிதலின் உச்சம் அணைதலே. குரோதம் தன்னைத் தானழித்துக்கொள்கையிலேயே முழுமை கொள்கிறது.”, என்கிறது வெண்முரசு.

துரியன் குரோதத்தின் உச்சம். அவன் வாழ்வை இயக்கும் சக்தியாகப் போவது இந்த குரோதம் தான். இது ஒரு வகை எதிர்மறை உச்சம். உண்மையில் மேற்கூறிய வரிகள் துரியனின் மொத்த வாழ்வையும் வரையறுப்பவை. அவன் குரோதத்தால் நிறைபவன். தூய இருளை அறிபவன். இருளை அறிபவனுக்கு ஒளியின் மைந்தன், கர்ணனும், சூரிய சந்திரர்களும் – பானு மதி – துணை நிற்கிறார்கள். மிகச் சுருக்கமாக வண்ணக்கடலிலேயே ‘இருளை அறிபவனுக்கு ஒளி துணைநிற்கிறது’ என்று வெண்முரசு சொல்லிவிடுகிறது.

சூதர் சொல்:

துரியனின் மண் நிகழ்வு தாமதமாகிக் கொண்டிருக்கையில் அம்பிகை அவனைக் குறித்த மக்களின் அச்சம் அம்பாலிகையால் உருவாக்கி பரப்பட்டது எனக் குற்றம் சாட்டுவாள். அபாலிகையோ, குந்தியோ இத்தகைய சொற்களுக்குப் பின்னால் இருக்கலாம் என்று யூகிக்க வாய்ப்புகள் உள்ளன. உண்மையில் காட்டில் பிறந்த தருமனை தர்மதேவனின் புதல்வன் என்று கூறி நிலைநிறுத்தியது இயல்பான ஒரு விஷயமாக இருக்கச் சாத்தியங்கள் மிக மிகக் குறைவே. பாண்டுவால் அரசிகள் தாய்மை கொள்ளச் சாத்தியம் இல்லை என்பதைத் தெரிந்தே அனைவரும் உள்ளனர். அப்படியிருக்க பாண்டுவின் புதல்வர்கள் நியோக முறையிலேயே பிறந்திருக்க இயலும் என்பதும் அனைவருக்குமே தெரிந்த விஷயம். இத்தனையையும் மீறித் தான் அவர்களைப் பற்றிய சூதர் பாடல்கள் புனையப்படுகின்றன. அவர்களைப் பற்றி நேர்மறையான விஷயங்கள் மட்டுமே பகிரப்படுகின்றன. மாறாக நரிகள் ஊருக்குள் நுழைவது, காகங்கள் ஊருக்குள் வருவது போன்ற இயற்கை நிகழ்வுகளின் எதிர்மறை அம்சங்கள் அனைத்தும் துரியன் மீது ஏற்றப்படுகின்றன. உண்மையில் அஸ்தினபுரி பெருங்கோடையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஊரில் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களும் வற்றிய நிலையில் புராண கங்கையின் 20 கிணறுகள் மட்டுமே நீருடன் இருக்கின்றன. சுற்றிலும் காடுகளும் கருகும் நிலையில் நீரும், உணவும் இருக்கச் சாத்தியமான நகருக்கு நரிகளும், காகங்களும் வருவது இயல்பே. ஏனென்றால் இவை இரண்டும் மிச்சங்களைத் தின்பவை. எனவே எச்சூழ்நிலையிலும் உயிரைத் தக்க வைத்துக்கொள்ளும் திறன் படைத்தவை. அவை ஊருக்குள் வருவது என்பது இயற்கையின் வழி.

சகுனி சொல்வது போல அஸ்தினபுரியினர் தாம் அனுபவிக்கும் அனைத்துத் துயரங்களையும் துரியன் மீது ஏற்றி விடுகின்றனர். சூதர்களும் அவற்றையே பெருக்கிப் பாடுகின்றனர். துரியன் கருவாசல் திறந்து வெளிவருகையில் அஸ்தினபுரிக்கு வந்த அனைத்துக் காகங்களும் ஈற்றரைக்கு வருகின்றன. தென்திசையில் இருந்து புழுதியை வாரித் தூக்கிக்கொண்டு ஒரு பெரும்காற்று அவ்வறைக்குள் சுழன்று வீசுகிறது. அவன் மண் நிகழ்ந்ததும் அனைத்துக் காகங்களும் சொல்லிவைத்தாற்போல் ஊரை விட்டுக் கிளம்பிவிடுகின்றன. மீண்டும் தென்திசை – அஸ்தினபுரியின் மயான திசை. மேலும் தென்திசை நீத்தாரின், பித்ருக்களின் திசையும் கூட. நல்லதாகச் சொல்வதென்றால் துரியன் மண் நிகழ்கையில் அனைத்து மூதாதையரும் வந்திருந்து வாழ்த்தினர் என்று பாடியிருக்கலாம். ஆனால் தெற்கே இருந்த மயானமும், தூமவதியும் தான் மக்களுக்கு நினைவுக்கு வருகின்றனர்.

அஸ்தினபுரியில் இருந்து வெகு தொலைவில் பிறக்கும் தருமனைப் பற்றிய நல்ல விஷயங்கள் தொலைவைத் தாண்டி எட்டுகின்றன. அது நன்மையின் பலம். நல்லவை பரவ தொலைவு ஒரு தடையில்லை. நல்லவை மட்டுமே தூரம் கடக்கும். தீயவை குறுகிய தொலைவுக்கே பரவும் சக்தி கொண்டவை. தூரம் குறைய குறைய அவற்றின் வீச்சும் அதிகரிக்கும். துரியன் விஷயத்தில் இதை நாம் கண்கூடாகக் காணலாம். இறுதி வரையிலும் அவனால் விளைந்த தீயவை அனைத்தும் அவனையண்டிய தீய சக்திகள் அவனருகிலேயே இருந்தமையே காரணம். கணிகர் ஒரு சிறந்த உதாரணம்.

உண்மையில் வேழங்கள் துரியனின் பெருந்தன்மையின் அடையாளம்  என்றால் குரோதத்தின் குறியீடான காகங்களால் அந்த யானைகள் தூக்கிச் செல்லப்படுவது குரோதம் அவன் பெருந்தன்மையைக் கொண்டுசெல்வதையே குறிக்கிறது. (நன்றி: மாரி)

தந்தையாதல்:

முதன்முறையாக திருதா தன் மைந்தனைப் பார்க்கச் செல்கிறார். உள்ளே மைந்தன் இருக்கிறான். அறை வாயிலில் தயங்கி நிற்கிறார் திருதா. வெண்முரசின் வாழ்வியல் கட்டங்களில் சிறப்பான ஒரு இடம் இது. இன்றும் முதன்முதலாக தலைச்சன் பிள்ளையைத் தூக்கப் போகும் ஒரு தந்தைக்கு வரும் அதே தயக்கம். இங்கே கூடுதலாக தான் விழியிழந்தவன் என்னும் கழிவிரக்கம் கொண்ட ஒருவர். எப்பேற்ப்பட்ட தயக்கம் அது?! அப்படி தயங்கும் மகனை செல்லமாக பின்னிருந்து தள்ளி உள்ளே அனுப்புகிறாள் அம்பிகை. இத்தகைய இடங்களே வெண்முரசை மனதிற்கு மிக மிக அணுக்கமாக்குகிறது.

உள்ளே செல்லும் திருதா தன் மைந்தனைத் தடவித் தடவிப் பார்க்கிறார். விரல்களாலே மகனை அறிகிறார். அதற்கு முன்பே மைந்தனைப் பார்த்துச் சென்ற சத்யவதி தன்னைக் கண்டவுடன் திரும்பிப்பார்த்த குழந்தையின் உடல் மொழியில் இருந்த அசாதாரணத்தாலும், மைந்தனின் வாயில் முளைத்த பற்களாலும், ஏற்கனவே சூதர்களால் பாடப்பட்டு மக்கள் மத்தியில் நிலைபெற்று விட்ட எதிர்மறை செய்திகளாலும், நிமித்திகர்கள் குறிப்பிட்ட தீய அறிகுறிகளாலும் சிந்தாகூலமடைந்து தனியறையில் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்கிறாள். மைந்தனைத் துறந்து விடுவதே அஸ்தினபுரிக்கு நல்லது என அவளும் எண்ணுகிறாள். இந்த நிலையில் திருதாவிடம் இதை எப்படித் தெரிவிப்பது எனக் குழம்பியிருக்கும் விதுரர் முதன்முதலாக மைந்தனைப் பார்க்கச் செல்லும் திருதாவுடன், விழியிழந்த இசைச் சூதரான தீர்க்க சியாமரையும் உடனழைத்துச் செல்கிறார். தீர்க்க சியாமருக்கும் சத்யவதிக்கு கிடைத்த அதே அனுபவம் கிடைக்கிறது. அவர் மிகத் தெளிவாகவே குழந்தையைப் பார்க்கிறார். இன்னும் தெளிவாக குழந்தை அவரை நோக்கித் திரும்பியதையும், அதன் வாயிலிருந்த பற்களையும் காண்கிறார். விழியிழந்த அவருக்கு துரியன் கலியின் அவதாரமாகவே காட்சி கொடுக்கிறான். அதில் நினைவிழந்தவர் அவ்வாறே முக்தியடைகிறார்.

மரபை மீறி, விழியிழந்த ஆசிரியர் என்பதற்காகவே அவரின் இல்லம் வரை சென்று மரியாதை செலுத்துகிறார் திருதா. தீர்க்கசியாமரின் மரணமும், அவரின் இல்லம் அமைந்த அஸ்தினபுரியின் சூதர் தெரு வரையிலான பயணமும் திருதாவுக்கு மைந்தன் பிறப்பைச் சுற்றி ஏற்பட்டிருக்கும் கருத்தியல் நிலைகளையும், அஸ்தினபுரியின் எண்ணத்தையும் ஓரளவுக்குப் புரிய வைக்கின்றன. ஒரு ஷத்ரியனாக, அஸ்தினபுரியின் அரசனாக நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்கக் கூடிய முடிவை எடுக்க அவர் மனதளவில் தயாராகிறார். திருதாவை அம்முடிவுக்குத் தள்ள விதுரருக்கு தீர்க்கசியாமரின் சிதையேறும் சுடுகாட்டில் அவர் சந்திக்கும் சார்வாகன் காரணமாகிறான். விதுரரிடம், “மக்கள் அவனை அரசனாக ஏற்கப் போவதில்லை. மக்கள் வெறுக்கும் அரசன் மக்களையும் வெறுக்கிறான். அவர்கள் மேல் வாளை வைக்கிறான்.” என்று எச்சரிக்கிறான்.

தமையனின் மனதை உடைப்பதைப் பற்றிய தயக்கங்களுடன் இருந்த விதுரரும் திடமாக துரியன் காட்டிலே சென்று விடப்பட வேண்டியவனே என்ற முடிவுக்கு வருகிறார். அதையே திருதாவிடம் தெரிவிக்கவும் செய்கிறார். திருதாவும் பெருமூச்சோடு துரியனைக் காட்டில் கொண்டு சென்று விடச் சம்மதிக்கிறார். அந்த நேரத்தில் தெய்வீகக் குறுக்கீடு போல உள்ளே நுழைகிறாள் அம்பிகை. திருதாவிடம் அவர் பிறந்த சமயத்திலும் அவரின் விழியின்மையைக் காரணமாகக் கூறி அவரைக் காட்டில் விடச் சொன்னதையும், ஒரு தாயாக அதைத் தான் தடுத்ததையும் சொல்கிறாள். மிகச் சரியாக திருதாவின் பலவீனமான விழியின்மை பற்றி பேசுகிறாள். மன்னனாக முடிவெடுத்த திருதா அந்நொடியில் அவர் வாழ்வில் என்றென்றைக்குமாய் இருக்கப்போகும் தந்தையாக மாறுகிறார். இதோ அவரின் சொற்கள் – “விதுரா, இந்த நகரும் நாடும் உலகும் ஒன்றுசேர்ந்து வெறுக்கும்படி என் மைந்தன் செய்த பிழை என்ன? ஒருவன் பிறக்கும்போதே வெறுக்கப்படுகிறான் என்றால் அவனைவிட எளியவன் யார்? அவனுக்கு அவனைப்பெற்ற தந்தையின் அன்பும் இல்லையென்றால் அதை தெய்வங்கள் பொறுக்குமா? யார் என்ன சொன்னாலும் சரி நான் என் மைந்தனை கைவிடப்போவதில்லை. ஆம், நாங்கள் பழிகொண்டவர்கள். நாங்கள் வெறுக்கப்பட்டவர்கள். ஆகவே தன்னந்தனிமையில் நிற்பவர்கள். எங்களுக்கு வேறு எவரும் இல்லை. தெய்வங்கள்கூட இல்லை”

ஆன்மாவின் தோழன்:

இந்த இடத்தில் ஒரு சின்ன விலகல் – தலைப்பில் இருந்து. அம்பிகை வந்து திருதாவைச் சந்திக்கும் வேளை, ஒரே ஒரு கணம் விதுரரின் கண்கள் விப்ரரைத் தொட்டுச் செல்கின்றன. ஆம், அவர் தான் அம்பிகையை அங்கே வரவழைத்தவர். விப்ரருக்கு இத்தகைய எந்த உத்தரவும் இல்லை. அம்பிகை கூட அவருக்கு அப்படி எதையும் தெரிவித்திருக்கவும் இல்லை. இருப்பினும் மிகச் சரியாக தன் தலைவன் தன் ஆன்மாவைக் கொன்று எடுக்க வேண்டிய ஒரு முடிவில் இருந்து அவனைக் காக்க ஒரு அணுக்கன் செய்யும் செயலாகவே இதைக் காண வேண்டும். அதனால் தான் பிறிதொரு இடத்தில் விதுரர் ‘விப்ரர் அவரின் ஆன்மாவின் தோழர்’ என்கிறார். தற்போதைய வெய்யோனில் கூட வயதான விப்ரரைப் பற்றிச் சொல்கையில் திருதா தான் விப்ரரைத் தாங்கிச் செல்வதாக வரும். வெண்முரசின் சிறப்புகளில் ஒன்று இத்தகைய சிறு பாத்திரங்கள் வரலாற்றுக்கு அளிக்கும் பங்களிப்பு.

அமுதில் விளைந்த நஞ்சு:

துரியனுக்கு பெயர் கோள் விழா நடந்த இரவு, ஒரு முதுநாகினி காந்தாரியைக் காண வருகிறாள். தங்கள் அரசன் வாசுகி பிறந்த அதே ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த இவனால் தங்கள் இடமான காண்டவ வனம் அழியாமல் காக்கப்படலாம் என்கிறாள். அதற்காக துரியன் காக்கப்பட வேண்டும் என்கிறாள். காந்தாரியிடம் அன்றைய இரவில் பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறை வரும் அமுத வேளையில் அவள் மைந்தனை முதன் முறையாக, முழுமையாக, உடலில் துணியில்லாமல் பார்க்க வேண்டும் என்கிறாள். அவள் பார்வையால் வருடப்பட்ட அவனுடலை எந்த ஆயுதமும் தாக்க இயலாது என்றும் கூறுகிறாள். ஏற்கனவே அவள் முலைப்பாலில் நீராடி வழுக்கும் உடலுடன் இருக்கும் துரியனின் ஆடைகளை அவசர அவசரமாக கழற்றுகிறாள் காந்தாரி. மைந்தனைக் கண் கட்டு அவிழ்த்துப் பார்க்கும் அவள், மீண்டும் கண்ணைக் கட்டிய பிறகே அவனுடலின் இடத் தொடை காற்றால் அடித்து வரப்பட்ட துணியால் மறைந்ததை அறிகிறாள். அவன் இடத்தொடையைப் பாதுகாக்கும் நூறு தம்பியர் அவனுக்கு வேண்டும் என்று அவள் சகோதரிகளுக்கு ஆணையிடுகிறாள் அவள். அவ்வாறாக அவனுடலின் ஒரே பலவீனமான பாகமாக அந்த இடத்தொடை அமைகிறது. அதிலும் ஒரு வருங்காலத்திற்கான குறிப்பை வைக்க வெண்முரசு தவறவில்லை. அந்த இடத் தொடை மறைக்கக் காரணமானது காற்று. இதே காற்றின் மைந்தன் தானே பீமன். அவனால் தானே இவனும் முடிவுறப் போகிறான். நாம் பொதுவாக அறிந்த பாரதத்தில் போரின் போதே துரியன் தாயின் முன் திசையாடையுடன் வருவதும், கிருஷ்ணனின் தூண்டலால் தொடைப் பகுதியை மட்டும் வாழையிலையால் மறைத்துச் சென்றதும் வரும். ஆனால் அது ஒரு வித தொன்மமே. மிக அபாரமாக இவ்வாறு மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. பாரத மறு ஆக்கம் என்ற சவாலில் ஜெ அனாயாசமாக வென்ற இடங்களுள் இதுவும் ஒன்று.

இந்த இடத்திலும் விதி துரியனுக்கு எதிராக சற்று விளையாடுகிறது. மைந்தனின் தொடை மறைக்கப்பட்டதை உணர்ந்த காந்தாரி ஆவேசமாக இனி என் மகனின் பெயர் சுயோதனன் அல்ல துரியோதனன் என்று சொல்கிறாள். யோதனக் (யுத்தத்தில்) கலையில் சிறந்தவன் என்ற பொருள் படும் சுயோதனன் என்ற பெயரை அவனுக்கு இட்டவர் பீஷ்மர். அப்பெயர் அவனைச் சுருக்கி விடுகிறது என்பதாலும், மைந்தன் எவராலும் வெல்லப்படக் கூடாது என்ற அன்னையுள்ளத்தின் ஆசையாலும் அவள் யுத்தத்தில் வெல்வாரற்றவன் – துரி யோதனன் என்று பெயரிடுகிறாள். ஆனால் துரியோதனன் என்பதை தீய போர்க்கருவிகள் கொண்டவன் என்றும் கூட மொழி பெயர்க்கலாம் என்று கூறும் குந்தி, மக்கள் அப்பெயரையே விரும்புவர் என்கிறாள்.

நாகம் என்னும் பொன் பட்டு நூல்:

தன் பெற்றோரைத் தவிர சுற்றி இருக்கும் அனைவராலும் அச்சத்தோடும், இவன் அழியவேண்டும் என்ற எண்ணத்தோடும் பார்க்கப்படும் ஒருவனின் உலகு எவ்வாறு இருக்கும்? பாறைகளால் ஆனதாகத்தானே!! வெண்முரசு துரியனின் உலகு பாறைகளால் ஆனது என்றே சொல்கிறது. ஏனென்றால் பாறைகள் அசைவற்று இருப்பவை அல்ல, மாறாக தன்னைச் சூழ்ந்த காலப் பெருவெளியின் விசையை தன் முழு அக ஆற்றலாலும் எதிர்த்து நிற்கும் சமநிலைப் புள்ளியே அவற்றின் அசைவின்மையாக வெளிப்படுகிறது. துரியன் தன் தந்தையிடம் இருந்து பெற்ற பெருந்தன்மையாலேயே அவர்களை எதிர்த்து நின்றுகொண்டிருக்கிறான். எனவே பாறைகளின் தனிமை அவனிடம் கூடி விட்டிருப்பது இயற்கை தானே. தன்னைப்போலவே இருக்கும் பாறைகளைப் பிளப்பதே துரியனின் இளமைக்கால பொழுதுபோக்காகிறது. கற்களைப் பற்றி எண்ணியபடி, அவை தனக்களிக்கும் சவாலை எண்ணியபடி, தான் வெல்ல வேண்டிய முடிவிலா கல் நிறைகளை எண்ணியபடி, தனக்குள் ஆழ்ந்திருந்த துரியன் ஒரு நொடியில் வெடிக்கிறான். நமக்கே நாம் செய்து முடிக்கவேண்டிய சவால்கள் நம் கண் முன் நிறைந்து நிற்கும் போது வருமே ஒரு ஆத்திரம், அதைப் போன்ற ஒன்று. தன் தம்பியரை கற்களாகக் காண்கிறான். அடிக்கிறான். அவன் கற்களை அடிக்கும் போது கண்களை மூடிக்கொள்கிறான். விழியின்மையே ஆற்றல் என உணருகிறான். எனவே தான் தம்பியரைக் கூட அடிக்க முடிகிறது. முதல் அடி துச்சாதனன் மீது தான். அப்போது அதை வாங்கிக் கொள்பவன், பிற தம்பியரையும் அடிக்கத் துவங்குகையில் மொத்த அடிகளையும் தான் ஒருவனாகவே வாங்கத் துவங்குகிறான்.

தம்பியரை அடித்து ஓய்ந்து அயர்ந்து தூங்கி விடும் துரியன் அதன் பிறகு நடு இரவில் விழிக்கிறான். தன் தேரில் மேற்கு ஏரிக்குச் செல்கிறான். எந்த ஏரியின் வழியாக கலி உள்ளே வந்ததோ அந்த எரி. அங்கே கார்க்கோடகனைச் சந்திக்கிறான். அங்கே அவன் தன் முழு முதல் எதிரியான பீமனைப் பற்றி அறிகிறான். மேலும் கார்க்கோடகன் “நீ அஞ்சுவது உன் பெருந்தன்மையை. உன்னுள் நிறைந்துள்ள பேரன்பை. உன் வலிமையையெல்லாம அழிப்பது அதுவே. குருகுலத்தோன்றலே, சொல். ஒவ்வொரு முறை சினம்கொள்ளும்போதும் ஏன் இடது தொடையை ஓங்கியறைந்து கொள்கிறாய்?” துரியோதனன் “தெரியவில்லை. அது என் பிறவிப்பழக்கம்” என்றான். “ஏனென்றால் உன் தாயின் பேரன்பெல்லாம் திரண்டு நிறைந்திருக்கும் இடம் உன் இடது தொடை. உன் ஆற்றலெல்லாம் ஒழுகிப்போகும் மடையும் அதுவே.” என்று மிகத் தெளிவாகவே அவனை வரையறுத்து விடுகிறான்.

கார்க்கோடகன் வரும் அத்தியாயம் வரை துரியனிடம் பெருந்தன்மை உள்ளது என்பது நமக்கெல்லாம் அறியத் தரப்படவில்லை. ஆனால் அதன் பிறகு அவன் பெருந்தன்மையும், பேரன்பும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. துரியன் கார்க்கோடகனைச் சந்திப்பதில் மேலும் ஒரு நுட்பம் உள்ளது. கார்க்கோடகன் துரியனைச் சந்திக்கும் அந்த இரவின் முன் குந்தியிடம் அவள் முதல் மகன் கர்ணனைப் பற்றி கூறி, அவள் அவனை வேண்டாம் என்று முடிவெடுத்த நிகழ்வு நடந்திருக்கிறது. அவ்வகையில் கர்ணனுக்கும், துரியனுக்குமான உறவின் ஒரு முன்னறிவிப்பாக கார்க்கோடகனின் சந்திப்பைக் காணலாம். இவர்களிடையேயான உறவு தான் பீமனின் கர்ணன் மீதான வெறுப்புக்கும் அடிப்படையாகப் போகிறது. அவ்வகையில் இந்த சந்திப்பு அல்லது கனவு மிக மிக முக்கியமானதாகிறது. வெண்முரசின் வடிவ ஒருமைக்கும் சான்றாகிறது.

விலக்கம் தந்த விழைவு:

கார்க்கோடகன் உடனான சந்திப்பிற்குப் பிறகு துரியன் மேலும் மேலும் தன்னுள் ஆழ்ந்தவனாக ஆகிறான். சில நாட்களில் பாண்டவர் ஐவரும், குந்தியும் அஸ்தினபுரிக்கு வருகின்றனர். அடைக்கலமாக வந்தவர்களிடம் முழு அன்போடு நடந்து கொள்கிறான் துரியன். அவன் பேரன்பும், பெருந்தன்மையும் வெளிப்படையாக வெளிப்படும் முதல் தருணம் என்று இதைச் சொல்லலாம். பாண்டவர்களிடம், குறிப்பாக பீமனிடம் அவன் கொள்ளும் பேரன்பு வாசகர்களாகிய நம்மையே விம்மச் செய்வது. இருவருமே இணைபிரியாதவர்கள் ஆகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கானாடலில் அதுவும் துரியன் உயிரைக் காத்த நிகழ்வால் பிரிகிறார்கள் என்பது முதல் பார்வைக்கு சற்று அந்நியமாகத் தான் தெரியும். ஆயினும் துரியனின் குணாதிசயத்தின் முழுமையான சித்திரத்தை நமக்கு  அளித்த தருணம் அது. அவர்களின் பிரிவுக்கு அந்நிகழ்வு மட்டும் தான் காரணமா? துரியனுக்கும் பீமனுக்குமான உறவின் நிகழ்வுகளில் வரும் மிகச் சிறிய, மிக மிகச் சிறய விரிசல்களை வெண்முரசு தெளிவாகவே நமக்கு அறியத்தருகிறது.

சந்திக்கும் முதல் தருணத்திலேயே திருதாவுடன் தோள் கோர்த்து தன் பலத்தைக் காட்டும் பீமனுக்குத் தன் கதாயுதத்தை அளிக்கிறார் திருதா. இது தான் துரியனிடம் ஏற்பட்ட முதல் விலக்கம். அவனிடம் ததும்பும் பெருந்தன்மையினால் அவன் அதை உணரவும் இல்லை வெளிக்காட்டவும் இல்லை. ஆனால் மிகச்சரியாக அவ்வுணர்வை துச்சாதனன் அவ்விடத்தில் பிரதிபலிக்கிறான். அந்த விலக்கத்தின் வெளிப்பாடாகவே பீமனை உடல் கோர்க்க அழைக்கிறான் துரியன். அக்களிப்போரின் இறுதியில் நிகர் நிலை நின்றாலும் பீமனே இருவரிலும் அதிகமாக சோர்வடைந்தவன். அவ்வகையில் துரியனே அதில் வென்றான் எனலாம். பீமனை அள்ளி அணைக்கும் துரியன் யாருக்காகவாவது களத்தில் உயிர் துறப்பேன் என்றால் அது உனக்காகவே என பீமனுக்கு வாக்களிக்கிறான்.

இரண்டாவது விலக்கம் பீஷ்மரின் முன். நூற்றியாறு பெயரர்களைப் பெற்ற முதுதாதை எவ்வளவு மகிழ்வைப் பெற்றிருக்க வேண்டும்? ஆனால் எதுவும் இல்லாமல், எதோ பிடிக்காத நாடகத்தை வலுக்கட்டாயமாக பார்க்க வைக்கப்பட்ட முதியவராக அவர் அவர்கள் முன் அமர்ந்திருக்கிறார். முதலில் அவரிடம் ஆசி வாங்கிய தருமனை அவரின் உள்ளிருந்த மலைக்கங்கன் வெறுத்தான் என்றே சொல்கிறது வெண்முரசு. அடுத்ததாக துரியனும், பீமனும் ஆசி வாங்க வருகிறார்கள். துரியனையும் சம்பிரதாயமாகவே வாழ்த்தும் பீஷ்மர் முன் பீமன் குனிகையில் அவன் மடியில் இருந்த நனைந்த தாழம்பூவில் இருந்து ஒரு நாகக்குஞ்சு வெளியே வருகிறது. அனைவரும் அஞ்சி, பின் அதைக் கொல்லத் தொடர்கையில் பீஷ்மர் மிக ஆர்வமாக அந்த நாகம் எவ்வாறு வந்தது என பீமனிடம் வினவுகிறார். உண்மையில் அவருள் இருந்த மலைக்கங்கனுக்கு உவப்பான ஒரு பெயரனாக பீமனை அவர் எண்ணிய தருணம் அது. அந்த இடத்தில் துரியனின் அகங்காரம் முதன்முறையாக, வெளிப்படையாக அவன் அறியும் வண்ணமே புண்படுகிறது.

இங்கும் வெண்முரசு ஒரு அபாரமான கதையொருமையை வெளிப்படுத்தத் தவறவில்லை. அந்த நாகத்தை வெளியில் விடுவது பீமன். அந்நாகம் சென்று மறைவதோ அவரின் ஆயுதசாலையின் ஆயுதக் குவியலிடையே. வெறுப்பிற்கான முதல் அச்சாரம் இடுவது பீமனே. துரியனிடம் தோற்ற நிகழ்வால் வந்த வஞ்சம் காரணமாயிருக்கலாம். வஞ்சம் என்பது குழந்தைகளிடையே விளையுமா என்றால் விளையும் என்றே சொல்ல இயலும். அவர்களின் வயதளவே அந்த வஞ்சத்தின் காரணமும் விளைவும் இருக்கும். எப்படியாயினும் துரியனிடம் குரோதத்தைத் தூண்டிய முதல் நிகழ்வாக இது ஆகிவிட்டது. இந்த வஞ்சம் தான் வளர்ந்து தான் புகுந்து கொண்ட ஆயுதங்களாலேயே அழிவைக் கொண்டு வருகிறது. நாகம் என்பது வஞ்சம் மட்டுமல்ல, விழைவின் குறியீடாகவும் நமது மரபில் குறிப்பிடப்படுகிறது. அவ்வகையில் முந்தியிருக்க வேண்டும் என்ற துரியனின் விழைவைத் துரத்தும் ஆயுதங்களால் அவனும் ஆயுதம் எடுக்கத் தூண்டப்பட்டான் என்றும் இந்நிகழ்வை வாசிக்கலாம்.

பெருந்தன்மை என்னும் பலவீனம்:

இவ்வளவு தூரம் தன் ஆணவம் புண்பட்ட பின்னும் துரியன் தன் பெருந்தன்மையினால் அதைத் தாண்டி வருகிறான். எப்போதும் போல் பீமனுடனும், தம்பியருடனும் மகிழ்ந்தே இருக்கிறான். இந்நிலையில் கிருபரின் பாடசாலையில் மாணவர்களுக்கான ஆயுதத் தேர்வின் தினம் வருகிறது. தன்னை விட ஒன்றரை மடங்கு உயரமான நிலை வில்லைத் தூக்கியதோடு மட்டுமல்லாமல் அதை நாணேற்றி அம்பும் எய்கிறான் பார்த்தன். உடனே துரியன் அவனை

தூக்கிக் கொண்டு கொற்றவை ஆலயத்தில் வைத்து அவனுக்கு கண்ணேறு கழிக்கிறான். திருதா அது தான் செய்ய வேண்டியது என்றும் அதை அவன் செய்கிறான் என்றும் பெருமைப்படுகிறார். பார்க்கும் அனைவரிடமும் ஒரு அபாரமான மன எழுச்சியைத் தூண்டிய இந்நிகழ்வு பீஷ்மரிடம் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இதன் பிறகு துரியனும், பீமனும் கதை கோர்க்கிறார்கள். இருவரும் கிட்டத்தட்ட சமநிலையில் போர் புரிகிறார்கள். இந்த களிப்போர் நடக்கையில் பீமனிடம் ஒரு முறையாவது பின்வாங்குமாறு கண்களால் மன்றாடுகிறார் விதுரர். எனினும் அது நடப்பதில்லை. ஏற்கனவே துரியனிடம் மல்யுத்தத்தில் தன்னை இழந்தவன் அவன். எப்படி பின்வாங்குவான்? மாறாக பீமன் துரியனின் வலக்கை கட்டை விரலைச் சிதைத்து விடுகிறான். அந்த வலியைப் பொருட்படுத்தாது கதையை இடக்கைக்கு மாற்றிக் கொண்டு முன்னேறி தாக்கும் துரியனின் வலிமை முன் தடுமாறி கதையை ஊன்றி தன்னைச் சமநிலைப் படுத்திக்கொள்கிறான் பீமன். பீமன் கதையை ஊன்றிய சமயத்தில் மிக எளிதாக துரியன் அவனை வீழ்த்தியிருக்க இயலும். அது முழுக்க முழுக்க யுத்த நியதிக்கு உட்பட்டதே. எனினும் தன்னில் ஊறும் பெருந்தன்மையால் அவன் அதைச் செய்யவில்லை. மாறாக பீமனுக்கு அவன் தவறைப் புரிய வைத்து மீண்டும் கதை கோர்க்கிறான். அவன் உள்ளூறும் இந்த பெருந்தன்மையாவது பீஷ்மரை அசைக்கும் என்றும் ஆசை கொள்கிறான் சிறுவனான துரியன். அதுவும் அவனுக்கு ஏமாற்றமே. அந்த களத்தில் விழுந்த அந்த ஒரு துளி ரத்தம் அவனுள் குரோதத்தைத் தூண்டத் துவங்கி விடுகிறது.

கானடலில் வந்த விரிசல்:

மேற்கூறிய மூன்று சம்பவங்களிலும் புண்பட்ட அவனது ஆணவம் அத்தனை தம்பியர் முன்னிலும், தந்தையால் அனுப்பப்பட்டு தன்னைக் காப்பாற்றிய பீமனின் மீது ஒட்டுமொத்தமாக வெடித்துக் கிளம்புகிறது. அவனது முக்கிய கோபமே பீமனை திருதா ஏவி விட்டது தான். இறுதியில் தந்தையும் தன்னை விட அவனைப் பெரிதாகக் கருதிவிட்டாரே?! அந்த குரோதம் அவனை வாரணவதம் வரை கொண்டு வந்து சேர்க்கிறது. மிகச் சரியாக துரியனின் மனநிலையை வெண்முரசு “அமைச்சரே ஆணவம் மிக்கவர்களே பெருந்தன்மையானவர்கள், பெருங்கொடையாளர்கள். அவர்களால் உலகையே கொடுக்க முடியும். ஆனால் கொடுக்குமிடத்தில் மட்டுமே அவர்களால் இருக்க முடியும்”, என்று காரகன் என்னும் நியாய சாஸ்திரவாதியின் கூற்றாகச் சொல்கிறது. இதைக் கேட்கும் தர்க்கவாதியான சௌனகர் தான் தற்போது இந்திரபிரஸ்தத்தின் முதன்மை அமைச்சர்.

நிகர் நிலை கொண்ட பேரழகன்:

மிகச் சரியாக கார்க்கோடகன் கூறியது போன்றே துரியனின் பெருந்தன்மையே அவனை எரிக்கத் துவங்குகிறது. தன் ஆணவம் புண்பட்ட துரியன் தன்னையே வெறுத்து, உயிர் துறக்க காட்டில் செல்லாத இடங்களுக்கெல்லாம் செல்கிறான். அந்த வழியில் அடைய இயலாத ஒரு இடத்தில் கோவில் கொண்ட ஸ்தூனகர்ணன் என்ற தெய்வத்தைச் சந்திக்கிறான் அவன். இந்த ஸ்தூனகர்ணன் ஒரே சமயத்தில் ஆணாகவும், பிம்பம் பெண்ணாகவும் மறு சமயத்தில் உருவம் பெண்ணாகவும், பிம்பம் ஆணாகவும் தோன்றும் தெய்வம். இதே தெய்வம் தான் சிகண்டியில் இருந்து பெண்மையை வெளியே எடுத்தது. இது ஒரு அபாரமான தொன்மம். அதன் சிலை கூட ஒரு புறம் ஆணாகவும் மறுபுறம் பெண்ணாகவும் இருப்பதாகத் தான் இருக்கிறது. உளவியல் வரிகளில் இது கார்ல் யுங்கின் அனிமா / அனிமஸ் ஆழ்படிமங்களுக்கு இணையானது. சுருக்கமாக அனிமா என்பது ஆணில் இருக்கும் பெண் தன்மை. அனிமஸ் என்பது பெண்ணில் இருக்கும் ஆண் தன்மை. வழமையாக இந்த ஸ்தூனகர்ணனை ஒரு காட்டு வைத்தியர் என்பதாகவே மறு ஆக்கம் செய்ய இயலும். வடக்கு முகம் நாடகத்தில் ஜெ வும் ஒரு வைத்தியர் என்ற வகையிலேயே எழுதியிருப்பார். ஆனால் அதை ஆணும் பெண்ணும் ஒன்றாக இருக்கும் ஒரு தெய்வம் என்று மறு ஆக்கம் செய்கையில் அது ஒரு பெரும் படிமமாக மாறி விடுகிறது. அதன் முன் ஒருவர் தன்னில் எத்தன்மை மட்டுமே இருக்க வேண்டும் என முடிவு செய்வது என்பது ஒரு வித உளவியல் செயல்பாடே.

பீஷ்மரிடம் தனக்கேற்பட்ட புறக்கணிப்பும், திருதாவும் தன் வலிமையை தம்பியர் முன் விட்டுக் கொடுத்தமையும் தான் துரியனை பெருமளவில் பாதித்துள்ளது என்பது ஸ்தூனகர்ணன் அவனிடம் சொல்லும், “நீ அவனைக் கொல்லவேண்டும். உன் தம்பியர் கண்முன், உன் தந்தையின் சொல்முன். இல்லையா? அச்செய்தியை பீஷ்மர் அறியவும் வேண்டும். அவரது விழியிலிருந்து கண்ணீர் சொட்ட வேண்டும் இல்லையா?” என்ற வரிகளில் வெண்முரசு மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஸ்தூனகர்ணன் பீமனைக் கொல்ல துரியனுக்கு ரௌப்யை எனும் கதாயுதத்தைக் காட்டுகிறான். நீருக்கடியில் ஆழத்தில் கிடக்கும் ரௌப்யை உண்மையில் கங்கையின் ஒரு துணை நதி. ஜமதக்னி முனிவருக்கு அவள் செய்த சேவையால் மகிழ்ந்து அவள் வேண்டிய விழைவிற்கேற்ப விரிந்து செல்லும் வரத்தை அவரிடம் இருந்து பெற்றவள். அவளை ஒரு கதையாக ஸ்தூனகர்ணன் துரியனுக்குக் கொடுப்பதாகச் சொல்கிறான். மீண்டும் ஒரு உளவியல் நுட்பம். ஆழத்தில் கிடக்கும் குரோதமே அது. அவன் வளர வளர அதுவும் வளரும், வீங்கும். ஆனால் அவனால் அதை எடுக்க இயலவில்லை. அதன் எடையைத் தூக்க இயலவில்லை. அதன் காரணம் அவனுள் இருந்த மென்மை. அது அவனை குரோதத்தை நோக்கி செலுத்தவில்லை. அந்த சுயோதனையை அவன் அழித்து விடுகிறான். அதிலும் மீண்டும் உளவியல். ஒரு ஆணால் தன் அனிமஸ் – தன்னுள் இருக்கும் பெண்ணை மொத்தமாக அழிப்பது என்பது இயலாது. இங்கே துரியன் முதலில் அவன் வயதளவே உள்ள ஒரு பெண்ணை அழிக்கிறான். அதன் பிறகு வரும் சிறுமியையும் அழிக்கிறான். அதன் பிறகும் ஒரு கருக்குழந்தையாக அப்பெண் அங்கு வருகிறாள். அதையும் அழிக்கும் அவன் முழு ஆணாகிறான். இந்த கடைசி அழிப்பையும் செய்ய முடிந்ததால் தான் அவன் விதியின் ஆயுதமாகிறான். ஆம். கம்சன் கூட தோற்ற இடம் இது. அத்தனை குழந்தைகளை அழிக்க உத்தரவிட்ட அவன் மனதிலும் ஒரு சிறு நீலக் குருவி தங்கிவிட்டதே!!

இந்த பெண்ணையும் அழித்த பின் அவனைப் பார்ப்பவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை வெண்முரசு இன்னும் நுட்பமாக ஆராய்கிறது. அவன் தம்பியர் அனைவரும் அவனிடம் இருந்து சற்று விலகுகின்றனர். அவன் சற்று அழகு குறைந்ததாகக் கூட எண்ணுகின்றனர். அவன் தான் அவனிடமிருந்த பெண்ணைக் கொன்றுவிட்டானே, பின் எப்படி பிற ஆண்களின் கண்ணில் அழகாத் தெரிய முடியும்? ஏன், துரியனே கூட கண்ணாடியில் தன்னழகைக் காணும் பழக்கத்தை விட்டு விடுகிறான். மாறாக அரண்மனை பெண்டிர் அனைவருமே, துச்சளை உட்பட அவனில் பொங்கும் ஆண்மையையும், அவனில் எழுந்த பேரழகனையும் காண்கின்றனர்.

வெய்யோன் ஒளியில் சுடரும் தங்கம்:

வெண்முரசு கர்ணனுக்கும் துரியனுக்குமான நட்பை, அது ஏற்பட்ட சூழ்நிலையை விளக்கமாகச் சொல்லலவில்லை. கர்ணன் அஸ்தினபுரிக்கு வருகையிலும் திருதா மட்டுமே சந்திக்கிறார். ஆனால் அம்முதல் சந்திப்பிலேயே அவர் அவனை அடையாளம் கண்டுகொள்வதுடன் அவனை குருகுலத்தின் மைந்தர்களில் ஒருவனாகவும் ஏற்றுக் கொள்கிறார். வெண்முரசின் கதையொருமைக்கு இதுவும் ஒரு சான்று. அவன் அஸ்தினபுரி வரக் காரணமாயிருந்தவள் குந்தி. ஆயினும் முதலில் பார்த்தவர் திருதா.வேழத்தின் அணைப்பில் சென்றவர் மீள முடியுமா என்ன? இயல்பாகவே கர்ணனுக்கும், கௌரவர்களுக்குமான உறவு அந்தப் புள்ளியில் துவங்கிவிட்டது. கர்ணன் மீதான திருதாவின் அபிமானமும், தன்னைப் போன்றே ஓர் இனம்புரியா வஞ்சத்தினால் எரியும் அவன் தனிமையுமே துரியனை கர்ணன் பால் ஈர்க்கிறது. மிக இயல்பான ஒரு நட்பு அவர்களுக்கிடையே உருவாகிறது.

அந்த செண்டுவெளியில் கர்ணன் அவமானப்படுத்தப்படுவது வரை துரியனுக்கும், கர்ணனுக்குமான சந்திப்போ, அளவலாவலோ நிகழவேயில்லை. ஆயினும் துரியன் கர்ணனின் வரவை எதிர்நோக்கி இருக்கிறான். அவன் பீஷ்மர் அஞ்சுவது கர்ணனின் வரவைத் தான் என துச்சாதனனிடம் சொல்கிறான். அவனுக்கு கர்ணன் யார் என்பதும், அவன் முக்கியத்துவம் என்ன என்பதும் ஓரளவிற்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த செண்டுவெளியில் துரியனின் செயல்கள் இந்த புறக் காரணங்களை எல்லாம் சிந்தித்து வெளிப்பட்டதல்ல. அது அவன் இயல்பும் அல்ல. அன்று வெளிப்பட்டது துரியனின் பெருந்தன்மையே. அங்கிருந்தவன் வேழமான திருதாவின் மைந்தன். மேலும் அங்கே கர்ணனின் திறமை அவமதிக்கப்பட்டது. துரியனுக்கு பீஷ்மரிடம் கிடைக்காத அதே அங்கீகாரம், இங்கே கர்ணனுக்கும் மறுக்கப்படுகிறது. அந்த கணத்தில் துரியன் வெளிப்படுகிறான். தானடைந்த துயரை தன்னைப் போன்ற மற்றொருவன் அடையலாகாது என்ற உந்துதலில் செயல்படுகிறான். என்ன வார்த்தைகள்!! கர்ணன் முன் தானும், தன் குலமும் முழுக்கத் தோற்றதாக அறிவிக்கிறான். அதுவும் ஒரு பொது சபையில். அந்தக் கணத்தில் துரியன் அஸ்தினபுரியில் பேருருவம் எடுக்கிறான். அவனை அஞ்சிய மக்கள் மத்தியிலும், அமைச்சர் குழாத்திலும் அவன் மீதான பார்வை அந்த நொடியில் மாறுகிறது. அவன் குலமழிக்க வந்த கலியில்ல, விழி கொண்ட வேழம், மாமன்னன் ஹஸ்தியின் மறுபிறப்பு என பீஷ்மர் உட்பட ஒவ்வொருவரும் உணர்ந்த கணம்.

அதன் பிறகு கர்ணனும், துரியனும் இணை பிரியா நண்பர்கள் ஆகின்றனர். உள்ளம் திறக்க வார்த்தை தேவையில்லை என்றாகின்றனர். அதுவரை ஒரு சிறு விலக்கத்துடனே இருந்து வந்த விதுரரும் முழு மனதோடு, விருப்போடு துரியனை ஏற்றுக்கொள்கிறார். அத்துணை நாள் அவன் விரும்பிய பீஷ்மரின் நல்லெண்ணம் அவனுக்குக் கிடைக்கிறது. ஆனால் அவன் அதைத் தாண்டிச் செல்கிறான். முழுமையான நட்பு அமைகையில் உள்ளம் ஒழிவது எளிதன்றோ! துரியன் தன் இருளனைத்தும் மறைய வெய்யோன் ஒளியில் பொலியத் துவங்குகிறான். அவன் பெருந்தன்மையும், பேரன்பும் விரிந்து கொண்டே செல்கிறது. தன் தந்தையைப் போன்றே சிறுமை தீண்டாத, மனத்துக்கண் மாசிலாதவனாக ஆகிறான்.

ஆன்மாவில் விழுந்த தீ:

அப்படிப்பட்டவன் தான் வாரணவதத்திற்கு உடன்படுகிறான். ஏன்? அவன் வாக்கு பொய்க்கின்றது, அதுவும் தன் குருவுக்குக் கொடுத்த வாக்கு. அது அவனுக்கு இறப்பின் கணம். அதற்கு மேலும் அவனை பொம்மையாக ஒரு படை நடத்தச் சொல்லி மேலும் அவமானப்படுத்துகிறார்கள். மீண்டும் குரோதத்தில் எரிகிறான். அதுவே வாரணவதத்தில் எரிகிறது. அவனக்கு தாங்க முடியா கோபம் தருமன் மீது தான். பீமனிடம் ஏற்கனவே இருந்த வஞ்சம். அவர்கள் இருவரும் வாரணவதம் கிளம்புகையில் சலனமேயின்றி விடை கொடுக்கும் துரியன், அர்ஜுனன் விடைபெறுகையில் விழியில் தன் ஆற்றாமையைக் காட்டி விடுகிறான். இதைக் காணும் விதுரர் தருமனிடம் எச்சரிக்கிறார். அந்த தீ எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு அவன் அவனாக இல்லை. தம்பியர் முன் வரவே கூசுகிறான். மதுவின் மயக்கத்திலேயே இருக்கிறான். சிகரங்களுக்கு நடுவே சிறுத்துப் போயிருக்கும் கூழாங்கல் என தன்னை உணர்கிறான். மீண்டும் கர்ணன் வந்து தான் அவனை மீட்க வேண்டியிருந்தது. கர்ணன் மூலமாக அவர்கள் இறக்கவில்லை என உறுதி செய்து கொண்ட துரியன் அடைவது ஒரு பெரிய விடுதலையையே.

அளிக்கும் உவகை:

துரியன் திரௌபதியின் சுயம்வரத்திற்கு வருகையில் கர்ணனின் அவளின் மீதான ஆசையை அறிந்து கொள்கிறான். அக்கணத்தில் அஸ்தினபுரி சார்பாக கர்ணன் அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தான் அப்போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அறிவிக்கிறான். உண்மையில் அவன் வருந்தியிருக்க வேண்டும். ஆனால் கர்ணனிடம் அவ்வாறு அறிவித்து விட்டு வந்த பின் அவன் உடலெங்கும் ஒரு உவகையை உணர்கிறான். இந்த இடத்தில் இருந்து துரியன் மிக மிக மகிழ்வானவனாக, நிறைவானவனாக மாறுகிறான். காம்பிலயப் போரில் தோற்ற பிறகு, தந்தையால் கிட்டத் தட்ட மரணத்தை எட்டிப்பார்த்த பிறகு அவன் மீண்டும் பெருந்தன்மை மட்டுமே இருக்கும் ஒரு அரசானாக பரிணமிக்கிறான்.

பாரதத்தில் வேறு யாருக்கும், ஏன் கிருஷ்ணனுக்குக் கூட கிடைக்காத ஒரு மண வாழ்வு துரியனுக்கு வாய்க்கிறது. பகலிலும், இரவிலும் ஒளியோடு இருக்கும் மனைவியின் அரவணைப்பில் அவன் இருள் மொத்தமாக ஆழத்திற்குச் செல்கிறது. அனைத்தையும் மறந்து, மன்னிக்கத் தெரிந்த மாவீரனாக, மக்களைப் புரக்கும் பேரரசனாக துரியன் மாறுகிறான். அவனைச் சூழ்ந்து எங்கும் மகிழ்ச்சி மட்டுமே இருக்கிறது. நிறைவானவனாக இருக்கிறான். அனைத்தையும் அடைந்தவனாகவும் இருக்கிறான். சிறியன எதுவும் அவன் சிந்தையைத் தீண்டுவதில்லை.

சிறியன சிந்தியாதான்:

வண்ணக்கடலில் இளநாகன் காஞ்சியில் வாலிக்கும், சுக்ரீவனுக்கும் நடக்கும் போரைப் பற்றிய ஒரு நாடகத்தைப் பார்ப்பான். அதில் வாலி விதியிடம் தான் பேரறத்தான் ஒருவனால் கீழறத்தால் கொல்லப்பட வேண்டும் என வேண்டுகிறான். அவ்வாறே அவன் ராமனால் வதம் செய்யப்படுகிறான். மீண்டும் வாலி துரியோதனனாகவும், சுக்ரீவன் பீமனாவும் பிறப்பார்கள் என்கிறது விதி. வாலி மடிகையில் ராமனை பலவாறாக வினாவுக்குட்படுத்தும் வாலி இறுதியில் தான் செய்த சிறு தவறை உணர்ந்து தன் மரணம் தவிர்க்க இயலாதது என்பதை உணர்ந்த பிறகு ராமனிடம் இறுதியாக “தீயன பொறுத்தி” என்கிறான். அச்சமயத்தில் கம்பர் வாலியை சிறியன சிந்தியாதான் என்கிறார். இங்கே துரியனும் எவ்வகையிலும் அதே போன்றவன் தான். முற்றிலும் ஒளியால் சூழப்பட்டவனின் காலடியில் பதுங்கியிருக்கும் இருளாக அவன் சிறு நிழல் மறைந்திருக்கிறது. செய்த ஒரு சிறு தவறுக்காக பீமனால் முறை மீறி, பேரறம் கொண்ட தருமன், கிருஷ்ணன் முன் வதைக்கப்படுகிறான். வதைபட்டால் என்ன அவன் என்றும் ‘சிறியன சிந்தியாதான்’!!!

Previous Older Entries